வெளியேற்றம்

ஸிந்துஜா

கண்ணாடி காட்டிய உருவம் சுமிக்குத் திருப்தி அளித்தது. பொட்டு மட்டும் சரியாக அமையவில்லை. சிறிய சிவப்பு கறுப்பு நிறங்களில் பொட்டுக்கள் விற்கிறார்கள் என்று ஒரு சிவப்பு பாக்கெட்டு வாங்கி வைத்திருந்தாள். போன வாரம் பிரித்து இட்டுக் கொண்டாள். மேஜை மேலிருந்த சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை புத்தகத்துக்கு அடியில் இருக்கிறதா என்று தேடினாள். கிடைக்கவில்லை.

“என்ன இன்னும் டிரஸ் பண்ணி முடிக்கலியா? நான் குளிச்சிட்டு, சாமிக்கு ரெண்டு பூ போட்டு ஸ்லோகம் சொல்லிட்டு வந்தாச்சு. நீ என்னடான்னா அப்போலேர்ந்து கண்ணாடி மின்னே நின்னுண்டு ராயசம் பண்ணிண்டு இருக்கே ” என்று சரசம்மா அறையின் உள்ளே வந்தாள். அவளிடம் பொட்டுப் பாக்கெட்டைக் கேட்கலாம் என்றால் எடுத்ததை வச்ச இடத்தில் வச்சால் தேட வேண்டாம்; ஆனா கேட்டாத்தானே என்று யாரோ மூணாம் மனுஷிக்குச் சொல்லியபடியே எங்கேயிருந்தோ கொண்டு வந்து தருவாள்.

“ரொம்ப அட்டகாசமா புடவை கட்டிண்டு இருக்கியே? இன்னிக்கி மீட்டிங்குக்கு சல்வார் கமீஸ் போட்டுண்டா ஒத்துக்காதா?” என்று அவளைப் பார்த்தாள்.

“ஏம்மா அம்பைக்குக் கோபம் வர்ற கேள்வியெல்லாம் கேக்கறே?” என்று சிரித்தாள் சுமி. சரசம்மாவும் சிரித்தபடியே சுமியின் நெற்றியைப் பார்த்து விட்டு “பாழும் நெத்தியோட அலையணும்னு இன்னிக்கி வேண்டுதலா?” என்று கேட்டாள்.

“மறுபடியும் அம்பையைச் சீண்டாதேம்மா. நானே பொட்டுப் பாக்கெட்டை எங்கியோ வச்சிட்டுத் தேடிண்டு இருக்கேன்” என்றாள் சுமி.

“அன்னிக்கி என்னமோ கேக்கறேன்னு நெத்தியிலே பொட்டு வச்சிண்டே கிச்சனுக்கு வந்து அங்கேயே பாக்கெட்டை வச்சிட்டுப் போயிட்டே. சரி அங்கேயே இருக்கட்டும்னு எடுத்து வச்சேன். நீதான் கிச்சன் பக்கம் எட்டிப் பாக்க மாட்டியே” என்று உள்ளே போய்எடுத்துக் கொண்டு வந்தாள். “கடுகு சைசுக்கு இருக்கு. இதை விடச் சின்னதாக் கிடைக்கலையா?” என்று ஒரு சிவப்புப் பொட்டை எடுத்து சுமியின் நெற்றியில் வைத்தாள்.

“ஏன்தான் எனக்கு உன்னை மாதிரி இருக்க முடியலையோ?” என்றாள் சுமி.

“எல்லாம் ஜீன்ஸ்லே வரது” என்றபடி சரசம்மா நெற்றிப் பொட்டை சரி செய்தாள்.

அவள் உண்மையில் தாக்குவது தன்னையல்ல என்று சுமி நினைத்தாள். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை போடுவதற்கென்றே சமயங்கள் வாய்க்கும். காய்கறி மார்க்கெட்டில் அவர் வாங்கி வரும் காய்கறிகளை அம்மா முத்தல் பழி என்று முத்திரை குத்துவாள். அவர் சுமிக்கு எடுக்கும் உடை கண்ணைக் குத்தும் கலரில் சகிக்கப் போறலை என்பாள்.அவள் விரும்பும் தமிழ் சினிமாவுக்குப் போகாமல் இந்திப் படம் போக வேண்டும் என்று சொல்லி அவர் வெறுப்பேற்றுவார்.

