தி. இரா. மீனா
என் அண்டை வீட்டுக்காரரின் வீட்டில் வேலை பார்த்த முதியவளின் புது மணப்பெண் அங்கோரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு மணப்பெண்ணும், புதியவள்தான் ; ஆனால் அவள் வேறு வகையில் புதியவள் : இரண்டாம் தார மனைவியைப் புதியவள் என்று சொல்ல முடியாது , ஏனெனில் அவன் ஏற்கெனவே ஒரு முறை அந்த உறவு நீரைச் சுவைத்தவன். அதனால், புது என்கிற தனிப்பட்ட உரிமை அங்கோரியைத் தான் சேரும். அவர்கள் இருவரும் ஒன்றிணைய ஐந்து வருடங்கள் பூர்த்தியானது , இன்னும் இந்த உணர்வை முக்கியத்துவமாக்கியது.
ஆறு வருடங்களுக்கு முன்னால் பிரபாத்தி தன் முதல் மனைவிக்கு இறுதிச் சடங்குகள் செய்ய சொந்த ஊருக்குப் போனான். அது முடிந்த பிறகு, அங்கோரியின் தந்தை அவனருகே போய் அவனுடைய ஈரத் துண்டை காய வைப்பதற்காக வாங்கி, அதை உதறினார். அதன் குறியீடு துக்கத்தின் தன்மையைத் துடைப்பது என்பதாகும். ஒன்றரை முழத் துண்டு முழுவதும் ஈரமாகுமளவிற்கு எந்த மனிதனும் அழுததில்லை. பிரபாத்தி குளித்த பிறகுதான் துண்டு ஈரமானது. அழுகைக் கறையால் ஈரமாகிவிட்ட துண்டைக் காய வைக்கும் செயல் என்பது “ இறந்தவரின் இடத்தை நிரப்ப நான் என் மகளை உனக்குத் தருகிறேன். நீ இனிமேல் அழ வேண்டாம். நான் உன் ஈரத்துண்டைக் கூட காயவைத்து விட்டேன்,” என்று சொல்லுவதுதான்.
பிரபாத்தியை இப்படித்தான் அங்கோரி திருமணம் செய்து கொண்டாள். இருந்த போதிலும் அவர்கள் ஐந்து வருடத்திற்குப் பிறகு இணைந்ததற்கு இரண்டு காரணங்கள் : அவளுடைய வயது, அவள் தாயின் உடல் நலக்குறைவு. கடைசியாக பிரபாத்தி, தன் மனைவியை அழைத்து வர விரும்பிய போது, அவனுடைய முதலாளி, தன்னால் இன்னொரு ஜீவனுக்கு சோறு போட முடியாதெனச் சொல்லி அவள் வருகைக்கு மறுப்புத் தெரிவித்தார். ஆனால் பிரபாத்தி புது மனைவி ஒரு தனி வீட்டில் இருப்பாள் என்று சொன்ன பிறகே அவர் ஒப்புக் கொண்டார்.
தொடக்கத்தில் அங்கோரி எப்போதும் பர்தா அணிந்திருந்தாள். ஆனால் விரைவில் அது சுருங்கி அவள் தலைமுடியை மட்டும் மறைக்கும் அளவிளாகி விட்டது. அது அவளை இந்து சமய சம்பிரதாயப் பெண்ணாகக் காட்டியது . அவள் கண்ணுக்கும், காதுக்கும் ஒரு விருந்தாக இருந்தாள். அவளுடைய கொலுசுகளிலிருந்து வரும் நூறு மணியொலி ,அவள் சிரிப்பில் ஆயிரம் மணியொலிகளாக வெளிப்படும்.
“அங்கோரி, நீ என்ன அணிந்து கொண்டிருக்கிறாய்?”
“கொலுசு. அழகாக இருக்கிறதல்லவா ?”
“உன் நகத்தில் ?”
“ஒரு வளையம்.”
“உன் தோளில்? ”
“கைச்சங்கிலி.”
“உன் நெற்றியில் அணிகலனுக்கு என்ன பெயர்? ”
“அலிபாண்ட் என்பார்கள்.”
“உன் இடுப்பில் இன்று எதுவும் அணியவில்லையா, அங்கோரி?”
