வெயில் சாலை – முத்துக்குமார் சிறுகதை

ஓங்கியெழுந்து அடங்கும் அலைகளை பாதியில் உறையவைத்தது போலிருந்தது, இருபக்கங்களிலும் உயர்ந்த மலைக்குன்றுகளை கரையாகக் கொண்டிருந்த அந்தச் சாலை. வாகன அரவமற்ற அந்த நண்பகல் நேரத்து நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு, இருபுற மலைக்குன்றுகளும் அவற்றை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போலிருந்தது. இந்தியத் தத்துவமரபின் மேல் திடீர் காதல்கொண்டு ஆதிசங்கரர் அத்வைதம் தியானம் என திழைத்திருந்த வைரவன் பெரும்பாலும் பயணங்களில் பயணிக்கும் வாகனத்தின் வெளியே தன்னை ஒன்ற வைத்துக்கொள்வார். ஆனால் அவற்றோடு ஒன்றமுடியாமல் இன்று சற்று நிலைதடுமாறியிருந்தார்.

என்ன சார், திடீர்னு பேசுறத நிறுத்திட்டீங்க? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?”

எதற்காக பிரகாசம் என்னிடம் அந்த கேள்வியை கேட்கவேண்டுமென்ற நினைப்பு, வாகனத்தில் நன்றாக இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியையும் தாண்டி எரிச்சலை உண்டாக்கியது வைரவனுக்கு.

ஒன்னுமில்ல பிரகாசம் . இன்னும் எவ்வளவு நேரமாகும்..?”

ஒரு 3 மணி நேரத்துல போயிடலாம் சார்..” என்ற பிரகாசம் சாலையிலிருந்து கண்களை எடுக்கவில்லை.

என் பொண்ணுக்கு மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சுடுக்கு சார் என்று சொல்லிவிட்டு, உங்க பையன நீங்க ஏன் சார் மெடிக்கலுக்கு முயற்சி பண்ணச் சொல்லல என்று ஒட்டுநர் பிரகாசம் வெகுளித்தனமாகக் கேட்ட அந்த கேள்வி மீண்டும் நினைவில் வந்து வைரவனை எரிச்சலூட்டியது.

சரி. நான் கொஞ்சம் தூங்குறேன்” என்று அமர்ந்திருந்த முன்னிருக்கையை சற்று பின் தள்ளிச் சாய்த்து சாய்ந்தார். நண்பகல் வெய்யிலில் துளி மேகமுமின்றியிருந்த வெளிர்நீல வானத்தின் பிரகாசம் கார்க்கதவின் கண்ணாடியையும், வைரவனின் முகம் நிறைத்த குளிர் கண்ணாடியையும் தாண்டி அவர் கண்ணைக் கூசச் செய்தது. இந்த வானத்தைப்போல நிர்மால்யமாய்த்தான் தன் மனதும் இருந்ததாக தான் எண்ணியது தவறோ என்ற நினைப்போடு அருகிலிருந்த பிரகாசத்தை உற்றுநோக்கினார்.

இப்ப என் பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கான். ஒண்ணும் வித்தியாசமா தோணலை. ஆனால் தன் மகள் நிவேதாவோடு வீட்டுக்கு வந்து அவளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை பெருமையாகச் சொல்லி என் பக்கத்தில் அமர முயன்றபோது மட்டும் எனக்குள் எழுந்த விலக்கமும் எரிச்சலும் வித்தியாசமாகத் தோன்றியது. “அப்பா..தள்ளிக்குங்க..” என்று பிரகாசம் அமருவதை நாசூக்காக தடுத்து என் காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்றுக்கொண்ட நிவேதாவின் புரிதல் ஆச்சரியத்தையளி்த்தது. அவளுக்கு நம்முடைய உள்ளுணர்வு புரிந்திருக்குமோ என்ற அச்சவுணர்வு இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டிக்கு அதிக வேலை கொடுத்தது. சூரிய ஒளியில் கூசியிருந்த கண்களோடு சேர்த்து உடம்பும் கூசியது. கைகளும் குளிரில் சற்று மரத்துப்போனது போலிருந்தது.