அம்மாவுக்கு எதிலும் செட்டாக இருக்க வேண்டும். ஒழுங்கு, கவனம், துப்புரவு, கௌரதை, அழுத்தம், திருத்தம் என்று எல்லாமே வடிவெடுத்து வந்தாற் போல அவள் நடையில், உடையில், பேச்சில், பாவனையில் தெரிய வரும். வீட்டில் ஒரு தூசு தும்பு இருக்கக் கூடாது. சோஃபா, நாற்காலிகள் எல்லாம் ஹாலில் தரையோடு ஒட்டி வைத்தது போல ஒரு இஞ்சு நகராமல் போட்ட இடத்திலேயே இருக்க வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் எல்லாம் துடைத்து வைத்தது போல இருக்க வேண்டும். ஆழ்வார்குறிச்சி சித்தி போன தடவை வந்த போது சரசம்மாவைப் பார்த்துச் சிரித்தபடியே “அக்கா, நான் உங்காத்துக்கு வரப்போ மட்டும் குங்குமம் இட்டுக்கக் கண்ணாடி கிட்டே போகிறதில்லே. நான் நின்னுண்டு இருக்கிற இடத்திலே இருந்து குனிஞ்சு தரையைப் பாத்தாப் போறும்!” என்றாள்.

எதிராளியிடம் பணிவை ஏற்படுத்தும் தோற்றம் அம்மாவிடம் இருக்கிறது என்று சுமி அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்வாள். அவள் நிறம் கொஞ்சம் மட்டுதான். அவள் கம்பீரம் லேசான ஆண் சாயலை அவளுக்குத் தந்திருந்தது. ஆனால் அவற்றைப் பற்றி கவலை எதுவும் கொள்ளாமல் அவள் தன்னை ஸ்தாபித்துக் கொண்டு வளைய வந்தாள். ராம்குமார் மாமா அம்மாவை ஜெஜெ எங்கே என்றுதான் கேட்பார். ஜெ.ஜெயலலிதாவாம்! ராம்குமார் பாட்டியின் தம்பி. அதனால் அம்மாவுக்கு மாமா. ஆனால் அம்மாவின் உறவினர் குடும்பங்கள் அனைத்துக்கும் அவர் மாமாதான். அவர் சரசம்மாவை விடப் பத்துப் பனிரெண்டு வருஷங்கள் மூத்தவராயிருக்கலாம். ஆனால் அவர் வீட்டுக்கு வந்தால் ஒரே சிரிப்பும் கேலியுமாய் வீடே களேபரத்தில் மூழ்கும். சில நாள்கள் அவர் வந்திருக்கும் அன்று அப்பா ஆபிசிலிருந்து வர சற்று லேட்டாகும். ஆனால் மாதவராவ் வந்த பின் சத்தம் இன்னும் ஜாஸ்தியாகுமே ஒழியக் குறையாது. உறவுக்கு அப்பாலும் மாதவ
ராவும் மாமாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

சுமி மறுபடியும் கண்ணாடி முன்னே நின்று ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

“எல்லாம் நன்னாதான் இருக்கு. புடவை கட்டிண்டு வான்னு அது சொல்லி இருக்காதே?”

அம்மா அது என்று சொல்லுவது அவளை விட்டுச் சென்ற கணவனை. ஏழு வருஷத்துக்கு முன்பு நடந்த பிரிவு. அப்போதுதான் சுமி காலேஜில் சேர்ந்திருந்தாள். அதற்கு சரசம்மாதான் மாமாவிடம் பணம் வாங்கிப் பீஸ் கட்டினாள். மாதவராவ் அதற்கு முந்திய இரண்டு மாதமாகக் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுக்கவில்லை. ஆபீஸ் வேலை என்று ஒன்றரை மாதமாகக் கல்கத்தாவில் இருந்தார். கணவன் மனைவி பிரிவு பணத்தினால் மட்டும் விளைந்த ஒன்றோ என்று அவளுக்கு லேசாகத் தகராறு இருந்தது. ஆனால் அதைச் சுட்டிக்காட்டும் எந்த நிகழ்வையும் அவள் சந்திக்கவில்லை. அவர்களிருவரும் பிரிவது என்பதை அது நடப்பதற்குச் சில வாரங்கள் முன்புதான் அம்மா சொல்லி அவள் தெரிந்து கொண்டாள். அதையும் அம்மா ஐந்து வார்த்தைகளில் முடித்து விட்டாள்: ‘உங்கப்பா இனிமே நம்மோட இருக்க மாட்டார்.’ அவளிடம் அப்பா அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது தனக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்த போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அம்மாக் கோண்டு என்று மாதவராவ் நினைத்திருக்கலாம். அல்லது தனது மனைவியைப்
போலப் பெண்ணுக்கும் ‘பொல்லாத்தனம்’, ‘கல்மனது’ ஆகிய வார்த்தைகளுடன் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று கருதியிருக்கலாம்.

