மாயக்குரல்

தருணாதித்தன்

 

நான் கண்களை மூடிக் கொண்டு தம்பூராவை மீட்டினேன். நாதம் அலை அலையாக எழும்பியது. பாடாமல் அதையே கேட்டுக் கொண்டு இருக்கலாம் போல இருந்தது. அப்படி ஒரு தம்பூரா சுருதி எப்போதும் அமையாது. அந்தர  காந்தாரம் சந்தேகம் இல்லாமல் கேட்டது. நானே மயக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு கார்வை கொடுத்தேன். குரல் இழைந்தது. பாட்டி இருந்தால் “ டேய், இன்றைக்கு கேட்பவர்களுக்கு யோகம்” என்பாள். இன்னொரு நாள் எவ்வளவு முயன்றாலும்  நான்கு தந்தியும் ஒன்றாகச் சேர்ந்து தம்பூராவும் அதிராது, குரலும் அப்படி கவ்விப் பிடித்துச் சேராது.

“டேய், கேட்பவர்களுக்கு இன்றைக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் “ என்பாள் பாட்டி.

பாட்டியின்  வற்றல் குழம்பு குடும்பத்தில் பெயர் போனது. அந்த மாதிரி கைமணம் யாருக்கும் வராது என்பார்கள். ஒவ்வொரு நாள் அப்படித்தான் ஆகும். எவ்வளவு கொதித்தாலும் புளியும் காரமும் உப்பும் பெருங்காயமும் சற்று ஒன்று சேராத மாதிரி இருக்கும். அப்போதும் பாட்டி இதே மாதிரி சொல்லுவாள்.

“இன்னிக்கு சாப்பிடரவங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் “

அன்றைக்கு என்னுடைய நல்ல நாள், என்றுமில்லாத ஒரு அதிர்வுடன் சுருதியும் குரலும் சேர்ந்தது. என்னுடைய வாழ்க்கையிலேயே முக்கியமான கச்சேரி. சுந்தரம் தாத்தாவை நினைத்த படியே பயிற்சியாக ஒரு வர்ணம் பாடினேன். குரல் பதமாக இருந்தது. இருந்தாலும்  ஒரு சிறு பதற்றம். அவருடைய பெயர் விளங்கும்படி இன்றைய கச்சேரி அமைய வேண்டும்.  தாத்தா என்று சொன்னாலும் அவர் என்னுடைய பாட்டியின் தாத்தா. மிகப் பெரிய வித்துவான். அவருக்குப் பிறகு குடும்பத்தில் புகழ் பெற்ற பாடகர்கள் இல்லை. ஏதோ வீட்டோடு இல்லை கோவிலிலில் பாடுவார்கள். நான் தான் மூன்று தலை முறைக்குப் பிறகு மேடை ஏறிப் பாடுபவன்.

இன்று நான் சற்று உணர்ச்சிவசமாக இருப்பதப் பார்த்தால் பாட்டி “உனக்கு என்ன கவலை,  நீ பத்து வயதிலேயே முதல் கச்சேரி செய்து ப்ராடிஜி, ஜீனியஸ் என்று பத்திரிகைகளில் பெயர் வந்து மேடை ஏறியவன். எல்லாம் நல்லபடியாக அமையும் “ என்று ஆசீர்வாதம் செய்திருப்பாள்.

 

பாட்டி சுந்தரம் தாத்தாவைப் பற்றி நிறையச் சொல்லுவாள். அவள் அப்படி சொல்லிச் சொல்லிதான் ஒரு வேளை நான் பெரிய பாடகனாக ஆக வேண்டும் என்று அடிமனதில் சிறு வயதிலேயே படிந்திருக்கலாம். சுந்தரம் தாத்தா அவருடைய வாழ் நாளில் நிறைய புதுமைகளைப் பார்த்திருக்கிறார், செய்திருக்கிறார். முதல் முதலாக ரயில் வண்டி ஏறி நாடு முழுவதும் பயணம் செய்து பாடிய வித்துவான் அவர்தான். முதல் முதலாக புகைப்படம் எடுக்கப்பட்ட கர்னாடக  இசை வித்துவானும் அவர்தான். பாட்டி அவருடைய குரலைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லுவாள். கந்தர்வ கானம் என்று பெயர் பெற்றவர். அவர் குரல் மாயக் குரலாம். அதில் பேசாத ராகம் கிடையாது என்பாள். அந்தக் குரலில் சில பாட்டுகள் கேட்டால் கண்ணீர் வராமல் இருக்க முடியாது என்பாள். சில பாட்டுகளைக் கேட்டால் எழுந்து உல்லாசமாக ஆடத் தோன்றும் என்பாள்.

“ அவருடைய பாட்டு சில வித்வான்கள் மாதிரி ஞானமாகப் பாடுகிறேன் என்று உணர்ச்சியே இல்லாமல் பாடும் வரட்டு சங்கீதம் இல்லை “ என்பாள்.

ஒரு முறை அவர் ராம நவமி உற்சவத்தில் பாடிய போது, ப்ரிட்டிஷ் அதிகாரியான மாவட்ட கலெக்டரே வந்து கோவில் மதில் சுவருக்கு வெளியே வண்டியில் அமர்ந்த படியே  பாட்டு கேட்டாராம். ஒலி பெருக்கி இல்லாமலேயே குரல் அப்படி தூரத்திலும் கேட்குமாம்.

நான் ப்ராடிஜி என்று அழைக்கப் பட்டாலும், பாட்டி வாயால் “ ம், இப்ப கொஞ்சம் பரவா இல்லை” என்று அரை மனது பாராட்டு வருவதற்கு எனக்கு இருபது வயது ஆயிற்று. அப்பொழுது கூட “ நீ சுந்தரம் தாத்தாவின் பாட்டைக் கேட்க வேண்டும், அப்பத்தான் நல்ல சங்கீதம் அப்படின்னா என்ன என்று புரியும் “ என்பாள்.

நான் இப்போது பெயர் பெற்ற வித்துவான்களின் சங்கீதத்தை ரேடியோவிலோ ஒலிப்பதிவிலிருந்தோ பாட்டியைக் கேட்க வைப்பேன். ஒரு நிமிடம் கூட முழுதாக கேட்க மாட்டாள்.

“பாட்டி, நீங்க எப்பவும் சுந்தரம் தாத்தாவைப் பற்றியே சொல்றீங்க, எனக்கு ஒரு தடவை அவர் குரலைக் கேட்க வேண்டும் “ என்பேன்.

“மனுஷக் குரலா அது, தேவ கானம், கந்தர்வ கானம் என்று புராணங்களில் வருமே அந்த மாதிரி மாயக்குரல், வெறும் குரல் ,மட்டும் இல்லை அதில் அப்படி ஒரு உணர்ச்சி” என்பாள்.

