உண்டி முதற்றே உலகு! – நாஞ்சில் நாடன் கட்டுரை

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம்.

அப்போது எனக்கவர் கையளித்த ‘ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் ‘மூன்றாவது கை’ எனும் சிறுகதைத் தொகுப்பும் இந்தியா திரும்பிய சில மாதங்களுக்குள் வாசித்து விட்டேன். ஆனால்,அயல் பசி’ என்ற கட்டுரைத் தொகுப்பு புத்தகக் குவியலில் மூச்சு முட்ட அடுக்கப்பட்டிருந்தது.

பிறகே அறிந்து கொண்டேன் அவர் இராமநாதபுரம் நத்தம் (அபிராமம்) எனும் ஊரில் பிறந்தவர் என்பதும் என்னில் பன்னீராண்டு இளையவர் என்பதும். வேதியியலில் பட்டப் படிப்பும் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர். மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து தற்போது சிங்கப்பூரில் குடியேறி உணவகம் நடத்துகிறவர்.

யாவற்றுக்கும் மேலான அவர் சம்பத்து, படையொடுங்காத பூரித்த சிரிப்பு. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சத்து நேசம் காட்டும் முகம். இரண்டாம் முறை, செப்டம்பர் 2016ல் சிங்கப்பூர் சென்ற எனக்கு அன்றே ஊர் மடங்க வேண்டியதிருந்தது. தொண்ணூறு வயதில் அம்மாவின் இறப்பு. என்றாலும் 2016 நவம்பரிலும் 2017 நவம்பரிலும் மலேசிய நாட்டு ம. நவீன் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் அமைப்பின் இலக்கியப் பயிற்சி முகாம்களுக்கு கோலாலம்பூர் போயிருந்தபோது நண்பர் ஷா நவாஸ் சிங்கப்பூர் வந்திருந்தார். சிலமணி நேரம் உடனிருந்து உரையாட முடிந்தது.

தற்போது நாம் பேச முற்பட்ட விடயம், ஷா நவாஸ் அவர்களின் ‘அயல் பசி’ எனும் நூல் பற்றியது. 144 பக்கங்களே கொண்ட சின்னப் புத்தகம். 2014ம் ஆண்டில் உயிர்மை வெளியிட்டது. உயிரோசை’ மின்னிதழில் 2012-ம் ஆண்டு ஷா நவாஸ் எழுதிய கட்டுரைத் தொடர் இது.

2020ம் ஆண்டின் மார்ச் 24ம் நாள் முதலான ஊரடங்கு நாட்களில் முதல் வேலையாக எனது நூலகத்தின் புத்தக அடுக்குகளைத் தூசி தட்டித் துடைத்து மறு அடுக்குதல் செய்யத் தலைப்பட்டேன். எழுத்து ஊற்று வற்றிக்கிடக்கும் நாட்களில் – எப்போது அது பெருக்கு எடுத்துப் பாய்ந்தது என்று கேளாதீர் ஐயன்மீர்!ஏதோ ஒரு அடுக்கைச் சீரமைக்க ஆரம்பித்தால் அடுத்த நாளே அமர்ந்து ஏதாவது எழுதத் தோன்றும் எனக்கு.

ஒருவன் குடித்துவிட்டு வந்து பெண்டாட்டி முதுகில் சாத்து சாத்தென்று சாத்துவானாம். தினமும் நடக்கும் மண்டகப்படி. ஒருநாள் கணவன் வெளியூர் போய்விட்டான். மனைவிக்கு அரிப்பெடுக்க ஆரம்பித்ததாம். ஆபத்தான கற்பனை வேண்டாம், முதுகில்தான். முதுகுத் தினவு தாங்க முடியாமற் போனபோது, ஒரு பையில் ஐந்து பக்கா அரிசி அளந்து கட்டி, அதை உத்தரத்தில் வாகான உயரத்தில் தொங்கவிட்டு, வேகமாக ஆட்டிவிட்டு, வேகமாக வரும் அரிசிப் பைக்குத் தோதாக முதுகைக் காட்டி நிற்பாளாம் தினவு தீரும்வரை. 1960ல் என் அப்பனைப் பெற்ற ஆத்தா பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை எனக்குச் சொன்ன கதை. பெண் விடுதலைப் புரட்சி அன்று தொடங்கியிருக்கவில்லை என்பதால் வள்ளியம்மையை இன்று தண்டிக்க இயலாது. அவளது சாம்பல் கரைக்கப்பட்டும் 42 ஆண்டுகள் இற்றுப் போயின. எதற்குச் சொல்லவந்தேன் என்றால், நமக்கு எழுதுவதும் வாசிப்பதும் தினமும் முதுகில் சாத்துமுறை வாங்கும் மனையாட்டிபோலப் பழகிய காரியமாகிப் போயிற்று.

