கவியின்கண் – 1 “எத்திசை செலினும் அத்திசைச் சோறே”

– எஸ். சுரேஷ்-

​மன்னன் நெடுமான் அஞ்சியின் அரண்மனை வாயிற்காவலனை நோக்கி ஔவை பாடியதாக ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு:

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

இந்தத் தமிழ் சிலருக்கு சவாலாக இருக்கலாம் – அவர்களுக்காக ஒரு எளிய ஆங்கில மொழிபெயர்ப்பு :

O! Sentinel! O! Sentinel!
O! One who guards the gates
that never close for those
with ambition in their heart
living a life of deception
flattering their donors
obtaining gifts and good position

Do you think
Neduman Anji doesnt know himself
Or do you think he doesnt know me

Its not yet the way of this world
that people with fame and talent
die of starvation

So I pick up things,tie my bag
As a skilled son of a carpenter
goes into the woods
with his axe
Any which direction I go
a meal awaits me

புலவர்கள் அரசர்களின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வது வழக்கம் என்பது நமக்குத் தெரியும் – இதையே இந்தப் பாடலில் பரிசில் வாழ்க்கை என்று ஔவை குறிப்பிடுகிறார். புறநானூற்றில் உள்ள பல பாடல்கள் அரசர்களையும் குறுநில மன்னர்களையும் போற்றிப் பாடப்பட்ட துதிப்பாடல்கள்தான். ஆனால், இந்தப் பாடல் மற்ற பாடல்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது.

தமிழிலோ ஆங்கிலத்திலோ, ஒரு முறை இந்தப் பாடலை வாசித்தால் போதும், ஒரு விஷயம் எளிதில் புரிந்துவிடும். புலவர்கள் தம் பிழைப்புக்காக மன்னனைப் பாடி அவனைச் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறையை ஔவை நிராகரிக்கிறார் – “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே,” என்று இப்பாடல் முடிகிறது. அரசனை நோக்கி இப்படிப் பாடும் துணிச்சல் ஒரு புலவருக்கு இருந்தது என்று நம் பள்ளிப் புத்தகங்களில் இந்தப் பாடலைச் சேர்த்து அக்காலப் புலவர்கள் சுயமரியாதையுடன் இருந்தார்கள் என்று பாடம் புகட்டலாம். ஆனால் நம் அனுபவம் நமக்கு உணர்த்தும் உண்மை வேறு. நம் வாழ்க்கையைக் கொண்டு இப்பாடலை வாசித்தால் வழமையாக நமக்குக் கற்பிக்கப்படும் உண்மையின் மறுபக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

பிற புலவர்களைவிட தன் புலமைத்திறம் உயர்ந்தது என்பதை ஔவை அறிவாள். அதனால்தான் மன்னனைப் புகழ்பவர்களுக்கு மட்டும்தான் கதவு திறந்திருக்கிறது என்று அவள் கோபப்படுகிறாள். நம்மைவிட திறமை குறைந்தவர்கள் உயர் பதவிகளைப் பெறும்போது நாம் சொல்வதுதான் இது. ஔவையும் மேலிடத்து ஆதரவு பெற்றவர்களைப் பார்த்து கசந்து போனவளாய் இருக்கிறாள். எத்தனை சமயங்களில் நாம் இந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறோம். இது போன்றவர்களின் வெற்றி ரகசியத்தை அவள் அறியாதவள் அல்ல.

ஜெயமோகன் தன் சங்கச் சித்திரங்களில், ஔவை இதை வாயிற்காவலனிடம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதைக் கண்டு வருந்துகிறார். இதுவும் நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளாத அனுபவம் அல்ல – ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது அங்கு என்ன பிரச்சினை என்பதை ஓர் மனிதவளத்துறைப் பிரதிநிதிதான் விசாரிக்கிறார். நாம் சொல்வது அந்த வாயிற்காவலனைத் தாண்டி எங்காவது போகுமா என்ன என்பது யாருக்குத் தெரியும்!

