ஏன் எழுதுகிறேன்? பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

எழுதுதல் எனும் மொழியின் துணையால் நிகழ்த்தப்படும் சாகசத்தின் மீது இன்னும் ஆர்வம் குறையாதிருப்பதால் ஒவ்வொரு சாகசக்காரனும் உச்சபட்ச சாகசத்திற்காக மேஜையின் எதிரேயிருந்து காகிதத்தின் அல்லது கணிணித் திரையில் தோன்றும் வெண்பரப்பில் (இதன் பிறகு வெண்பரப்பு என்றே சுட்டப்படும்) குதிக்கிறான்.  அதன் வசீகரமோ ஒரு துப்பாக்கியின் இருப்பை, ரேஸ்கோர்ஸ் லாயக் குதிரைகள் இடைவெளியில் தலைநீட்டிப் பார்க்கும் அழகை, ரோலர்கோஸ்டர் பயணத்தின் படபடப்பை, கட்டிட விளம்பிலிருந்து அதலபாதாளத்தைப் பார்க்கும் நிலையை ஒத்திருக்கிறது.

புனைவு எழுதுவதின் ஈர்ப்பே இறுதி வாக்கியமாக எதை எழுதப்போகிறோமென்று தெரியாமலே எழுதுவது.  அது ஒரு பயணம் அல்லது அதுவாகவே மொட்டவிழும் ஒரு ரகசியம்.  இவ்விதத்தில் அது வாழ்வைப் போலவே எதிர்பாராமையின் குதிரைகள் ஒவ்வொரு திசைக்கு ஓடும் நிகழ்வாக இருக்கிறது.  எழுதுதல் சிந்தனையையும், மொழியையும் இணைக்கிறது.  மொழியின் மலர் எழுதும் பொழுது எதிர்பாராமல் மலர்கிறது.  அதன் அழகும், சிந்தித்தல் எனும் எல்லையற்ற மகிழ்ச்சியும் எழுத்தில் இணைகிறது.  சிந்திப்பதை விடவும் மனிதர்களுக்கு விலையேயில்லாத மகிழ்ச்சி வேறு எதுவுமேயில்லை. ஒரு சிந்திக்கும் உயிரியாக, அதன் சுழலில் சிக்குண்டு சேர்ந்து சுழல்வதில் உண்டாகும் ஒரு மயக்கநிலை, தன்னுணர்வற்ற நிலையில் அல்லது உயர் விழிப்பில் பிரக்ஞையின் பேய் பீடித்த கைகளால் எழுதப்படும் எழுத்தில் வெளிப்படும் ஓர் உலகு அளவற்ற மகிழ்ச்சியை அல்லது வெறுப்பைத் தருகிறது.

ஹெராக்லிடஸின் நதி நில்லாமல் ஓடுகிறது. அதனைக் கரையிலிருந்து பார்த்து, நீர் மீது மிதந்த வண்ணங்களை, துள்ளிய மீன்களை, அடர்த்தியான அமைதியை வெண் பரப்பில் எழுத்தாக மாற்றும் உலகோடு ஒட்டா இயல்பு, தற்கொலைகளின் மீதான அல்லது கத்திகளின் கூர்மையின் மீது கொள்ளும் தற்காலிகப் பற்றிற்கு ஒப்பானது.  படைப்பொன்று அதன் குளிர் முகத்தில் ஒளிரும் கதிர்களோடு நம் மனம் விரும்பும் வண்ணத்தோடு மிளிர்ந்தால் அதை எழுதிய செயலுக்காக சொற்களின் மகுடம் நம் தலையில் அமர்கிறது.  எழுத்து வெறுப்பளிக்கும் சமயங்களில் உலகில் எழுதுவதைத் தவிர வேறெல்லா செயல்களும் உபயோகமானதாகத் தெரிகிறது.

எழுதுதல் அனைத்தினின்றும் விலகி, அனைத்தையும் பற்றி சிந்திக்கும் ஒரு செயல் என்ற முறையில் உலகைப் பிரதி செய்வதற்கும், அதனோடு வினையாற்றுவதற்கும், புதிய உயிரிகளைப் படைப்பதற்கும், நம்பிக்கை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.  படைப்புகளின் வழியே ஓர் ஆளுமை உருவாக்கமும், ஆளுமை உருவாக்கத்தின் வழியே படைப்புச் செழுமையும் நிகழ்வதால் படைப்பு, சராசரி வாழ்க்கை வாழும் என்னைப் போன்றவர்களை வேற்று உலகத்தின் மின்னல் புரவிகளில் பயணிக்கும் வேலேந்திய வீரனாக கருதிக் கொள்ளச் செய்கிறது.  எழுதுவதால் உண்டாகும் மூளைக் காய்ச்சலின் பக்க விளைவு இது.