இந்த குளிரூட்டிகளின் மேல் வைரவனுக்கு இருக்கும் காதல் அலாதியானது. பள்ளிகால கோடை விடுமுறை நாட்களில், குடும்பத்தின் வறுமை காரணமாக வேலைக்கு சென்ற மௌலானா பாயின் ஐஸ் ஃபேக்டரியில் ஆரம்பித்தது இந்த காதல். தண்ணீரை வெவ்வேறு வடிவங்களில் பனிக்கட்டிகளாகச் சிறைப்படுத்தி விற்பனை செய்யும் தொழிற்சாலைகள், குளிர்சாதன தொழிட்நுட்பங்கள் வளர்ச்சியுறாத 80ளில் மிகவும் பிரபலம். பெரும்பாலும் மீன் வியாபாரிகளும், கோடைகால நன்னாரி சர்பத் கடைகளும், மருத்துவமனை பிணவரைகளும் இத்தொழிற்சாலைகளின் வாடிக்கையாளர்கள். 24 மணிநேரமும் இயங்கும் மௌலானா பாயின் இந்த குட்டித்தொழிற்சாலையில் கிடைத்த 300 ரூபாய் வருமானம் வைரவனின் அடுத்த வருட ஒட்டுமொத்த கல்விச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது.

ஏன் சாதிக்மணி பத்தாச்சு இன்னும் வைரவன் கடைக்கு வரலை…”

இல்ல மௌலானா பாய்..நேத்திக்கு நைட் அவந்தான் டியூட்டி பார்த்தான். காலைல 8 மணிக்கு வந்து நான்தான் மாத்திவிட்டேன்..”

ஏண்டா..இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்.. காலைலயும் பார்த்துட்டு நைட்டும் எப்படிடா எளவு வேல பாக்கமுடியும்…”

பாய்அவனுக்கு இந்த வேல புடிச்சுப்போச்சு பாய். நைட்ல அசராம அத்தன பாக்ஸுலயும் தண்ணி ஊத்தி ஐஸாக்குற தொட்டில இறக்கி ஐஸானவொடனயே வெளிய எடுத்து..திரும்பவும் நிரப்பி… கையெல்லாம் மரத்துப்போய்என்னதான் இதுல அவனுக்கு ஆர்வம்னு தெரியல பாய்…”

மௌலானா சிரித்து அமைதியானார்.

மடக்கியிருக்கும் மடிக்கணினி வடிவிலிருக்கும் அந்த உறுதியான அலுமினியப்பெட்டிகளின் வாய்ப்பகுதியை விரல்களால் பற்றி அங்குள்ள தண்ணீர் தொட்டியில் ஒருசேர அமிழ்த்தியெடுத்து நிறைப்பதில் மடித்துக் கட்டியிருக்கும் ராசியான பச்சைநிற கட்டம் போட்ட கைலியும் தண்ணீரால் நிறைந்து நனைந்து சற்று உப்பியிருக்கும். கனத்திருக்கும் அப்பெட்டிகளை தூக்கிச் சென்று கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் குளிர்ந்த நீரால் நிரப்பட்ட மிகப்பெரிய மரக்கலனின் ஒரு நிரலில் அடுக்கிவிட்டு, அடுத்த நிரலுக்கான அலுமினியப் பெட்டிகளைத் தொடும்போது கைகளிரண்டும் முற்றிலும் மரத்தி்ருக்கும். அறையின் வெப்பநிலையிலி்ருக்கும் தண்ணீ்ரை மீண்டும் அப்பெட்டிகளில் நிரப்பும்போது மரத்திருந்த கைகள் அத்தண்ணீரின் வெப்பத்தை உறிஞ்சிக் கொண்டு தளர்வது ஒரு அலாதியான சுகம். ஆனால் இச்சுகம் அந்த மரக்கலனின் அடுத்த நிரலை இப்பெட்டிகளால் நிரப்பும்வரைதான். மீண்டும் அடுத்த நிரலுக்கான நடையெனத் தொடர்ந்து கடைசியாக 12வது நிரலை எட்டும்போது, இருகைகளிருக்கும் உணர்வே அற்றுப்போயிருக்கும்.

