தனிமை

எஸ். சுரேஷ் 

                  image credit- Craiyon

எப்பொழுதும் போல் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு பெரிய கண்ணாடி ஜன்னல் அருகில், பிக்சர் விண்டோ என்கிறார்கள், குஷன் நாற்காலியில், கையில் வைன் கோப்பையுடன் அமர்ந்தாள். வெளியே இருள் கவ்வியிருந்தது. கண்கள் பழகப் பழக வடிவங்கள் தெரிய ஆரம்பித்தன. இருபது வருடங்களுக்கு மேலான பழக்கம் இது.

ஊருக்கு வெளியில் இருந்த இந்த வீட்டை இருளுக்காகவே அவள் வாங்கியிருந்தாள். முதலில் நகரத்தில் இருந்தாள். ஆனால் அவளுக்கு வேண்டிய இருள் கிடைக்கவில்லை. தனிமையில் இருளை பார்த்துக் கொண்டிருப்பது அவளுடைய இரவு நேர பொழுதுப்போக்கு. இன்று நிலவொளி அதிகமாக இல்லை என்றாலும் மூன்றாம் பிறையின் ஒளியில் மெதுவாக எல்லாம் தெரிய ஆரம்பித்தன. இப்பொழுது பூனையின் கண்கள் போல் அவளால் இருளில் பார்க்க முடியும். இரவு பத்து மணிக்கு விளக்குகளுடன் மொபைலையும் அணைத்து விடுவாள். செயற்கை வெளிச்சமும் சத்தமும் இல்லாத சூழலை உருவாக்கிக் கொண்டு, வைன் ருசித்தப்படி ஒரு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்திருப்பாள்.

இருபது வருடங்களாக நிகழாத ஒன்று அன்று நிகழ்ந்தது: இருளின் அமைதியை காலிங் பெல்லின் ஓசை கீறி சிதைத்தது. திடுக்கிட்டு எழுந்த அவளின் கோப்பையிலிருந்து மது சிந்தியது. படபடக்கும் நெஞ்சுடன் காதவருகே சென்ற அவளுக்கு,- அம்மா, உங்கள இப்பொழுதே பாக்கணும்னு ஒருவர் வந்திருக்காரு– என்ற காவல்காரனின் குரல் கேட்டது.

வெள்ளை உடுப்பில் நின்ற டிரைவர் மொபைல் ஃபோனை நீட்டினான் – புரொஃபசர் உங்களோட பேசணுமாம்.

புரொஃபசர்– டிரைவர் அழைத்துச் செல்லும் வீட்டுக்குப் போ. அங்கே இருக்கும் பெண்மணியை பரிசோதித்து அவளுக்கு வேண்டிய மருந்துகள்  கொடு.

புரொஃபசர் பல காலங்களுக்கு முன் அவளுக்கு வாத்தியாராக இருந்திருக்கிறார். அவர் கட்டளையை மீற முடியாது. ஸ்டெதஸ்கோப்பையும் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

நகரத்தில் மின்னும் மின்சார விளக்குகளினூடே, பணக்காரர்கள்  மட்டும் வாழும் ஒரு பகுதியில் இருந்த பங்களாவை அடைந்தனர். இரண்டடுக்குகள் கொண்ட வீட்டின் முதல் மாடிக்கு அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். – புரொஃபசர்– இவர்கள் ராஜபரம்பரையை சேர்ந்தவர்கள்– – காத்திருப்பதற்கான அறையில் அவளை அமர்த்திவிட்டு டிரைவர் எங்கோ சென்றுவிட்டான். அந்த அறை அவள் ஹால் அளவு பெரிதாக இருந்தது. டீக் மரத்தினாலான அலமாரிகள், நாற்காலிகள். பளிங்குத்  தரை பளபளத்தது. பளிச்சிடும் வெண்ணிறச் சுவர்கள். அறை நடுவில் உயர்ரக பெர்ஷியன் கார்பெட். பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் எல்லாம் சுத்தமாக துடைக்கப்பட்டு அதனதன் இடத்தில் இருந்தன. தூசு என்னும் பேச்சுக்கே இடமில்லை. விசாலமான அறை அவள் தனிமையை தீவிரமாக்கியது. இனம் புரியாத பயம் அவள் நெஞ்சை கவ்வியது. இருட்டில் தினமும் உட்கார்ந்திருக்கும் தனக்கு  வெளிச்சத்தில் அச்சம் ஏற்பட்டதை கண்டு அவளே சிரித்துக்கொண்டாள்..

