இப்பொழுது ராக் மல்ஹார் பாடவேண்டிய தருணம் ஆனால் நான் அல்-ஃபதா கேஃபில் உட்கார்ந்துகொண்டு ராக் பாகேஸ்ரீ பாடிக்கொண்டிருந்தேன். வெளியில் மழை தூறிக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல் தான். பலர் அதை ரசித்துக்கொண்டு நடந்து சென்றார்கள்.
ராக் பாகேஸ்ரீ. இந்த ராக்ல ஒரு சின்ன சோகம் இருக்கும். அதுல ஒரு சுகமும் இருக்கும். எப்படியோ அது உங்க மனசுக்குள்ள நுழைஞ்சி மனசப் பிழிஞ்சி எடுத்துவிடும். இது ராக் தோடி மாதிரி அழுகை ராகம் இல்ல. இதனுடைய மென்சோகத்துல மூழ்கினா மீள முடியாது.
“கானே மேய் டூப் கயே கியா?” சர்வர் கேட்டான்.
நிமிர்ந்து பார்த்தேன், “ஏக் சாய் லா”
“நீங்க இங்க பாடறதுக்கு ரவீந்திரா பாரதீல பாடலாம். உங்க குரல் அவ்வளவு நல்லா இருக்கு”
நான் இதைக் பலர் சொல்ல பல முறை பலர் கேட்டிருக்கேன்.
இர்ஷாத் என்னை முறைத்து பார்த்தான். அவனுக்கு என்னைக்கண்டால் பிடிக்காது. நான் எப்பொழுதும் என்னுடைய சுண்ணாம்பு அடிக்கும் வேலையை முடித்துக்கொண்டு இங்கு டீ குடிக்க வருவேன். ஒரு மணி நேரம் வரை ஒரே ஒரு டீ குடித்துவிட்டு உட்கார்ந்திருப்பேன். என் உடம்பு முழுவதும் சுண்ணாம்பு. நான் வெறும் முழுக்கை பனியனும் அரை நிஜாரும் அணிந்திருப்பேன். பலர் என்னை பார்த்துவிட்டு என் பக்கத்தில் உட்கார தயங்குவார்கள். இதை கண்டு இர்ஷாதுக்கு எரிச்சல் வரும். ஆனால் அவனால் ஒண்ணும் செய்ய முடியாது. என்னுடன் சண்டை போடுவது அவனுக்கு மரியாதைக்குறைவு.
நான் பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது காதர் உள்ளே நுழைந்தான். என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டான். இப்பொழுது அவன் ஒல்லியாக இருந்தான். கிழிந்த சட்டை அணிந்திருந்தான். சரியாக சவரம் செய்யப்படாத தாடி. குடித்து குடித்து சிவப்பேறிய இடுங்கிய கண்கள். பார்க்கவே பரிதாபமாக இருந்தான்.
ஆனால் முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லை. ஒரு ராஜா போல் இருப்பான். எப்பொழுதும் எல்லோரையும் திட்டிக்கொண்டிருப்பான். சில்க் ஜிப்பாதான் அணிவான். பணத்தை அள்ளி வீசுவான். எப்பொழுதும் வாயில் புகையிலை இருக்கும். அவன் என்னை ஒரு நாள் பளார் என்று அறைந்தான். நான் ரோட்டில் விழுந்தேன். இரண்டு முறை காலால் எட்டி உதைத்தான். “உன்னை இங்க இன்னொரு முறை பார்த்தேன், உனக்கு நடக்க கால் இருக்காது” என்று எச்சரித்தான்.
நான் செய்த தவறு, பெரியப்பாவின் பாட்டை படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டுதான் கேட்டது தான். கான் சாப் என்று எல்லோராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட கபூர் கான் என்ற மிக பெரிய பாடகர் எனக்கு பெரியப்பா முறை வேண்டும். அவரிடமிருந்து நான் பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் அப்பாவுடைய மிக பெரிய ஆசை. அவருடைய பாட்டு என்னை வெகுவாக ஈர்த்தது. அவர் தினமும் மூணு மணி அளவில் ஷாகிர்த்களுக்கு பாட்டு சொல்லிக்கொடுப்பார். அவருடைய வீடு மேல் மாடியில் இருந்தது. நான் பள்ளி முடிந்தவுடம் அவர் வீட்டு படிக்கட்டில் உட்கார்ந்துக்கொண்டு அவர் பாட்டை கேட்டுக்கொண்டிருப்பேன். அதை பார்த்து தான் காதர் என்னை அடித்தான். அவன் கான் சாபுடைய சின்ன தம்பி.