சரசம்மாவை விட்டுச் சென்ற மாதவராவ் ஊரை விட்டு ஜான்சிக்குப் போய் விட்டார் என்று சில மாதங்கள் கழித்து அவர்களுக்குத் தெரிந்தது. அதுவும் ராம்குமார் மாமா மூலமாகத்தான். மாமாவின் கம்பனிக்கு மாதவராவின் கம்பனிதான் மெஷின்களை விற்று வந்தார்கள். அந்த ஆர்டர்கள் கூட மாமா மூலம்தான் கிடைத்தன என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

சுமி சரசம்மாவிடம் “புடவை கட்டிண்டு வரதைப் பத்தியெல்லாம் பேச அன்னிக்கி எங்கே டயம் இருந்தது?” என்று கேட்டாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமி அலுவலகத்தில் வேலையாய் இருந்தபோது பியூன் வந்து அவளிடம் “மேடம், உங்களைத் தேடி
ரிசப்சன்லே உக்காந்திருக்கிறவங்களை இங்க அனுப்பட்டுமா?” என்றான்.

அப்போது மணி நான்கு இருக்கும். அவள் கம்பனியின் விளம்பரதாரரை மூன்று மணிக்கு வரச் சொல்லியிருந்தாள். லேட்டாக வந்ததுமில்லாமல் இங்கே வருவதற்குப் பதிலாக எதற்கு
ரிசப்ஷனில் நின்று கொண்டு தன்னை அழைக்கிறாள்? சுமிக்குக்
கோபம் ஏற்பட்டது.

“யார் அட்வைர்டைசிங் ரேகாதானே? அவளை இங்கே வரச் சொல்லு” என்றாள்.

“அவ இல்லே. அவரு” என்று சிரித்தான் தண்டபாணி.

அவள் ஆச்சரியத்துடன் ரிசப்ஷனுக்குச் சென்றாள். மாதவராவ்.

அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. இவர் எப்படித் திடீரென்று இங்கே? ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற தினம்தான் அவள் அவரை கடைசியாகப் பார்த்தது. கல்லூரியில் அவள் வகுப்பு மாணவிகள் ஒரு முறை வட இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்றார்கள். பார்க்க வேண்டிய இடங்களில் கஜுராஹோவும் இருந்தது. அதைப் பற்றி வகுப்பில் பேச்சு வந்த போது ஜான்சி வழியாக அங்கே போவது சௌகரியம் என்று ஒருத்தி சொன்னாள். அப்போது மாதவராவின் நினைவு அவளுக்கு ஏற்பட்டது.

ஏழு வருஷம் அவரிடம் தோற்றிருந்தது. ஏதோ போன வாரம் பார்த்த மாதிரி இருந்தார்.

அவர் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று புன்னகை புரிந்தார்.

அவள் “உக்காருங்கோ” என்று அங்கிருந்த சோஃபாவைக் காட்டி விட்டு அவளும் பக்கத்திலிருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்தாள்.

“எப்படி இருக்கே? யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்” என்றார்.

“நீங்களே கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லியாச்சு” என்றாள் சுமி.

மாதவராவ் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.

“எனக்குச் சந்தேகமாதான் இருந்தது. பாக்கறதுக்கு ஒத்துக்க மாட்டியோன்னு. அது தவிர நான் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறது உனக்குப் பிடிக்காமப் போனா? போன் பண்ணிட்டு வரலாம்னு முதல்லே நினைச்சேன். ஆனா நீ போன்லேயே வராதேன்னு சொல்லிட்டா? அதுக்குத்தான் போய்ப் பாத்து ட்ரை பண்ணலாம்னு வந்துட்டேன்” என்றார்.