மலையாளத்தில் சொல்வார்கள், எலிக்குப் பிராண வேதனை பூச்சைக்கு வீணை வாயனை’ என்று. தமிழில் சொன்னால், வேட்டையாடப்படும் எலிக்கு உயிர் வேதனை, வேட்டையாடிய பூனைக்கோ வீணை வாசிப்பதைக் கேட்பது போன்றது. எழுதுபவனுக்கு எலியின் வேதனை. தமிழ் வாழ்க எனக் கொக்கரிப்பவனுக்குப் பூனையின் சுக பாவனை.

புத்தக அடுக்குகளில் இருந்து உடனடியாகப் படிக்க என 150 புத்தகங்கள் தனியாகப் பிரித்து வைத்தேன். கடந்த 150 நாட்களில் கிட்டத்தட்ட வாசித்து ஒதுக்கினேன். எல்லாம் காசு கொடுத்து கடந்த ஈராண்டு புத்தகக் காட்சிகளில் வாங்கியவை. பள்ளி கல்லூரிகளில் உரையாற்றப் போனபோது கிடைத்தவை. இளைய எழுத்தாள நண்பர்களால் வாசித்துப் பார்க்கத் தரப்பட்டவை. வாங்கியதோ அல்லது கையளிக்கப்பட்டதோ, தன்வயம் வரும் எப்புத்தகத்தையும் வாசிக்காமல் நான் கடத்துவதில்லை. சிலவற்றை புரட்டிப் பார்த்துத் தள்ளி வைப்பேன். வாசித்த யாவற்றையுமே கருமி பொருள் சேமித்து வைப்பதுபோல் வைப்பதிலும் எந்தப் பயனும் இல. துய்ப்பேம் எனினே தப்புந பலவே!’ என்பது புறநானூற்றில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடலின் ஈற்றடி.

இன்னொரு முறை வாசிக்க வேண்டும் அல்லது பின்னர் உதவும் என நினைப்பவற்றை மட்டுமே பாதுகாப்பேன். எனக்கு மேலால் அவசியப்படாது எனக்கருதுவன பலவற்றையும் வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் கடத்தி விடுவேன். சிலவற்றைத் தூதஞ்சல் மூலம் அனுப்பி விடுவதும் உண்டு. எப்படியும் எந்த நாளிலும் என்னிடம் எட்டாயிரம் புத்தகங்கள் இருக்கலாம். சித்திரபுத்திரன் கணக்குப் பார்க்கும் நாளிலும் வாசிக்கப்படாமல் இருநூறு நூல்கள் கிடக்கும்.

‘அயல் பசி’ வாசித்து முடித்த கையுடன் தனியாகத் தங்கரியம் செய்து வைத்த பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் துவங்குகிறேன். எங்க அம்மா வெக்கற மாரி வத்தக்கொழம்பு இந்த லோகத்திலே யாராலும் வெக்க முடியாது” என்பது போன்ற Qualifying Statements விடுகிறவர்களுக்கான புத்தகம் அல்ல அயல்பசி. திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

கடல் உணவுகளில் மீன் சாப்பிடுகிறவர்களிடையே நண்டு, சிப்பி, திரைச்சி, சுறா, கணவாய் சாப்பிடாதவர் உண்டு. உண்ணாதவரை, உண்ண விருப்பம் இலாதவரை, நினைத்தாலே ஓங்கரித்துச் சர்த்திப்பவரை எவரும் நிர்ப்பந்திப்பது சரியல்ல. என் அம்மை சாகிறவரை கடலை எண்ணெய் பயன்படுத்தியவள் அல்ல. அவளுக்கானது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தரித்திரம் செலுத்தியதால்தான் ரேஷன் கடை பாமாயில் வாங்கினாள். அதற்கென்ன செய்ய இயலும்?

