கூடு- கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

எனது பெருவிரலோடு தன் சின்னஞ்சிறு கைகளை கோர்த்துக் கொள்வதில் அவனுக்கு பெருவிருப்பமிருந்தது. அது கிட்டத்தட்ட அதிகாலை பனிக்குள் ஒளிந்துக் கிடக்கும் மலையடுக்குகளை சூரியன் அணுகி நெடுநேரம் கழிந்த பிறகும் நாளிக்குள் மூழ்கிக் கிடக்கும் விருப்பத்தையொத்தது. அதனாலேயே பகல் கனியத் தொடங்குவது அவனுக்கு வாதையாக இருந்தது. பிறகு அதை விட பெரும்வாதைகள் அங்கு நிகழத் தொடங்கின. மரங்களை வெட்டியதாகவும், பறவைகளை சுட்டதாகவும், பன்றிகளை உண்டதாகவும் அவர்கள் வெவ்வேறு காரணங்களை குறிப்பிட்டாலும் குறிகள் எங்கள் நிலத்திற்கானவை என்பதை உணரவியலாத வயது அவனுக்கு. மேற்கு வானில் மறைய எத்தனிக்கும் சூரியனின் செந்நிற ஒளிக்கீற்றுகளை போல நாங்கள் இரத்தம் சிந்தத் தொடங்கியிருந்தோம். அவனோ காடெங்கும் திரிந்தலைந்தலையும் வேட்கை கொண்டவனாக வளரத் தொடங்கினான். உயர்ந்த நெடிய தோற்றம் கொண்டவன் அவன். கரிய நிறமும் சற்றே வரிசை தவறிய பற்களுமாய் இருப்பான். கொழுத்து விளைந்த வயக்காட்டை இரவு நேரங்களில் அவனிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம். சிறுத்தையின் காலடித்தடத்தில் தன் படர்ந்த பாதச்சுவடை ஒற்றி எடுப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.

அன்று ஆபிசர்கள் கடமான் தேவைப்படுவதாக சொல்லியனுப்பியிருந்தனர். சமவெளிக்கும் எங்களுக்குமான இணைப்பை இவர்களிடமிருந்து நாங்கள் தொடங்கிக் கொண்டதெல்லாம் ஒரு காலம். எப்படியாவது இவர்கள் இணக்கமாகி விடமாட்டார்களா என்று ஏங்கிக் கிடக்கும் காலமிது. அசைவை நோக்கி குத்தீட்டியை எறிவது ஒன்றும் கடினமல்ல. கடமான் தட்டுதடுமாறி சொப்பங்குழிக்குள் விழுந்திருந்தது. கிடைத்த கிளைகளிலும் பிடிமானங்களிலும் கால் வைத்து புதர் அப்பிக் கிடந்த பள்ளத்தினுள் இறங்கினான். நின்று நிதானித்து விருந்து பரிமாறுமளவுக்கு கொழுத்த மான் அது. இவனை கண்டதும் துள்ளியெழ முயன்று, இயலாமையில் மடங்கியது. அதன் தொடையில் குத்தி நின்ற குத்தீட்டியின் வழியே குருதி பெருகிக் கொண்டிருந்தது, அப்போதுதான் அதன் வயிற்றை கவனித்திருக்க வேண்டும். நல்லவேளையாக உள்ளிருக்கும் குட்டிக்கு அடி விழுந்திருக்காது என்ற ஆறுதல்பட்டுக் கொண்டான். குத்தீட்டியின் காயம் வலி ஏற்படுத்தாதவாறு நோகாமல் ஊனான்கொடியால் அதன் கால்களை கட்டி சாக்கில் சாய்த்து வைத்து சாக்கை கயிற்றில் இணைத்தான். கூட்டாளிகள் புன்னைமர கமலையில் கயிறு கட்டி இழுக்க, கடமான் மேலே வந்து சேர்ந்தது.

