
படம்: discoverybookpalace.com
வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பு படிப்பதற்கு முன் அந்த வார்த்தையை நான் அறிந்ததில்லை. அகராதி வெண்ணிலை என்றால் ஈடுகாட்டாது வாங்கப்பட்ட கடன் (unsecured loan) என்கிறது. சு. வேணுகோபால் கதையில் கையறுநிலை என்ற பொருளில் உபயோகப்படுத்தியிருக்கிறார்.
வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பில் வரும் எளிய மனிதர்கள் முக்கால்வாசிப் பேர் கைவிடப்பட்டவர்கள்தான். விவசாயம் நொடித்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பவர்கள், குடிகாரக் கணவனை விட்டுச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளியின் அரைகுறை ஆங்கிலத்துக்குத் தடுமாறும் குழந்தைகள் என அனைவரும் கைவிடப்பட்டவர்கள்தான்.
ஆனால் யாரும் நம்பிக்கை இழப்பதில்லை. எப்பாடுபட்டாவது முன்னேறி விடலாம் என்று நம்புகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் வந்து விடும் என்றும், ஆங்கில வழிக் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்றும், தன் சாதி அரசியல் தலைவர் மூலம் அரசியல்வாதியாகிவிடலாம் என்றும், வாழும் கலை கற்பதன் மூலம் தன் கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் நம்பும் விடிவெள்ளிகள் அவர்களைக் கைவிட்டுவிடுகின்றன. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.
வேணுகோபாலின் கதைகள் நேரடியானவை. விவரணைகள் மூலம் கதைக்களனைச் செறிவுபடுத்துபவை. விவசாயம் சார்ந்த அவரது கதைகளில் இவை சற்று அதிகமாகவே தெரியும். அந்த விவரணைகளையே படிமங்களாக்கும் ரசவாதம் இயல்பாகவே அவரது கதைகளில் கைகூடி வருகிறது.
’உயிர்ச்சுனை’ பெரியமகளிடம் கடன் வாங்கி போர்வெல் போடும் ஒரு சம்சாரியின் கதை. அவள் கணவனுக்குத் தெரியாமல் எடுத்து கொடுத்த பணம். பக்கத்து ஊரில் கோலா கம்பெனி ஆரம்பித்த பிறகு கிணறு வற்றி விடுகிறது. போர்வெல் போட்டாலாவது நீர் கிடைக்குமா என்று முயற்சி செய்கிறார். முயற்சி வீணாகிறது. பணமும் போய்விட்டது. எல்லாரும் நிலைகுலைந்து கிடக்கையில் பேரன் கீழே விழுந்து அழுகிறான். யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. “நான் செத்துப் போறேன்” என்றவாறு போகிறான். அதைக் கேட்டு அவன் அம்மா ஓடிவந்து தூக்குகிறாள்.
உயிர்ச்சுனை வற்றி விட்டால் விவசாயி என்ன செய்வான்? ஒவ்வொருவராய் வயல் வரப்பை விட்டு சிறு நகரங்களுக்கும் வணிகத்துக்கும் நகரும் அவலம் இந்தக் கதையில் அழுத்தமாய்ப் பதியப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆசிரியர் வேலை பார்க்கும் மகள், கண்ணப்பரின் பேரன் பெயர் நிதின் என்று விவரங்கள் மூலம் சமூக மாற்றங்கள் உணர்த்தப்படுகின்றன. கண்ணப்பர், திருமணத்திற்கு நிற்கும் அவரது இளைய மகள், பேரன் நிதின் என்று மூன்று பேர் பார்வையில் இந்தக் கதை பயணிக்கிறது, கதையில் என்னைப் பாதித்த வரிகள் இவை
மரங்கள் ஒரு நொடியில் காணாமல் போனால் கூடப் பரவாயில்லை. கண்ணெதிரே சிறுகச் சிறுக சாவில் துடிப்பதை தினமும் பார்த்துத் தொலைப்பது தான் வேதனை. இதென்ன ஜென்ம பாவமோ
விவசாயி ஒருவரின் அப்பட்டமான வேதனையைப் பிரதிபலிக்கும் குரல்.
