கற்பூரம் நாறுமோ

ஸ்ரீதர் நாராயணன் 

“கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ” என்று சஞ்சய் சுப்ரமணியன் கமாஸில் கார்வை பிடிப்பது ஸ்பீக்கரில் ஒலித்தது.

“அந்த மணிரத்னம் படம் ஒண்ணு இருக்குமே, கல்யாணம் பண்ணி, அமெரிக்கா வந்து செட்டில் ஆகி குழந்தைக்கு மொட்டை போட கோவிலுக்கு போகனும்னு சொல்வானே…. அதுல வர்ற பாட்டா இது?”, ஆர்வமாக ஓர் ஆண் குரல் கேட்க, உடனே “உஸ்ஸ்ஸ்… இது வேற பாட்டு” என அடக்கும் பெண் குரலும் கேட்டது உமாபதிக்கு.

கோவிட் காலத்துக்கான ஏற்பாடுகளான, ஆறு அடி இடைவெளிக்கென, தரையில் இட்டிருந்த எக்ஸ் மார்க்குகள் அப்படியே இருந்தாலும், ஜேஸ்டன்வில் பாலாஜி கோவில் இப்போது பழைய தன்மைக்கு வந்துவிட்டதென்பது, செருப்பு புரைகள் எல்லாம் நிறைந்திருப்பதில் தெரிந்தது. மேல் கோட்டைக் கழட்டி, ஹேங்கரில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த உமாபதிக்கு, முதுகிற்குப் பின்னால் கேட்ட உரையாடல் துணுக்கு சிரிப்பை எழுப்ப, சுவாரசிய உந்துதலில் சட்டென திரும்பிப் பார்த்தான். பேசியவர்கள் யாரெனத் தெரியாதபடிக்கு கலவையாக மக்கள் கூட்டம் காலணிகளை கழட்டுவதும், மேல் கோட்டுகளை நீக்குவதுமாக இருந்தது. வெளிறிய செங்கல் நிறத்தில், கரும்பச்சை பார்டரில் சரிகை வேலைப்பாடுகளுடனான புடவையும், அதன் மீது இழுத்துவிட்டுக் கொண்டிருந்த பிங்க் நிற ஸ்வெட்டருமாக இருந்த பெண்மணியைப் பார்த்ததும் படக்கென தலைக்குள் வெளிச்சம் போட்டது போலிருந்தது. முப்பத்தைந்து ஆண்டுகள் முன்னால் கல்யாண நிச்சயதார்த்தத்தில் பார்த்த அதே வார்ப்பில்தான் இருந்தாள் ரேணுகா மதனி. முன் தலையில் மட்டும் நரையோடிய இழைகள் வருஷங்கள் இத்தனை போயிற்று என கணக்குக் காட்டிக் கொண்டிருந்தன.

“நீதான இஞ்சீனீருக்கு படிக்கப் போறவன்னு உங்கண்ணன் சொல்லிட்டிருந்தாரு…?”, அவன் கன்னத்தைப் பற்றி இழுத்து வாய்நிறைய முத்தம் கொஞ்சிய ரேணுகா மதனிக்கு அப்போது பதினெட்டு பிராயம் இருந்திருக்கலாம். உமாபதி எட்டு வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். முழுப்பரீட்சை விடுமுறைக்கு திருமயம் போனபோதுதான் முருகானந்தம் அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுத்த சொற்ப கருப்பு, வெள்ளை படங்களில் எல்லாம், நன்றாக கொழுகொழுவென உருண்டையாக அவன் மதனியின் பக்கத்திலேயே இருந்தான்.

சத்யமூர்த்தி பெருமாள் கோவில் வாசலுக்கு நேரெதெரில் இருந்த தெருவில், இடப்பக்கம் முதல் வீடு முருகு அண்ணனுடையது. இருபுறம் பெரிய திண்ணை கொண்ட ஓட்டு வீடு அது. நல்ல கூராக இழுக்கப்பட்ட இளமீசையும், சுருள்முடி கிராப்புமாக அண்ணன் சைக்கிளில் வந்து அப்படியே திண்ணையில் கால் பாவி ஏறி நின்று, ஒரே மூச்சில் சைக்கிளையும் அலேக்காக தூக்கி திருப்பி திண்ணையில் ஏற்றி வைப்பார்.

