பறவை மனிதர்கள்

ஏ. நஸ்புள்ளாஹ்

 

அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில், றஹீம் ஜிப்ரான் ஒரு உள்நாட்டு கடித உறையை கண்டார். அது அவர் தனது வீட்டுக்கு நுழையும் பாதை. பல மணி நேரம் உழைத்துக் களைத்த சோம்பல் அவரது வேகத்தை குறைத்திருந்தது, அவர் அணிந்திருந்த ஆடைகளில் தூசி மற்றும் துர்நாற்றம் வீசுவது போல் இருந்தது. ஆனால் புலன் விசாரணை செய்து பார்த்தால் அந்த துர்நாற்றம் உடலில் படரும் வியர்வையிலிருந்து தவிர்க்க முடியாத மனிதன் கடந்து போகும் ஒன்றாக அது இருக்கும். தரையில் கிடந்த உள்நாட்டு கடித உறை அவரை ஒரு கணம் நிறுத்தியது. சுற்றிலும் பார்த்தார். அருகிலேயே கைவிடப்பட்ட குதிரை வண்டி, ஒரு மூடிய டீக் கடை, சாலையின் ஒரு ஓரத்தில் கல் சில்லுகளின் குவியல் மற்றும் முத்து சிப்பி குவியல் மலை போல் சரிந்து கிடந்தது. அருகிலுள்ள பூங்காவிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் கலகலப்பான சிரிப்பொலி தவிர, பாதை வெறிச்சோடியது.

றஹீம் ஜிப்ரான், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்திருந்த உறையை எடுத்தார். இந்த நீலக் காகிதத்தால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று தோன்றியது. ஆனாலும், சட்டைப் பைக்குள் போட்டார்.

அந்தியின் குறிப்பு பூமியின் உடலிலிருந்து அந்த நேரத்தில் இருள் படிப்படியாக எங்கும் பரவிக் கொண்டிருந்தது. சோர்வான உடலுடன், றஹீம் ஜிப்ரான் தனது வீட்டிற்கு வந்தார். தன் சட்டைப் பைக்குள் சாவியைத் தேடும்போது அவர் விரல்கள் கடித உறையை மேய்ந்தன. கதவைத் திறந்தவுடன் அறையின் வெறுமை அவரை வரவேற்றது. லாந்தரை ஆன் செய்தார். றஹீம் ஜிப்ரானின் சோர்வுற்ற கண்கள் சுவர்களில் இருந்த சிலந்தி வலைகளையும், மூலையில் இருந்த வெற்று சிகரெட் பாக்கெட்டுகளையும், வாசலில் குவிந்து கிடக்கும் பேப்பர்காரன் வழங்கிய செய்தித்தாள்களையும் மேசையிலும் படுக்கையிலும் சிதறிக் கிடந்த அலுவலகத் தாள்களையும் பார்த்தன. இன்னும் சுவரிலும் துணிக்குதிரையிலும் தொங்கிக் கொண்டிருந்த சில சட்டைகளையும் பேன்ட்களையும் பரிதாபமாகத் பார்த்தன.

சட்டையை கழற்றிய பின், றஹீம் ஜிப்ரான் அதை துணிக்குதிரையை நோக்கி எறிவதற்கு முன் கையை நிறுத்தினார். பாக்கெட்டிற்குள் இருந்த இன்லேண்ட் லெட்டர் கார்டு, தன் இருப்பை அறிவித்துக் கொண்டிருந்தது. அவர் அதை எடுத்து, அதை விரித்து, மேசையில் வீசினார். தேநீர் அருந்திவிட்டு, கழுவிய பின், மெதுவாக படுக்கையில் சாய்ந்தார். மேற்கூரையில் இருந்த பெயிண்ட் உதிர்ந்து கொண்டிருந்தது. இந்த நாட்களில், பலத்த மழை மற்றும் பலத்த காற்றின் ஒவ்வொரு அசைவிற்கும் பிறகு நீர்த்துளிகள் ஊடுருவுவதை அவர் உணர முடிந்தது. றஹீம் ஜிப்ரான் தனது வீட்டு உரிமையாளரிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேச யோசித்தவர் அதனை ஒரு பிரச்சனையாக முக்கியத்துவம் கொடுத்தார். மேலும் பல இடங்களில் தரை புதிய வெடிப்புகள் ஏற்பட்திருந்தன. வீடு எல்லா நேரங்களிலும் ஈரமாகவும் குளிராகவும் இருந்தது.

