சுசித்ரா
இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை.
சற்றுதூரம் நடந்து சென்ற பின்பே அதைப் பார்த்த கண்கள் என்னுள் விழித்துக்கொள்கின்றன. ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நிற்கிறேன். பனியில் முகம் புதைந்த ஒரு சிறிய உடல். உண்மையிலேயே பறவை தானா? திரும்பட்டுமா? எதற்கு? அவசர எண்ணை அழைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டியதுதானே?
ஒருகாலை முன்னால் எடுத்துவைக்க மறுகால் பின்னால் தானாகத் திரும்புகிறது. ஒரு நிமிடம் தத்தளிக்கிறேன். நின்ற இடத்தில் திரும்புகிறேன். சற்றுத் தொலைவில் பனிக்குள் ஒரு நீலப்புடைப்பு. சிறகதிர்வு போன்ற மெல்லிய காற்று என்னைத் தொட்டுச்செல்கிறது. இரண்டு நொடிக்குப் பிறகுதான் அது என் சுவாசக்காற்று என்பதை நான் உணர்கிறேன்.
ஓடிச்சென்று மண்டியிட்டுப் பார்க்கிறேன். சந்தேகமேயில்லை. பறவைதான். செத்துவிட்டது. என்ன பறவை இது? எனக்குப் பறவைகளின் பெயர்களெல்லாம் தெரியாது. என் சிறுவயதில் அவ்வப்போது பார்த்தது. அம்மா இருந்தால் சொல்லியிருப்பாள். அவளுக்கு எல்லா பெயர்களும் தெரியும். எனக்குத்தான் இப்போது எதுவுமே நினைவில்லை. ஐநூற்றி எழுபத்தெட்டு வயது நிரம்பி விட்டதல்லவா? அது சரி, இந்தப் பறவை எப்படி இங்கு, இந்த வளாகத்தினுள் வந்து செத்தது? பறவைகளெல்லாம் காட்டினுள் வாழும் உயிர்கள் இல்லையா? காட்டை விட்டு இங்கு எப்படி வந்தது? இங்கு எப்படி வாழும்? வாழ முடியாமல்தான் செத்துப்போனதா? ஆனால் இங்கு எதுவும் சாகக்கூடாதே?
இறப்பிலும் நீலமணிக்கல்லைப் போல மின்னிக்கொண்டிருக்கிறது அதன் உடல். சற்று தலையைப் பக்கவாட்டாகத் திருப்பிப் பார்க்கிறேன். நீலத்தினுள் பாசிப்பச்சை கோடுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சலனமற்ற நீர்நிலையைப் பார்க்கும்போது உண்டாகும் மயக்கத்தால் ஆட்கொள்ளப்படுகிறேன். சற்றுநேரம் அது என்னைச் செயலிழக்கச்செய்கிறது. அதையே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு சின்னதா இருக்கு, எவ்வளவு அனாதையா இருக்கு, என்ற வியப்பை என் குனிந்த தலையில் கோர்த்துப் பெருகும் கனத்தில் நான் அறிகிறேன். அது நகரவே இல்லை.
யாருடைய வரிகள்? அம்மா அடிக்கடி சொல்வாளே? சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவள் சொல்வதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் ஆர்வமும் எனக்கில்லை என்பதும் உண்மை. அதெல்லாம் அம்மாவுக்கு மட்டும் தான். வரிவரியாக என்னவெல்லாமோ சொல்லுவாள். யார் யாரோ வாயில் பெயர் நுழையாத கவிஞர்களின் நாவிலுதித்த வரிகளெல்லாம் என் அம்மாவின் குரல்வழி என் செவிக்குள் புகுந்துவிட்டன. மூளைக்குள் அது படபடக்கும் ஓசை எப்போதாவது கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் சொல் மட்டும் என் உதட்டில் வரவே வராது. இப்படித்தான் யாருடைய கவிதையோ. எமிலி டிக்கின்சனா? அதில் இது போன்று ஒரு பறவை வரும். அது செத்துப்போய்விடும். அதைப் பற்றி அம்மா சொல்லியிருக்கிறாள். தன் சிறிய கண்களை உருட்டி உருட்டிச் சொல்வாள். அந்த வரிகளில் வரும் இறந்த பறவை என் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் என்ன வரி அது? என்ன வரி?