“அது மிக கனமாக இருக்கிறது . நாளை அணிவேன். இன்று நெக்லஸுமில்லை. அதன் கொக்கி உடைந்து விட்டது. நாளை நான் டவுனுக்குப் போவேன். புதுக் கொக்கியும், மூக்குத்தியும் வாங்கி வருவேன். என்னிடம் ஒரு பெரிய மூக்குத்தி இருக்கிறது. ஆனால் அதை என் மாமியார் வைத்திருக்கிறார்.”
சொற்ப விலையான தன் வெள்ளி நகைகள் குறித்து அவளுக்கு மிகப் பெருமை. இவையெல்லாவற்றையும் அவள் செய்து கொள்வது அதிகபட்சமாகக் தன்னைக் காட்டிக் கொள்ளத்தான்.
வெயில் காலம் மிகக் கடுமையாக இருந்தது. நாளின் பெரும் பகுதியில் தன் குடிசையிலிருந்த அங்கோரியும் அதை உணர்ந்திருக்க வேண்டும். இப்போது அவள் அதிக நேரம் வெளியே இருக்கிறாள். என் வீட்டிற்கு முன்னால் சில வேப்ப மரங்கள் இருக்கின்றன ; அதனருகே யாரும் அதிகம் பயன்படுத்தாத ,ஒரு பழைய கிணறு. மிக அரிதாக கட்டிடத் தொழிலாளர்கள் பயன்படுத்துவதுண்டு. சிந்தியிருக்கும் தண்ணீர் சிறு குழிகளாகத் தங்கி , சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருந்தது. அங்குதான் அவள் ஓய்வு நேரத்தில் உட்காருவாள்.
“என்ன செய்கிறீர்கள் அக்கா? ” நான் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த போது அங்கோரி கேட்டாள்.
“உனக்குப் படிக்க வேண்டுமா? ”
“எனக்குப் படிக்கத் தெரியாது.”
“கற்றுக் கொள்ள விரும்புகிறாயா? ”
“ஓ, வேண்டாம் ”
“ஏன் வேண்டாம்? கற்றுக் கொள்வதில் என்ன தவறு? ”
“பெண்கள் படிப்பது என்பது பாவம்! ”
“ஆண்கள் படித்தால்? ”
“அவர்களுக்கு, அது பாவமில்லை.”
“யார் அப்படிச் சொன்னார்கள் உன்னிடம்? ”
“எனக்கே தெரியும்.”
“நான் படிக்கிறேன். நான் பாவம் செய்திருக்க வேண்டும்.”
“நகரப் பெண்களுக்கு அது பாவமில்லை. கிராமப் பெண்களுக்குத்தான்.”
நாங்கள் இருவருமே இதைக் கேட்டுச் சிரித்தோம். நம்ப வேண்டும் என்று சொல்லப்பட்டவைகளின் மேல் கேள்விகள் கேட்க அவள் கற்றிருக்கவில்லை. தன் கருத்துக்களில் அவள் அமைதியை உணர்ந்தாள் என்றால் அவளைக் கேள்வி கேட்க நான் யார்?
அவளுடைய கருமையான தேகம் எப்போதும் ஓரு பரவச உணர்வு வீச்சை ஏற்படுத்துவதாக இருந்தது. ஒரு பெண்ணின் உடல்வாகு கெட்டியான மாவைப் போன்றது ,சில பெண்களின் உடல்வாகு கீழ் மாவின் தளர்ச்சி போலவும், இன்னும் சிலருக்கு ஒட்டிக் கொள்ளும் குழைவியல்பு மாவு போலவும் இருக்குமென்றும் சொல்வார்கள் . அரியதாக மிகச் சில பெண்களுக்கு மட்டுமே சரியாக பிசையப்பட்ட மாவு போல உடல்வாகு இருக்க முடியும். அங்கோரியின் உடல்வாகு அந்த வகைக்கு உட்பட்டது. அவள் தசைகள் உலோகச் சுருள் போல நெகிழும் தன்மையானவை. அவள் முகம், தோள்கள், மார்பு ,கால்கள் ஆகியவற்றை பார்த்த போது எனக்குள் ஒருவித பலமின்மையை உணர்ந்தேன். பிரபாத்தியைப் பற்றி யோசித்தேன் ; வயது , குள்ளம், தளர்ந்த தாடை, அவனுடைய தோற்றம் எல்லாம் யூக்ளிட்டை கொன்று விடும். திடீரென எனக்குள் ஒரு வேடிக்கையான எண்ணம்: அங்கோரி என்ற மாவை மூடியிருக்கும் உறை பிரபாத்தி. அவன் சிறிய துணி, அவளுடைய சுவையாளனில்லை. எனக்குள் சிரிப்பு பொங்குவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் ஏன் சிரிக்கிறேன் என்பது அங்கோரிக்குப் புரிந்து விடுமோ என்ற பயம் எழுந்தது. அவர்கள் கிராமத்தில் எப்படித் திருமணங்கள் நிச்சயிக்கப்படும் என்று கேட்டேன்.
