ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் ஒன்று

(நரோபா தமிழாக்கம் செய்துகொண்டிருக்கும் Nikos Kazantzakis எழுதிய Zorba the Greek நாவலின் முதல் அத்தியாயம்)

நான் அவனை பைரியசில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். க்ரெட்டுக்கு கப்பலேறிச் செல்ல வேண்டியிருந்தது எனக்கு, துறைமுகம் வந்திருந்தேன். பொழுது விடியவிருந்தது, மழை வேறு வலுவாக பொழிந்து கொண்டிருந்தது. கண்ணாடி கதவுகள் மூடியிருந்த அந்த சிறிய கஃபே வரையில்கூட வலுவான சூறைக்காற்று அலைகளின் மீதிருந்து நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. நன்றாக நொதிந்த சேஜ் பானத்தின் வாசனை கஃபே முழுவதும் நிரம்பியிருந்தது. வெளிப்புறத்து குளிரால் உறைந்திருந்த கண்ணாடி சாளரங்கள் மனிதர்களின் உஷ்ணமான மூச்சுக்காற்றால் அதன் உட்புறங்களில் வியர்த்திருந்தன. இரவை அங்கேயே கழித்த ஐந்தாறு அரக்கு நிற ஆட்டுத்தோல் மேற்சட்டை அணிந்த கப்பல்காரர்கள் காபியையோ சேஜ் பானத்தையோ அருந்திக்கொண்டு தெளிவற்ற சாளரங்களின் வழியே கடலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கொந்தளிக்கும் கடல்நீரின் வலுவுக்கு அஞ்சி மீன்கள் கடலாழத்திற்குள் அடைக்கலம் புகுந்து கடல்பரப்பில் அமைதி திரும்புவதற்காக காத்திருந்தன. கஃபேயில் கூடியிருந்த மீனவர்கள் புயல் ஓய்வதற்காக காத்திருந்தனர் ஏனெனில் அதன் பின்னர்தான் தூண்டில் புழுவைத்தேடி மீன்கள் மிக நிச்சயமாக கடற்பரப்பை நோக்கி வரும். மத்திகளும், சுறாக்களும், திருக்கைகளும் தங்கள் தலைமறைவு வாழ்வை முடித்துக்கொண்டு மேலெழும். பொழுது மெல்ல புலர்ந்துக்கொண்டிருந்தது.

கண்ணாடிக் கதவு திறந்தது, புழுதி படிந்த, கனத்த, கப்பற்தள தொழிலாளி ஒருவன் தலைக்கு தொப்பி எதையும் அணியாமலும், வெறுங்காலுடனும் உள்ளே நுழைந்தான்.

வான் நீல மேலங்கி அணிந்த கிழட்டு மாலுமி ‘வணக்கம் கோஸ்தண்டி, அங்கு உனக்கு வாழ்க்கை எப்படி போய்கொண்டிருக்கிறது? ’ என்றார்.

கோஸ்தண்டி காரி உமிழ்ந்தான்.

‘நீ என்ன எண்ணுகிறாய்? காலையில் – வணக்கம் மதுக்கடையே! பிறகு நல்லிரவு வசிப்பிடமே!.இத்தகைய ஒரு வாழ்வைத்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..வேலை என்ற ஒன்றே கிடையாது’

சிலர் சிரிக்கத் தொடங்கினார்கள். மற்றவர்கள் தலையாட்டி ஆமோதித்தார்கள்.

“இந்த உலகம் ஒரு ஆயுள் தண்டனை” என்றான் தனது வாழ்க்கை தத்துவத்தை கரகியோஸ் நாடகங்களிலிருந்து பெற்றுக்கொண்ட அந்த மீசைக்கார மனிதன்.

‘ ஆம் ஒரு ஆயுள் தண்டனை..அதிலேயே சிறைபட்டு மட்க வேண்டியதுதான்’.

பச்சையும் – நீலமும் கலந்த ஒரு வெளிறிய ஒளி மாசடைந்த ஜன்னல் கம்பிகள் வழியாக ஊடுருவி கரங்களையும் மூக்குகளையும் நெற்றிகளையும் பற்றிக்கொண்டது. அது மெல்ல கல்லாவில் ஊர்ந்து குப்பிகளை மினுங்கச் செய்தது. மின் விளக்குகள் மங்கின. இரவெல்லாம் விழித்திருந்து அரைத்தூக்கத்தில் இருந்த கஃபேயின் முதலாளி கையை நீட்டி விளக்கை அணைத்தார்.