திடீரென்று நான் தன்னுணர்வு கொள்கிறேன். அடச்சீ, என்ன வரியா இருந்தா என்ன? பறவை செத்துவிட்டது. சுற்றும் முற்றும் நம்மை யாரும் பார்க்கவில்லையே என்று பார்த்துக்கொள்கிறேன். இப்படி நான் நடுப்பாதையில் மண்டியிட்டு ஒன்றிற்கும் உதவாத கவிதை வரியை அசைபோட்டுக்கொண்டு செத்த பறவையொன்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பதை யாராவது பார்த்துவிட்டால்? ஆய்வுக்கூடத்தில் என் கீழ் வேலை பார்ப்பவர்கள் பார்த்துவிடவே கூடாது. என்ன இது முட்டாள்தனம். நெறிமுறைப்படி நான் இப்போது அவசர எண்ணைத்தான் அழைத்ததாக வேண்டும். அவர்கள் வந்து செய்தாகவேண்டியதை செய்வார்கள். ஆனால் ஏனென்று தெரியாமல் என் கண்களில் நீர் பெருகுகிறது. என்ன வரி அது?
சட்டென்று எனக்குள் ஒரு எண்ணம் சுழற்காற்றாக ஊறத்தொடங்குகிறது. இப்பறவையைப் புதைக்க வேண்டும்.
இது என்ன அபத்தம்? காட்டுமிராண்டித்தனமாக இப்படியொரு எண்ணம்? எனக்கு ஏன் இப்போது இப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது? என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் அதைத்தான் செய்யவேண்டும் என்று மட்டும் உறுதியாக உணர்கிறேன். இந்தப் பறவை செத்து விட்டது. இதை யார்கண்ணிலும் படாமல் புதைத்தே ஆக வேண்டும்.
ஆனால் பறவையைப் புதைக்கக் கையில் எடுக்கப்போகும் போது என்னால் அதைத் தொடமுடியவில்லை. மீண்டும் மீண்டும் என் கைவிரல்கள் அதை நோக்கிச் செல்கின்றன. மீண்டும் மீண்டும் காற்றையே பற்றுகின்றன. என் கை நடுங்குவதை உணர்கிறேன். அதைத்தொடக்கூடாது என்று என் மூளை உத்தரவு போட்டிருக்க வேண்டும். உடலெல்லாம் கூசுகிறேன்.
வெறிபிடித்தாற்போல் வேகவேகமாக என் ஆய்வுக்கூடத்தை நோக்கி நடக்கிறேன். உள்ளே யாருமில்லை. முதலில் கைகளை நன்கு கழுவிக்கொள்கிறேன். ஏன் கை கழுவினேன்? தெரியவில்லை. கைகளைத் துடைத்துக்கொண்டு ஒரு ஜோடி கையுறைகளை எடுத்துக்கொள்கிறேன். எங்கள் மருந்துகள் அனுப்பிவைக்கப்படும் ஒரு சிறிய பெட்டியை எடுத்துக்கொள்கிறேன். மண்ணில் குழிதோண்ட ஏதாவது தென்படுகிறதா என்று ஆய்வுக்கூடம் முழுவதும் துழாவுகிறேன். உயிரின் ரகசியங்களை ஆராய நுண்கருவிகளே தேவைப்படுகின்றன. அவையே போதுமானதாக உள்ளன. மண்ணைத் தோண்டுமளவிற்குப் பெரிதான, ஆபாசமான, நுண்மையற்ற கருவியேதும் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இல்லை.
