தூரிகையின் மயிர்க்கால்களை
அடையாளப்படுத்தியபடி
சுழன்றோடும் வண்ணத்தீற்றல்கள்.
கோடுகள் தேய்ந்து மறைய மறைய
உதயமாகிறது வரையப்பெறாத ஓவியம்.
வண்ணதாசனை நேரில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். சென்னையில் போஸ்டல் காலனியில் அவர் குடியிருந்தபோது, ஒரு புத்தகத்தை தரவேண்டி அவர் வீட்டுக்குப் போக வேண்டியிருந்தது. அப்போது மின்சாரத்தடையோ என்னவோ. அவர் வீட்டு வாசலில்தான் நின்றிருந்தார். அந்தியிருள் சூழ்ந்த, மரங்களடர்ந்த வாசல்புறமும், அதை நிறைத்துக் கொண்டாற்போல் அவர் நின்றிருந்த தோரணையும் நினைவில் இருக்கிறது. ‘என்ன படிக்கிறீங்க’ என்பது போல் அவர் கேட்க, சிறிய உரையாடல்தான் நிகழ்ந்தது.
ஆனால் அவருடைய படைப்புலகில் அவருடன் நிகழ்ந்த உரையாடல்கள் அதிகம். கூரிய அவதானிப்புகளுடனான, பாசாங்கற்ற, ஆத்மார்த்தமான குரலுடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார். ”கிளை அசைவதை, கிளையில் சாய்ந்த என் உடல் அமிழ்ந்து அமிழ்ந்து அசைவதில் உணர்ந்தேன். காற்றை இப்படியும் அறியலாம் போல‘ என்பதற்கேற்ப நம் புற உலகை அதன் நுண்ணிய கூறுகளுடன் உணர, அவர் எழுத்தில் அமிழ்ந்து அசைகிற வாய்ப்பை நமக்கு தருகிறார். வெற்றுக்கூச்சலற்ற, படாடோபமற்ற ஆழ்ந்த சொற்தீற்றல்களில் அவற்றின் தொனிப்பொருள்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன,
தருணங்களின் அழகியல்:
வண்ணதாசன் உணர்வு நிலையில் ஓர் ஓவியர். அதனால் அவருடைய படைப்புகளில் நிகழும் தருணங்களை சித்திரமாக நிறுத்த முடிகிறது. ஆனால் அவர் ஓவியர் மட்டுமல்லாது அருமையான ஒரு கதைசொல்லி. நம் கண்முன்னே நிகழும் எளிய, தொடர்பற்ற தருணங்களை, சித்திரங்களை இணைத்து மகத்தானதொரு கதையை உருவாக்கிவிட முடிகிறது. அதற்கும் மேல் அவர் ஒரு கவிஞர். “இந்த வரியை விட, அழகாக இருக்கிறது எழுதாத வரியின் நிழல்,” என்று அளவாக எடுத்துரைக்கும் சொற்களால், வாசகனை பிறிதொரு சொற்களற்ற பெருவெளிக்கு இட்டுச்சென்று விடுகிறார்.
அதற்கும் மேல் அவர் நேசத்தை நாடும் மனிதர். அவருடைய சமூக வலைத்தள எழுத்துகளில் எப்போதும், இருகரம் நீட்டி உள்ளிழுக்கும் கவசங்களற்ற இயல்பான கனிவு தெரிகிறது. எந்த வடிவத்தில் எழுதினாலும், காந்த முள்ளெனச் சுற்றி சுற்றி சராசரித்தனத்திலிருந்து மீண்டுயர தத்தளிக்கும் ஒரு மனதை சுட்டிக் காட்டுகிறது. அடர்ந்து பெருகும் இருள்வெளியை துழாவிச் செல்கிறபோதும் ஒரு கீற்று ஒளியை விட்டுச் செல்கிறது. .
தாமிரபரணியின் பாசிபடர்ந்த படிக்கட்டுகளில் காயத்தைக் கழுவப் போனால் வெட்டியவரின் முகத்தில் இருந்த அனாதரவு நிலைமைதான் தெரிகிறது அவருக்கு.