அவளை உள்ளே அழைக்க யாரும் வரவில்லை. வாசல் கதவுக்கு வெளியே பார்த்தாள். எதிரில் ஒரு லான். முதல் மாடியிலும் ஒரு  லான். அதில் இரண்டு வெள்ளை இரும்பு நாற்காலிகள். புல்தரைக்கு அப்பால் இருட்டு. சுவரில் பொருத்தப்பட்ட இரண்டு மின்விளக்குகள் புல்தரையை வெளிச்சத்தில் நனைத்தன. அந்த இரண்டு வெள்ளை நாற்காலிகளும் யாருக்காகவோ காத்திருப்பது போல் அவளுக்கு பட்டது. அந்த பெரிய வீட்டில் எங்கும் தனிமை நிறைந்திருப்பது போல் அவள் உணர்ந்தாள். யாராவது அந்த நாற்காலிகளில் உட்கார்ந்தால் தனிமை விலகும் ஆனால் நாற்காலிகளைப் பார்த்தால் அவை வெகு நாட்களாக யாரையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டபொழுது அவளுக்கே தூக்கிவாரிப் போட்டது.

– அம்மா கூப்பிடறாங்க.

சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் கட்டலாம் போல் இருந்த ஹாலின் ஒரு மூலையில் சக்கரவண்டியில் ஒரு முதிய பெண்மணி உட்கார்ந்திருந்தாள். ராஜகம்பீரம் என்றால் என்ன என்று அவளுக்கு அந்த பெண்மணியை பார்த்ததும் புரிந்தது. ஐந்து நட்சத்திர விடுதிகளில் நாட்டின் முதன்மை பணக்காரர்களுடனும், முதல்வர் மற்றும் கவர்னருடனும் வெகு இயல்பாக பேசும் அவள் இந்தப் பெண்மையின் முன் மௌனமாக நின்றாள். ஒரு பிரஜை அரசியின் ஆக்ஞை இன்றி பேசக்கூடாது. சுருக்கங்கள் நிரம்பிய முகம், நரைத்த தலைமுடி, மனதுக்குள் ஊடுருவி பார்க்கும் கூர்ந்த பார்வை. அந்தப்  பார்வை அவளை எடை போடுவது போல் இருந்தது. அவள் மனதில் மறுபடியும் ஏதோ ஒரு அச்சம் தோன்றியது.

ராஜமாதா – ஆம் அவள் ராஜமாதாவாகதான் இருக்கவேண்டும் – சைகை செய்ய, பக்கத்தில் இருந்த பெண் ராஜமாதாவின் உடம்புக்கு என்ன பிரச்னை என்பதைக் கூறிவிட்டு மௌனமானாள். ராஜமாதாவைப்  பரிசோதித்து  மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்தவுடன் அதை வாங்கிக்கொண்ட பெண் நீங்கள் டீ குடிக்கிறீர்களா? என்று கேட்டதும் ராஜமாதா அவளை உற்றுப் பார்த்தாள். உடனே அந்த பெண் தலை குனிந்து நின்றாள். இல்லை, வேண்டாம், என்று அவள் சொல்லவும், ராஜமாதாவின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு அந்த பெண் ஹாலைவிட்டு உள்ளே சென்றாள். யாரும் அவளுக்கு நன்றி சொல்லவில்லை. அவள் மட்டும் அந்த அதிபெரிய அறையில் தனியாக நின்றாள். மெதுவாக வீட்டை விட்டு வெளியே வந்தாள். இரண்டு வெள்ளை நாற்காலிகள் மஞ்சள் நிற வெளிச்சத்தில் யாருக்காகவோ காத்துக்கொண்டிருந்தன.