நொடிப்பொழுது அமைதி நிலவியது. அனைவரின் பார்வையும் வெளியில் இருக்கும் அழுக்கு நிற வானை நோக்கியே இருந்தது. வெளியே அலைகளின் கர்சனையையும், கஃபேயின் உள்ளே ஹூக்காக்களில் இருந்து கொப்பளிக்கும் களகள ஒலியையும் கேட்க முடிந்தது.

கிழட்டு மாலுமி பெருமூச்சு விட்டார் ‘கேப்டன் லெமோனிக்கு என்ன ஆயிருக்குமோ? கடவுள் உதவுவாராக!

அவருடைய சாம்பல்நிறத்து மீசைத் துடிக்க, கடலை நோக்கி கோபத்துடன் கத்தினார்

‘ எமது இல்லங்களை அழித்த உம்மை கடவுள் சபிப்பாராக’.

நான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். குளிராக இருந்தது. இரண்டாவது லோட்டா சேஜ் பானம் வரவழைக்க பணித்தேன். எனக்கு தூங்க வேண்டும் போலிருந்தது, ஆனால் எனது தூங்கும் இச்சையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தேன், எனது சோர்வை எதிர்த்தும், அதிகாலைப் பொழுதை வீணாக்குவதை எதிர்த்தும் கூடத்தான். கப்பல்கள், கொம்பொலிகள், படகோட்டிகள், கூலிகள் எழுப்பிய பேரோசையுடன் துயில் எழும் துறைமுகத்தை வியர்த்த சாளரங்களின் வழியாக கண்டுகொண்டிருந்தேன். அப்போது கடலையும், காற்றையும், எனது பயணத்தையும் சேர்த்து பிணைக்கும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாய வலை நெஞ்சை இறுக்குவதை உணர்ந்தேன்.

பெரிய கப்பலின் கரிய முன்வளைவில் என் கண்கள் நிலைத்திருந்தன. ஒட்டுமொத்த கப்பலும் இருளில் மூழ்கியிருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது, விண்ணையும் மண்ணையும் இணைக்கும் மழைகோடுகளை என்னால் பார்க்க முடிந்தது. கரிய கப்பலை, நிழல்களை, மழையைக் கண்டேன், மெல்ல என் துக்கம் உருபெற்று துலங்க தொடங்கியது. நினைவுகள் மூண்டேழுந்தன. ஈரக்காற்றும் மழையும் எனக்குள் என் நண்பனின் நினைவுகளை கிளர்த்தின. சென்ற வருடமா? அல்லது வேறோர் வாழ்விலா? அல்லது நேற்றா? இதே துறைமுகத்தில் அவனுக்கு பிரியாவிடை கொடுத்தது எப்போது? அன்றும் மழை எப்படி கொட்டித் தீர்த்தது என்பது எனக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. அன்றைய குளிரும், புலர் ஒளியும் கூட நினைவில் இருந்தன. அன்றும் என் இதயம் கனத்திருந்தது. நல்ல நண்பர்களிடமிருந்து காலப்போக்கில் விலகுவதில்தான் எத்தனை கசப்பு? ஆனாலும், ஒரேயடியாக முறித்துக்கொண்டு, மனிதனின் தன்னியல்பான தனிமையில் உழல்வதைக் காட்டிலும் மேலானதுதான் அது. மழை பொழிந்த அந்த புலரிப் பொழுதில் என்னால் என் நண்பனை விட்டுப் பிரிய முடியவில்லை (அது ஏன் என்பதை பிறகு உணர்ந்துகொண்டேன்- ஆனால் மிகத் தாமதமாக). கப்பலேறி , பரப்பி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளுக்கு இடையில் அமர்ந்திருந்த அவனுடைய அறைக்குள் சென்றேன். அவனுடைய கவனம் வேறு எங்கோ திரும்பியிருந்த வேளைகளில் , அவனையே தீவிரமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தேன், நீலமும் பச்சையும் கலந்து மின்னும் அவன் கண்கள், அழகிய இளமை ததும்பும் வட்ட முகம், அவனுடைய அறிவார்ந்த அலட்சிய முகபாவனை, எல்லாவற்றையும்விட நீண்டு மெலிந்த விரல்கள் கொண்ட அவனது கரங்கள் என ஒவ்வொன்றையும் என் மனதில் பதிய வைக்க முயன்றவன் போல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் ஒருமுறை கவனித்துவிட்டான். அவனுடைய உணர்வுகளை மறைத்துக்கொள்ளும்போது அவன் விரும்பி வரவழைத்துக் கொள்ளும் ஏளன பாவத்துடன் என்னை நோக்கி திரும்பினான். என்னைக் கண்டவுடன் அவன் புரிந்துகொண்டான். பிரிவின் துக்கத்தை தவிர்ப்பதற்காக கிண்டலக சிரித்துக்கொண்டே என்னிடம் கேட்டான்,

