வேதாளத்தின் மோதிரம்

காலத்துகள்

நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு அதிஅத்தியாவசமாக வேதாளத்தின் மோதிரம் தேவைப்பட்டது. நான் பல நேரங்களில் கோபப்படுபவன் தான் என்றாலும் இன்றுவரை யாருடனும் கைகலப்பில் ஈடுபட்டதில்லை. அத்தகைய மூர்க்கம் எனக்குள் ஒருவேளை எழுந்தாலும், அதற்கான தைரியம் எனக்கு கிடையாது என்றே நினைக்கிறேன். ஆனால் ‘சாது’ என்று பட்டம் கொடுக்கப்படும் பலரைப் போல என் மனவுலகில் சாகஸக்காரனாகவே உலவினேன்.

நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த காலி மனை, சில நேரம் போர்க்களமாகும், சில நேரம் கொள்ளையர்களின் கப்பல் பயணிக்கும் கடலாக மாறும். இப்படி அந்த இடத்திலிருந்து வீட்டை, பள்ளியை, ஏன் உலகையே எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டிருப்பேன். எனவே தீயவர்களை அழிக்கும் நாயகர்கள் பால் நான் ஈர்க்கப்பட்டது ஆச்சர்யமில்லை. அதிலும் தான் குத்து விடும் தீயவர்களின் முகத்தில் மண்டையோட்டு முத்திரையை பாதிக்கும் மோதிரம் கொண்ட வேதாளம் (phantom) என்னை அதிகம் ஈர்த்தார். அவர் வைத்திருந்ததைப் போல ஒரு மோதிரத்தை – நிஜத்தில் நான் குத்து விட யாரும் இல்லாவிட்டாலும் அந்த காலி மனையின் உலகில் என்னிடம் அடி வாங்க பல நாசகார சக்திகள் காத்திருந்தன – வாங்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். என் வீட்டிலும் அதை வாங்கித்தருவதாக சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்படியொரு மோதிரம் கிடைக்காது என்று அவர்கள் சொல்லி இருந்தால் நான் அன்றிருந்த மனநிலையில் அதை நம்பியிருக்க மாட்டேன் தான்.

மோதிரம் கிடைக்குமா கிடைக்காதா என நான் ஏங்கி இருந்தபோது தான் மணி என் தெருவிற்கு குடி வந்தான். ஒரே வகுப்பு என்றாலும், வேறு வேறு பள்ளிகளில் படித்து வந்தோம். காமிக்ஸ் ஆர்வம் எங்களை இணைத்தது. அவனிடம் வேதாளத்தின் மோதிரம் பற்றி நான் சொல்ல, கடைத்தெருவுக்கு சென்று பார்க்கலாம் என்று அவன் கூறினான். எங்களிடம் காசு இல்லாவிட்டாலும், எந்தக் கடையில் அது கிடைக்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாமே என்பது அவன் வாதம். ஒரு சனிக்கிழமை காலை மோதிரத்தை தேடி கிளம்பினோம்.

