எழுத்து

மாயக்குரல்

தருணாதித்தன்

 

நான் கண்களை மூடிக் கொண்டு தம்பூராவை மீட்டினேன். நாதம் அலை அலையாக எழும்பியது. பாடாமல் அதையே கேட்டுக் கொண்டு இருக்கலாம் போல இருந்தது. அப்படி ஒரு தம்பூரா சுருதி எப்போதும் அமையாது. அந்தர  காந்தாரம் சந்தேகம் இல்லாமல் கேட்டது. நானே மயக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு கார்வை கொடுத்தேன். குரல் இழைந்தது. பாட்டி இருந்தால் “ டேய், இன்றைக்கு கேட்பவர்களுக்கு யோகம்” என்பாள். இன்னொரு நாள் எவ்வளவு முயன்றாலும்  நான்கு தந்தியும் ஒன்றாகச் சேர்ந்து தம்பூராவும் அதிராது, குரலும் அப்படி கவ்விப் பிடித்துச் சேராது.

“டேய், கேட்பவர்களுக்கு இன்றைக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் “ என்பாள் பாட்டி.

பாட்டியின்  வற்றல் குழம்பு குடும்பத்தில் பெயர் போனது. அந்த மாதிரி கைமணம் யாருக்கும் வராது என்பார்கள். ஒவ்வொரு நாள் அப்படித்தான் ஆகும். எவ்வளவு கொதித்தாலும் புளியும் காரமும் உப்பும் பெருங்காயமும் சற்று ஒன்று சேராத மாதிரி இருக்கும். அப்போதும் பாட்டி இதே மாதிரி சொல்லுவாள்.

“இன்னிக்கு சாப்பிடரவங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் “

அன்றைக்கு என்னுடைய நல்ல நாள், என்றுமில்லாத ஒரு அதிர்வுடன் சுருதியும் குரலும் சேர்ந்தது. என்னுடைய வாழ்க்கையிலேயே முக்கியமான கச்சேரி. சுந்தரம் தாத்தாவை நினைத்த படியே பயிற்சியாக ஒரு வர்ணம் பாடினேன். குரல் பதமாக இருந்தது. இருந்தாலும்  ஒரு சிறு பதற்றம். அவருடைய பெயர் விளங்கும்படி இன்றைய கச்சேரி அமைய வேண்டும்.  தாத்தா என்று சொன்னாலும் அவர் என்னுடைய பாட்டியின் தாத்தா. மிகப் பெரிய வித்துவான். அவருக்குப் பிறகு குடும்பத்தில் புகழ் பெற்ற பாடகர்கள் இல்லை. ஏதோ வீட்டோடு இல்லை கோவிலிலில் பாடுவார்கள். நான் தான் மூன்று தலை முறைக்குப் பிறகு மேடை ஏறிப் பாடுபவன்.

இன்று நான் சற்று உணர்ச்சிவசமாக இருப்பதப் பார்த்தால் பாட்டி “உனக்கு என்ன கவலை,  நீ பத்து வயதிலேயே முதல் கச்சேரி செய்து ப்ராடிஜி, ஜீனியஸ் என்று பத்திரிகைகளில் பெயர் வந்து மேடை ஏறியவன். எல்லாம் நல்லபடியாக அமையும் “ என்று ஆசீர்வாதம் செய்திருப்பாள்.

 

பாட்டி சுந்தரம் தாத்தாவைப் பற்றி நிறையச் சொல்லுவாள். அவள் அப்படி சொல்லிச் சொல்லிதான் ஒரு வேளை நான் பெரிய பாடகனாக ஆக வேண்டும் என்று அடிமனதில் சிறு வயதிலேயே படிந்திருக்கலாம். சுந்தரம் தாத்தா அவருடைய வாழ் நாளில் நிறைய புதுமைகளைப் பார்த்திருக்கிறார், செய்திருக்கிறார். முதல் முதலாக ரயில் வண்டி ஏறி நாடு முழுவதும் பயணம் செய்து பாடிய வித்துவான் அவர்தான். முதல் முதலாக புகைப்படம் எடுக்கப்பட்ட கர்னாடக  இசை வித்துவானும் அவர்தான். பாட்டி அவருடைய குரலைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லுவாள். கந்தர்வ கானம் என்று பெயர் பெற்றவர். அவர் குரல் மாயக் குரலாம். அதில் பேசாத ராகம் கிடையாது என்பாள். அந்தக் குரலில் சில பாட்டுகள் கேட்டால் கண்ணீர் வராமல் இருக்க முடியாது என்பாள். சில பாட்டுகளைக் கேட்டால் எழுந்து உல்லாசமாக ஆடத் தோன்றும் என்பாள்.

“ அவருடைய பாட்டு சில வித்வான்கள் மாதிரி ஞானமாகப் பாடுகிறேன் என்று உணர்ச்சியே இல்லாமல் பாடும் வரட்டு சங்கீதம் இல்லை “ என்பாள்.

ஒரு முறை அவர் ராம நவமி உற்சவத்தில் பாடிய போது, ப்ரிட்டிஷ் அதிகாரியான மாவட்ட கலெக்டரே வந்து கோவில் மதில் சுவருக்கு வெளியே வண்டியில் அமர்ந்த படியே  பாட்டு கேட்டாராம். ஒலி பெருக்கி இல்லாமலேயே குரல் அப்படி தூரத்திலும் கேட்குமாம்.

நான் ப்ராடிஜி என்று அழைக்கப் பட்டாலும், பாட்டி வாயால் “ ம், இப்ப கொஞ்சம் பரவா இல்லை” என்று அரை மனது பாராட்டு வருவதற்கு எனக்கு இருபது வயது ஆயிற்று. அப்பொழுது கூட “ நீ சுந்தரம் தாத்தாவின் பாட்டைக் கேட்க வேண்டும், அப்பத்தான் நல்ல சங்கீதம் அப்படின்னா என்ன என்று புரியும் “ என்பாள்.

நான் இப்போது பெயர் பெற்ற வித்துவான்களின் சங்கீதத்தை ரேடியோவிலோ ஒலிப்பதிவிலிருந்தோ பாட்டியைக் கேட்க வைப்பேன். ஒரு நிமிடம் கூட முழுதாக கேட்க மாட்டாள்.

“பாட்டி, நீங்க எப்பவும் சுந்தரம் தாத்தாவைப் பற்றியே சொல்றீங்க, எனக்கு ஒரு தடவை அவர் குரலைக் கேட்க வேண்டும் “ என்பேன்.

“மனுஷக் குரலா அது, தேவ கானம், கந்தர்வ கானம் என்று புராணங்களில் வருமே அந்த மாதிரி மாயக்குரல், வெறும் குரல் ,மட்டும் இல்லை அதில் அப்படி ஒரு உணர்ச்சி” என்பாள்.

சற்று மவுனத்துக்குப் பிறகு “சமஸ்தானத்தில் தசராவின் போது பத்து நாட்களும் கச்சேரி நடக்கும். அதில் பாட வாய்ப்பு கிடைப்பதே  பெரிய  சாதனை. ஒரு வருடம் அழைத்தால், மறுபடி நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் சுந்தரம் தாத்தா மட்டும் வருடா வருடம் பாடுவார். மகாராஜாவுக்கு அவருடைய பாட்டு என்றால் உயிர்.  1898 தசராவில் அவருடைய கச்சேரியை ஒலிப்பதிவு செய்தார்கள். கவனித்துக் கொள் – அதுதான் கர்னாடக சங்கீதத்தில் முதல் ஒலிப்பதிவு. “ என்று பெருமையாக ஒரு இடைவெளியில் கதையை நிறுத்துவாள்.

“அன்றைக்கு பைரவி ராகம், வழக்கம் போல அவரும் கேட்டவர்களும் வேறு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சுந்தரம் தாத்தா கண்களை மூடிப் பாடிக் கொண்டிருக்க, மகாராஜா அவருக்குத் தெரியாமலேயே ஒலிப்பதிவுச் செய்யச் சொன்னாராம் “

இப்படி பாட்டி சுவாரசியமாக சொல்லுவாள். நூறுமுறை இந்தக் கதையைக் கேட்டிருந்தாலும், எனக்கு அலுக்காது. அதே போல நான் ஒவ்வொரு முறையும் கடைசியில் கேட்ட கேள்விக்கும் பாட்டி அலுக்காமல் அதே பதிலைச் சொல்லுவாள்.

“ அந்த ஒலிப்பதிவு இப்போது எங்கே?     நீங்க தினமும் சொல்லும் சுந்தரம் தாத்தாவின் சங்கீதம் எப்படி இருக்கிறது என்று  நானும் கேட்க வேண்டும்”

“ அதுதான் மிக வருத்தமாக இருக்கிறது, 1930இல் அரண்மனையில் ஒரு தீ விபத்து, அதில் அழிந்து போய் விட்டது “ என்று முடிப்பாள். தீ விபத்து நடந்த வருடம் ஒரு சமயம் 1930 ஆக இருக்கும், இன்னொரு  முறை 1920 ஆக இருக்கும். இருந்தாலும் தாத்தாவின் குரல் வளம் மட்டும் மாறாது. பாட்டி போய் பல வருடங்கள் ஆனாலும், அவளுடைய வார்த்தைகள் மறக்கவில்லை.

இப்போதும் சமஸ்தானத்தில் தசரா உற்சவம் விமரிசையாக நடக்கிறது. இப்போதைய மகாராஜா ஏற்றுமதி வணிகம் செய்து கொண்டிருந்தாலும், பாரம்பரியத்தை விடாமல் இன்னும் விழா நடத்துகிறார். இன்றும்கூட, அந்த விழாவில் பாட வாய்ப்புக் கிடைப்பது கடினம். நான் பாடி பெயர் எடுத்தும் கூட, இத்தனை வருடங்களில் என்னை அழைத்ததில்லை. திடீரென்று சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் கைபேசியில் அழைப்பு வந்தது. பேசியவர் ரவீந்தர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். அவர்தான் சமஸ்தானத்து அரண்மனையில் அதிகாரியாம். இந்த முறை தசராவில் பாட முடியுமா என்று கேட்டார். எத்தனை வருடங்களாக நான் கண்ட கனவு அது. உடனே ஒத்துக் கொண்டேன்.

சமீபத்தில் நான் பாடிய ஒரு பாடல் சமூக ஊடகங்களில் எதிர் பாராமல் பிரபலமாக ஆனது. அதைக் கேட்டு விட்டுதான் மகாராஜா வரவழைக்கச் சொன்னார் என்று ரகுராவ் சொன்னான். ரகுராவ் என்னுடைய சிஷ்யன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். என்னுடன் கச்சேரிகளில் தம்பூரா போட்டுக் கொண்டு கூடப் பாடுவான்.  அந்தக் கச்சேரிக்குத்தான் தயார் ஆகும்போதே அப்படி அபூர்வமாக சுருதியும் குரலும் சேர்ந்தது. அது மிக நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது. என்னுடைய இரண்டு மகத்தான கனவுகளும் நிறைவேறக்கூடும் என்று தோன்றியது. முதல் கனவு தசரா கச்சேரியில் பாடுவது. அது நிறைவேறும். அழைப்பு வந்து விட்டது.

அடுத்த கனவு நிறைவேற வாய்ப்பு மிகவும் அரிது. ஒரு வேளை சுந்தரம் தாத்தாவின் குரல் ஒலிப்பதிவு தீ விபத்தில் தப்பி இன்னும் அரண்மனையில் இருந்தால், அதை கண்டு பிடித்து விட வேண்டும், அவருடைய பாட்டைக் கேட்க வேண்டும். அதை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

மகாராஜா தேட அனுமதி கொடுத்தால், அந்த ஒலிப்பதிவு தீ விபத்தில் தப்பியிருந்தால், இப்போது அரண்மனையில் எங்காவது இருந்தால், ஒரு வேளை எனக்கு அது கிடைத்தால் இரண்டாவது கனவும் நிறைவேறக் கூடும்.

நேற்று காலையிலிருந்தே ஒரு பதட்டம் இருந்தது. என்னுடைய ஆதர்ச பாடகர்கள், சுந்தரம் தாத்தா என்று எல்லோரும் அமர்ந்த மேடையில் நான் பாட வாய்ப்புக் கிடைத்ததே பாக்கியம். முதல் முறையாக அழைத்திருக்கிறார்கள். பெயர் கெடாமல் கச்சேரி அமைய வேண்டும் என்று கவலை.

முதலிலேயே ரவீந்தர் எங்களுக்கு நிறைய சொல்லி இருந்தார். உடையிலிருந்து ஆரம்பித்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்று போன நூற்றாண்டு பழக்கங்களை எல்லாம் சொன்னார். வேட்டியும் அங்க வஸ்திரமும் தான் அணிய வேண்டும். ஜிப்பா, சட்டை எல்லாம் அனுமதி இல்லை. சபையில் நவராத்ரி கச்சேரி அம்மனுக்கு நடத்தும் சேவை.  மின்சார விளக்கு  ஒலி பெருக்கி எதுவும் கிடையாது. மொபைல் போன்கள் அனுமதி இல்லை.  அலங்கரிக்கப்பட்ட புவனேஸ்வரி அம்மன் மேடைக்கு நேர் எதிரே கொலு இருப்பாள். அரச குடும்பத்தில் குல தெய்வம் அவள். மகாராஜா பக்கவாட்டில் சிம்மாசனத்தில் இருப்பார். மகாராணியும் மற்ற பெண்டிரும் மறைவான அறையிலிருந்து பலகணி வழியே கேட்பார்கள். கச்சேரி மங்களம் பாடி முடிந்த பிறகு எதிரே அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுக்கப்படும். பிறகு வித்துவான்களுக்கு மகாராஜா மரியாதை செய்வார். அதற்கு முன்பு யாரும் அசையக் கூடாது, நடுவில் பேசக் கூடாது என்று எல்லாம் விதிகள் உண்டு.

ஆரம்பிக்கும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அரச சபைக்குச் சென்றோம். அந்தக் காட்சியே பரவசப்படுத்தியது. ஆள் உயர எண்ணெய் விளக்குகளின் வெளிச்சத்தில் எல்லாம் பொன்னாக மின்னியது. பருத்த மரத் தூண்கள், வண்ணக் கற்கள் பதித்த தரை, சுற்றிலும் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், மேலிருந்து தொங்கிய பிரம்மாண்டமான ஷாண்டலியர், சரம் சரமாக மல்லிகை, தாமரை, மாவிலைத் தோரணங்கள், சந்தன மணம் எல்லாம் சேர்ந்து ஏதோ மாய உலகம் போல இருந்தது.

மேடையில் அமர்ந்து சுருதியில் ஆழ்ந்தேன். அந்தக் கணத்திலேயே பதட்டம் எல்லாம் போய் விட்டது. கூடவே நல்ல பக்க வாத்தியங்களும். மனம் மேலே பறந்தது.  கச்சேரி மிக அருமையாக அமைந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நல்ல வரவேற்பு.  நான் தைரியமாக பைரவி ராகம் எடுத்தேன்.  சுந்தரம் தாத்தா பைரவி பாடிய அதே மேடை. அந்த நினைப்பே என்னை பரவச நிலையில் பாடச் செய்தது. அன்றைக்கு பாடிய மாதிரி நானே பாடியதில்லை. அங்கே பாட்டுக்கு கை தட்டக் கூடாதாம், ஆனாலும் ரசிகர்களின் முகக் குறிப்பும், உடல் அசைவும், மெல்லிய ஆகா என்ற ஒலிகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தன.  மகாராஜாவும், அரச குடும்பத்தினரும் நன்றாக ரசித்தனர். முடிக்கவே மனம் வரவில்லை. ரகுராவ்தான் என்னுடைய காதில் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க வைத்தான்.

ஆரத்தி முடிந்து மகாராஜா தானே முன் வந்து, மாலை போட்டு , பெரிய தாம்பாளத்தில் பழங்களுடன் சன்மானம் செய்தார்.  நான் கண்களில் நீருடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். இதைப் பார்க்க பாட்டி இருந்திருக்கலாம்.

மகாராஜா “ உங்கள் மூதாதையர் சுந்தரம் இங்கே வருடா வருடம் பாடி சங்கீத சேவை செய்தாராம், இப்போதுதான் உங்களுடைய அருமையான பாட்டைக் கேட்பதற்கு எங்களுக்கு வேளை வந்திருக்கிறது “ என்றார்.

அந்த சந்தர்ப்பத்தை விடாமல், தைரியத்தைக் கூட்டிக் கொண்டு மகாராஜாவிடம் கேட்டு விட்டேன். வீரேந்தர் அதை எதிர் பார்க்கவில்லை.