“குறுவாள்களும் கழுவிக்கொள்ளும்படியாக
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அந்நியமற்ற நதி”
என்கிறார்.
கொடுவாளை மறைத்து வைத்திருப்போரிடமும் கவசங்கள் கரைந்து போய் இயல்பான அன்பு வெளிப்படும் என்று கை நீட்டிக் காத்திருக்கும் மனது வண்ணதாசனுக்கு வாய்த்திருக்கிறது. “நீங்கள் என்னைத் தவிர்க்கும்போது, என்னிடம் இருக்கும்படி, நான் விடாமல் பாதுகாக்கும் குறைந்தபட்ச உண்மைகளையும் தவிர்க்கிறீர்கள் என்பதுதான் என் கவலை” என்று விசனப்படுகிறார்.
கிருகிரு மிட்டாய்க்காரனைப் போலவே தோற்றத்தில் இருக்கும் கோமுவின் அப்பா, வருமானமற்ற நாட்களில் சாப்பாட்டிற்காக, கோமு வீட்டு வேலை செய்யும் வீட்டிற்கு, அவளைத் தேடி வருகிறார். போகும்போது சொல்லிக்கொண்டு போவதும் கிடையாது. ஆனாலும் கோமுவிற்கு தேரோட்டம் பார்க்கும் சாக்கிலாவது அப்பா வரமாட்டாரா என்றிருக்கிறது. தேரைப் பார்க்கக்கூட கூட்டிப் போக வேண்டாம். வந்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும். இந்த சில வரிகளில் நமக்கு கோமுவின் வாழ்வுச்சூழல் முற்றிலும் விவரிக்கப்பட்டுவிடுகிறது. வீட்டு எஜமானியான, சீக்கில் கிடக்கும் பெரிய ஆச்சிகூட ‘நீயும் சின்னப் பொண்ணுதான, போ. போய் தேர்ப் பார்த்துட்டு வா’ என்றாலும், கோமு கிளம்புவதில்லை. தொழுவில் நிற்கும் கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டிப்போட, அது அவள் புறங்கையை நக்கிக் கொடுப்பது போல, கோமுவும் ஆச்சியின் இளைத்த கால்களை அமுக்கிக் கொண்டு அங்கேயே இருக்கிறாள்.
முன்பு தொலைக்காட்சியில் வெளிவந்த சிறுகதைத் தொடர் ஒன்றில் ஆண்டன் செகாவின் கதையொன்றின் தழுவலைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய தாத்தாவால், கிராமத்திலிருந்து நகரத்திற்கு, வீட்டு வேலைக்கென கொண்டு விடப்படுகிறான் சிறுவன் ஒருவன். ஊரே பண்டிகை கொண்டாடும்போது அவன் மட்டும் தனித்து உணர்கிறான். எப்படியும் தாத்தா வந்து தன்னை மீண்டும் அம்மாவிடம் அழைத்துக் கொண்டு போய்விடுவார் என நம்பிக்கையில், தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் விலாசமாக ‘நதிக்கு அருகில் இருக்கிறது, எங்கள் கிராமம்’ என எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டு, உவகையுடன் நடந்து செல்வான். அங்கே தேரோட்டம் தொடங்குகிறது. கோமுவிற்கோ தேர் நிலையில் வந்து நின்றுவிடுகிறது.
கிருஷ்ணன் வைத்த வீடு சிறுகதையிலோ, ‘ஒண்ணு போலப் போயீரலாம். ஒண்ணு போல வர முடியுமா’ என்றுக் கேட்கும் ஐஸ் விற்கிற முருகனின் அப்பா மூச்சுமுட்டக் குடித்திருக்கிறார். அத்தனை குடித்தனங்களுக்கு மத்தியில் ஒரு குடும்பத்தின் மொத்த தற்கொலையை அவரவர் எதிர்கொள்ளும் விதம். ஆங்காங்கே செருகி வைத்திருப்பது போன்ற இழவு வீட்டு வர்ணனைகள் ஒன்றின் பின் ஒன்றாக நம்மை அந்த சூழலில் இழுத்துக் கொண்டு போகிறது.
