பாலசுப்ரமணியன் பொன்ராஜுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு/ படிப்பு/ தொழில்/ குடும்பம் பற்றி :

பாலா பொன்ராஜ்: எங்கள் சொந்த ஊர் உடுமலை அருகே, தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தெரியும் வாளவாடி. ஆனால் நான் பிறந்து வளர்ந்தது கோவைக்கு அருகேயுள்ள ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் மில்ஸ். பிரிமியர் மில்ஸில் எல்லோரும் எங்களை வாளவாடிக்காரர்கள் என்று அடையாளம் கொண்டிருந்தனர்.

எங்கள் தந்தை பொன்ராஜ் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்தார். திமுகவின் தீவிர தொண்டர், தொழிற்சங்க தலைவர். அம்மா சரஸ்வதி. ஒரே தங்கை அமுதா.

பள்ளிப்படிப்பு எங்கள் ஊர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில். நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் டிப்ளமோ. கல்லூரிக்குச் சென்றதில்லை. அஞ்சல் வழி கல்வியில்தான் பி.காம் முடித்தேன். அதையெல்லாம் கல்வியென்றே நான் மதிப்பதில்லை.

எங்கள் ஊரில் இருக்கும் மில்லில் முதலில் ஷிஃப்ட் கிளர்க்காகச் சேர்ந்து, அரைகுறை கணிணி அறிவினால் EDP துறையில் பணியாற்றினேன். அது சலித்துப் போக மருத்துவ பிரதிநிதியானேன். பின்பு ஐசிஐசிஐ வங்கியில் கடன் வசூலிக்கும் துறையில் பெங்களூரில் வேலை கிடைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து இன்றுவரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வங்கி, நிதித்துறையில் வேலை. தற்போது ஒரு தனியார் வங்கியின் துணை நிறுவனமொன்றில் கிளை மேலாளராக ஓசூரில் பணிபுரிகிறேன்.

எங்கள் தந்தை இறந்த பிறகு நானும் அம்மாவும் ஒன்றாக வசிக்கிறோம். தங்கை மணமாகி கோவைக்கு அருகே வசிக்கிறாள்.

பள்ளிக் கால வாசிப்பு பழக்கம் எத்தகையது?

பாலா பொன்ராஜ்: வாசிக்கத் தேவையில்லாத வயதில் வாசிக்கத் தேவையில்லாத புத்தகங்களில் இருந்தே வாசிப்பு துவங்கியது. கூச்சப்படாமல் சொன்னால் பாப்புலர் கிரைம் புத்தகங்களே நான் முதலில் வாசித்தவை. எனது ஒன்பதாவது வயதில் கிரைம் நாவல்களை எங்கள் மாமா வீட்டிலிருந்து எடுத்து வந்து படித்தேன். பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் நானும் எனது நண்பனும் பாட்டுப் போட்டிக்கு பெயர் கொடுக்க முடிவெடுத்த வேளையில், கடுமையான போட்டியாளனை திசைதிருப்பும் நோக்கில், எனக்குச் சரியாக பாட வராது என்று சொல்லி, கட்டுரைப் போட்டிக்கு பெயர் கொடுக்கச் சொன்னான். கட்டுரைப் போட்டியில் தலைப்பு: “பாரதி கண்ட புதுமைப்பெண்”. அதற்காக எங்கள் வீதியில் வசித்த பேரூராட்சி சேர்மனின் நூலக உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொண்டு நூலகத்திற்கு நுழைந்ததே வாசிப்பின் முறையான துவக்கம். ஒருவேளை என்னுடைய நண்பனின் அறிவுரையைக் கேட்டிருந்திருக்காவிட்டால் ஒரு நல்ல பாடகனை உலகம் இழந்தவிட்ட துர்பாக்கியம் அதற்கு நேர்ந்திருக்காது. வலம்புரி ஜான் எழுதிய பாரதியார் குறித்த புத்தகமே தீவீர புத்தகங்களில் முதலாவது. பின்பு 12 வயதில் பெரியாரின் மொத்த தொகுதிகளை வாசித்தேன். மிக அழகாக பதிப்பிக்கப்பட்டிருந்த தொகுதிகள். 14 வயதில் விவேகானந்தரின் மொத்த தொகுப்புகள். எங்கள் வீட்டில் அருகருகே விவேகானந்தர் மற்றும் பெரியாரின் போஸ்டர்களை ஒட்டியிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. திமுக பிளவுண்டபோது வைகோ மற்றும் கருணாநிதியின் புகைப்படம், பிறகு ஹிட்லரின் புகைப்படம், பின்பு மிலிந்த் சோமன் (ஒரு மாடலாகும் ஆர்வம் அப்போதிருந்தது). இளம்பருவத்தின் அத்தனை கோளாறுகளுக்கும் இடமளிக்கும் சுதந்திரத்தை எனது பெற்றோர் வழங்கினர். வாசிப்பைக் குறித்து என் தந்தை வழங்கிய ஒரே ஒரு அறிவுரை, சிவப்பு கலர் அட்டை புத்தகங்களை மட்டும் வாசித்துவிடக் கூடாதென்று. அதனால் மூளை குழம்பிப் போனவர்கள் அதிகம் என்று சொன்னார். மாஸ்கோ புத்தகங்களின் மொழி அப்படிப்பட்டதென்று பின்பு தெரிந்தது.

15 வயதிற்குள்ளாக “பிச்சைக்காரி” எனும் சமூக நாவல், “அடையாறில் ஆறு கொலைகள்” என்கிற ஒரு கிரைம் நாவல், “வசந்தகுமாரன்” எனும் வரலாற்று நாவல், “இரவின் மகன்” எனும் ஃபேண்டஸி நாவல் (அதில் ஓர் ஓநாய் காட்டில் பிறந்த குழந்தையை வளர்க்கும், ஜங்கிள் புக்கில் வருவதைப் போல. ஆனால் இன்றுவரை நான் ஜங்கிள் புக் வாசித்ததில்லை), நல்ல தாளில் கருப்பு மையால் எழுதிய காதல் கவிதைகள், எய்ட்ஸ் குறித்த ஆங்கில கட்டுரை தமிழ் மொழிபெயர்ப்பு, குறுந்தொகையை எளிய தமிழ்க் கவிதை வடிவில் எழுதியது, “பெப்ஸி” உமாவிற்கு எழுதிய காதல் கவிதை (அப்போது டிப்ளமோ) என வளர்ந்திருந்தேன். அந்தப் பிரதிகள் தொலைந்து போனது வேறு எப்போதையும் விட இப்போது வருத்தம் அளிக்கிறது.

