சௌகந்தியின் நெஞ்சொடு கிளத்தல்- கன்னடம் வைதேகி ஆங்கிலம் சுகன்யா கனரல்லி தமிழ் தி இரா மீனா

மொழிபெயர்ப்பு : கன்னடச் சிறுகதை
மூலம் : வைதேகி [ Vaidehi ]
ஆங்கிலம் : சுகன்யா கனரல்லி [Sukanya Kanarally ]
தமிழில் : தி. இரா. மீனா

நீண்ட நேர இரவுப் பயணத்திற்குப் பிறகு ஒருவழியாக சௌகந்தி தனது இலக்கை அடைந்தாள். பஸ் நிலையத்திற்கு அவளை வழியனுப்பி வைக்க வந்த அப்பா மிகப் பணிவாக கண்டக்டரிடம், ’என் மகள் தனியாகப் பயணம் செய்கிறாள். அவளருகே ஒரு பெண் பயணியை உட்கார வைத்தால் மிக உதவிகரமாக இருக்கும்’ என்று வேண்டிக் கொண்டார் .பின்பு ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த சௌகந்தியிடம் ’கவலைப் படாதே. கண்டக்டர் மிக நல்ல மனிதராகத் தெரிகிறார். உன் பக்கத்தில்ஒரு பெண் பயணியை உட்கார வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.’ என்று உறுதியளித்தார்.

சிரிப்பிற்குப் பின்னால் தன் கண்ணீரை மறைக்க வேண்டிய காரணமென்ன என்பதை நினைத்து ஆச்சர்யப்பட்டவளாக நான் ஏன் அப்பா கவலைப்பட வேண்டும்? அதுவும் யாரைப்பற்றி? அவள் சிரித்தபடியே தனக்குள் சொல்லிக் கொண்டாள். இருக்கையை மாற்றிக் கொள்வதன் மூலம் தனியாக உட்கார்ந்திருந்த பெண் பயணிக்கு உதவமுடியுமென்று சொல்லி ஒரு தம்பதியின் இருக்கையை மாற்றச் செய்து கண்டக்டர் தன் வார்த்தையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டான்.

இது இல்லையெனில் தன்னருகே உட்கார்ந்திருக்க வேண்டிய மனிதன் யாரென்று அறிய சௌகந்தி திரும்பிப் பார்த்தாள்.பார்ப்பதற்கு மிக சாதாரணமாக இருந்த அவன் முகத்தை ஒரு கொத்து முடி மறைத்திருந்தது. தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்மணி வாய்ப்பு கிடைத்தால் நாளைக் காலை வரை கூட பேசிக் கொண்டிருப்பாளென அவளுக்குத் தோன்றியதால் பேச்சைத் தவிர்க்கும் வகையில் அவள் ஜன்னலின் வெளியே பார்க்கத் தொடங்கினாள். வானத்தில் நிலவு ஒளிர்ந்தது.

சௌகந்தி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அது முழுமையற்று அரையாக இருந்தது. ஓடி வந்தாலும் தன்னால் பஸ்ஸில் ஏறமுடியாதென்பதால் அது அங்கேயே நின்று விட்டது.ஆனால் அவள்?
முழுமையடைய வேண்டுமென்றால் இப்போதிலிருந்தாவது தனியாக, வேறு யாரைப் பற்றியும் கவலையின்றி, நான் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். அவள் கன்னத்திலிருந்து ஒரு சொட்டு நீர் இறங்கியது. அல்லது அது மழைத்துளியா?

அங்கே தனியாக ஒரு வாடகை வீடு நின்றது. மற்ற வீடுகளின் மத்தியிலும், அது பூட்டப்பட்ட கதவோடு தனியாக, யாருக்கோ காத்திருப்பதாக நின்றிருந்தது. நானும் இது மாதிரி காத்திருப்பவள்தான் என்று நினைத்துக் கொண்டே அவள் கதவைத் திறந்தாள். எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்ற ரீதியில் வீடு மிகவும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருந்தது.தூசி தட்டுவது,பெருக்குவது, துடைப்பது என்று ஏதாவது செய்தாவது ஒரு நாளைக் கழிக்கலாம் என்ற சாதாரண ஆசை கூட நிறைவேறாமல் போனதில் அவளுக்கு ஏமாற்றம்தான். வேறு ஊரிலிருந்து வரும் இளம் கன்னிப் பெண்ணிற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் விதவையான வீட்டுக்கார அம்மா செய்து முடித்து விட்டாள்.

வீட்டைப் பார்க்கப் போன முதல் நாளே சௌகந்தி ’ தயவு செய்து வீட்டை சுத்தம் செய்வது பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். நானே செய்து கொள்வேன்’என்று தெளிவாகச் சொல்லி விட்டாள். தன் வாயில் வைத்த விரலை எப்படிக் கடிப்பதென்று கூடத் தெரியாத அப்பாவி தன் மகள் என்று அப்பா அந்தப் பெண்மணிக்கு கடிதம் எழுதியிருப்பாரோ? வீட்டைசுத்தம் செய்து வைக்கும்படியும், குளிப்பதற்கு வெந்நீர் தயாராக வைத்திருக்கும்படியும் வேண்டிக் கொண்டிருப்பாரோ? சௌகந்தி தன்உதட்டை அழுத்திக் கடித்தாள்.