இந்த அநீதியெல்லாம் நெடுமான் அஞ்சிக்குத் தெரிந்தே நடக்கின்றன என்பதை ஔவை அறிந்திருக்கிறாள். “நெடுமான் அஞ்சி தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?” என்று கேட்கிறாள் அவள். அவனுக்குத் தன்னைத் தெரியாதா, இல்லை என்னைத் தெரியாதா? இருந்தாலும் “உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்”தினரை மட்டும் உள்ளே அழைத்துக்கொண்டு ஔவையை இப்படி வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறான்.

ஔவையின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள நம் அனுபவத்துக்கே வருவோம். உயர்பதவிகளில் இருப்பவர்கள் முட்டாள்கள் அல்ல – இருந்தாலும் திறமையானவர்களை ஊக்குவிக்காமல் சாதாரணர்களுக்கும் விசுவாசமானவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு அளித்து பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள்தான் பிரச்சினை பண்ணாமல் சொன்னபடி கேட்கிறார்கள். ஏறத்தாழ எல்லா நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.

“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே,” என்று சொல்லி ஔவை தன்னை ஏமாற்றிக் கொள்கிறாள் என்கிறார் ஜெயமோகன். தனக்குத் திறமை இருப்பதாகவும், நெடுமான் அஞ்சியை நீங்கி எங்கு போனாலும் தன் திறமையைக் கொண்டு உயிர் பிழைக்க முடியும் என்றும் ஔவை சொல்லிக் கொள்கிறாள். ஆனால் எங்கே போனாலும் அரசனைச் சுற்றி இந்த மாதிரி ஆட்கள்தான் இருப்பார்கள். ஔவை அங்கும் வாசலில்தான் நிற்பாள். ஏனென்றால், முன்னேற வேண்டும் என்ற வெறி இல்லாமல் அதற்குத் தேவையான சமரசங்கள் செய்து கொள்ளாமல் வாழ்க்கையில் யாரும் உயர முடியாது. என்னைச் சுற்றி இருபவர்களில் பலரும் திறமைசாலிகள், ஆனால் அந்த வெறி இல்லாத காரணத்தால் திசை தெரியாமல் தேங்கிக் கிடக்கிறார்கள்.

எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்றால் ஔவைக்கு ஏன் இந்த கசப்பு? “அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென வறுந்தலை உலகமும் அன்றே,” என்று சொல்கிறாள் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அறிவும் புகழும் இருப்பவர்களை மதித்து அவர்களை வாழவா வைக்கிறது இந்த உலகம்? எங்கு போனாலும் இதே நிலைதான் – வேறு இடம் போனால் மட்டும் எதுவும் மாறிவிடவா போகிறது?

ஜாமினி என்ற ஒரு சம்ஸ்கிருத பண்டிதன் சொன்னான், “ந கதாசித் அநித்ருஷம் ஜகத்” – இந்த உலகம் எப்போதும் இப்படிதான் இருந்திருக்கிறது.

oOo

மேற்கண்ட மனப்பதிவுகளை நீங்கள் புறநானூற்றுப் பாடலைக் கொண்டே அடைந்துவிடலாம் என்று நினைக்கிறேன். இன்னமும் சொல்லப்போனால் என் உரை அவசியமே இல்லாத ஒன்று என்றுகூட சொல்வேன், ஆனால் இந்தக் கவிதையை வாசித்தபின் அது குறித்த என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.