“இன்னும் எவ்வளவு காலம்?”

“எவ்வளவு காலம் என்றால்?”

“ இன்னும் எத்தனை காலத்திற்குதான் தாள்களை மென்று முழுங்கி, உன்னை மையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கப் போகிறாய்? ஏன் என்னுடன் வரக்கூடாது? பல்லாயிரக்கணக்கான நம் மக்கள் தொலை தூரங்களில், கோக்கசசில் ஆபத்துக்களில் சிக்கி அவதியுறுகிறார்கள். நாம் அங்கு சென்று அவர்களைக் காப்போம்.” அவனுடைய மகத்தான திட்டத்தை அவனே எள்ளி நகையாடுவது போல் சிரித்தான். “ஒருகால் நாம் அவர்களைக் காக்க வேண்டியதில்லை. நீ போதனை செய்வாயே ‘ நம்மை நாமே காத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி நாம் பிறரைக் காக்க உறுதி கொள்வதே’ என்று. முன்செல்லுங்கள், குருநாதரே! நீ போதனை செய்வதில் வல்லவன். நீ ஏன் என்னுடன் வரக்கூடாது?”

நான் பதில் ஏதும் கூறவில்லை. கிழக்கின் புனித பூமியை எண்ணிக்கொண்டேன், கடவுள்களின் கிழட்டு அன்னை, ப்ரொமிதாயிஸ் பெரும் ஓசையுடன் பாறையில் மோதிக் கொண்டிருந்தாள். இதே பாறைகளில் அறையப்பட்டு எமது இனம் அழுது கதறிக் கொண்டிருக்கிறது. மிகவும் ஆபத்தான நிலையில் அது இருந்தது. தன்னுடைய மண்ணின் மைந்தர்களின் உதவியை நாடியது. நான் வெறுமே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன், வலி ஒரு கொடுங்கனவு, வாழ்க்கையே நம்மை ஈர்க்கும் பெரும் துயர நாடகம், அதில் எவரும் பங்கெடுக்கத் தயங்குவார்கள், வெகுளி நாட்டுப்புறத்தான் அல்லது ஒரு இளிச்சவாயன் மட்டுமே அவசர அவசரமாக மேடையேறி அதில் பங்கேற்பான் என்று எண்ணிக்கொண்டேன்.

எனது பதிலுக்கு காத்திராமல் அவன் எழுந்து நின்றான். கப்பலில் மூன்றாம் சங்கொலி ஒலித்தது. தன் கரங்களைக் கொண்டு என் கரங்களை அழுத்தினான், ஆனால் மீண்டும் தன் உணர்ச்சிகளை வெறும் கேலிகளுக்கு ஊடாக மறைத்துக் கொண்டான்.

“விடைபெறுகிறேன் புத்தகப் புழுவே”

அவனுடைய குரல் கம்மியது. ஒருவன் தனது உணர்வுகளை கட்டுக்குள் வைக்க இயலாமை என்பது அவமானத்திற்குரியது என்று அவனுக்கு தெரியும். கண்ணீர், இதமான சொற்கள், அன்பை வெளிகாட்டும் சமிங்கைகள், எல்லோரையும் போல் உணர்வுகளை வெளிப்படுத்துதல், ஆகியவை ஒரு ஆண்மகனுக்கு இருக்கக்கூடாத பலவீனங்கள் என்றே கருதினான். பரஸ்பரம் ஆழமான நட்பு கொண்டிருக்கும் நாங்கள் ஒருமுறைகூட எங்களுள் பரிவான சொற்களை பரிமாறிக் கொண்டதில்லை. காட்டு விலங்குகள் போல் கீரி விளையாடிக் கொண்டிருந்தோம். அவன் நாகரீகமான, புத்திசாலியான, முரண்பாடுகள் மிகுந்த, நவீன மனிதன், நான் காட்டுவாசி. தன் உணர்வுகளை எப்போதும் கட்டுக்குள் வைத்திருந்தான், சிறிய புன்னகையின் வழியாக தன்னுடைய உணர்வுகளை நளினத்துடன் வெளிப்படுத்தினான். நான் திடிரென்று பொருந்தாத வெடிச்சிரிப்பை சிரித்து வைப்பேன்.