“ஒரு பெண், ஐந்து அல்லது ஆறு வயதாகும் போதே, ஒருவரின் பாதங்களை வணங்குகிறாள் என்றால் அவனே அவளது கணவன்.”
“அவளுக்கு அது எப்படித் தெரியும்? ”
“அவளுடைய தந்தை பணத்தையும், பூக்களையும் அவனுடைய பாதங்களில் சமர்ப்பிப்பார்.”
“அது தந்தையின் வழிபாடு, மகளுடையதல்ல.”
“அவர் அதைத் தன் மகளுக்காகச் செய்கிறார். அதனால் அது அந்தப் பெண்ணுக்குரியது.”
“ஆனால் அந்தப் பெண் அவனை முன் பின் பார்த்ததேயில்லையே.”
“ஆமாம், அவள் பார்த்திருக்க மாட்டாள்.”
“ தன் எதிர்காலக் கணவனை ஒரு பெண் கூடப் பார்த்தது இல்லையா? ”
“இல்லை.. ” சிறிது தயங்கினாள். சிறிது இடைவெளிக்குப் பிறகு
“காதலிப்பவர்கள்…பார்ப்பார்கள்..” என்று சேர்த்துக் கொண்டாள்.
“உன் கிராமத்திலிருக்கும் பெண்கள் காதலித்திருக்கிறார்களா?”
“ஒரு சிலர்.”
“காதலிப்பவர்கள் பாவம் செய்தவர்களில்லையா? ” பெண்கள் படிப்பு குறித்து அவளது அணுகுமுறை என் ஞாபகத்திலிருந்ததால்கேட்டேன்.
“அவர்கள் பாவம் செய்தவர்களில்லை… என்ன நடக்கிறதென்றால் ஆண் கஞ்சாவைப் பெண்ணுக்குக் கொடுத்துச் சாப்பிட வைக்கிறான். அதன் பிறகு அவள் அவனைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறாள்.”
“கஞ்சா ? ”
“ஆமாம். மிக வலிமையான ஒன்று ”
“தனக்கு கஞ்சா கொடுக்கப்பட்டிருப்பதை அந்தப் பெண் அறிய மாட்டாளா?”
“இல்லை, அவன் அதை வெற்றிலை பாக்கில் கலந்து கொடுத்து விடுவான். அதற்குப் பிறகு அவளுக்கு எதுவுமே திருப்தி தராது. அவனுடன் மட்டும் இருக்க விரும்புவாள். நான் என் கண்களால் அதைப் பார்த்திருக்கிறேன்.”
“நீ யாரைப் பார்த்திருக்கிறாய்?”
“ஒரு சிநேகிதி ; என்னை விடப் பெரியவள்.”
“என்ன ஆயிற்று அவளுக்கு ? ”
“அவளுக்கு பித்துப் பிடித்து விட்டது. அவனுடன் நகரத்திற்குப் போய்விட்டாள்.”
“அது கஞ்சாவால்தான் ஆனதென்று உனக்கெப்படித் தெரியும்? ”
“வேறு எப்படியிருக்க முடியும்? ஏன் அவள் தன் பெற்றோரை விட்டுப் போக வேண்டும்? அவன் நகரத்திலிருந்து பல சாமான்கள் :ஆடைகள் ,கொலுசு, இனிப்புகள் ஆகியவற்றை அவளுக்காக வாங்கி வந்தான்.”
“இந்த கஞ்சா எங்கிருந்து வருகிறது? ”
“இனிப்புகளில்தான் : இல்லாவிட்டால் அவள் எப்படி அவனைக் காதலிக்க முடியும்?”