“மகாராஜா, ஒரு விண்ணப்பம் உங்களுடன் தனியாகப் பேச வேண்டும்“

அவர் நின்று உள் அறைப் பக்கம் கையைக் காட்டி அழைத்து “என்ன வேண்டுமோ கேளுங்கள், பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு  நல்ல கச்சேரி கேட்டிருக்கிறேன் “ என்றார் கனிவாக.

கலவரமான முகத்துடன் ரவீந்தரும் உள்ளே வந்தார். அரச குடும்பத்துப் பெண்கள் எழுந்து உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.

“என்னுடைய தாத்தாவுக்கு தாத்தா சுந்தரம் பாடிய மேடை இது, இங்கே பாட வாய்ப்புக் கிடைத்தது பாக்கியம், மிக்க நன்றி “

“ ஆமாம் கேள்விப் பட்டிருக்கிறேன், அவர் பாடினால் சபையே மயங்கி இருக்குமாம். அப்படிப்பட்ட மாயக்குரல். அந்தப் பரம்பரை அல்லவா, நிரூபித்து விட்டீர்கள். “ என்றார்.

“மகாராஜா, சுந்தரம் தாத்தா பாடிய போது ஒலிப்பதிவு செய்யப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். “

“ஆமாம், அதுதான் கர்னாடக சங்கீதத்தில் முதலில் செய்யப்பட்ட ஒலிப்பதிவு, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரண்மனை தீ விபத்தில் எரிந்து போய் விட்டது “

நான் “மகாராஜா, அது ஒரு வேளை தப்பித்து இப்போதும் இருக்கக்கூடுமா என்று சந்தேகம், தேடுவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் “ என்று முடித்தேன்.

ரவீந்தருக்கு இது பிடிக்கவில்லை, அவர் ஏதோ சொல்ல வந்தார்.

அதற்குள் மகாராஜா “ சந்தேகம்தான், இருந்தாலும்,  நீங்கள் இவ்வளவு கேட்கும்போது மறுக்க முடியுமா, தேடிப் பாருங்கள். ரவீந்தர், இவருக்கு தேடுவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுங்கள் “ என்றார்.

அன்றைக்கு இரவு நான் சரியாகத் தூங்கவே இல்லை.

மறு நாள் காலை ரகு ராவ் கூட வந்திருந்தான். அரண்மனைக்குச் சென்றோம். வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் செல்லும் அலங்கார வாயில் வழியாக இல்லை. பக்க வாட்டில் தனியாக ஒரு சாதாரண பழைய கட்டிடம் போல வெள்ளைச் சுண்ணாம்படித்த வளைவு வாயில் இருந்தது. அதுதான் அரச குடும்பத்தினர் உபயோகிக்கும் வழியாம். அலங்கார வாயில் வழியே சென்றால் புல் தரைகளும் பூக்களும் வேலிச் சுவர் மாதிரி வெட்டி விட்ட செடிகளும் தோரண வாயில்களுமாக திருவிழாக் கோலமாக இருக்கும். எப்பொழுதும் டூரிஸ்ட் பஸ்களும் அனுமதி டிக்கெட் வாங்க கூட்டமாக  நிற்கும் ஜனங்களையும் பானி பூரி, பொரி கடலை, அய்ஸ்க்ரீம் வண்டிகளையும் தரையில் குப்பையும் பார்த்துப் பழகின எனக்கு, அரண்மனையே வேறு விதமாக காட்சி அளித்தது. ஷாப்பிங் மால்களுக்குப் பின்னால் பார்க்கிங் வழி போல தரையில் குறுக்கே குழாய்கள், டீசல் ஜெனெரேடர், ட்ரான்ஸ்பார்மர்களைச் சுற்றிச் சென்றோம்.

கடைசியில் ஒரு பெரிய கட்டிடத்துக்குள் நுழைந்தோம். அரண்மனை அதிகாரி ரவீந்தர் வரவேற்றார். என்னுடைய கச்சேரி மிக அருமையாக இருந்ததாகப் பாராட்டினார். அரச குடும்பத்தினர் அன்று இரவு உணவின்போது, என்னுடையதுதான் மிகச் சிறந்த கச்சேரி என்று பேசிக்கொண்டார்களாம். மகாராஜா வருடா வருடம் என்னை வரவழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டாராம்.

ரவீந்தர் எங்களை ஒரு மிகப் பெரிய வரவேற்பு அறையில் அமர்த்தி மகாராஜா நேரில் வர முடியாததற்கு மன்னிப்புக் கேட்டார். மகாராஜாவின் இளம் வயது வண்ணச் சித்திரம் சுவற்றில் மாட்டி இருந்தது. அவர் பழங்கால உடையா இல்லை  நவீன உடையா என்று பார்த்தவுடன் தீர்மானிக்க முடியாத உடையில் தொப்பியா தலைப்பாகையா என்று சொல்ல முடியாத ஒன்றை தலையில் அணிந்து கொண்டு, சிம்மாசனமா இல்லை சோபாவா என்று சொல்ல முடியாத ஆசனத்தில் தீவிரமான முகத்துடன் அமர்ந்து இருந்தார்.

நான் “ எங்களுக்கு ஒலிப்பதிவைத் தேட அனுமதி அளித்ததே பெரிய விஷயம் “ என்று நன்றி சொன்னேன். உபசாரமாக எங்களுக்கு காபி டீ வேண்டுமா என்று கேட்டார். எனக்கு ஒலிப் பதிவைத் தேடுவதே குறி. அவரிடம் அய்ந்து நிமிடம் பேசுவதும் வீணாகத் தோன்றியது. ஒரு வழியாக அவர் ஒரு ஆளைக் கூப்பிட்டு அவனிடம் தாழ்ந்த குரலில் ஏதோ சொன்னார். அவன் எங்களை அழைத்துக் கொண்டு அரண்மனை உள்ளே சென்றான். ரவீந்தரும் கூட வந்தார்.

வளைந்து வளைந்து அந்தப் பெரிய அரண்மனைக்குள் நடந்தோம். உள்ளே சற்று இருட்டாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.  தரை எல்லாம் பாரம்பரிய வேலைப்பாடுள்ள வண்ணக் கல் சதுரங்கள் பதிக்கப் பட்டு இருந்தன. ஒவ்வொரு பெரிய அறைக்கும் ஒரு பிரத்தியேக வடிவமைப்பு. மறுபடி என்னை அங்கே விட்டால் கூட, என்னால் வழி கண்டுபிடிக்க முடியாது.  ஒரு நீண்ட தாழ்வாரத்திலிருந்து வெளிச்சத்துக்கு வந்தோம். சற்றுத் தள்ளி ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அழகான மரத் தூண்கள் , மர ஜன்னல்கள்,  திண்ணை, மல்லிகை ரோஜா என்ற பூஞ்செடிகள் எல்லாம் இருந்தன. இதுதான் இளைய ராணியின் அந்தப் புரமாக இருந்ததாம். பெரிய அரண்மனையிம் ஒரு பகுதி தீப்பிடித்த போது, தள்ளி இருந்த இந்தக் கட்டிடத்துக்கு ஒன்றும் ஆகவில்லையாம். அதனால் விலை மதிப்பற்ற பல பொருட்களை இங்கே எடுத்து வைத்தார்களாம். நகைகள்,பட்டாடைகள்,  ஓவியங்கள், வாத்தியக் கருவிகள், என்று இந்தக் கட்டிடம் நிரம்பி வழிந்ததாம். ரவீந்தர் குடும்பம் பரம்பரையாக ராஜ சேவகர்களாம். அவருடைய தாத்தாவின் காலத்தில் இது நிகழ்ந்தது என்று சொல்லி இருந்தார். அவர் தாத்தாவிடம் அந்தத் துயர நாளைப் பற்றி நிறையக் கதைகள் கேட்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு பரபரப்பு அதிகம் ஆயிற்று

“உங்கள் தாத்தா தசரா கச்சேரி ஒலிப் பதிவுகள் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா?”

“ அவர் சொன்னதில்லை, என் தாத்தாவின் தம்பிதான் சங்கீதம் கேட்பார், அவர்தான் தீயில் பாதிக்கு மேல் தசரா ஒலிப் பதிவுகள் அழிந்து போயின என்று சொன்னதாக நினைவு “ என்றார்.

நான் ரவீந்தரின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

“ரவீந்தர், பாதி ஒலிப்பதிவுகள் தப்பித்தன என்று இது வரை நான் கேள்விப் பட்டதே இல்லை , இது மிக மகிழ்ச்சியான செய்தி “ என்றேன்.

ரவீந்தர் “ எனக்கு அப்படித்தான் நினைவு, தேடிப் பாருங்கள், கிடைக்கக் கூடும். இத்தனை வருடங்களில் நிறைய ஓவியங்களையும் வாத்தியக் கருவிகளையும்  சீர் செய்து ம்யூசியத்துக்கு மாற்றி விட்டோம். அதைத் தவிர இங்கே எரிந்த மரச்சாமான்கள், தீப் பட்ட ஓவியங்கள், என்று நிறைய பொருட்கள் உண்டு. இதைத் திறந்தே பல வருடங்கள் ஆகி இருக்கும் “ என்றார். கூட வந்த ஆள் “ இங்கே வெள்ளிப் பாத்திரங்கள் கூட  நிறைய இருந்தன, இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை” என்றான். ரவீந்தர் அவனை முறைத்தார்.

அவனிடமிருந்து ஒரு பையை வாங்கி, அதிலிருந்து  ஒரு பெரிய சாவியை எடுத்து, அந்தக் கதவில் பூட்டி இருந்த பெரிய பூட்டைத் திறக்க முயற்சி செய்தார். அது திறக்கவில்லை. ரவீந்தர், முன் யோசனையாக கையில் ஒரு எண்ணெய் குப்பி வைத்திருந்தார். “இது எளிதாகத் திறக்காது என்று தெரியும் “

சாவி போடும் துளையில், மேலே இருந்த தண்டிலும் சில துளி எண்ணெய் விட்டு அந்தப் பூட்டைக் குலுக்கினார். இப்போது பூட்டு திறந்தது. அந்தப் பிரம்மாண்டமான கதவைத் திறந்து உள்ளே பார்த்தோம். ஜன்னல்கள் எதுவும் திறக்காததால் சில அடிகளுக்குப் பிறகு உள்ளே இருளாக இருந்தது.

ரவீந்தர் ஒரு ஜன்னலைத் திறந்து விட்டு எங்களை வரச் சொன்னார். அந்த ஜன்னல் வழியே சூரிய ஓளிக் கற்றை  நேராக ஒரிடத்தில் விழுந்தது. உள்ளே அடி எடுத்து வைத்ததும், பழைய நாற்றம் முகத்தில் அடித்தது. கைக்குட்டையை வைத்து மூக்கை மூடிக் கொண்டோம்.

ரவீந்தர் “ சற்று நேரம் திறந்து வைத்தால் சரியாகி விடும் “ என்றார். சுற்று முற்றிலும் பார்த்தோம்.  நாங்கள் கிளப்பிய புழுதி, சூரிய ஒளியில் மின்னும் துகள்களாக மிதந்தன. நிறைய பொருட்கள் சிதறி இருந்தன. ஒரு பெரிய தந்தப் பல்லக்கு, துணி போர்த்திய பெரிய நாற்காலிகள், மேசைகள், நான்கு புறமும் பந்தல் கால் மாதிரி இருக்க விதானம் வைத்த பெரிய கட்டில் ஒன்று, ஆளுயரப் பாவை விளக்கு, விரிசல் விட்ட கண்டா மணி, வீரர்கள் அணியும் இரும்புக் கவசம், கேடயம், உறையுடன் வாள், இரும்புச் சங்கிலி என்று நிறைய பொருட்கள் சிதறி இருந்தன.  ஒரு பக்கம் அலமாரி, பீரோ போன்றவைகள் இருந்தன. ரவீந்தர் அவற்றைக் காட்டி “ முதலில் அங்கே தேடுங்கள், ஒரு வேளை இருந்தால் அவற்றில் இருக்கக் கூடும் “ என்று சொல்லி விட்டு அவருக்கு வேலை இருப்பதால் கிளம்பி விட்டார்.

எங்கே ஆரம்பிப்பது என்று மலைப்பாக இருந்தது.

ரகுதான் உதவிக்கு வந்தான்.

“ஸார், இந்த உயரமான அலமாரியிலிருந்து ஆரம்பிக்கலாம் “

அது பூட்டி இருக்கவில்லை. திறந்தால் அரச உடைகள் இருந்தன. இத்தனை வருடங்கள் ஆகி இருந்தாலும், சரிகை பளபளப்பும், பட்டில் தைத்த முத்து மணிகளுமாக ஆடைகள் அடுக்கி இருந்தன.

“ரகு, இது இல்லை. வேறு அலமாரி பார்க்கலாம் “ என்றேன். மலைப்பாக இருந்தது. அந்தப் பெரிய அறையில் சுமார் முப்பது அலமாரி, பீரோக்கள் இருந்தன.

நாங்கள் ஒரு பத்து அலமாரிகளைத் திறந்திருப்போம். ஒன்றும் உருப்படியாகக் கிடைக்கவில்லை. அறையில் ஒரு மூலையில் ஒரு பெரிய மர அலமாரி ஆள் உயரத்துக்கு இருந்தது. மேலே புழுதி படிந்து இருந்தாலும், நேர்த்தியாக நல்ல தேக்கு மரத்தால் செய்தது தெரிந்தது. வேலைப்படுகளுடன் பித்தளைக் கைப்பிடி நிறம் மங்கி, பாசி படிந்தது போல பச்சைக் கருப்பில் இருந்தது. திறந்தால் பழைய வாசனை இன்னும் அதிக நெடியாக அடித்தது. ரகு ஒரு முறை தும்மினான். உள்ளே முழுவதும் பழைய பொருட்கள் இருந்தன. அதில் என்ன இருக்கிறது என்று  தெளிய சில வினாடிகள் ஆயின. அய்ந்து அடுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டு மரப் பெட்டிகள் இருந்தன. இந்தப் பெட்டிகள் சற்று ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்தன.

மரப் பெட்டிகளில் மேலே பார்த்தால் புழுதிக்கு நடுவே தீப் பட்ட அடையாளங்கள் இருந்தன. ஒரு பெட்டியின் மேலே விரல்களால் நிரடி வாசனை பார்த்தேன். தீயின் கருகல் வாசனை வந்தது.  என் மனம் உள்ளுணர்வில் பரபரத்தது – இதாக இருக்குமோ ? அந்தப் பெட்டி ஒரு பித்தளைப் பூட்டால் பூட்டப் பட்டிருந்தது. சாவி எதுவும் இருக்காது என்று தெரியும். நான் கொண்டு வந்திருந்த பேனாக் கத்தியால் நெம்பினேன். ரகு “ வேண்டாம் சார், அவர்களைக் கேட்காமல் திறக்கக் கூடாது”  என்றான்

“ ரகு, இதுதான், எனக்குத் தெரியும் , தடுக்காதே” என்று ஆவேசமாக அந்தப் பூட்டைத் திறக்க முயற்சித்தேன். பூட்டின் திறக்கும் துவாரத்தைச் சுற்றி கீறல் விழுந்தது. ஏதோ ஒரு வாகில் கத்தி சரியாக உள்ளே அமர்ந்து பூட்டு திறந்தது. எனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. மேலே இருந்த தூசை என் கைக்குட்டையால் தள்ளி, வாயால் ஊதி , மெதுவாகத் திறந்தேன்.

நன்றாக விளைந்த ,மூங்கில் போல தடித்த பழுப்பு நிற உருளை இருந்தது. அதன் மேல் ஒட்டிய காகித லேபிலில் “எடிசன் ரெகார்ட்ஸ் எக்கோ ஆல் ஓவர் த வோர்ல்ட்” என்று அச்சிடப் பட்டிருந்தது. மூடியைத் திறந்தால் மேலாக ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. மிகக் கவனமாக அந்த உருளையை எடுத்தேன். அது ஒலிப் பதிவு செய்யப் பட்ட மெழுகு உருளைதான். என் கைகள் நடுங்கின.

ரகு “சார், உங்கள் குரல் மட்டும் தங்கம் இல்லை, கைகள் கூட தங்கம்தான், நூறு வருடங்களாக தீயில் அழிந்தது என்று நினைத்திருந்த முதல் ஒலிப் பதிவுகளை கண்டு பிடிச்சுட்டீங்க, இது மகத்தான கண்டு பிடிப்பு “ என்றான்.

“ரகு, சுந்தரம் தாத்தாவின்  ஒலிப் பதிவு இதில் எங்கோ இருக்க வேண்டும், எனக்கு அவர் குரலைக் கேட்க வேண்டும், அப்படி என்னதான் அவருடைய மாயக்குரலில் இருந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை எல்லோரும் கேட்டு அனுபவிக்க வெளியிட வேண்டும் “

ஏன் பரபரப்பைப் பார்த்து ரகு சற்று ஆசுவாசப் படுத்தினான்.

