பணக்காரன்

கா. ரபீக் ராஜா 

 

சுந்தரம் சற்று முன்புதான் பணக்காரனாக மாறியிருந்தான். சுந்தரத்துக்கு இருக்கும் ஒரே சொத்து நான்கு ஏக்கர் வானம் பார்த்த பூமியான நிலம் மட்டும்தான். பெயருக்குதான் விவசாயி. வேலை பார்ப்பதெல்லாம் இன்னொருவர் பண்ணையில். இவனுக்கு மனைவி, ஒரு மகன், மகள். சொற்ப ஊதியத்தில் குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடு. இவனது ஊரில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் நான்கு வழிச்சாலை போடப்பட்டது. அதன் விளைவாக கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைந்து கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் ரெண்டுங்கெட்டானாக மாறிவிட்டது.

நான்கு வழிச்சாலை முக்கிய நகரத்தின் இணைப்பு சாலையாக  மாறிப்போனதன் விளைவாக ஊருக்குள் நிறைய தொழிற்சாலைகள் வரத்தொடங்கியது. அதில் சுந்தரத்தின் நான்கு ஏக்கர் குறிப்பிட்ட கார்ப்ரேட் கம்பெனியின் கண் பட்டு எவ்வளவு விலையேனும் கொடுக்க தயாராக இருந்தார்கள். இந்த தகவல் சுந்தரத்துக்கு போனது. சுந்தரத்தின் மனைவி எல்லாம் சேர்த்து ஒரு பத்து லட்சத்துக்கு தள்ளிட்டு வாங்க என சொல்லியனுப்பி இருந்தாள்.

சுந்தரத்துக்கு நா வறண்டு கண்ணீர் வந்தது. கூடவே கீழ் உடுப்பும் ஈரமாகியிருந்தது. அந்த கார்ப்ரேட் செயல் அதிகாரி எடுத்த எடுப்பில் இரண்டு கோடிக்கு செக் கொடுத்தால் யாருக்குதான் வராது. கூடவே இந்த பெரிய தொகையை கையாள்வது எப்படி என்பதை ஒரு உதவியாளர் சொல்லிக் கொடுத்தார்.  அந்தளவுக்கு அது எதோ கனிம வளம் கொண்ட புதையல் பூமி என்று பின்னாளில் அறிந்து கொண்டான். அது குறித்து கவலை இல்லை. இரண்டு கோடி மகிழ்ச்சியில் இருந்தான்.  இரண்டொரு நாளில் எல்லாம் மாறியது. பிடித்தம் போக ஒண்ணே முக்கால் கோடிக்கு அதிபதியாக மாறிப்போனான் சுந்தரம்.

பக்கத்துக்கு நகரத்துக்கு குடியேறிப் போனான். பழைய வீட்டில் இருந்த பொருட்களை ஏரியாவாசிகளுக்கு பிரித்துக் கொடுத்தான். புதிய வீட்டில் எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இருந்தது. ஒண்டிக் குடித்தனத்தில் நெருக்கியடித்து படுத்துக் கிடந்தவன் மகன், மகள் என அனைவர்க்கும் தனியறை ஒதுக்கப்பட்டது. வீட்டுக்கு படித்த வேலைக்காரியை வைத்தார்கள். அவள் இங்கிலீஷ் பேசுவதாக சுந்தரத்தின் மனைவி குறைபட்டுக்கொள்ள படிக்காத சமையல் தெரிந்த வேலைக்காரி நியமிக்கப்பட்டாள்.

அந்த நகரத்திலேயே ஒரு பெரிய சூப்பர் மார்கெட் திறக்கப்பட்டு தொழிலதிபரானான். அன்று இரவு மிகுந்த யோசனைக்கு உள்ளானான் சுந்தரம். காரணம் இன்று காலை நடந்த சம்பவம். வங்கியின் வரிசையில் நின்றபோது வங்கி பணியாளர் இவரை பார்த்து ஒழுங்கா வரிசையில் நில்லுய்யா என்பது போல ஒருமையில் பேசியதை விட அருகில் நின்றவனை பார்த்து ஸார் என்று சொன்னது சுந்தரத்தை மிகவும் பாதித்துவிட்டது. காரணம் வங்கிக்குள் நுழையும்போது அந்த “ஸார்” ஆசாமி சைக்கிளில் ஸ்டாண்டு போட்டான். சுந்தரம் வந்தது  காரில். வங்கி புத்தகத்தில் ஆயிரத்து சொச்சம் வைத்திருப்பவனுக்கு கிடைக்கும் மரியாதை கூட கோடியில் புரளும் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அன்றிரவு தூக்கத்தை கெடுத்தது.