எழுத்தாளன் யத்தனிப்பதும், வாசகனைச் சென்று சேரும் சித்திரமும் இயைந்து போகும்போது அதன் அழகியல் துலக்கம் பெறுகிறது.
கலையின் முழுமை:
ஒரு வகைமையை பிடித்திருக்கிறது என வரித்துக் கொண்டுவிட்டால், மற்றவையெல்லம் பிடிக்காமல் போய்விடுகிறது. ரேஸ் குதிரைகளென அபிமானங்களை விகசித்துப் போற்றுவதற்கு இலக்கிய வாசிப்பு எதற்கு? ஒரு கலையின் முழுமை அதை அங்கீகரிக்கும் நிலைகளைக் காட்டிலும், அது தன்னகத்தே கொண்டிருக்கும் மதிப்பில் அல்லவா இருக்கிறது.
வண்ணதாசனின் சிறுகதைகள் ஒரு செறிந்த பூஞ்சோலை போலிருக்கின்றன. கதையின் மையம் ஒரு பூச்செடி என்றால் அதைச் சுற்றிலும் பல பூச்செடிகளை அவர் நட்டுக் கொண்டே போகிறார். சுற்றிவளைத்து போவதால் மையப்புலன் அமுங்கி விடுகிறது என்கிறார்கள். அவ்வளவு துரிதமாக எங்குதான் போவார்களோ. ஒரு கரண்டி இனிப்பு பாயசமும், அதற்கு நிகராக ஒரு கரண்டி துவர்ப்பு பச்சடியும், ஒரு வரிசை வெஞ்சனமும் வைத்து பிறகு சாதத்தை விளம்புவதுதானே விருந்து.
பள்ளிக்கூடத்தில் மேஜிக் நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கோரும் முழுக்கைச் சட்டையணிந்தவரை பெயர் சொல்லிக் கூட அறிமுகப்படுத்துவதில்லை. அவருடைய உதவியாளரை ‘மிஸ்டர். கதிரேசன்’ என விளிப்பதன் மூலமே அவரைப் பற்றி சொல்லியாகி விடுகிறது. காமராஜருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் சங்கரநாராயணனிடம் காட்டி, அவர் வேலை செய்யும் கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கேட்டு, சன்மானம் பெறுவது பற்றியெல்லாம் பேசுகிறார். சங்கரநாராயணனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்கிறபோது ‘இந்தக் காலனி சிறுவர்களைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நிகழ்ச்சி நடத்திக் காட்டுகிறேன்’ என்கிறார். அதுவும் நிகழாது என்கிறபோது, கிடைக்கும் சாப்பாட்டையும் துறந்து கிளம்பிப் போகிறார். உன்னதமான கலையின் முழுமை அடைவது, அதை நிகழ்த்தக் கிடைக்கும் வாய்ப்புகள்தோறும் நிகழ்த்தும் விழைவு கொள்வது.