சமூக உற்பத்தியில் எழுத்தும் ஓர் அலகு என்றாலும், படைப்பு உற்பத்தியினின்று வெளியே நடக்கும் ஒரு செயலென்றாலும் எழுதுதல் முழுக்க தனிப்பட்ட செயலாக இருக்க முடியாது.  இந்த சமூகத்தோடு ஒரு தொடர்பை அது ஏற்படுத்திக் கொள்கிறது.  ஒவ்வொரு வாசகரும் சமூகத்தின் எண்ணற்ற கண்களில் ஒன்றாக இருக்கும் அதே வேளையில் தனிநபராகவும் இயங்குவதால் எழுதுதல் சமூகம், தனிநபருக்குமான பங்களிப்பும் கூட.

உலகு, புலன் அனுபவம், மனதிலுண்டாகும் சிந்தனை, செயல் – இந்த வரிசையை மொழியால் மீண்டும் நிகழ்த்திக் காட்டுவது அல்லது நிகழ்ந்தவற்றை அழித்து எழுதுவது, மாற்றி எழுதுவது, நகலெடுப்பது என எழுதும் முறைகள் எல்லாவற்றிலும் நிகழ்வது ஓர் இணை நடவடிக்கை.  வெண்பரப்பு உடலில் தொட்டுணர முடியாத உலகை தொட்டுணரக் கூடிய உலகிற்கு இணையான ஒன்றாக சுழல விடுவது.  இதுவரையிலும் கதை கேட்டவர்களும் சொல்லியவர்களும் அப்படி ஓர் உலகை வாழ அனுமதித்திருக்கிறார்கள்.  அந்த உலகின் வேர்களுக்கு நீர் பாய்ச்சுகிறார்கள்.  நானும் அந்த உலகிலோர் அங்கம்.

ஒரு நல்ல தையற்காரனுக்கு துணியை எங்கே வெட்டினால் கச்சிதமான ஆடையைத் தயாரிக்க முடியுமென்று தெரியும்.  எழுதுதல் உலகின் நீள் துணிகளை தேவைப்படும் இடங்களில் வெட்டி ஓர் ஆடையாகத் தயாரிப்பதே.

பொருளாதார விடுதலை, சமூக விடுதலை, ஆத்மீக விடுதலை ஆகிய மூன்று அடிப்படை விடுதலைகள் மனித சமூகத்தின் இயக்கத்திற்கு உந்துசக்தியாக இருக்கின்றன.  மனிதர்களற்ற ஏனைய உயிர்களோ உயிர்த்திருத்தலும், இனப்பெருக்கமுமே வாழ்க்கையாக, அவற்றையும் கடந்து பல்லுயிர் சூழலின் செழுமைக்கு பங்களிப்பவையாகவும் இருக்கின்றன.  வாழ்வதற்கும், உயிர்த்திருத்தலுக்குமான போராட்டமே வன்முறைக்கும், அரசியலுக்கும், தத்துவத்திற்கும் அடிப்படைகளை உருவாக்குகிறது.  அன்பென்றொரு நம்பிக்கையும் இணைகிறது.

எழுதுதல் ஆழ்ந்து சிந்திப்பதற்கான வழி” – டான் டெலிலோ.  எழுதுதல் குறித்து டெலிலோ சொன்னது அவருடைய பணிகளின் அளவிற்கு முக்கியமானதும் கூட.  ஒரு படைப்பை எழுதி முடித்து வாசிக்கையில், திருத்தி முடித்து மறுவாசிப்பதில் இதுவரையிலும் சிந்தனைப் புலன் நுழைந்திராத நுண் தூவரங்களில் முளைக்கத் தயாராகவிருக்கும் விதைகள் கண் திறக்கத் தயாராவதை கண்டு அவற்றை மகிழ்ச்சியோடு முளைப்பதற்கான சூழலை சொற்களால் உருவாக்கி விட்ட திளைப்பு, வாசிப்பவர்களால் நிராகரிக்கப்படுவதற்கோ, ஏற்கப்படுவதற்கோ முன்பெழும் அனுபவம்.  ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்பு எழுதுபவரின் பயணத்திற்கான கடவுச்சீட்டாக இருக்கிறது.  நிராகரிக்கப்பட்டவையோ பழைய கத்தியாக கூரின்றி பெட்டியில் உறங்குகின்றன.  வாசகர்கள் நிகழ்த்தும் வினையோடு முற்றிலும் தொடர்பற்றதாக எழுதும் செயல் இருக்க, படைப்பின் ஆயுளோ வாசிப்பவர்களின் கண்களையும், மனதையும் சார்ந்திருக்கிறது.  வாசிப்பே புத்தகத்தை உருவாக்குகிறது என்று சொன்ன போர்ஹேசின் கருத்தை ஒத்திருக்கிறது.

வாழ்க்கையை, உயிர்ச்சூழலை, பிரபஞ்சத்தின் அர்த்தமில்லா விரிவை ஒரு மையத்தில் நின்று அவதானித்து படைப்பாக்க முயல்வது, இங்கே ஒரு வாழ்வை வாழ்வதற்கு தனக்குத் தானே அளித்துக் கொள்ளும் வெகுமதி.  அந்த வெகுமதி நம்மை பல கோடி உயிர்கள் மத்தியில் தனிச்சிறப்பு மிக்கவனாய் ஆக்குகிறது.  இங்கே சொல்லப்பட்ட தனிச்சிறப்பே ஒவ்வொரு மனித மனமும் எண்ணிலடங்காத முறை வேண்டி நிற்கிறது.  ஆயினும் அதற்கான வாழ்வை அமைத்துக் கொள்ள தயங்குகிறது.

