நட்பின் பாரம்

எஸ். சுரேஷ்

கதவை திறந்த மேரியை பார்த்து, “என்ன வெய்யில்பா இந்த ஊர்ல” என்று கூறிவிட்டு, ஹாலுக்குள் நுழைந்து, கையிலிருந்த காகித பைகளை சென்டர் டேபிள் மீது வைத்துவிட்டு, ஏஸீ ஸ்விட்ச்சை ஆன் செய்து, ஃபேன்னுக்கு அடியில் உட்கார்ந்தாள் ஜெயா. மேரியை பார்த்து சிரித்துக்கொண்டே பாயல் உள்ளே நுழைந்தாள். “ஷாப்பிங் முடிஞ்சா?” என்று கேட்ட மேரியிடம், “எங்க. நாளைக்கும் போகணுமாம்.” என்றாள்.

டைனிங் மேஜை மேல் பைகளை வைத்துக்கொண்டிருந்த பாயலை பார்த்து, “ஃபிரிஜ்லேர்ந்து ஒரு பீர் எடு” என்றாள் ஜெயா. மேரி பீர் கேன் எடுத்து ஜெயாவுக்கு கொடுத்தாள். “நீ எதுக்கு கொடுக்கற? அவளே வந்து எடுத்துக் கொள்ளட்டும்” என்றாள் பாயல். “சரி விடுப்பா” என்றாள் மேரி. “நீ சும்மா இருப்பா. மேரி வீடு எங்க அம்மா வீடு மாதிரி” என்றாள் ஜெயா.

“என்னப்பா உங்க ஊரு இப்படி சுடுது” என்று கேட்ட ஜெயாவை பார்த்து மேரி சிரித்தாள். “நீ எங்க சுவிட்ஸர்லேண்ட்லயா பொறந்த?” “எங்க பெங்களூர வந்து பாரு பா. இப்போ சுவிட்ஸர்லேண்ட் போலதான் இருக்கும். அடுத்த வருஷத்துலேர்ந்து நாம பெங்களூர்ல சந்திப்போம்” என்றாள் ஜெயா. “எங்க. உங்க வீட்லயா? அங்க நாம தைரியமா தண்ணி அடிக்கலாமா?” என்று பாயல் கேட்டாள். “அந்த விஷயத்துல பெங்களூரு ஒரு தொல்ல பா” என்றாள் ஜெயா. “ஊர் முழுக்க தண்ணி அடிக்குது, ஆனா உன்னால முடியல” என்று சொல்லிவிட்டு மேரி சிரித்தாள். “இமேஜ் மெயின்டய்ன் பண்ணனும். என்ன பண்ண.”

ஏஸீயின் ரீங்காரம் இப்பொழுது தெளிவாக கேட்டது. குளிர் காற்று ஹாலை நிரப்ப ஆரம்பித்தது. வெளியில் சூரியன் மறையும் முன் வானத்தில் வண்ணங்களை பூசிக்கொண்டிருப்பதை அந்த அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியிலிருந்த அந்த மூவரால் பார்க்க முடியவில்லை. அவர்கள் ஜன்னலை கர்டனால் சாத்தியிருந்தார்கள். ஹால் இருட்டத் தொடங்கியவுடன் மேரி விளக்கை போட்டாள். ட்யூப் லைட் வெளிச்சத்தில் அந்த ஹால் மூலையில் கண்ணாடி அலமாரிக்குள் உயர்தர மதுபுட்டிகள் பளபளத்தன. அதே அலமாரியின் இன்னொரு ஷெல்ஃபில் உயர்ரக கண்ணாடி கோப்பைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அலமாரிக்கு மேல் வட்ட கடிகாரம் மணி ஆறு என்பதை காட்டியது. வீடு திரும்பும் பறவைகள் ஓசையை, வீடு திரும்பும் கார்களின் ஓசை மூழ்கடித்தது. லெதர் சோஃபாவில் ஜெயா ஒய்யாரமாக சாய்ந்தபடி பீர் குடித்துக்கொண்டிருந்தாள். ஆளுயர ஃபிரிஜ் அருகில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட டைனிங் மேஜைக்கு அருகில் மேரியும் பாயலும் உட்கார்ந்திருந்தார்கள். ஃபிரிஜ்ஜுக்கு பின்புறம் இருந்த சமயலறை இருட்டில் மூழ்கியிருந்தது. ஜெயாவின் தலைக்குப் பின் சுவரில் பெரிய ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.

