தேர்வு மற்றும் தட்டச்சு உதவி – சிவா கிருஷ்ணமூர்த்தி
(நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான திரு. வண்ணதாசன் அவர்களுக்கு 2016 வருட சாகித்ய அகாதெமி மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘விஷ்ணுபுரம் விருது’ம் வழங்கப்படும் இந்த தருணத்தில், அவரது பல முக்கிய எழுத்துகளை நினைவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கும் விதத்திலும் ‘நடுகை’ என்ற தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையை வெளியிடுவதில் பதாகை பெருமகிழ்வு கொள்கிறது.)
oOo
ஈரம் நிரந்தரம்
(நன்றி அகரம் பதிப்பகம்)
தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன். எதிர்பார்த்ததைவிடக் குறைந்த நெரிசல் உடைய பயணங்கள்தான். நெரிசல்களை ஊடுறுவிச் செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி, அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருநாள் ‘வெண்டார்’ வண்டியில் ஏறிய போது, சேத்துபட்டிலோ, எழும்பூரிலோ பிணம் ஒன்றை ஏற்றினார்கள். விபத்துப் பிணம். முகம் நசுங்கி இருந்திருக்கலாம். இடுப்புத் துணி விலகிக் கிடக்க, இறந்த உடம்பின் திறந்த பெருந்தொடையில் நிறையப் புண்கள். பிணந் தூக்கியவர்கள் சிரித்துக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பீடிகளை எறிந்து கொண்டார்கள். பத்திருபது பீடிகள் பிணத்தின் மேலும் அருகிலும் சிதறிக் கிடந்தன.
இன்னொரு தினம் காத்திருக்க வேண்டிய நிலை. வண்டி வருகிற திசையைப் பார்த்துக்கொண்டே, சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். என் முகத்தைப் பாராமலே, பத்திரிக்கையை பார்த்தபடியே உடம்பு சற்று நகர்ந்து கொண்டது. பத்திரிக்கைப் பார்வையின் தீவிரத்தை ஆசுவாசப்படுத்த அவ்வப்போது வேர்க்கடலை கொறித்துக் கொண்டது. தற்செயலாக இடதுபுறம் திரும்புகிறேன். யாரோ படுத்துக் கிடப்பது போல் இருந்தது.
சரியாகப்பார்த்தால் இன்னொரு பிணம். பிணத்தை மூடி, மேலேயே ஒரு மஞ்சள் பையையும் வைத்திருந்தார்கள். அந்த துணிப்பை கொடுத்த அதிர்ச்சி அதிகம். இறந்து போனவர் நிச்சயம் எங்கள் ஊர்க்காரர் என்று தோன்றிவிட்டது. அதுவும் எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியர் என்று தோன்றிவிட்டது. ஏற்கனவே இறந்து போய்விட்ட அவர், மறுபடி இப்படி மின்சார ரயிலில் அடிபட்டு கிடப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். முகத்தை விலக்கிப் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்தது எல்லாம், இதையெல்லாம் மறந்து, இதற்கெல்லாம் சகஜமாகி, பத்திரிக்கை படிக்காமல் இருப்பது, வேர்க்கடலை கொறிக்காமல் இருப்பது மட்டும்தான்.
பிணங்களுடன் பயணம் செய்வது போல் பூக்களுடனும் பயணம் உண்டு. சனிக்கிழமை பிற்பகல்களில் கோட்டை நிலையத்தில் பூ மூட்டைகளுடன் ஏறுவார்கள். ஏறி இறங்குகிற பாதையில் உட்கார்ந்து கொள்வார்கள். அங்கேயே நார் கிழிப்பார்கள். தொடுக்க ஆரம்பிப்பார்கள். வாய் பேச முடியாத ஒரு பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளுடைய பூக்காரச் சினேகிதனோடு சைகைகளில் ‘பேசிக்’ கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.
எல்லா ஊரையும் போல இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இருக்கிறார்கள். புல்லாங்குழல் வாசிப்புக்கும், பார்வைக் குறைவுக்கும் சமன்பாடுகள் உண்டோ என்று மீண்டும் யோசிக்க வைக்கிறது போல் அருமையாக வாசிக்கிறார்கள். பழைய பாடல்கள் அமிர்தமாக இருக்கின்றன. ‘தென்றல் உறங்கிய போதும்’ என்று துவங்கி நீல இரவுக்கும் நிலவுக்கும் தாவுகிறது பாடல். வண்டி இதற்கு சம்பந்தமே இல்லாத அடையாறு சாக்கடைப் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டுப் புகையின் நிணம் பரவும். நிண வாடையில் நான் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும், தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில், நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயது சிறுவர்கள் தூக்கக் கலக்கத்துடன் மைய வாடியில் தாய்மாமா மடியில் உட்கார்ந்திருப்பார்கள்.