இடிந்த நிலையில் ஒரு வீடு. அதன் உள்ளே றஹிம் ஜிப்ரான் என்ற ஒரு மனிதன் மகிழ்ச்சியை தொலைத்துக் கொண்டிருந்தான்.

அவரது உடலும் மனமும் பலம் குறையத் தொடங்கியது. அன்றைய செய்தித்தாள் அவர் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தது. அவர் செய்ய வேண்டியதெல்லாம், கையை நீட்டுவதுதான், ஆனால் உலகச் செய்திகள் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று தோன்றியது. அவர் படுக்கையில் இருந்தால், தூக்கம் அவரை விரைவில் அழைத்துச் செல்லும் என்று றஹீம் ஜிப்ரான் யோசித்தார், ஆனால் அவருக்கு இனி கனவுகள் வராது. எந்த விதமான கனவுகளும் இல்லை. வெளித்தோற்றத்தில் ஏதோ வாழ்ந்து கொணடிருக்கிறார். உள்ளகச் சூழலில் அவர் தோற்றுப்போனதாக அவருக்கு நிகழும் சம்பவங்கள் விபரிப்பதாக உணர்கிறார்.

தனிமை மற்றும் தனிமையின் பயங்கரமான உணர்வு அவரது தேய்ந்து போன உடலில் பாய்வதற்கு முன், றஹீம் ஜிப்ரான் குதித்து எழுந்து அமர்ந்தார். இறுதியாக அவருடன் உறவின் நம்பிக்கைகளாக இருக்கின்ற தன் பறவைகளுக்கு வீட்டில் மீதமாக இருந்த இட்லி, தோசை, சாதம் ஆகியவைகளை பரிமாறினார். மயிலுக்கு உருண்டை பொட்டு வறுத்த நிலக்கடலையை வைத்தார். அணில்கள், கிளிகள் ஆகியவற்றுக்கு தேங்காய் பருப்பு தேங்காய் சில் ஆகியனவற்றை கொடுத்தார்.

சரி, இப்போது. அவரது மேசையில் ஒரு உள்நாட்டு கடித உறை இருந்தது. வானம் போலவே தெளிவான நீலம் அது.

நாற்காலியை இழுத்து மேசை லாந்தரை ஆன் செய்தார். தனது பழைய அலுவலக பேனாவை எடுத்து, கடித உறையை அருகில் எடுத்தார்.

றஹீம் ஜிப்ரான் ஒரு கடிதம் எழுத விரும்பினார். பல ஆண்டுகளாக, அவர் தனிப்பட்ட முறையில் யாருக்கும் கடிதம் எழுதவில்லை. அவருக்கு எழுத வேண்டும் என்று யாரும் சொன்னதும் இல்லை. தனது மூன்று சகோதரிகளுக்கும் பொருத்தமான பொருத்தங்களைக் கண்டுபிடித்து, தனது இரண்டு இளைய சகோதரர்கள் நன்கு நிலைநிறுத்தப்பட்டதை உறுதிசெய்து, குடும்பத்தின் மூத்த மகனாக தனது கடமைகளை ஆற்றி, நோய்வாய்ப்பட்ட அவர்களின் தாயை இறுதிவரை கவனித்துக்கொண்ட பிறகு, றஹீம் ஜிப்ரான், கடைசியாக, தன்னைப் பார்க்கத் திரும்பினார், அவருடைய சொந்த உடலின் வீழ்ச்சியைக் கவனிக்க மட்டுமே. ஒரு தலைசிறந்த கலைஞரைப் போல, காலம் அவரது தலைமுடியில் வெள்ளிக் கோடுகளையும், அவரது கண்களின் ஓரங்களில் சிலந்தி வலைகள் போன்ற மெல்லிய கோடுகளையும் வரைந்திருந்தது. அவரது முகம் உடல்நிலை உருமாற்றமடைந்து அவரை விட்டும் விலகிச் செல்வது போல, அவரது அன்புக்குரியவர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். சரி, இதற்குப் பிறகு அவரிடம் கொடுக்கவும் எதுவும் இல்லை. இனி அவரது இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள யாரும் விரும்பவில்லை. கிண்ணியா, ஜாவா வீதி, எண் 42ல் உள்ள வாடகை வீட்டில் எங்காவது ஒரு நலம் விரும்பி அமர்ந்திருப்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை.

