அலுவலங்களில் வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்கும் அன்றாட மாலைப் பொழுதில் அசோகமித்திரனின் ‘இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்‘ சிறுகதை ஆரம்பிக்கிறது. சிக்னல் விழும்போது “… ஏதாவது ஒரு வரிசை வெறி பிடித்தது போலச் சீறி விரையும்,” என்று எழுதியிருந்தால் வழக்கமான விவரிப்பாக இருந்திருக்கும். ஆனால் அதனுடன் “பிரமாண்டமான பஸ்களிலிருந்து சாத்வீகமாகத் தோற்றமளிக்கும் சைக்கிள்கள் வரை அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்ற பின்னிணைப்புப் போன்ற வரியை கோர்க்கும்போது – உண்மையில் அனைத்து வாகனங்களும் ஒரே வேகத்தில் செல்வதில்லை எனபதை, “…அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்று வாகனங்களில் குடிகொள்ளும் வெறி வெளிப்படுவதில் உள்ள வேறுபாட்டை, – அந்த விவரிப்பு நுட்பம் கொள்கிறது. இத்தகைய சிக்கனமான சித்தரிப்புக்கள் பரபரப்பான அந்தி வேளையை உயிர் கொள்ளச் செய்கின்றன.
இந்த பரபரப்பின் ஒரு கண்ணியான சகுந்தலா அலுவலகம் விட்டு வெளியே வருகிறாள். பேருந்து நிறுத்தம் வரும் அவள் ராஜரத்தினம் அங்கில்லை என்று ஆசுவாசப்படும்போது அவள் மனமும் ஏதோ பரபரப்பு கொண்டுள்ளது என்பது புரிகிறது. ராஜரத்தினம் அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவன் ஒன்றும் இல்லை. அவனும் சகுந்தலாவும் காதலர்கள். அப்போது அவனும் அங்கு வர ஒரு ‘பொறி’ மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஹோட்டலுக்குச் சென்று உரையாடுகிறார்கள். ராஜரத்தினம் தாங்கள் மணம் புரிவது குறித்து சகுந்தலா தன் வீட்டில் சொல்லிவிட்டாளா எனக் கேட்க, சகுந்தலா உடனே பதில் சொல்வதில்லை. சகுந்தலாவின் அக்காவிற்கு திருமணமாகாத நிலையில் தன்னால் வீட்டில் இது குறித்து பேச முடியாத சூழல் இருப்பதாய் சகுந்தலா சொல்கிறாள். இது இவர்களுக்கிடையே ஏற்கனவே நடந்துள்ள, அடிக்கடி நடக்கும் உரையாடலின் நீட்சிதான் என்று நமக்குப் புரிகிறது. சினம் கொள்ளும் ராஜரத்தினம் அடுத்த திங்களன்று முடிவாகச் சொல்ல வேண்டுமென்று கடுமையாகப் பேசிவிட்டுச் செல்கிறான். ஏன் முதலில் ராஜரத்தினம் இல்லாததால் சகுந்தலா ஆசுவாசமடைந்து பின்பு அவனைக் கண்டு ‘பொறி’ மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பது இப்போது புரிகிறது.
சகுந்தலா வீட்டுக்குச் செல்கிறாள். மீண்டும் பின்மாலை/ முன்னிரவு நேரச் சித்தரிப்புகள், அதனூடே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்கிறோம். 30 வயதாகும் சகுந்தலாவின் அக்கா எஸ்.எஸ்.எல்.சி தாண்டாதவள், வீட்டின் அனைத்து வேலைகளையும் அவள்தான் பார்த்துக்கொள்கிறாள், அவள் ஏற்று நடத்தாத வீட்டுப் பொறுப்பே கிடையாது. ஆனால் வேலைக்குச் செல்லாத, அதே நேரம் அதை ஈடு செய்யக்கூடிய பெரிய வசதிகள் இல்லாத குடும்பத்துப் பெண்ணை மணம் புரிய யாரும் இல்லை. இது அக்காவிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை “இப்போதும் அவள் குளித்துவிட்டு வந்தவுடனே அழகாக இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் ஐந்து பத்து நிமிடங்களுக்குள் முகத்தைக் களையிழக்கச் செய்யும் சோர்வும் சலிப்பும் மெல்லிய கோடுகளாகவும் சுருக்கங்களாகவும் வந்து விடும்,” என்று அ.மி விவரிக்கிறார். இங்கு சோர்வும், சலிப்பும் வயது அதிகமாவதால் மட்டுமல்ல, ஒரே விதமாக முடியும் தொடர் பெண் பார்க்கும் படலங்கள் உருவாக்குபவை என்று உணர முடிகிறது.