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னையைப் பார்த்திராத வயதில் அடையாறில் கொலைகள் நடப்பதாக எழுதியிருந்தேன். அங்கே ஒரு மேம்பாலம் இருப்பதாகவும் அதன் அருகேயிருக்கும் ஓர் உயர்ந்த கட்டிடத்தில்தான் கொலையாளி ஒளிந்திருப்பதாகவும். பின்பு வேலைக்காக சென்னை வர, என்னுடைய அலுவலகம் அடையாறு மேம்பாலத்திற்கு அருகேதான் இருந்தது. வேலை நேரம் போக அலுவலகத்தின் எதிர்ப்பக்கத்தில் பாலத்தின் அருகேயிருக்கும் உயரமான கட்டிடங்களில் ஆறு கொலைகள் செய்த கொலையாளியை நான் தேடிக் கொண்டிருந்தேன். காஃப்கா அமெரிக்காவிற்குப் போனதேயில்லை. அவர் அமெரிக்கா என்றொரு நாவல் எழுதினார். கோல்ரிட்ஜும், ரைம்போவும் கூட அப்படியே, கடல் என்ற ஒன்றைப் பார்ப்பதற்கு முன்பே கவிதையில் கடலை எழுதியவர்கள்.

இப்போது சென்னையும் ஒரு நினைவாக மாறிவிட எப்போதாவது சென்னை போனால் மூன்று வருடங்களுக்கு முந்தைய என்னைத் தேடுவேன். துப்பறிவாளனுக்குச் சிக்காதவர்களாக நாவலில் கொலை செய்தவனும், நாவலை எழுதியவனுமாக சென்னையில் உலவுகிறார்கள்.

பிடித்த/ பாதிப்பு செலுத்திய எழுத்தாளர்? தமிழில்/ உலக இலக்கியங்களில்.. .

பாலா பொன்ராஜ்: ஜெயகாந்தனின் சில நாவல்கள், கவிதா பதிப்பகம் வெளியிட்ட கட்டுரைத் தொகுதிகள் முழுமையும் என்னை வேறு வாசிப்பிற்கு நகர்த்தின (பிற்கால ஜெயகாந்தனுடைய amplified வடிவமே ஜெயமோகன் என்று நம்புகிறேன்). அவர் எழுத்துக்களின் பாதிப்பில் அவர் பாணியில் ஒரு சிறுகதை கூட எழுதினேன். வேறிரண்டு கதைகளும். ஆங்கில இந்து பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதைப் போட்டிக்கு ஒரு கதையை எழுதினேன். அதை என் சகோதரி ஒருவரின் தோழி மொழிபெயர்ப்பதாக ஏற்பாடு. ஆனால் அது நிறைவேறவில்லை. அந்தக் கதை நல்ல கதையென்ற எண்ணம் இன்றுமுண்டு.

சுந்தர ராமசாமியின் “விரிவும் ஆழமும் தேடி”, “காற்றில் கலந்த பேரோசை” ஆகிய இரண்டு புத்தகங்களும் மிகுந்த பாதிப்பை அளித்தவை. ஜெயகாந்தனிடமிருந்து என்னை விடுவித்தவை. அதன் பிற்கு சுந்தர ராமசாமியின் பாதிப்பு சில வருடங்கள் இருந்தது.

புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், மா. அரங்கநாதன், சுந்தர ராமசாமி, கோணங்கி, நாஞ்சில் நாடன், ஷோபா சக்தி ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக எனக்குப் பிடித்தமானவர்கள். சுஜாதாவும், அ. முத்துலிங்கமும் அடுத்த வரிசையில் நிற்கிறார்கள்.

உலக இலக்கியத்தில் உம்பார்த்தோ ஈகோ, போர்ஹெசின் பாதிப்பு அளவுக்கதிகமானதென்று நினைக்கிறேன். இவர்களை அடுத்து வில்லியம் பர்ரோஸ், ஜூலியோ கொர்த்தஸார், டான் டெலிலோ, முரகாமி ஆகியோர். கால்வினோவை இன்னும் வாசிக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. இன்னும் அதிகமான பெயர்கள் உண்டென்றாலும் அரைகுறை வாசிப்பில் அவர்களுடைய செல்வாக்கை வரையறுக்க முடியாது. இப்போதைய வாசிப்பில் தாமஸ் பின்ச்சனும், இ.எல். டாக்டரோவும் ஈர்க்கிறார்கள். எட்கர் ஆலன் போவின் முழு படைப்புகளையும், ஹெர்மன் மெல்வில்லின் படைப்புகளையும் வாசிக்க முனைந்துள்ளேன். விரைவாக வாசிக்க முடியாததும், அகராதியை அடிக்கடி பார்க்க நேர்வதும் எனக்கு சலிப்பூட்டினாலும், விடாமுயற்சியாகத் தொடர்கிறேன். குறிப்பாக அமெரிக்க இலக்கியத்தை குறிப்பிடத்தக்க அளவிற்கு வாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். நான் மிகக் குறைவாகவும், சிதறலாகவும் வாசிப்பவன்.

சென்னை வந்த புதிதில் வாசித்த ரொலாண்ட் பார்த்தின் “நியூட்ரல்” புத்தகம் எனது சிந்தனைகளை மடைமாற்றியது. மேலதிக பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை.

உங்கள் கதைகளில் மேற்கத்திய இசை ஒரு முக்கிய சரடாக வருகிறதே… அதன் மீதான ஆர்வம், அறிமுகம், பிடித்த இசைக் கலைஞர்கள் பற்றி..