“சார், முதல்ல உட்கார்ந்து தண்ணீர் குடிங்க,  நிச்சயம் கிடைக்கும், “ என்றான்.

முதலில் எடுத்த உருளையில் இருந்த காகிதத்துண்டில் என்ன எழுதி இருந்தது என்று படிக்க முயற்சித்தேன். மட்கிய காகிதம் உதிர்ந்து போகும் நிலையில் இருந்தது. என்னுடைய நல்ல காலம், ஆங்கிலத்தில் எழுதி இருந்தது.  வீணா கனகாம்பாள் 1899 என்று இருந்தது. எனக்குப் புல்லரித்தது. வீணை கனகாம்பாள் ஒரு சகாப்தம்.  அவர் வாசிப்பைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அவர் வீணை வாசித்துக் கொண்டே கூடப் பாடுவாராம். குரலில் பேசுவது விரலில் பேசுமாம். விரலில் பேசுவது குரலில் பேசுமாம்.  சரசுவதியின் வீணையை நாம் கேட்டதில்லை அனால் ஒருவேளை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று எல்லாம் ஆனந்த விகடனில் “ஆடல் பாடல்’ பகுதியில் கல்கி எழுதியதாக பாட்டி சொல்லுவாள். அவருடைய ஒலிப்பதிவு இவ்வளவு பழமையானது இருப்பது பற்றி எங்கும் கேள்விப்பட்டது இல்லை. 1899 இல் அவருக்கு பத்து வயதுதான் ஆகி இருக்கும். அந்த வயதிலேயே ஒலிப்பதிவு செய்யும் அளவுக்குத் திறமையா என்று ஆச்சரியமாக இருந்தது.

நிச்சயமாக இசைக் கச்சேரிகளின் ஒலிப்பதிவுகள்தான். நான் திறந்தது போல இன்னும் ஒன்பது பெட்டிகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் முப்பத்து இரணடு உருளை என்றால், முன்னூற்று இருபது ஓலிப் பதிவுகள்.  திறந்து பார்த்து விட வேண்டியது தான். ரகுராவ் கதவுக்கு அருகில் ஒரு கால் உடைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து மொபைலில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால்  அனேகமாக இன்று மாலைக்குள் கண்டு பிடித்து விடலாம். சுந்தரம் தாத்தாவின் ஒலிப் பதிவு இருக்கிறதா என்று சந்தேகம். மகாராஜா பட்டத்தில் இருந்தது முப்பத்து ஏழு வருடம். ஒலிப்பதிவுக் கருவியை அவர் வாங்கியது 1896 இல் என்று ஆவணங்கள் தெரிவித்தன. ஒரு உருளையில் சுமார் இரண்டு நிமிடங்கள்தான் பதிவு செய்ய முடியும். முழுக் கச்சேரியையும் பதிவு செய்தார்களா அல்லது சில பகுதிகள் மட்டுமா என்று சந்தேகமாக இருந்தது.  இப்படி என் மனம் அலை பாய்ந்தது.

சுந்தரம் தாத்தா இங்கே வருடா வருடம் வந்து பாடி இருக்கிறார். அப்படியானால் அது 1896 ஆக இருக்க வேண்டும். இத்தனை பெட்டிகளில் எதில் இருக்கிறது என்று எப்படிக் கண்டு பிடிப்பது, ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டியது தான் வேறு வழியே இல்லை என்று தோன்றியது.

ஒலிப்பதிவு கிடைத்தாலும் அதை எப்படிக் கேட்பது என்ற சந்தேகம் வந்தது. சுற்றிலும் பார்த்தேன். அந்த உருளைகளில் இருந்த இசையை ப்ளே செய்ய ஏதாவது கருவி இருந்திருக்க வேண்டும். இவ்வளவு தேடி சுந்தரம் தாத்தாவின் இசைப் பதிவைக் கண்டு பிடித்தாலும், அதை ப்ளே செய்ய முடியாவிட்டால் என்ன பயன். ஒரு வேளை அந்த ஒலிப்பதிவு உருளைகளைச் செய்த கம்பெனியே ப்ளேயரையும் விற்றிருப்பார்கள். இங்கே இல்லா விட்டாலும், லண்டனில் கிடைக்கக்கூடும்.

“ரகு இதை ப்ளே செய்ய ஏதாவது கருவி தென் படுகிறதா என்று பார்”

ரகு தேடினான்.

“சார், இதாக இருக்குமோ ?” அவன் கை காட்டிய இடத்தில் பார்த்தேன். நான் நின்று கொண்டு இருந்த இடத்திலிருந்து தெரியவில்லை. ரகு சற்று தள்ளி இருந்ததால் பார்த்தான் போல. நான் திறந்த அலமாரிக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு அலமாரிக்கு மேல் ஒரு மரப் பெட்டி இருந்தது.

“பார்த்து விடலாம் வா” என்றேன்.

ரகு ஒரு முக்காலியை இழுத்து வந்தான். அவனே அதன் மேல் ஏறினான். அதன் கால்கள் சற்று ஆடிய மாதிரி இருந்தது.

“சார், உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் , நான் பெட்டியை எடுக்கிறேன் “ என்றான்.

நாங்கள் இருவருமாக அந்தப் பெட்டியை இறக்கினோம். நல்ல வேளையாக அதற்கு பூட்டு எதுவும் இல்லை. ஒரு துணியை எடுத்து மேலே தூசு தட்டினேன். அந்த மரப் பெட்டி இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அரக்கு நிற பாலீஷில் பள பளத்தது. அதன் மூடியை மெதுவாகத் திறந்தேன். முதலில் தெரிந்தது ஒரு பெரிய பித்தளைக் கூம்பு. அதுவும் பச்சைக் களிம்பில் இருந்தது. அது தான் ஸ்பீக்கராக இருக்க வேண்டும். அடுத்தது செவ்வக வடிவில் ஒரு மரப் பெட்டி இருந்தது. அதைக் கவனமாக வெளியில் எடுத்தோம். அதன் பக்க வாட்டில் “ எடிசன் பெல் ஜெம் “ என்று சித்திர எழுத்துகளில் பேனர் மாதிரி இருந்த படத்தின் மேல் பொறித்திருந்தது. பக்கத்தில் ஒரு பெரிய சுழலும் கைப்பிடி, பழைய கால கிராமபோன் ரெகொர்ட் ப்ளேயர் மாதிரி.

“இது தான் , ப்ளேயர் “ என்று நான் கூவினேன்

ரகு “ சார், கவனமாகப் பார்க்கலாம். இது முழுக்க மெக்கானிகல் கருவி போல இருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இது வேலை செய்யுமா என்பது சந்தேகம் “ என்றான்.

“ரகு, நீ ஒரு சந்தேகப் பிராணி, இப்படிப் பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டு பிடிப்பை செய்திருக்கிறேன், நீ உளறிக் கொண்டே இருக்கிறாய்.”

ரகுவின் முகம் மாறியது. கம்மிய குரலில்

“சாரி சார், ஒன்றை எடுத்து இதில் ப்ளே செய்து பார்க்கலாம், வேலை செய்யக் கூடும் “ என்றான்.

அந்தக் கருவியை மெதுவாக வெளியே எடுத்து அந்த முக்காலியின் மேலேயே வைத்தேன். உள்ளே முழுவதும் துணியால் தூசு தட்டி துடைத்தேன்.  பித்தளைக் கூம்பை அதன் இடத்தில் பொருத்தினேன். கைப்பிடி சுழல்கிறதா என்று பார்த்தேன். என்ன ஆச்சரியம், அது சரியாக சுழல்வது போல இருந்தது. இப்போது ஒரு ஒலிப் பதிவை ப்ளே செய்து பார்க்க வேண்டும். இந்தப் பழைய ப்ளேயரில் ஏதாவது கோளாறு இருந்தால், ஒலிப் பதிவு கெட்டுப் போகலாம். இவை எல்லாம் மெழுகு. தவறாக அழுத்தினால் எல்லாம் போய் விடும். கனகாம்பாள் பதிவைப் போட எனக்கு தைரியம் இல்லை. வேறு ஒரு உருளையை எடுத்தேன். அதில் இருந்த லேபிள் அரண்மனை ஆஸ்தான வித்வான் ராமண்ணா பாட்டு 1902 என்று எழுதி இருந்தது. நான் எடுத்திருந்த முதல் பெட்டியிலேயே பல வருடத்துப் பதிவுகள் கலந்திருந்தன. ராமசந்திர பாகவதர் என்ற ராமண்ணா இந்த சமஸ்தானத்தில் பெயர் பெற்றவர்.  அவரும் பிரபல வித்வான். அந்த உருளையை எடுத்துத் தனியாக வைத்தேன். முதலில் அதைப் போட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

கவனமாக அதை அந்தக் கருவியில் பொருத்தினேன். சுழல் கைப்பிடியைச் மெதுவாகச் சுற்றினேன். முதல் சுற்று சரியாக வரும் போல இருந்தாலும், வர வர இறுகிக் கொண்டே வந்தது. நடுவில் கர முர என்ற உலோகச் சத்தம் வேறு. நிறுத்தி விட்டேன்.

ரகு அருகில் வந்து அதை உற்றுப் பார்த்தான். “சார் ஏதாவது ஆயில் போட வேண்டுமோ என்னவோ“ எனக்கும் அது நல்ல எண்ணமாகத் தொன்றியது. “

“சார், இதைப் போட்டுப் பார்க்கலாம் “ரகு கையில் மெஷின்களுக்குப் எண்ணெய் போடும் ஆயில் கேன் எடுத்தான். “நான் எதற்கும் தேவைப்படும் என்று ரவீந்தரிடம் வாங்கி வைத்தேன்’ என்றான்.

கவனமாக அவனே அந்த சுழல் கைப்பிடிக்கு அருகில் இருந்த துளையில் சொட்டு சொட்டாக எண்ணெய் போட்டான். எண்ணெயும் இரும்பும் கலந்த வாசனை எழுந்தது. மெதுவாக அதைச் சுற்றினான். இப்போது ஓசை எதுவும் வரவில்லை. ப்ளே செய்யும் கருவியைத் துடைத்து விட்டு, நான் கொடுத்த உருளையைப் பொருத்தி, சுழல் கைப்பிடியை முழுவதுமாகச் சுற்றி விட்டான். நான் மூச்சு விடாமல் அந்தக் கணத்தில் காத்திருந்தேன். உருளை மெதுவாகச் சுழல ஆரம்பித்தது. முதலில் காற்று போல ஓசை வந்தது.

திடீரென்று புயல் போல ராமண்ணாவின் குரல் ஆரம்பித்தது. முதலில் ஒன்றும் புரியவில்லை. கவனமாகக் கேட்டேன்.

அடுத்தக் கணம் ஓலம் போல இருந்தது. மறுபடியும் கவனமாகக் கேட்டேன். ஒலிப் பதிவு இரண்டு நிமிடம்தான்.  ராமண்ணாவின் சங்கீதம் சற்று கூட இனிமையாக இருக்கவில்லை. காட்டுக் கத்தல் என்று தோன்றியது. சங்கீதம் என்று சொல்வதே கடினம். அவர் இந்த ஊர் சமஸ்தானத்தில் மிகப் பெரிய வித்துவான் என்று பெயர் எடுத்தவர்.

ரகு “என்ன சார், இப்படி இருக்கிறது ? ஒரு வேளை கருவியில் கோளாறாக இருக்குமோ” என்றான்.

நான் “ரகு ,கருவி சரியாக வேலை செய்வது போலத்தான் இருக்கிறது. ராமண்ணா பாட்டு அவ்வளவுதான். அதுவும் அந்தக் காலத்து பாட்டு “ என்றேன்.

“என்னவோ சார், இதைக் கேட்டால் பாட்டு மாதிரியே இல்லை“ என்றான்.

“அப்படி எல்லாம் சொல்லாதே, ராமண்ணா இந்த சமஸ்தனத்தின் பெரிய வித்துவான்”

சொல்லிக் கொண்டே நான் சற்று யோசித்தேன்.

“ரகு, இது எல்லாம் பிரித்துப் பார்த்து லேபில்களைப் படித்துக் கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும். மாலை வரை கூட அகலாம். நீ ரவீந்தரைப் பார்த்து இங்கேயே மதிய உணவு கிடைக்குமா இல்லை நாம் வெளியே போய் வர வண்டுமா என்று விசாரித்து வர முடியுமா ? “ என்றேன். ரகு தயங்கி நின்றிருந்தான்.

“நான் அது வரை ஒலிப் பதிவுகளை எடுத்து கால வரிசையில் அடுக்கி அதில் சுந்தரம் தாத்தாவின் பதிவு இருக்கிறதா என்று தேடுகிறேன்” என்றேன்.

ரகு “ சார், நானும் தேடுகிறேன், இன்னும் இத்தனை பெட்டிகள் இருக்கின்றன “ என்றான்.

“இல்லை ரகு, நீ போய் சொன்ன வேலையைக் கவனி “ என்றேன்.

ரகு அரை மனதுடன் வெளியே சென்றான். ஒரு வேளை சுந்தரம் தாத்தாவின் ஒலிப்பதிவு கண்டுபிடித்தால், அந்த  நேரத்தில் அவனும் இருக்க வேண்டும் அன்று நினைக்கிறான் போல.

நான் ஒன்றொன்றாக உருளைகளை எடுத்து, திறந்து காகிதக் குறிப்புகளைப் பார்த்தேன்.  இப்படி ஒரே பெட்டியிலேயே பல வருடத்துப் பதிவுகள் கலந்து இருந்தால், எல்லாவற்றையும் திறந்து கண்டு பிடிக்க ஒரு நாள் போதாது என்று கவலையாக இருந்தது.

இன்னொரு பெட்டியைத் திறந்தேன். அதிலும் பழுப்பு உருளைகள்தான். கூடவே காகிதத்தில் பண்டிட் ராம்ரத்தன் என்று எழுதி இருந்தது. அவர் அந்தக் காலத்து ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் தலை சிறந்த பாடகர். அவரைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன். தவிர பாட்டி நிறையச் சொல்லி இருக்கிறாள். அவர் குரல் கேட்க கச்சேரிகளில் ஆயிரக்கணக்கானவர் காத்திருப்பார்களாம்.  அவர் மதராஸில் வந்து பாடிய போது உள்ளூர் வித்வான்கள் அவர் சங்கீதத்தைக் கேட்டு மயங்கிப் போனார்களாம். அதே சமயம் பயம் வேறு. அவர் எங்காவது நம்முடைய சங்கீதத்தைப் பாடச் சொல்லிக் கேட்டால் என்ன செய்வது என்று. அவருக்கு இணையாக யார் பாட முடியும் என்று விவாதித்து கடைசியாக ஏகமனதாக முடிவு செய்து சுந்தரம் தாத்தாவைதான் கேட்டுக் கொண்டார்களாம். பண்டிட் ராம்ரத்தனும் சுந்தரம் தாத்தாவின் கச்சேரியைக் கேட்டு மிகவும் புகழ்ந்தாராம்.  நம்முடைய மானம் காப்பாற்றப் பட்டது என்று உள்ளூர் வித்வான்களும் ரசிகர்களும் மகிழ்ந்து போனார்களாம்.

அப்போது சிலர் இரண்டு பேரையும் சேர்ந்து பாட வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்களாம்.  அதை இரண்டு பேரிடமும் தனித்தனியாகப் பேசி, ஒத்துக் கொள்ள வைத்தது அப்போது மைலாப்பூரில் பெரிய வக்கீலாக இருந்த ராகவாச்சாரி தானாம். அந்தக் கச்சேரி மாதிரி வாழ் நாளில் கேட்க முடியாது என்று பாட்டி சொன்னாள். இரண்டு பேரும் ஒரே மேடையில் அமர்ந்தது பார்க்கவே கண் கொள்ளாமல் இருந்ததாம். ஜனங்கள் மந்திரத்தால் கட்டுண்டது மாதிரி கேட்டார்களாம். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், அதே சமயம் போட்டியாகவும் இல்லாமால் இரண்டு பேரும் உருகிப் பாடினார்களாம்.  அன்றைக்கே சுந்தரம் தாத்தாவுக்கு தக்ஷிண  பாரத சங்கீத சக்கரவர்த்தி  என்றும் , பண்டிட் ராம்ரத்தனுக்கு உத்தர பாரத சங்கீத சாம்ராட் என்று ஜனங்கள் பட்டங்கள் கொடுத்தார்களாம். அப்படிப்பட்ட பண்டிட் ராம்ரத்தனுடைய சங்கீதம் என்று நினைக்கும் போதே புல்லரித்தது. அந்த ஒலிப் பதிவின் வருடமும் 1898 என்று எழுதி இருந்தது.