அந்த ஸ்டைலெல்லாம் உமாபதிக்கு கவர்ச்சியாக தெரிந்தாலும், அண்ணனின் கீழுதடு நீளவாக்கில் பிளந்து, பிறகு இழுத்து தைக்கப்பட்ட வடுதான் முதலில் கண்ணில் பட்டது. ஏதோ பூரான் உதட்டின் விளிம்பில் இருந்து கீழ்வாக்கில் இறங்கி, அப்படியே தாடைக்குழியில் சென்று மறைவது போல நீளமான வடு. உமாபதி சட்டென அவர் முகத்தில் இருந்த பார்வையை விலக்கிக் கொண்டுவிடுவான். பிறவிக் குறைபாடான கிளெஃப்ட் உதடுகளுக்கு அவ்வளவுதான் அக்காலத்தில் தீர்வு.

சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்றும், பெருமாளை அலங்காரப் பிரியர் என்றும் சொல்வார்கள். ஆனால், திருமய சத்யமூர்த்தி பெருமாளை விட, பக்கத்தில் இருந்த சத்யகிரீஸ்வரருக்குத்தான், சிற்ப வேலைபாடுகள் அம்சமாக கூடிய அலங்கார கோபுரம் உண்டு. சிவன் கோவிலுக்கு மேற்குபுறத்தின் சிறிய திடலில்தான் முருகு அண்ணன் வீட்டு அம்பாசிடர் கார் நிறுத்தப்பட்டிருக்கும். மூத்தவர் நித்யா அண்ணனின் டிராவல்ஸ் வண்டி அது.

பாலை ஊற்றி, உறைய வைத்து எடுத்தது போல அப்படியொரு வெண்மை. காருள் காலை வைக்கும்போதே மெத்தென இழுக்கும் மிதியடிகளும், நாசியை நிரடிச் செல்லும் பெர்ஃப்யூம் மணமும், உட்கார்ந்தவுடன் உள்ளே அமிழ்த்திக் கொள்ளும் இருக்கைகளுமான அந்தக் காரில்தான் உமாபதி, முருகு அண்ணனின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு கோனாபட்டு சென்றான்.

“ராமக்கா ஆச்சி வீட்டுக்கு வந்திருக்கற புள்ள. எதிரூடுதான். ரொம்ப சங்கோஜி. முருகுதான் எங்கேயும் கூட்டிட்டு சுத்தும். அவங்கப்பா மதுரைல இஞ்சீநீராம். இதும் இஞ்சீநீரு ஆகப்போறேன்னு பெரும் பீத்தலா சொல்லிட்டிருக்கும்”, யாராவது யாரிடமாவது உமாபதியைப் பற்றி வாஞ்சையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அவனுக்கு, தான் எப்போது இஞ்சிநியர் ஆகப்போகிறேனென்று சொன்னோம் என்று நினைவிலில்லை. ஆனால் அந்த முழுப்பரீட்சை விடுமுறைக் காலம் முழுவதும், அவன் அப்படித்தான் எல்லாரிடமும் அறிமுகப்படுத்தப்பட்டான். ஏதோ ஒருவகையில் முருகு அண்ணனின் ஆத்மார்த்த சிறுபிராய உருவகமாக உமாபதி ஆகிவிட்டிருந்தான். முருகுவிற்கு பிடித்தவன் என்பதால், அவர்களின் மொத்த குடும்பத்திற்கும் பிடித்துப் போய்விட்டது. இரண்டு டெம்போ டிராவலரில் நித்யானந்தம், பரமானந்தம், சதானந்தம் என்று அண்ணன்கள் குடும்பத்தினரோடு நிச்சயதார்த்தத்திற்கு போக, பெரியவரும் ஆச்சியும் காரில் போனார்கள். முருகு அண்ணன் காரோட்ட, கூட உமாபதிக்கு ஸ்பெஷல் சீட்.

பழைய நினைவுகளின் சுழலில் இருந்து உமாபதி மீள்வதற்குள், ரேணுகா அவனை அடையாளம் கண்டுபிடித்திருந்தாள்.

“நீ.. நீயு…. இஞ்சிநீரு உமாதான”, அப்படியே பாய்ந்து இவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டாள். பக்கத்தில் அவளை விட உயரமாக இருந்தது அவளுடைய பெண்ணா பேத்தியா என்று தெரியவில்லை. காலம் அப்படியொரு பாய்ச்சலைக் காட்டியிருந்தது.