சற்று மவுனத்துக்குப் பிறகு “சமஸ்தானத்தில் தசராவின் போது பத்து நாட்களும் கச்சேரி நடக்கும். அதில் பாட வாய்ப்பு கிடைப்பதே  பெரிய  சாதனை. ஒரு வருடம் அழைத்தால், மறுபடி நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் சுந்தரம் தாத்தா மட்டும் வருடா வருடம் பாடுவார். மகாராஜாவுக்கு அவருடைய பாட்டு என்றால் உயிர்.  1898 தசராவில் அவருடைய கச்சேரியை ஒலிப்பதிவு செய்தார்கள். கவனித்துக் கொள் – அதுதான் கர்னாடக சங்கீதத்தில் முதல் ஒலிப்பதிவு. “ என்று பெருமையாக ஒரு இடைவெளியில் கதையை நிறுத்துவாள்.

“அன்றைக்கு பைரவி ராகம், வழக்கம் போல அவரும் கேட்டவர்களும் வேறு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சுந்தரம் தாத்தா கண்களை மூடிப் பாடிக் கொண்டிருக்க, மகாராஜா அவருக்குத் தெரியாமலேயே ஒலிப்பதிவுச் செய்யச் சொன்னாராம் “

இப்படி பாட்டி சுவாரசியமாக சொல்லுவாள். நூறுமுறை இந்தக் கதையைக் கேட்டிருந்தாலும், எனக்கு அலுக்காது. அதே போல நான் ஒவ்வொரு முறையும் கடைசியில் கேட்ட கேள்விக்கும் பாட்டி அலுக்காமல் அதே பதிலைச் சொல்லுவாள்.

“ அந்த ஒலிப்பதிவு இப்போது எங்கே?     நீங்க தினமும் சொல்லும் சுந்தரம் தாத்தாவின் சங்கீதம் எப்படி இருக்கிறது என்று  நானும் கேட்க வேண்டும்”

“ அதுதான் மிக வருத்தமாக இருக்கிறது, 1930இல் அரண்மனையில் ஒரு தீ விபத்து, அதில் அழிந்து போய் விட்டது “ என்று முடிப்பாள். தீ விபத்து நடந்த வருடம் ஒரு சமயம் 1930 ஆக இருக்கும், இன்னொரு  முறை 1920 ஆக இருக்கும். இருந்தாலும் தாத்தாவின் குரல் வளம் மட்டும் மாறாது. பாட்டி போய் பல வருடங்கள் ஆனாலும், அவளுடைய வார்த்தைகள் மறக்கவில்லை.

இப்போதும் சமஸ்தானத்தில் தசரா உற்சவம் விமரிசையாக நடக்கிறது. இப்போதைய மகாராஜா ஏற்றுமதி வணிகம் செய்து கொண்டிருந்தாலும், பாரம்பரியத்தை விடாமல் இன்னும் விழா நடத்துகிறார். இன்றும்கூட, அந்த விழாவில் பாட வாய்ப்புக் கிடைப்பது கடினம். நான் பாடி பெயர் எடுத்தும் கூட, இத்தனை வருடங்களில் என்னை அழைத்ததில்லை. திடீரென்று சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் கைபேசியில் அழைப்பு வந்தது. பேசியவர் ரவீந்தர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். அவர்தான் சமஸ்தானத்து அரண்மனையில் அதிகாரியாம். இந்த முறை தசராவில் பாட முடியுமா என்று கேட்டார். எத்தனை வருடங்களாக நான் கண்ட கனவு அது. உடனே ஒத்துக் கொண்டேன்.

சமீபத்தில் நான் பாடிய ஒரு பாடல் சமூக ஊடகங்களில் எதிர் பாராமல் பிரபலமாக ஆனது. அதைக் கேட்டு விட்டுதான் மகாராஜா வரவழைக்கச் சொன்னார் என்று ரகுராவ் சொன்னான். ரகுராவ் என்னுடைய சிஷ்யன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். என்னுடன் கச்சேரிகளில் தம்பூரா போட்டுக் கொண்டு கூடப் பாடுவான்.  அந்தக் கச்சேரிக்குத்தான் தயார் ஆகும்போதே அப்படி அபூர்வமாக சுருதியும் குரலும் சேர்ந்தது. அது மிக நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது. என்னுடைய இரண்டு மகத்தான கனவுகளும் நிறைவேறக்கூடும் என்று தோன்றியது. முதல் கனவு தசரா கச்சேரியில் பாடுவது. அது நிறைவேறும். அழைப்பு வந்து விட்டது.

அடுத்த கனவு நிறைவேற வாய்ப்பு மிகவும் அரிது. ஒரு வேளை சுந்தரம் தாத்தாவின் குரல் ஒலிப்பதிவு தீ விபத்தில் தப்பி இன்னும் அரண்மனையில் இருந்தால், அதை கண்டு பிடித்து விட வேண்டும், அவருடைய பாட்டைக் கேட்க வேண்டும். அதை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

மகாராஜா தேட அனுமதி கொடுத்தால், அந்த ஒலிப்பதிவு தீ விபத்தில் தப்பியிருந்தால், இப்போது அரண்மனையில் எங்காவது இருந்தால், ஒரு வேளை எனக்கு அது கிடைத்தால் இரண்டாவது கனவும் நிறைவேறக் கூடும்.

நேற்று காலையிலிருந்தே ஒரு பதட்டம் இருந்தது. என்னுடைய ஆதர்ச பாடகர்கள், சுந்தரம் தாத்தா என்று எல்லோரும் அமர்ந்த மேடையில் நான் பாட வாய்ப்புக் கிடைத்ததே பாக்கியம். முதல் முறையாக அழைத்திருக்கிறார்கள். பெயர் கெடாமல் கச்சேரி அமைய வேண்டும் என்று கவலை.

முதலிலேயே ரவீந்தர் எங்களுக்கு நிறைய சொல்லி இருந்தார். உடையிலிருந்து ஆரம்பித்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்று போன நூற்றாண்டு பழக்கங்களை எல்லாம் சொன்னார். வேட்டியும் அங்க வஸ்திரமும் தான் அணிய வேண்டும். ஜிப்பா, சட்டை எல்லாம் அனுமதி இல்லை. சபையில் நவராத்ரி கச்சேரி அம்மனுக்கு நடத்தும் சேவை.  மின்சார விளக்கு  ஒலி பெருக்கி எதுவும் கிடையாது. மொபைல் போன்கள் அனுமதி இல்லை.  அலங்கரிக்கப்பட்ட புவனேஸ்வரி அம்மன் மேடைக்கு நேர் எதிரே கொலு இருப்பாள். அரச குடும்பத்தில் குல தெய்வம் அவள். மகாராஜா பக்கவாட்டில் சிம்மாசனத்தில் இருப்பார். மகாராணியும் மற்ற பெண்டிரும் மறைவான அறையிலிருந்து பலகணி வழியே கேட்பார்கள். கச்சேரி மங்களம் பாடி முடிந்த பிறகு எதிரே அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுக்கப்படும். பிறகு வித்துவான்களுக்கு மகாராஜா மரியாதை செய்வார். அதற்கு முன்பு யாரும் அசையக் கூடாது, நடுவில் பேசக் கூடாது என்று எல்லாம் விதிகள் உண்டு.