என்னை காதர் அடித்தான் என்பதை அறிந்த அம்மி ஜானுக்கு ஒரே கோபம். அப்பாவிடம் புலம்பி தள்ளினாள். “இவங்க சொத்தையா நம்ப புடுங்கிட்டோம். பைய்யன் பாட்டு தானே கேட்டான். இந்த காதருக்கு பாட்டு வராது. அந்த எரிச்சல் அவனுக்கு. கான் சாஹேப் பாவம் நல்லவரு. ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அவருக்கும் சேர்த்து அவர் தம்பிங்க குடிக்கறாங்க. அவர் சேத்து வெக்கற சொத்த இவங்க குடில அழிக்கறாங்க” என்பாள் அம்மி ஜான். அப்பாவுக்கு இதை பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டுவிடுவார்களோ என்று பயம், “தும் சுப் பைடோ” என்பார். அதற்கு அம்மி, “அவர் சம்பாதிக்கற காசுக்கு அவர் பெரிய மஹால்ல இருக்கணும். இதைப் போல ஒரு பாழடஞ்ச வீட்லையா இருக்கணும்?” என்று எதிர் கேள்வி கேட்பாள். “ரெண்டு தம்பிங்களும் நாலாயக் பசங்க. ஒருத்தன் தாம்புரா தூக்கறான். இன்னொருத்தன் தபலாவ தூக்கறான். அவங்களுக்கு வாசிக்கவும் வராது, பாடவும் வராது. வேலைக்கும் போகமாட்டாங்க. கான் சாபும் “மேரே பையான் மேறேக்கு கியா இஜ்ஜத் தேதே’ன்னு பூரிச்சு போறாரு. அவருக்கா இஜ்ஜத் குடுக்கறாங்க. அவர் பணத்துக்கு தானே இஜ்ஜத். இவங்க பாதிய புடுங்கறாங்க. ரெண்டு தங்கைகளும் அப்பப்போ வந்து மீதிய புடிங்கிட்டு போறாங்க. கடைசில இவ்வளவு சம்பாதிச்சும் கான் சாப் அந்த மராட்டி குல்கர்னி தயவுல வாழ வேண்டி இருக்கு”.
மழை வலுக்க ஆரம்பித்தது. காதர் மழைக்கு ஒதுங்க வந்தவன் போல் வெளியில் நிற்கிறான். யாரவது தெரிந்தவர்கள் வருவார்களா, தனக்கு ஒரு சாய் வாங்கிக்கொடுப்பார்களா என்ற ஏக்கம் அவன் கண்ணில் தெரிகிறது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது பாவமாக இருக்கும். ஆனால் அவனுக்கு மட்டும் நான் என்றால் இன்னும் இளக்காரம் தான். இருந்தாலும் அவன் வீழ்ச்சியை நான் பார்த்திருந்ததனால் என் பக்கமே பார்க்க மாட்டன்.
காதரிடம் உதை வாங்கிய பின்பும் என்னால் பள்ளி முடிந்தவுடன் அவர் வீட்டிற்க்கு செல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. உட்காராமல் நிருக்கொண்டிருந்தேன். எங்கே காதர் வந்துவிடுவானோ என்ற பயம் என்னுள் இருந்தது.
பக்கத்து வீட்டில் ஒரு கிழவி வரண்டாவில் நாற்காலியில் எப்பொழுதும் உட்கார்ந்துக்கொண்டிருப்பாள். ‘இக்கட ரா’ என்று தெலுங்கில் கூப்பிட்டாள். நான் அவள் வீட்டுக்குள் சென்றேன். ‘லோபல போ’ என்றாள். எனக்கு எதற்காக உள்ளே போக சொல்கிறாள் என்று புரியவில்லை. இருந்தாலும் உள்ளே சென்றான். அங்கு ஒரு முற்றம் இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் கான் சாபின் குரல் தெளிவாக கேட்டது. என்னை உட்கார்ந்துக்கொள்ளுமாறு சைகை காட்டினாள். நான் உட்கார்ந்துக்கொண்டு பாட்டை ரசிக்கலானேன். தினமும் அவர்கள் உட்கார்ந்துக்கொண்டு கான் சாபின் பாட்டை கேட்பேன். வீட்டில் உள்ளவர்கள் என்னை சட்டை செய்யமாட்டார்கள். அவர்கள் அவரவர் வேலையில் இருப்பார்கள். நான் கான் சாப் பாட நிறுத்தியவுடன் வீட்டுக்கு புறப்படுவேன். இரண்டு வருடங்களுக்கு மேல் இது தொடர்ந்தது. பிறகு அந்த கிழவி இறந்துவிட்டாள். நான் அவள் பிணத்துக்கு முன் கேவி கேவி அழுவதை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டார்கள்.