பாலா பொன்ராஜ்: பெங்களூரில் பப்களில் கேட்டுப் பழகிய ராக் இசையின் மீதான காதல் வடியாமல் இருக்கிறது. என்னுடைய நண்பர்களில் சிலர் டோப் அடித்துக் கொண்டு ராக் இசை கேட்பவர்கள். எனக்கு அதெல்லாம் பயம். என்னோடு ராக் இசை தங்கிவிட அவர்களோடு கஞ்சா தங்கிவிட்டது. முக்கியமான ராக் இசைக்குழுக்களின் பாடல்களை, இசையைத் தொடர்ந்து கேட்கிறேன். பெயர்களை உதிர்ப்பதைப் போலாகிவிடும் என்பதால் மிக ஆழமாக நான் தொடர்ந்தும், நெருக்கமாகவும் உணரும் இசைக்குழு ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ரேடியோஹெட். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கிறேன். இன்னும் அவர்களது இசை என்னை ஈர்க்கிறது. அவர்களுடைய சமீபத்திய ஆல்பமான “Moon Shaped Pool” ஆல்பத்தை ஆரம்பத்தில் ஆர்வமில்லாமலே கேட்டேன். மாஸ்டர்களின் சமீபத்திய படைப்புகள் தோல்வியடைந்தவை என்ற எண்ணம். “பிங்க் ஃபிளாய்டின்” சமீபத்திய ஆல்பத்தின் தோல்வி, மிலன் குந்த்ராவின் சமீபத்திய நாவல், என நாம் மாஸ்டர்களின் காலம் கடந்த முயற்சிகளை அசட்டை செய்கிறோம். ஆனால் ரேடியோஹெட் குழுவின் ஆல்பம் நிச்சயமாக இன்னுமொரு பெரும்படைப்பு. வழமையான ராக் இசையில் துவங்கி, மின்னணு இசைக்கு நகர்ந்த இக்குழுவினர் இசையின் வழியாக எழும் எனது ஆன்மீக உணர்வின் பாதையை, தொடர்ந்து முன்னடந்து நீளச் செய்கின்றனர். மிகச் சமீபமாக EDM இசையின் ஆதிக்கத்திலிருக்கிறேன். Daft Punkன் பாடலான Get Luckyல் துவங்கியது, Kraftwerkன் ஆல்பங்கள், Deadmou5 ஏன் David Guettaவின் பாடல்களைக் கூடக் கேட்கிறேன். Lady Gaga குறித்து சிறு கட்டுரையொன்றை என் வலைப்பூவில் எழுதியுள்ளேன். Lady Gaga, Beyonce, Rihanna ஆகிய மூவரில் எனக்கு அதிகமாக Lady Gagaவைப் பிடிக்கிறது. ஆனால் இவர்களுக்குப் பின்பு ஒரு பெரும் பட்டாளமே பாப் இசையில் உருவாகிவிட்டது. Sia, Sam Smith, Weekend, Taylor Swift, Justin Baiber, Ed Sheeran என் நீண்டாலும் நான் மேற்சொன்ன மூவரை அதிகமாக விரும்புகிறேன். பாப் இசை ஒரு பெரிய இரயில் நிலையத்தைப் போல, எண்ணற்றவர்கள் நுழைகிறார்கள். நாம் அவர்களுக்கு மத்தியில் தொலைந்து போகிறோம். செவ்வியல் இசை எவ்வளவு ஆறுதலானது. மொத்தமே நூறு மேதைகள் இருப்பார்களா?

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஒவ்வொரு இரவிலும் அபூர்வமான இசையை எனது கனவில் கேட்ட அனுபவம் உண்டு. ராக் இசை, எங்கள் கிராமத்தில் பொங்கல் சமயத்தில் வாசிக்கப்படும் பம்பை, தப்பு இவற்றின் கலவையாக, தொடர்பறுந்த காட்சிகள், விநோத உருவங்கள், உதிர்ந்து கொண்டேயிருக்கும் இலைகள், வீழ்ச்சியே இல்லாமல் மிதப்பது, என்று எளிதில் தொடர்புறுத்த முடியாத அனுபவம். நமது கனவுகளில் காலம் மற்றும் இடத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தாலும், கனவுகளை நினைவுகூர இவையிரண்டும் ஓர் ஒழுங்கை அவற்றிற்கு அளிக்கின்றன.

பியானோ இசையின் மீது புதுக்காதல் பிறந்திருக்கிறது. Yiruma அவர்களின் “River Flows in You” இசைக்கோர்வை என்னை இக்காதலில் விழச் செய்தது. Eric Satieன் படைப்புகள், குறிப்பாக Once Upon a time in Paris (செவ்வியல் இசையில் டைப்ரைட்டிங், தொழிற்சாலை, துப்பாக்கி சத்தங்களைச் சேர்த்தவர்), ஸ்ட்ராவின்ஸ்கியின் Rite of the Spring, ஜுஸெப்பி வெர்டியின் “Devil’s Trill Sonata”, Who குழுவினரின் “Baba O’Riley” ஆகியவை நான் சமீப நாட்களில் கவனித்துக் கேட்பவை. இசையை மட்டுமே தனியாக, விரிவாகப் பேசலாம். என்றாவது பியானோ வாசிப்பேன் என்கிற கற்பனையில் ஆழ்ந்திருக்கிறேன். இணையத்திற்கும், உலகமயமாக்கலுக்கும் நன்றி.

குறிப்பாக தந்தி வாத்தியங்கள், அதுவும் சைகிடெலக் அனுபவங்கள் அளிக்கும் இசையின் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதாக புரிந்து கொள்கிறேன்… அந்த ஆர்வம் பற்றி, உங்கள் படைப்பு மனநிலைக்கு இந்த இசை தூண்டுதல் அளிக்கிறதா?