கையுறைகளை அணிந்துகொண்டு களவாணியைப்போல் யார்கண்ணிலும் படாது பதுங்கிப்பதுங்கி வேகவேகமாகத் திரும்பிச்செல்கிறேன். இவர்கள் கண்களில் எப்படியும் செத்த பறவைகள் படாது. இவர்கள் யாரும் என்னைத்தான் பார்க்கக்கூடாது. நான் இப்போது செய்யப்போகும் காரியம் அவ்வளவு அந்தரங்கமானது, அவ்வளவு ரகசியமானது. யாருக்கும் தெரியக்கூடாதது. அத்துமீறலும் கூட, என்று என்னுள் ஒரு குரல் கிரீச்சிடுகிறது. ஆம், அத்துமீறல் தான். குறிப்பாக நான் இச்செயலைச் செய்வது மிகப்பெரிய அத்துமீறல் தான்.
அம்மாவுக்கு என் செயல்களெல்லாமே அத்துமீறலாகத்தான் பட்டிருக்கவேண்டும். ஆனால் அவள் என்றுமே ஒரு வார்த்தைக்கூடச் சொன்னதில்லை. நான் சொல்வதையெல்லாம் அப்படியா? அப்படியா? என்று மட்டும் தான் கேட்டுக்கொண்டிருப்பாள். எனக்கு எல்லைகளே கிடையாது, நான் உலகத்தின் விதியை மாற்றிக்காட்டுகிறேன் பார், என்று பதின்பருவ வேகத்தில் சூளுரைத்தபோதும் சரி, ஒரு தேர்வு விடாமல் வென்று மருத்துவராகவும் அறிவியலாளராகவும் தேர்ந்தபின்பும் சரி, என் வாழ்க்கையில் ஒரு நொடிக்கூட வீணடிக்காமல் நான் ஆய்வில் மூழ்கியிருந்தபோதும் சரி, எங்கள் கண்டுபிடிப்புகள் முதற்கட்டமாக மனிதர்களில் சோதனை செய்யப்பட்ட போதும் சரி, ஏன், அறுபத்திரண்டாம் வயதில் நான் கண்டுபிடித்த மருந்தை நானே உட்கொள்ளப்போவதாக அம்மாவிடம் சொன்ன நாளன்றும் சரி, அம்மாவின் உதட்டில் ஒரே வார்த்தை தான். “அப்படியா?”
என் கண்டுபிடிப்பின் பலனாக நான் அப்படியொரு புகழில் வாழ்ந்துகொண்டிருந்தேன். என் பெயரை அறியாத பள்ளிச்சிறார்களே உலகத்தில் இல்லை என்பது நிலை. பணம் பொழிந்துகொண்டிருந்தது. மனித வரலாற்றில் வேறெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியலின் வாசல்கள் திறந்து கிடந்தன. மனிதமனத்தின் சாத்தியங்கள் அனைத்துமே அறிவியல் வாயிலாக நிகழ்த்தப்பட ஆரம்பித்தன. எல்லையில்லா ஆரோக்கியம், எல்லையில்லா ஆயுள் இவற்றுக்கு மல்லுக்கட்ட எல்லையில்லா இன்பங்கள், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எங்கள் நிறுவனமே கனவுத்தயாரிப்பு வியாபாரத்தில் இறங்கியது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் நல்லுறக்கத்தில் தூங்கவைக்கும் மருந்தை நாங்கள் தான் கண்டுபிடித்துக் காப்புரிமை வாங்கினோம். அதில் கொழுத்த லாபம்.