ஆரம்பிக்கும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அரச சபைக்குச் சென்றோம். அந்தக் காட்சியே பரவசப்படுத்தியது. ஆள் உயர எண்ணெய் விளக்குகளின் வெளிச்சத்தில் எல்லாம் பொன்னாக மின்னியது. பருத்த மரத் தூண்கள், வண்ணக் கற்கள் பதித்த தரை, சுற்றிலும் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், மேலிருந்து தொங்கிய பிரம்மாண்டமான ஷாண்டலியர், சரம் சரமாக மல்லிகை, தாமரை, மாவிலைத் தோரணங்கள், சந்தன மணம் எல்லாம் சேர்ந்து ஏதோ மாய உலகம் போல இருந்தது.

மேடையில் அமர்ந்து சுருதியில் ஆழ்ந்தேன். அந்தக் கணத்திலேயே பதட்டம் எல்லாம் போய் விட்டது. கூடவே நல்ல பக்க வாத்தியங்களும். மனம் மேலே பறந்தது.  கச்சேரி மிக அருமையாக அமைந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நல்ல வரவேற்பு.  நான் தைரியமாக பைரவி ராகம் எடுத்தேன்.  சுந்தரம் தாத்தா பைரவி பாடிய அதே மேடை. அந்த நினைப்பே என்னை பரவச நிலையில் பாடச் செய்தது. அன்றைக்கு பாடிய மாதிரி நானே பாடியதில்லை. அங்கே பாட்டுக்கு கை தட்டக் கூடாதாம், ஆனாலும் ரசிகர்களின் முகக் குறிப்பும், உடல் அசைவும், மெல்லிய ஆகா என்ற ஒலிகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தன.  மகாராஜாவும், அரச குடும்பத்தினரும் நன்றாக ரசித்தனர். முடிக்கவே மனம் வரவில்லை. ரகுராவ்தான் என்னுடைய காதில் மெல்லிய குரலில் சொல்லி முடிக்க வைத்தான்.

ஆரத்தி முடிந்து மகாராஜா தானே முன் வந்து, மாலை போட்டு , பெரிய தாம்பாளத்தில் பழங்களுடன் சன்மானம் செய்தார்.  நான் கண்களில் நீருடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். இதைப் பார்க்க பாட்டி இருந்திருக்கலாம்.

மகாராஜா “ உங்கள் மூதாதையர் சுந்தரம் இங்கே வருடா வருடம் பாடி சங்கீத சேவை செய்தாராம், இப்போதுதான் உங்களுடைய அருமையான பாட்டைக் கேட்பதற்கு எங்களுக்கு வேளை வந்திருக்கிறது “ என்றார்.

அந்த சந்தர்ப்பத்தை விடாமல், தைரியத்தைக் கூட்டிக் கொண்டு மகாராஜாவிடம் கேட்டு விட்டேன். வீரேந்தர் அதை எதிர் பார்க்கவில்லை.

“மகாராஜா, ஒரு விண்ணப்பம் உங்களுடன் தனியாகப் பேச வேண்டும்“

அவர் நின்று உள் அறைப் பக்கம் கையைக் காட்டி அழைத்து “என்ன வேண்டுமோ கேளுங்கள், பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு  நல்ல கச்சேரி கேட்டிருக்கிறேன் “ என்றார் கனிவாக.

கலவரமான முகத்துடன் ரவீந்தரும் உள்ளே வந்தார். அரச குடும்பத்துப் பெண்கள் எழுந்து உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.

“என்னுடைய தாத்தாவுக்கு தாத்தா சுந்தரம் பாடிய மேடை இது, இங்கே பாட வாய்ப்புக் கிடைத்தது பாக்கியம், மிக்க நன்றி “

“ ஆமாம் கேள்விப் பட்டிருக்கிறேன், அவர் பாடினால் சபையே மயங்கி இருக்குமாம். அப்படிப்பட்ட மாயக்குரல். அந்தப் பரம்பரை அல்லவா, நிரூபித்து விட்டீர்கள். “ என்றார்.

“மகாராஜா, சுந்தரம் தாத்தா பாடிய போது ஒலிப்பதிவு செய்யப் பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். “

“ஆமாம், அதுதான் கர்னாடக சங்கீதத்தில் முதலில் செய்யப்பட்ட ஒலிப்பதிவு, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரண்மனை தீ விபத்தில் எரிந்து போய் விட்டது “

நான் “மகாராஜா, அது ஒரு வேளை தப்பித்து இப்போதும் இருக்கக்கூடுமா என்று சந்தேகம், தேடுவதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் “ என்று முடித்தேன்.

ரவீந்தருக்கு இது பிடிக்கவில்லை, அவர் ஏதோ சொல்ல வந்தார்.

அதற்குள் மகாராஜா “ சந்தேகம்தான், இருந்தாலும்,  நீங்கள் இவ்வளவு கேட்கும்போது மறுக்க முடியுமா, தேடிப் பாருங்கள். ரவீந்தர், இவருக்கு தேடுவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுங்கள் “ என்றார்.

அன்றைக்கு இரவு நான் சரியாகத் தூங்கவே இல்லை.

மறு நாள் காலை ரகு ராவ் கூட வந்திருந்தான். அரண்மனைக்குச் சென்றோம். வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் செல்லும் அலங்கார வாயில் வழியாக இல்லை. பக்க வாட்டில் தனியாக ஒரு சாதாரண பழைய கட்டிடம் போல வெள்ளைச் சுண்ணாம்படித்த வளைவு வாயில் இருந்தது. அதுதான் அரச குடும்பத்தினர் உபயோகிக்கும் வழியாம். அலங்கார வாயில் வழியே சென்றால் புல் தரைகளும் பூக்களும் வேலிச் சுவர் மாதிரி வெட்டி விட்ட செடிகளும் தோரண வாயில்களுமாக திருவிழாக் கோலமாக இருக்கும். எப்பொழுதும் டூரிஸ்ட் பஸ்களும் அனுமதி டிக்கெட் வாங்க கூட்டமாக  நிற்கும் ஜனங்களையும் பானி பூரி, பொரி கடலை, அய்ஸ்க்ரீம் வண்டிகளையும் தரையில் குப்பையும் பார்த்துப் பழகின எனக்கு, அரண்மனையே வேறு விதமாக காட்சி அளித்தது. ஷாப்பிங் மால்களுக்குப் பின்னால் பார்க்கிங் வழி போல தரையில் குறுக்கே குழாய்கள், டீசல் ஜெனெரேடர், ட்ரான்ஸ்பார்மர்களைச் சுற்றிச் சென்றோம்.

