மாயநதி – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

செங்குந்தான பசுங்கோபுரங்களாய் பூமி உயர்ந்திருக்க, இடையே குளிர்வான நல்லதங்காள் ஓடை சுழித்து நெளித்து நகர்ந்தது. ஓடையின் வழித்தடமெங்கும் பெரிதும் சிறிதுமான கூழாங்கற்கள் நிறைந்து கிடந்தன. காற்று நீரை தொட்டுக் கொண்ட சிலிர்ப்பில் கிறங்கி தவழ்ந்தது. கரையோரமாக ஒதுங்கிக் கிடந்த கூழாங்கல் பாறையொன்றில் அமர்ந்து கால்களை நீரில் நனைத்திருந்தோம்.

”ஆயுசு முழுக்கவும் எங்கூடவே இருப்பியா…” உள்ளத்தில் வழிந்து கிடந்த அன்பை முடிந்தவரை கேள்வியில் இழைய விட்டேன். குரல் அதுவாகவே நெகிழ்ந்து குழைந்தது.

”அப்றம்… இருக்கதானே வேணும்…”

”அப்டீன்னா இதை நிர்பந்தம்னு எடுத்துக்கவா…” என்னால் ஏமாற்றத்தை மறைக்க இயலவில்லை.

”நிர்பந்தமில்ல… அவசியம்…”

”அவசியம்ன்னா… கட்டாயமா…?” குரலில் கடுமை இருந்திருக்கலாம்.

”கட்டாயந்தான்… ஆனா மத்தவங்களோடதில்ல… என்னோடது… எம் மனசோடது… அதுதான் என்னை உங்கூட இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துது… அன்புதான் நிர்பந்தம்… மனசை தவிர்க்க முடியுமா… இப்ப மனசுன்னு சொன்னது உன்னை…”

நெக்குருகிப் போனேன். அவளிடம் நெருங்கி அமர்ந்தேன்.

நான் எழுந்த வேகத்தில் காலுக்கடியில் பதுங்கிக் கிடந்த கூழாங்கல் லேசாக சறுக்கி விட, ”ஏய்… பாத்து…” என்றாள் சங்கீதா.

”ஏய்… பாத்து…” குளிர்ந்தக் காற்றைவிட சில்லிப்பானக் குரலில் அவள் சொன்னதையே திருப்பி சொன்னேன்… தலையை உயர்த்தி சிரித்தாள். அவளை இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொண்டேன். அவளும் தோளை வளைத்துக் கொண்டாள். அப்படியே கரையோரமாக நடந்துச் செல்வது எங்களுக்கு பிடிக்கும். ஓடையும் கூடவே நெளிந்தோடி வந்தது. ஓடை நதியோடு கலக்கும் முகத்துவாரப் பகுதி அது. நதியை நெருங்க நெருங்க அதன் தவிப்பையும் துடிப்பையும் என்னால் உணர முடிந்தது. சங்கீதாவும் இதையே நினைத்திருக்கிறாள்… ஆனால் வேறு விதமாக.

“இந்த சின்ன ஓடைய அந்த பெரிய நதி எவ்ளோ பெருந்தன்மையோட ஏத்துக்குது பாரேன்…” என்றாள்.

”இல்ல… அப்டியில்ல… நல்லா பாரு… தன்னோட அடையாளத்தை சிதைச்சிக்க முடியாம ஓடை நதியில விழுந்து தற்கொலை பண்ணிக்குது…”

”ஏ லுாசு… அது ஏன் தற்கொலை பண்ணிக்கணும்… இந்த நதிக்கு எவ்ளோ பேரும் புகழுமிருக்கு… ஆனா இந்த ஓடைக்கு என்ன பேரு…?”

”நல்லத்தங்கா ஓடை…”

”செரி… அது யாருக்கு தெரியும்…”

”ஏன்… ஓடைக்கு தெரியுமே…”

ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்தோம். அவள் சொல்வதை என்னால் ஏற்க முடியாது. நதியோடு கலப்பதால் ஓடையின் அடையாளம் சிதைந்து விடும். பிறகு நதியின் பெயரை முதுகில் சுமந்துக் கொண்டு கடல் வரை செல்ல வேண்டும். விருப்பமில்லை என்றாலும். நீருக்குள் அழுதால் யாருக்கு தெரியப் போகிறது…? நிலத்தில் அழுத என் கண்ணீரையே அம்மாவால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் கல்யாணம் பண்ணி வைக்க போகிறாளாம். அதற்குதான் ஊரிலிருந்து வந்திருக்கிறாள்.