“உங்கண்ணன்தான், நீ போடற ஃபேஸ்புக போட்டோல்லாம் கொண்டாந்து எங்கக்கிட்ட காட்டிட்டே இருப்பாரே. அதான் படக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன். இதான உம்ப்பொண்டாட்டியு. என்னம்மா சுலோசனா…. எங்களப் பத்தில்லாம் சொல்லியிருக்கானா ஒம்புருஷன்? இந்தூருக்கு வந்ததில்லேந்து உன்னயப் பாக்கனும்னுதான் உங்கண்ணன் சொல்லிட்டே இருந்தார். எங்க… நெனச்சா நெனச்ச இடத்துக்கு போய்வர முடியுதா உங்கூருல. இவங்களத்தான் நம்பி எதிர்பாத்திட்டிருக்க வேண்டியிருக்கு.” என்று அருகில் இருந்த பெண்ணைச் சுட்டிக் காட்ட, அது கண்களை உருட்டி தலையை சாய்த்து சிரித்தது. உமாபதியின் கன்னத்தைப் பிடித்து வழித்து, மதனி முத்தம் கொஞ்ச, அவன் பழைய நான்காம் வகுப்பு சிறுவனென சங்கோஜமாக நெளிந்தான்.

“என்னடா தனியா ஒக்காந்திருக்க? அங்க பசங்கள்லாம் புஷ்கரணி குளத்துல ஆட்டம் போட்டுக்கிட்டிருக்காங்கப் பாரு”, பாட்டி வீட்டில், ஒருக்களித்த கதவிற்க்குப் பின்னால், கூச்சமும், யாராவது அழைக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புமாக உட்கார்ந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் உமாபதியை, முருகு அண்ணன்தான் இழுத்துக் கொண்டு போனார். கோவிலைச் சுற்றிக் கொண்டு போகும் மண் சாலை, பின்னால் இருக்கும் புஷ்கரணி குளத்தில் போய் முடியும். குளத்தின் படிகளுக்கு பக்கம் பெரிய மதில் போல நீண்டிருக்கும் பக்கச் சுவர் குளத்தின் விளிம்புவரைப் போகும். முருகு அண்ணன் எப்போது வேட்டியைக் களைந்தார் எனத் தெரியாது. அப்படியே ஜட்டியுடன் அந்த பக்கச் சுவர் மீது ஓடி, ஒரே ஜம்பில் புஷ்கரணியின் நடுவே பாய்ந்து குதித்து விட்டார். உடனே குளத்தில் இருந்த பையன்கள் எல்லாம் மேலேறி வந்து பக்க சுவரின் மீது ஓடி உள்ளே குதிக்க ஆரம்பிக்க, அந்த இடமே பெருங்கொண்டாட்டமாகி விட்டது. அப்போதும் உமாபதி தயங்கி மேற்படியிலேயே நின்று கொண்டிருந்தான்.

“டேய் … இங்க வந்து நில்லு…”

மார்பளவு நீரில் நின்று கொண்டு, குளத்தின் நீர் வாரித் தளும்பிக் கொண்டிருக்கும் கடைசிப் படிக்கட்டைக் காட்டினார் அண்ணன்.

அவன் மெதுவாக இறங்கி அந்த கடைசிப் படிக்கு வந்தான். சில்லென பாதம் நனைய, கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தவனிடம்,

“என் தோள்ல கைய ஊண்டிப் புடி” என்று சொல்லிவிட்டு அவன் கணுக்கால்கள் இரண்டையும் பற்றி அப்படியே தலைமீது தூக்கி, பின்னம்பக்கமாக விசிறிவிட்டார்.

ஊமையன் கோட்டை மலையின் அண்மையால், பின்மதியம் என்றாலும், குளம் சிலீரெனத்தான் இருந்தது. அண்ணன் தூக்கிப் போட்டதில் அப்படியே தலைகுப்புற, வீரிட்டு அலறியபடி குளத்தினுள் விழ, நாடி நரம்பெங்கும் திகில் கொப்பளிக்க உமாபதி தத்தளித்து எழுந்து நின்றான். கழுத்தளவு நீரில், நீந்தத் தெரியாமல் தடுமாறிக் கரை சேரும்போது, கூச்சமெல்லாம் கரைந்து போய்விட்டது. ஊர் பிள்ளைகளான சீனு, ராமர், சுரேஷ், கோமதி, நிர்மலா என எல்லாரும் அவனை சூழ்ந்து கொள்ள, உமாபதி வெகு சகஜமாகிப் போனான்.

