அப்பாவின் நண்பர்

வேல்விழி மோகன் 

 

எங்கிருந்துதான் அவரு வந்தாருன்னு தெரியல. விமலுக்கு அம்மாவ பாக்கறதுக்கு கஷ்டமா இருந்தது.  மதியம்தான் அந்தாளு வந்தது. அம்பது. அம்பத்தஞ்சு இருக்கும். அப்பாவுக்கு நண்பராம். முப்பது வருழத்துக்கு முன்னாடி ஒன்னா கிழக்கிந்திய கம்பெனி மாதிரி ஏதோ ஒரு கம்பெனியில வேல பாத்தாங்களாம் ஓசூர் பக்கமா. பெரிய பொட்டி. தலைல குல்லா. வழவழன்னு முகம். பூன மீச. கத்திரிப்பூ கலர்ல சட்டை. வெள்ளை பேண்டு. முடியெல்லாம் கருகருன்னு இருந்தது. வாட்ச் பெரிசா நீலக்கலர்ல. பேச்சுல அவ்வளவு நாகரீகம். வெண்ணெய் மாதிரி. செருப்பு ஒரு மாதிரி வளைஞ்சு அம்புலிமாமா படக்கதைல வர்ற மாதிரி இருந்தது. அப்பப்போ அம்மாவ நிமுந்துபாத்து ஒரு சிரிப்பு. எரிச்சலா இருந்தது. அப்பா பழைய கனவுல பேசறாரு. ஒரே ரூம்ல இருந்தவங்களாம். ஒரே தட்டுல சாப்பிடாத குறையாம். அப்ப சாப்பிட்ட ஒரு மாமி மெஸ்ஸை பத்தி சிரிச்சு சிரிச்சு பேசிக்கிறாங்க.

விமலுக்கு வந்தமா போனோமான்னு இருக்கனும். லெட்டர் போட்டுட்டுதான் வந்திருக்காரு. மூணு நாளு தங்கற மாதிரி. அவனுக்குதான் தெரியல. அப்பாவும் சொல்லல. அம்மாவும் சொல்லல. அவனுக்கு அவங்க மேலேயும்  கோவம்.

“ஏன் எனக்கு சொல்லலை?”ன்னு அவரு பாத்ரூம்ல இருக்கும்போது கேட்டான். அவங்க ஒருத்தருக்கொருத்தரு பாத்துக்கிட்டாங்க.

“ஏண்டா?”

“அவர எனக்கு புடிக்கல”

“ஏன்?”

“தெரியல. அம்மாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல. இதுல இது வேறயா?” என்று குதித்தான் அப்பாவிடம்

“அவுரு வந்திடப்போறார்றா. காதுல விழப்போகுது. வராதவர் வந்திருக்காரு. எனக்கொன்னும் பிரச்சனையில்ல. நான் சமாளிச்சுக்குவேன்” என்றாள் அம்மா.

“உன்னால முடியாதும்மா. நேத்துதானே ஆஸ்பிட்டலுக்கு போயிட்டு வந்தே. முதுகு வலி தலைவலின்னு”

“அது எப்பவும் இருக்கத்தானே செய்யுது.  உனக்கு என்ன வயசு?”

“இருபத்து ஒன்னு”

“என்ன படிக்கறே?”

“டிப்ளாமோ மூணாவது வருசம். சிவிலு. அதுக்கென்ன இப்போ?”

“அதுல மட்டும் கவனமா இரு. மத்தத நாங்க பாத்துக்கறோம் “  அம்மா அப்படி சொன்னவுடன் விமல் வெளியேறினான். பழைய டிவிஎஸ்-ஐ எடுத்துக்கொண்டு சினிமா தியேட்டருக்கு போனான். பத்திரமாக பெட்ரோல் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்த்துக்கொண்டான். அவன் இப்படி கிளம்பும் போதெல்லாம் எங்கேயாவது நின்றுவிடும். “நானு கோவமா இருந்தா உனக்கு கிண்டலா இருக்கா?” ன்னு அதனோட பேசுவான். நிறைய முறை திரும்ப தள்ளிட்டு  வந்திருக்கான். தெருவுல அந்த ரட்ட ஜடக்காரி இருக்காளான்னு ஓரக்கண்ணால பாப்பான். வேத்து ஒழுகும். துடைச்சுட்டே மேல காக்கா பறக்குதான்னு பாத்து நடப்பான். நல்லவேள .  பெட்ரோல் நல்லாவே இருக்குது. நைட்டுக்குதான் வீட்டுக்கு போகனும். ஒம்பது. அல்லது. பத்து மணிக்கு எல்லாரும் தூங்கிட்டிருப்பாங்க. தூங்கலைன்னா சாப்பிடாம போயி படுத்துக்கனும். என்னா சொன்னாங்க அவங்க?