இப்பொழுது மழையுடன் காற்றும் சேர்ந்துக்கொண்டது. மழையை மெல்லிய தூறல் வடிவில் காற்று கடை உள்ளே கொண்டுவந்தது. வெளியில் குல்கர்னி காரில் சென்றுக்கொண்டிருந்தார். இப்பொழுது பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
ஒரு காலத்தில் குல்கர்னி எங்க தெருவில்தான் இருந்தார். அவர் நல்ல இசை ரசிகர். அவர் கான் சாப் மேல் உயிரை வைத்திருந்தார். கடைசி காலங்களில் படே குலாம் அலி கான் ஹைதராபாத்தில் நவாப் வீட்டில்தான் இருந்தார். குல்கர்னியும் பெரியப்பாவும் அவரைப் பார்க்க அடிக்கடி செல்வார்கள். படே குலாம் அலி கான் உலகத்தை விட்டு சென்ற பொழுது இரண்டு நாளைக்கு இருவரும் எதுவும் சாப்பிடவில்லை என்று அப்பா சொல்லுவார். குல்கர்னியின் குடும்பத்தில் எல்லோரும் பாடுவார்கள். அவர் மகன் பெயர் சஞ்சீவ் குல்கர்னி. இப்பொழுது அவன் பெரிய பாடகன். புனேயில் இருக்கிறான். அடிக்கடி பேப்பரில் அவன் பெயர் வரும்.
அன்றொருநாள் மெஹபில்லில் நாங்கள் இருவரும் பாடினோம். முதலில் அவன் ஒரு பஜன் பாடினான். பிறகு நான் ‘மன் தட்பத்து’ என்ற மால்கோன்ஸ் ராகில் அமைந்த ‘பைஜ்ஜூ பாவர’ பட பாடலை பாடினேன். குல்கர்னிக்கு ஒரே சந்தோஷம். அப்பாவிடம், “நாளைக்கே நம்ப இவங்கள கான் சாப் கிட்ட பாட்டு கத்துக்க சேக்கறோம்” என்றார். அப்பாவுக்கும் ஒரே மகிழ்ச்சி. அவர் கனவு நினைவாகும் தருணம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார்.
“ஏ லோ சாய்” என்றான் சர்வர்.
“அபே. அவர் எவ்வளவு நல்லா பாடறாரு. அவர போயி டிஸ்டர்ப் பண்ற. மூசிக் சென்ஸ் லேது ரா நீக்கு” பக்கத்து டேபில் பசங்க சர்வர திட்டினாங்க
“ஆப் காஒ. துமரே கானே கே சாமே பீம்சென் ஜோஷி பீ குச் நஹி ஹய்” என்றான் ஒருவன்.
பல முறை பலர் இதை சொல்ல கேட்டிருக்கிறேன் என்றாலும் யார் என்றே தெரியாது ஒருவன் சொல்லும்பொழுது மனதுக்குள் ஒரு குஷி வரத்தான் செய்கிறது.
“பஹலே அப்னே பேடே கோ சிகாவ். பாத் மெய்ன் தூஸ்ரோன்க்கோ சிகாயிங்கே” என்றாள் பெரியம்மா. அப்பா குல்கர்னியின் பேச்சை கேட்டு என்னை பெரியப்பாவிடம் அழைத்து சென்றிருந்தார். ஆறடிக்கு மேல் உயரமாக இருக்கும் அவரை பார்த்தாலே எனக்கு பயம். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் இன்று அப்பா சொன்னபோது பயம் அதிகமானது. அவர் என்னை பார்த்து “ஏக் கானா காவ்” என்றார். நானும் பயந்துக்கொண்டே ‘போலே ரே பாபிஹரா’ பாடினேன். அன்று வெயில் தகித்துக்கொண்டிருந்தது. பாடி முடித்தவுடன் பெரியப்பா ரொம்ப குஷியா இருந்தார், “பஹுத் அச்சா. பஹுத் அச்சா. அச்சா காரா. நம்ப கரானா பேர காப்பாத்துவான். நீ அடுத்த வாரம் வந்து இவன என் ஷாகிர்தா சேர்த்து விடு” என்றார். இதை கேட்டவுடன் பெரியம்மா சொன்ன வார்த்தைதான் நான் முன்னமே சொன்னேனே.