சூரியன் மலைகளுக்குள் ஒளிந்துக் கொள்ள எண்ணிய தருணத்தில் ஆபிசரின் ஜீப் வந்திருந்தது. கடமான் கண்களுக்கு அகப்படவேயில்லை என்று வாதிட்ட இவனுடைய துணிச்சல் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. குத்தீட்டியின் காயத்தில் இருமுளிச்சாறை பிழிந்து காயம் ஆற்றி அதை ஓட்டி விட்ட பிறகும் நான் நடுங்கிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அவனோ இந்நேரம் அது குட்டி ஈன்றிருக்கும் என்று கணித்துக் கொண்டிருந்தான்.

யானையின் விநோதமான பிளிறலில் மலை அதிர்ந்தபோதும், கொன்றையில் நீர்மத்தியை தள்ளிக் கொண்டு காற்று எழுந்து வீசியபோதும், கேளை மான்கள் கத்தியபடி சோலைக்குள் ஓடியபோதும் காதுகளை பொத்திக் கொள்ள சொன்னார்கள். பொத்திக் கொண்டோம்.. அவனும் பொத்திக் கொண்டதாகதான் நினைத்தேன். அப்போது அவனுக்கு திருமணமாகியிருந்தது. பறவைகளின் அலமலந்த கீச்சொலிகளில் நல்லதை முன்கூட்டி தெரிவிக்கும் பெருமாட்டிக்குருவிகளின் கீச்சொலிகள் கலந்திருக்கவில்லை என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். புற்றுக்கருகில் பிரிக்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. எறும்புகள் சாரைசாரையாக அணி வகுத்தன. பெருநரிகள் விருகன்கனை கவ்விக் கொண்டு ஓடின. ஆனால் காட்சிகளை பார்க்கக் கூடாதென்றார்கள். யார் அவர்கள்..? எங்களுக்குள் கோழைத்தனமாக எழுந்த கேள்விகள் அவனை உசும்பி துாண்டியிருக்கலாம். எங்களின் கைகளை பின்புறமாக கோத்து கட்டி விட்டு காலால் உணவுத்தட்டுகளை எங்களிடம் எத்தி விட்டபோதுதான் அவனை சந்தர்ப்பங்கள் முடிவு செய்ய தொடங்கியிருக்கும். காடு மழைக்கானது.. பூமியின் செழுமைக்கானது என்பதில் அவர்களுக்கும் கருத்து வேறுபாடில்லைதான். ஆனால் அவர்கள் காட்டில் மழையும் அவர்கள் வீட்டில் செழுமையும் சேருவதை அவன் உணர்ந்திருந்தான். அவர்களுக்கான மாளிகைகள் மிகவும் சௌகரியமானவை. தங்களுக்காகவும் தங்களின் வழிதோன்றலுக்காகவும் அவர்கள் முன்திட்டமிட்டமிட்டுக் கொண்டே இருந்ததை அவன் அடையாளம் காட்டினான். அவனுக்கு கூட்டாளிகள் நிறைய உண்டாகியிருந்தனர்.

மத்தி மரக்கிளையிலிருந்த கூட்டுக்குள் கழிவையும் மெழுகையும் களிமண்ணையும் குழைத்துப்பூசி தன்னைத்தானே உள்ளிருத்திக் கொள்ளும் பெண்ணாத்திப்பறவையின் வழியே அவன் சிறையை உணர்ந்திருக்க கூடும். அது வெளிவரும் நாளுக்காக ஆணாத்தியைப் போல இவனும் ஆவல் கொண்டிருந்தான். உள்ளிருந்தபடியே அலகை நீட்டி ஆணாத்தியிடமிருந்து புழுவோ, பூச்சியோ, இச்சிப்பழமோ, இளுப்பைத்தோலோ பெற்றுக் கொள்வதை காண அவன் மணிக்கணக்கில் காத்துக்கிடப்பதை நானும் அறிவேன். அவனை தீவிரமானவன் என்றார்கள். வாழ்க்கை தொலைந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாகதான் இருந்தான். அவர்கள் குழுமமாக இருந்தார்கள். குழுமமாக எதிர்த்தார்கள். இவனையே தலைவன் என்றார்கள். அவனுக்கு தந்தையாக இருப்பதில் எனக்கு பெருமையே. ஆனால் ஊரெல்லாம் உறவான பின் அவன் இந்த உறவையெல்லாம் எப்போதோ கடந்திருக்கலாம்.