றஹீம் ஜிப்ரான் அவரது அனுபவத்தில் நினைத்திருக்கலாம், அவருடைய செயற்பாடுகள் முன்பு இருந்ததைப் போல ஆர்வமாக இல்லை. ஒருவேளை, அவரது சொந்த இருப்பு பற்றிய சிந்தனை மறைந்து, அவர் ஒரு மந்தமான, முட்டாள்தனமான மனிதராக மாறிக் கொண்டிருந்தார். அதனால்தான் றஹீம் ஜிப்ரான் இந்த நாட்களில் தனக்குள் புதிதாக எதையும் சிந்திக்கவில்லை, அல்லது அவரால் சிந்திக்க முடியவில்லை. நகரில் ஒரு அலுவலகத்தில் பணிவான வேலையில் இருந்தார். அவர் ஒரு எளிய வீட்டில் சாதாரண வாடகை கொடுத்து வசித்து வந்தார். நகரப் பேருந்து வழியாக, அவர் பணிபுரிந்த இடத்திலிருந்து ஐம்பது ரூபா தொலைவில் இருந்தது வீடு, அலுவலகம், கடைத் தெரு வீடு, அதுவே அவரது தினசரி வழக்கமாக இருந்தது. தன் மீதி நாட்களும் அவ்வாறே செல்லும் என்று தன்னைத் தானே நம்பிக் கொண்டார்.

ஆனால் பெரும்பாலான ஆண்களைப் போல அவர் இல்லை. இன்றும் குழப்பமான கடித உறை அவரது மேசையில் இருந்தது. ஒரு ஏகாந்த வானம், நீல காகித துண்டு. இந்த நேரத்தில், அவர் தனது தனிமையை நினைத்து தன்னை அருவருப்பாகப் பார்த்தார். பெரும் வேதனை அவரது கண்ணீரை அதிகப்படுத்தியது. உலகில், எங்கேயாவது, தன்னுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் இருக்க வேணடும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரை யார் நினைக்கிறார். அப்படியான நபர் பற்றி யாருக்குத் தெரியும்.

அது யார்? யாராக இருக்க முடியும்?

றஹீம் ஜிப்ரான் சிந்தனையில் மூழ்கி தன் கன்னத்தையும் தாடியையும் தடவினார். அவர் தனது சொந்த குடும்பத்தை ஆட்சி செய்தவர். அவர்களைப் பொறுத்த வரையில், அவர் இனி தேவைப்படவில்லை. இப்போது தொலைதூர நகரத்தில் வசிக்கும் அவரது இளைய சகோதரர் ஒரு காலத்தில் அவரது முதுகில் சுமக்கிற உறவாய் இருந்தார். றஹீம் ஜிப்ரான் அடிக்கடி தனது இரண்டு குழந்தைகளை நினைவு கூர்ந்தார் – அவரது சிறிய மகள் மற்றும் மருமகன் கோமாளி சிரிப்பூட்டும் அப்பாவி. ஆனாலும், அவர்களைச் சந்திக்கும் தைரியத்தை அவரால் ஒருபோதும் திரட்ட முடியவில்லை. மருமகன் தனது நேரத்தையும் தனது தொழிலையும் மற்றும் குடும்பத்திற்காக அர்ப்பணித்திருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். கடுமையாக உழைத்து, அவர்களுக்கு ஒரு தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப் பெட்டி, மற்ற நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தான். சில அறியப்படாத காரணங்களால், றஹீம் ஜிப்ரான் போல் மருமகனின் இருப்பு இப்போதெல்லாம் அவருக்கு வருத்தமாக இருந்தது. வெளிப்படையாக அவர் சிரித்துக் கொண்டார்.

எழுத நினைத்த கடிதத்தை அவர் தனது மகள் மற்றும் மருமகனுக்கு எழுத முடியும் என்று றஹீம் ஜிப்ரான் நினைத்தார். அவர் தனது பேனாவைப் பிடித்தார், ஆனால் அவர் முதல் வார்த்தையை எழுதுவதற்கு முன்பே நிறுத்தினார். இல்லை, அவர் அவர்களுக்கு எப்படி எழுதுவார்? அவர் வெளியேறும் போது அவர்களது பையனுக்கு ஒரு வயது, பெண்ணுக்கு மூன்று வயது இன்றுவரை ஒரு அழைப்பேனும் தரவில்லை அவர்களுக்கு கடிதத்தை என்ன அர்த்தம் தந்து எழுத முடியும்.