முதல் நாளிலேயே அப்பா கடந்த காலம் முழுவதையும் படமாக ஓட்டி விட்டார்.’எங்களால் இந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்துவைக்க முடியவில்லை. ஏற்கெனவே இரண்டு தங்கைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.இவள் விஷயத்தில் நான் தோற்று விட்டேன்,’ என்று.வீட்டுக்கார அம்மாளின் முகத்தில் ஏற்கெனவே பரிதாப உணர்வு படர்ந்து விட்டது.’ என் மகளைப் பாருங்கள், எல்லாவற்றிலும் கெட்டிக்காரி! எங்கே தவறு நிகழ்ந்ததென்று தெரியவில்லை.ஒரு வேளை அந்தப் பொருத்தமான ,மங்களமான நேரம் இன்னும் வரவில்லை போலிருக்கிறது! நம்முடைய சாதியிலிருந்தே யாரையாவது பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள் என்று கடைசியாகச் சொல்லி விட்டேன் ’அப்பா பேச்சை நிறுத்தி விட்டு அவள் சிரிக்க வேண்டும் என்பது போலப் பார்த்தார்.அந்த அம்மாவும் சிரித்தாள்.ஆனால் வழக்கமாக, புன்னகையால் தன் கண்ணீரைப் புறந்தள்ளும் சௌகந்தியால் இப்போது சிரிக்க முடியவில்லை.

‘இவளைத் தனியாக தங்க வைக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அலுத்துப் போய்விட்ட அந்த பழைய இடத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இவள் வற்புறுத்தினாள். சரியான நேரத்தில் வேலை மாற்றமும் வந்தது. இனி நீங்கள்தான் அவளுடைய அம்மா,அப்பா எல்லாமும்.’ (அப்பா, இது அதிகம் ! )

இன்னமும் உருகிப் போன மனநிலையில் இருந்த வீட்டுக்காரம்மா ’உலகத்தின் நியதி இதுதான். உங்கள் மகள் நல்லவள் என்பதை அவள் முகமே காட்டுகிறது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ள உலகம்  சரியான பாதையில் நம்மைப் போக விடுவதில்லை. நட்பு என்ற பெயரில் இங்கே என்ன நடக்கிறது?’

அவள் எதிர்பார்த்த வார்த்தைகளை அப்பா அப்படியே சொன்னார். ’சே,சே ! சௌகந்தி அப்படிப்பட்டவளில்லை! ஓர் ஆணின் நிழல் கூடத் தன்னருகில் வருவதை அவள் அனுமதிக்க மாட்டாள். மிக நேர்மையானவள். அவள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டால் அவளை நான் அனுப்புவேனா? அந்த அம்மாளின் முகத்தில் படர்ந்திருந்த கருமை விலகியது.

’தவிர என் இளைய மகள் பிரசவத்திற்கு வந்திருக்கிறாள். அது முடிந்த பிறகு,என் மனைவியை இங்கு அனுப்பி வைக்கிறேன். நான் எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்வேன். தானே பார்த்துக் கொள்வதாய் சௌகந்தி சொல்கிறாள். ஆனால் அது எப்படி முடியும்? நான் சாப்பிடுவது கூட அங்கு எனக்கு செரிக்காது. அவளை இங்கே தனியாக விட்டுவிட்டு என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? பெற்றோரின் பொறுப்பு என்பது பற்றி உங்களுக்குத் தெரியும்! அவள் எங்களுடன் அங்கேயே இருந்தால், அவள் அம்மாவின் சுமை கொஞ்சம் குறையும்…போகட்டும். அது முக்கியமான விஷயமில்லை.’

’நான் ஒரு மரக்கட்டை போல, எனக்கான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பவர்கள் போல இவர்கள் என் முன்னாலேயே இப்படி விவாதித்துக் கொள்கிறார்கள்….’சௌகந்தி ஜன்னல் கம்பியை இறுக்கினாள் மரக்கட்டையாலானதாக இருந்திருந்தால் ,அவை கண்டிப்பாக நொறுங்கி இருக்கும்.

’இரவில் இங்கு தூங்குவதற்கு, ஒரு பெண்மணியை உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா? நான் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து விடுகிறேன்.’

’கண்டிப்பாக. எங்கள் வீட்டு சமையல்காரப் பெண்மணியே பார்த்துக் கொள்வாள். நீங்கள் கவலைப்படாதீர்கள்.’

வீட்டை வாடகைக்கு விட அந்த அம்மா சந்தோஷமாக சம்மதித்தாள். திரும்பி வரும்போது அம்மாவிடம் ’ சௌகந்தியைப் பற்றிக் கவலைப்படாதே. வீட்டுக்கார அம்மா மிகவும் நல்லவள்- விதவை’. வாடகை வீட்டில் தன் மகள் தனியாக இருக்க வேண்டுமென்பதற்காக அவள் தன் கணவனை இழந்திருப்பது நல்லதாகி விடுமா? குழப்பத்தோடு சௌகந்தி அப்பாவைப் பார்த்தாள். அந்தக் குறுகிய எண்ணம். உருளும் விழிகள் அவளுக்கு கொடூரமாகத் தெரிந்தன. பார்ப்பதற்கு எவ்வளவு மென்மையானவராக அப்பா தெரிகிறார்! சௌகந்திக்கு வலித்தது.

