நான் ஊ…ஊ… என்று ஊளையிடுவது புதிதாய் வீட்டுக்கு வந்த மாமா எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான். பதறியடித்து வெளியே வந்தவர் என் கை கால் இடுப்பு என்று தடவி “எங்கடே வலிக்கி…”என்றதும் நான் மீண்டும் அவர் காதருகில் சென்று ஊ…ஊ… ஊளையிட்டேன். ஒரு அடி தள்ளிச்சென்றவர் சுவற்றில் மண்டையிடிக்க , முளைத்த அனைத்து பற்களும் தெரிய நான் சிரித்ததை அவர் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவர் ஓங்கிய கையிலும் சிவந்த கண்களிலும் நன்றாகவே தெரிந்தது. இப்படித்தான் ஆரம்பித்தது சுப்புணி மாமவுக்கும் எனக்குமான உறவு. சுப்புரமணி என்பதை இவ்வளவு கஷ்டப்பட்டு கூப்பிடுவதை ஏன் தான் இவர்கள் விரும்புகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. நான் அவரை சுப்புணி மாமா என்றே அழைக்கிறேன்.
சுப்புணி மாமா சாப்பிடுவார் தூங்குவார் என்னுடன் விளைவிளையாடுவார் பிறகு தூங்குவார் சாப்பிடுவார். சூரியனும் அவரும் ஒன்றேயென அவரே சொல்லுவது எனக்கு அவர்மேல் மதிப்பை கூட்டியது. நானும் வாழ்வில் ஒரு நாள் சூரியனாவேன் என்று சபதம் செய்து திறுநாறு பூசிக்கொண்டேன். தலையில் முன்பொரு நாள் மேடையில் பேசிய கருப்பு கண்ணாடி மாமாவின் தொப்பியைப்போல வெள்ளை வெள்ளை முடி. அவரை நான் சினிமா போஸ்டர்களில் பலப்பல வகை கருப்பு முடியிடன் பார்த்திருக்கிறென். அதனை நான் சுப்புணி மாமாவிடம் கேட்கவும் தலையில் விதை வைத்து முடி வளக்கலாம் என்றார் , பின்ன அல்லாமல் எப்படி இது சாத்தியம்!
சுப்புணி மாமா போன தடவை நான் பருப்பு பாயாசம் தின்ற பிறந்தநாள் முதல் இங்கயே இருக்கிறார். அன்று நாங்கள் கோவிலுக்கு சென்று என் பேருக்கும் சாமி பேருக்கும் அர்ச்சனை செய்தோம். சாமி நன்றி சொல்லி எனக்கு காலையிலேயே அரவணை பாயாசம் தந்தார். அவரை நான் மட்டுமே மாமா என்கிறென் பெரிய அண்ணன் சின்ன அண்ணன் எல்லாரும் தாத்தா என்கின்றனர். அவர் என்னிடம் மட்டுமே ஒட்டிப்பழகுதில் இருந்தெ தெரிகிறது அவர் மாமா என்பதில் தான் சந்தோசப்படுகிறார்.
மாமா இங்கிருப்பதில் ஒருவருக்கும் விருப்பமில்லை. அவரை எப்படியாவது விரட்டிவிடலாம் என்று முனைப்போடு இருக்கின்றனர். அவர் சென்று விட்டால் எனக்கு கதைகள் சொல்ல யாருமில்லை. வேறு யாராவது கதைகள் சொன்னால் கூட பரவாயில்லை அவரை அனுப்பிவிடலாம் என்றால் அதற்கும் ஆளில்லை இந்த வீட்டில்.
மாமா சொல்லும் கதைகளில் மனிதர்கள் எங்கள் விட்டு பாயாசத்தில் வரும் அண்டியிலும் குறைவு. காட்டு யானை முதல் குட்டி அணில் வரை எல்லாம் உண்டு. என்னை குட்டி அணில் என்பதை நான் முழுமுற்றாக மறுத்து விட்டேன். அதன் சிறுபிள்ளை போன்ற உருவரும் எதற்கும் பயந்து துள்ளி ஓடுவதும் நான் விரும்பாதது. அவரிடம் அதை சொல்லியதில்லை அவரும் அப்படியே கூப்பிடுவார்.