பதியில் அன்று குடிசைகள் கொளுத்தி விடப்பட்டபோது அவனது இரு மகன்களும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தனர். விவசாயத்துக்காக காய்ந்த பயிர்களை கொளுத்துவதும் நிலங்களை மாற்றிக் கொண்டு செல்வதும், எங்களுக்கு புதிதல்ல. என்றாலும் நாங்களும் காய்ந்த பயிர்களாக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் குஞ்சும் குளுவாணிகளுமாக வெளியேறிய தினத்தில் என் மகன் இல்லை. இல்லையென்றால் தலைமறைவாக இருந்தான். அது அவன் சிறைக்கு செல்வதற்கு முந்தைய காலம்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் தெளிவான சிந்தையுடன் எங்களின் தலைவிதிகள் தீர்மானிக்கப்பட்டன. இதில் இரத்தம் சிந்துவதும், இனம் அழிவதும் அவர்களைப் பொறுத்தவரை ஒருவித களிப்பான விளையாட்டு. அது கலவியையொத்த களிப்பு. அறிவியல் வளர்ச்சி… முன்னேற்றம் என்ற பதங்களை சாமானிய மக்களும் கைக்கொள்ள தொடங்கியிருந்தனர். போனதெல்லாம் போகட்டும்.. ரட்சகன் நானிருக்கிறேன் என்று யாராரோ அறைக்கூவல் விடுத்தார்கள். ஆனால் சமூக விதிகள் என்ற குப்பிகள் சமூகம் முழுமைக்குமானதல்ல. குப்பிகளில் அடைப்பட்டவர்கள் எளியோர் எனவும் குப்பிகளை கையிலேந்தியவர்கள் வலியோர் என்வும் நாங்கள் புரிந்துக் கொள்ள தொடங்கியிருந்தோம். அறைக்கூவல் விடுப்பவர்கள் குப்பிகளை கையிலேந்தியவர்கள். அவர்கள் காமமும் பசியுமாக அலையும் வசந்தகால கரடிகளையொத்தவர்கள். ஏதேனும் நல்லவை நிகழும் என்று கருதினால் அது எங்களை நாங்களே மிக மலினமாக ஏமாற்றிக் கொள்கிறோம் என்று சுலபமாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடிந்தது. பிறகு இந்த செயலுக்காக எங்களை நாங்களே வெறுக்கும்படியாகி விடும்.

ஆனால் என் மகனுக்கு தன்னை தானே வெறுக்கும் நிலை நிச்சயமாக ஏற்பட்டிருக்காது. அவன் தன் செயல்பாட்டுக்கான முழு காரணத்தையும் நன்றாக உணர்ந்திருந்தான். தனது போக்கில் மிக நிதானமானவனாகவும் துல்லியமான அமைதியும் கொண்டிருந்தான். பிடிப்பட்டபோதும் முரண்படவில்லை. யார் மீதும் அதிகாரம் செலுத்த அவன் விரும்புவதில்லை.

மத்தி மரம் அசைந்தசைந்து ஆணாத்தியின் ஏக்கத்தையும் தனிமையையும் அதிகப்படுத்திக் கொண்டிருந்து. இனி அது தன் பெண்டின் சிறகை கோதவோ… கொத்தவோ முடியாது. என் மகனின் குற்றம் நிரூபணம் ஆகி விட்டதாம். தீர்ப்பு மரணதண்டனையாம். இதன் பின்னணியில் கேள்விப்பட்டிராத தேசங்களின் சதிகள் அடங்கியிருக்கிறதாம். மொத்தமாக முடிந்த கதைக்கு முடிவுரையென்று எதை எழுதினால் என்ன.? தன் மீது யாரும் அதிகாரம் செலுத்துவதை அவன் விரும்புவதில்லை. நீங்கள் குற்றம் என்று சொல்வதை நான் வாழ்க்கை என்று சொல்கிறேன் என்று மட்டும் கூறினானாம்.