”ஏய்… அழுவுறியா…?”

”இல்ல…”

”இல்ல… அழுவுற… தண்ணீக்குள்ள நின்னுக்கிட்டு அழுதா எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா…?”

சங்கீதாவுக்கு என்னை உணர முடிந்ததை நினைத்து மீண்டும் அழுகை வந்தது. நீருக்குள் இறங்கி வந்து என்னை தோளோடு அணைத்துக் கொண்டாள். அவளின் கைகள் என்னை தழுவிக் கொள்ளும் தருணத்துக்காக எவ்வளவு வேண்டுமானாலும் அழலாம். முரட்டுத்தனமான வலு நிறைந்த, ஒதுக்கி தள்ளவியலாத கைகள் அல்ல அவளுடையவை. அவளுடைய கைகள் மென்மையானவை. என் விருப்பத்தை பொருட்படுத்துபவை.

இன்று காலையில் கூட அப்படிதான். விழிப்பு வந்த பிறகும் அவளுக்காகவே துாங்குவது போல கண்களை மூடிக் கிடந்தேன்.

“ச்சீ… கழுத வயசாவுது… இப்பிடியா துாங்குவ எச்சி வுட்டுக்கிட்டு…” என்றாள்.

காதில் விழாதது போல அப்படியே கிடந்தேன்.

“ஏ கழுத… நடிக்கிறியா… எந்திரி எந்திரி…” முதுகைத் தட்டினாள். உடலை குறுக்கி கால்களை குவித்து கைகளை மடக்கி பக்கவாட்டில் திரும்பி படுத்தேன்.

“ஏன் இப்டி கெடக்க… குளுவுருதா…” தலையணையை நோகாமல் உருவினாள்.

“ம்ம்ம்…“

”படவா… வெயிலு சுள்ளுங்குது… குளுவுருதாம் குளுவுரு… எந்திரி… மொதல்ல…”

”முடியாது… நா எந்திரிச்சா நீ என்ன வுட்டுட்டு போயிடுவே…”

”அப்றம்… எரும வயிசில ஒன்ன துாக்கி கொஞ்ச சொல்றியா…“

”ம்ம்… என்ன கொஞ்சாம யாரை கொஞ்சுவே…”

இங்கிதமேயின்றி யாரோ கதவைத் தட்டினார்கள் பொன்னித்தாயிதான். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். பொன்னித்தாயி ஏதோ ஒரு வழியில் எனக்கு அத்தை முறையாக வேண்டும். எனக்கு சமைத்துப் போடுவதற்காக அம்மா இவளை நியமித்திருந்தாள்.

”நேத்து ரவைக்கு வச்ச சோறு அப்டியே கெடக்கே தம்பீ…” அவள் பயந்துக் கொண்டே பேசியது எனக்கு எரிச்சலை கிளப்பியது. ‘நான் என்னா புலியா… சிங்கமா… ‘

“எனக்கு கண்ணிருக்கில்ல… பாக்க முடியுமில்ல…”

“அதுக்கில்ல தம்பி… இருக்குன்னு சொன்னேன்…”

”அதுக்கென்ன இப்ப…?” கதவு வழியாக உள்ளே வந்த வெளிச்சம் கண்களை கூச வைத்தது. வண்ணங்கள் ஓடுவதும் மறைவதுமாக இருந்தன. தலை அபாரமாக கனத்தது. இந்த நேரம் பார்த்து சங்கீதாவை காணவில்லை.

”இட்லி சூடாருக்கு… எடுத்தாருட்டுமா…?” தயக்கமாக கேட்டாள். எதுக்கு தயக்கம்… எல்லாம் நடிப்பு… வானம் வரைக்கும் உயரமும் வீடு அளவுக்கு அகலமும் கொண்ட ராட்சசி… ராட்சசி. சங்கீதாவை தவிர உலகம் முழுக்க எல்லாருக்குமே இதே உருவம்தான். முன்பெல்லாம் அம்மாவும் சங்கீதாவை போல சாதாரண உருவத்தில்தான் இருந்தாள். அலுவலகம் முடித்து வரும் அவளிடம் போய் ஒண்டிக் கொள்ளலாம். புதைந்துக் கொள்ளலாம். புதைத்துக் கொள்ளலாம்… “நம்பூருக்கே போயிடலாம்… இல்லேன்னா நீ வேலக்கு போவாத…“ என்று என் பயத்தைக்கூட சொல்லலாம். ஆனாலும் என்னால் சொல்ல முடியாது. எதிர்வீட்டு அண்ணன் தன் பெரிய கைகளால் அறைந்து அம்மாவை கொன்று விடுவான்.

