தமிழக வரலாற்றில் திரும்பத் திரும்ப படிக்கக்கூடிய காலகட்டம் என்பது, அது புனைவாக இருந்தாலும் சரி, பாடப்புத்தகமாக இருந்தாலும் சரி, கி.பி. 7ம் நூற்றாண்டு துவங்கி 13ம் நூற்றாண்டு வரையிலான ஒன்று. அதற்கு முந்தைய காலகட்டத்தில் தெளிவில்லை. நிகழ்வுகளுக்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதே சமயம், சுவையான வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும் 13ம் நூற்றாண்டு துவங்கி 20ம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாறு அவ்வளவு விரும்பி படிக்கப்படுவதில்லை- முக்கியமாக, 18ம் நூற்றாண்டும் 19ம் நூற்றாண்டும் தமிழக வரலாற்றின் அவலமான காலகட்டங்கள். வலுவான மையப்பேரரசு என்று ஏதுமில்லை. பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, குறுநில மன்னர்களாலும் பாளையக்காரர்களாலும் ஆளப்பட்டு வந்த காலம், ஐரோப்பியர் முதன்முதலாக ஆட்சியுரிமையை விலைக்கு வாங்கிய காலகட்டம். ஒரு தமிழனாகப் படிக்க பெரும் சோர்வூட்டும் காலக்கட்டம். ஆனால் ஒரு வரலாற்று ஆர்வலனுக்கோ மாணவனுக்கோ அது அப்படியல்ல. பெரும் மாற்றங்களைச் சந்தித்த அந்த காலகட்டமே பெரும் ஆர்வமூட்டக்கூடிய ஒன்றெனக்கூட சொல்ல முடியும். ஆனால் அந்தக் காலகட்டம் பற்றிய புனைவுகள் தமிழ்ப் பரப்பில் (நான் அறிந்த வரையில்) அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஒப்பு நோக்க தமிழ் சினிமாவில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கைச் சீமை ஆகிய படங்களில் (அவற்றின் அத்தனை வரலாற்றுப் பிழைகளோடும்) அக்கால நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று மகத்தான வெற்றி பெற்றதும், இன்னொன்று தோல்வியடைந்ததுமேகூட இதில் ஆராயக் கூடிய விஷயங்கள்.
பாளையக்காரர்கள், ஐரோப்பியர்களான ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆர்க்காட்டு நவாப், தஞ்சை மராத்திய அரசு, நாயக்க அரசர்களின் கடைசி வாரிசுகள் என்று ஒருவரோடு ஒருவர் தங்களுக்குள் இணைந்தும் பிணங்கியும் உருவாக்கிய அந்தக் குழப்பமான காலகட்டம் பற்றி இன்று படிக்கும்போது யார் யாருக்குத் துணை, யாருக்கு எதிரி என்பதெல்லாம் எவ்வளவு விரைவில் மாறியிருக்கிறது என்பது மிகவும் வியப்பூட்டுகிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். மருது பாண்டியர்கள் கட்டபொம்மனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா? அல்லது, ஏன் ஆதரிக்கவில்லை? அவர்களுக்கும் வேலு நாச்சியாருக்கு என்ன உறவு? கட்டபொம்மன் விடுதலைப் போர்வீரனா? அல்லது வெறும் கொள்ளைக்காரனா? எட்டப்பனும் புதுக்கோட்டை மன்னரும் ஏன் ஆங்கிலேயரோடு சேர்ந்து கொண்டார்கள் என்பதற்கெல்லாம் தெளிவான விடைகள் ஏதும் இல்லை. கே.கே. பிள்ளை அவர்கள் எழுதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘ தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’, என்கிற பெரிதும் மதிக்கப்படுகிற நூலில், அதன் 500 பக்கங்களில், இந்த காலகட்டத்தின், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்களின் கிளர்ச்சிக்கு வெறும் ஒன்றரைப் பக்ககங்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று சில புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் காலகட்டத்தின் வரலாறு முழுமையாக எழுதப்படும் என்று தோன்றுகிறது.