நானும் என் உணர்வுகளை கடுஞ்சொற்களின் பின்னால் ஒளித்துக் கொள்ள முயன்றேன். ஆனால் எனக்கு வெட்கமாக இருந்தது. வெட்கப்பட்டேன் என்றுகூட சொல்ல முடியாது, என்னால் சமாளிக்க இயலவில்லை. என்னை விட்டுப் பிரிய அனுமதிக்க மாட்டேன் என்பது போல், அவன் கரங்களை இறுகப் பற்றினேன். ஆச்சர்யத்துடன் என்னை நோக்கினான்.

“உண்மையில் மிகவும் நெகிழ்ந்து இருக்கிறாயா என்ன ?” சிரிக்க முயன்றான்.

“ஆம்” என்றேன் அமைதியாக.

“ஏன்? இப்பொழுது நாம் என்ன பேசிக்கொண்டோம்? இந்த புள்ளியை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை நாம் முன்னரே திட்டமிட்டோம் அல்லவா? நம் பிரியத்துக்குரிய ஜப்பானியர்கள் என்ன சொன்னார்கள்? ஃபுதோவஷின் – அசைவற்ற மனம், சலனமற்ற அமைதி, முகம் எப்போதும் சிரித்த நிலையில் உறைந்திருக்கும் ஒரு முகமூடி. அந்த முகமூடிக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதெல்லாம், நம் சொந்த விவகாரங்கள்”.

“ஆம்” நீளமான வாக்கியங்களைப் பயன்படுத்தி உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்ய நான் விரும்பவில்லை. குரல் உடைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொள்ள இயலுமா எனத் தெரியவில்லை. கப்பலின் மணியோசை வழியனுப்ப வந்தவர்களை கேபின்களிலிருந்து துரத்தியது. மழை தூறியது. வழியனுப்புதல்களும், உறுதிமொழிகளும், நீண்ட முத்தங்களும், மூச்சைப் பிடித்துக்கொண்டு அவசர அவசரமாக சொல்லப்படும் அறிவுரைகளும், பரிவான சொற்களாக மாறி காற்றை நிறைத்தன. தாய்மார்கள் குழந்தைகளை நோக்கி விரைந்தனர், மனைவிகள் கணவர்களை நோக்கி, நண்பர்கள் நண்பர்களை நோக்கி விரைந்தனர். இந்தப் பிரிவு எப்பொழுதுக்கும் உரியது என்பதைப் போல். இந்தச் சிறிய பிரிவு மற்றைய கொடிய பெரும் பிரிவை நினைவுபடுத்தியது போல், ஒரு பதட்டம். சடாரென்று, கப்பலின் விளிம்புகள்வரை வரை மென்மையாக எதிரொலித்த மணியோசை மரணச்சடங்கின் மணியோசையாக ஒலித்தது. நடுங்கினேன்.

என் நண்பன் மெல்லச் சாய்ந்தான்.

கம்மிய குரலில் ‘கேள், உனக்கு ஏதும் தீய சகுனங்கள் தென்படுகிறதா?’

‘ஆம்’ என்று மற்றுமொருமுறை பதிலளித்தேன்.

‘நீ இத்தகைய மோசடிகளை நம்புகிறாயா?’

‘இல்லை’ என்று மறுத்தேன் உறுதியாக.

‘நல்லது, பிறகு?’

எதுவுமே நன்றாக இல்லை, எனக்கு அதில் நம்பிக்கையில்லை, ஆனால் நான் உள்ளூர அஞ்சினேன்.