குளியல் கும்மாளம் முடிந்ததும், பெருமாள் கோவில் தெருவிற்கு அடுத்து இருந்த இடைவீதியில் வெங்கடேஸ்வரா ஓட்டலுக்கு மொத்த பையன்களையும் கூட்டிச் சென்று, வாழையிலை கீற்றைக் கையில் கொடுத்து, “இப்பத்தான் அசோகா போட்டிருக்கு. சும்மா சாப்பிடு” என்று சுடச்சுட அல்வாத்துண்டை வெட்டிப் போட்டார்.

இலையில் அல்வா தீர்ந்ததும், மைசூர் போண்டாவையும் வெள்ளையப்பத்தையும் போட்டு சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்த சதானந்தம் அண்ணன், ““இவந்தான் ராமக்கா ஆச்சி வீட்டுக்கு வந்த மதுரை பையனா. எங்களுக்கும் மதுரைல ஓட்டல் இருக்குடே. கண்ணன் கஃபேன்னு. சிம்மக்கல்லுல கல்பனா தியேட்டர் பக்கம். நீ பாத்திருக்கியா.” என்றார்.

புஷ்கரணி குளத்துக் குளியல் ஒருநாள் என்றால், மறுநாள் ஊர் கம்மாயில் இடுப்பில் துண்டை முறுக்கிக் கட்டிவிட்டு நீச்சல் பழகியது, பள்ளத்தூரில் மனோரமா ட்ரூப்பின் பல்சுவை நிகழ்ச்சியைச் சென்று பார்த்துவிட்டு நடுநிசியில் வீடு திரும்பியது, காரைக்குடியில் சர்க்கஸ் பார்த்தது, புதுக்கோட்டை சாந்தியில் சத்யராஜ் படம் பார்த்துவிட்டு “இந்தக் கதையை குமுதத்தில் படிச்சிருக்கேன்” என்று என முருகு அண்ணனுக்கு சிட்னி ஷெல்டன் கதையைச் சொன்னது… .

புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், திருப்பெருந்துறை, தேவகோட்டை என அந்த சுற்றுப்புறம் அனைத்திற்கும் முருகு அண்ணன் அவனைக் கூட்டிக் கொண்டு போனார். அம்பாசிடரின் அலங்கார வேலைப்பாடுகளுடனான ஸ்டீயரிங்கை அப்படியே ஒற்றைக்கையில் பற்றி சுழற்றியபடி,

“இந்தத் தியேட்டர் ஓனர்காரவுகதான், புது பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஆஸ்பத்திரி ஒண்ணு தொறந்திருக்காவுக. அவங்க வண்டி நம்பர்கள்லாம் 8181-ன்னு ஒம்பதாம் நம்பர்லதான் இருக்கும். அந்தப் பக்கம் ஆலங்குடி ரோட்டுல மீனாட்சி பவன் ஓட்டல் ஒண்ணு கூட இருக்கு. நாங்களும் மதுரைல சொக்கிகுளம் பக்கத்தில பெரிய ஓட்டல் தொறக்க நாள் பாத்திட்டிருக்கம். பார்வதி நாச்சியாள்னு பெரியாஸ்பத்திரில டாக்டரா இருக்காங்க. அவங்க இடத்திலதான் பேசிட்டிருக்கம்.”

அவருக்கு எதைப் பற்றியும் எந்த இடத்திலும் பேசுவதற்கென விஷயங்கள் இருந்து கொண்டேயிருந்தன. ஆவுடையார் கோவில் பிரகாரத்தில் ஓரிடத்தில் நிறுத்தி, மேற்கூரையைக் காட்டி, “அந்தால பாரு. ஓட்டை இருக்கா. பிரிட்டிஷ்காரன் ஆட்சில, இந்தக் கூரையெல்லாம் கருங்கல்லுதானான்னு டெஸ்ட் பண்ண துரை ஒர்த்தன் துப்பாக்கியால சுட்டுப் பாத்தானாம். இந்தக் கொடுங்கை கூரை மாதிரி இன்னொண்ணு கேக்காதீங்கன்னு சொல்லித்தான் கோவில் கட்டறதுக்கு ஸ்தபதில்லாம் ஒத்துக்கிடுவாங்க அந்தக் காலத்தில. அந்தால கூரை மேல பல்லிப் பாத்தியா…. பாத்தா கல்லு மாதிரியே தெரியாது. தொட்டுப் பாரு. தொட்டுப் பாரு”.