பாலா பொன்ராஜ்: நிச்சயமாக இசை எனது படைப்பு மனநிலைக்கு மாத்திரமல்ல எனது அன்றாடத்திற்கே பெரிய தூண்டுதலாக இருக்கிறது. ஒருநாளும் இசையின்றி விடிவதோ, முடிவதோ இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டேன். எனது வீட்டில் தொலைக்காட்சி இல்லை. ஆகவே நான் பொழுதுபோக்கிற்குக்கூட இசையைத்தான் பெரிதும் சார்ந்திருக்கிறேன்

இசையின் மொத்த நோக்கமே முடிவாக அமைதியை, நிறைவை அளிப்பதுதான் என்று நினைக்கிறேன். ராக் இசை எவ்வளவு சத்தமானதும், Distortionஐ பிரதானமாகக் கொண்டதென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் ராக் இசை எனக்கு அமைதியை அளிக்கிறது என்று சொன்னால் எனக்கே அதை இன்னும் தீவிரமாக ஆரய வேண்டிய ஒரு கருத்தாகத் தெரிகிறது. தந்தி வாத்தியங்களில் மின்கிதார் என்னை ஒரு டிரான்ஸ் நிலைக்கு உயர்த்துவதாக எண்ணுகிறேன். உதாரணத்திற்கு, Audioslaveன் ஒரு பாடலான Like a Stoneனில் வரும் ஒரு மின்கிதார் இடையிசையைக் கேளுங்கள். அவர்களை விடவும் மேதமையான குழுக்கள், கலைஞர்கள் இருக்கின்றனர் என்றாலும் அதுவே எனக்கு திருப்தியளித்து விடுகிறது. மகிழ்ச்சியோடு உறங்குகிறேன் அல்லது வேலையைத் துவங்குகிறேன். அந்நியத்தன்மை, எதிர்காலத்தன்மை, தொழில்நுட்பச் சிறப்பு, துல்லியம் இவை என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. செவ்வியல் இசை அளிக்கும் அதே ஆன்மீக உணர்வை, எனக்கு தொழில்நுட்ப இசையும் அளிக்கிறது. இசையை தொழில்நுட்பம் நம்பமுடியாத துல்லியத் தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. எனது வருத்தமெல்லாம் நல்ல ஸ்பீக்கர்களில் இசை கேட்பதில்லை என்பது மட்டுமே. நல்லதென்று நான் நினைப்பதின் விலை கிட்டத்தட்ட ஆப்பிள் Xன் விலையில் இருக்கிறது. இதை டைப் அடிக்கும்போது Audioslaveன் Be Yourself ஒலிக்கிறது. Be Yourself is all that You can Do….

இந்திய மரபிசை, பரப்பிசை மீது ஆர்வம் உண்டா? (ஒரு கதையில் ஃபடே அலிகான் வருகிறாரே)?

பாலா பொன்ராஜ்: இருந்தது. எனது அறையில் சில நண்பர்கள் சேர்ந்து குறிப்பாக சீனிவாசன், ஃபதே அலிகானின் பாடல்களைக் கேட்போம். சில சமயம் கவ்வாலியோ, இஸ்லாமிய இசையோ ஓர் உன்னதமான மன எழுச்சியை அளிக்கின்றன. கர்நாடக சங்கீதத்தில் அருணா சாய்ராமை விரும்பிக் கேட்டேன் என்றாலும் என்னால் தொடர முடியவில்லை. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாரதியார் பாடலான “நெஞ்சுக்கு நீதியும்” (கருணாநிதியின் தன்வரலாற்றுத் தலைப்பை அளித்தது) எனக்கு பிடித்தமானது. ஒருவிதமான metropolitan hybrid spiritual அனுபவத்தை எனது இசைத் தேர்வுகள் அளிக்கின்றன.

யதார்த்தவாத கதைகளின் மீதான உங்கள் பார்வை/ விமர்சனம் என்ன?

பாலா பொன்ராஜ்: யதார்த்தவாதக் கதைகள்தான் கதைசொல்லலில் கடைசியாக வந்ததென்று நம்புகிறேன். ஒரு கழுதை பேசுவதை நம்பவில்லை என்றால் நாம் கதை படிக்கவே வரக்கூடாது, பாடப்புத்தகங்களோடு நிறுத்திவிடுவது நல்லது (இனி ஒருபோதும் நமது கதைகளில் கழுதை பேசாது). நாம் இம்மாதிரி விசயங்களை நம்பும் அப்பாவித்தனத்தை இழந்துவிட்டோம். முழுதுமாக நாம் இழந்து விட்டோமென்று சொல்ல முடியாது. இதை ஈடு செய்கிற மாதிரி ஹாலிவுட்டின் வழியாக சூப்பர் ஹீரோக்களும், நெட்ஃபிளிக்ஸ் நாடகங்களும், அல்ட்ரா தேசியவாத அரசியல்வாதிகளும், மத அடிப்படைவாதிகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றனர். அவர்களை நம்புவதும் கழுதை பேசியதென்று நம்புவதும் ஒன்று போலத்தான் என்றாலும் பின்னது கடுகளவும் பாதிப்பற்றது. கடவுள் பேசினார் என்று நம்புவதுதான் உலகின் தலையாய பிரச்சனை, கழுதை பேசியதை நம்புவதென்பது ஒருவகையில் ஆறுதல்.

இவ்வடிவ கதைகள், எழுதும் பலருக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. அவர்கள் ஏதோ வாழ்வின் யதார்த்தத்தை தொட்டு விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். யதார்த்தம் என்பது அறியவே முடியாதென்பதே பற்றாக்குறையுள்ள மொழியின் ஆற்றலின்மையை பரிசீலித்தவர்கள் சொல்கிறார்கள். ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன், what happens in ten minutes exceeds all Shakespeare’s vocabulary, என்கிறார். உலகம் அவ்வளவு பெரிது. புனைவை அடைந்து விடலாம். நாமே அதன் விதிகளை உருவாக்குகிறோம். யதார்த்ததை அடையவே முடியாது, ஏனெனில் அதன் விதிகள் நமக்குத் தெரியாதவை.

