ஐய்யனாருக்கும் முதலாளிக்கும் ஆகாது என்று பழனிக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. தன்னை வேலைக்குச் சேர்த்ததும் ஐய்யனாரை சீக்கிரம் கணக்கு முடிக்கத்தான் என்று தெரிந்துகொண்டான். இதை ஏதோ உளவறிந்தெல்லாம் அவன் கண்டுபிடிக்கவில்லை. ஐய்யனார் இல்லாதபோது முதலாளியே வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியதுதான். முதலாளியின் பல நண்பர்கள் கடைக்கு வந்து பலமணி நேரம் முதலாளியிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். வியாபாரமெல்லாம் பெரிசாக ஒன்று இருக்காது. அது வெறும் அரிசிக்கடைதான். முதலாளி ஒரு பொழுதுபோக்குக்குதான் இதை நடத்துகிறார் என்று பழனி நினைத்தான்.
பழனிக்குத் தெரியவில்லை, ஐய்யனார் நல்லவனா, கெட்டவனா என்று. அவன் வேலைக்கு என்று வரும்போதே ஐய்யனாருக்கு நிச்சயம் தெரியும் தனக்கு மாற்றாகத்தான் புதிதாக ஒரு ஆள் வந்துள்ளான் என்று. இருவருக்கும் நான்கு அல்லது ஐந்து வயது வித்தியாசம் இருக்கும். பழனிக்கு 17 வயது. கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல். நல்ல உயரம். ஆனால் ஐய்யனாரோ நல்ல ஒல்லியான உடலுடையவன். ஆனால் நல்ல பலசாலி. இருபத்தஞ்சி கிலோ அரிசி மூட்டையை அவன் தூக்கிச் செல்வதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். மூட்டையைத் தூக்கி தோளில் போட்டுக் கொள்வான். ஆனால் அதைப் பிடித்துக் கொள்ளமாட்டான். அதைத் தோளில் வைத்துக்கொண்டே சிரித்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பான். அப்படி ஒன்று அவன் தோளில் இருக்கும் உணர்வே அவனுக்கு இருக்காது. பழனி வேலைக்கு வந்ததும் முதல் இரண்டு நாள் அவன் பழனியிடம் எதுவுமே பேசவில்லை. மூன்றாம் நாள் மதியம் முதலாளி இல்லாத நேரம் பார்த்து அவன் பழனியிடம் பேச்சு கொடுத்தான். அவன் நிலையையும் குடும்ப கஷ்டத்தையும் அறிந்து அவனிடம் பிறகு சகஜமானான்.
முதலாளி ஐய்யனாரை பற்றி சொல்லும் பெருங்குறை, ‘அவன் வெளியே போனால் சீக்கிரம் வரமாட்டான்’ என்பதுதான். மேலும் சமீபகாலமாக அவன் மேல் சிகரெட் நாற்றமும் சில முறை சாராய நாற்றமும் அடிப்பதாகக் கூறுவார். பழனிக்கும் தெரியும் ஐய்யனார் இதெல்லாம் செய்கிறான் என்று. ஆனால் அவன் இதுவரை எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று சொன்னதே இல்லை.
ஒருநாள் மதியம் முதலாளி இல்லாதபோது திடீரென ஐய்யனார் அழ ஆரம்பித்தான். பழனிக்கு ஒன்றும் பிரியவில்லை. மெதுவாக அவனிடம் விசாரித்தான். ஐய்யனார் தன் காதல் கதையை சொன்னான். பெரிதாக எதிர்பார்த்த பழனிக்கு அந்தக் கதை சப்பென முடிந்ததில் கொஞ்சம் கடுப்புதான். அந்த வயதில் காதலிப்பதை விடக் காதல் கதையைக் கேட்பதிலேயே ஒரு அதிக விருப்பம் இருக்கும். இது ஒர தலைக் காதல். ஐய்யனார் பார்த்தான், பார்த்துக்கொண்டிருந்தான், அப்படியே இருந்துவிட்டான். அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான் கதை. இதற்கு இவன் இவ்வளவு அலம்பல் செய்கிறானா என்று பழனி சற்று இளக்காரமாகக் கூடநினைத்தான். ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை.