அடுத்தது ராம்ரத்தன் ஒலிப் பதிவைக் கேட்கலாம் என்று நினைத்தேன். அந்த உருளையை எடுத்து பொருத்தினேன். கைப்பிடியைச் சுற்றி ஓட விட்டேன். ஒலி வந்தது.

அந்த இரண்டு நிமிடம் மிக மிக நீண்டதாகத் தோன்றியது.

நான் அப்படியே திறந்து கிடந்த பெட்டிகளை விட்டு விட்டு வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தேன். சற்று நேரத்துக்குப் பிறகு மறுபடியும் தேட ஆரம்பித்தேன்.  நிறைய  வாத்தியக் கருவிகள் ஒலிப் பதிவுகள் வந்தன. கடைசி உருளையைத் திறந்தேன். அதில் லேபில் மடங்கி இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். ஒரு கணம் அதிர்ந்தேன். சுந்தரம் தாத்தாதான். “மகாவித்வான் மதராஸ் சுந்தரம்  என்று இருந்தது. “கைவிரல்கள் நடுங்க அந்த உருளையை எடுத்தேன். ரகு இல்லை, சுற்றிலும் பார்த்தேன். வேறு யாரும் கூட இல்லை அந்த மகத்தான தருணத்தில் நான் மட்டும்.

அந்த உருளையைக் கருவியில் பொருத்தி,,கைப்பிடியைச் சுழற்ற ஆரம்பித்தேன்.

கை தானாக நின்றது. அதை ஓட விட விடவில்லை. அந்த உருளையை எடுத்து திரும்ப பெட்டிக்குள் வைத்தேன்.

மூடுவதற்கு முன் சுந்தரம் தாத்தாவின் பெயர் பொறித்த லேபிலை உள்ளே வைக்கவில்லை. அதை என்னுடைய சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.

மணி என்ன என்று பார்த்தேன். ரகு வருவதற்குள் எல்லா உருளைகளிலிருந்தும் லேபில்களை மட்டும் எடுத்து விடமுடியும் என்று தோன்றியது.

 

 

 

 

 

 

கண்மணி குணசேகரனின் வாடாமல்லியில் சில நித்திய மலர்கள்

செமிகோலன் 

தெருக்கூத்து குழுவில் ஒப்பனை மற்றும் பிற சின்ன வேலைகளை செய்து வரும் காசிலிங்கத்தின் (அம்போகம்) மனைவி அவனை விட்டுச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவளுடைய உறவினர்கள் காசிலங்கத்தை சந்திக்க வருவதாக கூத்துப் பட்டறையின் வாத்தியாரிடம் சொல்லியிருக்கிறார்கள். காசிலிங்கத்திற்கு எதற்காக வருகிறார்கள் என்ற பதைபதைப்பும், எதிர்பார்ப்பும்.

வாழ்வில் சின்ன மகிழ்வான தருணங்களையே கூட அதிகம் அனுபவித்திராத வாழ்க்கை காசிலிங்கத்தினுடையது. மகன் ராஜா தான் என்று அவன் தாய் கூறினாலும், அவனுடைய குரலிலும், நடையில் உள்ள சிறிய குறை அவனை சிறுவயதிலிருந்தே பின்தொடர்கிறது. முப்பது வயதிற்கு மேல், கணவன் இறந்து விட்ட சூரியகாந்தியை மணம் செய்கிறான். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்று அவளை பார்க்கச் சென்ற அன்றே அவனுக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் காலப்போக்கில் மனம் மாறுவாள் என்று நம்புகிறான். ஆனால் அவனிடமிருந்து எப்போதும் விலகியே இருப்பவள்,ஒரு கட்டத்தில் மீண்டும் தாய் வீட்டிற்கே சென்று விடுகிறாள். அதன் பின்? எப்போதும் போல் செல்கிறது காசிலிங்கத்தின் வாழ்க்கை. ஒப்பனை செய்யும் போது, பெண் வேடமிடும் நடிகனுக்கு பெரிய முலைகளை பொருத்தும் போது, தன்னிச்சையாக அவற்றை அழுத்துகிறான், அதை பார்த்துவிடும் மற்றொரு நடிகனால் அதன் பின் ஜாடை மாடையாக கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறான். ஆனால்காசிலிங்கம் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை, அது அவனுடைய குணம் அல்ல, தன் வாழ்விலுள்ள மற்றனைத்தையும் போல் இதையும் சகித்துக் கொள்கிறான்.

அவனுடைய தாய் இருந்து விட்டாள். சூரியகாந்தியின் தாய் சமீபத்தில் தான் இறந்தாள் என்பதால், இப்போது அவளுக்கும் யாருமில்லை. ஒரு வேளை அதனால், மீண்டும் தன்னிடம் வருவதற்காகத் தான் ஆட்களை அனுப்புகிறாளோ என்ற ஆசை அவனுக்கு உள்ளது. வாத்தியாரிடம் அதை அவன் கூற, அவரோ, அவள் சீராக கொண்டு வந்த பொருட்கள், காசிலிங்கத்திடம் தான் இருப்பதால், அதை கேட்க கூட ஆள் அனுப்பலாம் என்கிறார்.

உறவினர்கள் வருகிறார்கள். சூரியகாந்தி அரசாங்க உதவி தொகையை பெற வேண்டுமென்றால், அவளுக்கு துணையென்று யாரும் இருக்கக் கூடாது, எனவே விவாகரத்து பத்திரத்தை காசிலிங்கம் கையொப்பமிட கேட்கிறார்கள். சீர் பொருட்களை கேட்க வரக் கூடும் என்ற யூகத்தின் நீட்சியாக இதை பார்க்கலாம் என்றாலும், அதுவரை வாசகனுக்கு அது குறித்து தோன்றாமல் இருப்பதே எழுத்தின் வலிமை. எதற்காக வருகிறார்கள் என்ற பதைபதைப்பில் அவனும் இந்தக் கோணத்தை தவற விடுகிறான்.

காசிலிங்கம் கையொப்பம் இடுவதுடன் கதை முடிகிறது. ஆனால் அப்போது அவனுடைய கலங்கிய கண்களிடமிருந்து நம்மால் பார்வையை விலக்க முடிவதில்லை. சீர் பொருட்கள் திரும்பித் தர வேண்டாம் என்று உறவினர்கள் கூறினாலும் அதையும் அவன் தந்து விடுகிறான். இத்தனை வருடங்களாக அவள் இல்லை, ஆனால் அவன் இதுவரை இடாத கையொப்பமும், அவன் வீட்டிலுள்ள அவளுடைய சீரும், அவளை இன்னும் தன் மனைவியாகவே எண்ணச் செய்கிறது, நாளை நல்லது நடக்கக் கூடும், என்று இத்தனை ஆண்டுகளை கடக்க உதவியிருக்கிறது. அப்படியே அவள் மீண்டும் வந்தாலும், அவர்களுக்கிடையேயான உறவு எப்படி இருந்திருக்கக் கூடும். ஆனால் பரஸ்பர பலனுக்கான உறவு என்றாலும் உறவு என்று ஒன்று இருந்திருக்குமே? இப்போது? எப்போதேனும் அந்த உறவு மீண்டும் துளிர்க்கலாம் என்ற நம்பிக்கையில், தனக்கு யாருமில்லை என்று உணர்வதை தவிர்த்துக் கொண்டிருந்த காசிலிங்கம் இடும் கையொப்பம், அவனை முழுதும் தனியனாக்குகிறது.

பழைய இரும்புப் பொருட்களை வாங்கி அவற்றுக்குப் பதில் வெங்காயத்தை கொடுக்கும் வியாபாரம் கதிர்வேலுக்கு (இரும்புராசி). ஒரு வீட்டில், இரும்பு பொருளொன்றை அதன் மதிப்பு தெரியாமல், மனைவி கொடுக்க வர, அதற்கு ஈடாக தன்னிடம் கொடுக்க எதுவுமில்லை என்று வேண்டாமென்கிறான். அப்போது அங்கு வரும் பெண்ணின் கணவன், அவனுக்கு நன்றி கூறி, மற்றொரு பொருளைத் தருகிறான். அதன் பின் இன்னும் சில வீடுகளில் பொருட்கள் கிடைக்க,இன்று நல்ல வியாபாரம் என்ற சந்தோசம் கதிர்வேலுக்கு.
நூறு நாள் வேலை திட்டத்தில் வேலைசெய்ததாக கையொப்பமிட்டு பணம் வாங்கிக் கொள்ளுமாறு அவன் மனைவி அன்று கூறியிருக்கிறாள். அது குறித்த இரட்டை மனநிலையில் தான் கதிர்வேல் இருக்கிறான். தவறென்று தெரிகிறது, ஆனால் பொருளியல் யதார்த்தம் அதை பின் தள்ளுகிறது. உழைத்து வரும் பணமே ஒட்டுவதில்லை, இப்படி ஏமாற்றி பணம் வாங்கினால் அது எப்படி ஓட்டும், என்று அப்படிச் செய்வதை தவிர்த்து விடுகிறான்.

தன்னிடம் பழைய இரும்பு சாமான்கள் இருப்பதாகவும், வந்தால் தருவதாகவும் அவனிடம் ஒருவன் கூறுகிறான். இன்று ஏற்கனவே நிறைய பொருட்கள் கிடைத்திருப்பதால், தான் வண்டியை தள்ள முடியாதென்று கதிர்வேலன் கூறினாலும், அவனை வற்புறுத்துகிறான். தானே வண்டியை ஓட்டிச் செல்வதாகவும் கூட சொல்கிறான். மனைவியிடமிருந்து அப்போது அலைபேசி அழைப்பு வர, சில நிமிடங்கள் அவளுடன் உரையாடுகிறான், அவன் கவனம் வண்டியின் மீது இல்லை.

இப்போது என்ன நடக்கப் போகிறது என்று வாசகனுக்குப் புரிந்து விடுகிறது, இருந்தாலும் அவ்வாறு நேரக் கூடாது என்றே, வண்டியை ஒட்டிக் கொண்டு எங்கோ சென்று விட்ட அந்த ஆளைத் தேடும் கதிர்வேலுவுடன் நாமும் இணைகிறான். அவன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை. ஒரு வேளை தூரத்தில் எங்கேனும் புதருகில் அந்த ஆள் நின்றிருக்கக் கூடுமோ, ஏதேனும் கடை கூரையின் அடியில் கதிர்வேலுக்காக காத்துக் கொண்டிருக்கிறானோ, அவனே கூட திரும்பி வரலாம். நடக்காது என்று தெரிந்து இப்படி சாத்தியமில்லாதவைகளை எண்ணிக் கொள்கிறோம். இறுதியில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, நாளை கதிர்வேலு நூறு நாளை வேலை செய்ததாக கையோப்பமிடுவானோ?

ஆலிஸ் மன்றோவின் ‘The bear over the mountain’ சிறுகதையில் தன் நினைவுகளை இழக்கத் துவங்கும் பயோனாவை அவள் கணவன் க்ரான்ட் காப்பகத்தில் சேர்க்கிறான். பின் தினமும் சென்று அவளுடன் அங்கு நேரம் செலவிடுகிறான். காப்பகத்தில் பயோனாவிற்கு ஆப்ரி என்பவுடன் நட்பு உருவாகிறது. அங்குள்ள செவிலி இத்தகைய நட்பு, உறவு, இயல்பான ஒன்று தான் என்று கூறினாலும், தன் பல்லாண்டு கால மனைவி, தன்னை மறந்து, மற்றொருவனுடன் இன்னும் நெருக்கமாவதை க்ரான்ட்டால் தாங்கிக் கொள்ளமுடிவதில்லை.

தன்னிலை அழிந்து, இறக்கும் தருவாயில் இருக்கும் தன் மனைவி பச்சைக்கிளியின் அருகே அமர்ந்திருக்கிறார் இளையபெருமாள் (பச்சைக்கிளி). கடந்த சில நாட்களாக, ‘வண்டிக்காரன் கூப்டுறான், நா போவுட்டுமா..’ என்று மட்டும் அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சொல்வது அவருக்கு மட்டுமே புரிகிறது. இளம் வயதில் பச்சைக்கிளியை அவள் ஊரிலுள்ள வண்டிக்காரன், பொங்கநாதன், திருமணம் செய்ய விரும்புகிறான், அவளிடம் அதை கூறவும் செய்கிறான். அவனிடம் பேசி, பழகியிருந்தாலும், அது போன்ற எண்ணம் அவளிடமில்லை என்று நாம் யூகிக்கலாம், அவள் தன் உறவினன் இளையபெருமாளை மணக்கிறாள். சில காலம் கழித்து, விபத்தில் வண்டிக்காரன் இறந்து விடுகிறான். நிறைவான நீண்டமணவாழ்க்கை முடியும் தருணத்தில், இப்போது மீண்டும் வண்டிக்காரன் அதே கேள்வியை கேட்க ஆரம்பித்திருக்கிறான். பச்சைக்கிளி என்ன செய்யப் போகிறாள்? இளையபெருமாள் அனுமதி குடுப்பாரா?

மேற்கு எப்போது மூளை, அறிவை (enlightment) முன்னிறுத்தும், லோகாயாதம், யதார்த்தம் பேசும், கிழக்கு, புலன்களை தாண்டிய உணர்வுகளை, அனுபவங்களை ஏற்கும், உலகியலிலிருந்து விலகி இருக்கும், என்று மேற்கு, கிழக்கு பற்றிய ஒரு பொது புரிதல் உண்டு. இது ஒரு எளிய புரிதலே, இவ்வளவு எளிதாக இரண்டையும் பகுப்பு செய்ய முடியாது என்றாலும்,‘The bear over the mountain’, ‘பச்சைக்கிளி’ இரண்டு கதைகளின் முடிவையும் இந்த பகுப்பில் பொருத்திப் பார்க்கலாம். முதலாவதில் அறிவு, யதார்த்தம் சார்ந்த முடிவு, இரண்டாவதில் அதை மீறிய ஒரு உணர்வு, ஒரு கணம்.

மல்லிகாவின் ஊரில், அவள் தாய் வீட்டிற்கு அருகில் இருந்த ‘குடிகார’ ஆள் இறந்து விட்டான் என்ற தகவல் அவளுக்கு வருகிறது (வாடாமல்லி). கணவன் பன்னீர்செல்வம் முன் அந்த செய்தியை அவள் சாதாரணமாக எடுத்துக் கொள்வது போல் நடந்து கொண்டாலும், அவள் உணர்சிவசப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. ஏன்? பன்னீர்செல்வத்திற்கு இந்த விஷயம் முந்தைய இரவே தெரிந்திருந்தும், அவள் வருந்துவாள் என்று சொல்லாமல் இருந்திருக்கிறான் என்று நமக்குத் தெரிய வரும் போது யூகிக்க முடிகிறது.

பன்னீர்செல்வம் தான் அவளை ஊருக்கு அனுப்பி வைக்கிறான், வண்டியில் கொண்டு விடட்டுமா என்று கூட கேட்கிறான். வேறு வழியில்லை என்பது போல் மல்லிகாவும் கிளம்புகிறாள். பயணத்தின் போது ‘குடிகாரனின்’ நினைவுகள். அவளுக்கும், அவனுக்கும் காதல், இவள் குடும்பம் ஏற்கவில்லை. ஓடிப் போனவர்களை பிடித்து, பன்னீர்செல்வத்திற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ‘குடிகாரனும்’ பாப்பாத்தியை திருமணம் செய்கிறான். ஆனால் மல்லிகாவை அவன் மறக்கவில்லை, குடி இன்னும் மோசமாகி, மனைவி, குழந்தைகளை மோசமாக நடத்துகிறான். ஆனாலும் பாப்பாத்தி மீது மல்லிகாவிற்கு கோபம் தான் உள்ளது. அல்லது அது பொறாமையா?

திருமணத்திற்குப் பின் இந்த விஷயம் தெரிய வந்தாலும், அது பற்றி மல்லிகாவிடம் பன்னீர்செல்வம் எதுவும் கேட்டதில்லை. இப்போதும் கூட அவள் மனம் எவ்வளவு துன்புறும் என்று தான் எண்ணுகிறான். பெரிய மாலையுடன் ‘குடிகாரன்’ வீட்டிற்கு வருபவளை, பாப்பாத்தி, ‘அக்கா’ என்று அழைத்தபடி கட்டிக் கொள்வதுடன் கதை முடிகிறது.