இந்த நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் “1801” நாவல் இந்தக் காலகட்டத்தைப் பற்றியது என்பதால் மிகவும் ஆவலோடு வாசித்தேன். நாவல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஒரு மாதத்துக்குப் பின் தொடங்கி, மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டு அந்தக் கிளர்ச்சி முற்றிலும் ஒடுக்கப்படுவதோடு முடிகிறது. இடையில், கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரை, சிவத்தையா, இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போர், ராமநாதபுரச் சீமை சேதுபதி பட்டத்துக்கான வாரிசுரிமைப் போர் என்று பல நிகழ்வுகளினூடாகப் பயணிக்கிறது.
பல புதிய தகவல்களை இந்நாவல் அளிக்கிறது. உதாரணமாக, கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை பிரபலமானவர். ஆனால் அவரது முதல் தம்பியான சிவத்தையா? அவரைப் பற்றி இதுவரை நான் எதுவும் கேள்விப்பட்டதில்லை, படித்ததில்லை. ஆனால், கட்டபொம்மனின் மறைவுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பாளையங்கோட்டை சிறையில் ஏற்பட்ட ஒரு கலவரத்தின் மூலம், அங்கிருந்து வெளியே வந்து தன் தம்பி ஊமைத்துரையின் துணையுடன், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டி எழுப்பி ஆட்சி புரிந்திருக்கிறார் இவர் என்ற தகவலை நான் இந்த நாவலில்தான் படிக்கிறேன். இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கர்னல் அக்னியுவால் (Agnew), தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுகிறார் இவர். அது இந்நாவலில் விரிவாகவே வருகிறது.
அதேபோல், மருது சகோதரர்கள் மராட்டிய சிவாஜியின் படைத்தளபதிகளில் ஒருவரான தூந்தாஜி வாக், மற்றும் கோவை ஹுசேன், விருப்பாச்சி கோபால நாயக்கர், ஊமைத்துரை ஆகியோர் ஆதரவோடு புனேவிலிருந்து நாங்குநேரி வரையிலான ஒரு ஒருங்கிணைந்த போரை ஆங்கிலேயருக்கு எதிராக துவங்கியதையும் இந்நாவல் காட்டுகிறது. மிக முக்கியமாக, மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக திருவரங்கத்தில் வெளியிட்ட விடுதலைப் பிரகடனமும் இந்நாவலில் இடம் பெறுகிறது..அதுமட்டுமில்லாமல் சிவகங்கை மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி, இரண்டு பாளையகாரர்களின் நெருங்கிய உறவினையும்,முக்கியமாக, பிணக்கினையும், அவை எப்படி அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயரின் கை தென்னகத்தில் ஓங்கிட வழி வகுத்தன என்பதையும் சித்தரிக்கிறது..
இவ்வளவு அருமையான களத்தினையும் காலத்தையும் கருப்பொருளாக தன்னகத்தே கொண்டிருந்தும் இந்த நாவல் அது அடைய வேண்டிய உயரத்தினை அடையவில்லை என்பதே இதன் பெரிய சோகம். ஆசிரியரின் புனைவுத் திறன் மற்றும் மொழி, நடை ஆகியவற்றில் உள்ள போதாமைகளே இதற்கு முக்கிய காரணம். பல இடங்களில் பத்திரிக்கைகளில் வெளிவரும் வெறும் தகவல் கட்டுரையை படிக்கும் உணர்வே மேலிடுகிறது. உணர்ச்சி மிகுந்த காவியமாக வெளிப்பட்டிருக்க வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை எல்லாம்கூட மிகத்தட்டையான தன் எழுத்தின் மூலம் சாதாரணமாக்கி விடுகிறார் ஆசிரியர். இருப்பதற்குள்ளேயே ஓரளவாவது சுமாராக வந்துள்ள இடங்கள் என்று, மருது சகோதரர்கள் தாம் தூக்கிலேற்றப்படுவதற்கு முன் கர்னல் அக்னியுவுடன் வாதாடும் இடத்தை சொல்லலாம்.