மனதிற்குள் நிறைய நகர்வுகள் நிகழ்ந்தன றஹீம் ஜிப்ரான் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். அவர் தனது கடந்த கால தோழர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் கடிதத்தை அனுப்ப யோசித்தார். மூக்கு நுனியில் வந்து நிற்கின்ற கோபங்களை விட்டுவிட்டு எழுத ஆரம்பித்தார்.

நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்களை நலம் விசாரித்து வெகு நாட்களாகிவிட்டது. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் சரி. இவ்வளவு தூரம் தோழமையின் இடைவெளி ஏன் நீங்கள் என்னைப் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். நான் உங்களை இந்த உலகத்திலுள்ள மிகவும் வசீகரமான தோழர் என பெரிதும் நம்பியிருந்தேன் அந்த உறவை எவ்வளவு தீவிரமாக இழக்கிறேன் என்று உங்களுக்கு தெரியாது நீங்களும் என்னை நமது இளமைக் காலம் போல் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் என உரத்து நம்புகிறேன்.

றஹீம் ஜிப்ரான் எழுதியதை நிறுத்தினார். அவர் தனது மேசை லாந்தரின் நிழலை சரி செய்தார். மேசையின் மேல், வெளிச்சம் பதிநான்காம் பிறை போல் இருந்தது. அறையில் மற்ற எல்லா இடங்களிலும், அது சிதறி மங்கலாக இருந்தது. அந்த மங்கலின் வழியே மூலையில் இருந்த காலி நாற்காலியைப் பார்த்தார். வெறுமையான படுக்கை மற்றும் ஒழுங்கீனமற்ற வீட்டையும் அது நிரப்புகிறது.

மீண்டும் அவர் யாருக்கு எழுத முடியும்? என தேநீரைப் பருகிக்கொண்டே யோசித்தார். கிராமத்தைச் சேர்ந்த அவனது பழைய தோழர்… மீகாயிலுக்கு எழுதலாமா? இல்லை?

ஒருவித அமைதிக்குப் பின் றஹீம் ஜிப்ரான் எழுதினார்.

…நீங்கள் மதியம் ஆற்றுக்குச் செல்லத் தவறவில்லையா? அதன் சலசலப்புகளும் வசீகரமும் எப்படி இருக்கின்றன ஆலமரத்தடியில் மாம்பழங்களை உண்டு நாம் கழித்த மாலைகள்? ஃகனஃபானி ஹனிபா மாஸ்டர்? எனது சிறிய தந்தை அஹ்மத் தாவூத் எப்படி நலமா? உங்களது பெரிய தந்தை யஅகூப் இறைவன் அழைப்பை ஏற்று சென்றுவிட்டார். ஃகனஃபானி ஹனிபா மாஸ்டர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் உங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா? புதிய பாடலின் முதல் சரணத்தைப் இப்போதும் கற்றுக் கொள்ளத் தவறவில்லையா?

தொன்மையான நினைவுகள் றஹீம் ஜிப்ரானின் வாழ்க்கைச் சூழலுக்கு புதிய தாகமாக மீண்டும் திரும்பின அவர் காற்சட்டை வயதை நினைத்தார், தோழர்கள் இப்போது எங்கே இருப்பார்கள்? இந்த நாட்களில் ஹுசைன் ஹைகலுக்கு நாச்சியா தீவில் வேலை இருப்பதாக அவர் கேள்விப்பட்டிருந்தார். ஹசன் ஸய்யாதின் குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தை விட்டு வெளியேறியது. அவர்கள் இப்போது எங்கு வாழ்கிறார்கள் என்று அவருக்குத் தெரியாது. லுத்ஃபீ, அவனும் ஒரு காலத்தில் நல்ல தோழர். அவன் அருகிலுள்ள திருகோணமலை நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணிபுரிந்தார், ஆனால் அது சில ஆண்டுகளுக்கு முன்பு. அது அவனது இல்லாள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்.