மல்லிகா, ‘குடிகாரன்’, இருவரின் காதல், இவற்றை விட பன்னீர்செல்வம், பாப்பாத்தி தான் நம் நினைவை விட்டு நீங்க மறுக்கிறார்கள். பாப்பாத்திக்கும் தன் கணவனின் காதல் குறித்து தெரிந்திருக்கும், இருந்தும் வாழ்ந்திருக்கிறாள், ‘அக்கா’ என்று மல்லிகாவை அழைக்கிறாள். இழப்பின் முதற்கட்ட சோகத்தை கடந்தவுடன் இதே உறவு நிலை நீடிக்க வாய்ப்பில்லை, ‘குடிகாரன்’ குறித்து இருவரும் பேசிக் கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், அந்தக் கணத்தில், இருவருக்குமிடையே ஒரு தற்காலிக இணைப்பு உருவாகிறது. இனிமேலும் பன்னீர்செல்வம் ‘குடிகாரன்’ பற்றி ஏதுவும் பேசப்போவதில்லை. மூவருக்குமிடையே, எப்போதுமே அவர்களருகில்இருக்கும், ஆனால் பேசாப்பொருளாக,‘குடிகாரன்’ நிலைபெற்றுவிட்டான்.

கரமுண்டார் வூடு – தஞ்சை ப்ரகாஷ்

செமிகோலன்

முதல் ஐம்பது, அறுபது பக்கங்கள் அரையிருளில் தோன்றும் கரமுண்டார் வூடை, அதில் வசிக்கும் பல குடும்பங்களை (நூறு பேராவது வசிப்பார்கள் என்று யூகிக்கலாம்), அதன் முக்கிய மனிதர்களை, காட்டுகிறது. (கூட One Hundred Years Of Solitudeன் Buendia வீடும் மனக்கண்ணில் தோன்றுகிறது). பிரயாணம் செய்ய கொஞ்சம் கடினமான இந்தப் பகுதியை கடந்து விட்டால், வூடும், மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக துல்லியமாக தென்பட ஆரம்பிக்கிறார்கள். அதுவரை பொறுமை காப்பது வாசகனுக்கு பயனளிக்கும். அது தொடர்பான இரு விஷயங்கள்:

முழு நாவலைப் பற்றியில்லாமல், ப்ரகாஷின் புனைவுலகிலும், அவற்றைப் பற்றிய வாசக கருத்துக்களிலும் அதிகம் தென்படும் ‘மனுஷன் தானே’, ‘எல்லாமே அசிங்கம்’, போன்ற சொற்றொடர்களை அவற்றை முன்வைத்து சில எண்ணங்கள். அருவருப்பானது, அசிங்கமானது என்று பொது சமூகம் ஒதுக்கும் விஷயங்களை அவர் பதிவு செய்கிறார் என்பதை சுட்டும் சொற்றொடர்களாக அவற்றை புரிந்து கொள்ளலாம். அவை நியாயமானவையும் கூட. நாம் அருவருப்படையும், நம்ப மறுக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றன, அவற்றின் சதவீதம் குறைவாக இருப்பதாலேயோ, ‘கழிப்பறை வீட்டில் உண்டு, அதற்காக அதை ஹாலில் வைக்க முடியுமா’ போன்ற வாதங்களாலோ, அத்தகையவற்றை பதிவு செய்வதை ஒதுக்குவது சரியாக இருக்காது, எழுத்தாளன் செல்லும் மனப் பாதை அவனுடையதே, அதில் மலமிருந்தாலும், அதில் செல்ல அவனுக்கு உரிமையுண்டு. இந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நாவலில் இரு நிகழ்வுகள். முக்கிய பாத்திரமான தெகல்ராஜு சித்தப்பனுடன் பள்ளக் குடிக்கு செல்கிறான். ஒரு பெண்ணுடன் பாதி கலவியில் இருக்கும் போது, சித்தப்பா அவளை உறவுக்கு அழைக்க அவள் சென்று விடுகிறாள். இப்போது அவள் மகள் வந்து, அவனுடன் கலவி கொள்கிறாள், சித்தப்பனுடன் இருந்த பின், தாய் மீண்டும் வந்து, threesome நடக்கிறது. இரு முறை. இந்தப் பாலியல் சுரண்டல் குறித்து என்ற விமர்சனம் வரும், அதை எப்படி ப்ரகாஷ் எதிர்கொள்கிறார் என்று நாவலை படித்து அறிந்து கொள்ளலாம். Threesome, தொடர்ச்சியாக இரு ஆண்களுடன் உறவு என்பதெல்லாம் நடக்காது என்றில்லை, அவற்றைப் பற்றி சொல்ல எதுவுமில்லை. இந்த நிகழ்வுக்கான Logistics பற்றி கொஞ்சம் யோசிக்கலாம், ‘மீறல்’, ‘இதெல்லாம் நடக்குமா’ என்று நாம் எண்ணுபவற்றை உடைத்தெறிய ப்ரகாஷ், ஒரு எல்லையிலிருந்து, மற்றொன்றுக்கு போகிறாரோ, அங்கு செல்ல அவர் உபயோகிக்கும் ex deus machina தான் இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மற்றொரு நிகழ்வு. காத்தாயம்பா, கரமுண்டார் வீட்டின் குல தெய்வம் போல, தெகல்ராஜுகாகவே காத்திருப்பவள். ஆனால் அவனை தன்னை தொடக் கூட விடாதவள், அதே நேரம் உடல் தாபத்தை செல்வி என்ற பெண்ணின் மூலமாக, – தற்காலிகமாக – அடக்கிக் கொள்கிறாள் கலியன் பள்ளன். கரமுண்டார் ஒருவர் தங்கள் குடிப் பெண்ணை பாலியல் வன்முறை செய்து விட, கலியன் காத்தாயம்பாவை கடத்திச் செல்கிறான். அதன் பின்னான, அடுத்த மூன்று நாளின் நிகழ்வுகள், வாசகனுக்கு பூடகமாக சொல்வது, காத்தாயம்பா அவனுடைய வன்புணர்ச்சியை ஒரு கட்டத்தில் விரும்புகிறாள், அது இருவரும் இணையும் கலவியாக மாறுகிறது. மனித இச்சைகள் செல்லும் திசைகள் யாரும் அறியக் முடியாதவை என்று ப்ரகாஷ் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம், Stockholm syndrome, பற்றியெல்லாம் நாம் கேள்விபட்டது தானே. சரி, அடுத்து என்ன நடக்கிறது. ‘நீ சிறு வயதிலிருந்தே’ என் மீது ஈர்ப்பு கொண்டாய் என்று எனக்குத் தெரியும்’ என்பது போல் சொல்லும் காத்தாயம்பா, இனி அவனுடன் தான் இருப்பேன் என்று சொல்கிறாள். அவர்களை தேடி வருபவர்களிடமிருந்து தப்பி, பேருந்தில் ஏறி செல்கிறார்கள். கரமுண்டார் வீட்டை விட்டு காத்தாயம்பா ஏன் செல்ல நினைக்கிறாள் என்பது அதுவரை நாவலை கூர்ந்து வசிப்பவனுக்கு புரியும். கடத்தல், வன்புணர்ச்சி, விருப்பத்துடன் கலவி எல்லாம் அதற்கான வழியா என்று தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.யுவன் சந்திரசேகரனின் கதையொன்றில், வீட்டினுள் திருட வந்தவன், கணவன் மனைவியை கட்டிப் போட்டு விட்டு, மனைவியை வன்புணர்வு செய்து விடுவான். அதன் பின் மனைவி பிரிந்து சென்று விடுவாள். அதற்கு அப்பெண் சொல்லும் காரணத்தில் உள்ள உளவியல் நுட்பத்தை காத்தாயம்பா, கலியனுடன் செல்வதற்காக சொல்லும் காரணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வித்தியாசம் புரியும். எழுத்தாளனின் பாதை அவனுடையதே, அப்படிச் செல்ல வேண்டாம் என்று கூறவில்லை, எளிதான பாதையோ -இன்னொரு ex deus machina-என்று தான் தோன்றுகிறது, குறிப்பாக மாயி – தெகல்ராஜு உறவையும் கவனத்தில் கொள்ளும் போது.

மாயி என்ற பள்ளப் பெண் கலியனை காண வருகிறாள், – காத்தாயம்பா கடத்தலுக்கு முன்பு இது நிகழ்கிறது-. ஊரில் தெகல்ராஜுவை சந்திக்கிறாள், உடன் கலவி. கலியனை மறந்து விடுகிறாள், தெகல்ராஜுவை நீங்க மறுக்கிறாள். காத்தாயம்பா , கலியன் ஓடிச்சென்ற பிறகு, மாயி தெகல்ராஜுவின் வீட்டிலேயே வசிக்க ஆரம்பிக்கிறாள்.

கள்ளன்-பள்ளச்சி, பள்ளன்-கள்ளச்சி, என ப்ரகாஷ் கலைத்து போட விரும்புகிறார் என்று புரிகிறது, நிஜத்தில் இப்படி நடப்பது இயல்பான ஒன்று தான். மனித மனம் எப்போது வேண்டுமானாலும் மாறவும் கூடும் தான். அதற்காக அவர் உபயோகிக்கும் உத்திகள், அவர் உருவாக்கும் ஒரு உச்ச கணத்தின் முந்தைய கணங்களில் அதற்கான சுட்டுதல் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி தான் வாசகனை சிந்திக்க வைக்கிறது. கருப்பு-வெள்ளை என்று பொது புத்தியில் இருப்பதை, வெள்ளை-கருப்பு என்று மாற்றிப் போடுவதும், எல்லாவற்றையும் கலைத்துப் போடுவதும் சாதாரண ஒன்றல்ல, துணிவும், தன் எழுத்தின் மீது நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ப்ரகாஷிற்கு இரண்டும் உள்ளது, அதை வெளிப்படுத்தும், தனித்துவமான மொழி நடையும் உள்ளது. ஆனால் அதைக் கொண்டு அவர் தன் புனைவுலகை கட்டமைக்கும் விதம்? அவ்வப்போது இச்சை, மனுஷ ஜன்மம், அசிங்கம், போன்றவை உரையாடல்களாக, எழுத்தாளர் கூற்றாக வருவதை அவர் கட்டமைப்பதை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்துகிறதே தவிர, அந்த கட்டமைப்பில் உள்ள சில விரிசல்களை மறைப்பதில்லை. மாயி- தெகல்ராஜு உறவை கூட, ‘ஆமாம் மனிதர்கள் இப்படித்தான், வாய்ப்பு கிடைத்தால் எல்லாம் செய்வார்கள்’ என்று நியாயப்படுத்த முடியும், அது சரியும் கூட. ஆனால் அதை ஏற்றுக் கொண்டே, அந்த விஷயத்தை நிறுவ, மீண்டும் மீண்டும் அதையே வேறு வேறு வடிவங்களில், -பெரிதாக காரண காரியங்கள் இன்றி – சம்மட்டியால் அடிப்பதை போல், சொல்வதையும் விமர்சிப்பது சரியாகத் தான் இருக்கும். காரண காரியங்கள் இன்றி, என்று குறிப்பிடும் போது, ஒன்றுக்குப் பின் இரண்டு, என்ற ஒழுங்கு வரிசையில் நடைபோடும் சம்பவத் தொகுப்பை சுட்டவில்லை, யதார்த்தத்தில், எந்த தர்க்கத்திற்கும் அடங்காத நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் உண்டு என்பதும் நாம் அறிந்ததே. எது வரை எதார்த்தம் மீறப்படலாம் என்பதையும் யாரும் அறுதியிட்டு கூற முடியாது, எந்தளவிற்கு அந்த எதார்த்த மீறல், புனைவில் பொருந்தி வருகிறது என்று மட்டும் பார்க்கலாம்.

ஒரு தரப்பால் ‘எளிய பகற்கனவுகளை பேசுகிறது’, ‘வெறும் காமம்’ மட்டுமே என்று ப்ரகாஷின் படைப்புக்கள் பார்க்கபடுகிறது. இன்னொரு புறம் ‘குமாஸ்தா எழுத்துக்கு எதிரானது’, ‘அம்மாஞ்சிகளுக்கு, மரபார்ந்த எழுத்தை வசிப்பவர்களுக்கு இது பிடிபடாது’ என்றும் கொண்டாடப்படுகிறது. முதல் தரப்பினர், ‘தரிசனம்’, ‘முழுமையடையவில்லை’, போன்ற சொற்றொடர்களை ப்ரகாஷின் புனைவின் மீது போட்டுப் பார்த்து, அவருடைய மொழி நடையை, அவருடைய பல ex deus machinaகளுக்கு இடையே உள்ள நுட்பமான மன விகாசங்களை, அவர் காட்டும் சமூக சித்திரங்களை தவற விடுகின்றார்கள்,. இரண்டாம் தரப்பை புரிந்து கொள்வது எளிது, பெரும்பாலோனோர் பேசாத கட்டற்ற காமம், ஒரு பால் இச்சை, போன்றவற்றை பேசுபவர் என்பதாலேயே ப்ரகாஷ் முக்கியமானவராகி விடுகிறார், ஆனால் ஒட்டு மொத்தமாக அவருடைய புனைவுகளை இரு தரப்பினரும் பார்க்கிறார்களா? இரண்டும் சேர்ந்த வாசிப்பு அவருடைய புனைவுலகைப் பற்றிய இன்னும் ஆழமான புரிதலைத் தரும். இது இரு பக்கமும் நியாயம் உள்ளது எனும் ‘நடுநிலை’ அல்ல, இரு வேறு வாசிப்பு பாணிகளை அடையாளம் கண்டு, ஒரு புனைவில், அவை ஒன்றிணையும் போது உருவாகும் சித்திரத்தைப் பற்றியதே.

அதிகாரம்

உஷாதீபன் 

     நீங்க கொஞ்சம்  போய்ட்டு வரலாமே? – கேட்கும்போதே இவன் எங்கே சரி சொல்லப் போகிறான் என்கிற சந்தேகத்தோடேயே கிரிஜா கேட்டாள். அடுப்படி நோக்கிப் போய்க் கொண்டே, திரும்பிய வாக்கில் அவள் கேட்டதே அதற்கு சாட்சி. அவனுக்கு விருப்பமில்லாததை செய்ய வைக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். அதைச் சொல்லிப் புண்ணியமில்லை என்கிற பக்குவம்தான் அவளுக்கு இன்னும் வரவில்லை.

ஒண்ணு நினைச்சா பட்டுன்னு உடனே கேட்ருவியா? யோசிக்க மாட்டியா? – சரவணனின் இந்தக் கேள்வியை அவள் எத்தனையோ முறை எதிர்நோக்கியிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை. பிடிக்காத கேள்வியைக் கேட்பது எப்படி அவனுக்குப் பிடிக்காதோ அது போல் தோன்றியதைக் கேட்காமல் இருப்பது இவளுக்குப் பிடிக்காது. எத்தனை முறை திட்டினாலும் உறைக்காது.

போய்ட்டு வந்தா என்ன குறைஞ்சா போவீங்க, ஒரு உதவிதானே?

இதை அந்தம்மாள் போன பிறகு  கேட்கிறாள். அந்த மட்டும் பாராட்டத்தான் வேண்டும். அது ஒன்றுதான் சொல்லிச் சொல்லி அவளுக்கு வந்திருக்கும் நிதானம்.

எனக்குத் தெரியும்எதுக்குப் போகணும் எதுக்குப் போகக் கூடாதுன்னு நீ எனக்குச் சொல்லித் தர்றியா? -திரும்பி நின்று அவளைப் பார்த்துச் சொன்ன போதும் அவள் பார்வை சமையலறையை நோக்கித்தான் இருந்தது. ஒரு சின்ன அலட்சிய பாவம் எப்போதும் தொனிக்கும்.

அப்புறம் அவங்க வந்து சொல்லிட்டுப் போனதுக்கு என்னதான் அர்த்தம்? நீங்க வரணும், வருவீங்கங்கிற நம்பிக்கைலதானே வலிய வந்து புலம்பிட்டுப்  போறாங்க? ஒரு முடிவும் சொல்லாத உங்க மூஞ்சியப் பார்த்திட்டே போனா? பரிதாபமா இருக்குல்ல! வீட்டுக்கு வந்தவங்கள இப்டியா அலட்சியப்படுத்தறது?

இதென்னடா இது வம்பாப் போச்சு. மனுஷன் அமைதியா இருந்தாலும் அதுக்குப் பேரு அலட்சியமா? அதுக்கு  என்னை என்ன பண்ணச் சொல்ற? நானா என்ன விபரம்னு கேட்டேன்?  அவங்களா வந்தாங்க சொன்னாங்க அதுக்காகவே போயாகணுமா? வர்றத்துக்கு முன்னாடி  யோசிச்சிருக்கணும் போய்ச் சொல்லலாமா வேண்டாமான்னு. மத்தவங்களுக்கும் வேறே வேலை இருக்காதா?  அதை ஒதுக்கிட்டுப் போக முடியுமா? பொம்பளைங்க பூராவும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க போல்ருக்கு! கொக்குக்கு ஒண்ணே மதின்னு….