என்னுடைய சகாக்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் பேசும்போது ஒரு விஷயம் எனக்குப் புரிகிறது: அவர்கள் எப்போதும் தங்கள் நிலையை நியாயப்படுத்தவே முயல்கிறார்கள், இந்தியர்களானாலும் சரி, அமெரிக்கர்களானாலும் சரி. சிலர் தங்களுடைய சாதனைகள் பற்றி அளந்துவிடுவார்கள், சிலர் ஏன் தாங்கள் படிநிலையில் மேலும் உயர விரும்புவதில்லை என்பதைச் சொல்வார்கள், வேறு சிலர், தாங்கள் ஏன் முன்னேறியிருக்க வேண்டும் ஏன் முன்னேறியிருக்கக் கூடாது என்பதை விளக்குவார்கள். எங்கெங்கும் அனைவருக்கும் தாம் செய்து கொண்டிருப்பதை நியாயப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

தன் நிலையை நியாயப்படுத்துவதற்கான தேவை மேலெழுந்தவாரியாக மட்டுமல்ல, அது வெகு ஆழமாக இருக்கிறது. பலர் தங்களுடைய வேலைதான் தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்வுதான் எல்லாவற்றையும்விட முக்கியம் என்று சொன்னாலும், நம்முடைய இருப்பை நமது வேலை மூலமாகவே நியாயப்படுத்துகிறோம். வாழ்வின் ஒரு கட்டத்தில் இந்த நியாயப்படுத்தலுக்கான தேவை மேலும் முக்கியமாகிவிடுகிறது. நியாயப்படுத்துதல் என்பது உங்களுடைய இன்றைய நிலையை மட்டும் நியாயப்படுத்துவதில்லை, இன்றைய நிலைக்கு வந்து சேர இதுவரை நீங்கள் எடுத்த முடிவுகள் அனைத்தையும் நியாயப்படுத்துகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வேலையில் சேர, காதலிக்க, கல்யாணம் பண்ணிக்கொள்ள, குழந்தைகள் பெற்றுக்கொள்ள, வேலையை மாற்றிக்கொள்ள, வேலையை மாற்றிக்கொள்ளாமல் இருக்க என்று நீங்கள் எடுத்த அத்தனை முடிவுகளும் தீவிர சோதனைக்கு உட்படுகிறது.

இருப்பை நியாயப்படுத்துவதும், வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வதுமே ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான மையப் பிரச்சனை. இந்த மையப் பிரச்சனையைத் தொட்டே பல பேரிலக்கியங்கள் ஏற்ப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நான் சொல்வதை நீங்கள் தாஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைப் படித்தால் புரிந்து கொள்ள முடியும்). வாழ்வின் குறிக்கோளுக்கான தேவை மனிதர்களை வெவ்வேறு திசைகளில் செலுத்தியிருக்கிறது. ஒருபக்கம், வாழ்க்கை அர்த்தமற்றது என்ற நிலையெடுப்பவர்களையும், இளைஞர்களும் சென்சிட்டிவான கலைஞர்களும் தற்கொலை செய்து கொள்வதையும், மறுபக்கம் மூர்க்கமான யுத்தங்களில் பங்கெடுத்துக் கொண்டு தங்களையே வெடிவைத்துத் தகர்த்துக் கொள்பவர்களையும் பார்க்கிறோம்.

இதற்கு மாறாக, தங்கள் வாழ்வை சேவையில் அர்ப்பணித்துக் கொள்பவர்கள், தங்களுக்கென்று எதற்கும் ஆசைப்படாதவர்கள் இருக்கிறார்கள். கலையாகட்டும், அறிவியலாகட்டும், சமூக சேவையாகட்டும், விடுதலைப் போராட்டமாகட்டும், மனிதர்கள் எவ்வளவு பெரிய தியாகத்துக்கும் தயாராக இருக்கின்றனர்.

வாழ்க்கையின் லட்சியத்தைக் கண்டடைந்து அதில் பற்றுதல் ஏற்படுத்திக்கொள்ள இதுபோன்ற தீவிரத்தன்மை ஒரு எளிய வழி என்று நினைக்கிறேன். பின்னாளில் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்தது என்றும் வாழ்க்கையில் நான் எதையோ சாதித்தேன் என்றும் சொல்லிக்கொள்ள மூடியும்.