தன் தனிமையான மகளை ஒரு சிப்பாய் காப்பது போல, தான் அவளைப் பாதுகாக்காவிட்டால் மகள் கெட்டுப் போய் விடுவது போல, அல்லது அவளுக்கு வஞ்சகம் செய்யவே முழு நகரமும் சதி தீட்டுவது போல அப்பா திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகளையே எதிரொலித்தார். அம்மாவும் அவருக்குச் சளைத்தவளில்லை.ஒரு வித சுமையிறங்கிய மனப்பான்மையானவளாக, ’அப்படியெனில் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.’ என்றாள்.

சௌகந்தி இவற்றிற்கெல்லாம் மத்தியில் ஊடாடிக் கொண்டிருந்தாலும், பல பல காலமாக, ஒடுங்கிப் போயிருந்த தனது குரலை இனி வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில், இந்தச் சிறிய நகரத்தில் தனியாக தங்கப் போகிற ஆசையில் தனக்குள் ரகசியமாக மகிழ்ந்தாள்.

’எதுவாக இருந்தாலும், கடைசியாக நான் வேறு நகரத்திற்கு, வேறு வீட்டிற்கு வந்து விட்டேன்.இந்த வீட்டில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. இந்த உலகைப் புறந்தள்ளிவிட்டு, யாருடைய தொந்தரவுமின்றி சாப்பிடுவது, தூங்குவது, வாழ்வது என்று அவள் தனக்காக வாழலாம்! என் அக்காவிற்கு பன்னிரண்டு மாதங்களான பிறகும் குழந்தை பிறக்காமலிருக்கட்டும். அவளுக்குச் செய்ய வேண்டிய உதவிகள் முடியாமல் தொடரட்டும், என் அம்மா இங்கு வராமலேயே இருக்கட்டும். தன் உடைகளை அடுக்கிக் கொண்டே அவள் தனக்குள் முனகிக் கொண்டாள். சமையலுக்குத் தேவையானவையாக அம்மா கொடுத்ததில் மிகத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டாள். தண்ணீர் நன்றாக கொதித்திருந்தது. குளித்து விட்டு, கட்டிலில் படுத்தாள். இப்போது அவள் அரண்மனையின் ஏழு பெரும் சுவர்களைக் கடந்து பறந்த ஒரு பறவை…

கதவு தட்டப்படும் சப்தம்…

முதன் முதலாக அவள் தனியாக இருக்கும் போது, கேட்கும் முதல் தட்டலோசை. அந்தச் சத்தம் நெஞ்சிற்குள் ஊடுருவி எதிரொலித்தது.கை விரல்கள் நடுங்க அவள் கதவைத் திறந்தாள்.

எரியும் ஜூவாலையின் முன்னாலான தண்ணீர் போல வீட்டுக்காரம்மாவெளியே நின்றிருந்தாள்.

’எப்போது வந்தாய் பெண்ணே? எது வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் நீ என்னிடம் கேட்கலாம்.ராத்திரியில் உனக்கு துணைக்கு சமையல்காரப் பெண்ணை அனுப்பி வைக்கிறேன்.’

’இல்லை,வேண்டாம்,’ சௌகந்தி கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சொன்னாள்.’எனக்கு பயமில்லை. என்னால் தனியாகத் தூங்கமுடியும்.’

’ஐயோ, இல்லையில்லை ! எப்படி அப்படி முடியும்? இரவில் தனியாக இருப்பது என்பது விளையாட்டில்லை. உன் அப்பா என்னிடம் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். உன் அம்மா இங்கு வரும் வரை நான் உன் அம்மா ஸ்தானத்தில் இருப்பேன். நானே இங்கு வந்து படுத்துக் கொள்கிறேன். போதுமா?’

’இல்லை,வேண்டாம். பரவாயில்லை’ என்று சொல்ல படாத பாடுபட்ட சௌகந்தி ’இல்லை ,எனக்கு பயமேதுமில்லை.நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று அவளை சமாதானப் படுத்தினாள்.

தனியே விட்டுவிடுங்கள் என்று முகத்திற்கு நேரே சொல்வது என்பது எவ்வளவு கடுமையானது!!

சுவரிலிருந்த சிறிய கண்ணாடி அவள் முகத்தைப் பிரதிபலித்தது. என்ன அப்பாவித்தனம் !

சௌகந்தி திடுக்கிட்டாள் .அவள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும். ’அலங்காரத்தால் உன் முகத்தை மாற்றலாம் — இந்த முகமூடியை மாற்றுவதெப்படி?’ கண்ணாடி கேட்பது போலிருந்தது. என்னைப் பார்த்து நகைக்கும் இந்த கண்ணாடியை நான் மாற்றி விட வேண்டும்!ஆமாம், நிச்சயமாக!

’அப்படியானால் நான் போகட்டுமா? தேவைப்பட்டால் கூப்பிடு.’