“கோவிட் மட்டும் வரவில்லை என்றாள், சில்வர் ஜூப்ளி கொண்டாடியிருப்போம்” என்றாள் மேரி. “ஆமாம். ரெண்டு வருஷம் நாம சந்திக்காமலே இருந்திருக்கோம். இந்த வருஷமாவது முடிந்ததே” என்றாள் பாயல். “நாம் இப்படி வருஷா வருஷம் சந்திப்பதை பார்த்து யாரோ பொறாமைப் பட்டிருக்காங்க. அதுக்குதான் கோவிட் வந்து நம்மை  சந்திக்கவிடாம செஞ்சிது” என்றாள் ஜெயா. மேரியும் பாயலும் உரக்க சிரித்தார்கள். “அவனவன் சைனாக்காரன் தான் கோவிட்ட பரப்பி விட்டாங்கன்னு சொல்றான். நீ என்னன்னா நம்ம உறவுகாரங்க யாரோ தான் கோவிட்டுக்கு காரணம்னு சொல்ற” என்று சொல்லிவிட்டு மேரி சிரித்தாள்.

அதை கேட்காதது போல் ஜெயா, “எனக்கு இன்னொரு பீர் வேண்டும்” என்றாள். மேரி எழுந்து சென்று ஃபிரிஜ்ஜிலிருந்து ஒரு பீர் கேன்னை எடுத்து ஜெயாவிடம் கொடுத்தாள். பிறகு பாயலை பார்த்து, “ஜின் ஆர் வைன்?” என்று கேட்டாள். “வைன்”. மூலையிலிருந்த அலமாரிக்கு சென்று வெவ்வேறு வடிவங்களில் இரண்டு கண்ணாடி கோப்பைகளை எடுத்தாள். பிறகு ஒரு விஸ்கி பாட்டிலும் வைன் பாட்டிலும் எடுத்தாள். பாயல் வந்து கோப்பைகளை வாங்கிக்கொண்டாள். இருவரும் டைனிங் மேஜை மேல் பாட்டிலையும் கோப்பைகளும் வைத்துவிட்டுஅருகில் உட்கார்ந்து கொண்டார்கள். ஏதோ ஞாபகம் வந்தது போல் மேரி எழுந்து சென்று ஃபிரிஜ்ஜிலிருந்து ஐஸ் கட்டிகள்  நிரம்பிய பாத்திரம் ஒன்றை கொண்டுவந்து டைனிங் மேஜை மேல் வைத்தாள். பிறகு ஒரு கோப்பையில் வைன்னையும் இன்னொரு  கோப்பையில் விஸ்கியையும் ஊற்றினாள். விஸ்கி கோப்பைக்குள் இரண்டு ஐஸ் கட்டிகளை போட்ட. பிறகு கோப்பையை மேலே உயர்த்தி, “சீர்ஸ்” என்றாள். பாயல் தன் கோப்பையால் மேரியின் கோப்பையை மெதுவாக தொட்டு “சீர்ஸ்” என்றாள். தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பீர் கேன்னை மேலே தூக்கி “சீர்ஸ்” என்றாள் ஜெயா.

வைன்னை மெதுவாக ருசித்தபடி பாயல், “நாம மூணு பேருமே ஹைத்ராபாத்ல இருந்தா இது போல அடிக்கடி சந்திக்க முடியும். எம்.டி. வரைக்கும் ஒண்ணா படிச்சோம். இந்த கல்யாணம்னு ஒண்ணு நடக்கலைன்னா இங்கயே இருந்திருக்கலாம். கல்யாணம் செஞ்சிண்டு ஒண்ணும் சாதிக்கல” என்றாள்.“மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம்” என்றாள் மேரி. ஜெயாவுக்கு போதை சற்று ஏறியது போல் இருந்தது. “நோ” என்று உரக்க சொன்னாள். “உங்களுக்கு அப்படி இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. மை பிரகாஷ் லவ்ஸ் மீ. யெஸ். ஹி லவ்ஸ் மீ”

மேரியும் பாயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சற்று நேரத்துக்கு மௌனம் நிலவியது. அவர்கள் இருவரும் மதுவை ரசித்து அருந்திக் கொண்டிருந்தார்கள். சமையலறைக்கு சென்று சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மேரி கொண்டுவந்து அதில் பாதியை ஒரு தட்டில் கொட்டி ஜெயாவின் முன் வைத்தாள், மீதியை மேஜை மேல் வைத்தாள். ஜெயா அதற்குள் பீரை குடித்து விட்டிருந்தாள். “இன்னொரு கேன்” என்றாள். “மெதுவா குடி இல்லைனா போதை ஏறிவிடும்” என்று சொன்ன மேரியிடம், “போதை ஏறத்தானே குடிக்கிறது” என்றாள். அவளுக்கு இன்னொரு பீர் கேன்னை கொடுத்தாள் மேரி.