இந்தக் கேள்வியை சமாளிக்கத்தான் அத்தனை சமயங்களும் இருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. இந்து, பௌத்த சமயங்கள் ஏராளமான கேள்விகளைக் கேட்கின்றன. சிலவற்றுக்கு விடை தந்துவிட்டு மற்ற அத்தனைக்கும் நீயாகவே பதில் கண்டுபிடி என்று சொல்கின்றன – இங்கு நான் பேசுவது ஞான மார்க்கம், பக்தி மார்க்கமல்ல. உபநிடதங்கள் எல்லாமே இதையே பேசுகின்றன, அவை அளிக்கும் பதில்கள் நமக்குப் புரிந்திருக்கலாம், புரியாதிருக்கலாம்.

வேறு சில சமயங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விவரமாகச் சொல்கின்றன – அவற்றைச் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் சொல்லி விடுகின்றன. இசுலாமும் கிருத்துவமும் தங்கள் மறைநூல்களில் சொன்ன மாதிரி செய்தால் ஸ்வர்க்கத்துக்குப் போகலாம் என்று சொல்கின்றன, நம் பக்தி மார்க்கமும் அதைச் சொல்கிறது என்று நினைக்க இடமிருக்கிறது. இந்த மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களுக்கு சமயநூல்களில் சொன்னதைச் செய்வதே வாழ்வின் நோக்கமாக இருக்கிறது. இதில் ஒரு வசதியும் உண்டு – வாழ்வின் குறிக்கோள் என்ன என்ற கடினமான கேள்விக்கு பதிலைச் சேகரிக்க வேண்டிய அவஸ்தை இவர்களுக்கில்லை. ஆக, பலரையும் சமயம் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துகிறது, அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்கான ஒரு சமாதானம் அளிக்கிறது.

ஆனால் நம் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம்தான் வேண்டுமா? வாழ்க்கை நம்மிடம் எதையும் கோருவதில்லை, நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற வற்புறுத்தல்கூட அதற்குக் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்ற தேவை நமக்கு உண்டு, நம் நோக்கத்தை அதைக் கொஞ்சமும் லட்சியமே செய்யாத வாழ்க்கையின் போக்கில் திணிக்கிறோம். ஒரு போராட்டத்தைக் கொண்டே வாழ்வின் அபத்தத்தைக் கடக்க முடியும் என்று காம்யூ (Camus) போன்றவர்கள் நினைக்கிறார்கள். வாழ்ந்தாக வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம் என்று சொல்பவர்களும் உண்டு. இப்படியெல்லாம் ஏதாவது ஒரு நோக்கம் நமக்கு இருந்தாக வேண்டுமா என்ன?

இது விடை காணக் கடினமான கேள்வியாகிறது. வாழ்வின் அபத்தம் நமக்கு நன்றாகத் தெரிகிறது, அதில் ஒரு நோக்கத்தைக் கண்டடைவதில் என்ன அர்த்தம் கிடைத்துவிடக்கூடும்? இன்னொரு பக்கம், அப்படியெல்லாம் ஒரு நோக்கமும் இல்லை என்று வாழ்கிறவர்களுக்கு, வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய கேள்விகளைத் தவிர்த்து நாம் தப்பித்து ஒடுகிறோமோ என்னவோ என்ற ஒரு உணர்வு எழுகிறது.