போராட்டம் தீவிரமடைந்தது பேனாவைக் கடித்துக் கொண்டே ஜிப்ரான் நிறுத்தினார். சரி, கடைசியாக யோசித்தார். அவரது பழைய கிராமத்தைச் சேர்ந்த பக்கத்து வீட்டு மாமா, தவ்ஃபீக்குல் ஹகீமுக்கு எழுதுவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பல ஆண்டுகளாக மனிதரோடு மனிதராகப் பழகியவர். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக அவரைப் பார்த்தார். அந்த தருணத்தில் ஹகீம் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தார். பல பயங்கரமான வியாதிகள் அவர் உடம்பில் குடியிருந்தன. றஹீம் ஜிப்ரானுக்கு இன்னும் அவரது முகவரி தெரியும். அவர் உடனடியாக அவருக்கு எழுதலாம். ஆம், ஒரு காலத்தில் அந்த மனிதனுக்கு எவ்வளவு உயர்ந்த ஆளுமை இருந்தது. மேலும் அவர் பக்கீர் பைத்களை எழுதி வரிகளை எவ்வளவு சீராகப் பாடினார். சிறு குழந்தைகளுக்கு பக்கீர் பைத்களை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாகவே அவர்களுக்குப் பயிற்சி அளித்து, மற்றும் மாணவர்களுக்கு பள்ளிப் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவியதும் அவர்தான். உண்மையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம விவசாயிகளும் மாடுகள் வளர்க்கும் பண்ணையாளர்களுக்கும் மேச்சள் நிலம் உரிமை குறித்து கடுமையான மோதலில் ஈடுபட்டபோது, வேளாண்மை விவசாயிகளின் சார்பாக பொறுப்பை வழிநடத்தியவர்.

ஜிப்ரான் ஒரு புதிய ஜூசை தயாரித்தார் அது அவரின் உடலுக்கு இழந்த பலத்தை மீண்டும் கொடுத்தது ஆழ்ந்து எழுதத் தொடங்கினார்.

சரி, இப்போது. எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட காலத்திற்கு முன்பு, நான் உங்களை பச்சை மணம் வீசும் வயல்வெளியில் பார்த்தது. இன்று நீங்கள் இருக்கும் இடம் அதுதானா? அதே மக்கள் மத்தியில் அவர்களது உரிமைக்காக குரல் தருகின்றீர்களா? என்னைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இந்த நாட்களில் நான் ஒரு மகிழ்ச்சியற்ற உயிரினம். நதியின் சலசலப்புகளை காதலிக்க முடியவில்லை இயற்கையில் அமர்ந்து கண்களை மூடி ஓய்வெடுக்க முடியவில்லை. எனக்கான வானம் இல்லை. திசை இல்லை. மனிதர்கள் நம்பமுடியாத அளவிற்கு தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம், ஆனால் காலப்போக்கில், உண்மையில், நாம் நம்மை மிகவும் குறைவாக நேசிக்கிறோம் என்பதை நான் கண்டுபிடித்தேன். என் சொந்த ஜீவிதம், தடையாக, எனக்கு என் ஜீவிதத்தை சகிக்க முடியாது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்போது ஒரு இளைஞன் அல்ல, எனவே நீங்கள் முன்பு போல் அலைந்து திரிய வேண்டாம் -உங்களது மக்கள் போராட்டம் அந்த குண விசேஷங்கள் இப்போது இருக்கக்கூடாது என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

றஹீம் ஜிப்ரான் திடீரென யோசித்தார். தவ்ஃபீக்குல் ஹகீம் உயிருடன் இருப்பதை அவர் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தார். அவரது வீட்டின் முன் ஒரு தாழ்வான ஸ்டூலில் அவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டார், அவரது தலை முழங்கால்கள் பிரேத ஆரோக்கியத்தை இழந்திருந்தன, அவரது பலவீனமான பிரேதம் வயது மற்றும் நோயால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அவர் இன்னும் உலகத்தில் மூச்சு விடுகிறார் என்று நினைப்பது தைரியமாக இல்லையா? அவர் இல்லையென்றால், இந்த கடிதம் அவரது வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தாதா? கனத்த இதயத்துடன், றஹீம் ஜிப்ரான், தவ்ஃபீக்குல் ஹகீமுக்கு எழுதும் எண்ணத்தைக் கைவிட்டு, தான் எழுதிய கடைசி வார்த்தையை கடந்தார்.

பனி மூட்டம் சன்னல் வழியாக அவரை தும்ஷம் பண்ணியது மொட்டூசி போல் பிரேதத்திற்குள் புகுந்து அவரின் உற்சாகத்தைக் குறைப்பது போன்றிருந்தது. ஆனால் அவர் ஒரு நபருக்கு கடிதம் எழுத வேண்டும் என சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

குழப்பமான மனநிலையுடன் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்ற பிறகும் அவரால் இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்த முடியவில்லை. நிஜ உலகத்தை விட்டுவிட்டு, நினைவுகளின் மங்கலான ஊர்வலத்தில் உலகில் அலைந்து திரிந்த அவர், தெரிந்த முகத்தை வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருந்தார். மனம் கொஞ்சம் தெளிந்தது. சிறிது நேரத்தில் அவருக்கு தூக்கம் வர ஆரம்பித்தது. றஹீம் ஜிப்ரான், கடைசியாக, படுக்கையில் தளர்ந்து போனார்.