உங்கள் கதைகளில் மரபின் தாக்கம் அவ்வளவாக இல்லை. (‘புடவு’ கதையில் மட்டுமே வருகிறது. அதுவும் கூட பல தரப்புகளின் உரையாடல்கள் ஊடாக வெளிப்படுகிறது). ஆனால் தொன்மங்கள் உங்களுக்கு உவப்பானவை. ஜெசியா போன்ற புதிய தொன்மங்களை நீங்களே உருவாக்கி இருக்குறீர்கள். மரபார்ந்த தொன்மங்களை தொடாமல் இருப்பது பிரக்ஞைபூர்வமான முடிவா? மரபு சார்ந்த தொன்மக் கதைகள் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?

பாலா பொன்ராஜ்: தொன்மக் கதைகளின் ஆதாரமான விதிகள் புனைவிற்கு சிறப்பான வாய்ப்பை அளிக்கின்றன என்ற அளவில் தொன்மங்கள் பயன்படுத்தத்தக்கவை. மரபான தொன்மங்கள் ஏற்கனவே பலமுறை அணிந்து, துவைக்கப்பட்டு, கிட்டத்தட்ட சாயமழிந்து போய்விட்டன. நாம் அவற்றின் சாத்தியக் கூறுகளை எடுத்துக் கொண்டு கதை சொல்லலில் பயன்படுத்தலாம்.

எனது ஆளுமையும், சிந்தனையும், வெளிப்பாடும், அன்றாட விசயங்களும் உலகமயமாக்கல் வடிவமைத்தவை என்று நம்புகிறேன். நம்முடைய குடும்பத்தினரை, உறவினர்களை நம்புவதைவிட ஒரு நல்ல கல்லூரியில் படித்த தொழில்நுட்பக் கல்வி நம்மை வாழவைக்குமென்று நம்பும் தலைமுறையைச் சேர்ந்தவன். போர்ஹெஸ் தன்னை ஒரு ‘European in Exile’ என்று அழைத்துக் கொள்கிறார். ‘Citizen of All Countries’ என்கிற கருத்து எனக்கு மனிதர்களுக்கு இடையிலான சிறிய வேறுபாடுகளைக் கடக்க உதவி செய்கிறது. உலக குடிமகனாக ஆகும் வாய்ப்பை வரலாற்றிலே முதன்முறையாக உலகமயமாக்கல் நமக்கு அளித்திருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் ஒரு சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழுவை உருவாக்க முனைந்திருப்பதாகவும், அதற்கான பயிற்சியில் வசதி வாய்ப்பற்றவர்களின் குழந்தைகளும் இருப்பதாகவும் அறிகிறேன். இலண்டன் அரங்கொன்றில் சென்னைக்காரர்கள் 21ம் நூற்றாண்டில் எழுதப்படப் போகும் புதிய சிம்பொனியொன்றை வாசிப்பார்கள் என்கிற எண்ணமே எனக்கு உற்சாகமளிக்கிறது.

ஆஷிஸ் நந்தி சொல்வதைப் போல நமது இலட்சிய வடிவமென்பது கிராமம்தான். நமது சிந்தனையில் நாம் இன்னுமே கிராமத்தை பிரதானமாகவும், கிராமத்திலிருந்து தொலைவிற்கு நகர்ந்து விட்டதை இழப்பாகவும், கிராமங்களுக்கான ஏக்கமிக்கவர்களாகவும் இருக்கிறோம். ஒரு கயிற்றுக் கட்டிலில், வெட்டவெளியில், தோட்டத்துக் காற்று வீச அக்கடாவென்று உறங்குவதை அல்லது அப்படியொரு நிலைக்குத் திரும்புவதை உயர்வான நிலையென்று சொல்லும் எண்ணற்றவர்களை நாம் பார்க்கிறோம். முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் 75% இந்தியர்கள் நகரங்களில் வாழ்வதே தங்கள் இலட்சியம் என்றார். அரசுகள் மக்களை நகரங்களுக்குத் தள்ளுகின்றன. அங்கே அவர்கள் அரசியலற்றும், கண்காணிக்க ஏதுவாகவும் ஆகிறார்கள். நான் இவற்றைக் கவனத்தில் எடுக்கிறேன்.

மரபான தொன்மக் கதைகள் வாசிக்கப்பட வேண்டியவை. இதிகாசங்களை வாசிப்பதற்கு சில வருடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால் அது உலகளாவிய வாசிப்பாக இருக்க வேண்டும். ஜூலியோ கொர்த்தஸார் அர்ஜூனனைப் பற்றியும், தாமஸ் பின்ச்சன் கைலாய மலை குறித்தும் எழுதுகிறார்கள். மேற்கத்திய தொன்மங்களின் ஒரு கூறையாவது நாம் நமது படைப்புகளில் கையாள்கிறோமா? அல்லது அவற்றை வாசித்தாவது அறிகிறோமா? ரோபர்டோ கலசோ ‘கா’, ‘ஆர்டோ(ர்)’ எழுதினால், வெண்டி டோனிகர் காமசூத்ரா குறித்து எழுதினால் மகிழ்ச்சியடைகிறோம், நம்மில் யாராவது Beowulf குறித்து ஒரு சொல்லாவது சொல்லியிருக்கிறோமா?

உலகின் மரபெல்லாம் நமது படைப்புகளுக்குரிய மூலப்பொருட்கள். காஃப்காவின் படைப்புகள் உலகு தழுவியதாக உணரப்படவில்லையா? அப்படி ஒன்றையாவது உலகிற்கு நாம் வழங்க வேண்டும். கிரேக்க தொன்மங்களைப் போல காலத்துக்கும் வாசிக்கப்படக் கூடியவராக காஃப்கா மாறியது எப்படி?. டிராகுலா போன்ற ஒரு பாத்திரத்தை, டோல்கெய்ன் போன்ற ஓர் எழுத்தாளரை நாமல்லவா உருவாக்கியிருக்க வேண்டும்.