மெய் கூறப் புகுந்தால் 32 அத்தியாயங்களில் பேசப்பட்டிருக்கும் உணவுப் பதார்த்தங்கள், செய்முறைகள், கருவிகள், விவரிக்கப்படும் காய், கனி, கிழங்குகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் பற்றி எனக்கு ஒரு அறிவும் இல்லை. உலகின் ஆகச்சிறந்த உணவு சம்பா அரிசிச்சோறு, வறுத்து அரைச்ச மீன் கறுத்தக்கறி, புளிமுளம், சைவ உணவெனில் அவியல், எரிசேரி, புளிசேரி, மொளவச்சம், ஐந்து வகைப் பிரதமன், இலைப் பணியாரம், கொழுக்கட்டை, உளுந்தங்களி, வெந்தயக்களி என நம்பும் வயதும் முன்முடிவுமே எனக்கு.

நண்டு, சிப்பி என சாப்பிட்டுப் பழகியிராதவன். சொல்லப்போனால் தலைக்கறி, குடல்கறி, ரத்தப்பொரியல் யாவும் அந்நியம். கடல்மீன் தின்னும் பிராந்தியத்தவன். ஆற்றுமீன், குளத்துமீன் ருசி அறியாதவன். வளர்ந்து ஆளாகி வேலைக்குப் போய் தேசங்கள் சுற்றிக் கறங்க ஆரம்பித்த பிறகே, கஞ்சி குடிச்ச மலையாளி சோத்தக் கண்டா விடுவானா? எனும் நிலைக்கு மனம் தேறியது. நியூயார்க்கில சாப்பிட்ட கணவாயும், டொரண்டோவில் சாப்பிட்ட சுட்ட மாட்டிறைச்சியும், டோக்கியோவில் சுவைத்துத் தின்ற சூஷியும், சிங்கப்பூரில் நண்பர்கள் வாங்கித்தந்த சகல கடல்வாழ் உயிரினங்களின் தாய் சூப்பும், கொலாலம்பூரில் சக்கைப் பிரதமன் போலிருந்த இனித்த கிரேவியில் பொரித்து மிதக்கவிடப்பட்டிருந்த மீனும், மலேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் வாங்கித் தந்த மான் இறைச்சியும், பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் பிரஞ்சுக்கார நண்பர் வாங்கித்தந்த பன்றி இறைச்சியும் மூன்று வகை வைனும், மெல்பர்ன் நகரில் யாழ்ப்பாணத்து சகோதரி கலாவதியின் தம்பி மனைவி செய்து தந்த, வாழ்க்கையில் முதல் முறையாக நான் சாப்பிட்ட சம்பலும்

புறநானூற்றில் மிளைகிழான் நல்வேட்டனார் பாடல்வரி பேசும், நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று” என்று. நீண்ட நேரம் சொற்பொழிவாற்றுவதும் கண்டபடி விரைந்து பயணங்கள் மேற்கொள்ளுவதும் சம்பத்து அல்ல என்பது பொருள். மேற்சென்று நான் உரைக்க விரும்புவது சுவையான விருப்பமான உணவை வயிறார உண்பதுவே செல்வம். நெடுஞ்சாலை ஓரத்து பஞ்சாபி டாபாவில், லாரி டிரைவர் ரொட்டி பிய்த்துத் தின்பதைக் கண்டவர் உணர்வாரதை.

