​புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா

நரோபா

ஜீவா படைப்புலகம் வெளியிட்டுள்ள விஷால் ராஜாவின் முதல் சிறுகதை தொகுப்பு ‘எனும்போது உனக்கு நன்றி’ ஒன்பது கதைகளை கொண்டது. தொன்னூறுகளில் பிறந்து தமிழில் புனைவுகள் எழுதும் ஒரு தலைமுறை உருவாகியுள்ளது உவகையும் சற்றே பொறாமையும் அளிக்கிறது. தாராளமயமாக்கலுக்குப் பின்பான தலைமுறை எத்தகைய சிடுக்குகளை புனைவுகளில் கையாள்கிறது? தொழில்நுட்பம் புனைவில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னவாக இருக்கும்?  கிருஷ்ணமூர்த்தி, லூசிபர் ஜெ வயலட், விஷால் ராஜா, நாகபிரகாஷ், பாரதி என ஒரு வரிசை உருவாகி வருகிறது. விஷால் ராஜாவின் சிறுகதைகள் இறுக்கமான, செறிவான மொழியில் எழுதப்பட்டுள்ளன. கதைசொல்லி அல்லது மையப்பாத்திரம் உள்ளொடுங்கியவனாக, அதிகமும் பிறருடன் உரையாடாமல் தனக்குள் உரக்கச் சிந்திக்கும்/ விவாதிக்கும் தன்மையுடையவனாக இருக்கிறான். வேகத்தைக் கண்டு மிரட்சியடைகிறான். கதைமாந்தர்கள் பொருளின்மையால் மீள மீள சூழப்படுகிறார்கள். அச்சமும் தயக்கமும் கூச்சமும் நுண்ணுணர்வும் கொண்டவர்களால் நிரம்பியது அவருடைய கதையுலகம். பெரும் பிரியத்தை உள்ளத்தில் ரகசியமாக சுமந்தலைகிறார்கள். அவ்வகையில் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். ஒருவகையில் ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்து, நவீன தமிழிலக்கிய மையப் பாத்திரங்கள் உள்ளொடுங்கியவர்களின் குரலாகவே இருந்திருக்கிறது. சமூகத்தில் ஓங்கி ஒலிக்காத குரல்களே இலக்கியத்தில் ஆளுகையுடன் திகழ்கின்றன. அவர்கள் அலைக்கழிபவர்கள், கையறு நிலையில் முடிவெடுக்கத் திணறுபவர்கள், பொதுப் போக்கில் ஒழுக முடியாதவர்கள், பல வகைகளில் தாஸ்தாவெஸ்கி நாயகர்களை ஒத்தவர்கள்.

தொகுப்பின் முதல் கதை ‘கசப்பேறிய கோப்பைகள்’. நாகராஜ் எனும் கடைநிலை ஊழியன் மற்றும் கல்யாணி எனும் திருநங்கையை பாத்திரங்களாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. முதல் வாசிப்பில் எனக்கு அசோகமித்திரனின் ‘காந்தி’யை நினைவுறுத்தியது. ஏறத்தாழ அதே பேசுபொருள்தான்- காரணமற்ற வெறுப்பு, கசப்பு நம்முள் எப்படியோ தங்கி விடுகிறது. அன்பைப் போல் வெறுப்பும் தொற்றி பரவக்கூடியது. ஒரு கசப்பின் சுழற்சியை சொல்லிச் செல்கிறது கதை. நாகராஜிற்கு இருக்கும் திடத்தன்மை கல்யாணிக்கு இல்லை என வாசிக்கும்போது தோன்றியது. கல்யாணி அனுதாப உணர்விலிருந்து வார்க்கப்பட்டிருக்கிறாரோ எனும் ஐயம் எழுந்தது. கல்யாணி எனும் பாத்திரத்தின் வலுவின்மையின் காரணமாக இக்கதை எனக்கு நிறைவளிக்கவில்லை.