அவனது இடது கரத்தால் என் கால் முட்டியை மெதுவாகத் தொட்டான். வழக்கமாக அவன் என்னைத் தவிர்த்து தவிக்கவிடும்போது அவன் அப்படிச் செய்வதுதான் வழக்கம். நான் அவனை முடிவெடுக்க நிர்பந்திப்பேன், அவன் மறுப்பான், காதுகளைப் பொத்திக் கொள்வான்., இறுதியில் ஒப்புக் கொள்வான், அதன் பிறகு ‘சரி எப்படியோ போகட்டும், நம் நட்பிற்காக நீ சொல்வதைச் செய்து தொலைக்கிறேன்..’ என்று சொல்ல முனைபவன் போல இப்படித்தான் என் முட்டியை தொடுவான்.

மூன்று நான்குமுறை கண்களை வேகவேகமாக சிமிட்டினான், என்னையே உற்று நோக்கினான். நான் எங்கள் வழக்கமான ஆயுதங்களான, சிரிப்பையும், புன்னகையையும், பயனற்ற வெற்றுச் சொற்களையும் பயன்படுத்த தயங்குகிறேன், கவலையில் உழல்கிறேன் என்பதை புரிந்துகொண்டான்.

“நல்லது, உன் கையைக் கொடு. நம்மில் எவரேனும் மரணம் எனும் பேராபத்தை எதிர்கொள்ள நேரிட்டால்..’

வெட்கம் வந்தவனாக அப்படியே நிறுத்திக்கொண்டான். எத்தனையோ ஆண்டுகளாக நாங்கள் சைவ உணவு பிரியர்களையும், ஆன்மிகவாதிகளையும், மத அறிஞர்களையும், ஆவிகளுடன் உரையாடுபவர்களையும், அவர்களுடைய இறுதி பயணத்தைப் எதிர்கொள்ளும் விதத்தை கொண்டு நக்கல் அடித்திருக்கிறோம்,

‘என்ன?’ அவன் என்ன சொல்ல வருகிறான் என யூகிக்க முயன்றேன்.

‘இதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம்’ அவன் உதிர்க்கவிருந்த ஏதோ ஒரு அச்சமூட்டும் வரியை தவிர்க்கும் விதமாக அப்படி சொன்னான். ‘நம்மில் எவரேனும் மரணம் எனும் பேராபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், ஒருவர் மற்றோருவரைப் பற்றி மனதார எண்ணிக்கொள்ள வேண்டும், அந்த எண்ணமே மற்றவரை எங்கிருந்தாலும் சென்று எச்சரிக்கும்..சரிதானே?’ அவன் சிரிக்க முயன்றான் ஆனால் அவனுடைய உதடுகள் அசையாமல் உறைந்திருந்தன.

‘சரிதான்’

அவனுடைய உணர்வை அதீதமாக வெளிகாட்டிவிட்டதாக அஞ்சிய என் நண்பன், அவசரமாக சொன்னான்

‘ மற்றுமொரு விஷயம், எனக்கு டெலிபதி போன்றவற்றில் எல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை’

‘பரவாயில்லை, இல்லாமலேயே இருக்கட்டும்’ நான் முணுமுணுத்தேன்.

‘சரி அப்படியானால், முடித்துக் கொள்வோமா?’

‘சரி’

இவைதான் நாங்கள் கடைசியாகப் பரிமாறிக்கொண்ட சொற்கள். கரங்களை இறுக பற்றிக்கொண்டோம். சடாரென்று கைகளை விலக்கிக்கொண்டு, எவரோ என்னைப் பின்தொடர்ந்து வருவது போல் நான் வேகவேகமாக அங்கிருந்து திரும்பிப்பார்க்காமல் நடந்து சென்றேன். ஒரேயொருமுறை அவனை திரும்பிப்பார்க்க வேண்டும் என தோன்றியது, ஆனால் அந்த உணர்வை அடக்கிக்கொண்டேன். ‘திரும்பிப்பார்க்காதே’ ‘முன்செல்’ எனக்கு நானே பிரியாவிடை அளித்துக் கொண்டேன்.

இந்த மானுட ஆன்மா உடலெனும் சேற்றுக்குழியில் சிக்கி சோம்பி கனக்கிறது. அதன் புரிதல்கள் தெளிவற்றவை, மூர்க்கமானவை. எதையுமே அதனால் உறுதியாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ள இயலாது. அப்படி ஒருகால் சரியாக அது ஊகித்திருந்தால் இந்த பிரிவு வேறு எப்படியோ மாறியிருக்கும்.