அவர் தயங்கித் தயங்கிப் பேசியதும், அந்தப் பேச்சில் தென்பட்ட அச்சமும் அவளைச் சற்றுப் பாதித்தது.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. நீங்க ஏதாவது சாப்பிடறேளா?” என்று கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் அவர் முகத்தில் லேசாகப் பரவிய நிம்மதியை அவள் கவனித்தாள். ஆனால் தலையை அசைத்து ஒன்றும் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

“நீங்க நார்த்லே இருக்கறதா சொன்னாளே?” அவரிடம் சகஜத் தோரணையை ஏற்படுத்த அவள் கேட்டாள். அதே சமயம் அவரைப் பார்த்ததும் கோபமோ வெறுப்போ ஏன் தனக்கு ஏற்படவில்லை என்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.

“இல்லே. இப்ப நாங்க இங்கே வந்துட்டோம். ஒரு மாசமாகப் போறது.”

சுமி ஆச்சரியத்துடன் “நாங்களா?” என்று கேட்டாள்.

“ஓ, அந்த நியூஸ் உங்களுக்கெல்லாம் தெரியாதோ? அஞ்சு வருஷம் முன்னாலே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிண்டேன்” என்றார். அவர் குரலில் குற்ற உணர்ச்சி தொனிக்கிறதா என்று அவள் உற்றுக் கவனித்தாள். இல்லை.

ராம்குமார் மாமா இருந்திருந்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். மாதவராவ் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகிச் சென்ற பின் மாமாதான் அவர்களுக்கு வேண்டிய வெளி வேலைகளையெல்லாம் பார்த்து உதவிக் கொண்டிருந்தார். ஆறு மாதம் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள் தனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது என்று போனவர்தான். அப்புறம் சொந்த ஊர்ப் பக்கம் தலை காண்பிக்கவில்லை.

“வீடு எங்கே?” என்று சுமி பேச்சைத் தொடர்ந்தாள்.

“தொட்டகலாசந்திராலே மந்திரி ஸ்ப்ளெண்டர் பக்கத்திலே வீடு.”

“அது ரொம்ப தூரமாச்சே?””

“ஆமா. இங்கே மெஜெஸ்டிக்லேந்து தூரம்தான். ஆனா எனக்கு ஆபீஸ் பக்கத்திலேன்னு அங்க போயிட்டோம்.”

தொடர்ந்து “இந்த ஊருக்கு வரேன்னு தெரிஞ்சப்புறம் எனக்கு உன்னைப் பாக்கணும்னு எப்பவும் நினைச்சிண்டே இருப்பேன். அதிலே ஆசை, பயம், ஏக்கம், தடுமாத்தம் எல்லாம் இருந்து என்னைப் போட்டு வதைக்கும். கடைசியிலே எப்படியோ இன்னிக்கி வந்து பாத்துட்டேன்” என்றார்.

பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் கண்கள் அவள் முகத்தை விட்டு விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன. அவள் முகத்தில் ஓடுவதைப் படிக்கத் துடிக்கும் கண்கள். தான் சரியாகப் பேசுகிறோமா, அவள் அதை ஒப்புக் கொள்கிறாளா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அவரின் பேச்சில் இருந்த படபடப்பு தெரிவித்தது.

அவள் கண்கள் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தன.

அவர் அவளிடம் “சரி, நான் கிளம்பறேன். ஆபீஸ்லே வேலையா இருக்கறப்போ டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்று எழுந்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே” என்றாள் சமாதானப்படுத்தும் குரலில்.

“ஒரு நா நீ எங்காத்துக்கு வரணும்” என்றபடி தயாராக சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார். “பங்கஜாவுக்கும் உன்னைப் பாக்கணும், உன்னோட பேசணும்னு ஆசை. இப்பக்கூட தானும் வரதா சொன்னா. நான்தான் முதல்லே நான் போய்ப் பாத்துட்டு வரேன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வந்தேன்” என்று புன்னகை செய்தார்.

அவள் அவர் கொடுத்த காகிதத்தை வாங்கிக் கொண்டாள். ஆனால் பிரித்துப் படிக்க முயலவில்லை.

“இந்த ஞாயத்துக் கிழமைக்கு அடுத்த ஞாயத்துக் கிழமை வரேன்” என்றாள்.