இதெல்லாம் ஐநூறாண்டுகளுக்கு முந்தைய வரலாறு. நவீன வரலாற்றின் பொற்காலம் என்று சொல்லலாம். அனைத்தையும் அம்மா தன்னுடைய கருமணி கழுகுக்கண்களால் பார்த்துக்கொண்டே வாழ்ந்தாள். கருகருவென்று சுருங்கி சிலுத்த புருவங்களுக்கடியிலிருந்து அவளுடைய கூர்பார்வை என்னை நோக்குவதை என் முதுகுத்தண்டில் எப்போதாவது உணர்வேன். ஆனால் அவளை நான் எதிர்கொண்டதே எப்போதாவதுதான். ஐந்தடிக்குக் குறைவான உயரம். கூந்தலுக்குள் சிறு முகம். பெரும்பாலும் அவள் முகம் இருக்கும் இடத்தில் ஒரு புத்தகம் இருக்கும். சன்னமாகக் கேட்கும் ஒரு மெல்லிய மெட்டு – என்ன பாட்டு அது? மறந்துபோய்விட்டது – அது மட்டுமே அவள் இருப்பதன் அறிவிப்பு. சளசளவென்று அவள் வீட்டில் வளர்த்த செடிகளுக்கு நீரூற்றும் சப்தத்திலும் அவள் இருப்பாள். என்றாவது, எப்போதாவது, என் தலைமயிரை மெல்லதிரும் விரல்களைக்கொண்டு கோதுவாள். அப்போதெல்லாம் எனக்குத் தொண்டை கட்டிக்கொள்ளும். கண்களில் கண்ணீர் முட்டும். எரிச்சலடைவேன். என் குரல் கடுகடுப்பாகும். வார்த்தைகளைக் குறைத்துக்கொள்வேன். அவளைப் பார்க்கவே மாட்டேன். “உம்”, “சரி”, “வேண்டாம்” என்று மட்டும் அவளிடம் சொல்லி ஆய்வுக்கூடத்துக்கு ஓடிச்சென்று ஒளிந்துகொண்ட வருடங்கள் பல. அதற்குள் அவளுடைய புருவங்களில் நரை தட்டி, அவளுக்குக் கூன் விழுந்து, பார்வை மங்கி, கிழவியாகிவிட்டாள்.
ஒரு கட்டத்தில் அவள் ஓயாமல் பேசத்தொடங்கினாள். என்னிடமில்லை. யாரிடம் என்று தெரியவில்லை. அவை ஒருவரை நோக்கிப் பேசப்படும் பேச்சாகவும் தெரியவில்லை. பெரும்பாலும் உதிரி வரிகள். அவளுடைய குரல் ராகம் போல ஒலிக்கும். தத்தைமொழியில் பிள்ளையைப்போலப் பாடுவாள். ஒரு நாள் காலைச்சூரியனை என் மூக்குத்திக்குள் அடைத்துவிட்டேன் பார் என்றாள். இன்னொரு நாள் தான் இவ்வுலகை தன் நாவால் உணரும் வயிறில்லா ஓசனிச்சிட்டு என்று சொன்னாள். மற்றொரு நாள் இவ்வுலகமே ஒரு பெரும் பறவையின் சிலிர்க்கும் சிறகதிர்வில், அந்த இறகடி வெப்பத்தின் கருணையில் தான் உயிர்த்தழிவதாகச் சொன்னாள். ஒன்றுடன் ஒன்று சேராத சொற்களைப்போல் அபத்தமாக அவை எனக்கு ஒலிக்கும்.