“அவ நம்ப மகன பாட்டு கத்துக்க விடமாட்டா. அவளுக்கு எங்க நம்ப மகன் நல்ல பேரெடுத்து நமக்கு நிறைய பைசா வருமோன்னு பயம். என்ன ரோட்ல பார்த்தா ஏதோ வேலைக்காரிய பாக்கற மாதிரி பார்பா. ஏதோ நமக்கு ரோஜி ரோட்டி கிடைக்கறதே கஷ்டம் போல பேசுவா. அவ எங்க இதுக்கு ஒத்துக்க போறா?” அம்மி ஜான் புலம்பினாள்
“அரே சுப். கான் சயாப் சரி சொன்னா யாராலயும் நக்கோன்னு சொல்ல முடியாது” என்றார் அப்பா
“தும் சுப் ரஹோ ஜி. உங்களுக்கு தான் ஒண்ணும் தெரியாது. அவ, அவ மகன பெரிய பாடகனாக்கணும்னு எவ்வளவோ தக்லிப் எடுத்துக்கறா. ஆனா அவனுக்கு பாட்டு சுத்தமா வரல. கான் சாஹிப் எவ்வளவோ முயற்சி பண்ணாரு ஆனா அவனுக்கு சுர் நிக்கமாட்டேங்குது. அவனுக்கும் பாட்டு மேல ஒரே மதிப்பே இல்ல. அவனுக்கு வராதது நம்ம மகனுக்கு வந்திருக்குன்னு அவளுக்கு எரிச்சல். அவ நம்ப மகன முன்னுக்கு வர விடமாட்டா”
அம்மா பயந்தது போல்தான் நடந்தது. அடுத்த வாரம் சென்றபோது இப்பொழுது வேண்டாம் இன்னும் சில நாட்கள் போகட்டும் என்று பெரியப்பா சொல்லிவிட்டார். பெரியம்மா அன்று ஒரே குஷியாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. “சாய் பியோ” என்றாள். அவள் எப்பொழுதும் எங்களுக்கு சாய் கொடுத்ததில்லை.
இரண்டு நாட்கள் கழித்து நானும் அப்பாவும் எங்கோ வெளியே செல்லும்பொழுது குல்கர்னியை சந்தித்தோம். அவர் மகனை கான் சாஹிப் ஷாகிர்தாக ஏற்றுக்கொண்டு பாடம் தொடங்கிவிட்டார் என்று குல்கர்னி சொன்னார். அப்பாவின் முகம் சோகமாக மாறியது, “இவன இப்போ வேணாம் அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்லிட்டார் குல்கர்னி சாப். இவன் கிஸ்மாத்ல என்ன இருக்கோ” என்றார்.
“கியா போல்ரே. இவன் எவ்வளவு நல்லா பாடறான். இயற்கையிலேயே இவனுக்கு நல்ல குரலும் சங்கீதமும் இருக்கு. கான் சாஹிப்புக்கு யார் இருக்காங்க சொல்லுங்க. என் மகன் போல நிறைய பேர் கத்துக்கறாங்க ஆனா அவங்கெல்லாம் வேற மனுஷங்க. உங்க மகன்தான் கான் சாஹிப் கான்தான் சேர்ந்தவன். அவர் தம்பி ரெண்டு பேருக்கும் பாட்டு வராது. அவர் ஒரே மகனுக்கு பாட்டும் வராது அவனுக்கு அதுல ஆசையும் இல்லை. ஊர் சுத்தறதும் கிர்கெட் ஆடறதும்தான் அவனோட ஆசையே. இப்படி இருக்க உங்க மகன் பாடற சங்கீதம் வழியாலதானே அந்த கான்தான், அந்த கரானா நிலைச்சு நிக்கும்? எதுவும் சந்தேகப்படாதீங்க. கான் சாஹேப்புக்கு இவன் எவ்வளவு நல்லா பாடறான்னு தெரியும். அவர் நிச்சயமா இவன ஷாகிர்த்தா ஏத்துப்பாரு.”