வாஷிங்டன் டி.சி. சதுக்கத்தில் நின்றுகொண்டு தயிர்சாதமும் மோர் மிளகாயும் கேட்கும் கதாபாத்திரங்களும் உண்டு. பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுக்கண்டம் நமக்கென்று சொல்ல வேண்டும் என்பார்கள் ஊரில். எத்தனை ஆயிரம் கோடி அபகரித்து என்ன பயன் அரை இட்டிலியை மிக்சியில் அடித்துக் கரண்டி கொண்டு ஊட்டப்படும் நிலை வருமாயின்? பசியையும் சீரணிக்கும் சக்தியையும் தந்த இறைக்கு நன்றி கூறத்தானே வேண்டும்! அதனால்தானே இறைவன் ஏழைக்கு உணவு வடிவத்தில் வருவான் என்றனர்!

1981ம் ஆண்டு Authors Guild of India மாநாட்டில் கலந்துகொள்ள புதுதில்லி சென்றிருந்தேன். என் நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பெயர் நீலமேகாச்சாரியார் சந்தானம். வடகலை வைணவர். கும்பகோணத்தில் தி. ஜானகிராமன் வீடிருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெரு. தி.ஜா.வின் தீவிர வாசகர். ஒருநாள் மதிய உணவின்போது “சாம்பார்ல ஏதாம் வித்தியாசம் தெரியுதாய்யா? என்றார். ஏன் நல்லாத்தானே இருக்கு!” என்றேன். வெங்காய சாம்பார்யா உமக்காக விசேஷமாச் செய்தது!” என்றார். அதாவது உணவில் பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்வதே ஒரு மரபு மீறலாகக் கொள்ளப்பட்டது. எனில் பன்றிக்கறியும் மாட்டுக்கறியும் மறைவாய் வாங்கும் இருவழியும் தூய வந்த குலப்பெருமை பேசும் வீடுகளையும் நானறிவேன் ஐம்பதாண்டுகள் முன்பே.

நாய்க்கறி தின்ற சிறுகதை ஒன்றுண்டு ஆ.சி. கந்தராசா கதைத் தொகுப்பில். என் நெருங்கிய நண்பர் ஒருவர், தரைப்படையில் பணிபுரிந்தவர், வடகிழக்கு எல்லையில் பணிபுரிந்து, நண்பர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்றால் நாய்க்கறி தவிர்க்க இயலாதது என்றார். முகம் நோக்கிக் கேட்டேன் “நீங்க திண்ணுருக்கேளா? என்று. அவர் பதில் தவிர்க்க இயலாது என்பதும் மறுத்தால் அவமதிப்பாகக் கருதப்படும் என்பதும்.

நாம் முன்பு சொன்ன என் நெருங்கிய நண்பர் நீலமேகாச்சாரியார் சந்தானம் குடும்பத்துடன் கன்னியாகுமரி போயிருந்தபோது, குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டு என் ஊரைக் கண்டுவர பேருந்து பிடித்துப் போனார். என் தங்கை விருந்து உபசரிக்கக் கோழி அறுத்துக் குழம்பு வைத்து இலை போட்டு சோறு விளம்பிக் கறியும் ஊற்றினார். புரிந்துகொண்ட நண்பர் துண்டைப் பொறுக்கித் தள்ளி வைத்து, பிசைந்து சாப்பிட்டு எழுந்தார். இதையவர் ஊர் திரும்பியபிறகு என்னிடம் சொன்னபோது எனக்குக் கண்கள் கலங்கின.

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்

எனும் நற்றிணைப் பாடல் வரியின் பொருள் விளங்கியது எனக்கு.

ஷா நவாஸ் Song Bird சூப் என்றும், சேவல் கொண்டைக் கறி என்றும், ஆடு மாடு பன்றி இரத்தத்தில் செய்யப்படும் Black Pudding என்றும், Bat Paste என்றும், விடத்தன்மை கொண்ட Fugu மீன் என்றும், தெளிவாக விரிவாகப் பேசுகிறார். இவை எவை பற்றியும் இதற்கு முன் நான் கேட்டதில்லை. எக்காலத்திலும் இனி உண்ணப் போவதும் இல்லை, விருப்பும் இல்லை. யாவற்றையும் ஷா நவாஸ் ருசி பார்த்திருப்பார் என்ற உறுதியும் இல்லை.