அவ்வளவு வருடங்களாக மண்டையில் அடைத்து வைத்த பாடல்களும் கவிதைகளும் எங்குச் செல்வதென்று தெரியாமல் அவளுடைய மூளைக்குள் வவ்வால்களைப்போல் முட்டி மோதி அவ்வப்போது ஏதோ ஒன்று வெளிவருவதாக எனக்குத் தோன்றும். அந்த வரிகளும், அவள் அதை அனாயசமாக, கவலையற்று, உச்சரித்துக்கொண்டே இருப்பதும், என்னைக் கடுப்படையச் செய்யும். “போதும், என்ன எப்பப்பாரு வாயோயாம எதையாவது தொணதொணன்னு. கொஞ்சம் பேசாமலிருக்கக் கூடாதா?” என்று கத்துவேன். என்ன சொன்னாலும் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். சிறிது நேரம் பேசாமல் இருப்பாள். மீண்டும் தொடங்குவாள். ஏதேதோ உதிரி வரிகள். எந்த நாசமாகப்போன பழங்காலத்தவனின் வாயில் உதித்த வரிகளோ அவளுக்குத்தான் தெரியும். “இதுனால யாருக்கு என்ன லாபம்? உன் வாழ்க்கையில ஏதாவது உருப்படியா பண்ணியிருக்கியா? இல்ல பண்ணியிருக்கியான்னு கேக்குறேன். இல்ல உருப்படியா ஏதாவது செய்யுற ஒம்மகனைத்தான் ஒரு வார்த்தை பெருமையோட சொல்லியிருக்கியா?” அவள் வாயில் மண்ணடைத்து விடலாமா என்றெல்லாம் கூடத் தோன்றியுள்ளது. ஏன் அவ்வளவு கடுப்பு என்று சொல்லத்தெரியவில்லை.
பின் எல்லாமே அடங்கிவிட்டது. வாயே திறக்கமாட்டாள். படிப்பதும் இல்லை. கூன் முதுகுடன் இறகுதிர்ந்த பட்சியைப்போல் உடலைக் குறுக்கிக்கொண்டு பகலெல்லாம் படுத்துக் கிடப்பாள். அப்போதெல்லாம் என் எரிச்சல் மறைந்துவிட்டது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் அப்படியொரு சோகம் மனதைக் கவ்விக்கொள்ளும். இனம்புரியாத பயமும். “அம்மா, அம்மா, அம்மா,” என்று நான் கெஞ்சுவேன். பெரும்பாலும் பதிலே வராது.
மருந்தை நான் உட்கொண்ட போதே அம்மாவைக் கேட்டேன். எங்கள் நிறுவனம் மூலம் மருந்து மலிவான விலையில் கிடைக்கும், உனக்கும் வாங்கி வரவா என்று. அப்போது அவள் புருவங்கள் நரைக்க ஆரம்பிக்கவில்லை. அதற்கடியிலிருந்து சிறுமணிக் கண்களால் என்னைப் பார்த்தபடி, “இல்லப்பா, வேண்டாம்,” என்று மெல்ல சொல்லித் தன் தூரிகையைக் கையிலெடுத்துக்கொண்டாள்.
எனக்குக் கோபம் தலைக்கேறியது. அவளுடைய சிறு தோள்களைப் பிடித்து உலுக்கினேன். “ஏன்? ஏன் வேண்டாங்கற? பாட்டுப்பாடி, படம் வரஞ்சு, கவிதை வாசிச்சா? நீ அவ்வளவு பெரிய ஆளா? உனக்குச் சாவு பயம் கிடையாதா? செத்துப்போக ஆசைப்படுறியா?” வர்ணப்பலகை சாய்ந்து அவள் கழுத்திலும் கைகளிலும் மேலங்கி மீதும் வண்ணங்கள் தெறித்தன.
என் சொற்கள் என் மண்டையில் இடி போல் இறங்கின. வாயிலிருந்து தப்பிய வார்த்தைகளைக்கண்டு அதிர்ந்தேன். வார்த்தை வராமல் ஸ்தம்பித்து ஒரு நொடி அம்மாவைப் பார்த்தேன். என் கைகளை விலக்கினேன். அப்போதும் அம்மாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. மெளனமாக என்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.
“இதக் குடிச்சா மனுஷன் சாவ நெனச்சு செத்துச் செத்து பயப்பட வேண்டாம் இல்லையா? உருப்படியா எவ்வளவோ செய்யலாமே? ஏம்மா, நா கஷ்டப்பட்டுக் கண்டுபிடுச்சது. உலகமே புகழுது. நீ வேண்டாம்னு சொன்னா எப்பிடிம்மா? அது என்ன அவமானப்படுத்துறது தானே? உனக்கு எம்மேல நம்பிக்கை இல்லியா?” என் குரல் தழுதழுத்தது.
