கம்பனின் அரசியல் அறம் – வளவ.துரையன் கட்டுரை

மணக்கோலத்தில் கண்ட தன் மகன் இராமனுக்கு மாமுடி புனைவித்து மன்னனாக்க எண்ணம் கொண்டான் மாமன்னன் தயரதன். அமைச்சர் பெருமக்களும் அதனை ஏற்றனர். உடனே தயரதன் தன் குலகுருவான வசிட்டரை அழைத்து, ”இராமனுக்கு நல்லுறுதி வாய்ந்த உரைகளைக் கூறுவாயாக” என்றான்.

வசிட்ட முனிவன் இராமனை அடைந்து, “ நாளை உனக்கு இந்த நானிலம் ஆளும் உரிமை வழங்கப்பட இருக்கிறது. எனவே நான் ஒன்று கூறுவதுண்டு உறுதிப் பொருள். நன்று கேட்டுக் கடைப்பிடி” என்று கூறி அரசன் கைக்கொள்ளவேண்டிய அறங்களை எடுத்துக் கூறுகிறான்.

வசிட்டன் உரைப்பனவாகக் கம்பன் பதினைந்து பாடல்களை இயற்றி உள்ளான். தெளிந்த நல்லறம், மனத்தில் செப்பம் உடைமை, கருணை ஆகிய மூன்றையும் ஆள்பவர் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறும் வசிட்டன்,”சூது என்பதுதான் அனைத்துக் குற்றங்களுக்கும் மூலகாரணமாகும்; அதை அறவே விலக்க வேண்டும்” என்கிறான்.

”சூதானது பொருளை அழிக்கும்; பொய் சொல்லத் தூண்டும்; அருளையும் கெடுக்கும்; அல்லவையும் தரும் “ என்ற பொருளைத் தரும் குறளான,

”பொருள்கொடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்[து]

அல்லல் உழப்பிக்கும் சூது”

என்பது நினைவுக்கு வருகிறது. மேலும், “ஆள்வோர் எவரிடத்தும் பகைமை பாராட்டலாகாது. பகைமை இல்லாத அரசனின் நாட்டில் போர் இல்லாமல் போகும்; அவனது படையும் அழியாது; அவன் புகழ் பெருகும்” எனும் கருத்தில் ‘போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது” என்று கூறுகிறான். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இன்றைய உலக அரசியலுக்கு இது முக்கியமான அறவுரையாகும். சிறந்த அரசாட்சி எதுவென்பதற்கு வசிட்டனின் கூற்றாகக் கம்பன் ஓர் இலக்கணம் வகுக்கிறான்.

”கோளும் ஐம்பொறியும் குறைய பொருள்

நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின்

ஆளும் அவ்வரசே அரசு அன்னது

வாளின் மேல்வரும் மாதவம் மைந்தனே” என்பது கம்பனின் பாடல்.

அதன்படி, “மெய்,வாய், கண்,மூக்கு எனும் ஐம்பொறிகள் உண்டாக்கும் ஆசைகளை அடக்கி, தனது நாட்டுக்குத் தேவையான பொருளை நாள்தோறும் நல்ல வழியில் சேர்த்து, நடுநிலைமையில் நின்று ஆளுகின்ற அரசாட்சியே உண்மையான சிறந்த அரசாட்சியாகும் என்பது விளக்கமாகிறது. இப்படி நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை விளக்க ”அந்த ஆட்சி வாளின் முனையில் நின்று செய்கின்ற பெரிய தவம் போன்றதாகும்” என்ற உவமையும் கம்பனால் கூறப்படுகிறது.

மேலும் அறிவுசால் அமைச்சரின் சொற்படிதான் ஆட்சியாளர் செயல்பட வேண்டும் என்பதை விளக்க மும்மூர்த்திகளின் தோள்வலிமையை ஒருவரே பெற்றிருந்தாலும் “அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே” என்று வசிட்டன் இராமனிடம் கூறுகிறான். அத்துடன் “ஐம்புலன்களை அடக்கினால் மட்டும் போதாது; மனத்தில் அன்பு கொள்ள வேண்டும்; ஏனெனில் அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?” என்றும் வசிட்டன் கூறுகிறான்.