என்ன பெரிய்ய்ய வேலை? பாங்குக்குப் போறதுதானே இன்னைக்கு இல்லாட்டி நாளைக்குப் போயிக்கிறதுகெட்டா போகுது? இது அர்ஜன்ட் இல்லையா?

நம்ம சொந்த வேலையை விட அடுத்தவங்க வேலை உனக்கு அர்ஜென்டாப் போச்சா?- விடாமல் கேட்கிறாள். என்னைச் சம்மதிக்க வைப்பதுதான் அவள் நோக்கமாய் இருக்கும் போலிருக்கிறது. தினமும் நின்று மணிக்கணக்காய் கதை பேசும் சிநேகிதம். அதுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது. நான் சொன்னா அவர் கேட்பாரு என்று காட்டிக் கொள்ள வேண்டும். நான்தான் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வச்சேன் என்று பெருமையடித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நான் உடன்பட வேண்டும்.

குக்கரில் முதல் சத்தம் வந்தது. வழக்கத்துக்கும் மாறாக சத்தமும் நீளமும் அதிகமாய்த் தெரிந்தது.

என்னா இது? ரயில் இன்ஜின் கணக்கா காலங்கார்த்தால? தல வேதனையா இருக்கு

காலைல சமைக்காம வேறே எப்பச் சமைக்கிறதாம்? சாதம் வச்சிருக்கேன் மூணு சத்தம் வரணும். உங்களுக்கு டிஸ்டர்பா இருந்தா ரூமுக்குள்ள போயி கதவைச் சாத்திக்குங்க. அவள் சொன்னதை நான் கேட்கப் போவதில்லை என்று உறுதி செய்து விட்டது புரிந்தது.

றைக்குள் வந்து அமர்ந்தேன். ஜன்னல் வழி எதிர் வீடு தெரிந்தது. அந்த மாடியை நோக்கினேன். எந்தச் சலனமும் இல்லை. அந்தாள் இருக்கிறானா, இல்லையா? அவன் மனைவி, குழந்தைகள் இருக்கிறதா? சத்தமேயில்லையே? இப்டியா குகைக்குள்ள இருக்கிற மாதிரி இருப்பானுங்க…?

குடியிருப்பு ஆள் இருக்கும் இடமே தெரியவில்லை. இப்படி ஒரு ஆள் கிடைக்கணுமே! சரியான அமுக்குளி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். எமப்பய.

வசமா மாட்டினார்யா – வாய் என்னையறியாமல் முனகியது. பார்வை கீழ் வீட்டில் இருந்தது.

போலீஸ் ஸ்டேஷன் போகணுமாமுல்ல போலீஸ் ஸ்டேஷன்? அவங்க காரியத்துக்காக நான் ஏன் போய் அந்த நரகத்த மிதிக்கணும்? எனக்கென்ன தலவிதியா? வேணும்னா சொந்தக்காரங்க எவனையாச்சும் வரச்சொல்லி, கூட்டிட்டுப் போக வேண்டிதானே? இதுக்கெல்லாமா எதுத்த வீட்டு ஆளக் கூப்பிடுறது? எதோ கல்யாணம் காட்சின்னு கூப்டாலும் பரவால்ல, அதான் ஊர் பூராவும் உறவுக்காரவுங்க இருக்காங்கல்ல, வந்து போன மணியமாத்தான இருக்காங்க. அதுல ஒருத்தன் கூடவா வரமாட்டான்? தன் காரியத்தத் தான்தானே பார்த்துக்கணும். வம்பு தும்புன்னா மட்டும் அடுத்தவன் வேணுமா?

எதிர் வீ்ட்டு மாடிப்படியில் யாரோ இறங்கி வரும் சத்தம். மறைத்திருந்த ஜன்னல் திரை, ஃபேன் காற்றில் லேசு லேசாக விலகி விலகி அந்தக் காட்சியைப் பிரதிபலிக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருப்பது அங்கிருந்து நிச்சயம் தெரியாது. மாசிலாமணி சத்தம் கேட்டு வாசலுக்கு வருவது தெரிந்தது. அவர் வராண்டாவிற்கு வந்து நிற்க, அந்தாள் மாடிப்படியிலிருந்து இறங்கி வெளியேற சரியாயிருந்தது. இவரும் ஒன்றும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிர்ந்தால்தானே

பார்த்துக் கொண்டே நின்றார். அவன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.

ம்ம் துணிஞ்சவனுக்குத் துக்கமில்ல

வீட்டுக்குள்ளிருந்து அந்தம்மாள் வந்ததும் எதாச்சும் சொன்னாரா என்று கேட்க அவர் உதட்டைப் பிதுக்குவது தெரிந்தது. பேசுவது துல்லியமாய்க் கேட்டது. எங்கள் இரு வீட்டுக்கும் இடைப்பட்ட வீதியின் அகலம் வெறும் பதினைந்தடிதான்

நீ என்ன திரும்பத் திரும்ப இப்டிக் கேட்டுக்கிட்டிருக்கே அந்தாள்டெல்லாம் இனி பேசுறாப்ல இல்ல அவன எப்டி வெளியேத்தணும்ன்னு எனக்குத் தெரியும். பொறுத்திருந்து பாரு

என்னத்தத் தெரியும்? சொல்லிட்டேதான் இருக்கீங்க. எதுவும் செய்றாப்ல இல்ல ஒரு .வருஷம் முடிஞ்சி போச்சு அட்வான்சும் கழிச்சிட்டா  ஏழு  மாச வாடகை பாக்கி தர்றேன் தர்றேன்ங்கிறாரேயொழிய, எதுவும் வந்து சேர மாட்டேங்குது தலையத் தொங்கவிட்டமேனிக்குப் போகவும், வரவும்னு இருந்தா சரியாப் போச்சா? இத்தன மாசம் நழுவ விட்டதே தப்பாப் போச்சு. தும்ப விட்டிட்டு வாலப் பிடிச்ச கதையா இப்போ புலம்பி என்ன பண்ண? ஏன் போலீசுக்குப் போகத் தயங்குறீங்க ? போய் எழுதிக் கொடுத்தா, வந்து சாமான் செட்டத் தூக்கி வெளில வீசிட்டுப் போறான் நமக்கென்ன வந்தது? அந்தாளென்ன உறவா? உறவுகளையே நெருங்க விடாத காலம் இது இதுக்குப் போயி பயந்திட்டிருந்தீங்கன்னா?

யாருடி பயப்பட்டா? நீ பாட்டுக்கு எதையாச்சும் பேசாத அவுங்க காதுல விழப் போகுது

மாடிக்கெல்லாம் நாம பேசறது கேட்காது சும்மாச் சொல்லுங்க

எங்கூட வேல பார்த்தவங்க ரெண்டு பேர வரச் சொல்லியிருக்கேன். சேர்ந்து போயி புகார் கொடுக்கலாம்னு கொஞ்சம் பொறு.

ஆம்மா ரிடையர்ட் ஆகி பத்து வருஷம் ஆச்சு. கூப்டவுடனே வந்திடுவாங்களாக்கும் அதெல்லாம் சர்வீஸ்ல இருக்கிற போதுதான் இப்பல்லாம் யாரும் தல காட்ட மாட்டாங்க

என்ன சொல்றே நீ? அவுங்களுக்கு எத்தனையோ காரியம் செய்து கொடுத்திருக்கேன் நான். எனக்கு ஒண்ணுன்னா விட்டுக் கொடுக்க மாட்டாங்க, வர்றாங்களா இல்லையா பாரு.

அதெல்லாம் சங்கத்  தலைவர்ங்கிற முறைல அப்போ நீங்க செய்திருக்கலாம். அது சர்வீஸ்ல இருந்தபோத, இது சொந்த விஷயம். சிவனேன்னு இருக்காம, நாம ஏன் தலையக் கொடுத்துக்கிட்டுன்னுதான் நினைப்பாங்க எதுத்த வீட்டுக்காரரே வரத் தயங்குறாரு.

இந்த வார்த்தைகள் துல்லியமாய் என் காதில் விழுந்தன. புரிஞ்சிதான் போயிருக்கு.

எதுக்கு அதுக்குள்ளேயும் அவர்ட்டப் போயிச் சொன்னே? நாந்தான் ஆளுகள வரச் சொல்லியிருக்கனே ! அப்புறம் என்ன அவசரம் உனக்கு?

அப்டியே வந்தாலும் அடுத்தடுத்து ஒண்ணொண்ணுக்கும் அவுங்களக் கூப்பிட்டுக்கிட்டு இருக்க முடியுமா? எதுத்தாப்ல இருக்கிறவருக்குத்தானே முழு விபரமும் தெரியும் போலீஸ் கேட்டா சொல்றதுக்கும் ஏதுவா இருக்குமுல்ல?

சரி சாரு என்ன சொன்னாரு? வர்றேன்னாரா?- ஆர்வத்தோடு கேட்டார் மாசிலாமணி.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னா சொன்னேன் உங்க காதுல விழலியா? தயங்குறாருன்னேன்ல?

சரி பார்ப்போம். – சொல்லிவிட்டுச் சட்டென்று உள்ளே போய்விட்டார் மாசில். அந்தம்மாதான் நான் எங்கேனும் தென்படுகிறேனா என்று என் வீட்டைப் பார்வையால் துளைத்தது.. நான் நன்றாக அறைக்குள் என்னை உள்ளே அமுத்திக் கொண்டேன்.

மனசு கேட்கவில்லைதான். ஆனாலும் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கு ஏனோ ஒரு தயக்கம். வெறுமே ஒரு புகார் எழுதிக் கொடுத்துவிட்டு வருவதுதான். அங்கே போனால் ஆயிரம் கேள்வியைக் கேட்பானோ, பதில் சொல்ல வேண்டியிருக்குமோ, சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்வானோ என்றெல்லாம் நினைத்து மனம் சஞ்சலப்பட்டது. .நம்மால் முடிந்ததை வேறு என்ன செய்யலாம் என்றுதான் யோசனை போய்க் கொண்டிருந்தது எனக்கு. கூடப் போய் நிற்பதற்கே எனக்கு பயம்.

மாலை வெளியே கிளம்பி வழக்கம்போல் நடைப் பயிற்சியில் கலந்திருந்தேன். இரண்டு தெருக்களைக் கடந்து கடைசியில் பூங்காவுள்ள அந்த நீண்ட வீதிக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட பழைய வாட்ச்மேன் வீரணனைச் சட்டென்று நிறுத்தினேன். விஷயத்தைச் சொன்னேன்.

இதெல்லாம் நம்ம ஏரியாவுல சர்வ சாதாரணம் சார் அதனாலதான் யாருமே வீட்டை வாடகைக்கு விடத் தயங்குறாங்க வெறுமே பூட்டிக் கிடந்தாலும் கிடக்கட்டும்னு போட்டுர்றாங்க ஒண்ணுமில்ல சார் விஷயம் இவ்வளவுதான் நானும் இன்னொருத்தரும் வருவோம் விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போய் சாமாஞ்செட்டெல்லாம் எடுத்து வெளியே வீசுவோம் ஆளுகள வெரட்டி தடாலடியா வெளியேத்தி, வீட்டைப் பூட்டிச் சாவியக் கொண்டாந்து ஒப்படைச்சிடுவோம் எல்லாம் அரை மணி ஒரு மணில முடிஞ்சி போயிரும் அதுக்கு நாங்க பொறுப்பு ஆனா ஒண்ணு போலீசு அது இதுன்னு அவுக போயிரக் கூடாது அதுக்கு நீங்க பொறுப்பு ஏத்துக்கிறதுன்னா சொல்லுங்க இப்பவே வர்றோம் என்ன சொல்றீங்க? என்றான்.

கேட்கும்போதே பயங்கரமாய் இருக்கிறதே, சினிமாக் காட்சி போ. .இதற்கு அவர் எப்படி ஒத்துக் கொள்வார்? அதெல்லாம் நமக்குப் பொருந்தாதுங்க என்றுதான் கண்டிப்பாகச் சொல்வார். சரி யோசிச்சுச் சொல்றேன்  என்றேன் அவனிடம். எதிர்பார்த்த பதில்தான் போல, புன்னகையோடு நின்றான்.

எந்த வீட்டச் சொல்றீங்க நம்ம வூட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்கிற மாடியா? அந்தாளு ஒரு பேமானிப் பயலாச்சே! ஏற்கனவே நாலஞ்சு எடத்துல இப்டி இருந்திட்டுத்தான இங்க வந்திருக்கான் எப்டி? சரியா விசாரிக்கலயா? அவனக் கௌப்புறது கஷ்டமாச்சேங்க! படு பேத்து மாத்துப் பண்றவனாச்சே? – ஆள் ரொம்பப் பிரபலம் என்று புரிந்தது.

மேலும் அவன் இப்படிச் சொன்னது எனக்குள் வயிற்றைக் கலக்கியது. ஐயோ பாவம் மாசிலாமணி இதிலிருந்து எப்படி மீளப் போகிறார்? உள்ளுக்குள் பதட்டமாய்க் கேள்வி எழுந்தாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறு மகிழ்ச்சி

பையன் காது குத்து ஃபங்ஷன்போது ஒரு நாளைக்கு அந்த மாடியக் கொடுங்க விருந்தாளிங்கல்லாம் நிறைய வந்திட்டாங்க ஒரு நைட்டு படுத்திருந்திட்டுப் போயிடுவாங்கன்னு கேட்டேன். அந்தாளு காது கொடுத்தாரா?  ஏகப்பட்ட சாமான் கெடக்கு ஃபேன் சுத்தாது பாத்ரூம் கொழா சரியில்ல, சுத்தம் பண்ணனும்  அது இதுன்னு என்னெல்லாம் சாக்குச் சொன்னாரு? வேணும் நல்லா வேணும் – மனம் ஓலமிட்டது.

இரவு படுக்கையைப் போட்டபோதும் இதே சிந்தனை. தேவையில்லாமல் நான் ஏன் இதை அலட்டிக் கொள்ள வேண்டும். அது அவர் பாடு. நிம்மதியாய்த் தூங்க மாட்டாமல்? என்று எண்ணியவாறே புரண்டு கொண்டிருந்தேன்.

கண்ணயரும் முன் ஒரு யோசனை பளிச்சென்று தோன்றியது. அதே சமயம் அது சாத்தியமா என்றும் ஒரு எண்ணம் வந்தது.

காலையில் எழுந்ததும் முதலில் அந்த யோசனையை கிரிஜாவிடம் சொன்னேன். கேட்டவுடன் அதிர்ந்தாள். இதென்ன அநியாயமாயிருக்கு? வாடகை தராட்டாலும் காலி பண்ணுன்னு சொன்னாக் கூடப் பரவால்லகொஞ்சம் பணத்தையும் கொடுத்து அவன வெளியேத்தணும்ங்கிறது எப்படிச் சரியா இருக்க முடியும்? அவனுக்குப் பயந்து இதைச் செய்றாப்ல ஆயிடுமே? பத்தாதுன்னு தலைல ஏறி உட்கார்ந்தான்னா?

சரி, தவறெல்லாம் இந்தக் காலத்துல பார்க்கக் கூடாது ஆளக் கௌப்பணும்னா இதுதான் வழி. அவனாக் காலி பண்ணினாலும் இனிமே மீதமிருக்கிற மாசத்துக்கு அவன் வாடகை எதுவும் தரப் போறதில்ல அதத் தெரிஞ்சிக்கோ கையை விரிச்சிட்டுத்தான் போவான் ஆனா அது எப்போங்கிறது யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் விட்டு வைக்கவும் முடியாது. அதனால உடனடியா இது நடக்கணும்னா நான் சொன்னதுதான் வழி ஆறு மாச வாடகையை அல்லது ஒரு இருபதாயிரமோ இருபத்தஞ்சாயிரமோ அந்தாள் கைல திணிச்சி, அப்பா சாமி, போயிட்டு வான்னா ஒரு வேளை நகரலாம். அதை சரியான ஒரு ஆளை வச்சு உட்கார்ந்து  பேசி, முடிவு பண்ணிச் செய்ய வேண்டியது அவுங்க பொறுப்பு. யோசனையா இதைச் சொல்லலாம். இது ஒருவகையான பகடி இப்போ.

நல்லாயிருக்கே இதப் போயி நான் சொல்லணுமாக்கும் அவங்ககிட்ட? ஏன் நீங்க போய்ச் சொல்றது?