பாரதிமணி அண்ணா அடிக்கடி சொல்வார், கடுக்காயைத் தொட்டானாம் கோவணத்தை அவிழ்த்தானாம்” என்று. கடுக்காயைத் தொட்ட உடனேயே மலம் இளகிவிடும் என்பதற்கான மிகைச் சொல்லாடல் அது. ஷா நவாஸ் ஜாவானியப் பழமொழியொன்று கூறுகிறார், டுரியான் ஜாத்து சாரோங் நைக்” என்று. அதற்கு அவர் எழுதும் மொழிபெயர்ப்பு – “மரத்தில் இருந்து டுரியான் விழுந்தவுடன் கைலி மேலே தூக்கும்” என்று. கைலி என்றால் லுங்கி அல்லது சாரம்.

நான் முதலில் பயணம் போன நாடு மலேசியா. ஜனவரி 2010ம் ஆண்டில் மலேசியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலக்கியப் பயணம். ஏற்பாடு செய்தவர் மலேசியத் தமிழ் அமைச்சர் டத்தோ சரவணன். நல்ல சொற்பொழிவாளர். சைவத் திருமுறைகள் கற்றவர். நவீன தமிழ் இலக்கியம் வாசிப்பவர். பத்துமலை முருக பக்தர். தைப்பூசத்தின்போது மலேசியப் பிரதம மந்திரி கலந்து கொண்ட கொண்டாட்டங்களில் எங்களையும் கலந்து கொள்ளச் செய்தார். பத்துமலை குகைகளுக்கும் படியேறிப் போனோம். பன்மையில் நாம் பேசுவதன் காரணம், எங்கள் குழுவில் ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா, இலக்கியச் சொற்பொழிவாளர் த. இராமலிங்கம் என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர், கல்கி வார இதழ் சார்பில் சந்திரமௌலி, இளம் படைப்பாளி கனகதூரிகா. தைப்பூசம் திருவிழாக் கூட்டத்தில் நான் தப்பிப் போய் அலைந்தது தனிக்கதை.

அந்தப் பயணத்தின்போது டுரியன் பழமும் மங்குஸ்தீன் பழமும் உண்ண ஆசைப்பட்டேன். நாங்கள் தங்கியிருந்த நட்சத்திரப் பல்லடுக்கு விடுதியில் அறிவிப்பே வைத்திருந்தனர் டுரியன் பழத்துக்கு அனுமதி இல்லை என்று. என் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் டத்தோ சரவணன் ஏற்பாடு செய்தார். அவரது உதவியாளர் சாலையோர டுரியன் பழச்சாலைக்கு அழைத்துச் சென்றார். பார்வைக்கு பலாப்பழத்தின் சிறு வடிவம். உள்ளே சுளை அமைப்பே பலாப்பழ வரிசைதான். நம் மக்கள் சிலருக்கு பலாப்பழ மணமே தலைவலியைத் தருமாம். டுரியன் பழ வாசனை தலைச்சுற்று, மயக்கம், வாந்திகூட ஏற்படுத்தி விடலாம். டுரியன் பழ வாசனையைக் கூர்மையான, கருத்த, அடர்ந்த வாசனை எனப் பகர்ந்தாலும் அதனை வகைப்படுத்தியது ஆகாது.

பழச்சாலையில் பழம் தேர்ந்து வெட்டி எடுத்து சுளை பிரித்துப் பரிமாறினார்கள். நாங்கள் அறுவரும் உதவியாளருமாக இரண்டு டுரியன் பழத்துச் சுளைகளைத் தின்றோம். எவருக்கும் கைலி தூக்கவில்லை, காற்சட்டை அணிந்திருந்ததால் இருக்கலாம்.

