ஸிந்துஜா
எதிரே நிழலாடிற்று. படித்துக் கொண்டிருந்த டெக்கான் ஹெரால்டிலிருந்து நாகேச்வரய்யர் கண் எடுத்து நிமிர்ந்து பார்த்தார். அபயாம்பாள்.
அவள் அவரைப் பார்த்து “நீங்க இன்னிக்கி ஆத்திலேதான் இருக்கப் போறேள்னு நேத்தி மாமி சொன்னா. மாமி ஜெயநகருக்குப் போயிருக்கா இல்லே?” என்றாள்.
“ஆமா. அவ தங்கையாத்துக்குப் போயிருக்கா. என் ஆபீஸ்லேயும் எல்லாப் பசங்களும் நவம்பர் பரீட்சை கொடுக்கறேன்னு லீவில் போயிட்டான்கள். அடுத்த வாரம்தான் ஆபீஸைத் திறக்கலாம்னு இருக்கேன்” என்றார். அவர் பெங்களூரில் இருபது வருஷமாக ஆடிட் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்.
பின்பு அவளிடம் “உக்காரு. என்ன இந்தப் போதுக்கு இங்கே வந்துட்டே? கோமதியாத்திலேன்னா இப்ப நீ புரண்டு படுத்துண்டு வாயாடிண்டு இருக்கணும்?” என்று சிரித்தார்.
“கோமதி மாமி ஊருக்குப் போயிருக்கா. அவ நாத்தனார் பொண்ணுக்குக் கல்யாணம்னு. வரதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லிட்டுப் போயிருக்கா” என்றபடி அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டாள் அபயம்.
“ஓ! அப்ப சங்கரனுக்கும் சேத்து நீதான் சமைச்சு அவாத்துக்கு அனுப்பணும்னு கோமதி சொல்லிட்டுப் போயிருப்பாளே!” சங்கரன் கோமதியின் ஒரே பிள்ளை. உள்ளூர் காலேஜில் வேலை பார்க்கிறான்.
“ஆமா. ரொம்ப நல்ல பையன். வாயைத் திறக்காம அனுப்புறதை சாப்பிட்டுட்டுப் போயிடறது அந்தப் பிள்ளை” என்றாள்.
“பேஷ், பேஷ். சர்டிபிகேட் எல்லாம் கேக்கறதுக்கே அமர்க்களமா இருக்கே” என்று அய்யர் சிரித்தார்.
“மாமா. அவனைப் பத்திப் பேசத்தான் இப்ப உங்க கிட்டே வந்தேன்” என்றாள் அபயம்.
அவர் அவளை உற்றுப் பார்த்தார். வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தையில் தெரிந்த லேசான பதட்டம் அவள் முகத்திலும் இருந்தது. வழக்கமாக அவள் தன்னைத் தெரிவித்துக் கொள்ள முன் வருபவள் இல்லை. அய்யருடைய மனைவி ‘அவயம் ரொம்ப அமுக்கு’ என்று அவளுடைய கெட்டிக்காரத்தனத்தைச் சிலாகிப்பாள். உற்றுக் கேட்டாலொழிய கண்டுபிடிக்க முடியாத சுவர்க் கோழியின் ரீங்காரத்தை நினைவூட்டுபவளாக அய்யர் சில சமயம் அவளைப் பற்றி எண்ணுவார்.
“என்ன விஷயம்? சொல்லு” என்றார் அய்யர்.
“இந்தப் பொண்ணோட கல்யாணம் என்னை அரிச்சுப் பிடுங்கிண்டே இருக்கு” என்றாள் அபயம்.
“கல்யாணி இந்த வருஷம்தானே பி ஏ. முடிக்கப் போறா. அதுக்குள்ளே என்ன கல்யாணப் பேச்சு?” என்றார் அவர் ஆச்சரியத்துடன். கல்யாணிக்கு இருபது வயது இருக்குமா?