அன்றைக்கு முழுவது எல்லோரிடமும் நான்தான் கான் சாஹிப்பின் கரானவின் வாரிசு என்று அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.
“கியா பாய். பஹுத் குஷி மே ஹை” என்று கேட்டுக்கொண்டே என் முன்னால் ஜோசப் உட்கார்ந்தான். அவன் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பீ.டி. மாஸ்டராக இருந்தவன். எனக்கு நண்பன்.
“நீயும் ரொம்ப குஷியா இருக்க போல இருக்கு?”
“ஆமாம். என் பெண் ஆஸ்திரேலியா எமிக்ரேட் ஆனது உனக்கு தெரியுமே. இப்போ அவ என்ன ஆஸ்திரேலியாவுக்கு வான்னும் சொல்லி கூப்பிட்டிருக்கா. பேரக் குழந்தைய இன்னும் பாக்கல. இப்போ பெண்ணையும் பேரனையும் பாக்க போறேன்ற குஷிதான்”
“அரே வா. கியா அச்சா கபர் சுனாய. போய் ஆஸ்ட்ரேலியவ நல்லா சுத்தி பாத்துட்டு வா”
“தூ பீ ஆ சாத் மே”
நான் உரக்க சிரித்தேன், “ஏதோ யார்கிட்டயும் எதுவும் கேட்காம ஜிந்தகிய நடத்திக்கிட்டிருக்கேன். அதுக்கே மூச்சு முட்டுது இதுல ஆஸ்ட்ரேலிய வேறயா”
“பணத்துக்கு ஒரு குறைச்சலும் இருக்காது. இவன் கான் சாப் ஷாகிர்த் ஆயிட்டான்னா எல்லோரும் இவன கூப்பிடுவாங்க. ரேடியோல பாடுவான். டீவீல வருவான். பேப்பர்ல இவன் பேர் வரும். நானும் என் வெள்ளை அடிக்கற வேலைய விட்டுவிட்டு இவனுக்கு மேனேஜராயிடுவேன்” அப்பா ஆகாய கோட்டைகளை கட்டிக்கொண்டிருந்தார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் கான் சாப்பிடமிருந்து அழைப்பு வரவில்லை. அப்பா அடிக்கடி அவரை சந்திக்கச் செல்வார். ஒரு நாள் கோவத்தில் கான் சாப் “ஜப் ஹோனா மை புலாத்தும்” என்று கத்தினார். பிறகு அப்பா அங்கு அடிகடிப் போவதை நிறுத்தினார்.
ஆனால் தினமும் ரியாஜ் செய்தேன், ஷாகிர்துகளுக்கு சொல்லிக் கொடுக்கும்பொழுதும் கேட்டுக்கொண்டிருப்பேனே, அதை ஹோம் வர்க் முடிந்த பின் பாடிப் பார்ப்பேன். இப்படித்தான் இசை என்னுள் இறங்கியது.
“கயா ஸோச் மே கோ கயா?” ஜோசப் கேட்டான்
“ஒண்ணுமில்ல. நீ ஆஸ்திரேலியா எப்போ போற?”
பத்து நிமிடம் பேசிவிட்டு எழுந்து சென்றான். மழை இன்னும் விடவில்லை. எனக்கு வீட்டிற்கு போக மனமில்லை. இன்னொரு சாய் சொல்லிவிட்டு “கா கருன் சஜனி ஆயேன பாலம்” என்ற தும்ரி பாட ஆரம்பித்தேன். இந்த தும்ரி ‘ஸ்வாமி’ என்ற படத்தில் ஜேசுதாஸ் பாடி மிக பிரபலமானது. ஆனால் அதற்கு முன் படே குலாம் அலி கான் சாப் இதை பிரபலப்படுத்தியிருந்தார். பெரியப்பா இதை அருமையாக பாடுவார். நான் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு கற்றுக்கொண்ட பாடலில் இதுவும் ஒன்று.
“அரே வா. கியா கானா ஹை, வா வா” என்றான் பக்கத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன்.