அவள் அப்பா மட்டுமில்லாமல்,உலகமே வீட்டுக்கார அம்மாளை மிகஅற்புதமான பிறவியாக பாராட்டுவதேன்? அவளுடைய சுதந்திரத்தில் தலையிடுவதை ஏன் யாரும் கவனிக்கவில்லை? ஒருவரின் சுதந்திரத்தை ஒருவர் இப்படித்தான் பறிப்பதா? சரித்திர ஆசிரியை ஆங்கிலேயர்களைப் பற்றிப் பேசியது அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஏன் அவள் மனம் இப்படி அலைகிறது ?ஆங்கிலேயர்கள் எங்கே, வீட்டுக்காரம்மா எங்கே?

வீட்டுக்காரம்மா கொண்டு வந்த சாப்பாடு எவ்வளவு சுவையாக இருந்தது! அவள் கவலையை தவறாகப் புரிந்து கொள்ளும் தன் எண்ணம் பற்றி சௌகந்தி கவலைப் பட்டாள். ஆனால் அவளால் இதை சரி செய்யவும் முடியவில்லை. தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளவும், தன்னை அறியவும் அந்த விதமான எண்ணங்கள் தனக்குத் துணையாக இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரியும். இப்படி இல்லாவிட்டால், தான் தொலைந்து போய் விடுவோம் என்பதும் பிறகு தன்னையே தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

நாட்கள் கடந்தன. இன்னொரு நாள் இனி வராது என்பது போல பகல் இருட்டிற்குள் தன்னை புதைத்துக் கொண்டது. கருமையும், அச்சம் தரும் இரவும் இனி வரவே போவதில்லை என்பது போல காலைகள் முகிழ்த்தன. சௌகந்தியின் பொழுதுகள் வீடு,அலுவலகம் சமையல், குளியல், கண்ணாடி,சீப்பு , எண்ணெய், ஆடை என்று கழிந்தன.

ஒவ்வொரு முறை கதவு தட்டலின் போதும் , வீட்டுக்கார அம்மா அல்லது சமையல்காரி, அல்லது பால்காரர் என்று யாரையாவது பார்ப்பாள். அவள் முகத்தைப் பார்க்காமலே அவன் பால் சீட்டு கொடுத்து விட்டுப் போவான். மிக சாது. அப்புறம் யார் ? ஓ..படியில் படுத்திருக்கும் அந்த அசட்டு நாய், புரண்டு கொண்டோ அல்லது கதவில் முதுகைச் சொறிந்து கொண்டோ கிடக்கும். கதவு தட்டப்படும் சப்தத்தை தவறாகப் புரிந்து கொள்ளும் சௌகந்தி கதவருகே போனால் நாயைத்தான் பார்ப்பாள். அடித்துக் கொன்று விடலாம் போல இருந்தாலும்,நாய் எப்படிப் பொறுப்பாக முடியும் ? தொண்டையில் கை விட்டு உள்ளிருப்பதை வெளிக் கொண்டு வந்து விடவேண்டும் என்று சௌகந்தி சில சமயங்களில் நினைப்பதுண்டு.

நல்ல குடும்பம், சாதி, அந்தஸ்து உடைய யாரையாவது பார்த்து நீ காதலிக்க வேண்டும்” என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு நவீனமான அப்பா! என்று பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படலாம். தன் பெரிய வீட்டின் முன்னால் அற்புதமாக கல்யாணத்தை நடத்தி விடலாமென்று அவர் நினைக்கிறார்….

’அப்பா,உங்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்?’

அம்மா முடிவின்றி தனக்குள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள், ’எவ்வளவு காலம் நீ தனியாக இருப்பாய்?எங்கள் காலத்திற்குப் பிறகு உன்னை யார்பார்த்துக் கொள்வார்கள்’ அவள் தனியாக இருக்க வேண்டுமென்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது போல, ஓர் ஆணோடு இணைய மறுப்பது போல !’ ஆனால் ,அம்மா, ஏன் ஒருவர் என்னை மயக்கக் கூடாது? ஒரு மனிதன் சிங்கத்தைப் போல என் மீது பாய்ந்து.என்னை செயலிழக்கச் செய்து…’சீ,சீ இம்மாதிரியான ஆசைகள் அவளுக்கு மனதின் எங்கோ ஓரிடத்தில் இருப்பதும், தனது பலவீனமான தருணங்களில் அவள் அந்த எண்ணங்களை லேசாக வளர்த்துக் கொள்வதும் அம்மாவுக்குத் தெரிய வந்தால், அவள் பைத்தியமாகி விடுவாள். தனியாக வாழத் தொடங்கிய இந்த நாட்களில்தான் அந்த வித்தியாசமான குரல்கள் அவளுக்குக் கேட்கிறது.