கடைசியில் ஒரு பெரிய கட்டிடத்துக்குள் நுழைந்தோம். அரண்மனை அதிகாரி ரவீந்தர் வரவேற்றார். என்னுடைய கச்சேரி மிக அருமையாக இருந்ததாகப் பாராட்டினார். அரச குடும்பத்தினர் அன்று இரவு உணவின்போது, என்னுடையதுதான் மிகச் சிறந்த கச்சேரி என்று பேசிக்கொண்டார்களாம். மகாராஜா வருடா வருடம் என்னை வரவழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டாராம்.

ரவீந்தர் எங்களை ஒரு மிகப் பெரிய வரவேற்பு அறையில் அமர்த்தி மகாராஜா நேரில் வர முடியாததற்கு மன்னிப்புக் கேட்டார். மகாராஜாவின் இளம் வயது வண்ணச் சித்திரம் சுவற்றில் மாட்டி இருந்தது. அவர் பழங்கால உடையா இல்லை  நவீன உடையா என்று பார்த்தவுடன் தீர்மானிக்க முடியாத உடையில் தொப்பியா தலைப்பாகையா என்று சொல்ல முடியாத ஒன்றை தலையில் அணிந்து கொண்டு, சிம்மாசனமா இல்லை சோபாவா என்று சொல்ல முடியாத ஆசனத்தில் தீவிரமான முகத்துடன் அமர்ந்து இருந்தார்.

நான் “ எங்களுக்கு ஒலிப்பதிவைத் தேட அனுமதி அளித்ததே பெரிய விஷயம் “ என்று நன்றி சொன்னேன். உபசாரமாக எங்களுக்கு காபி டீ வேண்டுமா என்று கேட்டார். எனக்கு ஒலிப் பதிவைத் தேடுவதே குறி. அவரிடம் அய்ந்து நிமிடம் பேசுவதும் வீணாகத் தோன்றியது. ஒரு வழியாக அவர் ஒரு ஆளைக் கூப்பிட்டு அவனிடம் தாழ்ந்த குரலில் ஏதோ சொன்னார். அவன் எங்களை அழைத்துக் கொண்டு அரண்மனை உள்ளே சென்றான். ரவீந்தரும் கூட வந்தார்.

வளைந்து வளைந்து அந்தப் பெரிய அரண்மனைக்குள் நடந்தோம். உள்ளே சற்று இருட்டாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.  தரை எல்லாம் பாரம்பரிய வேலைப்பாடுள்ள வண்ணக் கல் சதுரங்கள் பதிக்கப் பட்டு இருந்தன. ஒவ்வொரு பெரிய அறைக்கும் ஒரு பிரத்தியேக வடிவமைப்பு. மறுபடி என்னை அங்கே விட்டால் கூட, என்னால் வழி கண்டுபிடிக்க முடியாது.  ஒரு நீண்ட தாழ்வாரத்திலிருந்து வெளிச்சத்துக்கு வந்தோம். சற்றுத் தள்ளி ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அழகான மரத் தூண்கள் , மர ஜன்னல்கள்,  திண்ணை, மல்லிகை ரோஜா என்ற பூஞ்செடிகள் எல்லாம் இருந்தன. இதுதான் இளைய ராணியின் அந்தப் புரமாக இருந்ததாம். பெரிய அரண்மனையிம் ஒரு பகுதி தீப்பிடித்த போது, தள்ளி இருந்த இந்தக் கட்டிடத்துக்கு ஒன்றும் ஆகவில்லையாம். அதனால் விலை மதிப்பற்ற பல பொருட்களை இங்கே எடுத்து வைத்தார்களாம். நகைகள்,பட்டாடைகள்,  ஓவியங்கள், வாத்தியக் கருவிகள், என்று இந்தக் கட்டிடம் நிரம்பி வழிந்ததாம். ரவீந்தர் குடும்பம் பரம்பரையாக ராஜ சேவகர்களாம். அவருடைய தாத்தாவின் காலத்தில் இது நிகழ்ந்தது என்று சொல்லி இருந்தார். அவர் தாத்தாவிடம் அந்தத் துயர நாளைப் பற்றி நிறையக் கதைகள் கேட்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு பரபரப்பு அதிகம் ஆயிற்று

“உங்கள் தாத்தா தசரா கச்சேரி ஒலிப் பதிவுகள் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா?”

“ அவர் சொன்னதில்லை, என் தாத்தாவின் தம்பிதான் சங்கீதம் கேட்பார், அவர்தான் தீயில் பாதிக்கு மேல் தசரா ஒலிப் பதிவுகள் அழிந்து போயின என்று சொன்னதாக நினைவு “ என்றார்.

நான் ரவீந்தரின் கைகளைப் பிடித்துக் கொண்டேன்.

“ரவீந்தர், பாதி ஒலிப்பதிவுகள் தப்பித்தன என்று இது வரை நான் கேள்விப் பட்டதே இல்லை , இது மிக மகிழ்ச்சியான செய்தி “ என்றேன்.

ரவீந்தர் “ எனக்கு அப்படித்தான் நினைவு, தேடிப் பாருங்கள், கிடைக்கக் கூடும். இத்தனை வருடங்களில் நிறைய ஓவியங்களையும் வாத்தியக் கருவிகளையும்  சீர் செய்து ம்யூசியத்துக்கு மாற்றி விட்டோம். அதைத் தவிர இங்கே எரிந்த மரச்சாமான்கள், தீப் பட்ட ஓவியங்கள், என்று நிறைய பொருட்கள் உண்டு. இதைத் திறந்தே பல வருடங்கள் ஆகி இருக்கும் “ என்றார். கூட வந்த ஆள் “ இங்கே வெள்ளிப் பாத்திரங்கள் கூட  நிறைய இருந்தன, இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை” என்றான். ரவீந்தர் அவனை முறைத்தார்.

அவனிடமிருந்து ஒரு பையை வாங்கி, அதிலிருந்து  ஒரு பெரிய சாவியை எடுத்து, அந்தக் கதவில் பூட்டி இருந்த பெரிய பூட்டைத் திறக்க முயற்சி செய்தார். அது திறக்கவில்லை. ரவீந்தர், முன் யோசனையாக கையில் ஒரு எண்ணெய் குப்பி வைத்திருந்தார். “இது எளிதாகத் திறக்காது என்று தெரியும் “

சாவி போடும் துளையில், மேலே இருந்த தண்டிலும் சில துளி எண்ணெய் விட்டு அந்தப் பூட்டைக் குலுக்கினார். இப்போது பூட்டு திறந்தது. அந்தப் பிரம்மாண்டமான கதவைத் திறந்து உள்ளே பார்த்தோம். ஜன்னல்கள் எதுவும் திறக்காததால் சில அடிகளுக்குப் பிறகு உள்ளே இருளாக இருந்தது.