கண்ணதாசன் ஒரு பெருங்கவிஞன். அவர் ஒரு பாடலில் சொல்வார்-

“காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்”

ஆம், கேள்விகள் மட்டுமே எஞ்சுகின்றன. நாம் சில விசேஷங்களில் செய்யும் ஹோமம் நினைவுக்கு வருகிறது. நெய் ஊற்ற ஊற்ற நெருப்பு மேலும் மேலும் உயரே எழுகிறது, பெரும்பசியுடன் ஆஹுதியை அக்னி விழுங்கிக் கொள்கிறது. இது போல் வாழ்விலும் காலம் ஒரு மாபெரும் யாகமாய் நம் ஆண்டுகளை உட்கொள்கிறது – நாளுக்கு நாள் வீரியம் கொள்ளும் நெருப்பாய் கேள்விகள் நம் உள்ளத்தைத் தகிக்கின்றன. நம் ஆயுட்காலமே இந்த நெருப்பின் ஆஹுதியாகிறது. என்னதான் சமாதானம் சொன்னாலும், எவ்வளவு நியாயப்படுத்தினாலும் அவ்வளவும் நில்லாது அழிகிறது – நெருப்பாய்ச் சுடும் கேள்விகள் நம் காரண காரியங்களால் மேலும் கடுமையாகின்றன.

இங்கே கேதரின் மேன்ஸ்ஃபீல்டின் ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்லப் போகிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையில் ஒரு இளம் பெண் பால்ரூம் நடனத்துக்கு அழைக்கப்படுகிறாள். அவளுக்கு இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, அவளது முதல் பால்ரூம் டான்ஸ் அது. அவள் சென்ற இடத்தின் செல்வச் செழிப்பைப் பார்த்து திகைத்து நிற்கிறாள். அதன் உயர்ந்த கூரைகளில் தொங்கும் அலங்கார விளக்குகள், ரசனையுடன் செய்யப்பட்ட கலை வேலைப்பாடுகள், சுழன்று மேலேறும் மாடிப்படிக்கட்டுகள் – எத்தனை ஆடம்பரம்!

அப்போது ஒரு இளைஞன் அவளைத் தன்னுடன் நடனமாட அழைக்கிறான். அவள் ஆடிக் களைத்து ஒர் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறாள். அப்போது அவளருகில் ஒரு முதியவர் அமர்ந்திருக்கிறார். அவர் பேசத் துவங்குகிறார்.

இதெல்லாம் இப்போது பிரமாதமாக இருந்தாலும், ஆடி முடித்ததும் இங்கே குப்பைதான் இருக்கும் என்கிறார் அவர் – எதுவும் அதனிடத்தில் இருக்காது, அவளுக்கும் இதெல்லாம் அலுத்துப் போகும். யதார்த்தம் என்ன என்று உணர்த்த முயற்சிக்கிறார் பெரியவர். இதைக் கேட்கும் இளம்பெண் வருந்துகிறாள், இத்தனை நேரம் சந்தோஷமாக இருந்தவள் இப்போது யோசிக்க ஆரம்பிக்கிறாள். எல்லாம் முடிந்து போகும் என்ற எண்ணத்தின் துயர் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கும்போது வேறொரு இளைஞன் அவளைத் தன்னுடன் ஆட அழைக்கிறான். அவள் அவனது அழைப்பை ஏற்கிறாள்.

வெகு விரைவில் அவள் அந்த அறையின் மத்தியில் சுழன்று ஆடிக் கொண்டிருக்கிறாள், அவளைச் சுற்றிலும் வண்ணங்கள் ஒளிர்கின்றன. அவளது இதயம் மகிழ்ச்சியில் திளைக்கிறது, முதியவரின் நினைவு மறக்கப்படுகிறது.

நாமும் நம் வாழ்வை எப்போதாவது நேருக்கு நேர் திரும்பிப் பார்க்க நேர்கிறது. அப்போது கேள்விகள் அவற்றின் மகோன்னதச் சிடுக்கோடு மேலெழக் காண்கிறோம். ஒரு கணம் திடுக்கிட்டாலும், நாம் நம் முகத்தை உடனே திருப்பிக் கொள்கிறோம். தக்க ஒரு சமாதானம் சொல்லிக்கொண்டு வாழ்வு எனும் முடிவற்ற ஆடுகளத்தில் நமக்குரிய நியாயங்களைத் தேடி வேறொரு திசைநோக்கிச் செல்கிறோம்.

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே, என்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.