அம்மா எம்பி என் தலை மீது கை வைத்தாள். அவள் கை ஸ்பரிசம் கதகதப்பாக இருந்தது. என்னையும் மீறி நான் அழுதேன். “கண்ணு, உம்மேல முழு நம்பிக்கை இருக்கு. ஆனா எனக்கு இது வேண்டாம். இன்னும் கொஞ்ச வருஷம் வாழறதுல எனக்கு ஒரு பயனும் தெரியல. உனக்கு இப்பப் புரியாது. போகப்போகப் புரிஞ்சுப்ப. போகப்போக…”
இப்போது அம்மா படுத்துவிட்டாள். நினைவிழந்துகொண்டே வந்தாள். தன் ஆடைகளை, தன் உடலை, பின் தன் இருப்பையே ஒவ்வொன்றாக மறந்துகொண்டே வந்தாள். மனித இறப்பு என்பது எவ்வளவு ஆபாசமானது! இதை வெல்லத்தானே என் உழைப்பெல்லாம்! என் சொந்த அம்மாவுக்கு அது புரியாமல் போய்விட்டதே. என் வாழ்வில் முதல்முறையாக அலுவலக நேரத்தைக் குறைத்துக்கொண்டு அம்மா அருகில் வந்தமர்ந்தேன். எப்போதாவது கண்விழித்து நான் அருகில் இருந்தால் சிரிப்பாள். பின் என்னைக் கண்டடைவதே எப்போதாவது தான் என்ற நிலைமை வந்தது.
அவள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அது நடந்தது. அவள் முன்பொரு முறை கிறுக்கி ஒதுங்கியிருந்த ஒரு தாள் அவள் தலைமாட்டிற்கு அருகே இருந்த மேசைமேல் கிடந்தது. நான் அதை எடுத்து வாசிக்க முயற்சி செய்தேன். அம்மாவின் மூச்சுக்காற்றுப் புல்லாங்குழில் அடைக்கப்பட்டு வெளிவருவது போல ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் கண்கள் மூடியிருந்தன. நான் அவளைப் பார்த்தவாறு என் கையில் இருந்த காகிதத்தைக் கவனமில்லாமல் கைபோனபோக்கில் மடித்தேன்.
அம்மா சிணுங்கிக் கண்விழித்தாள். தலையைத் திருப்பித் தன் சிறிய, புரைதட்டிய பழுப்பு நிற விழிகளால் என்னைப் பார்த்தாள். ஆம், என்னைப் பார்த்தாள். அப்படியொரு புன்னகையை அவள் முகத்தில் எனக்கு மீசை அரும்புவதற்கு முன்னால் மட்டுமே பார்த்த நினைவு. அம்மா நான் கையில் வைத்துக்கொண்டிருந்த காகிதத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் என்பதை அடுத்த நொடியில் உணர்ந்தேன். நடுங்கும் விரல்களால் அவள் அதைப் பற்றினாள். நான் மடித்த காகிதக் கொக்கு அவளுடைய விரலிடுக்கில் சென்று அமர்ந்ததது.
பூரணப் பூரிப்புடன் அதையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தாள். படுக்கையில் ஊன்றி ஊன்றி என் அருகே வந்து என் தலையைத் தாழ்த்தினாள். அந்தப்பறவையை என் தலைமீது உயர்த்தி, தன் முகத்தைக் கஷ்டப்பட்டுத் தூக்கி, என் உச்சியில் முத்தமிட்டாள். என் கண்களைப் பார்த்து கிழட்டு மழலையில் எதையோ உணர்ச்சிகரமாக, கண் பொலிக்கச் சொன்னாள். புரியவில்லை. அவளை அமைதிப்படுத்திப் படுக்கவைத்தேன். சற்றுநேரத்தில் மீண்டும் அதே மயக்கத் தூக்கத்தில் மூழ்கிவிட்டாள். அவள் விரல்கள் அந்தக் காகிதக் கொக்கை அடுத்த இரண்டு நாட்களுக்குக் கெட்டியாகப் பிடித்திருந்தன. அவள் இறந்தபோதும் கூட எங்களால் அதை அகற்ற முடியவில்லை. அதைப் பற்றியபடியேதான் அவள் உடல் கதிரலைகளைக்கொண்டு சாம்பலாக்கப்பட்டது.