எழுத்து முதலில் இந்த தயக்கத்தை உடைக்கும் செயல்.  பின்பு சொற்களின் மீது ஏற்படும் பிடிமானம். அதன் பிறகு இலாவகம்.  உழைப்பின்றி இவற்றில் எதையும் பெற முடியாது.  பொருள், கருத்து, கவனம், கேளிக்கை, உல்லாசம், இழிவரல், மகிழ்ச்சி, வரலாறு, திளைப்பு ஆகியவையும் இங்கே இச்சமயம் சொல்லாமல் விடப்படுபவையும் படைப்பு, சமூகத்திற்கும், தனி மனிதனின் வாழ்விற்கும் அளிக்கும் ஆபரணங்கள்.  எழுத்து, எழுதுபவருக்கு மட்டுமல்ல வாசிப்பவருக்கும் தங்கள் வாழ்வை அலங்கரித்துக் கொள்ளத் தேவையான ஆடம்பரம்.  அறிவின் முலாம் பூசப்பட்டதால் எழுத்து வெய்யிலாய் ஜொலிக்கிறது.

ஒவ்வொரு முறையும் எழுதுவதற்கான காரணங்களாக எனது தனிமையோ, தொடர்ந்து கொப்பளிக்கும் ஒரு சிந்தனையோ, கவனமோ, தோல்வியோ இருக்கின்றன.  ஆடைகளற்ற உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னுடைய எழுத்து aggressionஆல் உருவாகிறது எனலாம்.  ஒரு சாதாரண வாழ்வை, ஆங்கில வார்த்தைகளில் சொன்னால், mediocrity, status quo, சிந்திப்பதின் சராசரித்தனம் ஆகியவற்றிற்கு எதிரான aggression என்னுடைய எழுத்தாக இருக்கிறது (ஆரம்ப கட்டங்கள் வேறு).  இது என்னுடைய ஒரு நாளின் பெரும்பாலான மணிநேரங்கள் நான் வாழும் வாழ்க்கைக்கு எதிரான கிளர்ச்சியாக இருக்கிறது.  ஒரே சமயத்தில் 700 கோடி மனிதர்களில் ஒருவனாகவும், அப்படி இருப்பதற்கு எதிராக நானே எனக்கு எதிராக செய்து கொள்ளும் கலகமுமாக எழுத்து இருக்கிறது.  எழுத்தே எனது அடையாளங்களில் நானே உருவாக்கிக் கொண்டவற்றில் தலையாய ஒன்று.  என் முகம் போன்றது.

மண்ணைக் குடைந்தும், மண்ணிலிருந்து வெளியேறியும், ஆகாயத்தை துளைத்தும் உயிர்கள் வாழ்கின்றன.  பொருட்கள் மதிப்பை உருவாக்குகின்றன.  நாமோ இவை அனைத்தையும் மொழியின் வழியாக ஒரு படைப்பாக மாற்றும் வாய்ப்பை பெற்றவர்கள்.  நானோ அவற்றை படைப்பாக மாற்றும் உழைப்பைச் செலுத்துபவன்.

நுண்ணிய அறிவே மிகச் சிறந்தது.  எளிமையும் அதனோடு சேர்ந்தால் அதுவே ஞானமாகவும் இருக்கிறது.  அறிவும், ஞானமும் கூடவே விலகியிருத்தலும், அன்பும் வாழ்க்கையை பீடித்த அர்த்தமற்ற தனிமையை பேயோட்டுகின்றன.  எழுத்து எனது வாழ்வின் அர்த்தமின்மையை, தனிமைச் சுமையை, ஏற்றுக் கொண்ட வாழ்வின் சராசரித்தனத்தை உடைப்பதற்காக தேர்ந்தெடுத்த சாகசமிக்க ஒரு வழி.  அதுவே என்னை நானாக இருக்கவும் அனுமதிப்பதாக இப்போதெல்லாம் வேறெப்போதையும் விட அதிகமாக நம்புகிறேன்.  எழுத்தே எனது நம்பிக்கை.  ஆகவே எழுத்தே எனது தஞ்சமாகவும் இருக்கிறது.

(கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் கிராமத்தில் பிறந்து வளர்ந் பால பொன்ராஜ், நிதி மற்றும் வங்கித் துறைகளில் பணியாற்றுகிறார்.  “அடிக்கடி இடப்பெயர்வும், அதனால் உண்டாகும் அலைச்சலும் நிரம்பிய வாழ்க்கை” என்று கூறும் பால பொன்ராஜ்,   சிறுகதை, கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனங்கள் எழுதியுள்ளார். ‘புத்தகங்கள்   கனவும் மிருகம்‘  – சிறுகதைத் தொகுப்பு (2013), அச்சில் வந்துள்ளது. ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை‘ –  ஜூன் 2016ல் அச்சு வடிவம் பெறவிருக்கிறது)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.