இரும்பு ஏணியில் ஏறி, கூரையில் இருந்த கற் சிற்பத்தை விரலால் தொட்டுப் பார்ப்பதற்குள் உமாபதிக்கு உடலெல்லாம் கூசிற்று. ஒவ்வொரு முறையும் அண்ணன் பேசும்போது ஆர்வமாக அவருடைய மினுக்கும் கண்களை நிமிர்ந்து பார்த்து, அப்படியே அவர் தாடையில், அந்த பூரான் தழும்பு கண்ணில் பட்டதும் சட்டென விலகும் போது ஏற்படும் அதே கூசுதல் உணர்வு.

தலைகுனிந்து நிற்கும் உமாபதியை, அண்ணனின் மற்றொரு உரையாடல் ஏதாவது நிமிர்ந்து பார்க்க வைப்பதும், அவர். முகத்தை முழுவதும் பார்க்க முடியாமல் மீண்டும் குனிவதுமாக உமாபதிக்கு ஒருவித குற்றவுணர்வுடன்தான் அவர் கூடச் சுற்றிக் கொண்டிருந்தான்.

“இந்தப்பக்கம் சோல்ஜர்ஸ் சிலைகள்லாம் பாரு. குதிரை மேல இருக்கற ஒவ்வொருத்தன் வேட்டியிலும் ஒவ்வொரு வித பார்டர்… ஒண்ணு கூட ரிப்பீட் ஆகாது.” அண்ணனுக்கு உமாபதியுடன் பேசுவது என்பதை விட, அவருக்கு அவரே ஆத்மார்த்தமாக பேசுவது போலத்தான் இருக்கும்.

அந்தக் கோடை விடுமுறைக்கு அப்புறமும் உமாபதி, பாட்டி வீட்டிற்கு பலமுறை போயிருக்கிறான். ஊமையன் கோட்டை மீதான பீரங்கியும், அங்கே வீசுகின்ற பெருங்காற்றும், உருள்வது போல் நின்று கொண்டிருக்கும் ஒற்றைப் பாறையும்தான் மாறாமல் இருந்ததே தவிர மற்றதெல்லாம் மாறி விட்டிருந்தன. சீனு, சுரேஷ், ராமர் எல்லாம் ஊரை விட்டுப் போயிருந்தார்கள். நிர்மலாவிற்கு கல்யாணம் கூட ஆகியிருந்தது. முருகு அண்ணன் வீட்டில், ஓட்டல் சரியாகப் போகாததால் மூடிவிட்டிருந்தார்கள். புதுக்கோட்டை ரோட்டில் இருந்த ரைஸ் மில்லில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் நட்டமென்றார்கள். டிராவல்ஸ் சரியாகப் போகாமல் காரை குடுத்து விட்டிருந்தார்கள்.

உமாபதியும் இஞ்சினியரிங் எடுக்காமல் இயற்பியல் எடுத்து படித்துக் கொண்டிருந்தான். மேலே ஆராய்ச்சி படிப்பில் சேர, புரஃபசர் சேதுராமனிடம், சிபாரிசுக் கடிதம் வாங்கப் போகும்போது, “டேய்ய் உமா… என்னடா இந்தப் பக்கம்” என்று தோளைப் பற்றி அணைத்துக் கொண்டு கேட்டது முருகண்ணனேதான். ஆனால் அந்தப் பழைய ஸ்டைலான தோற்றம் மாறி, அப்போது வெள்ளை சீருடையில் இருந்தார். புரஃபசர் சேதுராமனின், மனைவிதான் செங்கமல நாச்சியார் என்றும், அவருக்கு கார் டிரைவராக அண்ணன் வேலை பார்க்கிறார் என்பதும் அப்புறம் புரிந்தது.