“அதுல மட்டும் கவனமா இரு. “

உம். அப்ப நானு கவனமா இல்லையா? இல்ல. அவங்க நல்லதுக்கு சொன்னது குத்தமாயிடுச்சா? அக்காக்காரி வாயே தொறக்கல. ஏன்? அம்மாவ பத்தி அவளுக்கு தெரியாதா? அவளுக்கென்ன? யாறாவது வந்துட்டா நானு டீ போடறேன்னு போயி நின்னுக்குவா. வந்து குடிச்சுட்டு போறவங்க “பேஷ். பேஷ்”ன்னு சொன்னா ரண்டு நாளைக்கு தனக்குத்தானே சிரிச்சுக்குவா. அவளுக்கு அது போதும். மீதி வேலைய அம்மா பாக்கறது. விட்டா போதும்னு கட்டில்ல விழறது. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கறது. நெத்தில வேத்து ஒழுகறது. இதெல்லாம் ஏன் அவளுக்கு தெரியல? அம்மா நம்மள திட்டும்போது குறுகுறுப்பா வேடிக்கதானே பாத்தா. இருக்கட்டும். நமக்கென்ன இனிமே..

தியேட்டர்ல கூட்டமே இல்லை. பீடி நாத்தம். நடுநடுவே சிகரெட் புகை மேலே பறந்தது. “முறுக்கு சமோசா சுண்டல் “ சத்தம் கேட்டது. யாரோ கீழே காறித்துப்புகிறார்கள். உம்மூஞ்சி மேலயே துப்பிக்கறது. விமலுக்கு கோவமாக வந்தது. உள்ளங்கையை கீறிக்கொண்டான். பின்னாடியிருந்து செண்ட் வாசனை. இடதுபுறம் இருட்டில் கிச்சு. கிச்சு சிரிப்பு. வளையல் சத்தம். ஒரு குழந்தை நடுவில் ஓடியது. அம்மாக்காரி பிடிக்க ஓடினாள். நான்கு பேர் விசிலடித்துகொண்டே சீட்டை தேடினார்கள். ஒரு அகலமான முதுகுக்காரி “இந்தப்படம் நல்லாயிருக்குமா?” ன்னு அந்தாளுக்கிட்ட கேட்டுக்கிட்டே முன்னாடி போனா. ஸ்கிரீன்ல புள்ளி புள்ளியா வந்தப்போ கதவ சாத்தி லைட்ட அணைச்சாங்க.

விமலுக்கு ரட்ட ஜடக்காரி ஞாபகம் வந்தது.

0000

அவள கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நாலு வீடு தள்ளி தற்செயலா பாத்தப்போ புதுசா தெரிஞ்சா. அப்படின்னா புதுசா வாடகைக்கு வந்திருக்கனும். அவ அவனை கவனிக்கறப்போ அவனுக்கு மொதல்ல சரியா புரியல. ஆனா அந்தப்பக்கம் கடக்கும்பொதெல்லாம் அவ வெளியே நிக்கும் போதெல்லாம் அவ அவனைய கவனிக்கிறான்னு தெரிஞ்சப்ப வெக்கமா இருந்தது. இவன் உயரம்தான் இருக்கும். மாநிறம். நீளமான முகம். அதே மாதிரி நீளமான முடி. பெரும்பாலும் நீலக்கலரு சேலை. இல்லைன்னா சுடிதாரு. கண்டிப்பா நெத்தியில ஒரு ஸ்டிக்கர் பொட்டு. கைல அவவளவு வளையல். காம்பவுண்டு சுவருக்கு பின்னாடி செம்பருத்தி செடிக்கு பக்கத்துல சேரை போட்டுக்கிட்டு உக்காந்திருப்பா. அல்லது அந்த தண்ணி பைப் பக்கம் மாங்கா மரத்துக்கு கீழ நின்னுக்கிட்டிருப்பா.