”இட்லி சூடாருக்கு தம்பீ….” அருகே வந்தாள்.

”அதான் சொல்லீட்டீங்களே…” இதை பயந்துக் கொண்டேதான் சொன்னேன். பொன்னித்தாயிக்கும் எதிர் வீட்டு அண்ணனைப் போல விரிந்த விசிறி போன்ற கைகள். விசிறியை அப்படியே குவித்து தொடையின் சதையை அள்ளுவான். வலி உயிர் போய் விடும். அதேசமயம் அம்மாவிடம் அதிகமான பணிவுக் காட்டுவான். எல்லாமே பொய். பொன்னித்தாயி காட்டும் பணிவைப் போல. தலைவலி தாங்க முடியவில்லை.

”அம்மா இன்னும் செத்த நேரத்தில வந்துடுவாங்க தம்பி…”

”எல்லாந் தெரியும்… நீங்க போங்க…” வெளியே அனுப்பி கதவை மூடிக் கொண்டேன்.

அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சென்னையை விடவில்லை தினேஷின் குடும்பத்தோடு அங்கேயே தங்கி விட்டாள். அவ்வப்போது என்னை பார்க்க கிராமத்துக்கு வருவாள். வரும்போதெல்லாம் அழுவாள். அப்பா இறந்ததிலிருந்தே தன்னுடைய வாழ்க்கை அழுகையாகவே மாறி விட்டதாக புலம்புவாள். அப்பா இறந்தபோது நான் ஒன்றாம் வகுப்பில் இருந்தேனாம். தினேஷ் ஐந்தாம் வகுப்பிலிருந்திருப்பான். பிறகு அப்பாவுடைய வேலை அம்மாவுக்கு கிடைத்தது. அதுதான் பிரச்சனையே. அதற்காகதான் சென்னைக்கு போக வேண்டியிருந்தது. நானும் தினேஷும் அம்மாவும் சென்னையில் ஒரு அடுக்ககத்தில் குடியேறினோம்.

மூன்றரைக்கே முடிந்து விடும் ஆங்கிலப் பள்ளியொன்றில் சேர்த்து விட்டிருந்தாள் அம்மா. அவள் திரும்புவதற்கு எப்படியும் ஆறரையாகி விடும். தினேஷுக்கு நிறைய நண்பர்கள்… விளையாடுவதற்கு… விளையாடுவதற்கு… பிறகும் விளையாடுவதற்கு… ஆட்டோவிலிருந்து இறங்கியதுமே விளையாட ஓடி விடுவான். நான் கூடவே ஓடுவேன். ஆனால் அவர்களின் விளையாட்டில் நான் எப்போதும் “ஒப்புக்குச் சப்பாணி…“.தான். நான் தொட்டால் அவுட் இல்லையாம். நான் அடித்தால் ரன் இல்லையாம். நான் பிடித்தால் அது கேட்ச் இல்லையாம். தினேஷும் இதற்கு உடந்தை. எனக்கு அவர்களோடு விளையாடவே பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்து விடுவேன்… எதிர் வீட்டு அண்ணன் முதலில் நன்றாகதான் பழகினான் கொஞ்சநாள் கழித்த பிறகு அவன் வேறு ஆளாக மாறிப் போனான். உடம்பெல்லாம் வலி பின்னியெடுத்து விடும்.

வெளியே ஆட்டோ சத்தம் கேட்டது. அம்மா வந்து விட்டாள். அம்மாவும் பிடிவாதக்காரிதான். சங்கீதா இருக்கப்ப எதுக்கு இன்னோரு கல்யாணம்…? எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா அவளோட பாரம் கொறையுமாம்… நான் பாரமா…? சங்கீதாவுக்கு நான் பாரமில்ல… அப்டியே இருந்தாலும் அவளால என்னை சுமக்க முடியும்.

”தலை வலிக்குதுன்னு சொன்னீல்ல… வா… புடுச்சி வுடுறேன்…” அறைக்குள்ளிருந்து அழைத்தாள் சங்கீதா.

அவள் மடியில் மல்லாந்து படுத்துக் கொண்டேன்.