மெல்ல அந்த நிகழ்வுகள் எல்லாம் மங்கிக்கொண்டே போனது. இரண்டு காலைப் பொழுதுகளும் ஒன்றானது போலிருந்தது. எனக்குப் பிடித்த எனது நண்பனின் முகம் இப்போது தெளிவாக தெரிந்தது, துறைமுகத்தின் சூழலில், கொட்டிக்கொண்டிருக்கும் மழையில் தனித்து அசைவற்று தெளிவாக அவனுடைய முகம் துலங்கியது

கஃபேயின் கதவுகள் திறந்தன, கடல் உறுமியது, கால்களை அகற்றி வைத்துக் கொண்டு, தொங்கும் மீசையுடன் கனத்த மாலுமி ஒருவன் உள்ளே நுழைந்தான். குதூகலமான கூப்பாடுகள் ஒலித்தன.

“வருக! கேப்டன் லெமோனி !”

நான் மீண்டும் மூலையில் சுருண்டுகொண்டேன், எனது எண்ணங்களின்மீது கவனம் குவிக்க முயன்றேன். ஆனால், அதற்குள் என் நண்பனின் முகம் மழையில் கரைந்து கொண்டிருந்தது.

நினைவுகள் மேலும் மங்கின . கேப்டன் லெமோனி பக்தியுடன் அமைதியாக அவருடைய மரகத பச்சை ஜெபமாலையை எடுத்து ஜெபிக்க தொடங்கினான்.

நான் எதையும் பார்க்க விரும்பவில்லை, கேட்க விரும்பவில்லை, கரைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவை சிறிது நேரம் நீட்டிக்க விரும்பினேன். என்னை புத்தகப்புழு என்று என் நண்பன் அழைத்த நொடியில் எனக்கேற்பட்ட கோபத்தை என்னால் மறுபடியும் உணர முடிந்தால் போதும்! என் அத்தனை ஆண்டுகால வாழ்வின் மீது எனக்கிருந்த அதிருப்தியை சொற்களாக அவன் வடித்திருந்தான் என்பது நினைவுக்கு வந்தது. வாழ்க்கையை அதன் அத்தனை தீவிரங்களுடன் நேசிக்கும் நான் எப்படி இத்தனை காலமாக என்னை புத்தக அலமாரியிலும், கருப்பு மையிடப்பட்ட தாள்களிலும் புதைத்துக் கொண்டேன்? என் நண்பன் பிரிந்து சென்ற அன்று, அவன் எல்லாவற்றையும் எனக்கு தெளிவாக்கினான். நிம்மதியை உணர்ந்தேன். எனது நோய் என்னவென்று நான் தெரிந்து கொண்டேன், இனி அதை எளிதாக என்னால் வெல்ல முடியும். அது உருவமற்று பிடிபடாமல் இனி இருக்காது, அதற்கென்று ஒரு பெயரும் வடிவமும் உருவாகி விட்டது, இப்பொழுது அதை எதிர்கொள்வது எனக்கு கொஞ்சம் சுலபம்தான்.

அவன் சொன்ன வார்த்தைகள் என்னுள் மெல்ல வளர்ந்திருக்க வேண்டும். எனது தாள்களை விட்டு ஒதுங்கி ஒரு வண்ணமயமான வாழ்க்கைக்குள் நுழைய எனக்கு அது ஒரு சாக்கானது. எனது இந்த இழிவான வாழ்க்கையை நான் வெறுத்தேன். ஒரு மாதத்திற்கு முன்னர் அதற்கான வாய்ப்பு எனக்கு இயல்பாகவே அமைந்தது. லிப்யாவை நோக்கி இருக்கும் க்ரெட்டின் கடற்கரையில் ஒரு பயனற்ற பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை வாடகைக்கு எடுத்தேன். நான் அங்கு எளிய சாமானிய மனிதர்களுடன், தொழிலாளர்களுடன், விவசாயிகளுடன், புத்தக புழுக்கள் போட்டியிட முடியாத தொலைவில் வாழப்போகிறேன்.