ஆனால் இதே பாடலை அப்பா விரும்பிக்கேட்ட பொழுது பாட மறுத்துவிட்டேன். அவர் மரணப்படுக்கையில் இருந்தார். “ஏக் பார் கா” என்று மன்றாடினார். நான் என் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்கவில்லை. அம்மி ஜான் எவ்வளவோ கெஞ்சினாள். நான் “நஹி” என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டேன். திரும்பி வந்த பொழுது அப்பா மரணமடைந்திருந்தார். ஒரு மாதத்துக்குள் அம்மி ஜானும் உயிர் துறந்தார். அந்த ஒரு மாசமும் என்னுடன் பேசவில்லை. நானும் படிப்பை விட்டுவிட்டு சுண்ணாம்பு அடிப்பதை வேலையாக கொண்டேன். நிகாஹ் செய்துக்கொள்ளவில்லை. பத்து வருடங்கள் பாடவே இல்லை. ஒரு நாள் திடீரென்று எதற்காகவோ அப்பாவின் குரல் என் காதில் ஒலிக்க, ‘கா பேட்டா. ஏக் பார் கா’ என்று அது கூற, நான் பாட ஆரம்பித்தேன். இப்பொழுது என்னால் பாடாமல் இருக்கமுடியவில்லை. என் வாழ்கை இப்பொழுது வெறும் பாடலாகிவிட்டது.
மழையின் தீவிரம் சற்று குறைந்தது. யாரோ ஒருவன் டிவிஎஸ் மொபெடில் சென்றுக்கொண்டிருந்தான். இந்த டிவிஎஸ் மொபெட் எனக்கு வாங்கிக்கொடுப்பதாக அப்பா உறுதியளித்திருந்தார். அப்பொழுது எனக்கு நூறு ருபாய் பரிசு கிடைத்திருந்தது. ஒரு போட்டியில் நான் முதல் பரிசை வென்றேன். நூறு ருபாய் கொடுத்தது மட்டுமல்லாமல், என்னை ஒரு கச்சேரிக்கு புக் செய்து நூறு ருபாய் அட்வான்ஸ்ஸாக அந்த நிகழ்ச்சி நடத்துபவர் கொடுத்தார்.
அடுத்த நாள் நானும் அப்பாவும் குல்கர்னி அவர்களிடம் இந்த செய்தியை கூற சென்றிருந்தோம். அவருக்கு ஒரே மகிழ்ச்சி. அவர் வீட்டில் உறவுக்கார்கள் வந்து இறங்கியிருந்தார்கள். குல்கர்னி அவர்களிடம் என்னை பற்றி கூறிவிட்டு, “பேடா ஏக் கானா காவ்” என்றார். நான் ‘“கா கருன் சஜனி ஆயேன பாலம்” பாடினேன். பாடி முடித்தவுடன் குல்கர்னியும் அவர் உறவினரும், ‘வா வா பஹுத் கூப்” என்றார்கள். சந்தீப், “தூ கான் சாப் ஜெய்ஸா காரா ரே” என்றான். “நான் இவனுடைய வெற்றி பற்றி கான் சாப் கிட்ட சொல்றேன். அவர் இவனுக்கு அவரோட ஆசிய கொடுக்கட்டும்”
அப்பொழுது பெரியப்பா ஆசியை மட்டும் கொடுக்கும் நிலையில் இருந்தார். திடீரென்று கான்செர் தாக்கி அவரை எலும்பும் தோலுமாக ஆக்கிவிட்டது. அவருக்கு பேசுவதே கஷ்டமாக இருந்தது. அவரைப் பார்த்துவிட்டு வரும்பொழுதெல்லாம் அப்பா கண்ணீர் விடுவார், “கைஸா தா ஆத்மி கைஸா ஹோ கயா” என்று புலம்பிக்கொண்டிருப்பார்.
இரண்டு நாட்கள் கழித்து குல்கர்னி வீட்டிற்கே வந்துவிட்டார். பரபப்பாக அப்பாவிடம் , “வாங்க வாங்க. கான் சாஹேப் வீட்டுக்கு போகலாம். நேத்து அவர்கிட்டையும் அவர் பீபீகிட்டயும் உங்க மகன் முதல் பரிசை வென்றதை பற்றியும், அவனுக்கு கச்சேரி பண்ண சான்ஸ் கிடைத்தது பற்றியும் சொன்னேன். அதுனால அவர் கரானா தழைக்கும்ன்னு சொன்னேன். இன்னைக்கு அவர பார்க்க போயிருந்தேன். உங்க ரெண்டு பேரையும் அழைத்துகொண்டு வர சொன்னார். கிளம்புங்க” அப்பாவுக்கு குஷி தாங்கவில்லை. “பெரியப்பா உன்னை அவர் ஷாகிர்த்தா அறிவிக்க போறாரு” என்றார்.