என்கிட்டதான் அவுங்க பேசவேயில்லயே எல்லாத்தையும் உன்கிட்டதானே புலம்பிட்டுப் போனாங்க அன்னைக்கு. என்னையும் மதிச்சுப்  பேசியிருந்தா நான் ஏதாச்சும் சொல்லியிருப்பேன்

நொண்டிக் கழுதைக்கு சறுக்கினது சாக்காக்கும்? நம்ப வீட்டுக்கு வந்ததே நம்பளை மதிச்சிதானே?  உங்கள மதிச்சதுனாலதான் நேரடியா உங்ககிட்டே சொல்லலை அத முதல்ல புரிஞ்சிக்குங்க இதுல என்னங்க இருக்கு ஒரு உதவின்னு கேட்டு வர்றாங்க இப்டியா எனக்கென்னன்னு இருக்கிறது? போய் உட்கார்ந்து பொறுப்பா ஏதாச்சும் நாலு வார்த்தை பேசிட்டு வாங்க அவங்களுக்கு ஒரு சமாதானமாகவாவது இருக்கும் ஒரு வேளை ஒத்துக்கிட்டாங்கன்னா?

நீ நினைக்கிற மாதிரியே நான் புரிஞ்சிக்கணும்னு விதியா? நேரடியா என் முகத்தைப் பார்த்துச் சொன்னாத்தான் எங்கிட்ட சொன்னதா, என்னை மதிச்சு சொன்னதா நான் எடுத்துக்க முடியும் உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் கற்பனை பண்ணிப்பே நான் அதுக்குத் தலையாட்டணுமா ? – விடாமல் கேட்டேன்..

ஆனாலும் எதுத்த வீட்டுல இருக்கிறவரோட இவ்வளவு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றது நல்லா இல்லேங்க அவ்வளவுதான் நான் சொல்லிட்டேன் நமக்கும் நாலு பேர் வேணும் நாளைக்கு நமக்கும் ஒரு ஆத்திரம் அவசரம்னு வரும் அப்போ தெரியும் அந்தக் கஷ்டம்

உனக்கு என்ன தெரியும் அவரப்பத்தி, சும்மா என்னத்தையாவது சொல்லாதே நாம இங்க வீடு கட்டுறபோதுதான் எதுத்தாப்ல அவுங்களும் கட்டிட்டிருந்தாங்க ஒரு நாளைக்கு மட்டும் கட்டடத்துக்கு தண்ணியடிக்கறதுக்கு  மோட்டார் போட்டு உதவுங்கன்னு கேட்டேன் அப்போ நமக்கு ஜெட்டு மோட்டார் மாட்டியாகலை. நூத்தம்பதடி ரப்பர் பைப் வச்சிருந்தான் ஊருக்கே இழுக்கலாம் அதை மாட்டேன்னுட்டாரு கரன்ட் சார்ஜ் தர்றேன்னு கூடச் சொல்லிப் பார்த்தேன் மறுத்திட்டாரு அதெல்லாம் மறந்திடுமா என்ன? கிரஹப் பிரவேசத்தும்போது நுழைஞ்சவ நீ அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் என்ன தெரியும் உனக்கு? தெனம் வந்து கெதியாக் கிடந்தவன் நானுல்ல?  பட்ட பாடெல்லாம் எனக்குத் தானே  நீபாட்டுக்குப் பேசுறியே  சும்மாக் கெட

அதெல்லாம் என்னைக்கோ நடந்ததுங்க இன்னுமா நினைச்சிட்டிருக்கிறது? அப்டி அப்டியே விடணும்ங்கவன்மமாவா வச்சிக்கிறது மனசுல?

தத்திப் பித்தி எப்டி வருதுன்னுதான் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்டீ அதுக்குள்ளயும் என் உசிர ஏன் நீ வாங்குற? என்னால போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் நிக்க முடியாது அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை கேவலம் அவ்வளவுதான்.

சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே கார் சத்தம் கேட்டது. யார் வந்திருக்கிறது என்கிற கேள்வியோடே சட்டையை மாட்டிக் கொண்டு அவசரமாய்  வாசலுக்குப் போய் நின்றேன். மாசிலாமணியும் அவர் மனைவியும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் காரில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

விடுவிடுவென்று  வீதிக்கு இறங்கிய கிரிஜாவை என்னால் தடுக்க முடியவில்லை.

எங்கே? கேட்டபடியே நெருங்கிய அவளிடம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறோம் ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாம்னு என்றார்கள் மாசிலாமணியின் மனைவி.

சாரும் வர்றாரா? வரச் சொல்லுங்க- என்றார் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்.

ஆமாம் ஒரு நிமிஷம் இருங்க என்ற கிரிஜா பின்பக்கம் திரும்பியவாறே என்னங்க கௌம்புங்க கூடப்போயிட்டு வாங்க என்றாள். அந்தக் குரலில் இருந்த அதிகாரம் என்னை நிலை குலையச் செய்தது. எதுக்கு இத்தனை சத்தமாய்ச் சொல்கிறாள்?

மறுக்க முடியாமல் செருப்பை மாட்டிக் கொண்டு வீதியில் இறங்கி, காரை நோக்கி நடந்தேன். கேட் அருகே வந்து விட்ட கிரிஜாவுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன்- வந்து வச்சிக்கிறேன்.

 

 

 

 

 

 

அப

ஸிந்துஜா

எதிரே நிழலாடிற்று. படித்துக் கொண்டிருந்த டெக்கான் ஹெரால்டிலிருந்து நாகேச்வரய்யர் கண் எடுத்து நிமிர்ந்து பார்த்தார். அபயாம்பாள்.

அவள் அவரைப் பார்த்து “நீங்க இன்னிக்கி ஆத்திலேதான் இருக்கப் போறேள்னு நேத்தி மாமி சொன்னா. மாமி ஜெயநகருக்குப் போயிருக்கா இல்லே?” என்றாள்.

“ஆமா. அவ தங்கையாத்துக்குப் போயிருக்கா. என் ஆபீஸ்லேயும் எல்லாப் பசங்களும் நவம்பர் பரீட்சை கொடுக்கறேன்னு லீவில் போயிட்டான்கள். அடுத்த வாரம்தான் ஆபீஸைத் திறக்கலாம்னு இருக்கேன்” என்றார். அவர் பெங்களூரில் இருபது வருஷமாக ஆடிட் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்.

பின்பு அவளிடம் “உக்காரு. என்ன இந்தப் போதுக்கு இங்கே வந்துட்டே? கோமதியாத்திலேன்னா இப்ப நீ புரண்டு படுத்துண்டு வாயாடிண்டு இருக்கணும்?” என்று சிரித்தார்.

“கோமதி மாமி ஊருக்குப் போயிருக்கா. அவ நாத்தனார் பொண்ணுக்குக் கல்யாணம்னு. வரதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லிட்டுப் போயிருக்கா” என்றபடி அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டாள் அபயம்.

“ஓ! அப்ப சங்கரனுக்கும் சேத்து நீதான் சமைச்சு அவாத்துக்கு அனுப்பணும்னு கோமதி சொல்லிட்டுப் போயிருப்பாளே!” சங்கரன் கோமதியின் ஒரே பிள்ளை. உள்ளூர் காலேஜில் வேலை பார்க்கிறான்.

“ஆமா. ரொம்ப நல்ல பையன். வாயைத் திறக்காம அனுப்புறதை சாப்பிட்டுட்டுப் போயிடறது அந்தப் பிள்ளை” என்றாள்.

“பேஷ், பேஷ். சர்டிபிகேட் எல்லாம் கேக்கறதுக்கே அமர்க்களமா இருக்கே” என்று அய்யர் சிரித்தார்.

“மாமா. அவனைப் பத்திப் பேசத்தான் இப்ப உங்க கிட்டே வந்தேன்” என்றாள் அபயம்.

அவர் அவளை உற்றுப் பார்த்தார். வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தையில் தெரிந்த லேசான பதட்டம் அவள் முகத்திலும் இருந்தது. வழக்கமாக அவள் தன்னைத் தெரிவித்துக் கொள்ள முன் வருபவள் இல்லை. அய்யருடைய மனைவி ‘அவயம் ரொம்ப அமுக்கு’ என்று அவளுடைய கெட்டிக்காரத்தனத்தைச் சிலாகிப்பாள். உற்றுக் கேட்டாலொழிய கண்டுபிடிக்க முடியாத சுவர்க் கோழியின் ரீங்காரத்தை நினைவூட்டுபவளாக அய்யர் சில சமயம் அவளைப் பற்றி எண்ணுவார்.

“என்ன விஷயம்? சொல்லு” என்றார் அய்யர்.

“இந்தப் பொண்ணோட கல்யாணம் என்னை அரிச்சுப் பிடுங்கிண்டே இருக்கு” என்றாள் அபயம்.

“கல்யாணி இந்த வருஷம்தானே பி ஏ. முடிக்கப் போறா. அதுக்குள்ளே என்ன கல்யாணப் பேச்சு?” என்றார் அவர் ஆச்சரியத்துடன். கல்யாணிக்கு இருபது வயது இருக்குமா?

“இந்தப் பிராமணன் வேலையிலே இருக்கறப்பவே பண்ணாதானே ஆச்சு. ஒரு நாளைப் பாத்தாப்பிலே பையைத் தூக்கிண்டு ஆபீசுக்குப் போறதும் வரதுமா இருந்தா மட்டும் போறாதுன்னுதானே கிடுக்கிப் பிடி போட்டு சாயங்காலத்திலேயும் ஒரு வேலை பாத்தா கொஞ்சம் பணம் வருமேன்னு பிடுங்கி எடுத்து அனுப்பிச்சேன். போன மாசம் வரைக்கும் ஆத்துக்கு வந்ததும் ஒரு வாய் காப்பியை வாயில் விட்டுண்டு உடனே சைக்கிளை எடுத்துண்டு சேட் ஆபீசுக்குப் போய் அங்க கணக்கு எழுதி டைப்பிங் வேலையும் பாத்ததுக்கு மாசம் எதோ அஞ்சாயிரம் எக்ஸ்ட்ராவா வந்துண்டு இருந்தது. யார் கண் பட்டதோ, திடீர்னு நாலு நாளைக்கு மின்னாலே இனிமே சேட்டு கிட்டே எல்லாம் வேலைக்குப் போகப் போறதில்லேன்னு நின்னுட்டார். சேட்டோட என்ன வாய்க்காத் தகராறோ?” என்றாள்.

அபயம் அவள் புருஷனைப் பற்றி இளக்காரமாகப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. சேதுவும் அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அசடுதான். அவனோடு வேலைக்குச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சேதுவுக்கு மேலே அதிகாரியாகி விட்டான். சேது வரவை விட செலவில் ஆர்வம் காட்டுபவன். குதிரைக்கு லகானைப் போட்டு இழுக்கின்ற மாதிரி அபயம் இருக்கிறாளோ, குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்து கௌரவமாக மற்றவர்களுக்கு முன் காட்சியளிக்கிறது என்று அய்யர் அடிக்கடி நினைப்பதுண்டு.

அபயம் பேரழகி இல்லை என்றாலும் கண்ணைக் கவரும் உருவம் அவளுடையது. உயரமும் அதற்குப் பாந்தமான கட்டு விடாத உடலும் அவளை நாற்பத்தி ஐந்து வயதுக்காரியாகக் காண்பிக்க மறுத்தன. நாற்பது இருக்குமா என்றதைக் கூட புதிதாக அவளைப் பார்ப்பவர்கள் சந்தேகமாகத்தான் கேட்டார்கள். ‘இருபது வயசிலேயே என்னமோ கொள்ளை போறாப்பிலே எனக்குக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டார் எங்க அப்பா. இந்த மனுஷன் இந்தியன் ஸ்டீல் ஆபீஸ்லே வேலை பார்க்கிறதை ஆபீஸரா இருக்கார். உசந்த மாப்பிள்ளைன்னு காதிலே தப்பா வாங்கிண்டு… எல்லாம் என் கஷ்டகாலம். அரை வயத்துக்குக் கஞ்சி குடிக்கற ஒரே ஆபீசர் பொண்டாட்டி இந்த உலகத்திலேயே நான்தான்” என்று பழக ஆரம்பித்த மூன்று மாசத்துக்குள் ஒரு தடவை அய்யரிடமும் அவருடைய மனைவியிடமும் அழுது விட்டாள். அவள் அய்யரையும் அவரது மனைவியையும் ஏதோ தன் சொந்த பெற்றோர்தான் என்று நினைத்திருப்பவள் போல அவர்களிடம் அப்படி ஒட்டிக் கொண்டு இருந்தாள்

“ஆமா. நாங்கூட முந்தா நா ஈவினிங் வாக் போயிட்டு திரும்பி வரச்சே உங்காத்து வாசல்லே நின்னுண்டு இருந்தவன் என்னைப் பாத்துக் கை அசைச்சான். அவன் பக்கத்திலே மூர்த்தி நின்னு பேசிண்டு இருந்தான். சரி, சேது சாயங்கால டூட்டிக்குப் போகலே போலன்னு நான் நினைச்சிண்டு அவனுக்கு பதிலுக்குக் கையைக் காமிச்சிட்டு வந்தேன்” என்றார் அய்யர்.

“நீங்க அவருக்கு நல்லதா நாலு வார்த்தை சொன்னாதான் எனக்கு விடியும்” என்றாள் அபயம்.

“சரி, சாயந்திரம் பாக்கறேன். ஆறு ஆறரைக்கு இருப்பானோல்லியோ?”

“அதான் சேட்டு வேலையை விட்டப்புறம் அஞ்சரைக்கே ஆபீஸ்லேந்து வந்து இங்கே உக்காந்துண்டு போறவா வரவா கிட்டே அரட்டை அடிக்கறதும், மொபைல்லே சினிமா பாட்டு கேக்கறதுமா காலத்தைக் கடத்தியாறதே. எல்லாம் என் தலையெழுத்து” என்றாள் அபயம்.

அய்யர் இந்தப் பேச்சைத் தவிர்க்க விரும்பியவராக “சங்கரனைப் பத்தி என்னமோ சொல்றேன்னு ஆரமிச்சியே” என்றார்.

அபயம் குரலைத் தாழ்த்தி “ஆமா. உங்ககிட்டத்தான் பேசணும்னு வந்தேன். மாமிகிட்டே கூட இதைப் பத்திப் பேச்செடுக்கலே. இப்பவும் மாமி தங்கையைப் பாக்கப் போயிருக்கற சமயமாப் பேசிடலாம்னுதான் வந்தேன். இந்த சங்கரனைக் கல்யாணிக்குப் பண்ணி வச்சிட்டா…” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

சில வினாடிகள் அய்யர் எதுவும் பேசாமல் அபயத்தைப் பார்த்தவாறு இருந்தார். அந்த மௌனத்தைத் தாங்க முடியாதவள் போல அபயம் புடவை தலைப்பால் இரண்டு முறை தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு விட்டாள். இவ்வளவுக்கும் வாசலிலிருந்த வேப்ப மரத்திலிருந்து வீசிய காற்று அவர்களிருந்த இடத்தைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது.

அபயம் பொறுக்க முடியாதவளாய் “மாமா, நான் சொன்னதிலே ஏதாவது தப்பா?” என்று கேட்டாள்.

நாகேச்வரய்யர் “நல்ல விஷயம் பேசறே. அதிலே தப்பு என்ன? நான் ஓப்பனாவே உன்கிட்டே கேக்கறேன். இந்த பசங்க ரெண்டு பேர் மனசைத் தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று கேட்டார்.

“ரெண்டு பேருக்கும் இஷ்டம்னுதான் தோணறது. ஏற்கனவே கோமதி மாமிக்கு ஒத்தாசையா நான் இருக்கேன்னு அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதனாலேதான் ஆரம்பத்திலேர்ந்து எனக்கும் பொழுது போறதுக்கு, பேச்சுத் துணைக்குன்னு அவாத்துக்குப் போயிண்டு வந்துண்டு இருப்பேன். இப்ப இந்த மூணு நாலு மாசமா நான் சாயங்காலமா சங்கரன் ஆபீஸ்லேந்து வந்து ஆத்திலே இருக்கறப்போ அவனோடையும் பேச்சுக் கொடுக்க ஆரமிச்சேன். இந்தக் காலத்துப் பசங்க மாதிரி இவனும் தலை கலைஞ்சு இருக்கறவன்னா நாம தெரிஞ்சிண்டுடலாமேன்னுதான். பேப்பர், சினிமா, டி,வி.ன்னு எல்லாத்திலேயும் வர்ற காதல், பணக்காரன் ஏழை மோதல், ஆக்டர்ஸ் ஆக்ட்ரசஸ் கிசுகிசு, பாலிடிக்ஸ்ன்னு வம்படிப்பேன். அதனாலே அவன் பணத்திலே குறியாயிருக்கானா, குடும்பம் குழந்தை குட்டின்னு அதிலெயெல்லாம் மதிப்பு வச்சிண்டிருக்கானா, பொண்கள் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்க்கிறவனா, அம்மா கோண்டுவான்னு வேறே எப்படித் தெரிஞ்சிக்கறது?”