புரஃபசர் உமாபதியைப் பார்த்ததும் பெரும் உற்சாகத்தோடு, “ஒரே வார்த்தையில சொல்லனும்னா உன்னோட எஸ்ஸே, ப்ரில்லியண்ட். இந்த மதுரை பட்டிக்காட்டுல இருந்திட்டு கன்டன்ஸர் மேட்டர் ஃபீல்டு பத்தி இவ்வளவு நுணுக்கமா புரிஞ்சு வச்சிட்டிருக்கியேன்னு ஆச்சர்யமா இருக்குப்பா. நீ எம்ஐடிகெல்லாம் அப்ளை பண்ணிட்டிருக்காத. அதவிட பெட்டர், என்னோட ஃப்ரெண்டு யூ பென்-ல இருக்கான். பிரமாதமா உனக்கு ஹெல்ப் பண்ணுவான். பட் கொஞ்சம் பயோ-ஃபிசிக்ஸ் பக்கம் உன் ஃபோகஸ மாத்திக்கோ. உடனே அட்மிஷனாயிடும்” என்றவனை உச்சாணி கொம்பில் வைத்து பாராட்டிக் கொண்டிருந்தார். வெள்ளைத் தொப்பி, சிரிக்கும் கண்கள், தாடையில் பூரான் தழும்புமாக பக்கத்தில் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அண்ணனுக்கு என்ன புரிந்ததோ என்றிருந்தது உமாபதிக்கு.

“இப்பவே, சாமிநாதனுக்கு ஈ-மெயில் அனுப்பிடறேன். அமெரிக்க யூனிவர்சிட்டியில எல்லாம் ஃப்ரீ மெயில் கொடுத்திருவாங்க. இங்கதான் நாங்க வி எஸ் என் எல்ல போய் தொங்கிக் காத்துக்கிடந்து மெயில் அக்கவுண்ட் வாங்க வேண்டியிருக்கு. மெயில் கணக்கு இருந்தா எவ்ளோ வசதி தெரியுமா. உன்னோட பேப்பர இன்னும் என்னால் முழுசா நம்ப முடியலப்பா. சிம்ப்ளி ப்ரில்லியண்ட்” என்றவாறே, மாடியில் இருந்த அவருடைய அறைக்கு வேகமாக படியேறியவர், திரும்பி,

“டிரைவர், ஒரு அரைபாக்கெட் கோல்ட் கிங்ஸ் வாங்கிட்டு வந்திடறீங்களா. தீந்து போச்சு. அப்படியே புதுசா வந்திருக்கே… அந்த 2 லிட்டர் ஃபேண்டா… அதிலயும் ஒண்ணு வாங்கிக்கிடுங்க” என்றவர், இவன் பக்கம் திரும்பி “கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பேல்ல. செம வெயில் இன்னிக்கு. சரி. சரி… மேல வா” என்று படிகளில் தாவித்தாவி ஏறிச் சென்று விட்டார்.

சேதுராமனின் புகழ் சொற்களில் கட்டுண்டபடி உமாபதியும், அவர் பின்னால் படிகளில் ஏறி மாடிக்குச் சென்றுவிட்டான். அண்ணனை உதாசீனப்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும், அந்த நிமிடம் அவர் விசிறியடிக்கப்பட்டு விழுந்ததை அவன் பிறகு பல கணங்களில் உணர்ந்திருந்தான்.

யூ பென் பல்கலைகழகத்தின் பால் ஹேரிஸ்க்கு விலாசமிட்ட சிபாரிசு கடிதத்துடன் வீட்டிற்கு வெளியே வந்தபோது, முருகு அண்ணன் மீண்டும் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்கிற பதட்டம் இருந்தது. காம்பவுண்ட் கேட்டைத் திறந்து வெளியே வரும்போது,

“அந்தப் பக்கம் எங்கிட்டு போற. பஸ் ஸ்டாப்புக்கு இப்படி போகனும். உன்னைக் கொண்டுவிட்டுட்டு போலாம்னுதான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன்” சின்ன ஸ்கூட்டி வண்டியில் இருந்தபடிக்கு அண்ணன் கூப்பிட்டார்.