இவனுக்கு எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல. ஸ்கூல்ல  பாலிடெக்னிக்ல அதிகமா யாருக்கிட்டேயும் பழக்கமில்லை. பொண்ணுங்களான்ட பேசுவான். அவ்வளவுதான். யாரையும் புடுச்சதா தெரியல. ஆனா டீச்சருங்கள புடிக்கும். ஏழாவது படிக்கும்போது ஹிஸ்டரி டீச்சரு. பத்தாவதுல இங்கிலீஷ் டீச்சரு. அப்பறம் இப்ப பாலிடெக்னிக்ல கேண்டீன் வச்சிருக்கவ.  எல்லாருக்கும் ஒரு ஒத்துமை. அந்த உதட்டை சுழிக்கிற ஸ்டைலு. பத்திக்கிட்டு வரும். என்னவோ இனம் புரியாம குறுகுறுன்னு ஏழாங்கிளாஸ்ல ஆனப்போ பைத்தியம் புடுச்ச மாதிரியிருந்தது. அந்த குறுகுறுப்புக்கு ஒவ்வொரு முறையும் காத்திருந்தான்.

“என்ன பாக்கறே விமலு?”

“உங்க உதடு டீச்சர். ஒரு முறை அப்படி பண்ணுங்க”

“எப்படி?”

“இப்படி. ஒரு மாதிரி வளைச்சு. நடுவுல லேசா பல்லால கடிச்சு”

“இப்படியா?”

எல்லாம் கனவுல. அடிக்கடி கனவுல உதடுகளா வந்து போனது. சின்னதா.. பெருசா.. ஈரமா.. மடிப்பு மடிப்பா.. அப்பெல்லாம் அந்த குறுகுறுப்பு வரும். கிறுக்குத்தனமா மாறும். தனிமைல அமைதியில.. வீட்டுக்குள்ள.. பாத்ரூம்ல.. மலையோரத்துல.. உம்.. வெளியே தெரிஞ்சா அசிங்கம்னு நினைப்பான். அதுக்குதானே தனிமை. அந்த உதடுகள் யாருக்கு சொந்தமோ அவங்க மேலேயெல்லாம் பொறாமை வந்தது. பஸ் ஸ்டேண்டுல.. மார்க்கெட்ல.. தியேட்டர்ல.. திருவிழாவுல.. எல்லாம் இவன் தேடினது அந்த உதடுகளைத்தான். கண்டுபிடிக்கறப்போ பின்னாடியே போவான். கடைக்கு வெளியே.. உள்ள., ஓட்டல்ல சாப்பிடறப்போ.. பஸ்ல டிக்கெட்ட வாங்கறப்போ.. பேங்க் பக்கம்., ஐஸ்கிரீம் சாப்பிடறப்போ.,  ஆங்.. ஐஸ்கிரீம்.. அங்கதான் அவனோட தேடல் முடிஞ்சது. உடுப்பி ஓட்டல் பக்கம் ஒரு ஐஸ்கிரீம் கட இருக்குது. வெளியில சேரை போட்டு வட்ட நாற்காலில வானத்தை பாத்துக்கிட்டு சிரிச்சுக்கிட்டே சாப்பிடுவாங்க. கோன்ல.. கப்புல., பிளேட்ல.. கலர்கலரா.. கொஞ்சம் தள்ளி ஒரு  புளியமரம் இருக்குது. அங்க நின்னுக்குவான். வேடிக்க பாப்பான். ஆம்பளைங்க.. பொண்ணுங்க இவங்கெல்லாம் இல்லை. பொம்பளைங்க.  நாப்பது… அம்பது வயசுக்கு மேல. பொதபொதன்னு இருக்கனும். எழம்போது பின்னாடி சேலைய சரி பண்ணனும். இடைவெளில வட்டமும் மடிப்புமா இருக்கனும். முக்கியமா உதடுங்க பெருசா இருக்கனும். ஐஸ்கிரீம் எச்சில் பட்டு உதடுகளால ஈரம் பட்டு உள்ளே வெளியேன்னு. ம்.. ம்.. அவனுக்கு காத்திருப்பு முடியறப்போ வேகமா ஓடுவான். தனிமைய தேடிட்டு.