நேற்றும் அப்படி ஓர் கதையை நான் கேட்காமலேயே சொல்ல வந்தார். அழுது வீங்கிய கண்களுடன் அவர் சிரித்தது எனக்கு பரிதாபமாக இருந்தது. டொக்கு விழுந்த கன்னங்கள் அவருக்கு இருந்ததால், என் கன்னங்களை அடிக்கடி பிதுக்கி எடுப்பார். வாயைத்திறந்ததும் என் கண் முன் உருவானது ஓர் உலகம் “அடர்ந்த காட்டின் ஒவ்வொரு இருண்ட மூலையிலும் நெருப்பு விழிகளுடன் கடுவாக்களும் காட்டேரிகளும் கொம்பன்களும் அலைந்து திரிந்தன. தன் இருப்பிடம் நோக்கி விரைந்த பூனையொன்று காலிடறி விழுந்த இடத்தில் கிடந்தது ஓர் குழி. வீடிருப்பதோ கண்ணால் காதால் காண முடியாத தூரத்தில். குழிக்குள் தன்னை புகுத்திக்கொள்ள முடியுமா என்பதும் உள்ளிருக்கும் வழிதான் என்ன என்பதும் அறியாத பூனை விழி பிதுங்கி உடல் நடுங்கி நின்றது. இருட்டில் சிவந்த ஜொலிக்கும் விழிகள் துலங்கி வந்தன. துர்நாற்றம் சங்கைப்பிடித்து பூனையை மூன்று முறை அதன் மீசை அதிர தும்ம வைத்ததும் இருளில் சிவந்த வாய்கள் பிளந்து திறந்து ரத்த கோழை வழிந்து நிலத்தில் வடிந்தன. நொடிகளில் பாய்ந்து வந்த இருள் மிருகங்களின் பிடியிலிருந்து தப்ப ஒரே வழியாம் குழியில் தலை குப்புற விழுந்த பூனையை வயால்கவ்வ கூர் பற்கள் வேகமாக முன்வந்தும் பயனில்லாமல் பூனை குழிக்குள் விழுந்து தப்பித்தோமென விழும் நேரத்தில் பெருமூச்சு விட்டதுதான் கணமென நிலம் மேல் கீழாக மாறி மீண்டும் ஓர் நிலத்தில் தூக்கி எறிந்தது போல தரையில் போய் அப்பியது”இங்கு நிறுத்திய சுப்புணி மாமாவின் கண்கள் கலங்கி பூனை போலயே அழுதார். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. விழுந்து தொடையிலடித்து வாய்பொத்தி பல் காட்டி சிரிக்கலாம் ஆனால் அவர் கதையை தொடராவிட்டால் என்ன செய்வதென்று அமைதியாக இருந்தேன்.
கண்களை துடைக்காமல் மீண்டும் தொடர்ந்தார் “பூனைக்கு இடம் பொருள் காலம் தெரியவில்லை. ஆளரவமில்லை. நிற்கவும் நடக்கவும் திராணியில்லாத கிழடாக தன்னை நினைத்து அழத்தொடங்கியது”
மாமா மியாவ்வ்வ்…மியாவ்வ்வ் என்றதும் எதிரில் பூனை தெரியாமலிருக்க கண்களை கசக்கிக்கொண்டேன். பூனையில்லை.
“மெல்ல நடக்க ஆரம்பித்ததும் அதற்கு பசியெடுத்தது பசி பசியென்பதே உடல் முழுக்க நிற்க எதிரில் ஒற்றை ஓட்டிவிடு பேராலமரத்தின் அடியில் விழுதுகள் மூட நின்றது. என்னமாவது கிடைக்கலாம் என்று மெல்ல இருளில் தடம் பார்த்து நசுங்கும் சருகின் ஒலியறிந்து நடந்தது. அதுவோர் நாய்களின் வீடு அவை அங்கு சில காலமாகவே வசித்து வருவது அவைகளின் எதிர்பாரா பரபரப்பும் பொருட்களை கண்டுகொண்ட வியப்பும் காட்டிக்கொடுத்தது. அருகில் சென்ற பூனை பின்னங்கால்களால் நின்று முன்னங்கால்களால் ஜன்னலை பிடித்து எட்டிப்பார்த்தது. அந்த சமயம் அவை குப்பியிலிருந்த பாலை தட்டில் ஊற்றி அங்கிருந்த மற்ற பெண் நாய் மற்றும் ஒரு குட்டி ஆண் நாய்க்கு வைத்ததும் பங்குக்கு யாரும் வருகிறார்களா என்று நோட்டம் பார்த்து நக்க ஆரம்பித்தன. ஆண் நாய் குப்பியிலிருந்த பாலை வாய்க்குள் ஊற்றிக்கொண்டது. ஜன்னலில் அண்டி நின்ற பூனையை பார்த்தும் பார்க்காதது போல ஆண் நாய் குப்பியை வைத்து அதற்கு தெரியாமல் வாசற்கதவை திறந்ததும் பதறிய பூனை கால்களில் விழும் தொனியில் பேசி தன் பசியைச்சொல்லி ஒரு தட்டு பால் கேட்டது. ஒரு நாள் பாவப்பட்டு குடுத்த நாய் அது அங்கேயே தங்கிப்போவதை அப்போது அறிந்திருக்கவில்லை. உருவத்தில் ஒற்றுமை துளியுமில்லாத பூனை தன்னை அதன் மூதாதையென்று அடித்துச்சொன்னது. நம்பமுடியாத விசயத்தை கிறுக்கைப்போல சொல்லும் பூனையின் மேல் பரிதாபப்படவே நாய்க்கு வழியிருந்தது. பெண் நாய் அதனை அண்டாமல் விட்டுவிட குட்டி அதனுடன் விளையாடும்”
எதற்காவோ கதையை நிப்பாட்டி என்னை தழுவி முத்தமிட்டார். மாவின் எச்சில் முகம் முழுவதும் வாடையடித்ததால் மாறி மாறி துடைத்தேன் அவர் சிரித்தார். நான் அவரை வெறுத்தேன். நான் எப்படி உன்னை சிரிக்க வைக்கும் விளையாட்டுப்பொருள் , அது நீதான் மாமா.
