பிரைமரி காம்ப்ளக்ஸ் – சுரேஷ் பிரதீப் சிறுகதை

சுரேஷ் பிரதீப்

பிரைமரி காம்ப்ளக்ஸ் என்பதுதான் அர்த்தத்தோடு நான் அறிந்த முதல் ஆங்கில வார்த்தை. தொண்டையில் சதை வளரச் செய்யும் அந்த வியாதி எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்திருந்தது.

உடம்புக்கு முடியவில்லை என சொல்வதற்கு முன்னே கிருஷ்ணமூர்த்தி டாக்டர் கையில் ஊசியை எடுத்துவிடுவார். அவரெதிரே நெளிந்தபடி ஸ்டூலில் உட்கார்ந்திருக்கும் என்னுடைய நொய்மையான தோள்களை பிடித்தபடி எனக்கிருக்கும் கோளாறுகளை அம்மா சொல்லும். அம்மா பேச்சை நிறுத்தும் வரை அவரெதிரே பரப்பி வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறிய கண்ணாடிப் புட்டியில் இருந்தும் மருந்தை ஏற்றுவார். ஈரப் பஞ்சால் ஊசி குத்தப் போகும் என் நோஞ்சான் கையை அவர் தேய்க்கும்போதே எனக்கு வலிக்கத் தொடங்கிவிடும். அதுவரை என்னை போட்டுக் கொடுத்து பெரிய ஊசியாக குத்த வைத்த அம்மாவின் இடுப்பை ஒரு கையால் வளைத்துக் கொள்வேன். அம்மாவும் முதுகைத் தடவிக் கொடுக்கும். அதன்பின் நடப்பது வேறு வகையான கொடுமை.

உடல்நிலை மோசமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மாத்திரைக்கும் ஊசிக்கும் சுகக்கேடு சரியாகாதபோதுதான் கொரடாச்சேரிக்கு செல்லும் வாய்ப்பே கிடைக்கும். ஆனால் சேனம் கட்டப்பட்ட குதிரையென மருத்துவமனைத் தவிர எதுவுமே கண்ணில் பட்டுவிடாமல் அம்மா இழுத்துக் கொண்டு செல்லும். ஒருமுறை பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி வரும் அம்மாவின் தலையைத் திருப்பி, “அம்மா எனக்கு ஜொரம் சரியாயிட்டும்மா. புரோட்டா வாங்கித் தர்றியா” என்றேன். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பாதகத்தி சிரித்துக் கொண்டே, “ஆஸ்பத்திரி நெருங்க நெருங்க அப்டிதாம்புள்ள இருக்கும்” என்றாள். என்னுடைய புரோட்டா கனவு தகர்ந்து போனது.

அன்றும் வழக்கம் போலவே ஒன்றும் வாங்கித் தராமல் அரைபோதையில் வரும் என்னை தரதரவென அம்மா இழுத்துச் சென்றது. வீட்டிற்கு வந்ததும் பயண அனுபவத்தை ஐந்து நிமிடங்கள் கூட அசைபோட விடாமல் கொஞ்சமாக உப்பு போட்டு வடித்த சுடுகஞ்சியை கொடுக்கும் அம்மா. பூண்டு ஊறுகாய்தான் அம்மாவிடம் எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்ச கருணை.

ஆனால் அப்பாவுடன் கிருஷ்ணமூர்த்தி டாக்டரை பார்க்கச் செல்வது ஊசி போடும் ஒரு சம்பவத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவ்வளவு மோசமான அனுபவம் என்று சொல்ல முடியாது. என்ன ஒன்று, ஊசி போட்ட இடத்தை பற்களை கடித்துக் கொண்டு அப்பா தேய்த்துவிடுவது சில நேரங்களில் தோல் கரைந்து உள்ளிருந்து ஒன்றிரண்டு எலும்புகள் எட்டிப்பார்த்து விடுமோ என்ற பயத்தை அளிக்கும். வேண்டியவரை முகத்தை சோர்வுடன் வைத்துக் கொண்டால் அப்பா தின்பதற்கு ஏதேனும் வாங்கித் தருவார்.