ஜன்னல் வழியே அம்மா எட்டிப் பார்த்தாள். ”சுதாகரு…” என்றாள். பயணத்தில் களைத்திருந்தாள். கதவை திறந்துக் கொண்டு அம்மாவிடம் செல்லத் தோன்றியது. ஆனால் தலை வலித்தது. அம்மாவுக்கு சங்கீதாவை போல அத்தனை இதமாக பிடித்து விடத் தெரியாது. என்னருகில் அமர்ந்து பேசத் தெரியாது. கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.

விடுமுறை நாட்களில் என்றாவது ஒருநாள் அம்மா என்னை குளிக்க வைப்பாள். அப்போது ஐந்தாவது படித்திருக்கலாம். சுருள்சுருளான மின்சார நீர் சுடேற்றியை சில்வர் அண்டாவிலிருந்து எடுத்து விட்டு, கொஞ்சம் போல அதில் குளிர் நீரை சேர்ப்பாள். தலையில் நீரை அள்ளி ஊற்றும் போது முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொள்வேன். இரு கை முட்டிகளிலிருந்தும் நீர் வடியும். உடலெங்கும் சோப்பை தடவி அழுத்தி தேய்ப்பாள். வலியில் உயிர் போய் விடும். கடைசியான அண்டா நீரை மேலிருந்து கவிழ்ப்பாள். சுடுநீர் டிரவுசருக்குள் தீயாக கொதிக்கும்.

”ஏன்டா… பயலே… பெரியவனாயிட்டீயாக்கும்…” அம்மா டவுசரை நிமிண்டி சிரிக்கும்போது தினேஷும் கூடவே சிரித்தான். கோபமாக வந்தது. இவனால்தான் எல்லாம். அம்மா வரும் வரைக்கும் விளையாடி கொண்டேதான் இருக்க வேண்டுமா…?

”இனிம நானே குளிச்சிக்கிறேன்…“ என்றேன் கோபமாக.

சங்கீதாவின் கைகளுக்குக் கூட அழுத்தம் போதவில்லையா… தெரியவில்லை. அத்தனை வலித்தது. மூடியிருந்த கண்களுக்குள் வெளிச்சம் ஊர்ந்தது. திறந்திருக்கிறேனா… மூடியிருக்கிறேனா என்ற சந்தேகத்தில் இமைகளை பிரித்தேன். அம்மா அங்கேயே நின்றிருந்தாள். அவசரம்… எதற்கெடுத்தாலும் அவசரப்படும் அவளால் எப்படி ஒரே இடத்தில் நிற்க முடிகிறது. அழுது கொண்டிருந்தாள். கண்களை இறுக்க மூடிக் கொண்டேன். எத்தனை முறை அழுதாலும் அடம் பிடித்தாலும் அவன் விடுவதில்லை.

”தலவலி போயிடுச்சா…” என்றாள் சங்கீதா.

”இன்னும் இல்ல… ரொம்ப வலிக்குது… ஓடைக்கு போலாமா…?”

”குளிக்கப் போறியா…?”

”ம்ஹும்…”

”அய்யே… எத்தன நாளாச்சு… நாறப் போவுது… அம்மா வேற வந்துருக்காங்க…”

”பரவால்ல…” என்றேன்.

அங்கிருந்த கூழாங்கல் பாறையில் அமர்ந்துக் கொண்டோம். என் வலது காதை மென்மையாகக் கடித்து ”தலவலி நின்னுடுச்சா…” அவள் கேட்ட தருணத்தில் தலைவலி நின்றிருந்தது.

”ஒங்கம்மாவ பாத்தா பாவமாருக்கு… வயசான காலத்தில அங்கிட்டும் இங்கிட்டுமா அலையிறாக…”

”பாவம்தான்…” என்றேன்.

தாழ்ந்த கிளையில் ஊறிக் கொண்டிருந்த செவ்வெறும்பு கை வழியே என் முகத்தில் ஏறியது. பிறகு அடர்ந்த தலை மயிருக்குள்ளும் தாடி மயிருக்குள்ளும் புகுந்து கொண்டது. சங்கீதா தட்டி விட சொன்னாள்.

”ஆனா அவங்களுக்கு என்ன விட பாலாஜியதான் புடிக்கும்… அவனுக்கு ஆறாங்கிளாசுலயே கைல கட்றதுக்கு வாச்சு வாங்கிக் குடுத்தாங்க…”

”ஏய்… ஒனக்குந்தானே வாங்கிக் குடுத்தாங்க…”

”குடுத்தாங்க… ஆனா லேட்டு… அவனுக்கு பத்தாங்கிளாசு முடிச்சோன்ன வண்டி வாங்கி குடுத்தாங்க… அப்றம் கல்யாணமெல்லாம் பண்ணி வச்சாங்க…”

”ஒனக்குந்தானே கல்யாணம் ஆயிடுச்சு…”

”அவுங்களா பண்ணி வச்சாங்க…?”