உற்சாகத்துடன் புறப்படுவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டிருந்தேன். ஏதோ ஒருவகையில் எனக்கு புலப்படாத முக்கியத்துவம் இந்த பயணத்திற்கு உள்ளதாக உணர்ந்தேன். எனது வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள முடிவு செய்திருந்தேன். ‘இதுவரை நான் வெறும் நிழல்களைக் கண்டு திருப்தியுற்றுருக்கிறேன் இனிதான் அசலை நோக்கி உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

கடைசியில் நான் தயாராகி நின்றேன். புறப்படுவதற்கு முன்னர் என்னுடைய தாள்களை துழாவிக் கொண்டிருந்தேன், முடிக்கப்படாத கையெழுத்து பிரதி ஒன்று அகப்பட்டது. கொஞ்சம் தயங்கியபடி அதைக் கையில் எடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எனது உயிரின் அடியாழத்தில் ஒரு பெருவிருப்பு, ஒரு விதை முளைவிடத் துவங்கி இருக்கிறது. எனது குடலில் அது படர்ந்து என்னையே உட்கொண்டு முதிர்ந்து வருவதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அது மெல்ல வளர்ந்து, அங்கும் இங்கும் அலைபாய்ந்து, எனது உடலின் உட்புற எல்லை சுவர்களை உதைத்து வெளியேற துடிக்கிறது. அதை அழிக்கும் துணிவும் என்னிடம் இல்லை, அது என்னால் முடியவும் முடியாது. உருவாகி நிற்கும் இந்தக் கருவை கலைத்து வெளியேற்றும் காலம் கடந்துவிட்டது. தயக்கத்துடன் எனது கைப்பிரதியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தபோது ஏளனமாக என் நண்பன் என்னைப்பார்த்து சிரிப்பதாக சடாரென்று தோன்றியது. “நான் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்” வேகவேகமாக சொன்னேன். “நான் என்னுடன் எடுத்துச் செல்கிறேன். நீ ஒன்றும் சிரிக்க வேண்டாம்”. குழந்தையை கவனமாகப் போர்த்துவது போல் அதை பத்திரப்படுத்தி எடுத்து வைத்தேன்.

கேப்டன் லெமோனியின் ஆழமான குரலைக் கேட்க முடிந்தது. மெல்ல அவர்கள் உரையாடியதை கூர்ந்து கேட்டேன். அவன் கடல் ஆவிகளை பற்றி பேசிக்கொண்டிருந்தான், அவை அவனுடைய பாய்மர கப்பலின் கொடிக்கம்பத்தின் மீதேறி நக்கியதாக சொன்னான்.

‘அது வழவழப்பாக கொழகொழவென்றிருக்கும். பலமுறை அது உன்னை நக்கினால் கைகள் தீப்பற்றி எரியும். நான் அந்த இருளில் என் மீசையை முறுக்கிகொண்டேன், சாத்தானை போல் ஒளிர்ந்து கொண்டிருந்தேன். கடல் எனது கப்பலில் புகுந்து எல்லாவற்றையும் துடைத்துச் சென்றது, நான் வைத்திருந்த நிலக்கரியை நீரில் நனைத்தது, எங்கும் தண்ணீர். கப்பல் கவிழ்ந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த நொடியில் கடவுள் எல்லாவற்றையும் தன் கையில் எடுத்தார், பெரும் இடி மின்னலை அனுப்பினார், புழைவாய் மூடி பிளந்துகொண்டது, கடல் முழுவதும் நிலக்கரியால் நிரம்பியது, பாய்மரம் பற்றி எரிந்தது, கப்பல் மீண்டும் நிமிர்ந்தது, கடைசியில் நாங்கள் எல்லோரும் உயிர் பிழைத்தோம்! அதன் பின்னர் ஒன்றும் ஆபத்தில்லை!’

என் பையிலிருந்து எனது வழித்துணையான தாந்தேயின் கையடக்கப் பிரதியை எடுத்தேன். பைப்பை பற்ற வைத்துக்கொண்டு சுவற்றில் வசதியாக சாய்ந்து அமர்ந்தேன். எந்த வரிகளில் என்னை மூழ்கடித்து கொள்வது என்று ஒரு நொடி தயங்கினேன்? கொழுந்துவிட்டு எரியும் பாதாளத்திலா? எல்லாவற்றையும் தூய்மையாக்கும் நரகத்தின் பெருந்தீயிலா? அல்லது மானுட நம்பிக்கையின் அதிகபட்ச சாத்தியத்தின் தளத்திற்கு நேரே சென்றுவிடுவதா? நான்தான் தேர்வு செய்ய வேண்டும். இந்தச் சுதந்திரம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இந்தப் புலரிப் பொழுதில் நான் தேர்ந்தெடுக்கப் போகும் வரிகள் அன்றைய நாள் முழுவதின் தாளகதியை முடிவு செய்வதாக இருக்கும்.