அவள் திரும்ப சீட்டுக்கு வந்த பின் நடந்ததை ஒரு முறை நினைத்துப் பார்த்தாள். அவர் சரசம்மாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற மன நிலையில் மறந்து விட்டாரா? ஆனால் எப்படியோ அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து வந்து விட்டாரே. அவளும் அவர் எடுத்த முயற்சிகளைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவருடைய தயக்கமும், குரல் நடுக்கமும் அவர் மீது பரிதாபத்தை உண்டு பண்ணுவதாக இருந்தன.

சட்டென்று அவளுக்கு மாதவராவுடன் பேசிய அத்தனை நேரத்தில் தான் அவரை ஒருமுறை கூட அப்பா என்று அழைக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.

அன்று மாலை அவள் அலுவலகத்திலிருந்து வந்த பின் இரவு உண்ணும் போது சரசம்மாவிடம் மாதவராவின் வருகையைப் பற்றிச் சொன்னாள். வீட்டுக்கு வா என்று அவர் சொன்னதை அவளிடம் சொல்லும் போது சரசம்மா அவளை ஒரு நீள் பார்வை பார்த்தாள். மற்றபடி சரசம்மா வாயைப் புழக்கடையில் விட்டு விட்டு செவியை வரவேற்பறையில் வைத்திருப்பவளாய்க் காட்சியளித்தாள்.

சுமி அவளிடம் “அம்மா, நான் அவாத்துக்குப் போயிட்டு வரலாம்னு பாக்கறேன்” என்றாள்.

சரசம்மா சாப்பிடுவதை நிறுத்தி விட்டு “ம். போயிட்டு வாயேன்” என்றாள். குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாது அவள் ‘செய்யேன்’ என்று சொன்னது ‘செய்யாதே’ என்று கூறுவது போல சுமிக்குப் பட்டது. ஆனால் உடனடியாக அவள் இதெல்லாம் தன்னுடைய பிரமை என்று தனக்குள் உதறிக் கொண்டாள். அம்மா இப்போதைய நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறாள் என்று அவள் மனம் நினைத்தது. நான் ஏன் இம்மாதிரித் தடுமாறுகிறேன்? இரவு படுக்கையில் விழுந்து மாதவராவையும் அவர் பேச்சையும் அம்மாவின் முகபாவனையையும் பேச்சையும் நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு மாதவராவின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்னும் தனது நினைப்பின் பின்னால் எதற்காக மணமுறிவு ஏற்பட்டது என்னும் உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவல்தான் தன்னை இப்படி உந்தித் தள்ளுகிறது என்று தோன்றிற்று. இதுவரை ஒவ்வொரு முறையும் அவள் வெவ்வேறு காரணங்களைத் தானாகவே கற்பித்துக் கொண்டு வந்திருப்பதுதான் உண்மை. அதை உரைத்துப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது எதற்காக அதை அவள் உதறித் தள்ள வேண்டும்?

மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பக்கத்தில்தான் மாதவராவ் வீடு இருந்தது.

அழைப்பு மணியை அமுக்கியதும் கதவைத் திறந்தது மாதவராவ்தான்.

“வா, வா. வீடு கண்டு பிடிக்க கஷ்டமாயில்லையே?”

உள்ளே நுழைந்ததும் ஹால் எதிர்ப்பட்டது. ஒரே களேபரமாகக் கிடந்தது. சோஃபாவின் மேல் யானை, குதிரை, நாய், சோட்டா பீம், டைனோசர் என்று கால் ஒடிந்த, தலை கலைந்த பெரிய பற்களுடன் வாய் விரித்த கோலத்தில் பலர் கிடந்தார்கள். சோஃபாவை ஒட்டி ஒரு ரயில் வண்டி தலை குப்புறக் கீழே விழுந்து கிடந்தது. ஓடிக் கொண்டிருந்த டி .வி.யின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடிப் பிரேமுக்குள் தலை நிறைய மயிரும் குறுகுறு கண்களும் அரிசிப் பல் சிரிப்புமாக நாலைந்து வயதில் பொல்லாத்தனம் கொட்டும் முகத்துடன் ஒரு பொடியன் தலையைச் சாய்த்து நின்றான்.

மாதவராவ் அவள் பார்ப்பதைப் பார்த்து விட்டு “நீ வரப்போறயேன்னு அரைமணிக்கு மின்னாலேதான் இது எல்லாத்தையும் மூட்டை கட்டி ஒழிச்சு வச்சேன். இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு மின்னாலே வந்து ரணகளம் பண்ணிப் போட்டுட்டு பாத்ரூமுக்குப் போயிருக்கு பாரு” என்று சிரித்தார். சோஃபாவில் இருந்த பொருள்களை அங்கேயே ஒரு ஓரமாக ஒதுக்கிக் குமித்து விட்டு “உக்காரு” என்றார்.