”எதோ ஒண்ணு… கல்யாணம் ஆயிடுச்சுல்ல…”

”அப்றம் ஏன் என்ன திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க…?“

“ஒங்கம்மாட்ட சொல்லு ஒனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு…”

”அத ஏன் எங்கம்மாட்ட சொல்லுணும்…”

”அவங்கட்ட சொல்லாதுனாலதானே ஒனக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்க…”

”அய்யய்யோ… அப்ப நீ…” பதறினேன்.

அவளும் பயந்து போனாள்.

”என்ன மறந்துடாத… ப்ளீஸ்… என்ன மறந்துடாத…” அவள் கெஞ்சியதை பார்த்த போது ஐந்தாம் வகுப்பில் பக்கத்து பெஞ்சில் வெள்ளைக் கலர் சட்டையும் பச்சைக் கலர் பினஃபோர்மும் உடுத்திக் கொண்டிருக்கும் அவளின் பழைய தோற்றம் நினைவுக்கு வந்தது. அன்று டாக்டரிடமும் அதையேதான் சொன்னேன். “அப்டீன்னா ஒன் சங்கீதாவுக்கு இப்போ பத்து வயசா…?” என்றார் டாக்டர்.

”இல்ல டாக்டர்… நா பெருசானப்போ அவளும் பெருசாயிட்டா…” என்றேன்.

அவர் நம்பியதாக தெரியவில்லை.

”ஒனக்கென்ன பத்து வயசா… அந்த டாக்டர் சொல்றாரு…” என்றேன் சங்கீதாவிடம். இரட்டை சடையை பினஃபோர் மீது போட்டிருந்தாள்.

”அடச்சீ… பத்து வயசிலியா கல்யாணம் பண்ணிக்குவாங்க…”

”அதானே…”

அம்மாவுக்கு எப்போதும் புலம்பல்தான். ”கல்யாணம் ஆனா சரியா போயிடுவானா டாக்டர்… எனக்கு பிற்பாடு இவனுக்குன்னு யாருமே இல்ல…. அவங்கண்ணனை பக்கத்திலயே சேக்க மாட்டேங்கிறான்…” டாக்டரிடம் புலம்பினாள்.

”ஆயுசு முழுக்கவும் எங்கூடவே இருந்துடுவியா…”

”இப்பதானே கேட்ட… திரும்பவுமா…”

“பதில் சொல்லேன்… ப்ளீஸ்…”

”இருக்கேன். இருக்கேன்… இருக்கேன்… இருக்கதானே வேணும்… இது நிர்பந்தமுமில்ல… கட்டாயமுமில்ல… ஒனக்கு என்னை பிடிச்சிருக்கு… எனக்கு ஒன்னை புடிச்சிருக்கு… அவ்ளோதான்…”

அவளைக் கட்டிக் கொண்டேன். ஓடையிலிருந்து எம்பி குதித்த மீன்கள் எங்கள் மீது நீரை தெளித்தன. சங்கீதாவை மெல்ல விலக்கினேன்.

”அந்த நதியில வாழறதுக்கு மீனுக்கு இஷ்டமில்ல… அதான் கெடந்து குதிக்குது…” என்றேன்.

”ஆரம்பிச்சிட்டீயா… ஏன் சந்தோஷத்தில யாரும் துள்ளி குதிக்க மாட்டாங்களா…”

”எப்டி சொல்றே…?”

”வருத்தப்பட்டுச்சுன்னா அதோட துள்ளல்ல வேகமிருக்காது… குதிக்கும்போது கைல அம்புடுடும்… எங்க இதை புடிச்சுப் பாரு… இதை… இத… இத… இத…” மீன்கள் ஒவ்வொன்றாக தட்டிக் கொண்டுப் போனது.

சங்கீதாவுக்கு எல்லாமே தெரிந்திருந்தது.

லேசாக சாரல் மழை வீசியது தாழ தொங்கிய மரத்தின் கிளையை வளைத்து பிடித்துக் கொண்டு கால்களை நீரில் அளைய விட்டேன். இருவரும் அங்கிருந்த இலந்தை மரத்தடியில் உட்கார்ந்தோம். அதற்காகவே காத்திருந்தவள் போல சங்கீதா என் தொடையில் தலையை சரித்துக் கொண்டாள். அவளின் தலை மீது என் தலையை கவிழ்த்துக் கொண்டேன். சிறிது நேரம் அப்படியே இருந்தோம்.