இம்மாதிரி சமகாலத்துக்கு மிக அருகாமையிலுள்ள வரலாற்றுக் காலத்தைப் பற்றி ஒரு புனைவை எழுதும்போது அதன் மொழியும் நடையும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயம். கல்கி, சாண்டில்யன், போன்ற வரலாற்றுக் கதாசிரியர்களின் செந்தமிழ் மொழியா, அல்லது இன்று வழங்கும் மொழியா என்பதைத் தீர்மானிப்பதில் ஆசிரியர் மிகவும் குழம்பி இருக்கிறார். பல இடங்களில் தற்கால மொழி பயன்படுத்தப்படுவது நாவல் நடக்கும் காலத்துக்கு நியாயம் செய்யத் தவறிவிடுகின்றது. மேலும், இன்று வழங்கப்படும் கலைச்சொற்களை அந்த காலகட்டத்துக்கு பயன்படுத்துவதும் துருத்திக்கொண்டு நிற்கிறது. உதாரணமாக, மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட மறைந்திருந்து தாக்கும் போர்முறை. இதை நாவலில் வரும் பாத்திரங்கள் “கொரில்லாப்” போர்முறை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? அந்த சொல் தமிழ் மொழியில் எந்தக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது போன்ற விஷயங்களை ஆசிரியர் கவனிக்கவேயில்லை என்று தெரிகிறது.
இன்னொன்று. நாவலின் காலகட்டத்தில் நிகழாத சம்பவங்களை சொல்லும்போது அவற்றை மீண்டும் மீண்டும் பாத்திரங்களின் உரையாடலின் மூலமே முற்றிலும் வெளிப்படுத்தும் பாணி சலிப்பூட்டுவதாகவும் எப்போதும் யாரேனும், பேசிக்கொண்டே இருப்பதைப் போன்ற, படிப்பதைவிட உரை கேட்பதைப் போன்ற ஒரு உணர்வையும் தருகிறது.
தகவல் களஞ்சியமாகத் திகழும் இதில், தகவல் பிழைகளும் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக, மராட்டிய சிவாஜியின் வரலாற்றை விவரிக்கும் ஒரு இடத்தில் சிவாஜி, ஒளரங்கசீப் இருந்தவரையில், மலைகளில் மறைந்திருந்து போர் புரிவதையே கைக்கொண்டார் எனவும் ஒளரங்கசீப் இறந்த பின்னர்தான் வெளியே வந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் சிவாஜி ஒளரங்கசீப்புக்கு முன்னரே மறைந்து விட்டார் என்பதும், அவர் மறைந்து 17 ஆண்டுகள் கழித்தே ஒளரங்கசீப் மறைந்தார் என்பதுமே வரலாறு. நாம் அறிந்த இடங்களில் இருக்கக்கூடிய இது போன்ற பிழைகள், நாம் அறியாத இடங்களை விவரிக்கும் பகுதிகளை சந்தேகத்தோடு பார்க்க வைக்கிறது.
ஸ்காட்லாந்துக்காரரான கோர்லே என்பவர் இந்தக் காலத்திய நிகழ்வுகளை பற்றி எழுதிய குறிப்புகளை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்னால் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய மருதுபாண்டியர்கள் பற்றிய ஒரு கட்டுரையேகூட ஒரு புனைவுக்குரிய சுவாரஸ்யம் கொண்டிருந்தது. ஆனால், தமிழர்களின் மிகச் சோதனையான, படிக்கப் படிக்க மிகுந்த மன வருத்தத்தினைத் தரும், மிகப்பெரிய சவாலான ஒரு காலகட்டத்தினை எடுத்துக் கொண்டு, அதற்கான தகவல்களை சேகரிப்பதில் மிகக்கடினமான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தந்து, மிகுந்த பிரயாசையுடன் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு, அந்த படைப்பாளியின் புனைவுத்திறன் மற்றும் மொழிநடை போதாமைகளால் திருப்தி அளிக்காத ஒன்றாக மாறி இருப்பது மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது.
‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ. ஆ.ப., ரூ.500, அகநி
இப்படி ஒரு நாவல் வந்திருக்கும் தகவலையே இன்றுதான் அறிந்தேன். எனக்கும் அக்காலகட்டம் குறித்து புனைவாக அனுபவம் கொள்ள ஆசைதான். வரலாறு எழுதுகிறேன் என்று புனைவை வரலாறாக எழுதும் நம்மவர்களுக்கிடையில் வரலாற்றை புனைவாக வாசிப்பது எவ்வகையிலும் சிறந்ததே. ஆசிரியரின் இந்த முயற்சிக்காக பாராட்டியே ஆகவேண்டும. நாவல் வெளியான ஆண்டு ஆசிரியரின் பிற இலக்கியப் பங்களிப்பு குறித்து தெரிவித்தால் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். இ.ஆ.ப போன்ற பணிகளில் இருந்துகொண்டு ஒருவர் நாவல் எழுதுவதென்பது மிகவும் சவாலான முயற்சியே.