“காதல் வெவ்வேறு வழிகளில் வரலாம். வேறு வழி எதுவும் இங்கேயில்லையா?”
“வேறு வழியேயில்லை. அப்படிப் போய் விட்டாள் என்பது அவள் பெற்றோருக்கு அதிர்ச்சி.”
“நீ அந்த கஞ்சாவைப் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை, அவர்கள் வெகு தூரமான பகுதியிலிருந்து அதைக் கொண்டு வருவார்கள். யாரிடமிருந்தும் வெற்றிலை பாக்கு அல்லது இனிப்பை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று என் அம்மா எச்சரித்திருக்கிறாள். அவற்றில்தான் ஆண்கள் அதை வைத்திருப்பார்கள்.”
“நீ புத்திசாலி. உன் தோழி அதை எப்படிச் சாப்பிட்டாள்? ”
“தன்னைச் சிரமப்படுத்திக் கொள்ளத்தான், ” அவள் கடுமையாகச் சொன்னாள். அடுத்த கணம் அவள் முகம் இருண்டது, தன் தோழியின் ஞாபகம் வந்திருக்கலாம்.“ பித்து ,அவளுக்கு பித்துப் பிடித்து விட்டது. தலை சீவ மாட்டாள், இரவு முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பாள்..”
“அவள் என்ன பாட்டு பாடினாள் ?”
“எனக்குத் தெரியாது. கஞ்சாவைச் சாப்பிட்டவர்கள் அதைப் பாடுவார்கள் . அழவும் செய்வார்கள்.”
உரையாடல் வித்தியாசமாகத் தெரிந்ததால் ,நான் நிறுத்திக்கொண்டு் விட்டேன்.
ஒருநாள் வேப்ப மரத்தடியில் ஆழ்ந்த சிந்தனையில் அவள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அங்கோரி கிணற்றுப் பக்கம் வருவதை சாதாரணமாக ஒருவர் உணரமுடியும் ; கொலுசு மணி அவள் வருகையை அறிவித்து விடும். அன்று அவை அமைதியாக இருந்தன.
“என்ன ஆயிற்று அங்கோரி? ”
முதலில் அவள் வெறுமையாக என்னை பார்த்து விட்டு, பிறகு மெதுவாகச் சமாளித்துக் கொண்டு “ அக்கா, எனக்கு படிக்கச் சொல்லிக் கொடுங்கள்.” என்றாள்.
“என்ன ஆயிற்று? ”
“என் பெயரை எழுத எனக்குச் சொல்லிக் கொடுங்கள்.”
“எதற்கு ? கடிதங்கள் எழுதவா ? யாருக்கு ? ”
அவள் பதிலெதுவும் சொல்லவில்லை.ஆனால் தன் எண்ணங்களுக்குள் புதைந்தாள்.
“நீ பாவம் செய்தவளாக மாட்டாயா? ” அவள் மனநிலையை திசை திருப்புவதற்காகக் கேட்டேன். அவள் பதில் சொல்ல மாட்டாள். நான் படுக்கச் சென்று விட்டேன். மாலையில் நான் வெளியே வந்த போது, அவள் தனக்குள் சோகமாகப் பாடிக் கொண்டிருந்தாள். சுற்றிப் பார்த்து விட்டு நான் அருகில் வருவது தெரிந்தவுடன், பாடுவதை அப்படியே நிறுத்தி விட்டாள். குளிர் காரணமாக அவள் தோள்களைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“நீ நன்றாகப் பாடுகிறாய், அங்கோரி,” அவள் தன் கண்ணீரை அடக்க கஷ்டப்பட்டதையும் , புன்னகைக்க முயற்சித்ததையும் நான் கவனித்தேன்.
“எனக்குப் பாடத் தெரியாது.”
“ஆனால் பாடினாயே அங்கோரி! ”
“அது ….”
“அது உன் சினேகிதி பாடும் பாட்டு.” நான் அவளுக்காக அந்த வாக்கியத்தை முடித்தேன்.
“அவள் பாடிக் கேட்டிருக்கிறேன்.”
“எனக்காக அதைப் பாடு.”
அவள் மனப்பாடமாக வார்த்தைகளைத் தொடங்கினாள். “ ஓ, இது வெறும் வருடம் மாறுகிற காலத்தைக் குறிப்பது . நான்கு மாதம் குளிர், நான்கு மாதம் வசந்தம், நான்கு மாதம் மழை !… .”