அடிக்கடி சளி பிடிக்கிறது என்று என்னை தஞ்சாவூர் அழைத்துச் செல்லப் போவதாக அம்மா சொன்னது பேரானந்தத்தை கொடுத்தது. அதுவரை நான் தஞ்சாவூர் சென்றதில்லை. ஆனால் பெரிய ஊர், ராஜேந்திரன் என்ற பெரிய டாக்டர் என்றெல்லாம் என்னை கலந்து கொள்ளாமலே அவர்கள் பேசிக் கொண்டிருந்தது இயல்பாகவே பெரிய ஊசி என்ற எண்ணத்திற்கு என்னை இட்டுச்சென்றது. ராஜேந்திரன் எப்படி இருப்பார் என கற்பனை செய்யத் தொடங்கினேன். ராஜாத்தி அக்காவின் அப்பா பெயரும் ராஜேந்திரன் தான். ஏணி முறம் கூடை எல்லாம் செய்து கொடுப்பார். கூரிய நுனிகள் கொண்ட பெரிய மீசை வைத்திருப்பார். பார்க்க பயமாக இருக்கும். ஆனால் அப்பாவிடம் மிகுந்த பணிவுடன் பேசுவார். கிட்டத்தட்ட அதே பணிவுடன் என்னிடமும் பேச முற்படுவது சிரிப்பை வரவழைக்கும். அவரிடம் எப்படி ராஜாத்தி அக்கா சில்லுகோட்டிலும் கிட்டிபுள்ளிலும் எப்போதும் தோற்கடிக்கிறாள் என முறையிட முடியும் என பேசாமல் இருந்து விடுவேன். மேலும் அழாமல் அதைச் சொல்லவும் முடியாது. அழுதது தெரிந்தாலே அப்பா அடிப்பார்.

எப்படி யோசித்தும் ராஜேந்திரன் டாக்டருக்கு கூரிய மீசை உடைய முகமே மனதில் எழுந்தது. ஆனால் நான் கண்டது கருந்தாடியும் நுனிகள் தாழ்ந்த மீசையும் உடைய ஒரு சிகப்புச் சட்டை போட்ட வெள்ளை மனிதரை. அவர் அறையும் அவரைப் போலவே பளிச்சென்று இருந்தது. அந்த அறை அரக்கு நிற புடவை கட்டிய அம்மாவை மேலும் அழகியெனக் காண்பித்தது. அப்பா அவ்வறையின் அமைதியில் தன்னை பொருத்திக் கொண்டு அமர்ந்திருந்தார். ஒரு சிறிய புத்தகம் அளவிற்கு இருந்த என்னுடைய மருந்துச்சீட்டு கோப்பினை ஒரு பத்து நிமிடங்கள் நோட்டமிட்டார். வேற்றுகிரகவாசியைப் போலவோ அதீத கருணையுடனோ என்னைப் பார்க்காத ராஜேந்திரன் டாக்டரை எனக்கு மிகப்பிடித்து விட்டது. மேலும் பேசிக் கொண்டிருக்கும்போதே ஊசியில் மருந்தேற்றும் அநாகரிகம் எல்லாம் ராஜேந்திரன் டாக்டரிடம் இல்லை. வெறுங்கையோடு என்னருகே வந்து தொண்டை முழையை அழுத்தினார். லேசாக வலித்தாலும் இதமாக இருந்தது.

“எச்சி முழுங்கும் போது வலிக்குதாடா” என்றார்.

“ம்ஹூம்” என தலையசைத்தேன்.

“என்னடா பொம்பள புள்ள மாதிரி அபிநயம் காட்ற படவா” என கன்னத்தைக் கிள்ளினார். மறுமுறை கிள்ளமாட்டாரா என்றிருந்தது.

இருக்கைக்கு சென்றபின் “ஒன்னும் பயப்பட்ற மாதிரி இல்ல சார். பிரைமரி காம்ப்ளக்ஸ்தான். கொஞ்சம் வீக்கா இருக்கான். தெனம் அவிச்ச முட்ட கொடுங்க. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. சும்மா செக்கப் பண்ணதான். முட்ட குடுக்கிறத மட்டும் நிறுத்திடாதிங்க. உங்க திருப்திக்காக டேப்ளட் எழுதுறம்மா” என்று அம்மாவை பார்த்து சிரித்தபடியே எழுதினார்.

