வழிப்போக்கன் குறிப்புகள் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்
1

இது எத்தனாவது ஞாயிற்றுக்கிழமை என்று தெரியவில்லை
பிறந்ததிலிருந்து எண்ணிக் கொண்டா இருக்கிறோம்
விடுமுறை நாளென்பதால் சூரியன் உதித்த பின்புதான் எழுவது
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை ஏன் ஓய்வு நாளாக தேர்ந்தெடுத்தார்கள்
என்று நான் விவாதிக்கப் போவதில்லை
அடிமைச் சேவகம் செய்பவர்களெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்
அவிழ்த்துவிடப்படுகிறார்கள்
உத்தரவை செயல்படுத்த தாழப்பணிந்து நிற்க நேர்ந்தது என் விதி
எஜமானர்களுக்கு உழவுமாடும், பணியாளும் ஒன்றுதான்
ஏ.சி அறையில் போடப்படும் கையெழுத்து
விளிம்பு நிலை மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது
கடவுளின் அலைவரிசைக்கு ஒத்துப் போகின்றவர்களெல்லாம்
சாதாரண பரதேசிகள்தானே
ஏழையின் பாத்திரத்தை அருள்மழை நிரப்புவதே இல்லை
ஏழைகளின் சுவர்க்கக் கனவுகளெல்லாம் வெறும்
சோற்றுப் பருக்கைகள்தான்
திரையில் காட்டப்படும் மாயாஜால வித்தையால்
ஏழைகளை எளிதில் வசியப்படுத்திவிட முடிகிறது
இந்த அடிமைகள் தேடுவது விடுதலையை அல்ல
கைவிலங்குகளை
இந்த உலகம் அழியும் வரை ஏழைகளின் பசி நெருப்பில்
குளிர்காய ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

2

மனிதர்களிடம் இவன் வைத்த நம்பிக்கை குறைந்தபோது
இவன் தன் பகுத்தறிவு முகமூடியை கழற்றி வைத்துவிட்டான்
இவனது நம்பிக்கையை கடவுள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை
கவலை மேகங்கள் இல்லாத வாழ்க்கை வானை
கற்பனை செய்துகூட பார்க்க முடியாது அல்லவா
கருணை வெளிப்படும் தருணத்தில் கடவுள்தன்மைக்கு
வெரு அருகாமையில் சென்றுவிடுகிறோம் அல்லவா
வாழ்க்கை தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்ற கேள்விக்கு
இவனுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை
இயற்கை உந்துதலுக்கு ஆட்பட்டு தவறிழைக்கும்போது
இவன் பிதாவை வருத்தமடையச் செய்கிறான்
நல்லவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு என்ன
அளவுகோலைப் பயன்படுத்துவதென்று இவனுக்குத் தெரியவில்லை
தரித்திரத்தில் உழல்பவன் மனதில் ஆசாபாசங்களுக்கு
இடம் கொடுக்கலாமா
வாழ்க்கை, புதையலை காவல் காக்கும் பிசாசு
காசு பண்ணத் தெரியாதவன் கடைசிவரை
ஏங்கி ஏங்கிச் சாக வேண்டியதுதான்
இவனுக்கான போதி மரத்தை இன்னும் இவன் தேடிக் கொண்டிருக்கிறான்
இவனுக்கு இங்கிருந்து வெளியேறும் வழி தெரியவில்லை
உண்மைக்கான தேடல் மற்றவர்களிடமிருந்து இவனை
அந்நியப்படுத்திவிட்டது
வாழ்க்கை இவனை மென்று தின்று கொண்டிருக்கிறது
அகம் நோக்கிச் செல்பவர்களுக்கு இந்த உலகம்
சிலுவையைத்தான் பரிசாகத் தருகிறது
இவனுக்கு இப்போதுதான் புரிந்தது கடவுள் என்ற பைத்தியக்காரனின்
கனவுதான் இந்த உலகமென்று.