’புத்துயிர்ப்பு’ கதை இந்தத் தொகுப்பில் சிறந்த கதைகளில் ஒன்று. வறட்சியினால் சினை மாட்டுக்கு வைக்கோல் வைக்க முடியாமல் ஊரெல்லாம் தேடி அலைகிறான். வீட்டில் அவன் மனைவியும் நிறை மாதக் கர்ப்பிணியாய் இருக்கிறாள். மாட்டை விற்றுவிட அவன் மனம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் நள்ளிரவில் தீவனம் திருட முயன்று மாட்டிக்கொள்கிறான். மறுநாள் பஞ்சாயத்தில் நிற்க நேரிடும் என்று பயந்து பூச்சி மருந்து குடித்துத் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறான். இந்தக் களேபரத்தில் அவன் மனைவிக்குக் குறைப் பிரசவத்தில் பெண் பிள்ளை பிறக்கிறது.
`”கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாட்டேங்கிற மேல போகிற பகவானே!. இந்தா இந்தப் பிஞ்சப் பாரு” என்று ஆகாயத்தைப் பார்த்து சொன்னாள் கனகராஜின் அம்மா. பிசுபிசுக்கும் குழந்தையைப் பார்த்தாள். அவசர அவசரமாக உலகைப் பார்க்க வந்திருக்கும் அதன் உருவைப் பார்த்து ‘துணிச்சலகாரி’ என்றாள். பசலையின் கடவாய் ஓரத்தில் நுரைத்த எச்சிலில் சூரியன் ஒடுங்கி ஒளிர்ந்தான். சிசுவின் புன்முறுவலில் சூரியன் நடுங்கியது’
அந்தக் கடைசி இரண்டு வரிகளில் உள்ளது புத்துயிர்ப்பு. எவ்வளவு வறண்டாலும் உயிர் என்பது எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளப் போராடும். அந்தப் போராட்டத்தில்தான் இந்த உலகம் இயங்குகிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை விவசாயக் கதைகள், சிறு நகரக் கதைகள் என்று இரண்டாகப் பிரித்துவிடலாம். சிறு நகரக் கதைகள் பெரும்பாலும் பெண்கள் சுமக்கும் பாரத்தைப் பற்றியவையே. வேணுகோபால் தன் கதைகளில் வரும் பெண்களைக் கரிசனத்துடனேயே படைக்கிறார். குடிகாரக் கணவனிடம் அடி வாங்கும் பெண்கள், வேலைக்குப் போகுமிடத்தில் கை பிடித்து இழுக்கப்படும் பெண்கள் அவர் கதைகளில் அடிக்கடி வந்து போகிறார்கள்.
தலைப்புக் கதையான ’வெண்ணிலை’ அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியது. பாலியல் கிளர்ச்சிக்காகத் திரை அரங்குக்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் நிற்கும் பெண்ணைப் பார்க்கிறான் அவன். முதலில் அவளைத் தவறாக நினைக்கிறான் பின்னர் நகலெடுக்கும் கடையில் வேலை பார்த்த பெண் என்று ஞாபகம் வருகிறது. அவளைச். சில முறைதான் பார்த்திருக்கிறான். எதற்காக சாலையில் காத்து நிற்கிறாள் என்று அவளிடம் கேட்கும்போது, அவள் அப்பா அருகில் உள்ள மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் அவர் உடலைப் பெற காசில்லாததால் தெரிந்தவர்கள் யாரும் வருகிறார்களா என்று காத்திருந்த்தாகவும் கூறுகிறாள். அண்ணன்களால் விரட்டப்பட்டு ஊருக்குப் புதிதாய் வந்தவர்கள். நகரத்தில் யாரையும் தெரியாது. வேலை பார்த்த இடத்திலும் முதலாளி கையைப் பிடித்து இழுத்ததால் வேலையை விட்டு நின்றுவிட்டாள். இப்படிப்பட்ட கையறுநிலையில் நிற்கும் பெண்ணைத் தவறாக நினைத்துவிட்டோமே என்று இவன் மனம் பதறுகிறது. இறுதிக் காரியத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குகிறான்.