80களில் பரிசுப் பொருட்களுக்கென்றோ, குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கென்றோ தனிப்பட்ட கடைகள் எதுவும் கிடையாது. ‘பேன்சி ஸ்டோர்’ என்ற பெயரொட்டோடு இருக்கும் சில கடைகளில் மட்டுமே மோதிரத்தை தேட வேண்டும். பஜாரில் நாங்கள் நுழைந்த முதல் கடையில், ‘வேதாள மோதிரம் இருக்கா’ என நாங்கள் கேட்க எங்களை கடைக்காரர் பார்த்த பார்வை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. ஏதேனும் மந்திரவாதியின் அடிப்பொடிகளான குட்டிச்சாத்தான்கள் என எங்களை அவர் கருதி இருக்கக் கூடும் என்று நினைத்தோம். அடுத்த இரு கடைகளில் எங்களை வம்பு செய்ய வந்தவர்கள் என்று கருதி, ‘கடை தொறந்தவுடனேயே தரித்திரங்க வந்துடுச்சு’ போன்ற வசவுகளோடு துரத்தி விட்டார்கள். யாரும் நாங்கள் அப்படியொரு மோதிரத்தை தேடுகிறோம் என்பதை நம்பவே இல்லை. இன்னும் ஓரிரு கடைகள் மட்டும் பார்ப்போம் என்று முடிவு செய்து நாங்கள் நுழைந்த கடை தான் கணேசன் அண்ணனுடையது. நாங்கள் சொல்லியதைக் கேட்டதும் அவர் முகத்தில் தோன்றிய புன்னகையில், நக்கலோ, கிண்டலோ இல்லை. அத்தகைய மோதிரம் கடையில் இல்லையென்று சொன்னவர், ‘இதை பாருங்கள்’, என்று சில காமிக்ஸ் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். அண்ணனும் காமிக்ஸ் ஆர்வலர். கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தந்தைக்கு துணையாக கடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மோதிரம் கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் ஏற்பட்ட தொடர்பு எங்களுக்கு உற்சாகமளித்தது (அவர் படிக்கத் தந்த புத்தகங்களும், பத்திரிக்கைகளும்தான்). ஒவ்வொரு சனி, ஞாயிறும் காலையில் சில மணி நேரம் அவர் கடையில் இருப்பதை பழக்கமாக்கிக் கொண்டோம். சில பல ஆண்டுகள் பழமையான (பெரும்பாலும் தமிழ்) காமிக்ஸ் புத்தங்களை அவர் வைத்திருந்தார். கடையில் வாடிக்கையாளர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஓரத்தில் அமர்ந்து அவற்றை படித்துக் கொண்டிருப்போம். யாருமில்லாத ஒரு நாளில் டார்ஜானுக்கும் வேதாளத்திற்கும் சண்டை வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று அவருடன் படு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் நுழைந்தார். வெளியே கிடந்த புத்தகங்களையும், எங்களையும் பார்த்து விட்டு, ‘நீ கெட்டது போறாதுன்னு இவங்களையும் கெடுக்கறையா”, என்று அண்ணனிடம் சண்டை பிடித்தார். நாங்கள் பயந்து ஓடி விட்டோம். ஓரிரு வாரங்கள் அந்தப் பக்கம் போகவில்லை. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செல்ல, கடையில் அண்ணன் மட்டுமே இருந்தார்.

அவரை அன்று திட்டியது அவர் அப்பாவாம். தன்னைக் குறித்தும், தன் ஆசைகள் குறித்தும் அண்ணன் அப்போதுதான் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். சின்ன வயதிலிருந்தே அவருக்கு கதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம். அவர் தந்தைக்கு அதெல்லாம் வீண் வேலை என்ற எண்ணம். படிப்பு முடிந்த பின் ஏதேனும் அரசு வேலைக்கு மகன் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசை. அண்ணன் செங்கல்பட்டிலேயே ஒரு வேலை பார்க்க வேண்டும் அல்லது கடையை நடத்த வேண்டும் என்று எண்ணியிருந்தார். அவரைப் போல செங்கல்பட்டை அங்குலம் அங்குலமாக சுற்றி வந்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ‘பழைய பஸ்ஸ்டாண்ட்’ என்று அழைக்கப்படும் செங்கல்பட்டின் ஒரு எல்லையில் இருந்து, இன்னொரு எல்லை என்று சொல்லக்கூடிய கலெக்டர் ஆபீஸ்ஸை தாண்டி இருக்கும் பிள்ளையார் கோவில் வரை சைக்கிளில் சென்று திரும்புவார். (இந்த பிள்ளையார் கோவில் பிரசத்திப் பெற்றது. அந்த வழியே செல்லும் தொலைதூர வாகனங்கள் அங்கு நின்று தேங்காய் உடைத்துவிட்டுச் செல்வது வழக்கம். 60 களில் தமிழில் வெளியான ‘பஸ்’ முக்கிய பாத்திரமாக வரும் படம் -ரோட் மூவி என்று அதை வகைப்படுத்தலாமா என்று தெரியவில்லை – ஒன்றில் பஸ் இங்கு நின்று தேங்காய் உடைத்து செல்வதாக ஒரு காட்சி வரும். இதை 80களிலும் பெருமிதத்தோடு குறிப்பிட ஒரு சிலர் இருந்தார்கள்). இதிலும் ஒரே பாதையில் செல்லாமல், வேறு வேறு தெருக்களில் நுழைந்து வருவார். பெரியமணியக்காரத் தெருவில் நாங்கள் வசித்தோம் என்று சொன்ன போது , அதன் அருகில் இருந்த ‘டப்பா ஸ்கூல்’ என்று அழைக்கப்பட்ட, அதிகமும் -பல பள்ளி, கல்லூரி மாணவர்களாலும், – விளையாட்டு மைதானமாகவே உபயோகப்படுத்தப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி பள்ளி, ராமர் கோவில், மிகவும் மாசுபடுத்தப்பட்ட கோவில் குளம் எல்லாவற்றையும் சரியாக குறிப்பிட்டார். அது மட்டுமல்ல, “உங்க தெருல ஒரு வீட்ல ஆளோட சிலை ஒண்ணு இருக்கும்ல” என்று கேட்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