சுந்தரத்துக்கு வசதி வாய்ப்பு வந்ததும் பழைய நட்புக்களை எல்லாம் கவனமாக துண்டித்துவிட்டான். ஆகையால் யோசனை கூற யாருமில்லை. பணக்காரனாக வாழ்வது எப்படி என்கிற குறுகியகால பயிற்சி வகுப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு அட்மிஷன் போட்டிருப்பான். பணக்காரனாக மாறுவது எப்படி என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் வாழ்வது எப்படி என்று யாரும் எழுதவில்லை. அவன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இவனை எப்படி பார்க்கிறார்கள் என்பதை கவனிப்பதே இவனது அன்றாட பணியாகிப்போனது. பணியாளர்களுடன் சகஜமாக பேசமாட்டான். காரணம் பணக்கார முதலாளி ஏழை தொழிலாளியிடம் பேசமாட்டான்.

இவன் பழைய ஊரில் இருக்கும் போது மில் ஓனர் ஒரு கிளப்பில் மெம்பராக இருந்தார். கிளப் பெயர் நினைவில் இல்லை. அதே போல சுந்தரமும் ஒரு கிளப்பில் அவசரமாக மெம்பரானான். அது ஏழைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் அமைப்பு. பகலில் ஒரு மீட்டிங் போட்டிருந்தார்கள். அதில் சுந்தரம் பொன்னாடை போர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட்டான். அதே கூட்டத்தில் நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலி வாங்க ஒரு செக் கொடுத்திருந்தான். நகரின் மிகப்பெரிய திரையரங்கு வைத்திருக்கும் தொழிலதிபர் தான் கிளப்பின் தலைவர். இவனுக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. கூட்டத்தில் இனி எதிர்காலத்தில் இந்த கிளப் செய்யவேண்டிய நலத்திட்ட உதவிகள் பற்றி பேசிவிட்டு இரவில் ஒரு பாரில் தண்ணியடித்துவிட்டு சபையை கலைத்தார்கள்.

கிளப்பில் இருக்கும் செல்வந்தர்களை கவனித்தான். எல்லோரும் சிகப்பாக இருந்தார்கள். கருப்பாக இருந்தாலும் மெருகுடன் இருந்தார்கள். சிரிக்கும்போது அனைவரது பல்வரிசையும் சீராக இருந்தது. முக்கியமாக உயரமாக இருந்தார்கள். அந்த கூட்டத்தில் சுந்தரம்தான் சற்று குள்ளமாக இருந்தான். பணத்துக்கும் உயரத்துக்கும் அறிவியல்பூர்வமான தொடர்புகள் இல்லாவிட்டாலும் ஒருவேளை இருக்கலாம் என்பது சுந்தரத்தின் நம்பிக்கை. உயரத்தை மூன்று இஞ்ச் செருப்பணிந்து ஓரளவு சரிசெய்தான்.