வீடுகளுக்கு அரிசியைக் கொண்டுபோய் கொடுக்க பழனியே அதிகமாகப் போக ஆரம்பித்தான். முதலாளி ஐய்யனாரை அனுப்பவில்லை. அவனை வேலையை விட்டு அனுப்ப அவர் நாள் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஐய்யனாருக்கும் தெரியும். இங்கிருந்து போனால் அவனை வேலைக்கு எடுத்துக் கொள்ள பல கடை முதலாளிகள் காத்திருந்தார்கள். அவன் வேலை அப்படி. ஆனால் அவன் அந்தக் கடையிலேயே ஒட்டிக்கொண்டிருக்கக் காரணம் அந்தப் பெண்தான். அவள் தினமும் அந்த வழியாகத்தான் வேலைக்குச் செல்வாள்.
அன்று மதியம் ஐய்யனார் சாப்பிட்டுவிட்டு வந்ததும் முதலாளி சாப்பிட புறப்பட்டார். வழக்கம் போல பழனி அரிசி மூட்டை மேல் அமர்ந்திருந்தான். ஐய்யனார் முதலாளி இருக்கையின் அருகில் இருந்த எஃப்.எம் ஐ இயக்கிவிட்டு வந்து ஒரு மூட்டையின் மீது அமர்ந்தான். பழனி சோகமாக இருப்பதைப் பார்த்து, “என்னடா” என்றான்.
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகப் பாட்டுக்கேட்டுக்கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கடுப்பாக பழனியிடம், “டேய்… என்னானு கேக்கறன்ல…” என்றான்.
பழனி சொல்ல ஆரம்பித்தான். அவன் சோகமாகச் சொல்கிறானா அல்லது கோவமாக சொல்கிறானா என்று ஐய்யனாருக்கு புரியவில்லை.
“அண்ணே, நீங்கச் சாப்பிடப் போனதும் ஒரு போன் வந்தது. முதலாளி வெங்கட்டா நகர்ல ஒரு வீட்டுல போய் அரிசி கொடுத்துட்டு வாடானு சொன்னாரு.”
“எது அந்த ரோஸ் அப்பார்ட்மெண்ட்டா” என்றான் ஐய்யனார்.
குனிந்து கொண்டிருந்த பழனி இப்போது நிமிர்ந்து ஐய்யனாரை பார்த்து, “ஆமா” என்றான்.
“அப்பறம்” என்றான் ஐய்யனார்.
“நான் கஸ்டப்பட்டு அஞ்சி மாடி மூட்டைய தூக்கினு போய் அந்த வீட்டுப் பெல்ல அடிச்சன். கத துறந்தவரு என்ன பாத்துட்டு உள்ள கொண்டுவந்து போடுன்னாரு. நான் போய் சமையல் ரூம்ல வெச்சிட்டு திரும்பறன், அந்த வீட்டம்மா என்ன மேலயும் கீழயுமா பாத்துட்டு அப்பறம் கதவ துறந்தவர பாத்து, ‘அவாளெல்லாம் ஏன் உள்ள விடறேள், சாயங்காலம் பூஜைக்கு வீட்ட முழுக்க காலைலதான் கழுவி விட்டன். இப்போ ஏன் எனக்கு ரெண்டு வேலை வைக்கறேள்னு’ திட்டனாங்க. அவங்க திண்றதுக்குதான நான் அரிசி எடுத்துனு போனேன். அதுக்குக்கூட அவங்க வீட்டுக்குள்ள நாம போகக்கூடாதா?” என்றான் பழனி.
“இத முதலாளி கிட்ட சொன்னியா?” என்று கேட்டான் ஐய்யனார்.
“அவருகிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது, சொன்னாலும் அவர் இன்னா சொல்ல போறாரு ‘அவங்க சொல்றதெல்லாம் நீ ஏண்டா காதுல போட்டுக்குற, நமக்கு வியாபாரம் தான் முக்கியம்னு’ சொல்லுவார்” என்றான்.
சத்தமாகச் சிரித்த ஐய்யனார், “ஒரே மாசத்துல அந்தாள புரிஞ்சிக்கினடா நீயி” என்றான்.
அவனைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஐய்யனார், “சரி வுடு நாம் பொழப்பதான் பாக்கனும், காசு இல்லாதவனே ஜாதி வெறி புடிச்சி அலையறான். அவன் காசு இருக்கறவன் சொல்லவா வேணும். எல்லா முதலாளியும் காசு இருக்கறவனுக்குதான் கால கழுவுவானுங்க. வேலை செய்யறவன பத்திலாம் அவனுகளுக்கு கவலையே இல்ல” என்றான்.
ஆனால் பழனி அமைதியாகவே இருந்தான். அவனை சமாதானப்படுத்தும் விதமாக ஐய்யனார் பேசினான்.
“நாமதான் இவன் வேலைய விட்டு தூக்கிடுவானோன்னு பயந்துகினே இருக்கோம். ஆனா அவனுகளுக்கு நம்மள விட்டா நாதியில்ல. ஏன் என்னைய எடுத்துக்கோ, என்ன அனுப்பனும்ன்னுதான் உன்னைய வேலைக்கு வெச்சான். என்ன அனுப்பிட்டானா சொல்லு. ஏன் தெரியுமா, அவனுக்கு உன் மேலையும் சந்தேகம், நீ இருப்பியா ஓடிடுவியான்னு. நான் சொல்றதுலாம் ஒண்ணுதான் எவனையும் நம்பாத. உன் உழைப்ப மட்டும் நம்பு” என்றான்.
பழனி அமைதியாகவே இருப்பதைக் கண்ட ஐய்யனார் சற்று எரிச்சலுடன், “இப்பன்னாடா வேணும் உனக்கு, அந்த வீட்டுக்காரன ஓடவுடனும் அவ்வளவோதான, அடுத்த மாசம் வரட்டும் நான் பாத்துக்கிறன்” என்றான்.
பழனிக்கு உண்மையாகவே வேலையை விட்டுப் போக வேண்டும் போல்தான் இருந்தது. உடனடியாகச் செல்ல முடியாது. சேர்த்து விட்டவருக்குப் பதில் சொல்ல வேண்டும். பிறகு அவரிடம் உதவியும் கேட்க முடியாது. பல்லைக் கடித்துக்கொண்டு கொஞ்ச நாள் ஓட்ட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தான். ஐய்யனாரும் சில நாட்களாக முன்பு போல் இல்லை. ஒழுங்காக இருந்தான். முதலாளிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஐய்யனாரை போன்ற ஒரு வேலைக்காரனை விட்டுவிட எந்த அறிவுள்ள முதலாளியும் விரும்பமாட்டான்.
ஒரு மாதம் ஓடியது. ஒரு நாள் மதியம் முதலாளி சாப்பிடக் கிளம்பும் நேரம் போன் அடிக்க, அதை எடுத்த முதலாளி வழக்கம் போல் வழிந்தார். அவர் அப்படி வழிந்தால் எதிரில் பேசுவது வாடிக்கையாளர் என்று புரிந்துகொள்ள வேண்டியது தான். “சரிங்க”
“………….”
“உடனே அனுப்பிடறன்”
“……………………………………….”
“அது பரவாயில்லங்க, போன தடவ குடுத்த அதே அரிசியே அனுப்பறன்”
“…………………………”
“இதோ பையன அனுப்பிட்டன், பத்து நிமிஷத்துல அங்க இருப்பான்” என்று போனை வைத்தார். பிறகு பழனியை பார்த்து, “டேய்… அந்த ரோஸ் அப்பாட்மெண்ட்ல பொன்னி ஒரு மூட்டைய போட்டுட்டு வா, சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டு மதியம் சாப்பாட்டுக்குச் சென்றார். முதலாளி மறைந்ததும் இதற்காகவே காத்திருந்தது போல் மூட்டையிலிருந்து துள்ளி குதித்தான் ஐய்யனார்.
“டேய் பழனி… நீ இரு நான் போய்ட்டு வரன்,” என்றான் ஐய்யனார்.
“வேணாம்ன்னே அவர் வந்த கத்தப் போறார்,” என்றான் பழனி.
“அத நான் பாத்துக்கிறன்” என்று சொல்லிவிட்டு அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு சென்றான் ஐய்யனார். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் பழனி.