பெயர் குறிப்பிடாத முழுக்கை சட்டைக்காரர் நமக்கு அந்நியமானவரில்லை. அசோகமித்திரனின் புலிக்கலைஞனில் வரும் காதரின் நீட்சி எனலாம். சத்யஜித் ரே-யின் சிறந்த சிறுகதையான ‘படோல் பாபு‘வில் வரும் நாடகக் கலைஞனும் அவர்தான். ‘டாயர் ஃபைட்’ காதர், படோல் பாபு, முழுக்கை சட்டையணிந்தவர் எல்லோரும் தங்கள் கலையை நிகழ்த்தும் தருணத்தை தவற விடுவதேயில்லை. அதில் அவர்களுக்கு அந்தரங்கமானதொரு பெருமை இருந்து கொண்டேயிருக்கிறது. சந்திரசேகர ராவ் மற்றும் சங்கரநாராயணன் போன்றோர் தங்களுடைய லௌகீக அளவுகோல்களுடன் அவர்களை அங்கீகரிக்கவியலாத போதாமையைப் பற்றி அவர்களுக்கு கவலையிருப்பதில்லை. நிரம்பியும் நிரம்பாமலும் ஆனால் நிரம்பியபடிக்கு நிகழ்கிறது எல்லாம் வண்ணதாசனின் படைப்புலகில்
“ஆனாலும் காற்று
அப்பால் செல்லும்
மூடிய கதவுகளுக்கு
அப்பாலும்”
தொடரும் கண்ணிகள்:
வண்ணதாசன் நீண்ட நாவலோ புதினமோ எழுதியதில்லை. ‘சின்னு முதல் சின்னு வரை’, ஒரு நெடுங்கதை. ஆனால் அவர் படைப்புலகம் தொடர்ச்சியான கண்ணிகளால் கட்டப்பட்டு இருக்கிறது. கவிதையுலகில் இருந்து கதைகளுக்கும், மீண்டும் கதைகளில் இருந்து கவிதைகளுக்கும் மாறி மாறி நம்மை இட்டுச் செல்கிறார். ஒரு கவிதையில், சுற்றியிருக்கும் அத்தனை பேருக்கு மத்தியில், தனிமையில், அரங்கில் தொடங்கும் ஒளிக்காக காத்திருக்கும் அனுபவத்தைப் பற்றி எழுதியிருப்பார். அக்கவிதையிலிருந்து வெளியே வந்தால், தனுஷ்கோடி அழகர் ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ எப்படியிருக்கிறது என்று கேட்டுக் கொண்டு வந்துவிடுகிறான். அந்த அரங்கில் அவர் காத்திருந்தது இந்தக் கதையின் விரிவுக்காக எனத் தோன்றும். அடுத்து அழகரின் பார்வையில் புத்தகக் கடைக்காரர், சலூன் கடைகள், ஜூஸ் கடைக்காரர் என விவரிப்பு தொடர்கிறது. இப்போது அழகர் கதைசொல்லிக்கு நெருக்கமானவனாகி விட்டான். இன்னும் சற்று யோசித்துப் பார்த்தால், அந்த வீட்டைப் பற்றிய Rhetorical கேள்விகளை எடுத்துக் கொடுக்கவே தனுஷ்கோடி அழகர் கதைக்குள் வந்திருக்கிறான் எனப் புரியும்.
சரசுவின் உலகம் அதன் அத்தனை தனித்துவங்களோடும், அவளுடைய கணவனின் உலகோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அவனுடைய உத்தியோகக் கவலைகள், லௌகீக பிரச்னைகள், அவனுடைய உறக்க போதாமை என அனைத்திலும், அவள் ஆதுரத்துடன் கைகொடுக்க காத்திருக்கிறாள். ஒரு புதிய போர்வையால் தன் அன்புலகிற்குள் அவனை பிணைத்துவிடக் காத்திருக்கிறாள். அவன் அகாலத்தில் அழைத்து வரும் விருந்தாடிக்கு உபசரணை செய்யும்போது, சிறிய இடறல். அவன் திரும்பிப் பார்க்கிற பார்வையோ, அடித்தால்கூட அவ்வளவு வலித்திருக்காது. தானே தலையை வாரிக் கொள்கிறேன் என கலைத்துக் கொள்ளும் சிறுவனும், அவனைப் பிடித்து இழுத்து தலையை சரிசெய்ய முயலும் அம்மாவும் போலொரு இணை. சரசுவின் நுண்ணியல்புகளை, அவள் கணவன் உணர்ந்தேத்தான் அப்படியொரு பாராமுகமாக இருக்கிறானோ எனத் தோன்றுகிறது. அவளுடைய அன்புக்கான மறுமொழியை அவனுக்கு சொல்லத் தெரிந்தது அப்படித்தான். ஒதுக்கியபடி ஓடுகிறவன், தனது வாக்குமூலமாக பிறிதொரு இடத்தில் ‘பலிச்சோறு‘ எனக் கவிதையாக எழுதி வைக்கிறான்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிற உன் உந்திச்சுழி.