“இந்தப் பிராமணன் வேலையிலே இருக்கறப்பவே பண்ணாதானே ஆச்சு. ஒரு நாளைப் பாத்தாப்பிலே பையைத் தூக்கிண்டு ஆபீசுக்குப் போறதும் வரதுமா இருந்தா மட்டும் போறாதுன்னுதானே கிடுக்கிப் பிடி போட்டு சாயங்காலத்திலேயும் ஒரு வேலை பாத்தா கொஞ்சம் பணம் வருமேன்னு பிடுங்கி எடுத்து அனுப்பிச்சேன். போன மாசம் வரைக்கும் ஆத்துக்கு வந்ததும் ஒரு வாய் காப்பியை வாயில் விட்டுண்டு உடனே சைக்கிளை எடுத்துண்டு சேட் ஆபீசுக்குப் போய் அங்க கணக்கு எழுதி டைப்பிங் வேலையும் பாத்ததுக்கு மாசம் எதோ அஞ்சாயிரம் எக்ஸ்ட்ராவா வந்துண்டு இருந்தது. யார் கண் பட்டதோ, திடீர்னு நாலு நாளைக்கு மின்னாலே இனிமே சேட்டு கிட்டே எல்லாம் வேலைக்குப் போகப் போறதில்லேன்னு நின்னுட்டார். சேட்டோட என்ன வாய்க்காத் தகராறோ?” என்றாள்.
அபயம் அவள் புருஷனைப் பற்றி இளக்காரமாகப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. சேதுவும் அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அசடுதான். அவனோடு வேலைக்குச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சேதுவுக்கு மேலே அதிகாரியாகி விட்டான். சேது வரவை விட செலவில் ஆர்வம் காட்டுபவன். குதிரைக்கு லகானைப் போட்டு இழுக்கின்ற மாதிரி அபயம் இருக்கிறாளோ, குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்து கௌரவமாக மற்றவர்களுக்கு முன் காட்சியளிக்கிறது என்று அய்யர் அடிக்கடி நினைப்பதுண்டு.
அபயம் பேரழகி இல்லை என்றாலும் கண்ணைக் கவரும் உருவம் அவளுடையது. உயரமும் அதற்குப் பாந்தமான கட்டு விடாத உடலும் அவளை நாற்பத்தி ஐந்து வயதுக்காரியாகக் காண்பிக்க மறுத்தன. நாற்பது இருக்குமா என்றதைக் கூட புதிதாக அவளைப் பார்ப்பவர்கள் சந்தேகமாகத்தான் கேட்டார்கள். ‘இருபது வயசிலேயே என்னமோ கொள்ளை போறாப்பிலே எனக்குக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டார் எங்க அப்பா. இந்த மனுஷன் இந்தியன் ஸ்டீல் ஆபீஸ்லே வேலை பார்க்கிறதை ஆபீஸரா இருக்கார். உசந்த மாப்பிள்ளைன்னு காதிலே தப்பா வாங்கிண்டு… எல்லாம் என் கஷ்டகாலம். அரை வயத்துக்குக் கஞ்சி குடிக்கற ஒரே ஆபீசர் பொண்டாட்டி இந்த உலகத்திலேயே நான்தான்” என்று பழக ஆரம்பித்த மூன்று மாசத்துக்குள் ஒரு தடவை அய்யரிடமும் அவருடைய மனைவியிடமும் அழுது விட்டாள். அவள் அய்யரையும் அவரது மனைவியையும் ஏதோ தன் சொந்த பெற்றோர்தான் என்று நினைத்திருப்பவள் போல அவர்களிடம் அப்படி ஒட்டிக் கொண்டு இருந்தாள்
“ஆமா. நாங்கூட முந்தா நா ஈவினிங் வாக் போயிட்டு திரும்பி வரச்சே உங்காத்து வாசல்லே நின்னுண்டு இருந்தவன் என்னைப் பாத்துக் கை அசைச்சான். அவன் பக்கத்திலே மூர்த்தி நின்னு பேசிண்டு இருந்தான். சரி, சேது சாயங்கால டூட்டிக்குப் போகலே போலன்னு நான் நினைச்சிண்டு அவனுக்கு பதிலுக்குக் கையைக் காமிச்சிட்டு வந்தேன்” என்றார் அய்யர்.
“நீங்க அவருக்கு நல்லதா நாலு வார்த்தை சொன்னாதான் எனக்கு விடியும்” என்றாள் அபயம்.