வீட்டிற்கு வரும் சகுந்தலாவிடம் அவள் அக்கா தலைவலியால் படுத்திருப்பதாக அவள் தாய் சொல்கிறார். அவள் மூக்குக்கண்ணாடி அணிய நேரக்கூடும், அதுவும் வரன் தகைய தடையாக இருக்கக்கூடும் என என சகுந்தலா எண்ணுகிறாள்.
இப்போது அ.மியின் கதைசொல்லலில் வாசகன் நேரடியாக ஒரு முறை கூடப் பார்க்காத, வீட்டில் மட்டுமல்ல கதையிலும் ஒரு ஓரத்தில் இருக்கும் சகுந்தலாவின் அக்கா விஸ்வரூபமெடுக்கிறார். சகுந்தலாவின் காதலுக்கு இணையாக -அவள் இன்னும் எத்தனை நாள் அக்காவிற்காக தன் திருமணத்தை தள்ளிப்போடுவாள் – அவள் அக்காவின் எதிர்கால வாழ்க்கை என்ன என்றும் வாசகன் கவலை கொள்ள ஆரம்பிக்கிறான். இதற்கடுத்து வாசகனின் கவனம் இருவரின் பெற்றோர் மீதும் திருப்புகிறது. தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்விக்க முடியாதது குறித்த குற்றவுணர்வுடன் அவர்கள் குமைந்து கொண்டிருக்கக்கூடும். அவர்கள் சகுந்தலாவின் அக்காவை மணம் முடிக்க அதிக முயற்சிகள் எடுக்கவில்லையா, அல்லது அவர்களின் இயலாமையே ஒரு தடையாக இருக்கிறதா என்பதை வாசகனின் யூகத்திற்கே அ.மி விட்டுவிடுகிறார்.
“இன்று ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டே சகுந்தலா படுக்கும்போது கதை முடிய, அந்த நினைப்பில் உள்ள நம்பிக்கையின்மையை அவள் மட்டுமல்ல, வாசகனும் உணர முடிகிறது. சகுந்தலா மட்டுமல்ல, அவள் அக்கா, பெற்றோர் மற்றும் ராஜரத்தினம் அனைவருக்கும் – இதையே விழையும் நகரின் எண்ணற்ற மனிதர்கள் போல் – அன்றிரவு உறக்கம் அரிதான ஒன்றாகத்தான் இருக்கும்.
தினமும் நாம் பங்குபெறும் காட்சியில் – சகுந்தலாவும் ராஜரத்தினமும் தாங்கள் சந்திக்கும் முதல் நிமிடத்தில் ‘என்ன என்ன’ என்று பரஸ்பர கேள்விகள் முடியும் முன் பேருந்து வந்து விட ராஜரத்தினம் இடம் பிடிக்க ஓடும் வழக்கமான நிகழ்வு – ஆரம்பித்து, அதில் அரை கணத்திற்கு மேல் கவனம் கொள்ளாமல் நாம் கடந்து செல்லும் எண்ணற்ற – பலதரப்பட்ட இக்கட்டில் இருக்கும் – முகங்களில் ஒன்றின் பிரச்சனையாக விரிந்து, அதனூடாக ஒரு குடும்பத்தின் சித்திரத்தை உருவாக்கும் மூன்று இழைகள் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ள இக்கதை எளியவர்களின் அன்றாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அ.மியின் இன்னுமொரு கவனத்திற்குரிய படைப்பு.
oOo
அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து-
oOo
ஒளிப்பட உதவி – காலச்சுவடு
3 comments