ஜெயாவுக்கு போதையேறிக்கொண்டிருப்பதை மேரியும் பாயலும் கவனித்தார்கள். அவள் வாய் சற்று குளற ஆரம்பித்தது. “மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம், மேரேஜ் இஸ் அ வேஸ்ட் ஆஃப் டைம்” என்று சொல்லிவிடு சிரிக்க ஆரம்பித்தாள். சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு, “நாட் ஃபார் மீ, நாட் ஃபார் மீ”, என்று உரக்க சொன்ன பிறகு, “பிரகாஷ் இஸ் எ ஜெம். அவன போல ஒருத்தன் உங்களுக்கு கிடைக்கல. அதுக்கு தான் கல்யாணம் வேஸ்ட்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்ல. அதுதான் உண்மை. பிரகாஷ் மாதிரி ஒருத்தன் உங்களுக்கு கிடைக்கல, எனக்கு கிடைச்சான். அதுதான் உண்மை. யெஸ். தட் இஸ் தி ட்ரூத். உங்களுக்கு அப்படி ஒருவன் கிடைச்சிருந்தா நீங்களும் என்ன மாதிரி பெரிய ஹாஸ்பிடல் கட்டியிருப்பீங்க. யெஸ். ஐ ஆம் பெட்டர் ஆஃப் தான் யூ. பிரகாஷ், ஐ லவ் யூ”

தன்னை உற்றுப் பார்த்த பாயலின் கண்களை மேரி தவிர்த்தாள். “மேரி, பிளீஸ் மேரி. ஜெயா கிட்ட இத சொல்லாத. உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன். பிளீஸ்”

“நீ தான் ஜெயாவோட தினமும் கூத்தடிக்கிற. என் மேல ஏண்டா கைய வெச்ச?”

“சாரி, சாரி சாரி. என்ன மன்னிச்சிடு. அவளுக்கு சொல்லிடாத”

“வெக்கமா இல்லடா உனக்கு? அவ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அது தெரிஞ்சிருந்தும் நீ இப்படி செய்யர. என்ன மாதிரி பொறுக்கிடா நீ?”

“சாரி, சாரி, உங்க சைட்ல இதெல்லாம் சகஜம்தான்னு அப்படி செஞ்சிட்டேன். நான்….”

“என்னடா சொன்ன, யூ சன் ஆஃப் எ பிட்ச். பண்றத பண்ணிட்டு என்ன பேச்சு பேசற.”

“மேரி, ஐ பெக் யூ. உன்ன கெஞ்சிக்  கேட்டுக்கறேன். ஐ ஆம் சாரி. ஐ ஆம் சாரி. இனிமே இப்படி நடக்காது.”

பாயல் மேரியை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

“ஜெயாகிட்ட சொல்லுடி. அந்த ஆளு அவளுக்கு தேவையில்லை. கொஞ்சம் நாள் முன்னால தான், கவிதா கிட்ட ஏதோ பண்ண போயி செருப்படி வாங்கினான். இப்போ உன் மேலயே கைய வெக்கறான். நீ போய் ஜெயவுக்கு சொல்லு.”

“வேணாம்டி. கவிதா ஜெயவுக்கு சொன்னா. என்ன ஆச்சு? இப்போ அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லை. நம்ம இன்னும் ரெண்டு மாசத்துல பட்டப்  படிப்ப முடிச்கிட்டு, ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைல போக போறோம். இப்போ எதுக்கு இந்த சண்டையெல்லாம்?”

ஜெயா மேரியை பார்த்து, “மேரி, இன்னொரு பீர்” என்றாள். இரண்டு பீர் கேன்களை அவள் முன் வைத்துவிட்டு, சரிந்திருந்த அவளை நிமிர்த்தி உட்கார வைத்தாள் மேரி. ஜெயா பீர் கேனை கையிலெடுத்துக் கொண்டு மறுபடியும் சரிந்தாள்.

வாய் குளறியபடியே, “என் பிரகாஷ் இஸ் அ ஜெம். அவன பார்த்து எல்லோரும் போறாமப்படராங்க. அதுவும் பெண்கள் ரொம்ப போறாமப்  படராங்க. ஏதேதோ கம்ப்ளைண்ட் கொண்டு வராங்க. நான் எல்லாரையும் துரத்தியடிக்கறேன். ஐ பிலீவ் இன் பிரகாஷ். நான் பிரகாஷ நம்புறேன்.”