அப்பழுக்கற்று இருப்பதாகச்
சொல்கிறார்கள்
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
எளிய காட்சிகளின் அற்புதத்தை எடுத்துரைக்கும் கவிதைகளிடையே ‘நீலத்தடாகம்‘ இரு வேறு தீவிர முனைகளிடையே எட்டிப் பாய்கிறது. ‘ஒட்டுதல்‘ கதையில் வரும் மஹேஸ்வரி, தன் நெற்றியில் பொட்டு வைக்கும் செஞ்சுலட்சுமியின் மீது சாய்ந்து கொள்ளும் ஆறுதலை நினைவுப்படுத்துகிறது. உலகின் எல்லா கசப்புகளையும் செஞ்சுலட்சுமியின் கணவரின் சிரிப்புப் போல இலகுப்படுத்திவிட்டால் நல்லதுதானே. உறிஞ்சப்படும் கசடுகளை எல்லாம் கழுவிப் போக கண்ணீருக்கா பஞ்சம்.
அலையலையெனப் பெருகும் நுணுக்கம்:
எங்கள் வீட்டருகே ஒரு கார்னிவெல் ஒன்றுக்கு சென்றிருந்தேன். மரமறுக்கும் மின்சார ரம்பம் கொண்டு ஒரு கலைஞர், நின்று கொண்டிருந்த மரத்தை சிற்பமாக செதுக்கிக் கொண்டிருந்தார். கழுகு இறகுகள் சூடிக் கொண்டிருக்கும், போர்த்தழும்புகள் கொண்ட, தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கும், மரபான செவ்விந்திய தலைவரின் முகம். அத்தனை பெரிய கருவியைக் கொண்டு செய்ததா என கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நுணுக்கங்களுடன் செதுக்கியிருந்தார். இயற்கையின் ஒரு பகுதியை மரபின் ஒரு பகுதியாக அவர் மாற்ற முயற்சி செய்கிறார் எனப் புரிந்தது. வண்ணதாசன் இயற்கையை வாசகனின் வாழ்க்கையின் ஒளிகொண்ட பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். குதூகலங்களும், ஏமாற்றங்களூம், கசப்புகளும், அற்புதங்களும், துயர்களும், போதனைகளும் நுணுக்கமாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த நுணுக்கங்களின் விகசிப்பைத் தாண்டி நமக்கு ஒரு முழுமையான தரிசனத்தையும் கொடுக்க வல்லது அவருடைய படைப்புலகம்.
வண்ணதாசன் ஓவியக்கலை அறிந்தவர். நெல்லையப்பர் மாகாளையையும், வாள் ஓங்கும் மதுரை வீரனையும், குழுமூர் ஓடைக்கார ஆயியையும் வரைய ஆசைப்படுகிறார். சிறுகதைகளில் அப்படியான சித்திரங்களைத்தான் திரும்பத் திரும்ப செய்து கொண்டேயிருக்கிறார். பாக்குமரங்களும் தென்னை மரங்களும், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையும், அதன் மேல் ஒளி உமிழும் நீல ரசகுண்டு விளக்கும் என ‘கிருஷ்ணன் வைத்த வீடு‘ நம் கண் முன்னே நிற்கிறது. பிற பாத்திரங்களான அந்த வீட்டுக்காரர், சசியின் அம்மா, கதைசொல்லியின் அம்மா, போலீஸ்காரர், ஐஸ்வண்டிக்காரரின் அப்பா எனப் பலருக்கும் பெயர்களில்லை. பெயர்களற்ற அடையாளங்கள் இன்னமும் அழுத்தமாக பதிகின்றன. நீர் முகர்ந்து எடுத்த குவளையின் வெளிப்புறத்தை துடைத்துவிட்டுக் கொடுக்கும் அம்மா. அரிவாளைக் கையில் கொடுக்கக் கூடாதென தரையில் வைத்துக் கொடுக்கும் சசி. மின்சார கம்பியை உரசியபடி சலாரென விழும் தென்னை ஓலை என ஒவ்வொரு விவரிப்பும் மெருகேற்றி வைக்கப்படுகின்றன. அவை வெற்று நுணுக்கங்களாக நின்று விடுவதில்லை. சொல்லிச் செல்லாமல் சுட்டும் கலையின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆதியில் எந்தப் பெயரும் இடப்படாத சிறு பூச்சியை வளையல் பூச்சி என்றோ கம்பளிப் பூச்சியென்றோ அவரவர் வசதிக்கேற்ப அழைத்தாலும், உயிர்த்தலின் நகர்தலாக அதைப் பார்க்கும் பார்வை அவருடைய படைப்புகளில் இருந்து கொண்டேயிருக்கிறது.