அவர் வீட்டிக்குள் நுழைந்தவுடன் என் பெரியம்மாவையும் அவர் மகனையும் மற்றும் காதர்ரையும் பார்த்தேன். அவர்கள் முகத்தில் ஏதோ சாதித்துவிட்ட திருப்தி இருந்தது. எனக்கு என்ன நடக்க போகிறது என்று புரிந்துவிட்டது. உடனே எனக்கு வெளியே ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. “மை நஹி ஆத்தும்” என்று சொல்லிவிட்டு வெளியே போக பார்த்தேன். அப்பா என் கையை பிடித்து நிறுத்தினார். “கஹான் ஜாரா. அந்தர் சல்” என்றார். நான் அங்கிருந்து ஓட பார்த்தேன். ஆனால் அப்பா விடவில்லை. வேண்டா வெறுப்பாக மெதுவாக பெரியப்பா படுத்திருந்த அறைக்குள் சென்றேன்.
பெரியப்பா தூங்கிக்கொண்டிருதார் போல இருந்தது. குல்கர்னி பெரியம்மாவிடம், “கான் சாப் தூங்கறார். நாங்க அப்புறம் வருகிறோம் என்றார். பெரியம்மாவோ “நக்கோ நக்கோ. டஹரோ” என்று சொல்லிவிட்டு பெரியப்பாவை உலுக்கினார். “யார் வந்திருக்காங்க பாருங்க” என்றார்.
கஷ்டப்பட்டு கண் திறந்து பார்த்தார் பெரியப்பா. அவருக்கு முதலில் ஒன்றும் புரிபடவில்லை. பிறகு எங்களை பார்த்து, “ஆயா கியா? இதர் ஆ” என்று அவர் பக்கத்தில் வர சொன்னார். அப்பா என்னை முன்னே தள்ளி விட்டார்.
பெரியப்பா பேசுவதற்கு ரொம்ப மேஹனத் செய்ய வேண்டி இருந்தது. சிங்கம் போல் கர்ஜித்த குரல் இப்பொழுது எழ மறுத்தது. ரொம்ப சன்னமான குரலில், “நீ என்னைப் போல் பாடுகிறாய் என்று குல்கர்னி சொன்னார். நீ படிக்கட்டுல உட்கார்ந்து என் பாட்ட கேட்டு கத்துகிட்டன்னு சொன்னார். அப்போ நான்தான் உன் உஸ்தாத் இல்லையா?” என்று கேட்டுவிட்டு கண்களால் கேள்வி எழுப்பினார்.
“ஆவ். நீங்க தான் அவனடோ உஸ்தாத்” என்றார் அப்பா.
என்னை பார்த்து புருவத்தை உயர்த்தினார் பெரியப்பா.
ஆம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.
“படே குலம் அலி சாப் இங்க வரும்போதெல்லாம் அவர் கிட்ட நான் பாட்டு கத்துப்பேன். அவர் என்ன ஒரு மகன் போல தான் பார்த்தார். ஒரு முறை..”
“ஜோ பூச்னா ஹை வோ பூச்சோ. உங்க பழைய கதையெல்லாம் அப்புறம் சொல்லலாம்” பெரியம்மா சீறினாள்.
“அச்சா. அச்சா.” என்று சொல்லிவிட்டு, என்னை பார்த்து, “இங்க எல்லாரும் அவங்க உஸ்தாதுக்கு குரு தக்ஷின தருவாங்க. குரு தக்ஷின தெரியுமா உனக்கு?”
நான் மெளனமாக இருந்தேன்.
“தெரியுமா?” என்று மறுபடியும் பெரியப்பா கேட்டார்.
எல்லோர் கண்களும் என் மேல் பதிந்திருந்தன. பெரியம்மாவின் கண்ணில் அளவில்லா கோபம் இருந்தது. அவர் மகனும், காதரும்என்னை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. அப்பா குரலை உயர்த்தி, “மாலும் ஹை போல்னா” என்றார். நான் மெதுவாக எனக்கு தெரியும் என்று தலையாட்டினேன்.
தூக்க முடியாமல் மெதுவாக வலது கரத்தை தூக்கி, “கசம் கா. எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு…”
வெளியில் மழை வலுத்தது. நான் தோடி ராக் பாட ஆரம்பித்தேன். சர்வர் கொண்டு வைத்த சாயை நான் தொடவில்லை.
3 comments