இந்த முறை மேரியின் பார்வையை பாயல் தவிர்த்தாள், “அந்த ஆளு எல்லா லேடீஸ் ஸ்டாஃப் மேலயும் கையை வெக்க பாக்குறான். அவன் மேல எங்களுக்கு இப்போ மரியாதையே போச்சு. அவன பார்த்தாலே அருவெறுப்பா இருக்கு. அந்த அம்மாக்கிட்ட அவ புருஷன பத்தி சொன்னா நம்மள வேலைய விட்டு தூக்கிடுவாங்க. நீங்க தான் எங்க ரெண்டு பேருக்கும் உங்க கிளினிக்ல வேலை போட்டுக் கொடுக்கணும் டாக்டர் பாயல்”

ஜெயாவின் தெளிவில்லாத குரல் உயர ஆரம்பித்தது, “என்னோட ஹாஸ்பிடல்ல வந்து வேலை செய்யுன்னு பாயலுக்கு சொன்னேன். அவ வரல. அவ சொந்த கிளினிக் நடத்தரா. ஹ ஹ ஹ. என்ன பாரு. நான் ஒரு பெரிய ஹாஸ்பிடலே நடத்தறேன். அந்த ஏரியாவிலேயே பெரிய ஹாஸ்பிடல் என்னோட ஹாஸ்பிடல் தான்.” ஒரு முழுங்கு பீரை குடித்துவிட்டு தொடர்ந்தாள், “என்னோட ஹாஸ்பிடல்லுக்கு டீசண்ட் பீப்பிள்தான் வருவாங்க. சின்ன பசங்க தப்பு தண்டா பண்ணிட்டு என்கிட்ட வரமாட்டாங்க. நான் அவங்க நாக்கு பிடிங்கிக்கர மாதிரி நாலு கேள்வி கேப்பேன். பாயல் அதெல்லாம் கேட்க மாட்டாள்” என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தாள். “உனக்கு தெரியுமா மேரி. எங்க ஊர்ல இருக்கிற ஜைனல மோஸ்ட் நான்-ஜட்ஜுமெண்ட்டல் டாக்டர்ன்னு பாயலுக்கு ஒரு பத்திரிகை பட்டம் கொடுத்திருக்கு. அப்படின்னா கல்யாணம் ஆகாம தப்பு தண்டா பண்ற எல்லா பெண்களும் இவ கிளினிக்கு போவாங்க. இவ அவங்கள ஒண்ணும் கேட்கமாட்டா. அவங்க அப்பா அம்மா வயத்துல தீய வார்த்துண்டு இருப்பாங்க. இங்க டாக்டர் அம்மா பசங்கள என்கரேஜ் பண்ணுவாங்க. அதுக்கு தான் அவளுக்கு இந்த பட்டம். தூ.”

மேரியும் பாயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஜெயா, இருமுறை விக்கிய பிறகு, “என் பொண்ண நான் எப்படி வளர்த்திருக்கேன் தெரியுமா. எனக்கு தெரியாம அவ ஒண்ணும் செய்ய மாட்டா. பாயல பார். அவ பொண்ணு எங்க போறா எங்க வரான்னு இவளுக்கு தெரியாது. என்னா பொண்ண வளர்க்கிறாளோ இவ. என் பொண்ணு என் கூட சண்ட போடரா. ஆனா நான் சொன்ன வழியில தான் அவ நடக்கணும். ஷீ ஹாஸ் டூ லிசன் டூ மீ. யெஸ். ஷீ மஸ்ட் லிசன் டூ மீ” என்று சொல்லிவிட்டு மேஜையை கையால் ஓங்கி அறைந்தாள்.

மேரி பாயலை பார்த்தாள். “ஆண்டி, பிளீஸ் ஆண்டி. எங்க அம்மா உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு எனக்கு தெரியும். ஆனா இந்த ஊர்ல உங்கள விட்டா வேற டாக்டர் கிட்ட போக எனக்கு பயமா இருக்கு. பிளீஸ் ஆண்டி. எங்க அம்மாக்கிட்டா சொல்லாதீங்க.”

“ஏன்…”

“பிளீஸ் ஆண்டி. ஒண்ணும் கேக்காதீங்க. நான் இனிமே இப்படி பண்ண மாட்டேன். பிராமிஸ். ஐ பிராமிஸ் யூ”

இருக்கையை விட்டு தள்ளாடியபடி எழுந்த ஜெயா, உவேக் என்று வாந்தி எடுத்தாள். மேரியும் பாயலும் விரைவாக சென்று அவளை கைத்தாங்கலாக பாத்ரூமூக்கு அழைத்து சென்றனர். ஜெயா இன்னும் இரு முறை வாந்தி எடுத்துவிட்டு ஆழ ஆரம்பித்தாள். “ஐ ஆம் ஸாட். ஐ ஆம் ஸாட்” மறுபடியும் ஒரு முறை வாந்தி எடுத்துவிட்டு, “எனக்கு எதுவுமே பிடிக்கலை. எனக்கு எதுவுமே பிடிக்கல. யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்’ என்று கூறிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள். மேரியும் பாயலும் மெதுவாக அவளை படுக்கையறைக்கு அழைத்து சென்று, படுக்கையில் கிடத்தி, போர்வையை போர்த்திவிட்டார்கள். பிறகு இருவரும் ஹாலுக்கு வந்து, மௌனமாக மது அருந்த ஆரம்பித்தார்கள்.

 

.

 

 

 

 

 

 

 

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.