தொகுப்பில் உள்ள ‘நீர்க்கோடுகள்’ இதே போன்ற நிறைவின்மையை அளித்தது. அறக்குழப்பங்களும், ஊசலாட்டங்களும் கொண்ட ஆசிரியர் ஹென்றியின் பாத்திரம் வலுவாக உருவாகி இருந்தாலும்கூட, ‘மகள் வயதை ஒத்தவர் மீதான ஈர்ப்பு’ எனும் பழக்கப்பட்ட கதைக்களம் என்பதால் ஆர்வம் குன்றியது. ‘ஞாபகங்களின் கல்லறை’ லயம் கூடிய கவிதைக்கு அருகிலான நடையில் எழுத பட்டிருக்கிறது. ஆனால் கதையாகாத உதிரி துண்டுகளாகவே எஞ்சி நிற்கிறது.

கதாபாத்திரங்களின் பிரதேசம்’ ஜெயமோகன் தளத்தில் வெளியானபோதே வாசித்த நினைவிருக்கிறது. கற்பனையின் வலுவை நம்பி எழுதப்பட்ட கதை. எடுத்துக்கொண்ட கருவிற்கு நியாயம் செய்திருக்கிறது. வெவ்வேறு கதைகூறல் முறைகளை முயன்றிருக்கிறார் என்ற வகையில் சுவராசியமான வாசிப்பை அளிக்கிறது. ‘எனும் போது உனக்கு நன்றி’ வெவ்வேறு காதல் கதைகளின் ஊடுபாவு. ஒரு திரைக்கதைக்கான எல்லா வடிவ சாத்தியங்களும் கொண்டது. கதையே ஒரு காமிரா கோணத்தில் திரையில் காண்பிப்பது போல் வெட்டி வெட்டிச் சொல்லப்படுகிறது. நவீன கதைசொல்லிகள் பலரும் இந்த உத்தியைக் கையாள்கிறார்கள். தவறென்றோ இழிவேன்றோ அல்ல, எனினும் காட்சி ஊடகம் புனைவெழுத்தில் செலுத்தும் தாக்கம் என இதைக் கூறலாம். இக்கதை ஒரு மொட்டை மாடி குடியரட்டையில் கதைமாந்தர்களின் வெவ்வேறு வகையான காதலின் நினைவுகளைச் சொல்கிறது. ஆச்சரியமாக அவர்களின் காதல் கதைகளில் வன்முறை எட்டிப் பார்க்கவில்லை.

உடல்’ இத்தொகுதியில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி நவீன தமிழிலக்கியம் மரணத்தை பற்றியும், அதன் அப்பட்டமான அர்த்தமின்மை பற்றியும் மீள மீள பேசுகிறது. வேறெவரையும் காட்டிலும் எழுத்தாளன் மரணத்தைப் பற்றி அதிகமும் எண்ணுகிறான், அஞ்சுகிறான். ‘கதாபாத்திரங்களின் பிரதேசம்’ மரணத்தின் வன்மத்தை நேரடியாக சித்தரிக்கிறது. ‘உடல்’ பரகாய பிரவேசம் போல் ஒன்று நிகழ்ந்து கதைசொல்லி அவன் விரும்பும், அவனை நேசிக்காத பெண்ணுடைய காதலனின் உடலுள் எழுந்துவிடுகிறான். நடைமுறை சாத்தியமற்ற தளத்தில் வைத்து ஒரு மெய்யியல் கேள்வியை விசாரணை செய்கிறார் விஷால். எது நான்? உடலா உயிரா? கதை அங்கிருந்து இந்தச் சலுகையை அனுபவிக்கலாமா எனும் அறக் கேள்விக்கு செல்கிறது. இக்கேள்விகளுக்கு எந்த தீர்மானமான விடையையும் அளிக்காமல், அல்லது எதிர்கொள்ள இயலாமல் தப்பித்துச் செல்கிறான் கதைசொல்லி. எளிய தீர்வுகளை நோக்கிச் செல்லாததே இக்கதைக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. விஷால் ராஜாவின் கதைகளில் ஒரு பொதுப்போக்காக இதைக் குறிப்பிடலாம். எனினும் இக்கேள்விகள் எரியும் தீவிரத்துடன், தத்தளிப்புடன் கதையில் பதிவாகிறது.