திருப்பனந்தாள் மடத்தைப் போன்ற மடங்களோ, அவற்றின் வரலாறோ, தத்துவமோ என்னை ஈர்ப்பதைக் காட்டிலும், “தி மானுபாக்சரர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனியாரிடம்” திருப்பனந்தாள் மடத்துத் தலைவர் காப்பீடு செய்திருந்ததே என்னை ஈர்க்கிறது. மரபு நவீனத்தை உள்வாங்கியதை இதைவிட எளிமையாக சொல்ல முடியாது. என்ன, நான் இன்சூரன்ஸ் கம்பெனிக்காரர்களின் பார்வையில் மரபை அணுக வேண்டுமென்று நினைக்கிறேன்.

சிறுகதையின் வழமையான வடிவத்திலிருந்து உங்கள் கதைகள் விலகி இருக்கின்றன. இப்படியான வடிவ உடைவைத்’ தேர்வதற்கு எது உங்களை உந்துகிறது?

பாலா பொன்ராஜ்: வழமையான வடிவங்களின் அலுப்பூட்டக்கூடிய கதை சொல்லல் முறையே என்னை வேறு வகையில் முயற்சித்துப் பார்க்க வைக்கிறது. ஆனால் அப்படி முயற்சிக்கும் வேளையிலும் வாசிப்பவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ள முனைவேன். இலக்கியத்தின் கேளிக்கை மதிப்பின் மீது எனக்கு நம்பிக்கை அதிகம். கிப்ளிங்கின் ‘Just So Stories’ல் எளிமையான நேரடி கதைசொல்லல் உள்ளது. டொனால்ட் பார்த்தல்மே படைப்புகள் சிக்கலானவை. நாம் இரண்டையும் வாசிக்க முனைகிறோம் இல்லையா? ஏன் ஒரே மாதிரி இருக்க வேண்டும்? Standard narration என்பது பள்ளிக் கல்விக்குச் சரி. அதில் கூட புது கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

விமர்சனங்கள்/ அல்லது விமர்சகர்களின் மீது உங்களின் எதிர்பார்ப்பு/ போதாமை/ விமர்சனம் என்ன?

பாலா பொன்ராஜ்: விமர்சகர்கள் இலக்கிய வரலாற்றின் மறைமுக ஆசிரியர்கள் என்று கருதுகிறேன். அவர்கள்தான் ஒரு பிரதியை, ஆசிரியனை இலக்கிய வரலாற்றின் ஓரிடத்தில் வைத்து ஆராய்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அந்தப் பிரதிக்கு அல்லது ஆசிரியனுக்கு நீண்டகால தொடர்ச்சியில் ஓர் இடத்தை அளிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள். விமர்சனப் பூதக்கண்ணாடிகள் படைப்புகளின் நுண் தளங்களைப் பார்க்க உதவி செய்கின்றன.

இலக்கியமும், விமர்சனமும் இரண்டும் ஒன்றிணைந்த சிந்தனைத் துறைகள். நல்ல விமர்சகர்களைப் பேணும் தகுதி நமது சமூகத்திற்கு இல்லை. அதற்கு பல தகுதிகள் இல்லை. இலக்கியப் பரப்பைக் கடந்து சமூகத்தில் இலக்கியத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதை விடவும் குறைவாகத்தான் இலக்கிய விமர்சனத்திற்கு இருக்கிறது. நமது சமூகம் தேர்ந்த அறிவியல் எழுத்தாளர்களை, வரலாற்று ஆசிரியர்களை, மொழியியல் அறிஞர்களை உருவாக்கும் தகுதியற்றது. நாம் ரிச்சர்ட் டாக்கின்ஸையும், ராமச்சந்திர குஹாவையும், கார்ல் சாகனையும் வியந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். அதே போலத்தான் ஹெரால்ட் ப்ளூம் போன்றவர்களையும்.

உங்கள் கதைகளின் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்கள் எத்தகையவை?

பாலா பொன்ராஜ்: அந்நியத்தன்மை. ஆங்கில மொழிபெயர்ப்பை படிப்பது போலுள்ளது, என்பவையே கதைகளின் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்கள். ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்பது எனது பியானோ ஆசையைப் போல மேலுமொன்று. அப்போது இந்தக் “குறைகள்” மறைந்து போகலாம்.

உங்கள் மொழியை நீங்கள் எப்படி கண்டடைந்தீர்கள்?

பாலா பொன்ராஜ்: அப்படியொன்றும் கோணங்கி, லா.ச.ராமமிர்தம், சு.ரா போல தனித்துவமான மொழியை நான் கண்டடைந்து விட்டதாக நினைக்கவில்லை. நான் மொழியைக் கற்கும் மாணவன். என்ன, எழுதிப் பார்த்துக் கற்றுக்கொள்கிறேன்.

எழுதி முடித்தவுடன் கதை தனித்த உயிராக எழுத்தாளனை விட்டு துண்டித்துக்கொண்டு உயிர் பெறுகிறது எனும் நம்பிக்கை உங்களுக்கு உண்டு. படைப்பு சார்ந்து எழுத்தாளனின் பொறுப்பு என்ன?

பாலா பொன்ராஜ்: எனது எளிமையான நம்பிக்கை என்னவென்றால், ஒரு புனைவு எழுதி முடிக்கப்பட்டு அச்சிலேறி வாசகரின் கைகளுக்குச் சென்றதும் வாசகரும், புனைவும் மணம் செய்து கொள்கிறார்கள். எழுதியவர்கள் அவர்களுக்கு இடையே தலையிடக் கூடாது.

ஆனால் எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும் எழுத்தாளன் பொறுப்பாக வேண்டும். சிந்திப்பதும், எழுதுவதும் சுதந்திரமான செயல்கள் என்றாலும் பொறுப்பு மிக்கவை.

கதைகளில் நீட்ஷே வருகிறார். உங்கள் தத்துவ வாசிப்பு / ஆர்வம் பற்றி? புனைவு எழுத்தாளனுக்கு தத்துவ வாசிப்பு எப்படி பங்களிக்கும்?