“சரி, சாயந்திரம் பாக்கறேன். ஆறு ஆறரைக்கு இருப்பானோல்லியோ?”
“அதான் சேட்டு வேலையை விட்டப்புறம் அஞ்சரைக்கே ஆபீஸ்லேந்து வந்து இங்கே உக்காந்துண்டு போறவா வரவா கிட்டே அரட்டை அடிக்கறதும், மொபைல்லே சினிமா பாட்டு கேக்கறதுமா காலத்தைக் கடத்தியாறதே. எல்லாம் என் தலையெழுத்து” என்றாள் அபயம்.
அய்யர் இந்தப் பேச்சைத் தவிர்க்க விரும்பியவராக “சங்கரனைப் பத்தி என்னமோ சொல்றேன்னு ஆரமிச்சியே” என்றார்.
அபயம் குரலைத் தாழ்த்தி “ஆமா. உங்ககிட்டத்தான் பேசணும்னு வந்தேன். மாமிகிட்டே கூட இதைப் பத்திப் பேச்செடுக்கலே. இப்பவும் மாமி தங்கையைப் பாக்கப் போயிருக்கற சமயமாப் பேசிடலாம்னுதான் வந்தேன். இந்த சங்கரனைக் கல்யாணிக்குப் பண்ணி வச்சிட்டா…” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.
சில வினாடிகள் அய்யர் எதுவும் பேசாமல் அபயத்தைப் பார்த்தவாறு இருந்தார். அந்த மௌனத்தைத் தாங்க முடியாதவள் போல அபயம் புடவை தலைப்பால் இரண்டு முறை தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு விட்டாள். இவ்வளவுக்கும் வாசலிலிருந்த வேப்ப மரத்திலிருந்து வீசிய காற்று அவர்களிருந்த இடத்தைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது.
அபயம் பொறுக்க முடியாதவளாய் “மாமா, நான் சொன்னதிலே ஏதாவது தப்பா?” என்று கேட்டாள்.
நாகேச்வரய்யர் “நல்ல விஷயம் பேசறே. அதிலே தப்பு என்ன? நான் ஓப்பனாவே உன்கிட்டே கேக்கறேன். இந்த பசங்க ரெண்டு பேர் மனசைத் தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
“ரெண்டு பேருக்கும் இஷ்டம்னுதான் தோணறது. ஏற்கனவே கோமதி மாமிக்கு ஒத்தாசையா நான் இருக்கேன்னு அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதனாலேதான் ஆரம்பத்திலேர்ந்து எனக்கும் பொழுது போறதுக்கு, பேச்சுத் துணைக்குன்னு அவாத்துக்குப் போயிண்டு வந்துண்டு இருப்பேன். இப்ப இந்த மூணு நாலு மாசமா நான் சாயங்காலமா சங்கரன் ஆபீஸ்லேந்து வந்து ஆத்திலே இருக்கறப்போ அவனோடையும் பேச்சுக் கொடுக்க ஆரமிச்சேன். இந்தக் காலத்துப் பசங்க மாதிரி இவனும் தலை கலைஞ்சு இருக்கறவன்னா நாம தெரிஞ்சிண்டுடலாமேன்னுதான். பேப்பர், சினிமா, டி,வி.ன்னு எல்லாத்திலேயும் வர்ற காதல், பணக்காரன் ஏழை மோதல், ஆக்டர்ஸ் ஆக்ட்ரசஸ் கிசுகிசு, பாலிடிக்ஸ்ன்னு வம்படிப்பேன். அதனாலே அவன் பணத்திலே குறியாயிருக்கானா, குடும்பம் குழந்தை குட்டின்னு அதிலெயெல்லாம் மதிப்பு வச்சிண்டிருக்கானா, பொண்கள் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்க்கிறவனா, அம்மா கோண்டுவான்னு வேறே எப்படித் தெரிஞ்சிக்கறது?”
“பேசறதுக்கு உனக்குச் சொல்லித் தரணுமா?”
அபயம் புன்னகை செய்தாள்.