“பேசறதுக்கு உனக்குச் சொல்லித் தரணுமா?”

அபயம் புன்னகை செய்தாள்.

“ஒரு நா நானும் மாமியும் பேசிண்டு இருக்கறச்சே ‘இப்பல்லாம் அபயம் கோமதியாத்திலேயே பழியா கிடக்கா. பகல் பொழுது போறாதுன்னு சாயரட்சைக்கும் அவாத்திலே போயி அப்படி என்னதான் பேசுவாளோ?’ன்னு மாமி அலுத்துண்டா” என்றார்.

“ஆமா. அவனை வேறே எப்படி நான் நன்னாத் தெரிஞ்சிக்கறது? ஆனா சங்கரனும் ஹாஸ்யமா பேசறான். புத்திசாலியா எல்லா விஷயத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சு வச்சிண்டிருக்கான். அதனாலே அவன் கிட்டே சான்ஸ் கிடைக்கிறப்போ எல்லாம் கல்யாணியைப் பத்தி நாலு வார்த்தை போட்டு வைப்பேன். அவளுக்கு புஸ்தகத்திலே, சங்கீதத்திலே எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணறதிலே இன்ட்ரெஸ்ட்ன்னு அப்பப்போ நாலு வார்த்தை தூவி வைப்பேன்” என்று வெட்கத்துடன் சிரித்தாள் அபயம். “தனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கற விஷயத்திலே எல்லாம் கல்யாணிக்கும் இன்ட்ரெஸ்ட் இருக்கேன்னு ஒரு தடவை சங்கரன் சொல்லியிருக்கான்.”

நாகேச்வரய்யர் “இதுவரைக்கும் நீ சொன்னது எல்லாம் திருப்தியாதான் இருக்கு. அவன் அம்மா கோண்டுவான்னு தெரிஞ்சிக்கப் பாத்தேன்னயே?”
என்று கொக்கி போட்டார்.

அபயம் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து “இவ்வளவு சொன்னேன். ஆனா இதைப் பத்திதான் உங்களுக்குக் கேக்கணும்னு தோணிருக்கே!” என்றாள். பிறகு “அவனோட அப்பா சின்ன வயசிலேயே போயிட்டாரோன்னோ? கோமதி மாமிதான் கஷ்டப்பட்டு வளர்த்தது. அதனாலே அம்மாகிட்டே ரொம்ப அட்டாச்டா இருக்கான். அந்தப் பாசத்தை எப்படிக் கோண்டுன்னு சொல்லறது?” என்று கேட்டாள்.

“வாஸ்தவம். ஆனா நீ சொல்ல ஆரம்பிச்சதிலேந்து எனக்கு மனசுக்குள்ளே
ஓடிண்டு இருக்கற ஒரே கேள்வி கோமதி இதுக்கு ஒப்புத்துப்பாளா எங்கிறதுதான்.”

அபயம் உடனடியாக எதுவும் பதில் அளிக்கவில்லை. இருவரிடையேயும்
சற்றுக் கனத்த அமைதி நிலவியது.

மறுபடியும் அய்யர்தான் பேச ஆரம்பித்தார். “எதுக்குச் சொல்றேன்னா கோமதி ரெண்டு மூணு தடவை என் காது கேக்க இங்கே இருக்கிறவா கிட்டே சொல்லியிருக்கா. சங்கரனுக்குப் படிச்ச பொண்ணா அழகா இருக்கறவளா, நன்னா சொத்து சம்பாத்தியம் இருக்கற ஆத்திலேந்து வர்றவளா இருக்கணுங்கிறதுதான் தன்னோட ஆசைன்னு.”

அபயம் சற்று விரக்தியான குரலில் “எங்ககிட்டே அந்த மூணாவது சௌந்தர்யம் இல்லியே” என்றாள்.

நாகேச்வரய்யர் அவளைக் கனிவுடன் பார்த்தார்.

“எதுக்கு உடனே மனசை விட்டுடறாய்? நம்மகிட்டே இருக்கறதை வச்சு ஜமாய்ச்சிடலாம்னு நீ இருக்கணும். நானோ நீயோ கோமதியோ இல்லே இந்த ரெண்டு குழந்தைகளோ ஆசைப்படலாம். ஆனா ஆசைப்படறது எல்லாம் நடக்கறது இவா யார் கையிலேயும் இல்லையே. மேலே இருக்கறவன்னா பாத்துக்கறான்? கச்சி ஏகாம்பரம் அபிராமிக்கு ரெண்டு நாழி நெல்லுதான் கொடுத்தார். ஆனா எப்படி அதை வச்சுண்டு தேவி லோகம் பூராத்துக்கும் அன்னபூரணியா இருந்து கொடுத்தா? யாரோ வருவா. உதவி பண்ணுவா. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தைரியமா இரு” என்றார்.

அவர் அப்படி ஆறுதலாய்ப் பேசியதில் அவள் சற்று முகம் மலர்ந்து அவரை நன்றியுடன் பார்த்தாள்.

“சங்கரனுக்கு அவனோட அம்மா மேலே எவ்வளவு பாசமோ அந்த அளவுக்கு அவன் மேலே கோமதிக்கு ரொம்பப் பிரீதி. அதை நான் கவனிச்சிருக்கேன். சங்கரன் எனக்குக் கல்யாணிதான் வேணும்னு சொல்லணும். அப்ப எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடும்” என்றார் அய்யர்.

“எனக்கென்னவோ அவன் அப்படிதான் சொல்லுவான்னு தோணறது” என்றாள் அபயம்.

“ஆனா நீ இவ்வளவு நாழி பேசிண்டு இருக்கறச்சே இப்பிடிக் க்ளீயரா சொல்லலியே. அல்லாடிண்டு இருக்கிறவ மாதிரின்னா இருந்தே” என்றார் அய்யர்.

அவள் அவரை உற்றுப் பார்த்தாள்.

பிறகு “எனக்கு இதை உங்க கிட்டே சொல்லணும்னுதான். அப்புறம் நீங்க என்னைத் தப்பா நினைச்சிட்டேள்னான்னு ஒரு தயக்கம். ஆனா இப்ப என்னவோ எல்லாத்தையும் உங்ககிட்டே கொட்டிடணும்னு எனக்கு இருக்கு. கல்யாணியும் சங்கரனும் ரெண்டு வாரமா கொஞ்சம் நெருக்கமாதான் பழகிண்டு இருக்கா.”

“என்னது?”

“ஆமா. நான்தான் அவா நெருங்கிப் பழகட்டும்னு ஒரு நா முடிவு பண்ணினேன். இப்பெல்லாம் மணிக்கணக்கிலே அவ ரூம்லேந்து அவனுக்குப் போன் பண்ணிப் பேசறா. ரெண்டு பேரும் சேர்ந்து சினிமாவுக்கு ஒரு நாள், ஓட்டலுக்குப் ஒரு நாள் போனா. அவன் போன வாரம் அவளோட பர்த்டேக்குப் புடவை வாங்கிக் கொடுத்தான்.”

“ட்டேயப்பா!” என்று நாகேச்வரய்யர் தாங்கமுடியாத வியப்புடன் அவளைப் பார்த்தார். பொறுக்க முடியாமல் “நீ பெரிய அமுக்குன்னு மாமி சரியாத்தான் ஜட்ஜ் பண்ணியிருக்கா” என்று சொல்லி விட்டார்.

“ஓ, மாமி என்னை அப்பிடி வேறே திட்டியிருக்காளா?” என்று அபயம் சிரித்தாள்..

பிறகு எழுந்தபடி “நான் வரேன். நீங்க இன்னிக்கி சாயங்காலம் இந்த மனுஷனைக் கொஞ்சம் கூப்பிட்டுச் சொல்றேளா? நீங்க சொன்னா கேப்பார்ன்னு ஒரு நப்பாசைதான் எனக்கு” என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

அய்யர் அன்று மாலை சேதுவைக் கைபேசியில் கூப்பிட்டார்.

“சேது, நீ ஃப்ரீயா? ஒரு செஷ்ஷன் போடலாமா? போன வாரம் என்னோடகஸ்டமர் லிக்கர் வேர்ல்டு இருக்கானோல்லியோ? அவன் தீபாவளிக்குன்னு ரெண்டு டீச்சர்ஸ்ஸும் ரெண்டு ஜாக் டேனியல்ஸும் அனுப்பிச்சான். தீபாவளி அன்னிக்கி கங்கா ஸ்நானம் பண்ணிட்டு இந்த ஸ்நானம் வேறே பண்ணி எதுக்கு எல்லாரோட வயித்தெரிச்சலையும் கொட்டிக்கணும்னு உள்ளே எடுத்து வச்சிட்டேன். நீ சேட்டு ஆபீஸ் வேலையை முடிச்சிட்டு ராத்திரி எட்டு மணிக்கு எங்காத்துக்கு வந்துடறயா?” என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்டார்.

“எதுக்கு எட்டு மணிக்கு? நான் இப்பல்லாம் ஃப்ரீதான். ஏழு மணிக்கு அங்கே வரட்டுமா?” என்றான் சேது.

சொன்ன நேரத்துக்கு சேது வந்து விட்டான்.

அவர்கள் மாடிக்குச் சென்றார்கள். அய்யர் மாடியில் பார் வைத்திருந்தார்.

குடிக்க இரு கண்ணாடிக் குவளைகளையும் ஒரு ஜாக் டேனியல்ஸ் பாட்டிலையும் அய்யர் எடுத்து வைத்தார். தின்பதற்கு சில அயிட்டங்கள் மேஜை மீது இருந்தன. இரண்டு பாக்கெட்டுகளைப் பிரித்து இரு பிளாஸ்டிக் தட்டுகளில் சிப்ஸ், காரக்கடலை ஆகியவற்றை வைத்தார். இன்னொரு தட்டில் சாலட் வைத்திருந்தது. அவர் இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பி ஐஸ் கட்டிகளையும் நீரையும் விட்டார். பார் ஸ்டூல்களை இழுத்துப் போட்டுக் கொண்டு இருவரும் அமர்ந்தனர்.

“எம்.ஜி.ரோடு ஹோட்டல் பார் மாதிரின்னா வச்சிருக்கேள்” என்று சேது சிரித்தான். ஒரு குவளையை எடுத்து ஒரு வாய் விட்டுக் கொண்டான்.

“எது செஞ்சாலும் திருப்தியா செய்யணும். முழுசாச் செய்யணும்னு காந்தி சொல்லியிருக்கார்” என்றார் அய்யரும் சிரித்தபடி.

“யாரு ராகுல் காந்தியா, ராஜீவ் காந்தியா?” .

“யாரோ ஒரு காந்தி” என்றார் அய்யர்.

“நல்லவேளை மகாத்மா காந்தின்னு சொல்லாம விட்டேளே!” என்று வாய் விட்டுச் சிரித்தான் சேது.

அவர்கள் லிங்காயத்து – கௌடா அரசியல் பற்றிப் பேசினார்கள். தமிழ்நாட்டில் கதாநாயகிகளை வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது போல கர்நாடகாவில் கதாநாயகர்களை இறக்குமதி செய்யலாம் என்று சேது கூறினான். ஒரு காலத்தில் பென்ஷனர்ஸ் பாரடைஸ் ஆக இருந்த பெங்களூர் இப்போது பென்ஷனர்களின் நரகமாகி விட்டதாக அய்யர் அலுத்துக் கொண்டார். அரைமணி நேரம் பேச்சு இப்படியே உலக விவகாரங்களை கவ்விக் கொண்டிருக்க ஜாக் டேனியல்ஸின் பாட்டிலில் அளவு குறைந்து கொண்டே வந்தது.

“உங்க கம்பனி இப்ப எப்படிப் போயிண்டிருக்கு? எக்ஸ்போர்ட்ஸ்லாம் மறுபடியும் ஜாஸ்தியாக ஆரம்பிச்சாச்சா?”

“எங்கே? இப்ப சைனாலே கோவிட் மறுபடியும் கிளம்பி இருக்குன்னு கதர்றான். எக்ஸ்போர்ட் டார்கெட்ஸ் எல்லாத்தையும் குறைச்சு ஆனானப்பட்ட அமெரிக்காவையே கதற அடிக்கிறான். ஈரோப்பும் இன்ஃப்லேஷன், அன்யெம்ப்லாய்மெண்ட்ன்னு கவுந்து கெடக்கு. நாமெல்லாம் எந்த மூலைக்கு?”

“அடக் கண்ராவி! அப்போ உங்க கம்பனி கொடுத்திண்டு இருந்த இன்சென்டிவ் எல்லாம் இனிமே அவ்வளவுதானா?”

“இன்சென்டிவ்வா? ஆள்களை வீட்டுக்கு அனுப்பாம சம்பளம் கொடுத்தாலே போதும்னு இருக்கா. ரெண்டு வருஷத்துக்கு வருஷாந்திர இன்க்ரீமெண்ட் பத்தி வாயைத் திறக்கக் கூடாதுன்னு சர்குலர் வந்தாச்சு” என்று சேது வெறுப்புடன் சிரித்தான்.

அய்யர் அவனிடம் “நல்ல வேளையா அந்த சேட்டுப் புண்ணியவான் கைங்கர்யத்தில் நீ ஒரு எக்ஸ்ட்ரா சம்பாத்தியம் வச்சிண்டிருக்கே” என்றார்

அவன் அவரிடம் “சேட்டு வேலையா? அதை நான் விட்டாச்சு!” என்றான். அவன் கண்கள் அவரைப் பார்க்காமல் கையிலிருந்த குவளையில் பதிந்திருந்தன.

“என்னது? வேலையை விட்டாச்சா? ஏன் அந்தக் கம்மனாட்டிக்கு என்ன கேடு வந்தது?” என்றார் அய்யர் கோபம் குரலில் தொனிக்க. ஒரு க்ஷணத்தில் புண்ணியவான் கம்மனாட்டியாகி விட்ட விந்தை!

சேது பதிலளிக்காமல் அவரையும் குவளையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு குவளையில் இருந்ததை ஒரே மூச்சில் குடித்து விட்டுப் பேப்பர் நாப்கினால் வாயைத் துடைத்துக் கொண்டான்.

சேது அவரிடம் “இதையெல்லாம் சொல்லணுமான்னு வெக்கமா இருக்கு. ஆனா யார்கிட்டேயாவது சொல்லி ஆத்திக்கணும் போலவும் இருக்கு. மனசிலே அடைச்சு வச்சுண்டு இருக்கறது என்னைக் குதறிப் போட்டுண்டு இருக்கு” என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தான்.

காலையில் அபயம் இதே மாதிரி வார்த்தைகளை உச்சரித்தாள். இவன் என்ன சொல்லப் போகிறான்?

அவர் பதில் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்தார்.

“சீக்கிரம் கல்யாணிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா தேவலையா இருக்கும் எனக்கு” என்றான். “அப்போ இந்த அபயம் அடிக்கிற கூத்துக்கெல்லாம் ஒரு முடிவு கட்டினாப்பிலே ஆயிடும்.”

“அபயமா? கூத்தா? சேது நீ என்ன சொல்றே?”

“உங்களுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது. நாலு மாசமா இந்த முண்டை அந்த சங்கரன் ஆத்திலே போய் உக்காந்துண்டு அவனோட கூத்தடிக்கிறா. அவன் சின்னப் பையன். ஆனா, இவ? கல்யாண வயசிலே ஒரு பொண்ணை வச்சுண்டு எப்படி சார் அவ இந்த மாதிரி கேடு கெட்டவளா இருக்கா? நானும் ராத்திரி எட்டு எட்டரைக்குதானே ஆத்துக்கு வரேன்? அது இவளுக்கு ரொம்ப சௌகரியமாப் போயிடுத்து. அதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு சேட்டு ஆபீஸ் வேலையை விட்டுட்டேன். சாரி சார். உங்களைப் போட்டுத் தொந்திரவு பண்ணிட்டேன். சாரி சார்” என்று கலங்கிய குரலில் கூறி வந்தவன் சட்டென்று இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான்.

அய்யர் எதையோ மிதித்து விட்டவர் போலத் திடுக்கிட்டார். சமாளித்துக் கொண்டு கையில் ஏந்திய குவளையில் இருந்ததை வாயருகே கொண்டு சென்றவர் அதிலிருந்ததைக் குடிக்க முடியாமல் கீழே வைத்து விட்டார்.