ஒருநாள் ஆர்வம் மிகுதியால் இந்த குளிரூட்டிகளுக்கு பின்னாலிருக்கும் அறிவியலை தெரிந்து கொள்ள முற்பட, அதற்கு மௌலானா பாய், என் உள்ளங்கையில் சிறு பனிக்கட்டித் துண்டை வைத்து கை குளிர்ந்ததும் “எதுடா குளிர்ச்சியா இருக்கு? கையா இல்ல ஐஸ்கட்டியா? “ என்று கண் சிமிட்டினார்.

ஐஸ்தான் பாய் குளிர்ச்சி…”

அப்ப கை ஏலேய் குளிருது…”

அப்போது எனக்கு ஆதிசங்கரர்லாம் தெரிந்திருந்தால் ‘என் கை குளிர்ச்சியானதால ஐஸ் குளிர்ச்சின்னு சொல்றேன் பாய்எனது புலன்கள் வேலை செய்வதால் ஐஸ் கட்டி குளிர்ச்சியா இருக்கு. இல்லன்னா உறைந்த இந்த கட்டியும் உருகும் இரும்புத்துண்டும் ஒண்ணுதா”ன்னு அத்வைதத்தை குழப்பியடிச்சிருப்பேன்.

ஆனால் தத்துவமோ அறிவியலோ அறிந்திராத அப்பருவத்தில் குழம்பி விழித்த என்னிடம், “இயற்கையோட விதிப்படி எல்லாமே தன்னோட சமநிலைக்கு வந்தாகனும். இதத்தான்லகார்ல் மார்க்ஸும் சொல்லுராரு…”

புரியாமல் முழித்த என்னிடம், கையின் அதிக வெப்பநிலை தன்னுடைய வெப்பத்தை, தன்னைவிட குறைந்த வெப்பநிலையிருக்கும் பனிக்கட்டிக்கு விட்டுக் கொடுத்து விடும் வெப்பக் கடத்தல் விதியைப் பற்றி விளக்கிச் சொன்னார்.

பாய்ட்ட எதக் கேட்டாலும் மார்க்ஸ்லெனின்னு புரியாத பாஷையிலயே பேசுவாரு. அவரோட பையன் ரஷ்யாவுல டாக்டருக்கு படிச்சதனால கூட இருக்கலாம். ஆனால் என்னையெல்லாம் ஒரு புழு மாதிரிதான் பார்ப்பாரு மௌலானா பாயின் டாக்டர் பையன். அவ்வளவாக படிப்பறிவில்லாத மௌலானா பாயிடமிருக்கும் சமத்துவ உணர்வு, அவரோட பையனிடமில்லையென்று அப்போதே விவரமறிந்த சாதிக் சொல்லுவான்.

எங்ககூட பாய் உட்கார்ந்து சாப்பிடறத பார்த்த நாள்ல இ்ருந்து, இந்த ஆளு பாயோட வீட்டுல சேர்ந்து சாப்புடுறதயே வுட்டுட்டுறார்னா பாத்துக்கயேன்…” என்ற சாதிக், இங்குள்ள சாதி சார்ந்த இடஒதுக்கீட்டு குழறுபடிகளால் அவர் +2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் இங்கு எந்தக் கல்லூரியிலும் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் விரக்தியுடன் இப்படிப்புக்காக ரஷ்யா வரை பய​​ணிக்க நேர்ந்ததையும் கூறினான்

சில வருடங்களுக்குப் பிறகு எனக்குச் சிறந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியை மௌலானா பாயிடம் பகிர்ந்துகொண்டபோது அங்கிருந்த அவருடைய டாக்டர் பையனின் முகத்திலிருந்த வெறுப்பு சாதிக் சொன்னதை எனக்குப் புரியவைத்தது. இது தனக்கு கீழே இருப்பவர்கள் எப்போதும் அங்கேயே இருக்க வேண்டுமென்றெண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலையின் எச்சம் என்பதையும் இப்போது வைரவனால் புரிந்துகொள்ள முடிகிறது.