அது நான் குடியிருந்த வீடு தான். அந்த மார்பளவுச் சிலை வீட்டின் சொந்தக்காரருடையது தான். அவர் மகன் தந்தை நினைவாக அதை வீட்டில் எழுப்பி இருந்தார். உயிருடன் இருக்கும் வரை தந்தையும் மகனும் அடித்துக் கொண்டதெல்லாம் வேறு கதை. வீட்டிலேயே சிலை வைத்தது அந்நாட்களில் எங்கள் தெருவில் பரபரப்பை கிளப்பிய விஷயம். ‘ செல இருக்கற வீடு தானே’ என்றே குறிப்பிடுவார்கள். என் நண்பர்கள் அதை வைத்து என்னை கிண்டல் செய்வதும் உண்டு. இப்போதும் நண்பர்களுடன் செங்கல்பட்டு நாட்களை பற்றி பேசும் போது, நான் குடியிருந்த வீட்டை ‘அந்த சிலை வீடு தானே ‘ என்று தான் குறிப்பிடுகிறார்கள். எங்கள் தெரு என்றில்லை, செங்கல்பட்டில் எந்த இடத்தை, தெருவை சொன்னாலும் அங்குள்ள அல்லது அருகிலுள்ள ஏதேனும் குறிப்பிடத்தக்க அடையாளச் சின்னத்தை அவரால் துல்லியமாக சொல்ல முடியும். ரயில் நிலையமருகே இருந்த- 60களில் அரசு மருத்துவமனையாக இருந்து கைவிடப்பட்ட – பாழடைந்த கட்டிடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்று, “இங்கு எத்தனை பேர் பிறந்திருப்பாங்க, இறந்திருப்பாங்க, எவ்வளவு பரபரப்பரா இருந்திருக்கும்” என்பதாக ஏதோ சொல்லி வந்தார். அப்போது பெரிதாக புரியாவிட்டாலும், வரலாறு (கடந்த காலம்) என்பது அரசர்கள், போர் என்பது மட்டுமே அல்ல, சிதிலங்கள் தோல்வியின் இடிபாடுகள் மட்டுமல்ல, கைவிடப்பட்ட முயற்சிகளின் மிச்சங்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தை என்னுள் அவர்தான் விதைத்தார் என்று நினைக்கிறேன். வெற்றியோ தோல்வியோ, அல்லது எதிர்கொள்ளத் தவறிய யுத்தங்களோ, காலம் தன் முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை.

இத்தகைய மனநிலையில் இருந்தவருக்கு சொந்த ஊரை விட்டு பிரிய மனசே இல்லை என்பது இயல்பான ஒன்றுதான். அரசாங்க வேலையென்றால் பணியிட மாறுதலால் உள்ளூரில் தொடர்ந்து இருக்க முடியாது என்று அவர் நினைத்தார். வேலைக்கு போகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கில்லை. செங்கல்பட்டில் தனியார் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகமில்லை என்பதால், தினமும் சென்று திரும்பும்படி சென்னையில் வேலை தேடினார், தனியார் நிறுவனமொன்றில் ஒரு வேலை கிடைத்தும் அரசு தேர்வுக்கு தயாராகவேண்டுமென்று அவர் தந்தை அதில் சேருவதிலிருந்து தடுத்து விட்டார்.