எதுவாக இருந்தாலும் இதுவரை அவள் யாரையும் காதலிக்கவில்லை! யாரும் அவளை விரும்பவுமில்லை! ஏனப்படி? ’சௌகந்தியால் ஆண்களைக் கவர முடியாது. அவள் மிகவும் நேரடியாகப் பேசுபவள்.!’என்று அம்மா ஒரு தடவை சொன்னாள். அதன் அர்த்தமென்ன? தன் குற்றவுணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டுதன்னை முழுமையாகப் பார்த்தாள். கண்ணாடியில் தெரிந்த உருவம் ஓர் ஆணைக் கவர்கிற எல்லா அம்சங்களையும் உடையதாக இருந்தது. இருந்த போதிலும்…

’சில பெண்கள் தம் விழிகளால் ஆண்களை வசப்படுத்தி, அவர்களை திருமணம் செய்து கொண்டு விடுவார்கள். சௌகந்திக்கு அந்த வகை எதுவும் தெரியாது. அதனால்தான் இன்னமும் அவள் இங்கிருக்கிறாள்.’என்று அம்மா வீட்டிற்கு வருகிறவர்களிடம் புலம்புவாள். அவளுடைய சகோதரிகள் கண்களால்தான் வசீகரம் செய்தார்களா? அம்மாவிடம் அதைச் சொன்னால் என்ன ஆகும்? பெண்கள் தங்கள் விழிகளால் எப்படி வசீகரம் செய்தார்கள்?

கண்ணாடி முகத்தின் ஒவ்வொரு கோட்டையும் மிகத் தெளிவாகக் காட்டுவதை அவள் பார்த்தாள். சீ ! சுருங்க வைத்தால் எப்படியிருக்கும்? அவள் அதையும் செய்து பார்த்தாள். முடிவற்ற மந்தமான தன்மையைத்தான் அவளால் பார்க்க முடிந்தது. முகத்தை மட்டும் சுலபமாக ஒளிக்க இயலுமெனில்! உடனடியாக அவள் கண்ணாடியை நேராக வைத்தாள்.

’ஏதாவது நடந்தால் பெரிதாக கூச்சலிடு’ என்று வீட்டுக்கார அம்மா ஒரு நாள் அவளிடம் சொன்னாள். ’ஏதாவது’ என்பது எதைக் காட்டுகிறது? யாராவது கொள்ளையடிக்க வந்தாலா? ஆண்கள் கதவைத் தட்டினாலா? அதற்கு அவள் கூச்சலிடுவாளா? சௌகந்தியிடம் அதற்கு பதிலில்லை. கூரையை வெறித்தவளுக்கு ஒரு கருமையான திருடன் அதன் வழியாக இறங்கி வருவதான கற்பனை எழுந்தது.

கூச்சலிடுவதற்கு பதிலாக ,அவன் கண்களை நேரடியாகப் பார்த்து ’என்ன? எதற்கு இங்கே வந்திருக்கிறாய்?’ என்று கேட்டாள்.

வீட்டுக்கார அம்மாவின் குரல் கேட்டது.’என்ன பெண்ணே? நீ எப்படி இருக்கிறாய்?’ நினைவிழந்த நிலையிலிருந்து விழித்தவள் போல சௌகந்தி எழுந்து கதவைத் திறக்கப் போனாள்.சாதாரணமாகப் பேசுவது போல அந்த அம்மா கூரையைச் சுற்றி தன் பார்வையைப் படர விட்டவளாக ’கூரை ஓட்டையை அடைப்பதற்கு உரிய உறையை வாங்க நான் ரொம்ப நாளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் கிடைக்கவில்லை. அது எவ்வளவு விலை உயர்ந்து விட்டது! ஒரு குடும்பம் வாடகைக்கு என்று வந்திருந்தால் நான் வாங்கியிருப்பேன். இப்போது நீ இங்கு தனியாக இருக்கிறாய். சுலபமாக ஒருவர் குதித்து உள்ளே வந்து விடலாம்.இந்தக் கூரை அப்படியானதுதான்.’

சௌகந்தி கூரையின் இடுக்கை வெறித்தாள். ஜன்னல் கம்பியோடு இணைந்து சிலந்தி பின்னியிருந்த வலை தொங்கிக் கொண்டிருந்தது.அடுத்த நாள் காலை ,அது தரையில் கிடக்கும்…

’இப்போது காலம் கெட்டுக் கிடக்கிறது.இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதால் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. கூரைக்கு உறை போட எவ்வளவு செலவாகும் என்று உனக்குத் தெரியுமா? தனியொருத்தியாக என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.’சௌகந்தி தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தாள்.

’நீயும் சம்பாதிக்கிறாய். நீ பாதி,நான் பாதி செலவு செய்து உறையைப் போட்டு விடலாம்.என்னைத் தப்பாக நினைத்துக் கொள்ளாதே. உன் பணத்தை வைத்துக் கொண்டு என் வீட்டை பலமாக்கிக் கொள்ளும் எண்ணம் எனக்கில்லை. அது வீட்டு வாடகையில் கழித்துக் கொள்ளப்படும். இளமை மிக ஆபத்தான பருவம். இந்த வீட்டில் உனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது.’ இன்னமும் முழுமையாக இளமையைத் தொலைக்காத வீட்டுக்கார அம்மா பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

சௌகந்தி இப்போது அவளை வெறித்தாள்.’என் பெருமூச்சு இன்னமும் உங்களளவிற்கு ஆகவில்லை’ என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அவளால் முடியுமா? கீழே விழவிருக்கும் சிலந்தி வலையிலிருந்து தன் விழிகளை பறித்தவளாய்,’ இல்லை … இப்படியே இருக்கட்டும்.. எந்தப் பழுது வேலைக்கும் அவசியமில்லை ,’என்று முணுமுணுத்தாள்.