“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பதுதான் பண்டைய தமிழ் இலக்கிய மரபாகும். இதன்படி இவ்வுலக மக்களெலாம் உடலாகவும், அவர்தமை ஆளும் மன்னன் உயிராகவும் சித்தரிக்கப் படுகிறான். கம்பன் இதை அப்பட்ரியே மாற்றுகிறான்.

”உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”

”வையம் மன்உயிர்ஆக அம்மன்உயிர்

உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னன்”

எனும் அடிகள் மக்களை உயிராகவும், அவ்வுயிரைப் பேணும் உடலாகவும் மன்னனைக் காட்டி மக்களாட்சித் தத்துவத்தைக் காட்டுகின்றன.

அடுத்து, அரசன் கொள்ளவேண்டிய குணங்களைக் கூறும் வசிட்டன் அவற்றைப் பட்டியலிடுகையில், ”இன்சொல், ஈகை, நல்வினையாற்றல், மனத் தூய்மை, வெற்றிபெறல், நீதிநெறி நடத்தல்,” என்ற குணங்களை முன் நிறுத்துகிறான். அரசன் கொள்ள வேண்டிய நடுநிலையைக் கூறும் போது, ”சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்” என்று வள்ளுவர் கூறும் துலாக்கோல் உவமையையே கம்பனும் பின்பற்றி, “செம்பொன் துலைத்தாலம் அன்ன” என்று பொன்னைத் துல்லியமாக நிறுத்து நடுநிலைமையைக் காட்டும் தராசைப் போன்று ஆட்சிபுரிவோர் இருக்க வேண்டும் என்று கூறுகிறான்.

மேலும் ஆட்சியாளர்க்கு அறிவு சார்ந்த சான்றோரிடம் தொடர்பு கொள்வதும், அவர் வாக்கின்படி ஒழுகுவதும் முக்கியமானவையாகும்.

அதனால்தான் கண்ணகி நீதிமுறை தவறிய பாண்டியனின் நாட்டில் “சான்றோரும் உண்டுகொல்” என்று கேட்கிறாள். எனவேதான் ஆன்றோரிடம் செலுத்தும் அன்பு ஓர் அரசனுக்கு ஆற்றல் மிக்க ஆயுதமாக விளங்கும் என்று வசிட்டன் இராமனுக்கு விளக்குகிறான்.

’தூமகேது’ எனும் பெயருடைய வால் நட்சத்திரம் தோன்றினால் உலகிற்குக் கேடு சூழும் என்பது ஒரு நம்பிக்கையாகும். மங்கையர் மீது வரும் தீராக்காமமான பெண்ணாசை அத்தகைய தூமகேது போன்றது. அதை விலக்கினால் அரசர்குக்க் கேடு இல்லை எனும் பொருளில்,

”தூமகேது புவிக்கு எனத்தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின் கடுங் கேடுஎனும்

நாமம் இல்லை நரகமும் இல்லையே”

எனக் கம்பன் பாடுகிறான்.

வசிட்டன் கூறும் இந்த அறமுறைகளை எல்லாம் இராமன் நன்றாக மனத்துள் வாங்கிக் கொள்கிறான். கிட்கிந்தைக்கு அரசனாக, சுக்ரீவனுக்கு இலக்குவனைக் கொண்டு முடி சூட்டுவித்த பின்னர் இராமன் சுக்ரீவனுக்கு அரசியல் அறங்களை எடுத்துக் கூற வசிட்டன் உபதேசம் மிகவும் உதவுகிறது.

“மங்கையர் பொருட்டால் மாந்தர்க்கு மரணமுண்டாகும்; அத்துடன் பழிப்பும் உண்டாகும்; இதற்கு உருமையைக் கவர்ந்த வாலியே சாட்சி” என்று சுக்ரீவனிடம் இராமன் உரைக்கிறான்.

சுக்ரீவனுக்கு இராமன் கூறும் அறவுரைகளாகக் கம்பன் ஒன்பது பாடல்கள் இயற்றி உள்ளான்.