ரவீந்தர் ஒரு ஜன்னலைத் திறந்து விட்டு எங்களை வரச் சொன்னார். அந்த ஜன்னல் வழியே சூரிய ஓளிக் கற்றை  நேராக ஒரிடத்தில் விழுந்தது. உள்ளே அடி எடுத்து வைத்ததும், பழைய நாற்றம் முகத்தில் அடித்தது. கைக்குட்டையை வைத்து மூக்கை மூடிக் கொண்டோம்.

ரவீந்தர் “ சற்று நேரம் திறந்து வைத்தால் சரியாகி விடும் “ என்றார். சுற்று முற்றிலும் பார்த்தோம்.  நாங்கள் கிளப்பிய புழுதி, சூரிய ஒளியில் மின்னும் துகள்களாக மிதந்தன. நிறைய பொருட்கள் சிதறி இருந்தன. ஒரு பெரிய தந்தப் பல்லக்கு, துணி போர்த்திய பெரிய நாற்காலிகள், மேசைகள், நான்கு புறமும் பந்தல் கால் மாதிரி இருக்க விதானம் வைத்த பெரிய கட்டில் ஒன்று, ஆளுயரப் பாவை விளக்கு, விரிசல் விட்ட கண்டா மணி, வீரர்கள் அணியும் இரும்புக் கவசம், கேடயம், உறையுடன் வாள், இரும்புச் சங்கிலி என்று நிறைய பொருட்கள் சிதறி இருந்தன.  ஒரு பக்கம் அலமாரி, பீரோ போன்றவைகள் இருந்தன. ரவீந்தர் அவற்றைக் காட்டி “ முதலில் அங்கே தேடுங்கள், ஒரு வேளை இருந்தால் அவற்றில் இருக்கக் கூடும் “ என்று சொல்லி விட்டு அவருக்கு வேலை இருப்பதால் கிளம்பி விட்டார்.

எங்கே ஆரம்பிப்பது என்று மலைப்பாக இருந்தது.

ரகுதான் உதவிக்கு வந்தான்.

“ஸார், இந்த உயரமான அலமாரியிலிருந்து ஆரம்பிக்கலாம் “

அது பூட்டி இருக்கவில்லை. திறந்தால் அரச உடைகள் இருந்தன. இத்தனை வருடங்கள் ஆகி இருந்தாலும், சரிகை பளபளப்பும், பட்டில் தைத்த முத்து மணிகளுமாக ஆடைகள் அடுக்கி இருந்தன.

“ரகு, இது இல்லை. வேறு அலமாரி பார்க்கலாம் “ என்றேன். மலைப்பாக இருந்தது. அந்தப் பெரிய அறையில் சுமார் முப்பது அலமாரி, பீரோக்கள் இருந்தன.

நாங்கள் ஒரு பத்து அலமாரிகளைத் திறந்திருப்போம். ஒன்றும் உருப்படியாகக் கிடைக்கவில்லை. அறையில் ஒரு மூலையில் ஒரு பெரிய மர அலமாரி ஆள் உயரத்துக்கு இருந்தது. மேலே புழுதி படிந்து இருந்தாலும், நேர்த்தியாக நல்ல தேக்கு மரத்தால் செய்தது தெரிந்தது. வேலைப்படுகளுடன் பித்தளைக் கைப்பிடி நிறம் மங்கி, பாசி படிந்தது போல பச்சைக் கருப்பில் இருந்தது. திறந்தால் பழைய வாசனை இன்னும் அதிக நெடியாக அடித்தது. ரகு ஒரு முறை தும்மினான். உள்ளே முழுவதும் பழைய பொருட்கள் இருந்தன. அதில் என்ன இருக்கிறது என்று  தெளிய சில வினாடிகள் ஆயின. அய்ந்து அடுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டு மரப் பெட்டிகள் இருந்தன. இந்தப் பெட்டிகள் சற்று ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்தன.

மரப் பெட்டிகளில் மேலே பார்த்தால் புழுதிக்கு நடுவே தீப் பட்ட அடையாளங்கள் இருந்தன. ஒரு பெட்டியின் மேலே விரல்களால் நிரடி வாசனை பார்த்தேன். தீயின் கருகல் வாசனை வந்தது.  என் மனம் உள்ளுணர்வில் பரபரத்தது – இதாக இருக்குமோ ? அந்தப் பெட்டி ஒரு பித்தளைப் பூட்டால் பூட்டப் பட்டிருந்தது. சாவி எதுவும் இருக்காது என்று தெரியும். நான் கொண்டு வந்திருந்த பேனாக் கத்தியால் நெம்பினேன். ரகு “ வேண்டாம் சார், அவர்களைக் கேட்காமல் திறக்கக் கூடாது”  என்றான்

“ ரகு, இதுதான், எனக்குத் தெரியும் , தடுக்காதே” என்று ஆவேசமாக அந்தப் பூட்டைத் திறக்க முயற்சித்தேன். பூட்டின் திறக்கும் துவாரத்தைச் சுற்றி கீறல் விழுந்தது. ஏதோ ஒரு வாகில் கத்தி சரியாக உள்ளே அமர்ந்து பூட்டு திறந்தது. எனது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. மேலே இருந்த தூசை என் கைக்குட்டையால் தள்ளி, வாயால் ஊதி , மெதுவாகத் திறந்தேன்.

நன்றாக விளைந்த ,மூங்கில் போல தடித்த பழுப்பு நிற உருளை இருந்தது. அதன் மேல் ஒட்டிய காகித லேபிலில் “எடிசன் ரெகார்ட்ஸ் எக்கோ ஆல் ஓவர் த வோர்ல்ட்” என்று அச்சிடப் பட்டிருந்தது. மூடியைத் திறந்தால் மேலாக ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. மிகக் கவனமாக அந்த உருளையை எடுத்தேன். அது ஒலிப் பதிவு செய்யப் பட்ட மெழுகு உருளைதான். என் கைகள் நடுங்கின.

ரகு “சார், உங்கள் குரல் மட்டும் தங்கம் இல்லை, கைகள் கூட தங்கம்தான், நூறு வருடங்களாக தீயில் அழிந்தது என்று நினைத்திருந்த முதல் ஒலிப் பதிவுகளை கண்டு பிடிச்சுட்டீங்க, இது மகத்தான கண்டு பிடிப்பு “ என்றான்.

“ரகு, சுந்தரம் தாத்தாவின்  ஒலிப் பதிவு இதில் எங்கோ இருக்க வேண்டும், எனக்கு அவர் குரலைக் கேட்க வேண்டும், அப்படி என்னதான் அவருடைய மாயக்குரலில் இருந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை எல்லோரும் கேட்டு அனுபவிக்க வெளியிட வேண்டும் “

ஏன் பரபரப்பைப் பார்த்து ரகு சற்று ஆசுவாசப் படுத்தினான்.