ஒவ்வொரு நாளும் பூட்டியிருந்த கதவு அவளை வரவேற்றது. ஏதாவது நடக்க வேண்டுமென்று வலியோடு அவள் மனம் காத்திருப்பதைப் போல அவள் பாதங்கள் இழுத்துக் கொண்டு போகும். எந்த நிகழ்வுமற்று எவ்வளவு நாட்கள் இப்படிக் கழியும் ?இந்தக் கேள்வியைக் தனக்குள் கூடகேட்டுக் கொள்ள அவளுக்கு தைரியமில்லை.

தனக்குத் தெரியாத யாரோ ஒருவர் உள்ளே இருக்கும் எண்ணத் தேடலுடனே அவள் கதவைத் திறப்பாள். படுக்கைக்கு அடியில், சமையலறையின் ஓரங்களில், குளியலறைக்குப் பின்னால்—அந்தத் தேடல் தொடரும். தனியாக இருக்கும் பெண்ணை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள யாரேனும் உள்ளே புகுந்திருந்தால் என்ன செய்வது? அவள் கவனமாக இருக்க வேண்டும்.’இளமைக் காலம் ஆபத்தானது. உன்னைச் சுற்றியிருக்கும் உலகம் சரியான பாதையில் உன்னைப் போக விடாது’…அம்மா ,வீட்டுக்காரம்மா,மற்றவர்கள் சொன்னது அவளுக்குள் பதிந்து விட்டது. ஆனால் யார் மூலைகளில் மறைந்திருப்பார்கள்?

ஒவ்வொரு வெற்றிட மூலையும் அவளை வெறித்தது. படுக்கையின் கீழ் கிடக்கும் குப்பை அவளைப் பார்த்துச் சிரித்து வரவேற்றது. கிளர்ச்சியிழந்து அவள் படுக்கையில் விழுந்தாள்.ஒரு கொள்ளைக்காரனாவது உள்ளே புகுந்திருக்கக் கூடாதா? அவளுடைய வழக்கமான வருத்தம் ஆசைகள் நிறைந்த தனி ஆத்மாவின் முணுமுணுப்பாக வெளிவந்தன .அவை வேறெங்கிருந்தோ வருவது போன்ற பாவனையில் அதை கவனித்தாள். எல்லாமும் குழப்பமாகி விடும். …யார் இதைச் செய்தார்கள்— யார் அது? இதைக் கேட்க முடிந்தால்….

பூனை உள்ளிருந்து கத்தியது. கண்ணீரை அடக்கியபடி சௌகந்தி சமையலறைக்கு ஓடி அதை விரட்டினாள். ஆனால் அந்தப் பூனை மாலை காப்பிக்காக வைத்திருந்த பாலை கவிழ்த்து விட்டு ஓடியது. வீட்டு முன்னாலிருந்த பால் கடைக்குப் போய் வழக்கம் போல பால்காரனின் முகத்தைப் பார்க்காமல் அவள் பாலை வாங்கி வந்தாள். சிந்திவிடாமல், தனக்குள்ளேயே பொங்கி , கெட்டியாகி ஆவியாவதான தன் வருத்தத்தை ஹம் செய்தபடியே பாலைக் காய்ச்சினாள்.

’என் கழுத்தில் தாலி என்னும் கயிறு இல்லாமலேயே என் சம்பாதிப்பின் மூலம் என்னால் வாழ முடியும். ஏழு சுவர் மாளிகையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறும் ஒரு பறவையைப் போல நான் வாழ்கிறேன்’என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். உடன் வேலை பார்க்கும் அஞ்சலி !அவள் கண்களில் என்ன தைரியமும், துடிப்பும்! ’கல்யாணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல சௌகந்தி’ —அவள் தன்னையே சமாதானம் செய்து கொள்ள முயற்சித்தாள்.

’நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் ஓர் ஆணின் துணையின்றி ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியுமா? நிச்சயமாக வாழ முடியும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இந்த தீர்மானம் என்பது வெறும் தற்காலிகமானதுதான். அடுத்த கணம் நான் மூழ்கிப் போகிறேன்…’

இவளிப்படியிருக்கும் போது அஞ்சலி எவ்வளவு உறுதியாக,தைரியமாக இருக்கிறாள்? அது ஒருவருடைய மனதின் எல்லை சார்ந்ததா?’ மனம் எல்லை சார்ந்ததில்லை. அது நம் எண்ணங்களைப் பொறுத்து விரியலாம், சுருங்கலாம், என்று சொன்னாள் அஞ்சலி.

’இல்லை அஞ்சலி, என் மனம் செத்துப் போன ஒன்று, அதில் சுருக்கமோ விரிவோ இல்லை.’அது முழுமையாக மரத்துப் போயிருக்க வேண்டும்’ இதை வெளிப்படுத்துவதில் தவறிப் போனதால் சௌகந்தி, களைத்துப் போனாள்.ஏன் அவளால் அஞ்சலியைப் போலிருக்க முடியவில்லை? அதற்கு பதிலாக, தற்கட்டுப்பாடு வேண்டுமென்பதால் அவளது மனம் அந்த ’தடைப்படுத்தப்பட்ட’ ஆசைகளைக் கைவிட்டுவிட்டு , எந்த விதக் கனவுகளுமில்லாமல் துடிப்பின்றி சுருங்கிப் போனது!