“அப்படியல்ல. எனக்காகப் பாடு.” நான் கேட்டேன்.அவள் பாடவில்லை, ஆனால் பேச்சைத் தொடர்ந்தாள்:
என் நெஞ்சில் நான்கு மாதக் குளிர்கால ஆட்சி ;
என் மனம் நடுங்குகிறது, ஓ என் அன்பே,
நான்கு மாத வசந்தத்தில் ,சூரியனில் காற்று பளபளக்கிறது.
நான்கு மாத மழை ; வானில் மேகங்கள் நடுங்குகின்றன.
“அங்கோரி!” நான் சப்தமாகக் கூப்பிட்டேன். தன் நினைவை இழந்தவள் போல, கஞ்சாவைச் சாப்பிட்டவள் போல இருந்தாள். நான் அவள் தோள்களைக் குலுக்க நினைத்தேன். அதற்கு பதிலாக , அவள் தோள்களைத் தொட்டு அவள் ஒழுங்காகச் சாப்பிடுகிறாளா என்று கேட்டேன். இல்லை அவள் சாப்பிடவில்லை; பிரபாத்தி தன் முதலாளி வீட்டில் சாப்பிடுவதால் தனக்கு மட்டும்தான் அவள் சமைக்க வேண்டும்.
“இன்று நீ சமைத்தாயா ? ” என்று கேட்டேன்.
“இன்னும் இல்லை.”
“காலையில் தேநீர் குடித்தாயா ? ”
“இல்லை. இன்று பால் இல்லை.”
“ஏன் பால் இல்லை?”
“இன்று எனக்குக் கிடைக்கவில்லை. ராம் தாரா…”
“உனக்கு பால் கொண்டு வந்து தருவது ? ” நான் கேட்டேன். அவள் தலையாட்டினாள்.
ராம் தாரா இரவு வாட்ச்மேன். பிரபாத்தி அங்கோரியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால், ராம் தாரா தன் இரவுப் பணியை முடித்துக் கொண்டு படுக்கப் போவதற்கு முன்னால் எங்கள் வீட்டில் தேநீர் குடித்து விட்டுப் போவது வழக்கம். அங்கோரியின் வரவிற்குப் பிறகு ,அவன் பிரபாத்தியின் வீட்டில் தேநீர் அருந்துகிறான். ராம் தாரா , அங்கோரி, பிரபாத்தி மூவரும் ஒன்றாகச் சேர்ந்து உட்கார்ந்து தேநீர் குடிப்பார்கள், மூன்று நாட்களுக்கு முன்னால் ராம் தாரா தன் கிராமத்திற்குச் போயிருக்கிறான்.
“மூன்று நாட்களாக நீ தேநீர் குடிக்கவில்லையா? ” நான் கேட்டேன். அவள் மீண்டும் தலையாட்டினாள். “அப்படியானால், நீ சாப்பிடவுமில்லை? ” அவள் பேசவில்லை. அவள் சாப்பிட்டிருந்தாலும், அது சாப்பிடாததைப் போலத்தான்.
எனக்கு ராம் தாரா நினைவுக்கு வந்தான் : பார்க்க நன்றாக இருப்பான் , வேகமான நடை , எப்போதும் ஏதாவது வேடிக்கைப்பேச்சு. பேசும் போது ஒரு விதமான மெல்லிய சிரிப்பு உதட்டில் தங்கப் பேசுவது அவன் இயல்பு.
“அங்கோரி ? ”
“உம்.”
“ஒரு வேளை அது கஞ்சாவாக இருக்குமோ ? ”
கண்ணீர் இரு சொட்டுக்களாக அவள் முகத்தில் வழிந்து வாயின் இரு புறமும் நின்றது.
“சாபம்தான் எனக்கு! ” அழுகையில் குரல் நடுங்க “ நான் அவனிடமிருந்து ஒரு போதும் இனிப்புகள் வாங்கிக் கொண்டதில்லை… ஒரு வெற்றிலை கூட… ஆனால் தேநீர் …” அவளால் பேச முடியவில்லை. அழுகையின் பெருக்கத்தில் அவள் வார்த்தைகள் மூழ்கிப் போயின.
———————-
நன்றி : The Penguin Book of Modern Indian Short Stories
One comment