காரின் இருக்கையில் சாய்ந்தவாரே குளிரூட்டியின் வேகத்தை குறைக்க மரத்துப்போன கையை நீட்ட முயன்று முடியாமல் “பிரகாசம், ஏசிய ஒரு பாயிண்ட் குறைப்பா…” என்றார்.

தன் கைகள் குளிரால் மரத்துப் போகுந்தோறும் மௌலானா பாயும், அவரின் ஐஸ் ஃபேக்டரியும்தான் இப்படி வைரவனின் நினைவடுக்களிலிருந்து மேலெழும்பும்.

அங்கு ஆரம்பித்த அந்த புரிதலும் உழைப்பும் தான் இந்த 50 வயதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெப்பமாற்றிகளை (Heat Exchangers) தயாரிக்கும் நிறுவனத்தை உருவாக்க வைத்திருக்கிறது வைரவனை.

பிரகாசம் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே வைரவனுக்குப் பரிட்சயம். இன்னமும் கார் ஓட்டத் தெரியாத வைரவனுக்கு அப்போதிலிருந்தே பிரகாசம்தான் ஆஸ்தான ஓட்டுநர். ‘’என்ன சார் இன்னும் ஏன் ஆட்டோலயே வர்ரீங்க ஒரு கார வாங்குங்க..” என்று வைரவனுடைய முதல் காரை வாங்கத்தூண்டியதும் பிரகாசம்தான். கார் ஓட்டக் கற்றுக்கொள்ளவும் முடியாமல்; ஓட்டுநர்களும் சரிவர அமையாமல் மீண்டும் பிரகாசத்தின் ஆட்டோவையே நாடியபோது, தன் சொந்த ஆட்டோவை வாடகைக்கு விட்டு விட்டு வைரவனின் காரை நிரந்தரமாக ஓட்ட ஆரம்பித்து பத்து பண்ணிரெண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அகோர பசிகொண்டு எதிர்வரும் சாலையை உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது வண்டி. ‘நினைவோ ஒரு பறவை…’ என ராஜாவின் இசை சிறகடித்துக் கொண்டிருந்தது வண்டியினுள். வைரவனின் மரத்திருந்த கை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. மறுபடியும் சமீப நாட்களாக பிரகாசத்தின் வழியாக தன்னுள்ளிருக்கும் அந்த ஆதிக்க மனப்பான்மை வெளிப்படுவதையுணர்ந்து சற்றுக் குறுக ஆரம்பித்தார். நான் மௌலானா பாயிடமிருந்து மட்டுமல்ல அவருடைய டாக்டர் பையனிடமிருந்தும் என்னையறியாமல் சிலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்த வைரவனுக்கு ‘நமக்குள்ளிருக்கும் ‘நாமறியாவற்றைப் பொறுக்கி எடுப்பதுதான் தியானம் என்கிறார்கள்’ என்று எங்கோ படித்த சொற்றொடர் நினைவுக்கு வந்தது.

2 comments

  1. தன்னைத் தான் உணர்ந்தாலும் பெரிய மனிதர்களாகிவிடும் சாமானிய மக்களுக்குக் கூட இருக்கும் ஆதிக்க உணர்வை விரட்டி அடிப்பது கஷ்டம் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறதோ! வைரவனுக்குத் தான் பட்ட அவமானங்கள் நினைவில் இருந்தாலும் பிரகாசத்தின் மகளுக்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்ததைக் கொஞ்சமும் ஏற்க முடியவில்லை! ஒரு பக்கம் இது இயல்பு எனத் தோன்றினாலும் அதே நிலையில் ஒரு காலத்தில் இருந்திருக்கும் வைரவனுக்குள் இந்த உணர்வு தோன்றி இருக்கலாமா?

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.