“விழுதில் கிடந்த பொந்தொன்றில் பூனை போய் தங்கி உறங்கிக்கொண்டது. எதாவது மிச்சம் கிடைத்த கடித்து சதை துணுக்கு மிச்சமிருந்த எலும்புகளை தின்று உயிர் வாழ்ந்தது. ஒரு நாள் பெண் நாயின் வாயில் கேட்ட கேள்விகள் பொறுக்காமல் விழுதிலிருந்து இறங்கா பூனைக்கு தின்ன கொடுக்க குட்டி நாயை சொல்லியும் கேட்காமல் படுத்து எனக்கென்ன போயிற்று என்று கிடந்தது. பசித்தால் வரட்டும் என்பது அதன் எண்ணம். அதே போல பசி முற்றி அது வந்ததும் குட்டி ‘நான் சொன்னனே…நான் சொன்னனே..’என்று வாலாட்டி குலைத்து சொன்னது. பெண் நாய் தூ…என்பதுப்போல தட்டை வீசியெறிந்ததும். பூனையின் பசி மொத்த பாலையும் நக்கி வழித்து குடித்தது. அழுதுகொண்டே அவமானத்துடன் குடித்தாலும் பூனை அன்றும் நன்றி சொல்ல மறக்கவில்லை”
கதையை நிப்பாட்டினார்.வயிற்றின் உறுமல் சத்தம் புலி போல கேட்கவே மாமா மெல்ல அசைந்து அமர்ந்தார். அவரே சொல்லட்டும் என்று அமைதியாக காத்திருந்தேன். அவர் சொல்லவில்லை நானும் கேட்கவில்லை. பசி என்னிடம் தனியாக கேட்டால் மட்டும் போதுமா.
“பசித்த பூனை ஒரு திட்டம் போட்டது. பசியை கொல்லலாம் அதனை நார் நாராக பிரித்து எடுத்து அதையே உண்டு முடித்தால் இனிமேல் பசியில்லை என்பது எப்படியோ அதற்கு தெரிந்திருந்தது. ஏற முடியாத கிளைகளை பற்றி விழுந்து எழுந்து ஏறி உச்சியில் தெரிந்தது பரந்த நிலம். தலைக்கு மேல் வானத்தில் இருந்த பழைய ஓட்டை வழி மேலிருக்கும் மிருக உருவங்கள் இப்பொழுதும் தெரிந்தன. அதற்கு நாக்கை வலிச்சம் காட்டிவிட்டு பறவை போல சிறகு விரித்து பறந்தபோது அதன் கண்கள் ஒளி கொண்டன. ஒரு நொடியில் கிளைகளில் அடித்து இலையுதிர தரையில் சொத்தென்று விழுந்தவுடன் அதன் உருவம் நிலத்தில் ஓர் அங்கமாக ஆனது”என்று முடித்தார். இவர் இதே கதையை வேறு இடத்தில் வேறு மிருகத்தை வைத்து சொல்கிறார் என்பது எனக்கும் தெரியாமலில்ல. ஆனால் தினமும் இரவில் நான் என் அறை ஜன்னல் வழி பார்ர்கும் போது எதிரிலிருக்கும் மரத்தின் உச்சியில் நிற்கிறார்.
இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் சொத்தென்ற சத்தம் என்றுமில்லாமல் இன்று கேட்டதும் எழுந்து பார்த்தால் உச்சி மரத்தில் மாமா இல்லை.