மனித அன்பும் மகிழ்ச்சியும் தனக்கும் கடைசிவரை கிடைக்க வேண்டும் என றஹீம் ஜிப்ரானுக்கு தோன்றியது. அவர் மறுநாள் வழக்கம்போல் அவசரமாக அலுவலகத்துக்குப் புறப்பட்டார். நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நிலக்கீழ் சாலைகளில் இருந்து ஏதோ ஒரு நீராவி இப்போது எழுந்து கொண்டிருந்தது. மிகவும் பிஸியாக இருந்தபோதிலும், றஹீம் ஜிப்ரான் தனது அலுவலகத்தின் தகரக் கூரையின் மீது சத்தமாக, வேகமாகப் பெய்யும் மழையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். அது அவரை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கும் இளமைக்கும் அழைத்துச் சென்றது. அந்த நாட்கள், இளமையாகவும், பசுமையாகவும், மழையில் நனைந்தபடியும், றஹீம் ஜிப்ரான் அபாபீல் பறவைகள் போல் வலம் வந்திருக்கிறார்.

இன்று மரியம் மஜீத் றஹீம் ஜிப்ரானின் அறை முழுவதும் வந்து அவரை கடந்து போனாள், மரியம் மஜீதிற்கு எழுதுவது என்று முடிவு செய்தார். இல்லை. இனி அவரது இதயத்தில் எதுவும் அசைந்தது போல் இல்லை. காதலா? ஒரு காலத்தில், அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்ததைப் போன்ற ஒரு பேரன்பின் சிறகடிப்புக்கள் இப்போது எதிர் பார்க்க முடியுமா? தடுமாறித் தடுமாறிக் கைகள் நடுங்கி கையைவிட்டு பேனா கீழே விழுந்தது. சில நாட்களாக உணரப்படாமல் இருந்த இந்த பைத்திய நிலை இன்று ஏன் அவரை துரத்துகிறது. அங்கிருந்த சிறிய மேசையை தள்ளிவிட்டார் ஆனால் என்றோ அத்தகைய உணர்வுகளும் தம் வலிமையை இழந்துவிட்டன. இன்றிரவு, அவர் ஒரு தோழராக அவளுக்கு கடிதம் எழுத விரும்பினார். ஒரு நலம் விரும்பியாக..

…மரியம் உன்னை நினைக்கவில்லை என்பது என்னையே இழப்பது போன்றது. அந்த நாட்களில் நான் என் குழந்தைத்தனமான ஆசைகளை உன் முன் வெளிப்படுத்தினேன், என்னால் உன் வாழ்க்கைக்குள் நிரந்தரமாக குடியிருக்க முடியும் என்பதற்காகவே அன்பைக் கோரினேன். அந்த ஞாபங்களின் பிரதி இப்போதும் சிரிக்க தோன்றுகிறது! ஒரு குறிப்பிட்ட வயதில், நாம் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளுடன் விளையாடுகிறோம். உலகம் நம்மைச் சுற்றியே சுழல்கிறது என்று நினைக்கிறோம். இப்போது நீ நேற்றைகள் அனைத்தையும் மன்னித்திருப்பாய் என்று நம்புகிறேன். இன்று நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம் காதலின் வரலாற்றை பழைய துயரங்களை இன்றைய வாழ்க்கைக்குள் அசை போட்டுவிடாதே அது கொடூரம் நான் காலம் காலமாக இதைதான் விரும்பினேன்…

ஒரு நாள், ஒரு சூடான மதியம், இந்த நீல உள்நாட்டு கடிதம் அவள் கைகளை அடையும். என் முகவரி அவளை ஆச்சரியப்படுத்தும். நடுங்கும் விரல்களால் அதைத் திறப்பாள். அதை படிக்க. அவள் சுற்றிலும் பார்ப்பாள். அவள் அறையில் படுக்கையில், அவள் தூங்கும் குழந்தையைப் பார்ப்பாள்.இப்படி… இப்படி.. இனி எழுத அவர் துணியவில்லை அங்கு அவளும் அவள் கணவரும் மேசையில் அமர்ந்திருக்கும் மகிழ்ச்சியான படங்கள். அவரை தொந்தரவு செய்தன றஹீம் ஜிப்ரானுக்கு திடீரென்று கண்ணீர் வந்தது. இப்போது அவளுக்கு எழுத அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று அவளைக் கரம் பிடிதத்தவன் கேட்பான். இத்தனை ஆண்டுகள், தன் குழந்தைகளின் அரவணைப்பில் மூழ்கி, தன் இல்லற வாழ்வில் மூழ்கி வாழ்ந்தவள். றஹீம் ஜிப்ரானின் வாழ்க்கையில் அமைதியற்ற இருப்பை அவள் எப்படி உணர்வாள்?