வீட்டுக்கு வந்தவுடன் இருட்டில் மறுபடியும் ஜன்னலருகே உட்கார்ந்தாள். மிகக் கோபமான மனநிலையில் இருந்த அவளால் வைனை ரசிக்க முடியவில்லை. அங்கு சென்று அவமானப்பட்டதை நினைத்து தனக்குள் குமுறினாள். கோபக் கனல் அவளுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெயர் பெற்ற அவளை ஒரு பணிப்பெண் போல் அந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த பெண்மணி நடத்தினாள். அவள் ராஜமாதாவாக இருந்தால் எனக்கென்ன. உலகிலேயே மிகப் பெரிய பணக்காரியாக இருந்தாலும் பரவாயில்லை, நான் அவள் வீட்டிற்கு இனி செல்லப் போவதில்லை. புரொஃபசரிடம் கறாராக சொல்லிவிடுகிறேன். அன்று இரவு கனவில் இரண்டு வெள்ளை நாற்காலிகள் தோன்றின.

அடுத்த முறை டிரைவர் ஒன்பது மணிக்கே வந்துவிட்டான். அவள் உடனே கிளம்பினாள். முதல் முறை போல் சற்று நேரம் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தாள். அந்த வீடு ஒரு பூட்டிக் கிடக்கும் ம்யூசியம் போல் அவள் கண்ணுக்கு பட்டது. எல்லா பொருள்களும் பளபளப்பாக இருந்தன ஆனால் எல்லாம் உயிரற்றவையாக இருந்தன. என் வீட்டில் எல்லா பொருள்களும் உயிருடன் இருப்பது போல் எனக்கு தெரியும் ஆனால் இங்கோ எல்லாம் உயிரிழந்த சடலங்களாக இருக்கின்றன. ஏனோ மனிதர்கள் இருந்தாலும் இந்த வீட்டில் உயிர் இல்லை.

இந்த முறை இரண்டாவது மாடியில் இருந்த ராஜமாதாவின்  அறைக்குள் அவளை நுழைய அனுமதித்தார்கள். நான்கு பேர் படுக்கக்க்கூடிய பெரிய கட்டிலில் அவள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். படுக்கையறையும் பிரம்மாண்டமாக இருந்தது. ராஜமாதாவை அந்த பெரிய அறையில் பார்த்தபோது உலகமே ராஜமாதாவை கைவிட்டுவிட்டதுபோல் அவளுக்கு தோன்றியது. ஒரு வினாடி அவளுக்காக பரிதாபப்பட்டாள். வாய் திறந்து பேசினால் எங்கு இந்த ஆழ்ந்த மௌனம் கலைந்துவிடுமோ என்ற பயத்தில் பேசாமல் ராஜமாதாவைப்  பரிசோதித்தாள். எல்லா சோதனைகளும் முடிந்தவுடன், இவங்களுக்கு டீ கொண்டுவா, என்று ராஜமாதா சொல்ல, டீ வந்தது. இரவுப்பொழுது அவளுக்கு டீ குடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும் ஆணையை மீற முடியவில்லை. அது ஆணைதானே? அவள் எங்கு என்னை டீ குடிக்கிறாயா என்று கேட்டாள்? இந்த முறையும் ஒன்றும் பேசாமல் வெளியே வந்தாள். எப்பொழுதும் போல் வெளிச்சத்தில் இரு நாற்காலிகள்.

அடுத்த முறை எப்படியாவது பேசிவிடவேண்டும் என்று முடிவு செய்தாள். இந்த முறை அவளை காக்க வைக்கவில்லை. நேராக ராஜமாதாவின்– அவள் பெயர் தான் என்ன?– அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். டீ குடித்துக்கொண்டே ராஜமாதாவை கேட்டாள் – உங்களுக்கு யாரும் இல்லையா? அவளைச் சுட்டுவிடுவது போல் ராஜமாதா ஒரு பார்வை பார்த்தாள். உன் வேலையை நீ பார் என்று சொல்வது போல் இருந்தது அந்தப் பார்வை. அவள் தலை குனிந்து டீ குடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். வெளியே வரும்பொழுது டீ கொடுத்த பெண்மணி அவள் காதில் மெதுவாக, இரண்டு மகன்கள். இருவரும் வெளிநாட்டில், என்று சொன்னாள்.

