(அண்மையில் மலேசிய எழுத்தாளர் ம. நவீன் வல்லினம் இதழில் எழுதிய “யாக்கை” சிறுகதை குறித்து பதாகை நண்பர்களிடையே விவாதம் நிகழ்ந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் கொண்ட கதை. மூன்று வெவ்வேறு விதமான வாசிப்பு சாத்தியங்கள் இக்கதைக்கு உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.)
யாக்கை என்றால் உடல். யாக்கை என்றவுடன் இயல்பாக யாக்கை நிலையாமையும் மனதில் உதிக்கிறது. உடலை மூலதனமாகக் கொண்டு ஈத்தன் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார். உடலை தனது தொழிலுக்கு மூலதனமாக கேத்தரின் பயன்படுத்துகிறாள். தந்தை தன்னை கடல் மீன்களுக்கு தின்னக் கொடுக்கிறார். கேத்தரினா தன் உடலை கதைசொல்லிக்கு அளிக்கிறாள். தானில்லாமலும் தொழில் நிகழ்கிறது, தான் உடல் மீண்டு வருவது வரை மகள் தத்தளித்திருப்பாள் என்று எண்ணியவர், அப்படி நிகழவில்லை என்றதும் குற்ற உணர்வு கொள்கிறார். கேத்தரின் எப்படியோ தனக்கான வருவாயை தேடிக்கொள்ளும் தொழிலைத் தேர்கிறாள். சொல்லப்படாத இடம் என்பது கோபியின் பாத்திரம் சார்ந்தது. அவன் ஈத்தன் கடலில் விழுந்ததை அறிந்திருக்கவும் கூடும். முன்னரே கல்லூரி செலவுகளை கவனிப்பதாக கேத்தரினை சீண்டியும் இருக்கிறான். இந்த தொழிலுக்கு அவனேகூட கேத்தியை அறிமுகம் செய்திருக்க முடியும். இரண்டு வகையிலும் ஈத்தன் தோல்வி அடைந்ததாக எண்ணுகிறார். தான் நம்பிய கிழட்டு கடல் அன்னையும் கைவிட்டதாக தோன்றுகிறது. தனது யாக்கையை பயனற்று உணரும் கிழவன் கடலில் சென்று மரிக்கிறார். அவளுடைய கதையை கேட்ட கதைசொல்லி குற்ற உணர்வின் காரணமாக அவளிடமிருந்து விலகி வருகிறான்.
இந்தக் கதைக்கு மற்றொரு சாத்தியமும் உண்டு. யாக்கை தூலமான இருப்பு. யாக்கை நிலையாமை என்பது திடப்பொருள் உருவற்றதாக ஆவது என்றும் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Yoke என்றால் பிணைதல் அல்லது பூட்டுதல். மரபில் அண்டத்தில் இருப்பது பிண்டத்தில், பிண்டத்திலிருப்பது அண்டத்தில் என்றொரு நம்பிக்கை உண்டு. எனினும் உடலில் உள்ள நீரும், புறத்தில் உள்ள நீரும் பிணையாமல் உடல் எனும் எல்லை ‘யாக்கை’ தடுத்து நிற்கிறது. இந்த எல்லையை மீற முடியுமா என்பதே கேள்வி. தனது உடலை மீறியவனுக்கும், உடலாக முடங்கியவனுக்குமான கதையாக இதை வாசிக்க முடியும். “முயக்கத்தில் ஒத்த நிறம் கொண்ட ஜோடியுடன் இருக்கும்போது தனியாக இருப்பதுபோல பிரம்மை அவனுக்கு ஏற்படுவதுண்டு. ஓர் அறைக்குள் நிர்வாண தனியனாக இருப்பதென்பது அவனை அச்சமுற வைக்கும்”- இந்த வரி கதையில் ஏன் வருகிறது? மேலதிகமாக பொருள் அளிக்க கூடிய சாத்தியம் உள்ளது. கதை புலன்களுக்கு ஒரு பஃப்பே விருந்து, கலவியைத் தவிர. கடைசி வரை அது மட்டும் கிடைப்பதில்லை.
“ரொம்ப நல்லது சர். கோத்துருக்கிற நீரெல்லாம் வெளியாயி உடம்பு காத்தாயிரும்”.- சோனாவில் சொல்பவள், “ஒடம்ப பலூனாக்கனும்”, என்று ஜகூசியில் காற்றை நிரப்பி மல்லாக்க மிதக்கிறாள். காற்று உடலுக்குள் செல்கிறது, மீள்கிறது, உடல் ஓர் எல்லையாக ஆகிறது, நீரில் உடல் மிதக்கிறது, நீர் உடலுக்குள் நுழையாமல் யாக்கை காக்கிறது. தந்தை கடலை நோக்கி குறியை நீட்டி ஒன்றுக்கு இருக்கும்போதுதான் கடலில் விழுந்து, கடலால் ஏற்கப்படுகிறான். மகள் கேத்தி அளிக்கும் காண்டமை அணிய கதைசொல்லியின் குறி மறுக்கிறது. கதைசொல்லிக்கு தன் எல்லையின் மீதான பிரக்ஞை அதீதமாக உள்ளது, ஆகவே அவன் அவளுடன் கலக்காமல் தவிர்க்கிறான்.