“ஒரு நா நானும் மாமியும் பேசிண்டு இருக்கறச்சே ‘இப்பல்லாம் அபயம் கோமதியாத்திலேயே பழியா கிடக்கா. பகல் பொழுது போறாதுன்னு சாயரட்சைக்கும் அவாத்திலே போயி அப்படி என்னதான் பேசுவாளோ?’ன்னு மாமி அலுத்துண்டா” என்றார்.
“ஆமா. அவனை வேறே எப்படி நான் நன்னாத் தெரிஞ்சிக்கறது? ஆனா சங்கரனும் ஹாஸ்யமா பேசறான். புத்திசாலியா எல்லா விஷயத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சு வச்சிண்டிருக்கான். அதனாலே அவன் கிட்டே சான்ஸ் கிடைக்கிறப்போ எல்லாம் கல்யாணியைப் பத்தி நாலு வார்த்தை போட்டு வைப்பேன். அவளுக்கு புஸ்தகத்திலே, சங்கீதத்திலே எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணறதிலே இன்ட்ரெஸ்ட்ன்னு அப்பப்போ நாலு வார்த்தை தூவி வைப்பேன்” என்று வெட்கத்துடன் சிரித்தாள் அபயம். “தனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கற விஷயத்திலே எல்லாம் கல்யாணிக்கும் இன்ட்ரெஸ்ட் இருக்கேன்னு ஒரு தடவை சங்கரன் சொல்லியிருக்கான்.”
நாகேச்வரய்யர் “இதுவரைக்கும் நீ சொன்னது எல்லாம் திருப்தியாதான் இருக்கு. அவன் அம்மா கோண்டுவான்னு தெரிஞ்சிக்கப் பாத்தேன்னயே?”
என்று கொக்கி போட்டார்.
அபயம் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து “இவ்வளவு சொன்னேன். ஆனா இதைப் பத்திதான் உங்களுக்குக் கேக்கணும்னு தோணிருக்கே!” என்றாள். பிறகு “அவனோட அப்பா சின்ன வயசிலேயே போயிட்டாரோன்னோ? கோமதி மாமிதான் கஷ்டப்பட்டு வளர்த்தது. அதனாலே அம்மாகிட்டே ரொம்ப அட்டாச்டா இருக்கான். அந்தப் பாசத்தை எப்படிக் கோண்டுன்னு சொல்லறது?” என்று கேட்டாள்.
“வாஸ்தவம். ஆனா நீ சொல்ல ஆரம்பிச்சதிலேந்து எனக்கு மனசுக்குள்ளே
ஓடிண்டு இருக்கற ஒரே கேள்வி கோமதி இதுக்கு ஒப்புத்துப்பாளா எங்கிறதுதான்.”
அபயம் உடனடியாக எதுவும் பதில் அளிக்கவில்லை. இருவரிடையேயும்
சற்றுக் கனத்த அமைதி நிலவியது.
மறுபடியும் அய்யர்தான் பேச ஆரம்பித்தார். “எதுக்குச் சொல்றேன்னா கோமதி ரெண்டு மூணு தடவை என் காது கேக்க இங்கே இருக்கிறவா கிட்டே சொல்லியிருக்கா. சங்கரனுக்குப் படிச்ச பொண்ணா அழகா இருக்கறவளா, நன்னா சொத்து சம்பாத்தியம் இருக்கற ஆத்திலேந்து வர்றவளா இருக்கணுங்கிறதுதான் தன்னோட ஆசைன்னு.”
அபயம் சற்று விரக்தியான குரலில் “எங்ககிட்டே அந்த மூணாவது சௌந்தர்யம் இல்லியே” என்றாள்.
நாகேச்வரய்யர் அவளைக் கனிவுடன் பார்த்தார்.
“எதுக்கு உடனே மனசை விட்டுடறாய்? நம்மகிட்டே இருக்கறதை வச்சு ஜமாய்ச்சிடலாம்னு நீ இருக்கணும். நானோ நீயோ கோமதியோ இல்லே இந்த ரெண்டு குழந்தைகளோ ஆசைப்படலாம். ஆனா ஆசைப்படறது எல்லாம் நடக்கறது இவா யார் கையிலேயும் இல்லையே. மேலே இருக்கறவன்னா பாத்துக்கறான்? கச்சி ஏகாம்பரம் அபிராமிக்கு ரெண்டு நாழி நெல்லுதான் கொடுத்தார். ஆனா எப்படி அதை வச்சுண்டு தேவி லோகம் பூராத்துக்கும் அன்னபூரணியா இருந்து கொடுத்தா? யாரோ வருவா. உதவி பண்ணுவா. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தைரியமா இரு” என்றார்.