ஊசியே போடாமல் அனுப்பியதை என்னால் நம்ப முடியவில்லை. ரொம்ப சந்தோஷம் வரும்போது எனக்கு எலும்புச் சட்டகம் வேலை செய்யாது. அம்மாவின், அப்பாவின் கைகளில் மாறி மாறி துவண்டேன்.

“இங்கேரு இப்பிடியே எளஞ்சிகிட்டே வந்தீன்னா ஸ்டேஷன்லயே உட்டுட்டு ட்ரெயின் ஏறிடுவோம்”, என அம்மா மிரட்டிய பிறகு எலும்புகள் வேலை செய்யத் தொடங்கின. ஆப்பிள் மாதுளை அன்னாசி என பழங்களின் படமாக போட்டிருந்த ஒரு டானிக் பாட்டில் வாங்கினார் அப்பா. சப்பி சாப்பிடும் ஒரு இனிப்பு மிட்டாய். கவர்ச்சியான அட்டையில் வைக்கப்பட்ட சில அழகான பெரிய மாத்திரைகள். இவ்வளவு தான் ராஜேந்திரன் டாக்டர் எழுதியிருந்தார். அந்த டானிக்கை எழுந்ததும் யாருக்கும் தெரியாமல் ஒரு மூடி குடிப்பேன். குடித்த பிறகும் அளவு குறைந்திருக்காது. அதனால் மீண்டும் ஒரு மூடி குடிப்பேன். காலை சாப்பிட்ட பின் மற்றொரு மூடி. வியாழக்கிழமைகளில் மட்டும்தான் பள்ளியில் அவித்த முட்டை கொடுப்பார்கள். அதிலும் மஞ்சள் கருவை தனியாக எடுத்துவிட்டு கடைசி கொஞ்சம் சோற்றுடன் அதனை பிசைந்து தின்னும் ஒரு வழிமுறையை என் தோழர்கள் கண்டறிந்ததும் அதை பயன்படுத்துவதும் எனக்கு உமட்டலை தான் கொடுத்தது. ஆனால் மாலையில் பசியுடன் வரும்போது ஒவ்வொரு நாளும் அவித்த முட்டை காத்திருந்தது.

அதற்கு முன் ஒரு மனிதனின் நினைவு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்ததில்லை. சனிக்கிழமைகளில் மட்டுமே அண்ணன் வெளியே எடுக்கும் சீட்டுக்கட்டு மரத்தினால் ஆன கிரிக்கெட் பேட், கொழுந்து வாழை இலை இதெல்லாம் நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கும். ஆனால் ஒரு மனிதனை நினைத்து சந்தோஷப்படுவது அதுவே முதன்முறை. என் வகுப்பில் படித்த அன்பரசனையும் பிரதீப்பையும் நினைத்து நிறையவே பயந்திருக்கிறேன். அன்பரசன் கருப்பாக உருண்டையாக இருப்பான். நல்ல கவர்ச்சியான பெரிய உதடுகள் அவனுக்கு. எப்போதும் என்னை ஏளனத்துடன் “டேய் பென்சிலு” என வம்பிழுப்பான். ஒற்றைப்படை ரேங்க் வாங்குவதால் வாத்தியார்களின் சப்போர்ட் கிடைக்கும். அதனால் அன்பரசனை ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் பிரதீப் அப்படி கிடையாது. நல்ல பாம்பைப் போல அவன் உடல் ஈரமாகவே இருக்கும். காலில் பெரிய பெரிய புண்கள் சில நாட்களில் பார்க்கக் கிடைக்கும். அவன் தமிழ்நாட்டில் பிறந்தவன் அல்ல. ஏதேனும் கன்னடக் கெட்டவார்த்தை சொல்லி திட்டுவான். நீண்ட குச்சி போல இருப்பான். இவர்கள் தனித்தனியே இருந்தபோது நான் அவ்வளவாக பயப்படவில்லை. ஒன்று சேர்ந்து கொண்டு என்னை நிறையவே அழவைத்தார்கள். காலையின் என் முதல் பிரார்த்தனை அவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்பதாகவே இருக்கும் பெரும்பாலும்.