ஷா நவாசின் நூலின் பல பகுதிகளில் பேசப்பட்டுள்ள பல உணவுத் தினுசுகளை எந்தக் காலத்திலும் நான் தின்னப் போவதில்லை. ஏன் பார்க்கக்கூட போவதில்லை. பிறகல்லவா பரிந்துரைப்பது! என்றாலும் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி.

பாப்புவா நியூகினியில் மரத்தடியில் ஊரும் எறும்புகள், தாய்லாந்தின் Rice Bugs, ஆஸ்திரேலியாவின் பிளம் பழத்தின் புழுக்கள், சீனாவின் Boby Mice Wine, யப்பானில் கணவாய் மீனைச் சமைக்காது கரைசலில் ஊறவைத்துக் குடிப்பது, மெக்சிகோவில் பச்சை மீனை எலுமிச்சைச் சாற்றில் ஊற வைத்துச் சாப்பிடுவது எனப் பற்பல தகவல்கள் உண்டு நூலில். பூச்சியியலின்படி 1462 வகைப் புழுக்கள் உண்ணத்தகுந்தவை, Edible என்கிறார்.

இந்து மரபையும் வேத தர்மத்தையும் மநு சாத்திரத்தையும் இன்னுயிர் ஈந்தும் காத்திட, பரப்பிட, வளர்த்திட முயலும் இந்தியரும் இன்று விரும்பி உண்ணும் பிரியாணி, பஸ்தா பற்றியும் உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பற்றியும் அநேகத் தகவல்கள். ஒரு உணவுக் களஞ்சியமாகவே கொள்ளலாம்.

இப்போது ஷா நவாசின் பத்தியொன்றை அப்படியே மேற்கோள் காட்டுகிறேன். முழு ஒட்டகத்தின் வயிற்றைச் சுத்தமாகக் காலிசெய்து, அதனுள் ஒரு ஆடு, அந்த ஆட்டின் வயிற்றில் சுமார் இருபது கோழிகள், அந்தக் கோழிகளின் வயிற்றில் முட்டை, அரிசி உள்ளே வைத்து அவித்து சமைக்கும் கிளாசிகல் உணவுதான் Stuffed Camel” என்று எழுதுகிறார். நமக்கு Stuffed Paratha தான் பழக்கம்.

ஒட்டகக்கறி நான் தின்றதில்லை. ஆனால் தின்ற அநுபவம் கிடைத்தது கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கசாப்பின் இதிகாசம்’ என்ற சிறுகதை வாசித்தபோது. மலையாளத்தில் ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின்ற இதிகாசம்’ வேறு சமாச்சாரம்.

‘அயல்பசி’ ஆசிரியரின் வாசிப்புப் பரப்பு நம்மை மலைக்க வைக்கிறது. இந்த இடத்தில் ஒரு தேற்று ஏகாரம் போட்டு நம்மையே மலைக்க வைக்கிறது என்று ஒருபோதும் எழுதமாட்டேன். அது எலி புழுத்துவது போல் ஆகிவிடும். சீனாவில் இருந்துதான் கரும்புச் சர்க்கரை வந்தது எனவும், சரித்திர காலத்துக்கு முன்பாகவே சீனாவிலும் இந்தியாவிலும் கரும்புப் பயிர் இருந்தது என்றும் சொல்கிறார். ரிக் வேதத்தில் கரும்பு பற்றிய செய்தி இருக்கிறது என்று A.T. Acharya எனும் வரலாற்று ஆசிரியரை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். நாலடியார் பாடலில் கரும்புத் தோட்டம் பற்றிய குறிப்பு உண்டு என்கிறார். அங்ஙன விட்டாப் பற்றுல்லல்லோ!’ என்பார் மலையாளத்தில். ஷா நவாசை அப்படி விட்டுவிடலாகாது என்று கருதி நாலடியாரைத் தேடிப்போனேன். அந்தச் செய்தி ஷா நவாஸ் எமக்கறித்த திறவுகோல்.