அவர் அப்படி ஆறுதலாய்ப் பேசியதில் அவள் சற்று முகம் மலர்ந்து அவரை நன்றியுடன் பார்த்தாள்.
“சங்கரனுக்கு அவனோட அம்மா மேலே எவ்வளவு பாசமோ அந்த அளவுக்கு அவன் மேலே கோமதிக்கு ரொம்பப் பிரீதி. அதை நான் கவனிச்சிருக்கேன். சங்கரன் எனக்குக் கல்யாணிதான் வேணும்னு சொல்லணும். அப்ப எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடும்” என்றார் அய்யர்.
“எனக்கென்னவோ அவன் அப்படிதான் சொல்லுவான்னு தோணறது” என்றாள் அபயம்.
“ஆனா நீ இவ்வளவு நாழி பேசிண்டு இருக்கறச்சே இப்பிடிக் க்ளீயரா சொல்லலியே. அல்லாடிண்டு இருக்கிறவ மாதிரின்னா இருந்தே” என்றார் அய்யர்.
அவள் அவரை உற்றுப் பார்த்தாள்.
பிறகு “எனக்கு இதை உங்க கிட்டே சொல்லணும்னுதான். அப்புறம் நீங்க என்னைத் தப்பா நினைச்சிட்டேள்னான்னு ஒரு தயக்கம். ஆனா இப்ப என்னவோ எல்லாத்தையும் உங்ககிட்டே கொட்டிடணும்னு எனக்கு இருக்கு. கல்யாணியும் சங்கரனும் ரெண்டு வாரமா கொஞ்சம் நெருக்கமாதான் பழகிண்டு இருக்கா.”
“என்னது?”
“ஆமா. நான்தான் அவா நெருங்கிப் பழகட்டும்னு ஒரு நா முடிவு பண்ணினேன். இப்பெல்லாம் மணிக்கணக்கிலே அவ ரூம்லேந்து அவனுக்குப் போன் பண்ணிப் பேசறா. ரெண்டு பேரும் சேர்ந்து சினிமாவுக்கு ஒரு நாள், ஓட்டலுக்குப் ஒரு நாள் போனா. அவன் போன வாரம் அவளோட பர்த்டேக்குப் புடவை வாங்கிக் கொடுத்தான்.”
“ட்டேயப்பா!” என்று நாகேச்வரய்யர் தாங்கமுடியாத வியப்புடன் அவளைப் பார்த்தார். பொறுக்க முடியாமல் “நீ பெரிய அமுக்குன்னு மாமி சரியாத்தான் ஜட்ஜ் பண்ணியிருக்கா” என்று சொல்லி விட்டார்.
“ஓ, மாமி என்னை அப்பிடி வேறே திட்டியிருக்காளா?” என்று அபயம் சிரித்தாள்..
பிறகு எழுந்தபடி “நான் வரேன். நீங்க இன்னிக்கி சாயங்காலம் இந்த மனுஷனைக் கொஞ்சம் கூப்பிட்டுச் சொல்றேளா? நீங்க சொன்னா கேப்பார்ன்னு ஒரு நப்பாசைதான் எனக்கு” என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
அய்யர் அன்று மாலை சேதுவைக் கைபேசியில் கூப்பிட்டார்.