அவர் மரியம் மஜீதிற்கு எழுதிய கடிதத்தை முடித்துவிட்டார். றஹீம் ஜிப்ரான் முன்னெப்போதையும் விட குழப்பத்துடன் அவளுக்கு எழுதிய கடிதத்தை நிறுத்தினார். தன் அறையின் நான்கு சுவர்களுக்குள், டேபிள் லாந்தரின் மங்கலான வெளிச்சத்தில் அமர்ந்தார். ஒரு இருண்ட இரவின் அமைதியற்ற அரவணைப்பு போல் இந்த கணம் அவருக்கு இருந்தது.முதுமையும் அவரை தொந்தரவு செய்தது

வாழ்க்கையின் கடைசி எல்லையில் றஹீம் ஜிப்ரான் இருப்பதாக அவரது ஜீவிதம் காட்டியது. பல நாட்களாக, அவர் கடித உறையில் எதுவும் எழுதவில்லை. அவர் என்ன எழுதுவார், யாருக்கு? ஆனாலும், மேசையில் இருந்த நீலக் காகிதம் அவனைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. அவரது இருப்பு யாருக்கும் முக்கியமான விஷயமாக இருக்கவில்லை றஹீம் ஜிப்ரான் பயத்தில் நடுங்கினார். கடித உறையை தூக்கி எறியவோ அல்லது கிழிக்கவோ அவருக்கு தைரியம் இல்லை. தன் இருப்பை எங்காவது யாருக்காவது தெரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

தொலைந்த அன்பானவர்களில் யாரோ ஒருவர் விரைவில் நினைவுக்கு வருவார். உலகின் ஏதோ ஒரு மூலையில் றஹீம் ஜிப்ரானை பார்க்கவும் ஆவலாக உறவாடவும் அவர் நினைத்துக் கொண்டிருப்பார்.

ஐம்பது அறுபது மைல் தூரத்தில் இருக்கும் இஹ்சான் குத்தூஸ் இந்த நாட்களில் எங்கே இருப்பான் கல்லூரியில் தன் ரூம்மேட்டை நினைத்துக் கொண்டார். அப்போது, நூலகம் சென்று மொழிபெயர்ப்பு நாவல்கள் படிப்பதும் சுற்றித் திரிவதும், அதிகமாக மதுபான கடைக்கு செல்வதும் அவனது முழு வேலையாக இருந்தது, ஆனால் சில காரணங்களுக்காக, அவன் எப்போதும் றஹீம் ஜிப்ரானிடம் மென்மையாக நடந்து கொண்டான். மற்றும் ஹமதானி ஹரீரி அவர் யோசித்தார் அவனுக்கும் எழுதலாம். ஜுர்ஜி ஸைதானையும் அவரால் மறக்கவே முடியவில்லை. உலகின் பல மர்மங்களை ஒருவர் முதன்முதலில் அவிழ்க்கும் வாழ்க்கையின் அந்த நெருக்கடியான காலகட்டத்தில், இந்த மனிதர்கள் மட்டுமே அவருக்குத் துணையாக இருந்தனர்.

ஏன் நான் மட்டும் தனியாக மௌத்தாக வேண்டும் துரோகிகள் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே நீர்வை பொன்னயன், எஸ்பொ? விக்டர் ஐயர்? அவர்களிடமும் நலம் விசாரிக்கலாம். றஹீம் ஜிப்ரான் எழுதத் தொடங்கினார்.

ஒருவரையொருவர் வெகு தொலைவிலும் இடைவெளியும் தருவதால் , நாம் நம்மை விட்டு விலகிச் செல்கிறோம். அதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நான் இங்கே எப்படி என் ஜீவிதம் செல்கிறது என்பது பற்றி, கிண்ணியாவில் உள்ள ஏதோ ஒரு வீட்டில், 42வது எண், ஜாவா வீதியில். உலகில் உள்ள எவருடனும் எந்தவிதமான உணர்வுபூர்வமான தொடர்பும் இல்லாமல். யாரும் என்னைக் கேட்காமல். எனது சொந்த இருப்பை நான் விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் அந்திம காலத்தில் ஒன்றுமில்லாதவனாக வாழ்வின் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.

