எஸ். சுரேஷ்
நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றபோது குர்தயால் சிங் என்னும் எழுத்தாளரின் ‘பர்ஸா’ என்னும் நாவல் கண்ணில் பட்டது. அந்த பெயர் அதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. நண்பர் ராஜ்மோகனை தொலைபபேசியில் அழைத்து “இந்த எழுத்தாளரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். இந்திய எழுத்தாளர்களைப் பற்றி விக்கிபீடியாவுக்கு தெரிந்ததை விட ராஜ்மோகனுக்கு அதிகம் தெரியும். “அவர் ஒரு மிக சிறந்த எழுத்தாளர். பஞ்சாபின் முக்கிய எழுத்தாளர். தச்சர் குலத்தை சேர்ந்தவர். தலித் சர்தார்ஜிகளை பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.”
என்னை இரண்டு விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின. ஒன்று, எனக்கு இவ்வளவு பெரிய ஒரு எழுத்தாளரை பற்றி தெரியாமல் இருந்தது. இரண்டாவது, சீக் சமூகத்திலும் ஜாதி பேதங்கள் இருப்பது. அந்த சமூகத்திலும் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர்த்தேன்.
‘பர்ஸா’ என்ற அந்த நாவலை படித்துக்கொண்டிருக்கும்பொழுதே குர்தயால் சிங்கின் ஆளுமையை அறிய முடிந்தது. அந்த நாவலில் ஒரு சமூகத்தின் மொத்த உருவத்தையும் நம் கண் முன் நிறுத்துகிறார். அவர் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராணா நய்யர் என்பவர் குர்தயால் சிங்கின் பர்ஸாவை ஆக சிறந்த பூஞ்சாபி நாவலாக ஒரு கருத்தரங்கில் சொன்னார். அதற்கு பின் என்னுடன் பேசிய அவர், “பர்ஸா பஞ்சாபின் கலாசாரத்தை அற்புதமாக முன்னெடுத்து வைக்கிறது. இந்த நாவலை படித்தால் எப்படி சீக் கலாச்சாரமும் ஹிந்து கலாச்சாரமும் இணைந்து இருந்தன என்று நமக்கு தெரிய வருகிறது. ஒரு கலாசாரம் என்பது எப்படி மற்ற கலாசாரங்களுடன் உரையாடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.” குர்தயால் சிங் தலித்களை பற்றி அதிகம் எழுதியிருப்பதை பற்றி நான் சொன்னபொழுது, “ஆனால் அவர் எல்லோரை பற்றியும் எழுதியிருக்கிறார். பர்ஸா என்பவர் ஒரு ஜாட் பிராமின். மற்ற நாவல்களில் அவருடைய தச்சர் ஜாதி மக்கள் பற்றியும் எழுதியிருக்கிறார்”.
பர்ஸாவுக்கு அடுத்ததாக நான் குர்தயால் சிங்கின் முதல் நாவலான ‘மர்ஹி தே தீவா’ என்னும் நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தேன். (ஆங்கிலத்தில் இதற்கு ‘லாஸ்ட் ஃப்ளிக்கர்’ (Last Flicker) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது). ஒரு தலித் சர்தார்ஜி இளைஞன் தன் நண்பனின் புதிய மனைவி மேல் மோகம் கொள்கிறான். அதன் விளைவுகளை இந்த நூல் விவரிக்கிறது. இது மனதை நெகிழவைக்கும் காதல் கதையாக இருக்கும்பொழுதும், அந்த காதல் கதை நடக்கும் களத்தை நம் கண்முன் குர்தயால் சிங்அற்புதமாக கொண்டுவருகிறார். நமக்கு அந்த காதல் மட்டுமல்ல, அந்த சமூகத்தை பற்றியும் நல்ல ஒரு புரிதல் கிடைக்கிறது.
குர்தயால் சிங்கின் எல்லா நாவல்களிலும் தனி மனிதர்கள் சமூகத்தின் ஒரு சிறிய அங்கமாகதான் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் சமூகத்துடன் தொடர்ந்து மோதுகிறார்கள். அப்படி மோதும் ஒரு தச்சன் கதைதான் ‘அன்ஹோயீ’. சாலை விரிவுப்படுத்தவேண்டி அரசு அவனுடைய வீட்டை பலிகொள்ள முடிவெடுக்கிறது. தன் வீட்டை எக்காரணத்தினாலும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்து, அரசுடன் மோதி, போலீசுடன் மோதி, தன் தம்பியுடன் மோதி, எல்லோரையும் ஜெயிக்க வேண்டும் என்று உறுதியுடன் போராடும் எளிய மனிதனின் கதை இது.
அரசு, போலீஸ், சமூகத்தின் பெரிய புள்ளிகள் என்று எல்லோரும் சுரண்டும் எளியவரின் வாழ்கையை தான் குர்தயால் சிங் தன் நாவல்களில் எழுதினார். ‘அந்தே கொடே த தான்’ என்னும் நாவலில் மாறும் காலம் எப்படி ஏழைகளை தாக்குகிறது என்பதை மிகவும் கரிசனத்துடன் சித்தரித்திருக்கிறார். எழுதப்படாத ஒப்பந்தங்கள் எப்படி பணபலத்துடன் மீறப்படுகின்றன என்பதையும், அவைகள் மீறப்படும்பொழுது அரசு எளியவர்களுக்கு எதிராகவே நிற்பதையும் குர்தயால் சிங் தெளிவுப்படுத்துகிறார்.
குர்தயால் சிங் குடும்ப காரணங்களால் பன்னிரெண்டு வயதிலேயே தச்சு வேலை செய்ய ஆரம்பித்தார். ஆனால் அவர் மனது முழுவதும் படிப்பதில் இருந்தது. பல வேலைகளை செய்து கொண்டே அவர் படிப்பை தொடர்ந்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அவருடைய நாவல் சாகித்ய அகாடெமி விருது பெற்றிருக்கிறது. அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. ஞானபீடம் விருதும் அளிக்கப்பட்டது. 1933 இல் பிறந்த அவர் 2016 வருடம் மறைந்தார்.
அவருடைய ‘பர்ஸா’,‘Last Flicker’ மற்றும் ‘Handful of Sand’ என்று மூன்று புத்தகங்கள் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட்டில் கிடைக்கின்றன. ‘அந்தே கோடே த தான்’ ‘In the name of blind horse’ என்ற பெயரில் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டு அமேஜானில் கிடைக்கிறது. ‘அன்ஹோயி’ மற்றும் ‘அத் சாந்த்நி ராத்’ என்னும் நாவல்கள் ராணா நய்யரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இப்பொழுது கிடைப்பதில்லை. யாரும் அவற்றை மறுபிரசுரம் செய்யவில்லை.
ஏழை எளியவர்களை பற்றியும், அவர்களுக்கும் அரசுக்குமான உறவை பற்றியும் அதே சமயம் தனி மனித உணர்வுகளை பற்றியும், குடும்ப சிக்கல்களை பற்றியும் எழுதி ஒட்டுமொத்த பார்வையை அளித்த குர்தயால் சிங் நம் நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் பல எழுத்தாளர்களுக்கு நிகழ்வதுதான் அவருக்கும் நிகழ்கிறது- அவரைப் பற்றி பஞ்சாபுக்கு வெளியே அதிகம் நபர்களுக்கு தெரிவதில்லை. நல்ல இலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குர்தயால் சிங்கை படித்திருக்காமல் இருக்கக் கூடாது.