இவக்கிட்ட அந்த மாதிரி உதடுகள் இல்லை. ஆனா தீர்மானிச்சுட்டான். “இவளத்தான் கல்யாணம் பண்ணிக்கனும். “

0000

தியேட்டர்ல திடீருன்னு சிரிச்சுக்கிட்டான். அப்பறம் அப்படியே ஓரமா ரண்டு பக்கமும் பாத்துக்கிட்டான். யாருமில்ல. காலி சீட்டுங்க. புகை வாசன இன்னும் போகலை. கடைசி வரைக்கும் போகாதுன்னு தோணுச்சு. எதுக்கு ஆரம்பத்துல புகை பிடித்தால் தண்டிக்கப்படுவீருன்னு போடறாங்கன்னு யோசிச்சான். அதுக்கு இந்த பாழாப்போன செண்ட் வாசனையே பரவாயில்லை. வளையல் சத்தம் வருதான்னு கவனிச்சான். இல்லை. ஆனா வேற என்னவோ வாசனை. ஏதோ பூ..? செண்டுமல்லியா? ரோஸா?  தெரியல.  திரைல ஒரே சத்தம். ஆட்டோ கவிழுது. ஒரு எரும ஓடி வருது. ஒருத்தி படுத்துக்கிட்டு திரும்பி பாக்கறத மெதுவா காட்டறாங்க. ஆனா அவன் இந்த மாதிரி இடத்துலதான் சிரிச்சான்.

நல்லவேள..சத்தமா சிரிக்கல. இன்னும் இடைவேளை வரலை. “அடடா.. அது வேற இருக்கா?” ன்னு நினைச்சுக்கிட்டான். மறுபடியும் சிரிச்சிருவோமுன்னு பயமா இருந்தது. எட்டாவது படிக்கும்போது காயத்ரி. பத்தாவது படிக்கும்போது நளினி. பிளஸ் டூல நந்தினி. இவங்களையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கனமுன்னு நினைச்சான். அதெல்லாம் நடக்கலை. அப்பப்போ அந்த ஆச வரும் போகும்.  ஆனா இவ நிச்சயம். நந்தினி தவிர மத்தவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவ ரமேஷை லௌ பண்ணறான்னு தெரிஞ்ச பிறகு அவ இவனுக்கு பகையாயிட்டா. இத்தனைக்கும் ரண்டு முறைதான் பேசியிருக்கான்.  பின்ன எதுக்கு கண்ல அந்த ஆசைய காட்டனும்? பொண்ணுங்க ஒரு சிலரு சரியில்ல. நம்மளது தப்பா இருக்கலாம். ஆனா கண்ல எதுக்கு பேசனும்? ஒரு வேல நாம தப்பா எடுத்துக்கிட்டோமோ? இதையும் பல முறை யோசிச்சுட்டான். அதுக்கு நளினி பரவாயில்லை. இவன முடிவெடுக்க முடியாம தவிக்கவிட்டா.  இவன் பே..பேன்னு கடைசி வரைக்கும் அவள பாத்துக்கிட்டுதான் இருந்தான். காயத்ரி? சுத்தம்.. அடிக்கடி பாத்து சிரிக்கிறான்னு லட்சியம் வச்சான் அவ மேல.

“உன்னைய விடமாட்டேன் காயத்ரி”

ஒரு நா வீட்டுக்கு கூப்பிட்டா. போனான். அவங்கப்பா ஸ்கூல, டீச்சருங்கள  விசாரிச்சுட்டு “எம் பொண்ண திரும்பி திரும்பி பாக்கறியாமே?” ன்னு ஆரம்பிச்சார். பதில் சொல்றதுக்குள்ள பளாருன்னு கன்னத்துல ஒன்னு விழுந்தது. மூணு நாளு உடம்பு சரியில்லைன்னு வீட்ல இருந்திட்டுதான் ஸ்கூலுக்கு போனான். அவமானமா இருந்தது. ஸ்கூல் பூரா பரவியிருக்குமுன்னு நினைச்சான். அப்படி ஏதுமில்ல. காயத்ரிதான் வரல. மூணு நாளா வரலையாம். அதுக்கப்புறம் அவ வரவேயில்லை. கைல குழந்தையோட ஒரு நா ரௌண்டானா பக்கம் பாத்து சிரிச்சா. கண்டுக்காம வந்துட்டான்.

இப்ப இவ..