”ஏய்… நான் ஒன்னை விட்டு எங்கயும் போ மாட்டேன் தெரியுமா…” சங்கீதா நான் கேட்காமலேயே இந்த ரகசியத்தை என் காதோடு காதாக சொன்னாள். என் கண்ணிலிருந்து நீர் வழிந்து அவள் கண்ணை நிறைத்தது. கையால் துடைத்தெடுத்தேன். இலந்தை மரம் அத்தனை அடர்வாக இல்லாததால் சாரல் அவள் நெற்றி்யை நனைத்திருந்தது.

”பசிக்குது…” என்றாள்.

கைக்கெட்டும் துாரத்தில் கிடந்த இலந்தைப்பழங்களை பொறுக்கி நீட்டினேன்.

”எ… பொறுக்கி… யான பசிக்கு சோள பொறி குடுக்கிறியா…” என்னை அடிக்க கையை ஓங்கினாள். நான் கோபித்துக் கொண்டது போல ஓடையின் மெல்லிய நீரோட்டத்தில் அலைந்தேன். எங்களுக்குள் செல்ல சண்டையும் சமாதானமும் என்றுமே அலுக்காதவை. அவள் கையில் அகப்பட்டுக் கொள்வதற்காக அங்கிருந்த கூழாங்கல்லில் அமர்ந்தேன். நீர் கூழாங்கல்லை தொட்டு அணைத்து நழுவி வளைந்தோடியது. கல்லின் கீழ்பகுதியில் பாசிப் படிந்திருந்தது. சூரியன் இந்த கல்லை விட பெரியவனாக இருக்கலாம். ஆனால் இந்த கல்லை சூடாக்க முடியாது. சூடாக வேண்டிய நிர்பந்தமும் அதற்கில்லை. ஏனெனில் சூரியனுடன் அதற்கு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை. அந்தண்ணனை எகிறி அடிக்கலாம்… ஓடி ஒளியலாம்… அல்லது அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் அம்மா இல்லாமல் இருக்க முடியாது. சங்கீதாவையும் கொன்று விடுவான். மேக்ஸ் மிஸ்ஸை கூட கொன்று விடுவான். வேண்டாம்… சொல்ல வேண்டாம். யாரிடமும் சொல்ல வேண்டாம். தலை வலித்தது.

”செரி போதும் வா… போலாம்… ஒனக்கு பசிக்குதுன்னு சொன்னீல்ல…”

வீட்டுக்கு திரும்பும்போது எதுவுமே பேச தோன்றவில்லை. மரங்களுக்கு நடுவே இருந்தது வீடு. வீட்டை சுற்றிலும் கூட உயிர்வேலிதான். அம்மா வாசற்படியில் அமர்ந்திருந்தாள். கூடவே பொன்னித்தாயியும் வேறு யாரோ ஒரு ஆளும். அம்மா எப்போதுமே தனியாள் கிடையாது. அப்பா இருக்கும்வரை அப்பா… பிறகு அண்ணன்… இப்போது பொன்னித்தாயி.

”எப்பவாச்சும் கோவிச்சுக்கிச்சுன்னா ஓடை பக்கம் ஒக்காந்துட்டு வருவாப்பல… மத்தப்படி ஆளுக்கு பெரச்சன இல்ல… வீடு… காடு… தோப்பு… காணியெல்லாம் இவனுக்குதான்… பெரியவன் ஒண்ணு கூட வேணானுட்டான்…” அம்மா அந்தாளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

”எங்கொழுந்தனோட மச்சாண்டான் இதங்காட்டி மோசம்… நம்ப சுதாகரு என்ன சட்டைய கிளிச்சுக்கிட்டா அலயுது…” பொன்னித்தாயி சொன்னதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை.

”அதுசரி… இங்கயே சொல்ற வெதத்தில சொல்லி வச்சி கூட்டியாந்துடுங்க… அங்க வச்சி பிரச்சனை ஆயிடாம பாத்துக்கிட்டா போதும்…” என்றார் அந்த ஆள். எனக்கு அந்த ஆளை பிடிக்கவில்லை. என்னை தவிர எந்த ஆண்களும் நல்லவர்களில்லை. அப்பா அக்கறையேயில்லாமல் சீக்கிரமாக செத்துப் போய் விட்டார். அண்ணன், அம்மாவை என்னிடமிருந்து பிரித்து விட்டான். எதிர்வீட்டு அண்ணனை நினைத்தாலே நடுங்குகிறது.