“சார், முதல்ல உட்கார்ந்து தண்ணீர் குடிங்க,  நிச்சயம் கிடைக்கும், “ என்றான்.

முதலில் எடுத்த உருளையில் இருந்த காகிதத்துண்டில் என்ன எழுதி இருந்தது என்று படிக்க முயற்சித்தேன். மட்கிய காகிதம் உதிர்ந்து போகும் நிலையில் இருந்தது. என்னுடைய நல்ல காலம், ஆங்கிலத்தில் எழுதி இருந்தது.  வீணா கனகாம்பாள் 1899 என்று இருந்தது. எனக்குப் புல்லரித்தது. வீணை கனகாம்பாள் ஒரு சகாப்தம்.  அவர் வாசிப்பைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். அவர் வீணை வாசித்துக் கொண்டே கூடப் பாடுவாராம். குரலில் பேசுவது விரலில் பேசுமாம். விரலில் பேசுவது குரலில் பேசுமாம்.  சரசுவதியின் வீணையை நாம் கேட்டதில்லை அனால் ஒருவேளை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று எல்லாம் ஆனந்த விகடனில் “ஆடல் பாடல்’ பகுதியில் கல்கி எழுதியதாக பாட்டி சொல்லுவாள். அவருடைய ஒலிப்பதிவு இவ்வளவு பழமையானது இருப்பது பற்றி எங்கும் கேள்விப்பட்டது இல்லை. 1899 இல் அவருக்கு பத்து வயதுதான் ஆகி இருக்கும். அந்த வயதிலேயே ஒலிப்பதிவு செய்யும் அளவுக்குத் திறமையா என்று ஆச்சரியமாக இருந்தது.

நிச்சயமாக இசைக் கச்சேரிகளின் ஒலிப்பதிவுகள்தான். நான் திறந்தது போல இன்னும் ஒன்பது பெட்டிகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் முப்பத்து இரணடு உருளை என்றால், முன்னூற்று இருபது ஓலிப் பதிவுகள்.  திறந்து பார்த்து விட வேண்டியது தான். ரகுராவ் கதவுக்கு அருகில் ஒரு கால் உடைந்த சிம்மாசனத்தில் அமர்ந்து மொபைலில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால்  அனேகமாக இன்று மாலைக்குள் கண்டு பிடித்து விடலாம். சுந்தரம் தாத்தாவின் ஒலிப் பதிவு இருக்கிறதா என்று சந்தேகம். மகாராஜா பட்டத்தில் இருந்தது முப்பத்து ஏழு வருடம். ஒலிப்பதிவுக் கருவியை அவர் வாங்கியது 1896 இல் என்று ஆவணங்கள் தெரிவித்தன. ஒரு உருளையில் சுமார் இரண்டு நிமிடங்கள்தான் பதிவு செய்ய முடியும். முழுக் கச்சேரியையும் பதிவு செய்தார்களா அல்லது சில பகுதிகள் மட்டுமா என்று சந்தேகமாக இருந்தது.  இப்படி என் மனம் அலை பாய்ந்தது.

சுந்தரம் தாத்தா இங்கே வருடா வருடம் வந்து பாடி இருக்கிறார். அப்படியானால் அது 1896 ஆக இருக்க வேண்டும். இத்தனை பெட்டிகளில் எதில் இருக்கிறது என்று எப்படிக் கண்டு பிடிப்பது, ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டியது தான் வேறு வழியே இல்லை என்று தோன்றியது.

ஒலிப்பதிவு கிடைத்தாலும் அதை எப்படிக் கேட்பது என்ற சந்தேகம் வந்தது. சுற்றிலும் பார்த்தேன். அந்த உருளைகளில் இருந்த இசையை ப்ளே செய்ய ஏதாவது கருவி இருந்திருக்க வேண்டும். இவ்வளவு தேடி சுந்தரம் தாத்தாவின் இசைப் பதிவைக் கண்டு பிடித்தாலும், அதை ப்ளே செய்ய முடியாவிட்டால் என்ன பயன். ஒரு வேளை அந்த ஒலிப்பதிவு உருளைகளைச் செய்த கம்பெனியே ப்ளேயரையும் விற்றிருப்பார்கள். இங்கே இல்லா விட்டாலும், லண்டனில் கிடைக்கக்கூடும்.

“ரகு இதை ப்ளே செய்ய ஏதாவது கருவி தென் படுகிறதா என்று பார்”

ரகு தேடினான்.

“சார், இதாக இருக்குமோ ?” அவன் கை காட்டிய இடத்தில் பார்த்தேன். நான் நின்று கொண்டு இருந்த இடத்திலிருந்து தெரியவில்லை. ரகு சற்று தள்ளி இருந்ததால் பார்த்தான் போல. நான் திறந்த அலமாரிக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு அலமாரிக்கு மேல் ஒரு மரப் பெட்டி இருந்தது.

“பார்த்து விடலாம் வா” என்றேன்.

ரகு ஒரு முக்காலியை இழுத்து வந்தான். அவனே அதன் மேல் ஏறினான். அதன் கால்கள் சற்று ஆடிய மாதிரி இருந்தது.

“சார், உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் , நான் பெட்டியை எடுக்கிறேன் “ என்றான்.

நாங்கள் இருவருமாக அந்தப் பெட்டியை இறக்கினோம். நல்ல வேளையாக அதற்கு பூட்டு எதுவும் இல்லை. ஒரு துணியை எடுத்து மேலே தூசு தட்டினேன். அந்த மரப் பெட்டி இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அரக்கு நிற பாலீஷில் பள பளத்தது. அதன் மூடியை மெதுவாகத் திறந்தேன். முதலில் தெரிந்தது ஒரு பெரிய பித்தளைக் கூம்பு. அதுவும் பச்சைக் களிம்பில் இருந்தது. அது தான் ஸ்பீக்கராக இருக்க வேண்டும். அடுத்தது செவ்வக வடிவில் ஒரு மரப் பெட்டி இருந்தது. அதைக் கவனமாக வெளியில் எடுத்தோம். அதன் பக்க வாட்டில் “ எடிசன் பெல் ஜெம் “ என்று சித்திர எழுத்துகளில் பேனர் மாதிரி இருந்த படத்தின் மேல் பொறித்திருந்தது. பக்கத்தில் ஒரு பெரிய சுழலும் கைப்பிடி, பழைய கால கிராமபோன் ரெகொர்ட் ப்ளேயர் மாதிரி.

“இது தான் , ப்ளேயர் “ என்று நான் கூவினேன்

ரகு “ சார், கவனமாகப் பார்க்கலாம். இது முழுக்க மெக்கானிகல் கருவி போல இருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இது வேலை செய்யுமா என்பது சந்தேகம் “ என்றான்.