விடக்கூடாது இவள. கரெக்டா ஜட்ஜ் பண்ணனும். நமக்கு தகுந்த மாதிரிதான் இருக்கா. அப்பன் மீச வச்சுக்கிட்டு போலிஸ் மாதிரி இருக்கான். ஒரு பாட்டி இருக்குது. அம்மாவ இது வரைக்கும் பாத்ததில்லை. வேலைக்கு போறாங்களோ என்னவோ. அதுக்கு முன்னாடி இனிமே வீட்டு விழயத்துல தலையிடக்கூடாது. என்னன்னா  என்னான்னு பட்டும் படாம இருந்துக்கனும். என்ன சொன்னாங்க?

“உன் வேலய நீ பாரு”. சே.. இல்ல.. இல்ல.. உம்.. “அதுல மட்டும் கவனமா இரு”. இருங்க.. இருங்க. சிவிலு முடிச்சுட்டு பெங்களூரு போயிட்டு செட்டில் ஆயி உங்கள மறந்துட்டு அப்பப்போ குசலம் மட்டும் விசாரிக்கறேன். யாருன்னு நினைச்சிங்க விமல. மொதல்ல அந்த ரட்ட ஜடக்காரி பேர கேக்கனும். ரண்டு மூணு மாசமாகுது. சும்மா சும்மா பாத்துட்டு. அப்பறம் வீட்ல சொல்லி ஏதாவது பிரச்சன பண்ணாங்கன்னா ஆட்டோ வச்சு கூட்டிக்கிட்டு போய்ட வேண்டியதுதான். பக்கென்றது. இதெல்லாம் நடக்குமா? நடக்கனும்.. விமலு யாரு.. கூட ஜோசப்பை சேத்திக்கனும். அவன் பொறாம படுவான். அம்பதோ நூறோ கொடுத்து சரிக்கட்டிக்கனும். மொதல்ல அவ பேர விசாரிக்கனும்.

ஜானகி?

விமலா?

அண்ணபூரணி?

காயத்ரி?

மீண்டும் சிரித்துவிட்டான். நல்லவேள. இடைவேளை விட்டு போய்ட்டு வந்துட்டு இருந்தாங்க. ரண்டு பேரு இடிச்சுக்கிட்டே போனாங்க. மின்விசிறி சத்தம். “சுண்டல். சுண்டல். சூடா சுண்டல்” சத்தம். பலமாக சிரிக்கும் ஒரு பெண்ணின் குரல். இரண்டு வரிசை கீழே சீட்டுக்கடியில் எதையோ தேடும் நபர்  திரையில் விளம்பரம். உஸ்ஸ்ஸ். அமைதியா இருங்கன்னு. பின்னாடி யாரோ சிப்ஸ் சாப்பிடற சத்தம். அந்த முதுகு பெருத்தவ மறுபடியும் முதுக காட்டிக்கிட்டு போனா. ஒரு ஹிந்தி விளம்பரம். அப்புறம் அமிதாப்பு வந்து ஏதோ சொல்றாரு.

நேரம் பாத்தான். நாலுக்கு பத்து நிமிழம் இருக்குது. அஞ்சு மணிக்கு படம் விடுவான். நேரா ஐஸ்கிரீம் கடை. அப்பறம் மைதானம்.  அப்பறம் பாய் கடை. மசாலா பொறி சாப்புட்டு வேல்முருகன் கடைல பிரைட் ரைஸ் சாப்பிடனும். சட்டுன்னு மேல் பாக்கெட்டை தடவினான். இல்ல..பத்தாது. அண்ணாச்சி டீக்கட பக்கம் போயிட்டா எவ்வளவு நேரம் வேணுமுன்னாலும் இருக்கலாம். அங்கெல்லாம் சிகரெட்டு கப்பு இருக்கும். பொறுத்துக்கலாம்.

வீட்டுக்கு போனவுடனே அம்மாக்கிட்ட சொல்லி அந்தாள.. இல்ல.. வேணாம். அதான் சொல்லிட்டாங்களே வேலய பாருன்னு.

திரைல வந்த ஆளு அவள மேலேயும் கீழேயும் பாக்கறான். கேமரா மேலேயிருந்து காட்டுது. விசில் சத்தம் வருது. உடனே பாட்டு. டமக்கா.. டமக்கா.. கிமுக்கு ஜம்பா..

முன்னாடி சீட்டிலிருந்து “ஏங்க.. படம் போட்டுட்டாங்களா?”