சுந்தரத்தின் பற்கள் அப்படி ஒன்றும் துருத்திக்கொண்டு இல்லாவிட்டாலும் சிரிக்கும்போது ஒரு எளியவனின் தோற்றம் கொடுத்தது. நகரத்தின் பெரிய பல் மருத்துவமனைக்கு சென்றான். பல்லுக்கு மூவாயிரம் என்றார்கள். ஒரு டஜனுக்கு இரண்டு குறைவான பற்களை சீரமைப்பு செய்தான். இரண்டுநாள் தங்க வேண்டும் என்றார்கள். வாழ்நாளில் தேக ஆரோக்கியம் இருந்தும் மருத்துவமனையில் தங்கியது அன்றுதான். மேலும் ஒரு பல் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேரும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டிவிடாது. பற்களை சீரமைத்த பெண் மருத்துவரை இவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. காரணம் வேண்டுமென்றே தன் இடுப்பை பார்த்தாலும் அதை கண்டுகொள்ளாத அந்த மனப்பாங்கு மிகப்பெரிய நாகரீகவாதிகளிடம் மட்டுமே இருக்கும் குறிப்பாக செல்வந்தர்களிடம் என்று தனக்குதானே கூறிக்கொண்டான். மறுநாள் மருத்துவமனையில் இருந்து விடை பெறும்போது ஒருகட்டு ரூபாய் தாளை அந்த பெண் மருத்துவரிடம் திணித்தான். பணத்தை ரிசப்சனில் கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு நடந்த மருத்துவரை நீண்ட பெருமூச்சுடன் கவனித்தான்.

புதிய பல்லை எப்படி காண்பிப்பது என்ற வெட்கம் கூட வந்து போனது. வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் உட்காந்திருந்தார்கள். பிரச்சனை குழந்தைகளிடம் என்று விளங்கியது. காரணம், இரண்டு குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்தவர்கள். வாழ்க்கை வேறு திசையில் பயணித்ததால் ஒரு ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்துவிட்டான். புதிய பள்ளியில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்பதாலும் தமிழில் பேசினால் அபராதம் என்பதாலும் சுந்தரத்தின் இரு குழந்தைகளும் அந்த பள்ளியில் தனித்து விடப்பட்டு இருந்தார்கள். மேலும் பழைய பள்ளியில் சேர்ந்து விடுமாறு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சுந்தரம் தன்னைத் தவிர குடும்பத்தில் யாருக்கும் பணக்காரனாக வாழ ஆசையே இல்லையே என்று வருத்தமாக இருந்தது. மனைவியும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாளே என்கிற ஆதங்கம் வேறு.

எல்லாவற்றையும் மறக்க ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அது ஒரு மூன்று நட்சத்திரம் இருக்கலாம். சாப்பிட உட்காந்ததும் ஒரு எலுமிச்சை பிழிந்த வெதுவெதுப்பான நீர் வைத்தார்கள். அதை சுந்தரத்தின் மனைவி உட்பட அனைவரும் சூப் நினைக்க, பரிமாறும் சிப்பந்தி அது கை கழுவுவதற்கு என்று சொல்லிவிட்டு லேசாக சிரித்துவிட்டான். இவனுக்கு தாங்க முடியாத அவமானத்தை பெற்றுத் தந்தது. பேசாமல் வேறு மனைவியை பார்க்கலாமா என்ற எண்ணம் கூட வந்து போனது. மெனு கார்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். அது அவனது தாயாரின் இறப்பு சான்றிதழை நினைவுப்படுத்தியது. அதிலும் ஆங்கிலம். வாங்க வேற ஹோட்டலுக்கு போகலாம் என்று மனைவி நச்சரிக்க தொடங்கிவிட்டாள். பார்வையால் அதட்டிவிட்டு சற்று அமைதியாக இருந்தான். இவர்களது தவிப்பை புரிந்துகொண்ட பக்கத்துக்கு டேபிள் பெண்மணி ஒவ்வொரு மெனுவாக எடுத்துரைத்தாள். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் இந்த பெண்ணே மனைவியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