“ஐயா எதோ அமெரிக்காவுக்கு லெட்டர் கொடுக்கிறேன்னாரே. இங்க, தல்லாகுளம் பெருமாள் கோவில்ல வச்சு கும்பிட்டுட்டுப் போலாம். அப்படியே காதம்பரி மெஸ்ல இப்ப டிஃபன் போட்டிருப்பான். சாப்பிட்டுட்டுப் போலாம்”

அண்ணன் அப்போது பிபிகுளத்தில்தான் தங்கியிருந்தார். சந்திரா பிறந்து 2 வயது ஆகியிருந்தது. கோவிலுக்குப் போய்விட்டு, தேங்காய் போளியும், உளுந்தவடையும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு பஸ் ஏறியதும்தான், அண்ணனுடன் போய் குழந்தையாவது பார்த்துவிட்டு வந்திருக்கலாமே என்றிருந்தது உமாபதிக்கு.

இப்போது எதிரில் ரேணுகாவை விட உயரமாக அவள் பக்கத்தில் இருப்பதுதான் சந்திராவின் பெண்ணாக இருக்க வேண்டும்.

“குத்துக்கலாட்டம் நான் நிக்கிறேன் உம்முன்னாடி. உங்கண்ணனைத் தேடுதோ…” அவன் முருகானந்தத்தைத் தேடுவதாக நினைத்துக் கொண்ட ரேணுகா, “இங்கதான் பழைய கோவில் போட்டோல்லாம் பாத்திட்டு வர்றேன்னு போனார். கோவில்னு வந்திட்டா அவரைக் கைல புடிக்க முடியுமா என்ன. உனக்குத்தான் தெரியுமே” என்று, தனது நெடிய குசல விசாரணைகளையைத் தொடர்ந்தாள்.

சன்னதியிலிருந்து தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் வழியில் இருந்த விற்பனைக் கவுண்ட்டர்கள் வரிசைக்கு பக்கத்தில் சுவரில் இருந்த பெரிய போர்டில், பல போட்டோக்களை ஒட்டி வைத்திருந்தார்கள். எழுபத்தி ஏழில், அந்த ஜேஸ்டன்வில் ஊரில் கோவில் கட்டுவதற்கான வாணம் தோண்டியதில் தொடங்கி, கோவிலின் வெவ்வேறு வளர்ச்சி கட்டங்கள், திறப்பு விழா படங்கள், பிரபலங்கள் வந்து போனது என கலவையான கொலாஜ்.

நீளமாக சரிகை துண்டு போட்டிருந்த தாடிக்காரர், ராஜமுந்திரி வாசனையுடன் ஆங்கிலத்தில் அந்த போட்டோக்கள் வழியே அக்கோவிலின் வரலாற்றை விவரித்துக் கொண்டிருக்க, பக்கத்தில் முருகு அண்ணன், எப்போதும் தணியாத ஆர்வம் கண்களில் மின்ன கேட்டுக் கொண்டிருந்தார். ரேணுகா மதனி போலல்லாமல், வயோதிகம் அண்ணனின் மீது தன் ரேகைகளை அழுத்தமாகவே பதிவிட்டிருந்தது.

“டேய்ய்… இஞ்சிநீரு. உன்னைப் பாக்கனும்னு பாக்கனும்னு இவகிட்ட சொல்லிட்டே இருந்தேன். ந்தா… பெருமாள் மனவு வச்சாப்ல வந்து சேந்துட்ட பாரு” என்றார்.

“ஃபேஸ்புக்ல ஒரு மெசேஜ் போட்டிருந்தா வீட்டுக்கே வந்திருப்பேனேண்ணே. இங்கிருந்து ஒன்றரை மணி நேரத்துல குவேக்கர் டவுன்லதான் நான் இருக்கேன். இப்பவே கிளம்பி வாங்க.” என்றான். நுரை பூத்தாற்ப் போலிருந்த பூஞ்சை தாடியினூடே அந்த பூரான் தழும்பு தாடைக்குழி வரை போவதைப் பார்த்து சட்டென கண்களை விலக்கிக் கொண்டான்.