“சேது, நீ ஃப்ரீயா? ஒரு செஷ்ஷன் போடலாமா? போன வாரம் என்னோடகஸ்டமர் லிக்கர் வேர்ல்டு இருக்கானோல்லியோ? அவன் தீபாவளிக்குன்னு ரெண்டு டீச்சர்ஸ்ஸும் ரெண்டு ஜாக் டேனியல்ஸும் அனுப்பிச்சான். தீபாவளி அன்னிக்கி கங்கா ஸ்நானம் பண்ணிட்டு இந்த ஸ்நானம் வேறே பண்ணி எதுக்கு எல்லாரோட வயித்தெரிச்சலையும் கொட்டிக்கணும்னு உள்ளே எடுத்து வச்சிட்டேன். நீ சேட்டு ஆபீஸ் வேலையை முடிச்சிட்டு ராத்திரி எட்டு மணிக்கு எங்காத்துக்கு வந்துடறயா?” என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்டார்.
“எதுக்கு எட்டு மணிக்கு? நான் இப்பல்லாம் ஃப்ரீதான். ஏழு மணிக்கு அங்கே வரட்டுமா?” என்றான் சேது.
சொன்ன நேரத்துக்கு சேது வந்து விட்டான்.
அவர்கள் மாடிக்குச் சென்றார்கள். அய்யர் மாடியில் பார் வைத்திருந்தார்.
குடிக்க இரு கண்ணாடிக் குவளைகளையும் ஒரு ஜாக் டேனியல்ஸ் பாட்டிலையும் அய்யர் எடுத்து வைத்தார். தின்பதற்கு சில அயிட்டங்கள் மேஜை மீது இருந்தன. இரண்டு பாக்கெட்டுகளைப் பிரித்து இரு பிளாஸ்டிக் தட்டுகளில் சிப்ஸ், காரக்கடலை ஆகியவற்றை வைத்தார். இன்னொரு தட்டில் சாலட் வைத்திருந்தது. அவர் இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பி ஐஸ் கட்டிகளையும் நீரையும் விட்டார். பார் ஸ்டூல்களை இழுத்துப் போட்டுக் கொண்டு இருவரும் அமர்ந்தனர்.
“எம்.ஜி.ரோடு ஹோட்டல் பார் மாதிரின்னா வச்சிருக்கேள்” என்று சேது சிரித்தான். ஒரு குவளையை எடுத்து ஒரு வாய் விட்டுக் கொண்டான்.
“எது செஞ்சாலும் திருப்தியா செய்யணும். முழுசாச் செய்யணும்னு காந்தி சொல்லியிருக்கார்” என்றார் அய்யரும் சிரித்தபடி.
“யாரு ராகுல் காந்தியா, ராஜீவ் காந்தியா?” .
“யாரோ ஒரு காந்தி” என்றார் அய்யர்.
“நல்லவேளை மகாத்மா காந்தின்னு சொல்லாம விட்டேளே!” என்று வாய் விட்டுச் சிரித்தான் சேது.
அவர்கள் லிங்காயத்து – கௌடா அரசியல் பற்றிப் பேசினார்கள். தமிழ்நாட்டில் கதாநாயகிகளை வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது போல கர்நாடகாவில் கதாநாயகர்களை இறக்குமதி செய்யலாம் என்று சேது கூறினான். ஒரு காலத்தில் பென்ஷனர்ஸ் பாரடைஸ் ஆக இருந்த பெங்களூர் இப்போது பென்ஷனர்களின் நரகமாகி விட்டதாக அய்யர் அலுத்துக் கொண்டார். அரைமணி நேரம் பேச்சு இப்படியே உலக விவகாரங்களை கவ்விக் கொண்டிருக்க ஜாக் டேனியல்ஸின் பாட்டிலில் அளவு குறைந்து கொண்டே வந்தது.
“உங்க கம்பனி இப்ப எப்படிப் போயிண்டிருக்கு? எக்ஸ்போர்ட்ஸ்லாம் மறுபடியும் ஜாஸ்தியாக ஆரம்பிச்சாச்சா?”
“எங்கே? இப்ப சைனாலே கோவிட் மறுபடியும் கிளம்பி இருக்குன்னு கதர்றான். எக்ஸ்போர்ட் டார்கெட்ஸ் எல்லாத்தையும் குறைச்சு ஆனானப்பட்ட அமெரிக்காவையே கதற அடிக்கிறான். ஈரோப்பும் இன்ஃப்லேஷன், அன்யெம்ப்லாய்மெண்ட்ன்னு கவுந்து கெடக்கு. நாமெல்லாம் எந்த மூலைக்கு?”