“அமைச்சர்கள் வாய்மைசால் அறிவில் மேம்பட்டவராய் இருக்க வேண்டும். படைத்தலைவர்கள் குற்றமில்லாத நல்லொழுக்கத்துடன் கூடியவராய் இருக்க வேண்டும். ஆள்வோர் இவ்விருவரோடும் மிகவும் நெருங்காமலும், அதே நேரத்தில் விட்டு விலகாமலும் பழகி ஆட்சி செய்ய வேண்டும்.

புகை எழுந்தால் அங்கே எரியும் தீ இருக்கிறது என்று ஊகிக்கும் திறனோடு, நூல் வல்லார் அறிவையும் அரசன் பெற்றிருக்க வேண்டும்; பகைமை கொண்டவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்பப் பயன் உண்டாகும் படி நடக்க வேண்டும்.

சுக்ரீவனே! ஆட்சி புரிவோரிடம் சில நல்ல குணங்கள் இருக்க வேண்டும். செய்ய வேண்டியவற்றைச் செய்தல், மற்றவர் தம்மைப் பற்றி வசைமொழி கூறிய போதும் தாம் அவர் பற்றி இனியவையே கூறல், உண்மை பேசுதல், தம்மால் முடிந்த மட்டும் இரப்பவர்க்கு ஈதல், பிறர் பொருளைக் கவராமல் இருத்தல் என்பனவே அவை.

மேலும் ஆட்சியாள்வோர் தாம் வலிமையுடையவர் என்று எண்ணி எளியவரை அவமதிக்கக் கூடாது. அவ்வாறில்லாமல் நான் கூனிக்குச் சிறு கேடு செய்ததால் துன்பக் கடலுள் வீழ்ந்தேன்.

ஆள்வோர் “இவன் நம் தலைவர் அல்லர்; நம்மைப் பெற்றெடுத்த தாய் போன்றவர் என்று குடிமக்கள் கூறுமாறு அவரைப் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டிற்கு எவரேனும் தீமை செய்தால் அத் தீயவரை அறத்தின் எல்லை மீறாமல் தண்டிக்க வேண்டும்.

அறத்தினது இறுதி வாழ்நாட்டுக்கு இறுதி; அதாவது அறவழியிலிருந்து தவறுதல் ஆயுளின் முடிவுக்கே காரணமாகி விடும், எனவே செல்வத்துக்குக் காரணமான நல்லவற்றைச் செய்யாமல் வறுமைக்குக் காரணமான தீயவற்றைச் செய்யலாகாது.”

இவ்வாறு ஆள்வோர் பின்பற்ற வேண்டிய அறநெறிகளையும், ஆளவேண்டிய முறைகளையும் இராமன் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறுகிறான்.

இவற்றோடு வசிட்டன் கூறும் அரசியல் அறங்களாகக் கம்பன் மொழிந்திருப்பதையும் சிந்தித்தால் அவை எல்லா நாட்டு ஆட்சியாளர்க்கும் எப்பொழுதும் பொருந்துவனபோல் தோன்றுகிறது. கம்பன் கூறும் இந்த அரசியல் அறங்களப் பின்பற்றும் ஆட்சியாளரால் வழி நடத்தப்படும் நாடு மிகச் சிறந்ததாய்த்தான் விளங்கும் என்று துணிந்து கூறலாம்.

கம்பன் காட்டும் வணிகம்

ஏற்றுமதி வணிகம்

முறைஅறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்

இறைஅறிந்து உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப்

பொறைஅறிந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்

நிறைபரம் சொரிந்து வங்கம் நெடுமுதுகு ஆற்றும் நெய்தல்

[அவா=ஆசை; முனிவுழி முனிந்து=சினம்கொள்ளவேண்டிய இடத்தில் சினந்து; இசை=புகழ்; நிறை பரம் சொரிந்து=அருமையான பொருள்கள் இறக்கி]

கோசல நாட்டில் நடந்த வணிகத்தைப் பற்றிக் கம்பன் கூறுகிறான். வங்கம் என்றால் கப்பம் என்று பொருளாகும். ஆண்டாள் தம் திருப்பாவையின் 30-ஆம் பாசுரத்தில், “வங்கக் கடல் கடைந்த” என்று கப்பலைச் சொல்வார். கோசல நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைந்தன. அந்நாட்டில் தங்களுக்குத் தேவையானது போக எஞ்சிய பொருள்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று ஏற்றுமதி செய்தார்கள். அப்படிப் பல பொருள்களை ஏற்றிச் சென்று இறக்கிய பிறகு அக்கப்பல்கள் தம் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றி நிற்குமாம்.