“ரகு, நீ ஒரு சந்தேகப் பிராணி, இப்படிப் பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டு பிடிப்பை செய்திருக்கிறேன், நீ உளறிக் கொண்டே இருக்கிறாய்.”

ரகுவின் முகம் மாறியது. கம்மிய குரலில்

“சாரி சார், ஒன்றை எடுத்து இதில் ப்ளே செய்து பார்க்கலாம், வேலை செய்யக் கூடும் “ என்றான்.

அந்தக் கருவியை மெதுவாக வெளியே எடுத்து அந்த முக்காலியின் மேலேயே வைத்தேன். உள்ளே முழுவதும் துணியால் தூசு தட்டி துடைத்தேன்.  பித்தளைக் கூம்பை அதன் இடத்தில் பொருத்தினேன். கைப்பிடி சுழல்கிறதா என்று பார்த்தேன். என்ன ஆச்சரியம், அது சரியாக சுழல்வது போல இருந்தது. இப்போது ஒரு ஒலிப் பதிவை ப்ளே செய்து பார்க்க வேண்டும். இந்தப் பழைய ப்ளேயரில் ஏதாவது கோளாறு இருந்தால், ஒலிப் பதிவு கெட்டுப் போகலாம். இவை எல்லாம் மெழுகு. தவறாக அழுத்தினால் எல்லாம் போய் விடும். கனகாம்பாள் பதிவைப் போட எனக்கு தைரியம் இல்லை. வேறு ஒரு உருளையை எடுத்தேன். அதில் இருந்த லேபிள் அரண்மனை ஆஸ்தான வித்வான் ராமண்ணா பாட்டு 1902 என்று எழுதி இருந்தது. நான் எடுத்திருந்த முதல் பெட்டியிலேயே பல வருடத்துப் பதிவுகள் கலந்திருந்தன. ராமசந்திர பாகவதர் என்ற ராமண்ணா இந்த சமஸ்தானத்தில் பெயர் பெற்றவர்.  அவரும் பிரபல வித்வான். அந்த உருளையை எடுத்துத் தனியாக வைத்தேன். முதலில் அதைப் போட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

கவனமாக அதை அந்தக் கருவியில் பொருத்தினேன். சுழல் கைப்பிடியைச் மெதுவாகச் சுற்றினேன். முதல் சுற்று சரியாக வரும் போல இருந்தாலும், வர வர இறுகிக் கொண்டே வந்தது. நடுவில் கர முர என்ற உலோகச் சத்தம் வேறு. நிறுத்தி விட்டேன்.

ரகு அருகில் வந்து அதை உற்றுப் பார்த்தான். “சார் ஏதாவது ஆயில் போட வேண்டுமோ என்னவோ“ எனக்கும் அது நல்ல எண்ணமாகத் தொன்றியது. “

“சார், இதைப் போட்டுப் பார்க்கலாம் “ரகு கையில் மெஷின்களுக்குப் எண்ணெய் போடும் ஆயில் கேன் எடுத்தான். “நான் எதற்கும் தேவைப்படும் என்று ரவீந்தரிடம் வாங்கி வைத்தேன்’ என்றான்.

கவனமாக அவனே அந்த சுழல் கைப்பிடிக்கு அருகில் இருந்த துளையில் சொட்டு சொட்டாக எண்ணெய் போட்டான். எண்ணெயும் இரும்பும் கலந்த வாசனை எழுந்தது. மெதுவாக அதைச் சுற்றினான். இப்போது ஓசை எதுவும் வரவில்லை. ப்ளே செய்யும் கருவியைத் துடைத்து விட்டு, நான் கொடுத்த உருளையைப் பொருத்தி, சுழல் கைப்பிடியை முழுவதுமாகச் சுற்றி விட்டான். நான் மூச்சு விடாமல் அந்தக் கணத்தில் காத்திருந்தேன். உருளை மெதுவாகச் சுழல ஆரம்பித்தது. முதலில் காற்று போல ஓசை வந்தது.

திடீரென்று புயல் போல ராமண்ணாவின் குரல் ஆரம்பித்தது. முதலில் ஒன்றும் புரியவில்லை. கவனமாகக் கேட்டேன்.

அடுத்தக் கணம் ஓலம் போல இருந்தது. மறுபடியும் கவனமாகக் கேட்டேன். ஒலிப் பதிவு இரண்டு நிமிடம்தான்.  ராமண்ணாவின் சங்கீதம் சற்று கூட இனிமையாக இருக்கவில்லை. காட்டுக் கத்தல் என்று தோன்றியது. சங்கீதம் என்று சொல்வதே கடினம். அவர் இந்த ஊர் சமஸ்தானத்தில் மிகப் பெரிய வித்துவான் என்று பெயர் எடுத்தவர்.

ரகு “என்ன சார், இப்படி இருக்கிறது ? ஒரு வேளை கருவியில் கோளாறாக இருக்குமோ” என்றான்.

நான் “ரகு ,கருவி சரியாக வேலை செய்வது போலத்தான் இருக்கிறது. ராமண்ணா பாட்டு அவ்வளவுதான். அதுவும் அந்தக் காலத்து பாட்டு “ என்றேன்.

“என்னவோ சார், இதைக் கேட்டால் பாட்டு மாதிரியே இல்லை“ என்றான்.

“அப்படி எல்லாம் சொல்லாதே, ராமண்ணா இந்த சமஸ்தனத்தின் பெரிய வித்துவான்”

சொல்லிக் கொண்டே நான் சற்று யோசித்தேன்.

“ரகு, இது எல்லாம் பிரித்துப் பார்த்து லேபில்களைப் படித்துக் கண்டுபிடிக்க நிறைய நேரம் ஆகும். மாலை வரை கூட அகலாம். நீ ரவீந்தரைப் பார்த்து இங்கேயே மதிய உணவு கிடைக்குமா இல்லை நாம் வெளியே போய் வர வண்டுமா என்று விசாரித்து வர முடியுமா ? “ என்றேன். ரகு தயங்கி நின்றிருந்தான்.

“நான் அது வரை ஒலிப் பதிவுகளை எடுத்து கால வரிசையில் அடுக்கி அதில் சுந்தரம் தாத்தாவின் பதிவு இருக்கிறதா என்று தேடுகிறேன்” என்றேன்.

ரகு “ சார், நானும் தேடுகிறேன், இன்னும் இத்தனை பெட்டிகள் இருக்கின்றன “ என்றான்.

“இல்லை ரகு, நீ போய் சொன்ன வேலையைக் கவனி “ என்றேன்.

ரகு அரை மனதுடன் வெளியே சென்றான். ஒரு வேளை சுந்தரம் தாத்தாவின் ஒலிப்பதிவு கண்டுபிடித்தால், அந்த  நேரத்தில் அவனும் இருக்க வேண்டும் அன்று நினைக்கிறான் போல.