தூரக் காதுகள்:
பென்சில் சீவும்போது எங்கோ சரிகிற மரங்களும், அரவமற்ற இரவுப்பொழுதில் எங்கோ ஒருவர் பாடுவதும் கேட்கும் தூரக்காதுகள். தொலைபேசியில் அழைக்கும் உறவினரிடம் ‘சாரல் மழை பெய்திருக்கிறது என்கிறார். உடன் எதிர்முனையிலிருப்பவர் செடிகள் எல்லாம் உச்சிக் குளிர்ந்திருக்கும் என்கிறார். உலகின் எத்தொலைவிற்கும் அவர் காதுகள் நீண்டு, ஒரு சிறு விகசிப்பை, அற்புதத்தின் நிழலை தேடியவண்ணம் இருக்கின்றன. வண்ணத்துபூச்சியின் சிறகசைவும், எரிமலையின் உள்ளுறுமலும் கவிஞனின் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. பெரும் அருவியில் பொழியும் நீரின் அளவுப் பற்றிய பிரமிப்பை விட, அந்த அருவியின் உயரத்தைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகள் பிரமிப்பைத் தருகின்றன. இன்னும் சில ஆயிர வருடங்களில் பெரிய அருவிகளும், அவற்றைத் தாண்டி பறக்கும் சிறிய பறவைகளும் அழிந்து போகலாம். ஆனால் மானுடத்தின் இந்த நுண்ணுணர்ச்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். கவிதைப் படிமங்களாகவோ, தானியங்கி இயந்திரங்களின் சேமிப்பு பெட்டகத்திலோ.
மனிதம் கிடக்கும் மிதிபடத் தெருவினில்
உன்னதம் அழைக்கும்
எங்கோ தொலைவில்.
வண்ணதாசனை சாகித்ய அகதெமி கௌரவித்திருப்பது, இலக்கியத்தில் அழகியலை கௌரவப்படுத்துவது போல. பல்வேறு மொழிகளிலும் அவருடைய படைப்புகள், இன்னமும் அதிகமாக சென்று சேர வழிவகுக்கும். இதே நேரத்தில் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினரும் விருது வழங்கி விழா நடத்துவது போற்றுதற்குரியது.
வண்ணதாசனின் படைப்புலகம் வாசகனை கைநீட்டி அழைப்பதில்லை. அது இயல்பாக வந்து நம்மை சூழ்ந்து கொள்கிறது. நீரென வந்து நம்மை நிரப்பிவிட்டுச் செல்கிறது. கொள்கலனின் வடிவத்துக்கு ஏற்ப, தகவமைத்துக் கொண்டாலும், தன்னைக் காணும் உலகைத் தன்னில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது நீர்- துப்பாய்ந்த துலக்கமானதொரு வண்ண சித்திரமாக.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஶ்ரீதர்.
//பிரேம்சந்த்தின் கதையொன்றிலும் இதே போல சிறுவன் ஒருவன், அவனுடைய தாத்தாவால், கிராமத்திலிருந்து நகரத்திற்கு, வீட்டு வேலைக்கென கொண்டு விடப்படுகிறான்.//
சேகாவின் வான்கா கதையைப் போன்றே இருக்கிறது என்று வியக்கிறேன்.
மேலும் எழுதுங்கள். வாழ்த்துகள் ஶ்ரீதர்
Thanks for the compliments Siva. _/\_
As you mentioned, the short story referred in the article is Chekhov’s Vanka. I saw the story made as a beautiful episode in DoorDarshan during my school days. I tried to source the details about it when this article was made, but unfortunately those episodes of DD were not available in their archives too. I had corrected the article as well. Thanks a lot for pointing it out.