நாலடியார், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி

இடித்துநீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்

என்பது பாடலின் முதலிரு வரிகள். தருமர் அல்லது பதுமனார் உரைகளை எளிமைப்படுத்திச் சொல்லலாம். கரும்பினைத் தறித்து, கணுக்கள் தகர்ந்து போகும்படியாக நெரித்து இடித்து ஆலையில் வைத்துக் கருப்பஞ்சாற்றினை எடுத்தாலும் அதன் சுவை இனிப்பானதாகவே இருக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.

இன்னொரு நாலடியார் பாடல்வரிகள்,

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்தில் கரும்பு தின்றற்றே

என்பன. கற்றுணர்ந்த அறிவுடையாருடன் கொண்ட உறவு எப்போதும் நுனியில் இருந்து கரும்பு தின்னத் தொடங்குவதைப் போன்றது என்று பொருள் சொல்லலாம்.

ஆனால் பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்புத் தொழில் பார்க்கும் தமிழறிஞர்கள் இராசேந்திரசோழன் காலத்துக்குப் பிறகே இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்குள் கரும்பு வந்தது என்று சாதிக்கிறார்கள்.

உலக நாடுகளின் உணவு பேசும் நவாஸ் கூப்பதனியும், எரிக்கலான் கொழுக்கட்டையும், பால் கொழுக்கட்டையும், சீனிக்கொழுக்கட்டையும் பேசுகிறார். உடுப்பி கிருஷ்ணாராவ் பற்றியும் தகவுரைக்கிறார். உலகின் மூன்று வகையான நாக்கு உள்ளவர்கள் பற்றி விவரிக்கிறார். அவை உண்மை பேசும் நாக்கு, கருநாக்கு, சழக்கு நாக்கு என்பவை அல்ல. சுவை பேதமுடைய நாக்குகள். அதிவேக நாக்கு, தடி நாக்கு, காய்ச்சல் கண்டவன் நாக்கு போன்ற நிரந்தரத்துவம் கொண்ட நாக்கு என்கிறார்.

வெற்றி பெற்ற கிளாடியேட்டர்களிடம் ரோமானியர்கள் ஒரு சொட்டு ரத்தம் கோரிப்பெறும் செய்தி பேசுகிறார். கெட்ச்சப்பின் வகைகள், உபயோகங்கள் பேசப்படுகிறது.

நூலில் தலைக்கறி தக்கடி என்றொரு நுட்பமான அத்தியாயம். நான் பம்பாயில் தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்த 1973-1980 காலகட்டத்தில் என்னுடன் பணிபுரிந்த கூர்க்கா தன்ராம்சிங் பற்றிய கதையொன்று ‘தன்ராம்சிங்’ எனும் தலைப்பிலேயே எழுதினேன். 2007ம் ஆண்டு ஆனந்த விகடன் வெளியிட்டது. அதில் திபேத்திய கூர்க்காக்கள் மலிவான விலையில் ஆட்டுக் காதுகள் வாங்கி, மயிர் பொசுக்கி, நறுக்கிச் சமைப்பது பற்றி எழுதியிருப்பேன். ஷா நவாஸ், சதையுமில்லாமல் எலும்புமில்லாமல் காது மடல்களை நச் நச்சென்று கடித்துத் தின்னும் சுகம் இருக்கிறதே அதைச் சாப்பிட்டவர்களுக்கே தெரியும்” என்கிறார்.

சிங்கப்பூர் தலைக்கறி பற்றி அருமையான பதிவொன்றும் உண்டு. சிங்கப்பூர் கிளாசிகல் உணவுகளில் முதலிடத்தில் மீன் தலைக்கறி உள்ளது’ என்கிறார். நான் முதன்முறை சென்றிருந்தபோது, முத்து கறீஸ்’ எனும் புகழ்பெற்ற உணவகத்தில் மீன் தலைக்கறியுடன் சோறு தின்றது நினைவில் உண்டு. அன்றிருந்து சிங்கப்பூர் மீன் தலைக்கறிக்கு அடியேம் யாம். சில ஆண்டுகள் முன்பு புவனேஷ்வர், கட்டக், பூரி என ஒருவார காலம் ஒடிசா மாநிலத்தில் அலைந்தபோது சொன்னார்கள் – ஒரிய மக்களின் திருமணம் நள்ளிரவில் நடக்கும் என்றும் சம்பந்திகளுக்கு மீன் தலைக்கறி பரிமாறுவது ஒரு கட்டாயம் என்றும்.