விசாரணை கைதியாக அடைப்பட்டிருந்த ஆறு வருடங்களில் ஒருமுறை மட்டுமே அவனை பார்க்க அனுமதி கிடைத்தது. அந்த சந்திப்பை அவனது மனைவிக்கும் மகன்களுக்கும் விட்டுக் கொடுத்திருந்தேன். அதில் சுயநலமில்லாமல் இல்லை. அவனில்லாத வாழ்க்கையை நான் பழகிக் கொண்டிருக்கும் தருணத்தில் அவனது சந்திப்பு அதை மொத்தமாக கலைத்து போட்டு விடும் என்று மனதார நம்பியதை நான் வெளியே சொல்லவில்லை.

கால்கள் தானாகவே வாழ்ந்த திசையை நோக்கி அழைத்து வந்திருந்தது. கூடவே அவனின் இரு மகன்களும். இன்று அவனுக்கு நாள் குறிக்கப்பட்டிருப்பதை அவன் மனைவிக்கோ மகன்களுக்கோ தற்காலிகமாகவேனும் எட்டவிடாமல் பார்த்துக் கொள்வது என் வரம்புக்குள் இருந்தது. சிறுவர்கள் விளையாடி களைத்து சோற்றுப்பொட்டலத்தை திறந்திருந்தனர். மத்தி மரத்தடியில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டபோது கண்களும் இயல்பாக மூடிக் கொண்டன

வாழ்ந்த தடங்களெல்லாம் இந்நேரம் பூண்டோடு அழிந்திருக்கும். தாணிக்காயும் சாதிக்காயும் பூச்சைக்காயும் சீவேப்புல்லும் வள்ளிக்கிழங்குமில்லாத எங்கள் வாழ்க்கையை போல மீதி உயிர்களும் தங்களை பழக்கிக் கொண்டிருக்குமோ.. அல்லது பிடிவாதமாக செத்தழிந்து போயிருக்குமோ..? மனதின் நடுக்கம் கூடிக்கொண்டே போனது. இனி பனியில் நனைந்து உதிர்ந்த இண்டம் பூக்களி்ன் வாசனையில் அவன் கலந்து விடலாம். பாறைசந்துகளில் காத்துக் கிடக்கும் கருஞ்சிட்டுகளுடன் அவன் சுதந்திரமாக கதைக்கலாம். அல்லது வெட்டப்படும் மரத்தின் துகள்களுக்குள் கலந்து காட்டின் பெருவெளியில் கரைந்து போகலாம். கண்களிலிருந்து வழிந்த நீரை காற்று கன்னத்தில் கரையாக்கி கொண்டிருந்தது.

மூடிய விழிகளுக்குள் ஆணாத்தியின் படபடத்த சிறகுகள் பரபரத்துக் அலைந்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. பெண்ணாத்தி கூட்டை தகர்க்கும் நேரம் நெருங்கியிருக்கலாம். இஞ்சிப்புல்லின் மணத்தோடு கதிரிலிருந்து சிறிதுசிறிதாக பிரிந்து விழும் சாமைப்பயிரின் வாசம் காற்றில் கலந்து வீசியது. பெண்ணாத்தி சிறை மீண்டிருக்கும். இனி அவற்றின் வாழ்வு காதலாலும் கீச்சொலிகளாலும் நிறைந்து விடும்.

சிறுவர்கள் கையிலிருந்த சோற்றை ஆத்திகளுக்கு சிதற விட, எங்கிருந்தோ பறந்து வந்த காகமொன்று சோற்றை கவ்விக் கொண்டு பறந்தது.

தொலைவிலிருந்த வந்த ஒலி பெருமாட்டிக்குருவியின் கீச்சொலி போலிருந்தது.

***

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.