“ஆமா.. படம்தான்”

“விளம்பரமோன்னு நினைச்சுட்டேன் “

0000

பத்து இருபதுக்கு வீட்டுக்குள் நுழைந்தான் விமல். வண்டியை அணைக்கும்போது வாசலில் வெளிச்சம் தெரிந்தது. முன்வராந்தாவில் அந்த அம்புலிமாமா செருப்பை காணோம்.

அப்பா அங்கதான் தூங்கிட்டிருக்காரு. அம்மா சீரியல் பாக்கறாங்க. அக்கா சீரியல்ல யாருக்கோ சாபம் கொடுக்கறாங்க. அம்மா திரும்பிப்பாத்து “எங்கடா மசாலா பொறி?” ன்னு கேட்டாங்க.

அவங்க அப்படி கேட்டது அவனுக்கு புடிக்கல. மதியம் கூட சாப்பிடல. வண்டிய எடுத்துட்டு போயாச்சு. அதைப் பத்தியும் பேசல. அக்கா இன்னும் மோசம். இவன பாக்கவேயில்லை. “அடடா”ன்னு சீரியல பாத்து உச்சு கொட்டுனா.

அவனுக்கு சுர்ருன்னு வந்தது. ”மொதல்ல அத அணைச்சு தொலைங்க“ என்றான்.

அம்மாவும் அக்காவும் சிரிச்சாங்க. அப்பா முழிச்சுக்கிட்டு “வந்துட்டானா?”. .ன்னு கேட்டு மறுபடியும் திரும்பி படுத்துக்கிட்டாரு. அக்கா “அதுக்குள்ள விளம்பரமா?” ன்னு பாத்ரூம் பக்கம் எழுந்திருச்சு போறா.

“எங்க அவரு?”ன்னு கேட்டான் விமல். அடுத்த அறையை எட்டிப்பார்த்தான்.

“யாரு?”

“காலைல இருந்தாரே”

“அங்கிளா. அவரு கெளம்பிட்டாரு. அவங்க சொந்தத்துல யாரோ இறந்துட்டாங்களாம்“ உள்பக்கமாக அக்காவிடம் ”ஏண்டி.. சாப்பாடு போதுமா? செய்யனுமா?”

“இருக்கற சோறு போதும். மீன் கொழம்புதான் கொஞ்சமா இருக்குது”

“மீனு?”

“அது இருக்குது. வேணுமுன்னா என்னோடதையும் எடுத்துக்கிட்டும்”

“அதெப்படி.. உம்பங்கு உனக்கு. அவன் பங்கு அவனுக்கு. ரண்டு பேரும் சாப்பிடுங்க. பாவம் மனுசன். சரியா சாப்பிடாமலேயே போயிட்டாரு“ அம்மா அப்பாவை எழுப்பினாள் ”என்னாங்க.. என்னாங்க”

இவன் லுங்கிக்கு மாறி சமையலறையில் உட்கார்ந்து அக்கா பரிமாறும்போது “எப்ப போனாரு?”

“இப்பதாண்டா.. ஒரு மணி நேரம் ஆயிருக்கும்”

“எந்த ஊரு?”

“வேலூரு பக்கம் ஏதோ வில்லேஜு.  ரொம்ப நாள் பிளானாம் அப்பாவுக்கும் அவருக்கும். மூணு நாளைக்கு எங்கெங்க சுத்தறதுன்னு பேசி வச்சுருந்தாங்க. எல்லாம் போச்சுது. அடுத்த முறை குடும்பத்தோட வரச்சொல்லியிருக்குது”

வறுத்த மீன். மீன் குழம்பில்  வெந்தய வாசனை. அக்கா ஒரு மீனை இவன் தட்டில் வைத்தாள். “நான்தான் செஞ்சது”
“நீ செஞ்சா எப்பவுமே நல்லாதானே இருக்கும்”

“அம்மா. பொய் சொல்றான்மா”

அம்மா. “ரண்டு பேரும் சண்ட போட்டுக்காதீங்க”

“சண்ட இல்லைம்மா.  மீன் கொழம்பு நீ வச்சா நல்லா இருக்காதுன்னு குத்திக்காட்டறான்”

அம்மா ”உன் அளவுக்கு கைப்பக்குவம் வருமா எனக்கு?”