மறுநாள் சுந்தரத்தின் சித்தப்பா இறந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. சுந்தரத்துக்கு தந்தை கிடையாது. தாயின் பராமரிப்பில் வளர்த்தவன். தந்தையின் வழி வந்தது தான் இந்த நாலு ஏக்கர். தந்தையுடன் கூடப்பிறந்த ஒரே தம்பிதான் இப்போது இறந்தது. அண்ணன் இறந்து போனதும் நல்ல வளமான சொத்துகளை தன் வசப்படுத்தி மழையே பார்க்காத நாலு ஏக்கர் இடத்தை அண்ணன் குடும்பத்துக்கு தள்ளிவிட்டார். அந்த நாலு ஏக்கர் தான் இப்போது இவனை கோடிஸ்வரனாக மாற்றினாலும் அவர் செய்த துரோகத்தை இவன் மறக்கவே இல்லை. சுந்தரம் வாலிபனாக இருந்த போது நோய்வாய்பட்டு கிடந்த தாயும்  போய் சேர்ந்துவிட்டாள். வேறு வழியில்லாமல் சித்தப்பா வீட்டில் வளர்ந்தான். அவனுக்கென்று திருமணமாகும் வரை சித்தப்பா வீட்டில் இருந்த அந்த எட்டு வருட அவஸ்தை சொல்லில் அடங்காது. வீட்டில் மீன் குழம்பு வாசம் வீசும் போதும் இவனுக்கு பழைய சோறே உணவாக கிடைத்தது. இவனுக்கு அந்த மீன் குழம்பு கிடைக்க இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். சின்னம்மா செய்த கொடுமைகளை ஒருவார்த்தை கூட தட்டிக்கேட்டதில்லை. அவர் காத்த அமைதி சின்னம்மா கொடுமையை விட கொடியதாக இருந்தது.

கொஞ்ச நாளில் சின்னம்மாவுக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. இருவர் சம்பாதித்து சற்று வசதியாக வாழ ஆரம்பித்தனர். அவர்களது குழந்தைகள் பெரிய பள்ளியில் படிக்க அவர்கள் வீட்டிலேயே குழந்தை தொழிலாளராக சுந்தரம் இருந்தான். அப்படிபட்ட சித்தப்பா தான் இறந்து போனார். தொண்டையில் கான்சர். வார்த்தையே பிறக்காத அந்த தொண்டையில் எப்படி கான்சர் வந்தது என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

ஒரே ஆச்சரியம்  தனக்கு வசதி வாய்ப்பு வந்தது தெரிந்தும் கூட சித்தப்பா குடும்பம் தன்னிடம் உதவி என்று கேட்டு நின்றதில்லை, சுந்தரத்தின் விருப்பமும், பிரார்த்தனையும் அதுவே. சித்தப்பா சாவுக்கு போகும்போது எந்த மாதிரியான தோரணையில் போவது என்ற குழப்பம் இருந்தது. ஒரு செல்வந்தனாக தான் செல்லும் முதல் சாவு எந்த குழப்பமும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். சாவுக்கு வரும்போது  பொருள் படைத்தவனின் செய்கைகள் எப்படி இருக்கும் என்பதை ரைஸ்மில் முதலாளியிடம் கற்றிருக்கிறான். வெள்ளை உடையில் பளீரென்று வருவார்கள். முகத்தில் ஒரு செயற்கை சோகம் இழையோடும். முகத்தில் கொஞ்சம் பூச்சு வேலைப்பாடு இருந்தாலும் அதை சோகமான முகம் மிகச்சரியாக மட்டுப்படுத்தும். யாருக்கும் தெரியாத  வகையில் கூடுமானவரை நுகரும் வகையில் ஒரு வாசனை திரவியம் பூசியிருப்பார்கள். அது இறப்பு வீடுகளுக்கு செல்லும்போது உபயோகப்படுத்தும் பிரத்யேக திரவியமா என்பது கூட சுந்தரத்துக்கு நெடுநாள் சந்தேகமாக இருந்திருக்கிறது. கூடவே ஒரு அல்லக்கை அல்லது கார் ட்ரைவர் அந்த பெரிய மாலையை சுமந்து வருவார். சாவு வீடே ஒருநிமிடம் அழுகையை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தனை ஏறிடும். இந்த பெருமையில் பாதி அந்த பணக்காரர்களுக்கு சென்றாலும் மீதி படுத்து கிடக்கும் அந்த சவத்துக்கு சேரும்.