தொகுப்பின் இறுதி கதையான ‘விலகி செல்லும் தூரம்’ கொஞ்சம் அலைவுற்றாலும்கூட ஒரு நல்ல கதை. ஜேக்கப்பின் கதையாக துவங்கி ஹர்ஷத்தின் கதையாக சடாரென மாறிவிடுகிறது. நவீன வாழ்வின் சிதைவுகளிலிருந்து மீட்க நமக்கோர் மீட்பர் வரமாட்டாரா எனும் ஏக்கத்தின் வெளிப்பாடாக இக்கதையைச் சொல்லலாம். நெரிசலான சாலையில், குழப்பமான மனதுடன் நிற்கும் ஒருவனிடம், ‘உன்னை எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்கிறேன் வா’ என ஜேக்கப் அவருடைய ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார். இக்கதையின் மீட்பர் பெரிய மாயங்களை நிகழ்த்திக் காட்டவில்லை, ஆனால் நன்கறிந்த பாதைகளில் விளைவுகளின் மீதான அச்சத்தால் இருக்கும் துணிவின்மையை, வினாக்களை எதிர்கொள்ளும் தயக்கத்தை உடைத்து அவற்றை எதிர்கொள்ள உந்திச் செலுத்துகிறார். ஜேக்கப்பும் கூட முகம் வெளிறி தனிமையில் உழலும் சலிப்படைந்த ஒரு மீட்பர்.

இத்தொகுப்பின் சிறந்த கதைகள் என தயங்காமல் ‘குளிர்’, ‘மகிழ்ச்சிக்கான இரத்தப் புரட்சி’ ஆகிய கதைகளைச் சொல்வேன். குளிர்ந்து தோல் மரத்து போகும் அதிகாலையில் கதைசொல்லி தன்னைச் சுற்றி நிகழ்பவனவற்றை கதையாக்குகிறான். குளிர் என்பது இக்கதையில் indifferent coldness எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தின் குரூரத்தை முதன்முறையாக உணர்ந்து அதிர்வதே கதை. வேண்டுமென்றே தெறிக்கும் வன்மம் அல்ல அந்தக் குரூரம், உண்மையில் அது ஒருவிதமான விட்டேத்தி மனோபாவம். ஆங்கிலேயர்கள் காலத்து தாது வருட பஞ்சங்களின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளைப் பற்றிக் கூறும்போது,. பிரித்தானிய அரசு கொன்றொழிக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செய்ததல்லை, ஆனால் முடியரசின் குளிர்ந்த விட்டேதிதி மனோபாவத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் இரண்டாம் உலகப் போரில் மரித்தவர்களை காட்டிலும் அதிகம் என்றொரு செய்தி உண்டு. ஆயுதமேந்த வேண்டும் என்றில்லை, கண்டுகொள்ளாமல் இருந்தாலே குத்திக் கொன்றுவிடலாம். ஈழ படுகொலை சார்ந்த ஒரு குற்ற உணர்வை எனக்கு இக்கதை சட்டென எழுப்பியது. முடிந்தவரை குளிரைப் பொறுத்துப் பார்த்த கதைசொல்லி, இறுதியில் தன்னைக் குளிரிலிருந்து பாதுகாக்க பையிலிருக்கும் சால்வையைத் துழாவுவதோடு கதை நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக சூழலே குளிர்ந்திருக்கும்போது, நாம் என்னதான் செய்துவிட முடியும்? குறைந்த பட்சம் குளிரில் நாம் விறைத்து மரத்து போகாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதையே கதைசொல்லியும் தேர்கிறான். ஏதுமற்றவனின் படைக்கலம் என சால்வை அவனை சூழ்கிறது. இக்கதை துல்லியமான சூழல் மற்றும் பாத்திரச் சித்தரிப்புகளால் முக்கியத்துவம் பெறுகிறது.

விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள். ‘எனும் போது உனக்கு நன்றி’ விஷ்வா, அதே கதையில் வரும் மோகன் என இப்பாத்திரங்களில் ஒரு தொடர்ச்சி திகழ்கிறது. ஹென்றியும் கூட அவருடைய மாணவி மீரா அவளாக வேறொருவனை காதலிப்பதைப் பற்றி சொன்னவுடன் ஆசுவாசம் அடைகிறார்.