அக்கா சிரித்தாள். அவளோடு சேந்து சிரிக்கனும் போலிருந்தது. ஆனா சிரிக்கல. அக்கா “வண்டியில்லாம அப்பாவுக்கு கொஞ்சம் கஷ்டமாயிடுச்சுடா”

“அப்பறம்?”

“பக்கத்துல வாத்தியார் மாமாவோட வண்டி மெக்கானிக் கடைல ரிப்பேருக்கு இருக்காம். எதுத்த வீட்ல கதவ மூடிட்டாங்க. புதுசா வந்திருக்காங்க இல்ல.. கொஞ்சம் தள்ளி”

இவன் உடனே ”போலிஸ்காரா?”

“இல்ல. புதுப்பேட்டைல  பழமண்டி வச்சுருக்காறாம். அவங்க வீட்டு வாசல்ல .வண்டி நின்னுக்கிட்டு இருந்தது. போய் கேட்டவுடனே கொடுத்துட்டாங்க. வேலூருக்கு பஸ்ஸு ஏத்தனுமில்ல அவர?”

அவன் “அவங்க பொண்ணு பேரு என்ன?” ன்னு கேக்க நினைச்சான். வேணாம். இப்பதானே ஆரம்பம். இன்னும் நேரம் இருக்குது. சந்தேகம் வந்தா ரூட்டு மாறிடும். நாமளே நேரடியா கேட்டுக்கனும்.

“உம்பேரு என்ன?“

உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். அம்மா உள்ளே வந்து அக்காவிடம் “என்ன சிரிக்கறான். டிவிய அணைச்சுட்டேன்.  பேசாம சாப்புட்டு தூங்கு”

“என்னம்மா ஆச்சு அந்த குழந்தைக்கு?”

“குழந்தைக்கா?” என்றான் புரியாமல்

“இல்லடா.. சீரியல்ல“

“குழந்தைகளையும் விடலையா அவங்க. இதுக்கெல்லாம் யாரு தடை போட்றது?”

“பேசிட்டே சாப்பிடாதீங்க. முள்ளு” என்றார் உள்ளிருந்து அப்பா அரைத்தூக்கத்தில்

“அம்மா.. அப்பா வண்டி வாங்க போனாருள்ள. ஒரு அக்காதான் சாவிய எடுத்தாந்து கொடுத்தாங்க. பழமண்டிக்காரு எம் பொண்டாட்டி. ரண்டாம் தாரம்னு சொன்னாராம். உள்ளாற ஒரு அம்மா இருக்குது. பாட்டி மாதிரி. அவங்க முதல் தாரமாம். கொழந்த இல்லாததுக்கு இந்த மாதிரி பண்ணிட்டாராம். பணம் இருக்கறதாலதானே இந்த மாதிரி நடக்குது. அவங்கள பாத்தா பாவமா இருக்குது. பொண்ணு வயசு. அந்த வீடு செத்த வீடு மாதிரியிருக்குது. ரண்டு பொம்பளைங்க கண்ணுலேயும் உயிரே இல்லைன்னு அப்பா வந்து சொல்லுச்சு” என்றவள் இவன் பக்கம் திரும்பி “இவன் ஏன் என்னைய இப்படி பாக்கறான்? சாப்பிட்றா”

விமல் மீனில் முள்ளை ஒதுக்குவது போல நடித்தான். அவளை மீண்டும் நிமிர்ந்து பார்த்தான். அம்மா அங்கிருந்து அகலும்போது “அந்த பொண்ண கவனிச்சிருக்கேன். எப்பவும் வெளிய நின்னுக்கிட்டு வெறிச்சுன்னு பாத்துக்கிட்டிருக்கும். பெத்தவங்க பாவிங்க. அந்தப் பொண்ணு யார் கூடயாவது போய்ட்டா கூட நல்லாருக்கும்”

“யாரு கூட போறது. உலகம் என்ன சொல்லும்?” அம்மா

“உலகம் இப்ப என்ன சொல்லுது. வேடிக்கதானே பாக்குது” அக்கா இவனை நிமிர்ந்து பார்த்து ”ஏன்டா.. சாப்புடு.. என்னையே பாத்துக்கிட்டு?”

“பாவம்கா”

“ஆமாமா. பாவம்தான் அந்த பொண்ணு”

“இல்லக்கா. அப்பாவோட நண்பரு. இங்க தங்க முடியாம போச்சே அவரால” என்றான் அவன்.

 

 

 

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.