உலகத்திலேயே கடைசியாக இறந்த மனித உயிர்களில் அம்மாவும் ஒருத்தி. அதற்குள் கல்லறைகளுக்கு மேல் இன்பச்சுற்றுலாத் தளங்களும் கேளிக்கை பூங்காக்களும் எழுப்பப்பட்டுவிட்டன. உயிர்நீட்பு மருந்தை வாங்க இயலாதவர்களும், இறப்பைத் தேர்ந்தெடுத்த சொற்ப மனிதர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், வேறுவழியற்ற மிருகங்களும், இறப்புடன் எவ்வழியிலேனும் தொடர்புக்கு வருபவர்களும் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் தான் வாழ்கின்றனர். இறப்பு என்பதே எங்கள் பிரக்ஞைக்கு வெளியே, தூரத்தில் எங்கேயோ நிகழும் ஒன்று என்று நம்ப ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் அதைப்பற்றி நினைப்பதில்லை. இங்கு யாரும் சாவதில்லை. இந்தப் பறவையும் காட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும்.
என் கையுறைகளைத்தாண்டியும் மண்ணின் ஸ்பரிசம் தோண்டிக்கொண்டிருக்கும் என் விரல்களுக்குத் தெரிந்தது. யாரும் பார்க்காது வேகவேகமாகத் தோண்டினேன். இதைப் புதைக்க வேண்டும் என்ற விழைவு எங்கிருந்து வந்தது? யார் வந்து என் காதில் அதைச் சொல்லியது? இந்தப் பறவையினுள் இவ்வளவுநாள் வாழ்ந்துகொண்டிருந்த பறவை எங்கே போயிற்று? இங்கே தான் அது சுற்றிக்கொண்டிருக்குமா? ஒரு வேளை அது தான் சொன்னதா? திடுக்கிட்டேன். ஒற்றை மணிக்கண் என்னை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஒரு வேளை அம்மா இறப்பதற்கு முன்னால் நான் மடித்த காகிதக் கொக்கின் கண்ணாக இருக்குமோ?
அன்று என் விரல்கள் ஏன் அந்தக் காகிதக் கொக்கை மடித்தன? சிறு வயதில் நான் நிறையக் காகிதக் கொக்குகளை மடித்திருக்கிறேன். அந்த நினைவுத்தடங்கள் என் விரல்களில் ஒட்டியிருக்க வேண்டும். அப்போது அம்மாவின் நண்பர்கள் பலர் சூழ இருக்கும் எங்கள் எளிய வீடு. அனைவரும் கவிதை எழுதுவார்கள். கவிதை எழுதப்பட்ட தாள்களைக்கொண்டு கொக்குகளும் கிளிகளும் குருவிகளும் காகங்களும் ஆயிரக்கணக்கில் மடிப்பார்கள். ஊர் சதுக்கத்தில் அவற்றைத் தோரணம் கட்டி அங்கேயே அவற்றுக்கடியில் அமர்ந்திருப்பார்கள். அந்தச் சந்திப்புகள் முடிந்தபோது அப்பறவைகள் ஒரு வேளைக் காட்டினுள் பறந்திருக்கக்கூடும். அவை புணர்ந்து முட்டையிட்டுப் பொறித்த குஞ்சுகளின் வம்சத்தில் இந்தப் பட்சி தோன்றியிருக்கக்கூடும். உடல் சிலிர்த்துக்கொண்டேன். ச்சே! என்ன எண்ணம் இது!