பாலா பொன்ராஜ்: அறிவியலும், தத்துவமும் அல்டிமேட் ரியாலிட்டியை, பொருண்மையைத் தொட விரும்புகிற துறைகள். அதிநுட்பமானவை. இவ்விரண்டு துறைகளில் விவாதிக்கப்படும் பொருட்கள் நமது சிந்தனையை, கற்பனையை, தர்க்கத்தை அளவுகளுக்கு அப்பால் விஸ்தரிக்கக்கூடியவை. ஒரு புனைவு எழுத்தாளனுக்கு மேற்சொன்ன மூன்றும் எவ்வளவு முக்கியமானவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆயினும் வாழ்வை எழுதுகிறவர்கள் ஒருபடி மேலேதான் நிற்கிறார்கள். இந்த எண்ணம் மூன்றாம் உலக நாட்டின் பிரச்சனை என்றே நான் நினைக்கிறேன். நம்மை இன்னும் இலட்சியவாதம் தேய்ந்த அளவிலாவது பீடித்திருக்கிறது. ஆனால் ஒரு சமூகமாக, ஒரு நாடாக உள்ளீடற்ற ஒரு வடிவத்தை எட்டிவிட்டோம். நமது எலும்புகளில் மஜ்ஜை அருகிப் போய்விட்டது.

நம்மைச் சுற்றிலும் குடும்ப உறவுகள், திருமண உறவுகள், ஆண் பெண் இடையிலான சாதாரண நம்பிக்கை இவையெல்லாம் பெரும் சிதைவுகளைச் சந்திக்கின்றன. ஒரு பெண் மாபெரும் சுரண்டலுக்கு, வன்முறைக்கு உள்ளாகக்கூடிய எல்லாச் சாத்தியங்களும் உள்ள அதே வேளையில், ஓர் ஆண், வலிமையற்ற பெண்ணின்மீது எக்கணத்திலாவது வன்முறையை பிரயோகிக்கற எல்லையில் நின்றாலும், பெண்ணின் மீது வன்முறையை பிரயோகிப்பதையும், அவளை பாலியில் ரீதியாகத் துன்புறுத்துவதையும், சமூக உறவுகள் அவனுக்குக் கொடுக்கும் அழுத்தத்திற்கான வடிகாலாகவும் நினைத்துக் கொள்கிறான். அதே சமயம் பெண்களின் மீறல்கள் ஆண்களால் கட்டுப்படுத்த முடியாத இடத்திற்கு நகர்ந்து விட ஆணோ இந்நிலையை எப்படி தடுப்பதென்று தெரியாமல் விழிக்கிறான். சொன்னால் கேட்டுக் கொள்ளும் பழைய பெண்கள் போன தலைமுறையோடு காணாமல் போய் விட்டார்கள். பெண் இன்றைய ஆண் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால். இது ஆண்களை உலகம் முழுக்கவே மிஸோகைனிஸ்ட்டாக மாற்றியிருக்கது. Misogyny is fashion now.

ஒவ்வொரு ஆணும் இப்போது தன்னை ஒரு லெளகீக சூப்பர்மேனாக நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவன் குறைந்தது தன்னுடைய தங்கையின் கணவனை விட சில ஆயிரங்களாவது சம்பாதிக்க வேண்டுமென்று அவனுடைய மனைவி ஆசைப்படுகிறாள். போட்டி பெருகிப் போய்விட்ட சமூகத்தில் தன்னால் முடிந்த அளவு பணம், அதிகாரம், செல்வாக்கு உடையவனாக, எக்காரியத்தையும் சாதிக்கக் கூடியவனாக இருக்க வேண்டிய பயத்தில் இருக்கிறான். ஒரு நிமிடமாவது தன்னுடைய சூப்பர்மேன் அந்தஸ்து குறைந்து விடக்கூடாதென்று பதட்டமும் உண்டு.

இன்றைய ஆண் ஒரு மிஸோகைனிஸ்ட்டாகவும், சுயமோகியாகவும் இருக்க மரபான ஒழுக்க, மதிப்பீட்டு வீழ்ச்சியும், புற நெருக்கடிகளும் அவனே அவனை ஒரு தீவிர பாதுகாப்பிற்குள் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. குற்ற உணர்விலிருந்து நாம் அதிவேகமாக விடைபெற்றுக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தேவை வலிமை மட்டுமே என்பதான உலகம். நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் செல்லக்கூடியது வலிமை மட்டுமே. நீட்ஷே நண்பனைப் போன்ற தத்துவவாதி. நமது குற்றங்களை அவை குற்றங்களே அல்லவென்று சொல்பவர். இயேசு கிறிஸ்து எதிர்-டயோனிஸிஸ் என்று அவர் சொல்லவில்லையா! இன்றைய கார்ப்பரேட் உலகம் அசல் நீட்ஷேவிய பாணியைப் பின்பற்றுகிறது. நாம் ஒரு சக பணியாளரை ஏமாற்றினால் அதை எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மறக்கச் செய்கிற சூழலுக்கான தர்க்க நியாயத்தை நீட்ஷே அளித்து விடுகிறார் என்பதே நீட்ஷேவை வாசிப்பதில் உள்ள அபாயம்.

நீட்ஷேவைக் குறித்த நல்ல அறிமுக நூல் மலர்மன்னன் எழுதியது. அவர் யாரென்று நமக்கு நன்றாகத் தெரியும். நீட்ஷே தன்னை மேலானவர்களாக, தூய்மையானவர்களாக, அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாக பாவிப்பவர்களின் தத்துவவாதியாக மாறிவிடுகிற சூழலை நாம் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் சந்தித்தோம். இயேசு கிறிஸ்துவின், நபியின் சீடர்கள் மாபெரும் மதப் போர்களை வழங்கினார்கள், மார்க்ஸின், லெனினின் சீடர்கள் டொட்டாலிடேரியன் அரசுகளின் கீழ் மாபெரும் படுகொலைகளைச் செய்தார்கள். நீட்ஷேவின் சீடரான ஹிட்லர் மாபெரும் போருக்கும், கோடிக்கணக்கான உயிர்ப்பலிக்கும் மட்டும் காரணமானவரல்ல, அவர் எப்படி தேர்தல் முறையைக் கொண்டு, தேசியவாதம், தேசப்பற்று, உயர்குடி அடையாளம், தூய்மை இவற்றைக் கொண்டு, கொலை உலைகளை எழுப்ப முடியுமென்று எல்லா தேசங்களைச் சேர்ந்த அதிகார வெறிபிடித்தவர்களுக்கும் ஒரு பாதையை வகுத்துத் தந்திருக்கிறார்.