நான் ஒன்றொன்றாக உருளைகளை எடுத்து, திறந்து காகிதக் குறிப்புகளைப் பார்த்தேன்.  இப்படி ஒரே பெட்டியிலேயே பல வருடத்துப் பதிவுகள் கலந்து இருந்தால், எல்லாவற்றையும் திறந்து கண்டு பிடிக்க ஒரு நாள் போதாது என்று கவலையாக இருந்தது.

இன்னொரு பெட்டியைத் திறந்தேன். அதிலும் பழுப்பு உருளைகள்தான். கூடவே காகிதத்தில் பண்டிட் ராம்ரத்தன் என்று எழுதி இருந்தது. அவர் அந்தக் காலத்து ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் தலை சிறந்த பாடகர். அவரைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன். தவிர பாட்டி நிறையச் சொல்லி இருக்கிறாள். அவர் குரல் கேட்க கச்சேரிகளில் ஆயிரக்கணக்கானவர் காத்திருப்பார்களாம்.  அவர் மதராஸில் வந்து பாடிய போது உள்ளூர் வித்வான்கள் அவர் சங்கீதத்தைக் கேட்டு மயங்கிப் போனார்களாம். அதே சமயம் பயம் வேறு. அவர் எங்காவது நம்முடைய சங்கீதத்தைப் பாடச் சொல்லிக் கேட்டால் என்ன செய்வது என்று. அவருக்கு இணையாக யார் பாட முடியும் என்று விவாதித்து கடைசியாக ஏகமனதாக முடிவு செய்து சுந்தரம் தாத்தாவைதான் கேட்டுக் கொண்டார்களாம். பண்டிட் ராம்ரத்தனும் சுந்தரம் தாத்தாவின் கச்சேரியைக் கேட்டு மிகவும் புகழ்ந்தாராம்.  நம்முடைய மானம் காப்பாற்றப் பட்டது என்று உள்ளூர் வித்வான்களும் ரசிகர்களும் மகிழ்ந்து போனார்களாம்.

அப்போது சிலர் இரண்டு பேரையும் சேர்ந்து பாட வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்களாம்.  அதை இரண்டு பேரிடமும் தனித்தனியாகப் பேசி, ஒத்துக் கொள்ள வைத்தது அப்போது மைலாப்பூரில் பெரிய வக்கீலாக இருந்த ராகவாச்சாரி தானாம். அந்தக் கச்சேரி மாதிரி வாழ் நாளில் கேட்க முடியாது என்று பாட்டி சொன்னாள். இரண்டு பேரும் ஒரே மேடையில் அமர்ந்தது பார்க்கவே கண் கொள்ளாமல் இருந்ததாம். ஜனங்கள் மந்திரத்தால் கட்டுண்டது மாதிரி கேட்டார்களாம். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், அதே சமயம் போட்டியாகவும் இல்லாமால் இரண்டு பேரும் உருகிப் பாடினார்களாம்.  அன்றைக்கே சுந்தரம் தாத்தாவுக்கு தக்ஷிண  பாரத சங்கீத சக்கரவர்த்தி  என்றும் , பண்டிட் ராம்ரத்தனுக்கு உத்தர பாரத சங்கீத சாம்ராட் என்று ஜனங்கள் பட்டங்கள் கொடுத்தார்களாம். அப்படிப்பட்ட பண்டிட் ராம்ரத்தனுடைய சங்கீதம் என்று நினைக்கும் போதே புல்லரித்தது. அந்த ஒலிப் பதிவின் வருடமும் 1898 என்று எழுதி இருந்தது.

அடுத்தது ராம்ரத்தன் ஒலிப் பதிவைக் கேட்கலாம் என்று நினைத்தேன். அந்த உருளையை எடுத்து பொருத்தினேன். கைப்பிடியைச் சுற்றி ஓட விட்டேன். ஒலி வந்தது.

அந்த இரண்டு நிமிடம் மிக மிக நீண்டதாகத் தோன்றியது.

நான் அப்படியே திறந்து கிடந்த பெட்டிகளை விட்டு விட்டு வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தேன். சற்று நேரத்துக்குப் பிறகு மறுபடியும் தேட ஆரம்பித்தேன்.  நிறைய  வாத்தியக் கருவிகள் ஒலிப் பதிவுகள் வந்தன. கடைசி உருளையைத் திறந்தேன். அதில் லேபில் மடங்கி இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். ஒரு கணம் அதிர்ந்தேன். சுந்தரம் தாத்தாதான். “மகாவித்வான் மதராஸ் சுந்தரம்  என்று இருந்தது. “கைவிரல்கள் நடுங்க அந்த உருளையை எடுத்தேன். ரகு இல்லை, சுற்றிலும் பார்த்தேன். வேறு யாரும் கூட இல்லை அந்த மகத்தான தருணத்தில் நான் மட்டும்.

அந்த உருளையைக் கருவியில் பொருத்தி,,கைப்பிடியைச் சுழற்ற ஆரம்பித்தேன்.

கை தானாக நின்றது. அதை ஓட விட விடவில்லை. அந்த உருளையை எடுத்து திரும்ப பெட்டிக்குள் வைத்தேன்.

மூடுவதற்கு முன் சுந்தரம் தாத்தாவின் பெயர் பொறித்த லேபிலை உள்ளே வைக்கவில்லை. அதை என்னுடைய சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.

மணி என்ன என்று பார்த்தேன். ரகு வருவதற்குள் எல்லா உருளைகளிலிருந்தும் லேபில்களை மட்டும் எடுத்து விடமுடியும் என்று தோன்றியது.

 

 

 

 

 

 

5 comments

  1. வித்வான் சுந்தரத்தின் மாயக் குரல் , மாயக் குரலாகவே ஆகி விட்டது. விறுவிறுப்பான கதை, படிப்பவர்களுக்கு வித்வான் சுந்தரம் குரல் வளம் பற்றிய ஆவலைத் தூண்டிய படியே இருந்தது.
    Kudos for the same👏👏
    வர்ணனைகள் பிரமாதம், அரண்மனையை பார்ப்பது போலவே இருந்தது. இசைப்பிரியர்களுக்கு ஒரு சிறந்த கதை

  2. மிக அருமையான சிந்தனை. எளிதில் எவரும் எதிர்பாராத,ஆனால் சாத்தியமான முடிவு. சிறப்பான வர்ணனைகளுடன் செல்லும் அதே நேரத்தில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் கதையோட்டம். தருணாதித்தனின் கதைவண்ணம் கதைக்கு கதை மெருகேறி வருகிறது

  3. By removing the identity of the recordings, author ensures that the magical voice of Sundaram would remain eternally in realms of imgaination only.

  4. Excellent narrator, you are, Krishnan.

    You pulled me deep into the story….got real sneezing while you were describing the way the hall & the door were opened, how the player was found and the excitement to make it work.

    I am proud to be one of your friends.

    Keep writing. God bless you in abundance🙏

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.