சுந்தரம் ஒருமுறை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் காரில் ஏறினான். வரும் வழியில் ஒரு பெரிய மாலையை வாங்கி டிக்கியில் வைக்க சொன்னான். காரணம் கடையில் இருந்த பொழுது மணம் வீசிய ரோஜா மாலை இவன் கைக்கு வந்ததும் சாவு வாசம் அடித்தது. கூடவே ஒரு இறந்த உடலுடன் பயணிப்பது போன்ற உணர்வு. ட்ரைவரிடம் நீதான் மாலையை எடுத்துக்கொண்டு என் பின்னால் வரவேண்டும். காரணம் நிறைய பேர் எனக்கு வணக்கம் வைப்பார்கள். பதில் வணக்கம் வைக்க இந்த மாலை இடையூறாக இருக்கும் என்றான். கூடவே இறந்த உடலை பார்த்து வணக்கம் வைத்துவிட்டு உன் பக்கம் திரும்பும்போது மாலையை கொடுக்க வேண்டும். மேற்கண்ட செய்முறை விளக்கத்தை சொல்லும்போது ட்ரைவர் தன்னை ஒரு மாதிரியாக பார்த்ததை கவனித்தான்.  முன்பின் ஒரு பணக்காரரிடம் வேலை பார்த்ததல்லை போல என நினைத்துக்கொண்டான்.

சித்தப்பா வீட்டை நெருங்கினான். கடைசியாக பார்த்தது போலவே இருந்தது. வாசலில் ஒரு மாங்காய் மரம். இவன் இந்த வீட்டுக்கு சிறுவனாக வந்தபோது கன்றாக வைத்தது. சித்தப்பா இந்த மரத்தை பார்த்துக்கொண்ட அளவிற்கு கூட தன்னை பார்த்துக் கொண்டதில்லை என்பது சுந்தரத்தின் சற்று முந்தய குற்றச்சாட்டு. இதையெல்லாம் தன் ட்ரைவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது போல இருந்தது. ஆனால் பணக்காரர்கள் யாரும் தன் வாழ்வியல் சோகங்களை ட்ரைவரிடம் பகிர மாட்டார்கள் என்பதால் அமைதியாக இருந்தான்.

வீட்டின் முன் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அது கிழிந்து நைந்து போன பந்தல். இழவு வீட்டுக்கு போடவே எடுத்து வைத்த பந்தல் போல இருந்தது. வீட்டுக்கு முன் ஒரு அறுபது அடி தூரத்திலேயே காரை நிறுத்தினான். நிறுத்தும் போது ஒரு ஹாரன் அடிக்க சொன்னான். முகம் முன் பக்கம் இருந்ததால் பின்னால் உட்காந்திருந்த சுந்தரத்தால் ட்ரைவர் முகம் என்ன மாதிரியாக இருந்திருக்கும் என்பதை பார்க்க முடியவில்லை. ஹாரன் அடிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல இழவு வீட்டின் பந்தலில் உட்காந்திருந்த கூட்டம் காரை திரும்பி பார்த்தது. சுந்தரத்துக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. கார் கதவை தானே திறக்கலாமா இல்லை ட்ரைவரை விட்டு திறக்க சொல்வோமா என்ற எண்ணம் எழுந்தது. ட்ரைவர் முடியாது என்று மறுத்துவிட்டால்? திரும்பி போக என்ன செய்வது தனக்கும் கார் ஓட்ட தெரியாது என்று பழைய சுந்தரம் செய்த எச்சரிக்கை காரணமாக கதவை தானே திறந்து கொண்டு வெளியே வந்து நின்றான்.

மொத்த கூட்டமும் இவனை பார்த்துக்கொண்டு இருந்தது. ட்ரைவர் வேகமாக ஓடிவந்து டிக்கியை திறந்து மாலையை எடுத்துக்கொண்டு இவன் பின்னால் நின்றான். மெதுவாக அல்லாமலும் வேகமாக இல்லாமலும் ஒருவிதமாக நடந்தான். இப்போது மொத்த கூட்டத்தின் கண்கள் இவனை மொய்ப்பது இவன் பார்க்காமலே புரிந்தது. இது தவிர தூரத்தில் உட்காந்து தண்ணியடித்து கொண்டிருந்த ஒரு கூட்டம் இவனையே வெறித்து பின்பு திரும்பி வேலையைத்  தொடர்ந்தார்கள். தண்ணியடிக்க யாரேனும் காசு கேட்டால் கொடுப்பதற்கு ட்ரைவரிடம் காசு கொடுத்திருந்தான். பணக்காரன் பணத்தை தொடமாட்டான். அதுதான் அவனை தொடவேண்டும்.