3

ஆறுதலைத் தேடியலையும் எனது ஆன்மாவுக்கு
சாந்தியளிக்க எவரால் இயலும்
கடவுளின் தண்டனை முறைகள் இப்படித்தான் இருக்குமென்று
யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது
மரணம் விடுதலை தரும் என்பதால் எல்லா
சித்ரவதைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது
பிரார்த்தனை விண்ணப்பங்கள் வெற்றுக் கூச்சல் என
கடவுளால் அலட்சியப்படுத்தப்படுகிறது
இந்த பூமி பாவத்தின் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கான
இடமென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது
எந்த மனிதருக்குள்ளும் கனவுகளை விதைக்காதீர்கள்
வாழ்க்கையில் வசந்தத்தை எதிர்நோக்கி காத்திருந்தவர்களெல்லாம்
கண்டடைந்தது என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டால்
நிச்சயமாக உங்கள் தேர்வு தற்கொலையாகத்தான் இருக்கும்
அந்திம நாட்களை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை
கேட்டுப் பாருங்கள் அவர்களில் எவரும்
மறுபடி பிறக்க விரும்ப மாட்டார்கள்
இந்த இரவிலாவது எனது விழிகள் உறங்குமா
உனது ஆளுகைக்கு கீழ் உள்ள என்னால்
உனக்கு அப்படியென்ன ஆபத்தை விளைவித்துவிட முடியும்
கடவுளிடம் மன்னிப்பின் ஒளியை எதிர்பார்த்து
ஏமாந்து போனவர்கள் எத்தனை பேர்
இந்த இரவுப்பொழுது எனக்கு அமைதி தரட்டும்
என் கேள்விகளுக்கு நீ விடையளிக்க மாட்டாய்
என்று தெரியும்
எனது பலவீனம் என்னவென்று நீ அறிந்து வைத்திருக்கிறாய்
நான் இறந்த பின்பு நீ சித்ரவதை செய்து இன்புற
அடுத்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்
தீர்ப்பு நாளிலாவது என் தரப்பு நியாயத்தை
செவிமடுப்பாயா
விடியாத அந்த ஓர் இரவை எதிர்பார்த்துதான்
ஒவ்வொரு இரவும் நான் உறங்குகிறேன்
தீர்க்க தரிசனங்கள் உண்மையென்று நம்பி
ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்
விடைபெற்றுக் கொள்கிறேன் எந்த ஒரு மனிதனும்
நான் கடந்து சென்ற பாதையை தேர்வு
செய்ய வேண்டாம்.

4

அன்பினால் இந்த உலகை நிறைத்தவர்கள்
இன்றும் நினைத்துப் பார்க்கப்படுகிறார்கள்
தன்னை இரட்சிக்க நினைக்கும் அன்பின் ஒளியை
மனிதன் அலட்சியப்படுத்திவிடுகிறான்
ஜீவனின் யாத்திரை எதை நோக்கியதாக இருக்க வேண்டும்
மாயமாகிப் போகக்கூடிய இந்த உடலின்
தேவையை பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கையா
வாலிபத்தில் எதிர்காலத்தைப் பற்றியக் கனவு இன்பமாகத்தான் இருக்கும்
ஞானத்தை அடையக்கூட தொழில்நுட்பம் இன்று வந்துவிட்டது
மொட்டுக்களை இயற்கையல்லாமல் மனிதன் திறப்பது சாத்தியமா
இன்னும் வேண்டும் என்கிற ஆசை இறக்கும் வரை இருந்துகொண்டுதான் இருக்கிறது
மரணத்தின் நிழல் இந்த உலகை ஒருநாள் முழுமையாக தழுவுமல்லவா
கடவுளை வைத்து பணம் பண்ணும் தரகர்களால்
உங்களை மரணத்திலிருந்து காக்க முடியுமா
பூமியின் ஆயுளுடன் ஒப்பிடுகையில் மனித வாழ்க்கை சில நொடிகள்தானே
நான் என்பது எங்கிருந்து எழுகிறதென்று நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா
ஒருவனின் நம்பிக்கைச் சுவரை உன் வார்த்தைகளால் தகர்த்துவிடாதே
உனது வாதத் திறமையால் வாழ்க்கையை வாங்க இயலாது
உலகை வென்றவர்களெல்லாம் கடைசியில் என்ன கொண்டு போனார்கள்
வாழ்க்கையின் வேர்களை அறிய ஒரு பிறவி போதாதா
விதியின் கொடிய கரங்கள் மனிதனை பொம்மையாகத்தான் ஆக்கி வைத்திருக்கிறது
வலையில் அகப்பட்டுக் கொண்ட மீன் சேற்றில் தலை புதைத்துக் கொள்ளுமாம்
பூஜிக்க வேண்டியது மண்ணாலான இந்த உடலையல்ல உள்ளேயிருக்கும்
பரிசுத்த ஆவியை
கடவுளர் பூமியில் வாழ நாம் சிறிதும் அருகதையற்றவர்கள்
கடவுளின் ஒவ்வொரு குமாரனையும் பார்த்து நாம் பரிகசித்து சிரித்தோம்
இந்த உலகில் புற்றீசல் போல மதம் பெருகிவிட்டது
நெஞ்சில் ஈரமற்றவர்கள் இன்று குண்டுகளால் ஆயிரக்கணக்கானவர்களை
கொன்று குவிக்கிறார்கள்
மனிதர்களிடம் அன்பை விதைக்க ஸ்தாபிக்கப்பட்ட மதங்கள்
இன்று தோல்வி கண்டுவிட்டன
கைவிடப்பட்ட இந்த உலகினருக்கு தற்கொலை ஒன்றே தீர்வாக அமையும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.