பதின்பருவத்தில் எனக்குக் காகிதம் மடிப்பதில் அபத்தம் தட்டத் தொடங்கியது. அம்மா நானும் அவளைப்போலக் கதை சொல்லி காகிதம் மடித்துக் கானம் பாடி காலத்தைத் தள்ளவேண்டும் என்று நினைத்திருக்கலாம். அது ஒன்றிற்கும் உதவாதது, பொட்டைத்தனமானது, நான் உலகை மாற்றும் விதி சமைப்பவன் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். மரணபயம் கொண்டவர்களுக்கே இலக்கியமும் தத்துவமும். என் பாதை வேறு. கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதையுமே நம்பி உலகத்துள் இறங்கினேன். அறிவியல் நான் தேடியவற்றையெல்லாம் கொடுத்தது. புகழும் பணமும் மட்டுமல்ல. வாழ்க்கைப்பயனும் சுயஅடையாளமும் தான். வயோதிகத்தையும் மரணத்தையும் வென்று மனித இனத்தையே ஒரு படி முன்னே சுமந்து சென்றவன் நான் என்ற திருப்தி கிடைத்தது. “காலா உன்னைப் புல்லென மிதிக்கிறேன்” என்று அம்மா உடல்சிலிர்த்துச் சொல்லுவாள். அவள் சொன்னாலும் மிதித்ததென்னவோ நான் தான்.
ஆனால் இதெல்லாம் உண்மை என்றால் நான் ஏன் இவ்வளவு அபத்தமாகப் பனிபொழிந்துக்கொண்டிருக்கும் இம்மதியவேளையில், கொண்டாடிக் களிக்கவேண்டிய என் ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்தநாள் அன்று இப்படி ஒரு செத்த பறவையைப் புதைக்கக் குழிதோண்டிக் கொண்டிருக்கிறேன்? பறவை பாவம் என்பதாலா? ஏதோ சொல்லறியா வரியின் எதிரொலிக்குரல் தரும் உந்துதலா? சர்வமும் அபத்தம். திடீரென்று ஒன்று நினைவுக்கு வருகிறது. எமிலி டிக்கின்சனின் கவிதைகளில் எப்போதும் எந்தப் பறவையும் பாவமாகச் சாவதில்லை. அவை என்றென்றும் உயிரோட்டத்துடன் மட்டுமே தோன்றுபவை. உற்றுநோக்கிக்கொண்டிருப்பவை. மெல்லிய சிறகதிர்வுடன் காற்றின்மேல் நழுவி வானில் உயரப் பறப்பவை.
ஒரு அடிக்குத் தோண்டிவிட்டேன். இப்போது என்னால் அப்பறவையை விரல்களால் தொடமுடிகிறது. அதை மெல்லத் தூக்கி, நான் கொண்டு வந்த பெட்டியில் பத்திரமாக வைக்கிறேன். பின் ஏதோ தோன்ற என் கையுறை ஒன்றைக் கழற்றி அதனை அதில் சுற்றுகிறேன். செத்தப் பறவைக்குக் குளிரடிக்காது. இருந்தாலும்.
பெட்டியை மூடி மண்ணில் வைக்கிறேன். மெல்லத் தட்டி முதல் கைப்பிடி மண்ணை அதன்மீது தங்கத்தூசைப்போல் பொழிகிறேன். முன்புணர்ந்த ஒரு பறவையின் இமையா விழிப்பார்வை என் முதுகுத்தண்டில் மீண்டும் உணர்கிறேன். அம்மாவின் கரம் என் உச்சந்தலையில். நீள்மூச்சு விடுகிறேன். தலையைச் செருக்குடன் உயர்த்தி முதுகை நேர்படுத்திக்கொள்கிறேன். சிவந்த கண்மணி உற்றுநோக்குகிறது. அது கண்ணிமைக்கத் தொடங்குகிறது. இப்போது வேகமாக. நான் குழியை மூடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் அபாயச்சங்கு ஒலிக்கத் தொடங்குகிறது.
4 comments