கடலில் விழுந்த ஈத்தன் “இரண்டாவது நாள் புலரியைப் பார்த்தபோது அவர் கடலில் ஓர் அலையாக மாறியிருந்தார்… மருத்துவர்களின் பேச்சொலி கடல் அலைகளின் இரைச்சல்போல வதைத்தது. அவற்றில் துள்ளலுக்கு ஏற்ப உடல் அலைவதாகத் தோன்றியது. கண்களைத் திறக்க பயந்து கட்டிலைத் தொட்டு திரவ நிலையில் இல்லை என உறுதியானபின் நிம்மதி அடைந்தார்… விழிகள் விரிந்து இயல்புநிலைக்குத் திரும்பி ஓரமாகக் கடல் நீரை வழியவிட்டது”. இந்தப் புள்ளியில் அவனுடைய உடல் எல்லையை கடந்து கடலாகவே ஆகிறது. அவன் மீட்கப்பட்டு உடல் மீண்டதும் அவனுடைய உடலின் எல்லையை, பருன்மையை உணர்கிறான். அதை மீறிச் செல்லவேகூட மீண்டும் அதே இடத்தில் கடலில் குதித்து “தன்னை கடலாக்கி கொள்கிறான்”.
மற்றொரு சாத்தியமும் இக்கதைக்கு உண்டு- கேத்தரினா ‘அரேபிய இரவுகள்’ ஷெஹரசாடேயைப் போன்றவள். அவளைப் போன்றே கதைகளைக் கொண்டு ஆணின் காமத்தைக் கட்டுப்படுத்தி காலம் தாழ்த்தி கலவியைத் தவிர்ப்பவளாக கேத்தரினா ஏன் இருக்கக்கூடாது. அவள் புனைவுகளின் அரசி.
இந்த அரேபிய இரவு தன்மை கொண்டதாலேயே இது முக்கியமான கதையாகப் படுகிறது- ஏட்டைத் தாவும் பிரதி. சிறுநீர் கழிக்கப் போனவன் கடலினுள் விழுந்து மரித்தாற்போல், கலவி கொள்ளப் போனவன் காண்டம் மறுத்து (அதுவும் எத்தனை முறை), காற்சட்டை அணிந்தாற்போல் (கடைசியில் அவன்தான் ஷெஹரசாடே: பெண்ணை யோனியில்லாதவளாய்க் காணச் செய்யும் ஆணின் அச்சம்; கடலும் உடலும்)
Yoke: பிணைத்தல், பூட்டுதல். நீருக்கும் காற்றுக்கும் இடையிலுள்ள எல்லையல்ல, நீரையும் காற்றையும் இன்ன பிறவற்றையும் பூட்டும் யாக்கை. அதன் பணி யாத்தல், ஷெஹரசாடே. யாக்கையின் ஆற்றல் புனைவாற்றல், அதன் மீட்சி. மீட்சி: கலவிக்கு உடலை விலை பேசும் பெண்ணுக்கு கதைகள் அளிக்கும் மீட்சி. கற்பனை கொண்டு யாக்கும் கதைசொல்லியின் மீட்சி: உடல் கொண்டு அளிக்க முடியாத விடுதலை.
சூட்டுக் காற்று கன்னத்தில் பட, தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் படுக்கைக்குச் சென்று ரகசியமாய் கிசுகிசுக்கும் அப்பா- இரண்டு மாதங்கள் கடலில் இருந்தேனா என்று கேட்டு வெகு நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் மகளை, மறுநாளே கப்பலேறி முதல் முறை கடலில் விழுந்த அதே இடத்தில் விழுந்து சாகிறான். யாரை விலகி, அல்லது, எதைத் தேடிப் போகிறான்?
எழுத்தாளர் உத்தேசித்ததை விட அதிகம் செல்லும் மிகைவாசிப்புகள் தான் இவை. ஆனால் இந்த வாசிப்புக்களுக்கான இடைவெளி கதையில் இருக்கிறதா என்றால்? ஆம். நாம் ஒவ்வொரு கதையிலும் பல்வேறு வாசிப்புச் சாத்தியங்களை தேடுவதன் விளைவாகவும் இருக்கலாம்தான். திறந்த முடிவு என்ற பெயரில் சில சமயம் முற்றுப் பெறாத கதைகளை, எழுத்தாற்றல் குறைபாடான கதைகளை நாம் மிகையாக பொருளேற்றி வாசிக்கவும் கூடும். ஆனால் இது அப்படிப்பட்ட கதையைத் தெரியவில்லை.