அவர்கள் கடையையேகூட வங்கியிலோ அல்லது தனியாரிடமோ கடன் வாங்கி விரிவாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. சென்னைக்கு சென்று அங்கு எந்த மாதிரியான புது பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றெல்லாம் கூட பார்த்து வந்தார். தன் மற்ற ஈடுபாடுகளுக்கு இடையேயும் வேலை, தொழில் குறித்து யோசித்துக் கொண்டு தான் இருப்பார். எங்கள் ஊரில் தசரா பண்டிகையின் இறுதி நாட்களில் சந்தை ஒன்று நடக்கும். ராட்டினம், (பொம்மை) துப்பாக்கி வைத்து சுடுதல், வளையத்தை எறிந்து அது எந்தப் பொருள் மீது விழுகிறதோ அதை சொந்தமாக்குதல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன், நிறைய கடைகளும் போடப்படும். மேட்டுத் தெரு என பொதுவாக அழைக்கப்பட்ட பாதையில் 2-3 கிலோமீட்டர் வரை விரிந்திருக்கும் சந்தையின் ஒரு எல்லை எங்கள் வீட்டிற்கு அருகிலேயும் (ராமர் கோவில் குளத்தை ஒட்டி உள்ள தெருவில்) இருந்தாலும் எங்கள் வீட்டிற்கு மிக எங்கள் வயதைக் கருதி தனியாக அனுப்ப மாட்டார்கள் என்பதால், நாங்கள் நினைக்கும் அளவிற்கு அந்தச் சந்தையில் சுற்றித் திரிய முடியாது. அந்த வருடம் எங்களை அழைத்துச் செல்வதாக அண்ணன் கூறினார். எங்களை இரவில் தனியாக அனுப்ப வீட்டில் முதலில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நானும் மணியும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்று கூறி சமாதானப் படுத்தி விட்டோம். பெரியவர்களின் அதீத கட்டுப்பாடு இல்லாமல் நாங்கள் கண்டு களித்த முதல் தசரா சந்தை அதுதான். பல கடைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றவர், பேன்சி பொருட்கள் விற்கப்படும் இடங்களில் அதிக நேரம் கழித்தார். என்ன மாதிரியான பொருட்கள் அதிகம் விற்கின்றன என்று கவனித்தவர், அவற்றை சந்தை முடிவதற்குள் தானும் கொஞ்சம் கொள்முதல் செய்யப்போவதாக சொன்னார்.

ஆனால் இதெல்லாம் அவர் தந்தையிடம் எடுபடவில்லை. மகன் அரசாங்க உத்தியோகத்தில் சேர்வது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. அண்ணன் வியாபாரத்தை கவனிப்பதையே அதிகம் விரும்பாதவர், அவர் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதையோ, புத்தகங்கள் படிப்பதையோ எப்படி ஏற்றுக்கொள்வார், இதில் அவர் கதைகளும் எழுதுகிறார் என்றால் சும்மா விடுவாரா? அண்ணன் கதைகளும் எழுதுவார் என்பது எங்களுக்கு வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. கூச்சத்துடன் ‘பூந்தளிர்’ இதழ் ஒன்றை எடுத்து அதில் வெளியாகி இருந்த ஒரு சிறுகதையை காட்டினார். அது புனைப்பெயரில் அவர் எழுதியது. பல கதைகள் எழுதி, சிலவற்றை அனுப்பியுள்ளதாகவும் அவற்றில் இது ஒன்று தான் பிரசுரமாகியுள்ளது என்று சொன்னார். எங்களுக்கு கொண்டாட்டம் அதிகமாகி விட்டது. அந்த கோடை விடுமுறையில் நிறைய நேரம் அவருடன் கழித்தோம். அவர் மனதில் இருந்த கருக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார், நாங்களும் எங்களுக்குத் தோன்றியதை சொல்வோம். அந்த மே மாதம் பூந்தளிரில் வெளியாகிய அவருடைய ஒரு கதையில் என்னுடைய பங்களிப்பும் கொஞ்சம் இருந்தது என்பது இன்றும் எனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. நானும் ஒரு வகையில் அச்சு ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டேன் என்று எண்ணிக்கொள்கிறேன்.