காதல் விஷாலின் பெரும்பாலான கதைகளின் பேசுபொருளாக வந்திருக்கிறது. போர்ன் வெகு சகஜமாக புழங்கும் ஒரு தலைமுறையிலிருந்து எழுத வந்ததாலும், நவீன தொழில்நுட்பம் உணர்வு ரீதியான பிளவை நிகழ்த்துவதாக இருப்பதாலும் காமத்தை எழுதுதல் பின்னுக்குச் சென்று மீண்டும் காதலை எழுதுதலை இத்தலைமுறை கைக்கொள்ளும் என தோன்றுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்து மனிதர்கள் அன்னியமாதல், கேளிக்கைகளுக்கு அடியில் உள்ள வெறுமை, அதன் உள்ளுறையும் வன்முறை, பரபரப்பான துய்தல் வழியாக மகிழ்ச்சியை அடைய முனைவது என நவீன வாழ்வின் எல்லா சிக்கல்களையும் பேசும் இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’. செய்தி மொழி, உரையாடல், மனவோட்ட விவரணை என மொழி பல்வேறு வகையில் கற்பனையின் பாய்ச்சலுக்கு ஈடாக பிசிறின்றி வெளிப்படுகிறது. மென்பொருள் துறை பணிச் சூழலை பின்புலமாக கொண்ட இக்கதை பணிச்சூழல் சார்ந்து அன்றாட வாழ்வின் வெறுமை, அழுத்தம், அன்பிற்கான ஏக்கம் என பலவற்றை தொட்டு செல்கிறது. ஒரு தொழில்நுட்ப பூங்காவின் ஊழியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைப் படையாக மாற்றப்படுகிறார்கள். துண்டு நிகழ்வுகளாக ஊழியர்களைப் பற்றிய கதையும், நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. அழுத்தங்கள் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் சென்று முடிகிறது. இக்கதையில் வரும் எதிர்பாத்திரம் ‘மிஸ்டர் நோ ஐடி’ என்று அழைக்கப்படுகிறார். உலமயமாக்கலுக்குப் பின்பான வாழ்வில் அடையாள சிக்கல் வலுவாக காலூன்றி இருக்கிறது.

விலகி செல்லும் தூர‘மும், ‘மகிழ்ச்சிக்கான ரத்தப் புரட்சி‘யும் அதன் எதிரெதிர் அக நிலைகள் காரணமாக ஒன்றையொன்று நிரப்பி கொள்கின்றன. அப்படி என்ன பொருளின்மையைக் கண்டுவிட்டாய், என நம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கிறது. விஷாலின் கதைகள் பொதுவாக இவ்விரு புள்ளிகளுக்கிடையிலான ஊசலாட்டம் என கூறலாம். ‘விலகி செல்லும் தூரம்’ ஏறத்தாழ ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யின் அதே மனநிலையை பிரதிபலிக்கிறது ஆனால் பிந்தைய கதை சென்று சேரும் வெறுமையை அடையவில்லை. இந்த அழுத்தங்கள், அலைக்கழிவுகள் ஒன்றும் அத்தனை முக்கியமல்ல எனும் நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது. இத்தொகுதியின் மனவோட்டத்திற்கு ஒரு சமரச புள்ளியென ஜேக்கப் மற்றும் ஜானின் கதாபாத்திரங்களை கூறலாம். ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யில் வரும் நோ ஐடி ஒரு மீட்பரைப் போலத்தான் தோன்றுகிறான், சிக்கல்களுக்கான காரணங்களை வெளியில் அடையாளப்படுத்துகிறான், வெறுப்பை விதைக்கிறான், அதனால் மொத்தத்தையும் அழிவில் அமிழ்த்துகிறான். ஜேக்கப் சின்ன சின்ன நேசங்களை வெளிப்படுத்துகிறான், அவனிடம் பெரிய திட்டங்கள் கனவுகள் ஏதுமில்லை, சிக்கல்களின் ஊதிப் பெருக்கபட்ட பிம்பங்களை உடைக்கிறான். தால்ஸ்தாயின் ‘Where Love is God is’ கதையை மனம் நினைவு கூர்ந்தது.

இத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான குரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன்.

4 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.