உடலை வீட்டிற்குக் கொண்டு வந்ததும் என்னைப் பார்த்து அவள் கும்பிட்டது உள்ளே கிடந்து குடைந்தது. அவள் கைகளில் இருந்த நடுக்கம் முள்ளாய்க் குத்த்த் தொடங்கியது
என்று முடிகிறது கதை. சுஜாதாவின் புகழ் பெற்ற ’நகரம்’ கதைக்குச் சமமாக இந்தக் கதையைச் சொல்லலாம்.
’பேரிளம் பெண்’ கதை கண் முன்னே கரைந்து கொண்டிருக்கும் தன் இளமையைத் தக்க வைக்கப் போராடும் பெண்ணைப் பற்றிய கதை. சடங்கு விழாவிற்குப் போகிறவள் அங்கு எல்லாரும் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எடுப்பாய் அலங்காரம் செய்து கொண்டு அங்கு இருக்கும் சின்னப் பெண்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறாள். இவள்1 பெண்ணோ நிறைமாத கர்ப்பிணியாய் வீட்டில் இருக்கிறாள். இரவு விழாவிற்கு அலங்கரித்துக் கொள்ள எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கும்போது பெண்ணிற்குப் பிரசவ வலி வந்து விடுகிறது. இவளுக்குப் பெண் மேல் கோபம் கோபமாய் வருகிறது. பொதுவாகக் கதைகளில் காணக்கிடைக்கும் தாய்மைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள முரணைக் காட்டுகிறது இந்தக் கதை.
வேணுகோபாலின் கதைகளில் வரும் குழந்தைகள் இயல்பு மாறாதவர்களாகவே இருக்கிறார்கள். ’நிரூபணம்’ கதையில் வரும் எபனேசர் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. குடிகாரத் தந்தை, அதனால் எரிச்சலில் இருக்கும் தாய், பயமுறுத்தும் ஆங்கில வழிக் கல்வி என்று அவன் உலகம் பயத்தாlலானதாக இருக்கிறது. கூட விளையாடும் பையன் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டும்போது பதிலுக்குத் திட்டவும் முடியவில்லை (ஜீசஸ் கைவிட்டு விடுவார் என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள்). இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் சர்ச்சுக்குப் போகும் வழியில் அநாதரவாய் கிடக்கும் பிச்சைக்காரத் தாத்தாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டு பிஸ்கெட் வாங்கிக் கொடுக்கிறான்.
பிஸ்கெட்டை வாங்கியவன் ,”Jesus Christ never fails to feed his followers” என்றான் ஆங்கிலத்தில். “He lives with Children” என்று புன்னகைத்தபடி மேரி கோல்டு உறையை ஆர்வமாகப் பிரித்தான்
’புற்று’ கதையில் வரும் சிறுமி பூமிகாவும் பயப்படுகிறாள். கதை அவளும் அவள் சிநேகிதிகளும் நாய்க்குட்டி வாங்க முயற்சிப்பதில் ஆரம்பிக்கிறது. விலை அதிகமுள்ள நாய்க்குட்டியை வாங்க முடியாமல் தவிப்பவள், தெருவில் வளரும் நாய்க்குட்டி ஒன்றினை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாள். பெட்டை நாய்க்குட்டியை வளர்த்தால் குட்டி போட்டுத் தள்ளும் என்று அவள் மாமா சொல்கிறான். பூமிகாவை ஏமாற்றி குட்டியை எடுத்துக் கொண்டு போய் நடுரோட்டில் தள்ளிவிட்டு விடுகிறான். தூக்கி எறியப்பட்ட நாய்க்குட்டி, மேல்வீட்டில் இருந்த அக்கா கல்யாணம் என்ற பெயரில் இன்னொருத்தர் வீட்டுக்குத் தள்ளி விடப்பட்டது, தனக்கு அடுத்துப் பிறந்து சில நாட்களில் தவறிப்போன தங்கையின் நினைவு எல்லாம் சேர்ந்து பூமிகாவைப் பயமுறுத்துகிறது. அவள் அம்மாவிடம் கெஞ்சிகிறாள்
”சொல்லுமா. என்னைய எங்கயாவது தள்ளி விட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மா” நெஞ்சு என்னவோ அதிர்ந்தது அம்மாவிற்கு.