ஆனால் இப்படியொரு மனிதனை நான் விரும்பியதில்லை. ராஜேந்திரன் டாக்டரிடம் செல்லப் போகிறோம் என்று சொன்ன அப்பாவை சட்டென்று ஓடிப்போய் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. மறுமுறை அவருக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் இதுவரை அப்படி யாருக்கும் எதுவும் நான் கொடுத்ததில்லை என்று நினைவுக்கு வந்தது. சரி பரவாயில்லை என எண்ணிக் கொண்டேன்.

குறுக்கு கம்பியை கடித்தபடியே பேருந்து பயணம். ராஜேந்திரன் டாக்டர் சென்றமுறை வந்தபோது இருந்ததைப் போலவே இருந்தார். ஏதோ உள்ளறையில் போய் வேறு சட்டை போட்டுக் கொண்டு எதிரே அமர்ந்திருப்பவர் போல இருந்தார். என்னை வாசலில் பார்த்ததுமே “வாடா பயலே” என நாற்காலியில் அமர்ந்தபடியே கழுத்தை மட்டுமே உயர்த்திச் சொன்னார்.

கையைப் பிடித்தவர் “என்னாடா அம்மா தெனம் முட்ட கொடுத்திச்சா” என்றார். நான் அண்ணாந்து பார்த்து புருவங்களை உயர்த்தி மூடியபடியே வாயை நீட்டி “ம்” என நீளமாக ஆமோதித்தேன்.

“பய தேறிட்டான் போலருக்கே” என என் இடது கை மணிக்கட்டை நெறித்தபடி சொன்னார். வலித்தாலும் சிரித்தேன். ஆனால் நான் தேறிவிடவில்லை அப்போது. கரும்பளிங்கு மாதிரி இருக்கும் அன்பரசு போலவோ உரித்த பளபளப்பான வேப்பங்குச்சி மாதிரி இருக்கும் பிரதீப் போலவோ நான் மாறியிருக்கவில்லை.

ராஜேந்திரன் டாக்டர் இருக்கையில் அமர்ந்த பின்னும் என்னைப் பார்த்து சிரித்தார்.

“உங்க பையன் கம்ளீட்டா கியூர் ஆயாச்சு சார். இந்த டேப்லட் மட்டும் ஒரு ஒன் வீக் கண்டினியூ பண்ணுங்க அது போதும்” என்றபடியே ஏதோ எழுதத் தொடங்கினார்.

“ஒரு வாரங்கழிச்சு வரணுமா சார்” என்றார் அப்பா.

கண்ணாடி வழியாக கண்களை மட்டும் உயர்த்தி “உங்களுக்கு மூணு தரம் ஆஸ்பத்திரிக்கு போனாதான் திருப்தி வரும்னா தாராளமா வாங்க” என்றார் டாக்டர்.

அம்மா கூட கொஞ்ச நேரம் பற்களை வெளிக்காட்டி மூடிக்கொண்டது. நானும் சிரித்தபிறகே சட்டென்று அந்த உண்மை உரைத்தது. ராஜேந்திரன் டாக்டரை இனிமேல் பார்க்க வரமுடியாது. அந்த பிரைமரி காம்ப்ளக்ஸ் இவ்வளவு சீக்கிரம் ஏன் நீங்குகிறது என்றிருந்தது எனக்கு. மேலும் எட்டு வயதில் அந்தச் சொல்லை உச்சரிப்பது எனக்கொரு தன்னம்பிக்கையை கொடுத்திருந்தது.

நாங்கள் வெளியேறினோம். அடுத்த பெற்றோர் மகனுடன் உள் நுழைந்தனர்.

ராஜேந்திரன் டாக்டர் “வாடா பையா” என்று சிரிப்பது கேட்டது. அவர் சிரிப்பைக் கேட்டபிறகு பிரைமரி காம்ப்ளக்ஸ் சரியானது நல்லதுதான் என்று தோன்றியது. அம்மாவும் அப்பாவும் வருமுன்னே விடுவிடுவென இறங்கி சாலையோரம் போய் நின்றேன், வரவிருந்த அழுகையை கட்டுப்படுத்தியபடி.

5 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.