’அஞ்சலி, என் கனவுகளுள்ளாவது நான் புதைந்து கொள்கிறேன்! மரியாதை நிறைந்த பால்காரன் கூட என் கனவுகளில் எட்டிப் பார்க்கிறான்! அதன் பிறகு பஸ் கண்டக்டர், என்னருகில் உட்கார முடியாத நீண்ட முடியுடைய பயணி.. பிறகு வேறு யார்? இதையெல்லாம் நான் எப்படி விளக்குவேன்? அலுவலகத்தில் உனக்குத் தெரிந்தவர்களும் இதில் அடக்கம். கனவுகள் வினோதமானதும்,புரிந்து கொள்ள முடியாததும் அல்லவா? ஒருவரின் தலை இன்னொருவரின் உடலில் சேர்க்கப்பட்டிருக்கும்! ஒருவரின் புருவம் இன்னொருவரின் கண்களில்! இந்த உலகம் பொருத்தமான கலவையில் எவ்வளவு அற்புதமானது என்று உனக்குத் தெரியுமா! என் மனதிற்கும் அதற்கும் தொடர்பில்லை! அஞ்சலி,உண்மையைச் சொல்,அந்த மாதிரியான குழப்பும் கனவுகள் உனக்கு வந்ததேயில்லையா?’ சௌகந்தியின் தனிமை நாளுக்கு நாள் மிக அதிகமானது.

அலுவலகத்திற்குப் போகும் போது, அறைக்குள் யார் புகுந்தாலும் அதற்கு இடம் தருவது போல வேண்டுமென்றே கொடியில் கனமான சேலையை பரப்பி வைத்தாள். தனக்கே அது தெரியாது என்பதைப் போல.

அவள் கௌரவமான குடும்பத்திலிருந்து வந்தவள். அந்த கௌரவத்தை குலைக்கும் தைரியமுமில்லை. ஏன் யாராவது அவளது இந்த கௌரவத்தை தோலுரிக்கக்கூடாது? அவளுக்கு இப்போது அனுபவம் மிக அவசியமாகத் தேவைப்பட்டது. போலித் திரை கிழிக்கப்பட்டு உண்மையான அவள் வெளி வரவேண்டும்.ஆனால் யாரும் என்னை அவதூறாகப் பேசக் கூடாது. ’பாருங்கள்! சௌகந்தி போய்க் கொண்டிருக்கிறாள்! உங்களில் யாருக்காவது அவளோடு இணை சேர தைரியமிருக்கிறதா?என்று அவளால் தைரியமாக தெருவில் கூக்குரலிட முடியுமா? காசி போன்ற புனித ஸ்தலங்களில் சந்தைகளில் பெண்கள் விற்கப்படுகின்றனர். ஆனால் கௌரவமான அவள் தன் விருப்பத்திற்கேற்ப பொது இடங்களில் ஏலம் விடப்படுவாளா? ’கௌரவமான குடும்பத்திலிருந்து வருபவர்கள் இந்த வகையில் இல்லை! என்று முகத்தில் அறைவதாக ஒரு பதில் வரும்.

தான் செய்தது, ஒருவரின் எல்லை மற்றும் மீட்சியைக் கடந்த பாவத்திற்குள்ளாகும் வியாபாரப் பாதை போன்றது! என்பதை உணர்ந்து சௌகந்தி தன் மனதிற்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தாள்

அவள் மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டத்தை ஒருவரால் எப்படி அறிய முடியும்? அப்பாவியான முகத்தில் வெளிர்ந்த கண்கள், வலுவான உடலமைப்பு, மென்மையான பேச்சு, நல்ல வேலை. ஆனால் திருமணமாகாதவள், அவளுக்கு எந்த தொல்லைகளுமில்லை. இப்படித்தான்அவளைப் பற்றிச் சொல்ல முடியும்.

வானத்தில் நிலவுடனோ ,நிலாவற்றோ இரவு சௌகந்தியின் தூக்கத்தை களவாடிக் கொண்டது. ஏதோ சப்தத்தை எதிர்பார்த்து அவள் திரும்பி திரும்பி படுத்தாள். இரவில் தேவதாரு மரங்களுக்கிடையேயான மிக மென்மையான சலசலப்பை மட்டுமே கேட்க முடியும். அல்லது எலிகள் ஒன்றன் பின் ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். இல்லையெனில் , கட்டப்பட்டிருக்கும் நாய் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டிருக்கும்.வீட்டுக்கார அம்மாவின் வேலைக்காரப் பெண் ’அம்மா, உங்களுக்கு இப்போதே நள்ளிரவாகி விட்டதல்லவா?இப்போது என்ன மணி ஆகியிருக்கும் ?என்று சிரித்துக் கொண்டே கேட்பாள். சௌகந்திக்கு தன் அப்பாவின் பயமும், வீட்டுக்கார அம்மாவின் உறுதியும் ஞாபகத்திற்கு வரும்.சீ! விஷம் ஏறுவது போல இருட்டு பரவியது.அவள் பிணத்தைப் போல தூங்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள்.

அன்று விடுமுறை நாள்.