“அடக் கண்ராவி! அப்போ உங்க கம்பனி கொடுத்திண்டு இருந்த இன்சென்டிவ் எல்லாம் இனிமே அவ்வளவுதானா?”
“இன்சென்டிவ்வா? ஆள்களை வீட்டுக்கு அனுப்பாம சம்பளம் கொடுத்தாலே போதும்னு இருக்கா. ரெண்டு வருஷத்துக்கு வருஷாந்திர இன்க்ரீமெண்ட் பத்தி வாயைத் திறக்கக் கூடாதுன்னு சர்குலர் வந்தாச்சு” என்று சேது வெறுப்புடன் சிரித்தான்.
அய்யர் அவனிடம் “நல்ல வேளையா அந்த சேட்டுப் புண்ணியவான் கைங்கர்யத்தில் நீ ஒரு எக்ஸ்ட்ரா சம்பாத்தியம் வச்சிண்டிருக்கே” என்றார்
அவன் அவரிடம் “சேட்டு வேலையா? அதை நான் விட்டாச்சு!” என்றான். அவன் கண்கள் அவரைப் பார்க்காமல் கையிலிருந்த குவளையில் பதிந்திருந்தன.
“என்னது? வேலையை விட்டாச்சா? ஏன் அந்தக் கம்மனாட்டிக்கு என்ன கேடு வந்தது?” என்றார் அய்யர் கோபம் குரலில் தொனிக்க. ஒரு க்ஷணத்தில் புண்ணியவான் கம்மனாட்டியாகி விட்ட விந்தை!
சேது பதிலளிக்காமல் அவரையும் குவளையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு குவளையில் இருந்ததை ஒரே மூச்சில் குடித்து விட்டுப் பேப்பர் நாப்கினால் வாயைத் துடைத்துக் கொண்டான்.
சேது அவரிடம் “இதையெல்லாம் சொல்லணுமான்னு வெக்கமா இருக்கு. ஆனா யார்கிட்டேயாவது சொல்லி ஆத்திக்கணும் போலவும் இருக்கு. மனசிலே அடைச்சு வச்சுண்டு இருக்கறது என்னைக் குதறிப் போட்டுண்டு இருக்கு” என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தான்.
காலையில் அபயம் இதே மாதிரி வார்த்தைகளை உச்சரித்தாள். இவன் என்ன சொல்லப் போகிறான்?
அவர் பதில் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்தார்.
“சீக்கிரம் கல்யாணிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா தேவலையா இருக்கும் எனக்கு” என்றான். “அப்போ இந்த அபயம் அடிக்கிற கூத்துக்கெல்லாம் ஒரு முடிவு கட்டினாப்பிலே ஆயிடும்.”
“அபயமா? கூத்தா? சேது நீ என்ன சொல்றே?”
“உங்களுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது. நாலு மாசமா இந்த முண்டை அந்த சங்கரன் ஆத்திலே போய் உக்காந்துண்டு அவனோட கூத்தடிக்கிறா. அவன் சின்னப் பையன். ஆனா, இவ? கல்யாண வயசிலே ஒரு பொண்ணை வச்சுண்டு எப்படி சார் அவ இந்த மாதிரி கேடு கெட்டவளா இருக்கா? நானும் ராத்திரி எட்டு எட்டரைக்குதானே ஆத்துக்கு வரேன்? அது இவளுக்கு ரொம்ப சௌகரியமாப் போயிடுத்து. அதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு சேட்டு ஆபீஸ் வேலையை விட்டுட்டேன். சாரி சார். உங்களைப் போட்டுத் தொந்திரவு பண்ணிட்டேன். சாரி சார்” என்று கலங்கிய குரலில் கூறி வந்தவன் சட்டென்று இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான்.
அய்யர் எதையோ மிதித்து விட்டவர் போலத் திடுக்கிட்டார். சமாளித்துக் கொண்டு கையில் ஏந்திய குவளையில் இருந்ததை வாயருகே கொண்டு சென்றவர் அதிலிருந்ததைக் குடிக்க முடியாமல் கீழே வைத்து விட்டார்.