இனி வாழ்க்கையில் என்ன இருக்கிறது என திறந்திருந்த சன்னல் வழியாக இரவின் கடுமையான இருளைப் பார்த்து, றஹீம் ஜிபரான் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தார். அது ஒரு ஸ்ட்ரீம், மனச்சோர்வு அனுபவம் நொறுங்கியது, எல்லாம் எண்ணிலடங்கா முகங்களும் புகைப்படங்களும் அவரது கற்பனையில் வந்து போனது, தெளிவற்ற வாழ்வியல் வடிவங்கள். ஹத்தாத், அல்புஸ்தானி, தாஹா, இவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று அவருக்கு ஏதாவது யோசனை வந்தது. உண்மையிலேயே ஒரு கொந்தளிப்பான நிலை அவர் நெஞ்சில் பேரழிவை உருவாக்கியது. இருப்பினும், அவர் தனது கடிதத்தை முடிக்க முயன்றார்-

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்ததும், அது என் இருப்புக்குச் சாட்சி கொடுப்பதுதான். இது இப்போது பரிதாபமாக இருக்கலாம், இந்த இருப்பு. ஒரு கிழவனின் அடையாளம் அல்லது களைத்துப் போன வாழ்வின் ஓய்வு நிலை போன்றது. அதனால்தான் பதிலுக்காக காத்திருக்கிறேன். உங்களிடமிருந்து ஒரு வார்த்தை, எதிர் பார்க்கின்றேன். இந்த எதிர் பார்ப்பு எனக்குப் பிடிக்கும்.

உங்கள் அன்பான தோழர்,
ஜிப்ரான்

ஆம், அவர் கடைசியாக கடிதத்தை முடித்தார். றஹீம் ஜிப்ரானின் மனம் சுதந்திரமாக உணர்ந்தது.

எதிர்காலத்தை வெறுக்கவுமில்லை நிகழ்காலத்தை நேசிக்கவும் முடியவில்லை என்கிற ஒருவித உணர்வு மனநிலை அவரை இப்போது பின் தொடர்ந்தது.

பிறகு எப்படியும் முகவரியுடன் சேர்த்து எழுத வேண்டும் என அவருக்கு தோன்றியது.

றஹீம் ஜிப்ரான் உள்நாட்டு கடித அட்டையை பசை கொண்டு கவனமாக ஒட்டினார்.

தபாலிடாமல் பல நாட்கள் காத்திருந்தார். அவர் ஒரு முகவரிக்காக காத்திருந்தார், நாட்கள் கடந்தன, ஆனால் கடித உறை முகவரி ஒன்று இல்லாமல் அவரது மேசையில் இருந்தது. அதன் இருப்பு அவரால் தாங்க முடியாத அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது, வெற்று வானம் அவரது அறையின் மீது இறங்குவதைப் போல மனம் தொந்தரவுப் பட்டது.

அவர் தபாலிடுவதற்கு யாரும் இல்லை. யாருடைய முகவரியும் இல்லை.

ஒரு காலைப் பொழுது அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​​றஹீம் ஜிப்ரான் கடித உறையைப் பார்த்துக்கொண்டே நின்றார். தொலைந்து குழப்பமடைந்த அவர், அதை எடுத்து வாசித்தார். உள்ளுக்குள் கொட்டும் நகைச்சுவைகளைத் தவிர வேறெதுவும் இல்லை என்பது போல் அவர் உணர்ந்தார். சட்டென்று தன் பேனாவைப் பிடித்து கடித உறையை அவரை நோக்கி இழுத்தார். நடுங்கும் விரல்களுடனும், பலமான கைகளுடனும், கடைசியாக ஒரு விலாசத்தை காகிதத்தில் எழுதினார்.

சேரல்:
ஜனாப்:றஹீம் ஜிப்ரான்
எண் 42
ஜாவா வீதி,
கிண்ணியா.06

அதே நாளில், அவர் கடித உறையை அருகிலுள்ள குறுக்கு வழியில் சிவப்பு அஞ்சல் பெட்டியில் இறக்கிவிட முடிவெடுத்தார்.

00

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.