உருளைக்கிழங்கு உத்திகள் என்றொரு அத்தியாயம். இன்று இந்தியர் 130 கோடிப்பேரில் உருளைக்கிழங்கு உண்ணாதவர் இல்லை. ஒரே செடியில் 165 கிலோ உருளைக்கிழங்கு விளைவித்த சாதனையில் தொடங்குகிறது அந்தக் கட்டுரை. Macdonald பற்றி விரிவாகப் பேசுகிறது.

இன்னதுதான் என்றில்லை. சமையல் குறித்த எதைப்பற்றியும் பேசுகிறார் ஷா நவாஸ். மிகவும் பிரபலமான வினிகர் திராட்சையில் இருந்துதான் செய்யப்படுகிறது. ஆப்பிளில் இருந்து பெறப்படுவது சிடார் வினிகர். ஓட்ஸ் அல்லது பார்லியில் இருந்து பெறப்படுவது மால்ட் வினிகர். அரிசியில் இருந்து பெறப்படுவது Rice Vinigar என்று வகைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு வினிகரும் குறிப்பிட்ட வகை சமையலுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார். நாமோ கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் யாவற்றுக்குமான சமூக நீதி செய்து பாமாயிலுக்கு நகர்ந்து விட்டோம். சூர்யகாந்தி எண்ணெய், அரிசித்தவிட்டு எண்ணெய், மாட்டுக் கொழுப்பு – பன்றிக் கொழுப்பு – நெய் – டால்டா யாவுமே சர்வஜன மகத்துவங்கள் ஆகிப்போயின.

நூலின் இறுதியில் அற்புதமாக இரு சொற்றொடர் எழுதுகிறார் “நான் சமையல் பிஸ்தாவாக நினைக்கும் ஒருவரிடம் எது நமக்கு ஆரோக்கியமான உணவு என்று கேட்டேன். நீங்கள் சிறு பிராயத்தில் இருந்து பிரியமாகச் சாப்பிட்டு வரும் உணவுதான் ஆரோக்கியமானது என்றார்” என்று.

சிவகாசி நாடார் சமூகத்துத் திருமண விருந்தில் இரவு பால்சோறு விசேடமாகப் பரிமாறுவார்கள். அது சிறப்பான உணவாகக் கொள்ளப்படுகிறது என்பதும் அறிவேன். எனினும் உளுந்தங்கஞ்சியும், சாளைப்புளிமுளமும், புட்டு பயிறு பப்படமும், கூட்டாஞ்சோறும் என்றும் நமக்குப் போதும் என்று ஆறுதல் கொள்கிறது மனது.

3 comments

  1. ஷாநவாஸ் அவர்கள் கட்டுரையை நாஞ்சிலார் விவரித்த விதம் அரிய தகவல்கள் அடங்கிய வாசிக்க தூண்டும் வரிகள். அருமை.

  2. உண்டிமுதற்றே உலகு என்னும் கட்டுரைத் தலைப்பே அயல்பசி நூலுக்கு சிறப்பு சுவையை உணர்த்துகிறது. கட்டுரை மொழியும் நூல் முடிப்புவெகு ருசியானது.

  3. உணவு நூல் பற்றி இப்படிச் சுவாரசியமாக எழுத நாஞ்சிலை விட்டால் யாரும் இல்லை.. இடை இடையே நற்றிணை, நாலடியார், புறநானூறு இலக்கியப் பாடல் அடிகள் படிக்கக் களைப்பின்றி அழைத்துப் போகின்றன. மலையாளப் பழமொழிகள் அறியத்தக்கன. பாராட்டுகள்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.