படலை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

எங்களை கண்டதும் அம்மா ஓட்டமும் நடையுமாக எழுந்து வந்தாள். ”அம்மா வந்திருக்கேன்னு தெரியுமில்ல… எங்கய்யா போனே… சாப்ட கூட இல்லையேப்பா…”

பலாப்பழவாசம் என்னை சுண்டி இழுத்தது. கொல்லைக் கதவையொட்டி இருக்கும் பலாமரத்தின் பழம்தான் இத்தனை சுண்டியிழுக்கும் வாசனையை கொண்டிருக்கும். நடுக்கொல்லையில் இரண்டு மரமுண்டு. ஆனால் அதன் வாசனையில் இத்தனை ஆழமிருக்காது. என் கணிப்பும் நினைப்பும் எப்போதுமே தவறாது. பலாச்சுளைகளை உருவி இருவரும் தின்ன ஆரம்பித்தோம்.

அம்மா பின்கட்டு வழியாக கொல்லைப்புறம் வந்திருந்தாள். சமைத்ததெல்லாம் அப்படியே கிடப்பதாக சொன்னாள். தானே சமைத்ததாக சொன்னாள். நிமிர்ந்து அவளை ஏறிட்டேன். குரலைப் போலவே முகமும் கனிந்திருந்தது.

”நீ சாப்டீயா…” என்றேன். முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டேன். வருத்தப்படும் மீன்கள் வலைக்குள் அகப்பட்டு கொள்ளும்.

“எஞ்செல்லம்…” என்றாள். கண்கள் கலங்கியது போலிருந்தது. உள்ளே வருவதற்காக எனக்கு வழி விட்டு விலகி நின்றாள்.

”சாப்பாடு எடுத்து வக்கிட்டுமா…”

”ம்ம்…” சங்கீதாவுக்கும் பசித்தது.

“கத்திரிக்கா வதக்கல் வக்கிட்டுமா…”

”ம்ம்…”

”சுதாகரு… தலமுடி பம்பையா கெடக்கு… வெட்டறதுக்கு ஆளு வர சொல்லுட்டுமா…”

”ம்ம்…”

”அப்டியே தாடியும் எடுத்துக்கலாம்ய்யா…”

தயிர் சாதம் கூட நல்ல ருசியிலிருந்தது.

”நாளக்கு ஒரு எடத்து போவுணும்… காலைல வெள்ளன கௌம்பணும்…”

”எங்க…”

நான் பயந்ததைப் போலவே “ஒனக்கு பொண்ணு பாக்கதான்…” என்றாள்.

”அதான் சங்கீதா இருக்குல்ல…”

”இருக்கு… இருக்குதான்…”

ஏன் இழுக்கிறாள்…?

”அந்த சங்கீதாக்குட்டி இந்த இருவது வருசத்தில் எங்கயிருக்காளோ… எவனுக்கு வாக்கப்பட்டிருக்காளோ…” பொன்னித்தாயிக்கு அம்மாவை கண்டால் தைரியம் வந்து விடும்… வாய் நீளும். கிண்டல் கூட செய்யும்.

”சும்மாரு பொன்னித்தாயி…” அதட்டினாள் அம்மா. பொன்னித்தாயை போல எதிர் வீட்டு அண்ணனை அதட்டவெல்லாம் முடியாது. கெஞ்சினாலும் அடிப்பான்.

”அது கெடந்துட்டு போவுது… நீ என்ன சொல்ற…” என்றாள் அம்மா.

”அதான் சங்கீதா இருக்குல்ல…”

”இருக்குதான்…” மீண்டும் இழுத்தாள்.

எச்சில்தட்டை எடுத்து போட்டு விட்டு என்னருகே வந்து அமர்ந்துக் கொண்டாள்.

”நீ சாப்டீயா…” என்றேன்.

கலங்கினாள்.

”எனக்கப்பறம் ஒன்ன யாருப்பா இப்டி கேப்பா…?”

”சங்கீதா…”

”சரி… சங்கீதாவ பாக்க போவோம்… நாளக்கு…”

“அவ இங்கதானே இருக்கா…“

”ம்மா… இவன் ரொம்ப தெளிவான லுாசு…” என்றான் தினேஷ் ஒருமுறை.