அவள் உட்கார்ந்து கொண்டதும் “ஒரு நிமிஷம் வரேன்” என்று உள்ளே சென்றார். அவள் பார்வை ஹாலைச் சுற்றியது. டி.வி ஸ்டான்டின் அருகில் இருந்த ஸ்டூலில் இந்தியன் எக்ஸ்பிரஸின் சில பக்கங்கள் ஸ்டூல் மேலும் மீதி தரையிலும் கிடந்தன. டைனிங் டேபிள் மீது இருந்த பாத்திரங்களில் இரண்டு மூடப்படாமல் இருந்தன.

மாதவராவ் கையில் குளிர்பானம் நிரம்பிய இரு கண்ணாடித் தம்ளர்களை எடுத்து வந்து அவளிடம் ஒன்றைக் கொடுத்தார். அவள் அதை வாங்கி எதிரே இருந்த டீபாயில் வைத்தாள்.

“குழந்தைக்கு என்ன வயசாறது?” என்று கேட்டாள் சுமி போட்டோவைப் பார்த்தபடி..

“எட்டு வயசாறது” என்றார் மாதவராவ்

“என்னது?”

“ஆமாம். அந்தப் படம் அப்போ எடுத்தது. இப்போ எட்டு வயசு.”

சுமியின் பார்வை சோஃபாவின் மீது விழுந்து நின்றது.

“அவன் கொஞ்சம் ரிடார்டட் பேபி.” என்றார் மாதவராவ்.

அவள் திரும்பி அவரைப் பார்த்தாள். அன்று முதல் சந்திப்பில் ஐந்து வருடம் முன்பு கல்யாணம் ஆயிற்று என்றாரே. அப்படியென்றால்?

“நான் வேலை பாக்கற ஆபீஸிலேதான் பங்கஜாவும் வேலை பார்க்கறா. அவ புருஷன் அவளை விட்டுட்டு ஓடிப் போயிட்டான்.”

சட்டென்று அவளையும் மீறி சுமியின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டு விட்டன.

“நீங்க என் அம்மாவை விட்டுட்டுப் போயிட்ட மாதிரி” .

மாதவராவ் அவள் கண்களை நேரடியாகச் சந்தித்தார். தயக்கம் எதுவும் தெரிவிக்காத ஆழமான ஆனால் அமைதியான கண்களைப் பார்ப்பது போல சுமிக்குத் தோன்றிற்று.

“ஐ’ம் ஸாரி. வெரி ஸாரி” என்றாள் சுமி.

“நீ ஒண்ணும் தப்பா சொல்லலையே” என்றார் மாதவராவ். “உனக்குத் தெரிஞ்சதை வச்சு நீ சொன்னதுலே ஒரு தப்பும் இல்லே.”

அவர் வார்த்தைகள் பூடகமாக இருக்கின்றனவோ என்று ஒரு கணம் அவளுக்குச் சந்தேகம் எழுந்தது. நீ தப்பாக சொல்லி விட்டதால் உனக்கு இம்மாதிரி தோன்றுகிறது என்று அவள் மனம் கூறியது.

.”குறையோட இருக்கற குழந்தையை வச்சுண்டு தனியா மன்னாடறாளேன்னுதான் கல்யாணம் பண்ணிண்டேன்” என்றார் அவர்.

அவளுக்கு அவர் மீது இப்போது பெரும் மரியாதை ஏற்பட்டது.

“நான் எப்பவுமே உங்களைத் தப்பா நினைச்சிண்டு வந்திருக்கேனோன்னு ஒரு குத்த உணர்ச்சி என்னைப் போட்டுப் பிறாண்டறது” என்றாள் சுமி உணர்ச்சி மேலோங்க.

மாதவராவ் கனிவுடன் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.

“என்னவோ ஒருத்தர் சந்தோஷமா இருக்க நல்லது செய்யறேன்னு நினைச்சிண்டு நானாத்தான் வெளியே வந்தேன். ஆனா அது என்னமோ வேறே மாதிரி நடக்கணும்னு ஆயிடுத்து” என்றார் மாதவராவ் .

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.