நீட்ஷேவை வாசித்தல் சவாலானதும், அழகானதுமாகும். கவித்துவமான மொழியால் அவரது கருத்துக்கள், இரத்தக்கறை படிந்திருப்பினும் தூய்மையாகத் தெரிகின்றன. ஆனால் தனிப்பட்ட முறையில் நீட்ஷே அளிக்கும் பாதிப்பை நாம் புத்தரை வாசித்து Detox செய்து கொள்வது நல்லது. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அதைச் செய்திருக்கிறார்.

நீட்ஷே ஓர் அழகான துப்பாக்கி. ஆனால் இன்னும் நீட்ஷேவை ஆழமாகக் கற்க வேண்டுமென்று விரும்புகிறேன். அப்படியொரு வாசிப்பை நான் எட்டிவிட்டதாக நினைத்தால் நீட்ஷே குறித்த தனிப்புத்தகம் எழுதக் கூடும். அப்போது கூடவே பியானோவும் வாசிப்பேன் என்று நம்புகிறேன்.

இயற்கை இயைவு உங்கள் ஆன்மீகம் என கொள்ளலாமா?

பாலா பொன்ராஜ்: ஒருகாலத்தில் மார்க்ஸியம், மிஸ்டிசிசம், கவிதை இம்மூன்றின் கலவையாக இவ்வுலகம் இருந்தால் நன்றாக இருக்குமென்று நம்பினேன். பின்பு பல வருட நாத்திக வாழ்விற்குப் பிறகு சில முறைகள் கோவிலுக்குச் சென்று வழிபடவும் செய்தேன். Bachன் “Come, Sweet Death” கேட்கும் போதும், மாசிக் கடைசியில் மஞ்சள் கொன்றை பூத்துக் கிடப்பதையும், ஒரு பாம்பு ஊர்வதைப் பார்க்க நேர்கையிலும் இன்னதென்று விளக்கிச் சொல்ல முடியாத ஆனந்தச் சோர்வு என்னைப் பீடிக்கிறது. Suspending the very idea of being a rational species. கட்புலனும், செவிப்புலனும் போதிக்கும் ஆன்மீகத்தை என்னால் இப்போது விரிவாகச் சொல்ல முடியாததற்கு காரணம் நான் இன்னுமே அவற்றைத் தீவிரமாக சிந்திக்கத் துவங்கவில்லை என்பது மட்டுமே. என்னுடைய முக்கியமான கதைகளில் விலங்குகளை பயன்படுத்துவதை நான் மனிதர்கள் அல்லாத உலகிற்குள் நுழையும் என்னுடைய வேட்கைக்கான முயற்சியாகப் பார்க்கிறேன். இயற்கையிலிருக்கும் ஒவ்வொன்றுமே மனிதர்களுக்கு காட்டுகிற, கற்பிக்கிற நிலையை மனிதன் இசையால் மட்டுமே அடைந்து விட முயற்சிக்கிறான். ஒரு காண்டாமிருகத்தை தொட்டுத் தழுவுவது என்னுடைய பெரிய கனவாக இருக்கிறது. I think the whole point of nature is harmony and interconnectedness என்று நினைக்கிறேன். கூட்டிசைவு இசைக்கு எவ்வளவு முக்கியமென்று உங்களுக்குத் தெரியும்.

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்து நுகர்வு மீதான விமர்சனங்கள் உங்கள் கதையின் அரசியல் என்று புரிந்து கொள்கிறேன். அதை ஒரு கேலியோடு சொல்வதாக உணர்கிறேன்…

பாலா பொன்ராஜ்: அளவற்ற வாங்கும் சக்தியும், தீராத உடற்சக்தியுமே நமது காலத்தின் இலட்சியம். நான் என்பது இப்போது எனக்குச் சொந்தமாக இருக்கும் பொருட்கள் மட்டுமே. நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கமே உலகளாவிய இலட்சிய வடிவமாக மாறிக் கொண்டிருக்கிறது.

உரைநடையில் கவிதையின் தாக்கம் உணர்கிறேன். நீங்கள் கவிதை எழுதியதுண்டா?

பாலா பொன்ராஜ்: நிறைய. ஆனால் ஒவ்வொரு முறை கவிதை எழுதி முடித்ததும் நான் கவிஞன் ஆகவே முடியாதென்று தோன்றும். கவிதை எனக்கு வராததற்கு என்னை விடவும் கவிதைதான் மகிழ்ச்சி அடையும்.

நாவல் பகுதி ஒன்று கல்குதிரையில் பார்த்ததாக நினைவு… எப்போது வருகிறது?

பாலா பொன்ராஜ்: அதன் காலத்தில் தூங்கியும், விழித்தும், ஓய்வெடுத்தும், வேறிடம் நகர்ந்தும் ஏதோ ஒரு போக்கில் செல்கிறது. நல்ல குறி சொல்கிறவர்கள் யாராவது இருந்தால் நாவல் பகுதியைக் காட்ட வேண்டும். என்னால் அதன் விதியைக் கணிக்க முடியவில்லை.

கதைகளை திருத்தும் வழக்கம் உண்டா?

பாலா பொன்ராஜ்: கண்டிப்பாக. கைவிட்டுக் கிடப்பவையும் உண்டு.

கதை எழுதுமிடம் சார்ந்து செண்டிமெண்ட்ஸ் உண்டா?

பாலா பொன்ராஜ்: முதல் நூல் சமயத்தில் இல்லை. இரண்டாவது நூலை எழுதிய சமயத்தில் இருந்தது. ஒரு சிறுகதை நன்றாக வந்துவிட வேண்டுமென்பதற்காக பெரும் படைப்பாளிகளின் புத்தகங்களை கணிணிக்கு அருகில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.