சித்தப்பாவின் மூத்த மகன் அதாவது சுந்தரத்திற்கு தம்பி வெளியே சட்டையின்றி நின்று கொண்டு வருவோர்களின் துக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தான். அவனும் கவனித்துவிட்டான். தான் கையை பிடிக்கும்போது அவன் உதறிவிட்டால் என்ன செய்வது? மெதுவாக வந்து வீட்டை அடைந்தான். கூட்டத்தை பார்த்து பொத்தாம் பொதுவாக ஒரு வணக்கம் வைத்தான். அதற்கு கைமேல் பலனாக பதிமூன்று பதில் வணக்கங்கள் கிடைத்தது. தம்பியின் கை பிடித்து அழுத்தினான். அந்த அழுத்தம் கையில் போட்டிருக்கும் மோதிரத்தையும் கட்டையான பிரேஸ்லெட்டையும் பார்க்குமாறு அறிவுறுத்தியது. செருப்பை உள்ளே போகும்போது எங்கே கழற்றி வைப்பது என்றே குழப்பம் வந்து போனது. பழைய சுந்தரம் புது செருப்பு வாங்கி இதுபோன்ற ஜனநெருக்கடி இடத்திற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஜோடி செருப்பில் ஒரு செருப்பை ஒரு இடத்திலும் இன்னொரு செருப்பை மற்றொரு இடத்திலும் கழற்றி வைப்பான். இது செருப்பு திருடர்களின் தொழிலை பாதிக்கும் உத்தி என்று நம்பினான். ஒரு உயர் ரகமான பேட்டா செருப்பு பக்கத்தில் தன் செருப்பை கழற்றி வைத்தான். பணக்காரன் இன்னொரு பணக்காரன் நட்பையே விரும்புவன். பணக்காரனின் செருப்பு கூட இதை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையை சுந்தரம் சற்று முன் மனசாசனத்தில் எழுதினான்.

சித்தப்பாவின் வீடு அப்படியே இருந்தது. முன்னால் இருந்த திண்ணையில் தான் சுந்தரம் படுத்து தூங்குவான். வீட்டின் மெயின் ஹாலில் தான் சித்தப்பா படுத்து கிடப்பார். இன்றும் அதே இடத்தில் தான் ஒரு ஐஸ் பெட்டியில் உறைந்து கொண்டிருக்கிறார். பிரீசர் பாக்ஸில் இரண்டு மொபைல் போன் நம்பர்கள் எழுதப்பட்டு இருந்தது. இந்த எண்ணை யாரெல்லாம் தன் போனில் பதிந்து வைத்துக் கொள்வார்கள் என்று யோசித்து பார்த்தான். சுந்தரம் சேர்ந்த கிளப்பில் கூட ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிக்கு ப்ரீசர் பாக்ஸ் வாங்க போவதாக சொல்லியிருந்தார்கள்.

சித்தப்பாவை உற்றுப் பார்த்தான். இன்றும் அதே அமைதி. பாதிக்கண் திறந்தே இருந்தது பார்க்க பயமாக இருந்தாலும் தூங்கும்போதே இப்படி தான் அரைக்கண் திறந்தே இருக்கும். ஒரு மூக்கில் சரியாக பொருத்தப்பட்டு இருந்த பஞ்சு மறுதுவாரத்தில் கீழே விழுந்து கிடந்தது. ஒருவேளை சித்தப்பா மூச்சு விட்டிருக்கலாம் என் மனதிற்குள் சொல்லி சிரித்துக்கொண்டான். தொண்டையில் பெரிய கட்டு ஒன்று போடப்பட்டு இருந்தது. சித்தப்பா கொஞ்சமல்ல நிறைய வலியில் வாழ்ந்திருப்பார் என்பதை நினைக்க சற்று பாவமாக இருந்தது. அதற்காக அழுதுவிடக்கூடாது. அது எளியவர்கள், இயலாதவர்கள் செய்யும் காரியம். திரும்பி பார்த்தான். சரியான நேரத்தில் ட்ரைவர் மாலையை கொடுத்தான். சுந்தரத்திற்கு சற்று கௌரவமான மனநிலையை தந்தது. மேலும் மனைவியை அழைத்து வராமல் இருப்பது நல்ல யோசனையாகப்பட்டது. சித்தப்பாவுக்கு ஒரு வணக்கம் வைத்தான். அசூசையாக பதில் வணக்கத்திற்கு ஒரு நொடி காத்திருந்துவிட்டு சின்னம்மாவை தேடினான். ஒரு மூலையில் உட்காந்து அழுதே ஓய்ந்து போயிருந்தாள். இவனை கவனித்து விட்டு குனித்து கொண்டு அழுதாள்.