அமாவாசை. வீட்டுக்கு வெளியில் நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அருகில் வெளிச்சம் எதுவும் இல்லை. இருளும் தனிமையும். அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தாள். விண்மீன்கள் கண் சிமிட்டின. அவள் கூர்ந்து பார்க்கும் பொழுது புது புது விண்மீன்கள் தெரிய ஆரம்பித்தன. விண்மீன்களின் ஒளியில் எல்லாம் தெளிவாக தெரிவது போல் இருந்தது. வைன் சற்று அதிகம் பருகிவிட்டிருந்ததால் காற்றில் மிதப்பது போல் ஒரு உணர்வு. கண்ணை மூடிக்கொண்டாள். கண்ணை திறந்து பார்க்கையில் விண்மீன்கள் மறுபடியும் அவளைப் பார்த்து கண் சிமிட்டின. இப்பொழுது இருள் சூழ்ந்திருக்கும் கடலுக்கு நடுவில் ஒரு மிக பெரிய கப்பலில் இருந்தாள். வலது புறம் திரும்பிய பொழுது பெரிய கட்டில் ஒன்றைப் பார்த்தாள். அதில் ராஜமாதா  ஆகாயத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கிருந்தோ வந்த ஒளி கப்பலின் ஒரு கோடியில் வட்டமாக விழுந்தது. அந்த வட்டத்துக்கு நடுவில் அதே இரண்டு வெள்ளை நாற்காலிகள்.

இந்த முறை டிரைவர் அவள் ஹாஸ்பிடலின் அலுவலக அறைக்கு வந்துவிட்டான். ராஜமாதா மூன்றாவது மாடியில் வி.ஐ.பி.களுக்கான ஐ‌சி‌யு அறையில் இருந்தாள். சற்று சோர்ந்திருந்தாலும் கம்பீரம் குறையவில்லை. ஆஸ்பத்திரி என்பதால் அவள் தைரியமாக பேசினாள். – வலிக்கிறதா?– ஆம் – ஸிடெரோய்ட் இஞ்ஜெக்ஷன் போடச் சொல்கிறேன் – அவள் ராஜமாதாவை பரிசோதிக்க ஆரம்பித்தாள். பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ராஜமாதா இவள் கையை இறுகப் பற்றினாள். ஒல்லியாக இருந்தாலும் பிடி பலமாக இருந்தது. அவளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது. ராஜமாதாவின் வலி அதிகரித்துவிட்டதை அவள் அறிந்தாள். முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக, கண்கள் இரண்டும் இடுங்க, பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு ராஜமாதா அவள் கைகளை பிடித்து வலுவாக இழுத்தாள். இழுத்தவுடன் அவள் குனிந்தாள். அவள் முகம் இப்பொழுது ராஜமாதாவின் முகத்துக்கு அருகில் இருந்தது. ராஜமாதாவின் கண்கள் விரிந்து அவளை கண்ணிமைக்காமல் உற்றுப் பார்த்தன. அந்த கண்களில் பயம் கூடிக்கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். – என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு – என்று அவை கதறின. இனி உலகில் அதிகம் நேரம் இருக்கமுடியாது என்று நம்பிய ஒருவரின் பார்வை அது. – நான் உலகை விட்டுச்செல்ல தயாராக இல்லை – அவளால் மூச்சு விட முடியவில்லை. சட்டென்று பிடி தளர்ந்தது. திடுக்கிட்டு ராஜமாதாவை பார்த்தாள். ராஜமாதா வாய் வழியால் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அங்கு விட்டு விலகப் பார்த்த அவள் கையை மறுபடியும் ராஜமாதா பிடித்துக்கொண்டாள். ஏதோ சொல்ல வருகிறாள் என்று அவளுக்கு தெரிந்தது ஆனால் வாயை விட்டு வார்த்தை வரவில்லை. மறுபடியும் முயற்சி செய்து தோற்றாள். மூன்றாவது முறை, வாழ்க்கையில் யாருக்கும் அதிகம் சொல்லாத அந்த வார்த்தை வெளிப்பட்டது – நன்றி – சில வினாடிகள் கண்களை மூடிக்கொண்டிருந்த ராஜமாதா கண்களை திறந்து – இனி நீ போகலாம் – என்று அவளுக்கு சைகை செய்தாள். இரண்டு நாட்களுக்கு பிறகு ராஜமாதாவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாக செய்தி வந்தது. அதற்கு பிறகு அவளுக்கு ராஜமாதா வீட்டிலிருந்து அழைப்பு வரவில்லை.

இப்பொழுதெல்லாம் அவள் இரவு பத்துமணிக்கெல்லாம் தூங்கிவிடுகிறாள். இருந்தாலும் அவ்வப்போது கனவில் அந்த இரு வெற்று நாற்காலிகள் வரத்தான் செய்கின்றன.

 

 

 

 

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.