’சௌகந்தி ,நாங்கள் நான்கைந்து நாட்கள் இங்கிருக்க மாட்டோம்.நீ எப்படித் தனியாக இருப்பாய்? லீவ் எடுத்துக் கொண்டு நீயும் ஊருக்கு போய்விட்டு வாயேன். நீ இதுவரை லீவே எடுத்ததில்லையே’ என்று வீட்டுக்கார அம்மா சொன்னாள்.

சௌகந்தியின் கன்னங்களில் திடீரென்று பரவிய ஒளியை வீட்டுக்கார அம்மாள் கவனிக்காமல் போனது அதிர்ஷ்டம்தான் இது அவள் தனியளாக சோகம் கப்பிய கன்னங்களோடு இருப்பதை இந்த உலகம் கூட காணத் தவறியதாலா ? அப்படியான கேள்விக்கு சௌகந்தி என்ன பதில் சொல்ல முடியும்? குறும்பான புன்னகையோடு ’நீங்களும்,உங்கள் நகைச்சுவையும்!’என்று வெறுமனே சொல்லி விடுவாளா?

’நான் இங்கேயே இருப்பேன்.எனக்கு லீவு கிடைக்காது.எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படவேண்டாம். நிம்மதியாக போய்விட்டு வாருங்கள்,’ சௌகந்தி உறுதியாகச் சொன்னாள்.

’நாங்கள் திரும்பி வரும் வரை என் மனம் முழுக்க இங்கேதானிருக்கும். உன் அப்பா பெரிய பொறுப்பை என் தோளில் சுமத்தியிருக்கிறார்,’ பயம் தரும் கற்பனையான முக பாவனையோடு வீட்டுக்கார அம்மாள் போனாள்.

சௌகந்தி காலை நீட்டியபடி சந்தோஷமாக உட்கார்ந்து கொண்டாள். இது சொர்க்கம்தான். அவள் ஏன் வேறெங்கும் போக வேண்டும்?வீட்டிற்குப் போய் அவள் என்ன செய்வாள்?அவள் தங்கைக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகி விட்டன. படுக்கையின் ஒரத்தில் கணவன் உட்கார்ந்திருக்க அவள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருப்பாள். இல்லை, அங்கு போவதில் எந்த அர்த்தமுமில்லை.

குழந்தைக்குப் பால் கொடுப்பது போல மாறுகால் போட்டு உட்கார்ந்தாள். ஒரு கணம் அவள் தலை சுற்றியது.யாரோ தன்னை பார்க்கிறார்கள் என்று அவள் பயந்தாள்.உடனே தலையைக் குனிந்து, கண்களை மூடிக் கொண்டாள்.

இன்று விடுமுறை தினம். இந்த நாளில்,இந்த இரவிலாவது ஏதாவது நடக்குமா?

பகல் பொழுது மிக மெதுவாக நகர்ந்தது.இரவு அடுக்குகளாக வந்து தன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்று நினைத்தாள்.இரவின் காலடிகளை கவனித்தபடி படுத்திருந்தாள். கதவு தட்டப்படும் என்ற நீண்ட நேர எதிர்பார்ப்பில் இருந்து களைத்துப் போனாள்.ஒருவேளை அவள் கிருஷ்ணனின் காலத்தில் வாழ்ந்திருந்தால் வெறும் புல்லாங்குழல் ஓசையால் அவள் உணர்ந்திருக்க முடியும் ! உள்ளும், வெளியும் எல்லா விதமான ஒலிகளையும் ஏற்படுத்த அவளால் கிருஷ்ணனின் இனிய புல்லாங்குழல் ஒசையை உணர முடியாமல் போனது. மெதுவாக கண்ணிமைகள் மூடின, தூக்கம் அழுத்தியது.நாள் முழுவதிலுமான களைப்பு அவளை நாராக்கியிருந்தது.தடையற்ற தூக்கம்! காலை ஐந்து மணியாக இருக்கலாம்…

சப்தம் கேட்டது!சௌகந்தி எழுந்து உட்கார்ந்தாள்.இதற்காகத்தானே அவள் இரவும், பகலும் காத்திருந்தாள்?

கடைசியாக அவளுடைய கதவு வைகறையில் யாரோ வந்திருப்பதைச் சொல்லியது.

இந்த அழைப்பிற்காக பல காலம் காத்திருந்த சௌகந்தி மீண்டும் அதைக் கேட்கும் ஆசையோடு படுத்திருந்தாள்.சப்தம் பெரிதாக கேட்டது. யாரோ அவள் பெயரை மிக மென்மையாக கூப்பிட்டார்கள்.

அவள் மீண்டும் எழுந்து உட்கார்ந்தாள்.யாராக இருக்கும்? துடிக்க மறந்த இதயம் மிக வேகமாக அடித்துக் கொண்டது.’ யார் அது? சௌகந்தி முனகினாள்.

எழுந்து, அவள் மிக மெதுவாக முன்னே நடந்தாள்.

தன் கனவுகள் அனைத்தையும் திரட்டி மெதுவாக கதவைத் திறந்தாள். அங்கே—

அப்பா நின்றிருந்தார்! அவருக்குப் பின்னால் அம்மா!

சௌகந்தி கீழே விழவில்லை. சிரிக்கவுமில்லை.

கடும் விஷத்தோடு கூடியிருப்பது போல முன்னாலிருந்த கருமையான சாலை சடலமாய் நீண்டிருந்தது.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.