தங்கள் மன்னரிடம் சென்று
நாங்கள் பட்டினி கிடக்கிறோம்
என்றன புலிகள்.
15 பகல்கள் மற்றும்
16 இரவுகள்
ஒருகவளம் கூட இல்லை
சாப்பிட
அஜாமிலனின் புதுக்காவல் நாய்
எங்களை கண்டுபிடித்து விடுகிறது
எப்படியோ
விரட்டுகிறது காததூரத்தில்
‘அப்படியா, அதிர்ச்சியான செய்தி!
ஏன் முன்பே சொல்லவில்லை
என்னிடம்?
தயாராகுங்கள் விருந்துக்கு.
அந்த காவல்நாய்க்கு
ஞாபகம் இருக்கும்படி
பாடம் கற்பிக்கிறேன் நான்’
-என்றார் புலிராஜா.
அப்படியே ஆகட்டும்
என்றன புலிகள்
’’கவனமாக,’
என்று ராணி சொல்வதற்குள்
விடியும் முன்னரே
தனியாக புறப்பட்டுச்சென்ற
புலிராஜா
ஒரு மணி நேரத்தில்
திரும்பி வந்தார்,
கண்களைச்சுற்றிலும் இரத்தக்கட்டு
வாலில் ஊஞ்சல் கட்டு
திட்டமிட்டு விட்டேன் நான் எல்லாவற்றையும்,
ஒவ்வொரு அசைவையும்.
நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்
தாக்குதலை நடத்துகிறேன் நான்
முன் நின்று
பார்த்துவிடுவோம் அந்தப்பயலை ஒருகை !
என்றார் ராஜா
காவல்நாயின் வேகமோ
மின்னலைப்போல
ஒரே சமயத்தில் இருந்தது
51 இடங்களிலும்
50 புலிகள் மற்றும் புலி ராஜா
அவர்களுக்கு எந்த வாய்ப்பும் தராமல்
ஒரு ஆட்டைக்கூட அவர்கள் தொடும்முன்
சுற்றி வளைத்தது எல்லோரையும்
51 புலிகளையும் விரட்டிப்பிடித்த காவல் நாய்
போர்க்கைதிகளாக
கயிற்றால் பிடித்துக்கட்டியபின்
வீசிற்று அஜாமிலின் முன்
பெரிய பொதி போல
சற்றே களைப்புடன்
உடைந்த பல்லை துப்பியபடி
’நீ வைத்திருக்கும் நாய்
அருமையானது அஜாமிலன்
என்றார் ராஜா.
விஷயம் என்னவென்றால்
சிறு குழப்பம் அவ்வளவுதான்
உன் ஆடுகளை எல்லாம்
ஒன்றுவிடாமல் சாப்பிட்டிருப்போம்
ஆனால்
அவைகளை பயமுறுத்த விரும்பவில்லை நாங்கள்
என்ன செய்கிறோம் என்பதல்ல
எப்படிச்செய்கிறோம் என்பதுதானே முக்கியம்
உன்னை ஒரு நண்பானாக மட்டும் பார்க்க வந்தோம்
என்பதே உண்மை’
உன் காவல்நாய்
வாழ்நாளின் வாக்குதவறாத உத்தமன்
சின்ன விஷயத்துக்குப்போய்
இப்படிச்செய்துவிட்டான் பாவம்
-என்று பயந்து சொன்னார் புலிராஜா.
அஜாமிலனோ தேர்ந்த நிர்வாகி
புலியின் கண்களை பார்க்கவே இல்லை
ஆனால் அது சொல்வதையெல்லாம்
நம்புவதாய் நடித்தான்
எல்லாப் பொய்களையும்
ஏற்றுக்கொண்ட்தாய் பாவித்து
கட்டுகளை விடுவித்து
அவைகளை இருக்கும்படி சொன்னான்
இரவு உணவுக்கு.
புலிகளால் மறுக்க முடியவில்லை
ஆட்டுக்குழம்பு, ஆட்டுகறி வறுவல்
உணவுக்குப்பின்
நாம் ஒரு நெடுங்கால நண்பர் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டால் என்ன
-என்றான் அஜாமிலன்.
கர்ஜித்து உறுமின புலிகள்
அருமையான விஷயம்
நாங்கள் நினைத்ததும் அதுவே
நண்பர்களாய் இருப்போம் வாழ்நாள் முழுதும்
என்றன புலிகள்,
சாப்பிட்ட முள்கரண்டியை
கீழே வைத்தபடி.
புலிகளுடன்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான்
அஜாமிலன்
அன்புளிப்பாக ஆடுகள்,
தோல் ஆடைகள்
மற்றும் கம்பளிப்பந்துகள்
அளித்து வழியனுப்பினான்.
அஜாமிலன் ஒன்றும் முட்டாள் அல்ல
அவனுக்குத்தெரிந்த
எல்லா நல்ல மேய்ப்பர்களையும் போல
அவனும் அறிவான்
சிலசயம்
புலிகளுக்கும்
விருந்தளிக்க வேண்டும்
என்பதை.
விலாபுடைக்க உண்ட
புலிகளும் ஆடுகளும்
நட்புணர்வுடன்
ஒரே துறையில் நீர் அருந்துகையில்
அவன்
நாள் முழுக்கவும்
குழல் இசைக்கலாம்
=====
அருண் கொலாட்கரின் Ajamila and the Tigers என்ற கவிதை தமிழாக்கம்
ஒளிப்பட உதவி – hippyshopper.com