அரிசியை எடுத்துக்கொண்டு கிளம்பிய ஐய்யனார் நேராக ராஜா தியேட்டர் அருகில் இருந்த முனியாண்டி விலாஸுக்கு சென்று நன்றாகச் சாப்பிட்டான். சைக்கிளை அருகில் இருந்த ஒரு தெரிந்த கடையில் நிறுத்தியிருந்தான். வழக்கமாகத் தான் சாப்பிடும் அளவைவிடச் சற்று அதிகமாகவே சாப்பிட்டான். முழு வயிறு நிரம்பியதும் அங்கிருந்து நேராக ஒரு ஒயின் ஷாப்பிற்கு சென்று ஒரு பியரை வாங்கி வேகமாகக் குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு குபேர் பஜார், பாண்டிச்சேரியின் பழைய பேருந்து நிலையம் எனச் சுத்திவிட்டு அந்த அப்பாட்மெண்டை அடைந்தான். இப்போது ஐய்யானாருக்கு வயிறு கொஞ்சம் வீங்கியது போல் இருந்தது. ஆனால் தெளிவாகவே நடந்தான். நேராக அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு ஒரே நடையாக ஐந்து மாடி ஏறிச் சென்று அந்த வீட்டு பெல்லை அடித்தான். அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் திறக்க இவன் வாசனை தெரியாமல் இருக்கத் தலையை குனிந்துகொண்டான்.
அவர் இவனிப்பார்த்து,“தம்பி இப்படி வெச்சுட்டு போப்பா” என்றார்.
இவன் நிமிர்ந்து பார்த்து அவரை ஒற்றைக்கையால் விளக்கித் தள்ளி நேராக உள்ளே நுழைந்தான்.
அவர் “தம்பி, தம்பி, டேய்” எனப் பின்னால் ஓடிவர இவன் சமையல் அறைக்குச் சென்று அரிசியை வைத்துவிட்டு தன் விரலைத் தொண்டை வரை விட்டு வாந்தி எடுத்தான். வாந்தி எடுத்துக்கொண்டு அப்படியே வாசல் வரை ஓடிவந்து வாயைத் துடைத்துக்கொண்டு அவன் பாட்டுக்கு படி இறங்கினான். வீட்டுக்குள் பெருங்கூச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.
ஐய்யனார் சென்று வேகு நேரம் ஆகியும் வராததால் பழனி படபடப்புடன் இருந்தான். ஏதோ விபரீதமாக நடப்பது போல் அவனுக்குத் தோன்றியது. சாப்பிடச் சென்ற முதலாளி வந்துவிட்டார். ஐய்யனாரை காணாததை கண்டு பழனியுடன், “டேய், அவன் எங்கடா” என்றார். பழனி சொன்னான். உடனே அவர் கோவமாக, “உங்கிட்ட ஒரு வேலைச் சொன்னா அத நீ செய்ய மாட்டியா? அவனுக்கு ஊர் சுத்தாம இருக்க முடியாதே. கொஞ்ச நாள் நல்லா இருந்தானேன்னு நினைச்சேன். மறுபடியும் ஆரம்பிச்சிட்டான், வரட்டும்” என்று தன் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தார். போன் மணியடித்தது. வழக்கமான சிரிப்புடன் போனை எடுத்த முதலாளியின் முகம் வழக்கத்துக்கு மாறாக மாறத்தொடங்கியது.
“இல்ல… சார்…”
“…………….”
“அப்படியா பண்ணிட்டான், அய்யோ”
“………………………”
“போலிஸ்லாம் வேண்டாம் சார்”
“……………………………………….”
“நான் இன்னிக்கே அனுப்பிடறன் சார்”
பழனிக்குப் புரிந்துவிட்டது ஏதோ பண்ணி விட்டான் ஐய்யனார் என்று. முதலாளி தொலைபேசியில் காலில் விழாத குறையாக பேசிக்கொண்டிருந்தார். தொலைபேசியை வைத்த முதலாளி பழனியை எரித்துவிடுவது போல் பார்த்தார். அவன் அமைதியாக இருந்தான். இருவருமே ஐய்யனாரின் வருகைக்காகச் சாலையை பார்த்தவாறு காத்திருந்தனர்.