சிறார் கதைகளைத் தவிரவும் வேறு சில கதைகளை அண்ணன் படிப்பார், எழுதுவார் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. அவர் கடையில் தான் முதன் முதலில் ‘கணையாழி’ பத்திரிக்கையைப் பார்த்தேன். நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவார். நாங்கள் அவற்றைப் பற்றிக் கேட்டால், ‘நீங்கள் இதெல்லாம் கண்டிப்பா படிக்கணும், ஆனா இப்போ வேண்டாம்’ என்று சொல்லி விடுவார். “பெரியவங்க வேற மாதிரி படிப்பாங்க இல்ல அண்ணா ” என்று ஒருமுறை நாங்கள் கேட்க, ஒரு புத்தகத்தை எங்களிடம் காட்டி ‘நீங்க வேதாள மோதிரத்தை தேடி அலைஞ்சீங்க இல்ல, அதே போல் இந்த புத்தகத்துல வர பொண்ணு இருக்கற தெருவை தேடி சில பேர் கும்பகோணம் போறாங்க. விஷயம் வேணா வேறவா இருக்கலாம், ஆனா படிக்கறதுங்கறது ஒரே மாதிரியான கிறுக்கு தான் ” என்றார். என்னடா பெண்ணை தேடி போறாங்களே என்று அப்போது தோன்றினாலும் (பெண்களை கவனிக்காமல் இருப்பது தான் கௌரவம் என்ற பருவத்தில் அப்போது இருந்த எங்களுக்கு ,ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் பிழை தெரிந்து விட்டது என்பது வேறு விஷயம்) அந்தப் பெண் யார் என்பதும், அப்படி தேடித் செல்வது அந்தப் புத்தகத்தின் வாசகனைப் பொறுத்தவரை புனித யாத்திரையாக இருக்கும் என்பதும் நானும் கல்லூரி படிக்கும் காலத்தில் அந்த நாவலை வாசித்தபோதுதான் புரிந்தது.

அண்ணன் அரசு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதது அவர் தந்தைக்கு மிகவும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பன்முக ஆளுமையும் ஆற்றலும் கொண்ட அவர் வேண்டுமென்றே தேர்வுக்காக பெரிதாக பிரயத்தனம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு சில வருடங்கள் கழித்து தான் சந்தேகம் வந்தது. அவர் தந்தைக்கு அது அப்போதே பிடிபட்டிருக்க வேண்டும். பெரும்பாலானப் பெற்றோர்களை போல ‘கால் கட்டு போட்டா சரியாகிவிடும்’ என்று முடிவு செய்து சொந்தத்திலேயே மணம் முடித்து விட்டார். திருமணம் செங்கல்பட்டில் தான் நடந்தது, அண்ணன் எங்களுக்குக்கூட பத்திரிகை வைத்தார். ஆனால் நாங்கள் செல்ல முடியாத சூழல். அண்ணனைப் பற்றியே வீட்டில் யாருக்கும் தெரியாத போது திடீரென்று எப்படி சொல்ல என்று போகாமல் இருந்து விட்டோம். திருமணம் முடிந்த ஓரிரு வாரங்கள் கழித்து கடைக்குச் சென்றபோது அவர் மனைவியும் அங்கிருந்தார். அண்ணன் எங்களை திருமணத்திற்கு வராததற்காக திட்டினார், பின் ‘நான் சொல்லல அந்தப் பசங்கதான்’ என அவர் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்கா என்று அவரை நான் முதலில் அழைக்க, ‘ஏண்டா நான் அண்ணன் இவ அக்காவா’ என்று சிரித்தபடி அவர் கேட்க, புரிந்தும் புரியாமலும் வெட்கமாகி விட்டது. பிறகு அவர் மனைவியை ‘மன்னி’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டேன். மன்னியும் அண்ணனை புரிந்து கொண்டது அவருடைய அதிர்ஷ்டம் தான் என்று சொல்ல வேண்டும். சொந்தமென்பதால் அண்ணனைப் பற்றி அவருக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும். மன்னி அண்ணனின் கதைகளின் முதல் வாசகியானார்.

எத்தனை முறைதான் மோசமாக தேர்வெழுத முடியும். அந்த வருடமே அவருக்கு அரசுப் பணி கிடைத்தது. தென் தமிழகத்தில் பணி. அண்ணியுடன் கிளம்பிவிட்டார். கிளம்பும் முன் அவரைப் பார்க்க கடைக்குச் சென்றிருந்த போது, சோர்வாகவே இருந்தார். “சீக்கிரம் ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துடனும்” என்று வேலைக்குச் சேரும் முன்பே பணியிட மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கே அது குறித்த அதிக நம்பிக்கை இல்லை என்று தெரிந்தது. நாங்கள் கிளம்பும்போது “படிக்கறத மட்டும் விடாதீங்க, அப்பப்போ கடைப்பக்கம் வந்து பாருங்க” என்று சொல்லியவர் ,சில காமிக்ஸ் புத்தங்களை அன்பளிப்பாக கொடுத்தார். பிறகு நாங்கள் அவ்வப்போது கடைப் பக்கம் சென்றாலும் அவரை பார்க்க முடியவில்லை. அந்த வருட கோடையில் மணியின் தந்தையும் பணி மாற்றலாகி வேறு ஊர் செல்ல, அது ஒரு சேர வருத்தத்தையும், அண்ணனும் இதே போல் மீண்டும் செங்கல்பட்டு வரக்கூடும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது.

அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த சில வருடங்களுக்கு அவரைப் பார்க்க முடியவில்லை என்றாலும், பஜார் பக்கம் செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம் அண்ணனின் கடைவழியே செல்வேன், அவர் தந்தை தான் எப்போதும் இருப்பார். பூந்தளிர்,கோகுலம் போன்ற இதழ்களில் அவர் பெயரில் ஏதேனும் கதைகள் வெளிவந்திருக்கின்றனவா என்று தேடுவேன். நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு மாலை ஏதோ வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் அவர் கடை வழியாகச் சென்ற போது அண்ணன் உள்ளே இருந்தார். அவரைக் கண்டதும் பரவசமாக இருந்தாலும், என்னை நினைவில் வைத்திருப்பாரா என்ற தயக்கத்துடன் உள்ளே சென்று என் பெயரைச் சொல்லி என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். பெரிய சிரிப்புடன் ‘டேய் எப்படி டா மறக்க முடியும்” என்று என்னை தழுவிக் கொண்டார். பரஸ்பர தகவல்களை பரிமாறிக்கொண்டோம். மணி வேரூருக்குச் சென்றதையும், சில காலம் கழித்து அவனுடனும் தொடர்பறுந்து போனதையும், அதுவரை அவன் எனக்கு அனுப்பிய கடிதங்களில் அவரைப் பற்றி விசாரித்ததையும் தெரிவித்தேன்.

அண்ணனுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. ” வீட்டுக்கு வந்து பாப்பாவையும் உங்க மன்னியையும் பாரு” என்றார். லீவில் வந்திருக்கிறாரா என்று நான் கேட்டதற்கு “ஆமாம்டா, கடைய விக்கப் போறோம். அப்பாவால தனியா பாத்துக்க முடியல” என்றவர் “வீட்ட கூட இன்னும் கொஞ்ச மாசத்துல வித்துட்டு போயிடுவோம்” என்று சோர்வுடன் சொன்னார். “என்னன்னவோ நெனச்சிருந்தேன்” என்று தனக்குள்ளேயே ஆயாசத்துடன் கூறிக்கொண்டார். எதுவும் சொல்லத்தோன்றாமல் அமைதியாக இருந்தேன். சூழலை இலகுவாக்கும் என்று நினைத்தாரோ என்னவோ “என்னடா இன்னும் மோதிரத்தை தேடறயா” என்று அவர் கேட்க, சட்டென்று கண்ணில் நீர் தளும்பியது போல் இருந்தது. பேசினால் அழுது விடுவேன் என்று தோன்ற, எதுவும் சொல்லாமல், தொண்டையில் திரண்டுக் கொண்டிருந்த அழுகையை அடக்கியவாறு அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். “உன்ன பாத்ததும் நல்லதா போச்சு, நாளைக்கு சாயங்காலம் கடைக்கு வா. வீட்டுக் அழைச்சிட்டுப் போறேன், நெறய காமிக்ஸ் இருக்கு. எல்லாம் எடுத்துக்கோ, இனி அதுக்கெல்லாம் எங்க எடம்” என்றார். தலையாட்டி விட்டு கிளம்பியவன் அடுத்த நாள் அங்கு செல்லவில்லை. ரெண்டு மூன்று வருடங்கள் சென்ற பின்பே மீண்டும் அந்தத் தெரு வழியாகச் செல்லும் மனநிலை ஏற்பட்டது. ஆனாலும், 15 வருடங்கள் கழித்து நாங்களும் ஊரிலிருந்து கிளம்பும் வரையிலும் கூட, அந்தத் தெரு வழியாகச் செல்வதை முடிந்தளவு தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தேன்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.