சிறந்த நெறிமுறையில் அரசாளும் மன்னன் ஆளுவதால் பாரம் சுமந்த வருத்தம் நீங்கிய பூமிதேவியை அக்கப்பல்களுக்கு உவமையாகக் கூறுவான் கம்பன். கோசல நாட்டில் கடலே கிடையாது. கப்பல்கள் எங்கு வந்தன என்ற கேள்வி எழலாம். சரயு நதியே கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும், ஆழமாகவும் இருந்ததாம்.

அறநெறியை அறிந்து, பொருளாசையை நீக்கி, சினம் கொள்ள வேண்டிய நேரத்தில் சினம் கொண்டு, மக்களிடம் வரிப்பொருள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என அறிந்து பெற்று, தன் ஆட்சியின் கீழ் வாழும் உயிரினங்களிடத்தில் இரக்கம் கொள்கிற புகழ் பெற்ற அரசன் பூமியைப் பாதுகாத்து வந்தான். அதனால் பூமியைச் சுமக்கின்ற தம் பாரத்தை இறக்கி இளைப்பாறுகின்ற பூதேவியைப் போலக் கப்பல்கள் அருமையான பொருள்களின் நிறைந்த பாரத்தை இறக்கிவிட்டு நெய்தல் நிலத்தில் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றிக் கொள்ளும்

கம்பன் காட்டும் ஐவகைத் தேன்

ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும்

சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்

மாலைவாய் உகுத்த தேனும் வரம்புஇகந்து ஓடி வங்க

வேலைவாய் மடுப்ப உண்டு மீன்எலாம் களிக்கும் மாதோ [41]

[அரிதலை=அரியப்பட்ட நுனி; தொடை இழி இறால்= அம்பு தொடுக்கப்பட்ட தேன்அடை; வரம்பு=எல்லை; வங்கம்=கப்பல்; வேலை=கடல்; மடுத்தல்=கலத்தல்; மாதோ=அசைச்சொல்]

கரும்பாலைகளில் இருந்து கருப்பஞ்சாறாகிய தேன் ஓடி வருகிறது. தென்னை, பனை மரங்களின் நுனி அரியப்பட்டு அதன் பாளைகளிலிருந்து கள்ளாகிய தேன் ஓடுகிறது சோலைகளில் உள்ள மரங்களின் பழங்களிலிருந்து பழச் சாறாகத் தேன் ஓடி வருகிறது. அம்பு தொடுக்கப்பட்ட தேன் அடைகளிலிருந்து தொடர்ந்து தேன் ஓடி வருகிறது. மக்கள் அணிந்திருந்த மாலைகளிலிருந்து தேன் ஓடி வருகிறது. இந்த ஐவகைத் தேனும் எல்லை கடந்து ஓடிக் கப்பல்கள் உலவும் கடலில் போய்க் கலக்கின்றன. அவற்றை மீன்கள் எல்லாம் உண்டு களிக்கின்றன.

’தொடை இழி இறால்’ என்பது அருமையான சொல்லாட்சி. இது கம்பன் காட்டும் புதுமையான தேன். இதன் மூலம் கம்பன் அக்காலத்தில் வேடர்கள் தென் எடுத்த விதத்தைச் சொல்கிறான். வேடர்கள் தேனெடுக்க தேனடையை நோக்கி அம்பு எய்வார்கள். அம்பு அந்த அடையில் துளையிடும். அத்துளை வழியே தேன் இடைவிடாது அம்பின் வழியே அம்பின் அடி நுனியில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ஒழுகும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அடைக்கும் சேதமேற்படாதவாறு, தேனீக்களுக்கும் துன்பம் செய்யாமல் தேனெடுக்கும் வழியைக் கம்பன் அறிந்திருக்கிறான். கடலுக்கு அடைமொழியாக வங்கம் எனும் சொல்லைக் கையாள்கிறான். அது வங்கக்கடல் என்று திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் சொல்வதாகும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.