வெளியே பந்தலில் வந்து தன் கௌரவத்திற்கு ஏற்ற மரியாதைக்குரிய நபர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடினான். கூட்டத்தில் தன் தகுதிக்கு ஏற்றவர்கள் யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, சித்தி வேலைபார்க்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை இவனுக்கு தெரியும், அவர் அருகிலேயே போய் அமர்ந்தான். கூட்டத்தில் இருந்தவர்கள் இவனை பற்றி பேசினார்கள். சுந்தரம் தானே இவன்? என்பது மட்டும் பிரமையாக இவன் காதில் விழுந்தது. வந்த வேலை முடிந்தது. இனி ஒன்றுமில்லை என்று முடிவு செய்து எழுந்து நின்றான். துக்கத்தை வாங்கிக் கொண்டிருந்த தம்பியிடம் நின்று ட்ரைவரை பார்த்தான். ட்ரைவர் ஓடி வந்து ஒரு பழுப்பு நிறமேறிய கவரை கொடுத்தான். அதை சுந்தரம் தம்பியிடம் கொடுத்துவிட்டு நடந்தான். தான் கவர் கொடுத்ததை ஒரு பத்து பேர் பார்த்தாலே ஊர் முழுக்க பரவிவிடும் என்று நம்பினான்.

காரில் ஏறி உட்காந்தான். நில்லுடா என்பது போன்ற சப்தம். வண்டியை ட்ரைவர் இயக்க முற்படும் போது டேய் சுந்தரம் என்கிற குரல் தெளிவாக கேட்டது. அது சித்தியின் குரல். சித்தி ஆவேசமாக காரை நோக்கி வந்து கொண்டிருந்தாள். வண்டியை கிளப்ப சொல்லி விடலாமா என்ற யோசனை வேறு. ஓடுவது பணக்காரனுக்கு அழகல்ல. நின்று சமாளிப்பது அவனுக்கு இன்னும் கம்பீரத்தை கொடுக்கும் என்று எண்ணி வண்டியை விட்டு கீழே இறங்கினான். டிரைவர் வண்டியை ஆப் செய்தான்.

சித்தியை வெகு அருகில் நின்று பார்க்கும் போதே கொஞ்சம் பயமாக இருந்தது. முகத்தில் ஆவேசம்.

“யாருக்கு வேணும் உன் பணம்? நாங்க நல்லாத்தான் இருக்கோம். நான் சாகுற வரைக்கும் பென்ஷன் வரும். எந்த நாய்கிட்டையும் கை கட்டி நிக்க வேண்டிய அவசியமே இல்ல!” என்று பணத்தை கவருடன் எறிந்தாள். கவருக்குள் இருந்த பணம் கட்டில் இருந்து பிரிந்து கொட்டியது. உள்ளுக்குள் இருந்த பழைய சுந்தரம் வெளியே குதித்து பணத்தை பொறுக்க தொடங்கினான். கடைசி நோட்டை எடுத்து முடிக்கும்போது உள்ளுக்குள் படுத்திருந்த சித்தப்பாவை தவிர எல்லோரும் அவனை பார்த்தார்கள். கடைசி நோட்டு வரை பொறுக்கிய சுந்தரம் அமைதியாக காருக்குள் அமர்ந்து கொண்டான்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.