”ஆனா அங்க வர சொன்னாளே… அவங்க வீட்டுக்கு…”

”எங்கிட்ட ஒண்ணும் சொல்லுலயே…”

”அவ உசிரோடு இருந்தாதானே சொல்லுவா…”

அம்மா பேசி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்து விட்டது.

”அய்யோ… உசிரோடதான் இருக்கா… இவ்ளோ நேரம் எங்கூடதான இருந்தா…”

”இருந்தா… ஆனா இப்ப எங்க…?”

அம்மா சொல்வது போல அவளை காணவில்லை. எங்க… எங்க… எங்க போனா…? குழப்பமாக இருந்தது.

”கொளத்தங்கரயிலேர்ந்து நீ மட்டுந்தானே வந்தே…”

எனக்கு புரியவில்லை. சங்கீதாவும்தானே என்னுடன் வந்தாள். அப்படியானால் எங்கே…? அய்யோ… அம்மா சொல்வது உண்மையா…?

”சங்கீதா…” தரையில் ஓங்கியடித்து அழுதேன்.

அம்மா கைகளை பிடித்துக் கொண்டாள்.

”வுடு அத்தாச்சீ… தம்பி எப்பவாவது இப்டி அழுவும். அப்றம் மொள்ள மொள்ள தானே சரியாயிடும்…” பொன்னித்தாயி சொன்னது கேட்டது.

எப்படி சரியாகும்…? என் சங்கீதா இல்லாமல் எது சரியாகும்…? எல்லாமே தப்பாகி விடும். கடவுளே… கடவுளே… மண்டையே கழன்று விடுவது போல வலித்தது. எனக்காக அங்கே காத்திருப்பாள்… நிச்சயமாக அங்குதான் காத்திருப்பாள்.

”எங்கப்பா போற… பொழுதுபோன நேரத்தில… எல்லாங் காலைல பாத்துக்கலாம்…” அம்மாவின் கையை உதறினேன். இருட்டு சங்கீதாவை பயமுறுத்தி விடும். வாய் விட்டு அழுதேன். அவள் அருகே இருந்திருந்தால் இந்நேரம் என்னை கொஞ்சி சமாதானப்படுத்தியிருப்பாள். அள்ளி அணைத்துக் கொள்வாள். பக்கத்து வீட்டு அண்ணனைப் போல கத்தியை காட்டி மிரட்ட மாட்டாள். தீக்குச்சியை உடலில் வைத்து விளையாட மாட்டாள். யாராவது கேட்டால் என்ன பதில் கொடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லி வைத்திருக்க மாட்டாள்.

அம்மா ஓரமாக அழுதுக் கொண்டு நிற்பதும் பொன்னித்தாயி அவளை சமாதானப்படுத்துவதும் தெரிந்தது.

”வருத்தப்படாத அச்சாச்சீ… கல்யாணம் அதுஇதுன்னு புதுசா பேசுறோம்மா… அதுல தம்பி கொஞ்சம் மெரண்டுடுச்சு… அதான்…”

”சரி… அழுவாத… கல்யாணமெல்லாம் வேணாம்…” என்றாள் அம்மா என்னருகில் வந்து.

”நீ நவுரு போ…” அவளை நகர்த்தித் தள்ளினேன். அம்மாவால்தான் சங்கீதா கோபித்துக் கொண்டு குளத்தங்கரைக்கு போய் விட்டாள். வேகவேகமாக நடந்தேன். சங்கீதா… சங்கீதா… சங்கீதா… என் கணிப்பு எப்போதும் தப்பாது.

”சங்கீதா…” அழுதுக் கொண்டே அவளைக் கட்டிக் கொண்டேன்.

வேண்டுமென்றே என் பிடியிலிருந்து நழுவி ஓடினாள். நீர் கூழாங்கல்லை வளைத்து அணைத்து நெளிந்து ஓட… என் கைகளுக்கு அகப்படாமல் அவள் நெளிய… இது செல்லமான சண்டையில்லை… அவளுடைய வலி… அவளை பிரிந்து விடுவேனோ என்ற பயத்தின் வலி… நீருக்குள் அழுதால் யாருக்கும் தெரியாது. சங்கீதா… சங்கீதா… கண்ணீரை மறைத்துக் கொண்டு அவள் நீருக்குள் மறைய… மறைய… அமிழ… அமிழ… நானும் உள்ளே… உள்ளே… ஆழமாக… ஆழமாக… இருளாக… இருளாக… எல்லாமே இருளாக…

சங்கீதாவை இறுகக் கட்டிக் கொண்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.