அண்ணன் சிரித்தார். “அந்த ஃபோனே இம்ப்புட்டுக்குன்னு இருக்கு. அதுல ஒரு பட்டனத் தட்டினா இன்னோரு பட்டனு விழுது. ஆனா நீ போடற போட்டோல்லாம் ஒண்ணுவிடாம பாத்திருவோம் நாங்கள்லாம்”

ராஜமுந்திரிக்காரர் இப்போது உமாபதியைப் பார்த்து, “நமஸ்காரம் சார். இப்போ, மூலவருக்கு தங்கக் கவசம் பிராஜெக்ட் ஒண்ணு போயிட்டிருக்கு. நீங்கள்லாம் நல்லா சாரிட்டி பண்ணனும்,” என்று ஆரம்பித்தார். தொடர்ந்து, “இது ரொம்ப விசேஷமான மூர்த்தி. அமெரிக்காவில் இருக்கிற கோவில்கள்ல ரொம்ப பழமை வாய்ந்தது. பிட்ஸ்பர்க் கோவிலுக்கு அடுத்து ஆறு வருஷத்தில இந்தக் கோவில் ப்ளானிங் ஆரம்பிச்சிட்டோம் ” என்றார்.

முருகண்ணன் ஆர்வம் தணியாமல் கேட்டுக் கொண்டிருக்க, பக்கத்தில் விற்பனை கவுண்டரில் இருந்த பெண்மணி, டொனேஷன் சீட்டு புத்தகங்களை விரித்து விளக்க ஆரம்பித்தார்.

“மூலவரை அப்போதே தனி ஃப்ளைட்டில் கொண்டு வந்தோம். இங்கே கஸ்டம்ஸில் மூன்று மாதங்கள் ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தார்கள். ஆனால் சிலை ஒரு கீறல் இல்லாமல் கொண்டு வந்து ஸ்தாபிக்கப்பட்டது. பாத்திருப்பீர்களே, பெருமாளின் தாடையில் கற்பூரம் பதிக்கப்பட்டிருக்குமே. அப்படியே கருக்கலையாமல் இன்றுவரை பராமரிக்கிறோம்”

உமாபதியின் பின்னால் நின்றுகொண்டிருந்த ஷ்ரேயா சட்டென முகம் மலர்ந்தவளாக “ஐ நோ தட் ஸ்டோரி. ஏதோ காயம் ஆகி அதுக்காக, சாமிக்கு அங்க கேம்ஃப்பர் வச்சிருப்பாங்கள்ல. ஐ நோ. அவர் பேர் கூட அனந்தன்னு வரும்ல டாடி? ஒரு ஃப்ளவர் கார்டன் வச்சிருப்பார். சின்னப் பையன் ஒருத்தன் ஹெல்ப் செய்ய வருவான்….” என்று அவளுடைய ஆங்கில உச்சரிப்பில் அனந்தாழ்வாரின் கதையை துண்டு துண்டாக சொல்ல ஆரம்பித்தாள்..

டொனேஷன் டிக்கெட்டுகள், பிரசாதங்கள் என்று அவர்கள் வாங்கி முடிக்கும்போது ஷ்ரேயா கதையை சொல்லி முடித்திருந்தாள். முருகண்ணன் அவளை கட்டியிழுத்து கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு கையில் ஒரு பிரசாத லட்டை கொடுத்தார்.

“உன் வயசிலிருந்து உங்க அப்பாவை நான் பாத்திட்டு வர்றேன். ஒருவாட்டிக் கூட முத்தம் கொடுக்க விட்டதில்ல அவன். நீதான் சமத்துக்குட்டி” என்றார் நெகிழ்ச்சியோடு. கண்கள் மூடி குழைந்து சிரித்த குழந்தை அப்படியே திரும்பி முருகு அண்ணனை கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து “தேங்க்யூ அங்கிள்” என்றது.

வீடு திரும்பும்போது உமாபதியின் மனதில் ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’ என்று வரிகள் ஓடிக் கொண்டேயிருந்தன. மனம் முழுதும் இனித்து வழிவது போலிருக்க, நிமிர்ந்து, கார் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். அப்படியே, முருகண்ணன் முகம் போல், அவன் முகமும் கனிந்து தளும்பிக் கொண்டிருக்கிறது. தன் மீது முள்ளாய் பாயும் பார்வைகளின் காயங்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு, தாடையில் கற்பூரக்கட்டி மணக்க கனிந்திருக்கும் முருகண்ணனின் முகம்.

விருப்பூற்றிக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே…. பின்சீட்டில் அமர்ந்து கையில் வீடியோ கேம் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும் ஷ்ரேயாவின் கைபற்றி இழுத்து வாய்நிறைய உமாபதியும் ஒரு முத்தம் கொடுத்தான்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.