இப்படியே, கதை எழுதினாலும், கவிதை எழுதினாலும், கடிதம் எழுதினாலும் நேற்று வரை நிகழ்ந்ததையே திருப்பித் திருப்பி நினைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தோன்றுகிறது. நகரச் சந்தடி நிறைந்த, இந்த தனித்த, இரண்டாவது தளத்தில் இருந்து கொண்டு யாருடன் பேச, யாருடன் வாழ என்று தெரியவில்லை. எதிரே இருக்கிற அடர்ந்த மாமரங்களை மட்டும் நம்பிக்கொண்டே என் காலைகள் துவங்குகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், இந்த வீட்டுச் சொந்தக்காரரின் தாயாரான அந்த எண்பத்து நான்கு வயது பெரிய மனுஷி, அந்த மாமரம் வரை போய், தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக, உதிர்ந்து கிடக்கிற மாம்பிஞ்சுகளைப் பொறுக்குகிற நேரம் எனக்கு முக்கியமானது. மழையும் காற்றுமாக இருந்த ஒரு அதிகாலையில், ஒரு பச்சை நூல் சேலையுடன் அந்த முதிர்ந்த உடல் குனிந்து குனிந்து நடமாடிக் கொண்டதிலிருந்து, நான் இந்த நகரத்தின் நூல்கண்டுச் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடிக்கடி நினைவு பிறழ்ந்துவிட்ட நிலையில், தன் மகன் வீட்டுக்கதவு என்றும், தன் மகள் வீட்டுக் கதவு என்றும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அந்த பெரிய மனுஷி நிற்கிற நிலையும் என்னுடைய நிலையும் வேறு வேறு அல்ல என்று தோன்றுகிறது. நேர்த்தியான இசை எழுப்புகிற அழைப்பு மணியைப் புறக்கணித்துவிட்டு, நானும் என் வீட்டு மரக்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கத் தடையில்லை. அகல விரித்த விரல்களும், கனத்த உறுதியான மரப்பலகைகளும் அதிர்ந்து அதிர்ந்து எங்கெங்கோ இருக்கிற மனிதர்களையும் எங்கெங்கோ மறைந்த வனங்களையும் கூப்பிடுகிற குரலை, ஒரு ஒற்றை விரல் அழுத்த அழைப்பு மணியில் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய விலை.
என் தாத்தாவைப் போலத் தச்சு வேலை அறிந்தவன் இல்லை எனினும் நான் உளிகளைத் தீட்டிக்கொடுத்த சில தினங்கள், ‘ஆக்கர்’ என்ற பட்டப் பெயர் உள்ள ஒரு இளைய தச்சனுடனும், அவரது மூத்த தச்சருடனும் நான் கொண்டிருந்த உறவுகள் மிகவும் உயர்ந்தவை. இழைத்த மரச்சுருள்கள் அடங்கிய சாக்குகளைத் துளாவித் துளாவி எவ்வளவு தடவை முகர்ந்திருக்கிறேன். வீட்டில் வந்து யாராவது விறகு கீறும் போது எனக்கு விறகுகளின் வாசனையை அறிமுகப்படுத்திய காற்று இப்போது எங்கு போயிற்று? சம்மட்டியும் ஆப்பும் கோடாரியும் வியர்வையும் அதிர்ந்து அதிர்ந்து நகர்கிற மண்ணும் விலகி விலகி எந்த வெளியில் கலந்தன?
நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும்தானே பேசவும், எழுதவும், இருக்கவும், சிரிக்கவும், கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகின்ற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில், அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டுதானே.
வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது. எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில், எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன?
நான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது.
நான் பூவெனில், எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது.
நான் தாவரமாகவும், மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.
அப்படி அக்கறை கொண்டிருப்பதால்தான், ‘நடுகை’ சிறுகதையில் வருகிற கிழவரை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
‘ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா?’ என்ற குரலைப் பதிவு செய்ய முடிகிறது.
ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.
ஒருவர் மணமற்றது என்று வீசட்டும். இன்னொருவர் மணமுள்ளது என்று சூடட்டும்.
ஒருவர் தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.
யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லார்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்.
இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும், எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருக்கிறேன். ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
எஸ்.கல்யாணசுந்தரம்
15.9.96 – ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை.
(நடுகை, 1996, முன்னுரை)