ஆண் பெண் உறவின் சிக்கல்களை இரு கதைகளில் தொட்டுச் செல்கிறார் வேணுகோபால். அவற்றில் ’உள்ளிருந்து உடற்றும் பசி’ அதிர்ச்சி மதிப்பீட்டையும் மீறி முக்கியமான கதை. கதையின் தலைப்பு திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டது.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
என்பது குறள். வேண்டிய காலத்தில் மழை பெய்யாவிட்டால் நீரால் சூழ்ந்த இவ்வுலகத்தின் உயிர்களை வருத்தும் பசி.
கதை மூன்று தங்கைகளைக் கரை சேர்க்கும் அண்ணனைப் பற்றியது. சின்ன வயதிலேயே அப்பா விட்டுவிட்டுப் போய்விட்டார். அம்மாவும் இறந்து போக, கூலி வேலை செய்து தங்கைகளைக் காப்பாற்றுகிறான் அண்ணன். கதை கடைசித் தங்கையின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் அக்கா கல்யாணம் ஆகிப் போன பிறகு இவள் தங்களுக்காக தன் இளமை முழுவதும் செலவழித்த அண்ணனை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். வேலை பார்க்கும் துணிக்கடையின் வாசலில் நின்று தன்னை நோட்டம் விடும் ஜெயக்குமார் மேல் வரும் ஈர்ப்பை இனி துண்டித்துக் கொள்ள வேண்டும், அண்ணன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று உறுதி கொள்கிறாள். அன்று இரவு அண்ணனுக்கு சமைத்துப் போட்ட பின் உறங்கும்போது கனவில் ஜெயக்குமார் வருகிறான். அவன் உடல் சூடு அவள் மேல் பரவுகிறது. விழித்துப் பார்த்தால் நிஜமாகவே ஒரு கை அவள் மேல் இருக்கிறது. அதிர்ந்து நகர்கிறாள். என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.
தலை குனிந்தவாறே முனகலைப் போல அவன் கேட்டான், ”அக்கா அவுங்க ஒங்கிட்ட வேற ஒண்ணும் சொல்லலையா..”
இந்த ஒற்றை வரியில் அவனது இயலாமை, வேறு வழியில்லாத நிலமை, அசூயையை மீறி அவன் மேல் பரிதாபம் என அனைத்தையும் கொண்டு வந்து விடுகிறார் வேணுகோபால். நேரத்தே மழை பெய்யாவிடின் நீர் சூழ்ந்த உலகத்தின் உயிர்களைப் பசி வருத்தும்.
எளிய மக்களையும் அவர்கள் பிரச்சனைகளையும் கரிசனத்தோடு அணுகியுள்ளார் வேணுகோபால். அவருக்கு முன்னோடியாகச் சொல்ல வேண்டுமென்றால் அசோகமித்திரனைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் வரும் கசப்புடன் கூடிய அங்கதத்தை வேணுகோபால் கதைகளில் காண முடிவதில்லை. நெருஞ்சி முள் தைத்த வெகு நேரத்திற்குப் பின்னும் வலிப்பது போல் இந்தக் கதைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் வெகு நேரம் நம்மைத் தொடர்கின்றன். தமிழின் முக்கியச் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் வேணுகோபாலுக்கு முதல் வரிசையில் என்றும் இடமுண்டு.
One comment