எதைத் தேர்ந்தெடுப்பது என உள்ளுணர்வின் துணைகொண்டு தேடிக்கொண்டிருந்தேன் ஆனால் எனக்கு நேரமில்லை. திடிரென்று, ஏதோ என் கவனத்தை குலைப்பதாக தோன்றியது, தலையை தூக்கி பார்த்தேன், இரண்டு விழிகள் எனது தலையை துளைத்தெடுப்பதாக எனக்கு தோன்றியது. எனக்குப் பின்னாலிருந்த கண்ணாடிக் கதவின் திசையை நோக்கி கூர்ந்து கவனித்தேன். ஒரு கிறுக்குத்தனமான நம்பிக்கை மனதிற்குள் மின்னியது ‘நான் என் நண்பனை மீண்டும் சந்திக்கப் போகிறேன்’. நான் அந்த அற்புத கணத்திற்காக என்னைத் தயாராக்கிக் கொண்டேன் ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. நல்ல உயரமும், ஒல்லியான உடல்வாகும் கொண்ட அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அந்நியன் கண்ணாடியில் மூக்கை அழுத்திக்கொண்டு என்னையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கையிடுக்கில் ஒரு தட்டையான சிறிய மூட்டை தென்பட்டது. அந்த கண்கள், அதில் தெரிந்த அந்தப் பொறி, விசை, ஆர்வம் அதுதான் முதலில் என்னைப் பெரிதும் ஈர்த்தது. அப்படித்தான் இருந்ததா என்றால் தெரியவில்லை, எனக்கு அப்படித்தான் தெரிந்தது.

எங்கள் பார்வைகள் உரசிக்கொண்ட கணத்தில், அவன் தேடி வந்த மனிதன் நான்தான் என உறுதிபடுத்திக்கொண்டான். அந்த அன்னிய மனிதன் கதவை பலம் கொண்ட மட்டும் அழுத்தி திறந்தான். மேஜைகளுக்கு ஊடாக சரசரவென்று குதித்து குதித்து நடந்து வந்து என்முன்னே நின்றான்.
‘பயணமா?’ எங்கு? விதியில் நம்பிக்கை உண்டா?

‘நான் க்ரெட்டுக்கு செல்லவிருக்கிறேன். ஏன் கேட்கிறாய்?’

‘என்னையும் அழைத்துச் செல்வாயா?’

அவனை நான் உற்று நோக்கினேன். குழி விழுந்த கன்னங்கள், வலுவான தாடை, துருத்தி நின்ற கன்னத்தின் எலும்புகள், சுருண்ட சாம்பல் நிறத் தலைமயிர், ஒளிவிடும் ஊடுருவும் கண்கள்.

‘ஏன்? உன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?’

தோள்களை குலுக்கிக் கொண்டான்..

‘ஏன்! ஏன்!’ ஏளனத்துடன் தொடர்ந்தான். ‘ஏன் என்று கேட்காமல் மனிதன் எதையுமே செய்ய இயலாதா? வெறுமே, பிடித்திருக்கிறது, அதனால் செய்யக்கூடாதா? சரி, ஒரு பேச்சுக்கு, என்னை சமையற்காரனாக அழைத்துச் செல், நீ கேள்விப்பட்டிராத சூப் வகைகளை என்னால் செய்ய முடியும்.’

நான் சிரிக்கத் தொடங்கினேன். சுருக்கென்று அவன் கூறிய சமாளிப்பு வார்த்தைகள் என்னை ஈர்த்தன. எனக்கு சூப்களும் பிடிக்கும். அப்படியொன்றும் மோசமான யோசனையாக இருக்காது. எங்கோ தொலைவில் உள்ள கடற்கரையில் இத்தகைய தளர்வான ஆளுமை கொண்ட மனிதனுடன் காலம் கழிக்கலாம். சூப்புகளும், அவனுடைய கதைகளும்…உலகில் எங்கெங்கோ முட்டி மோதியவன் போலிருந்தான், சிந்துபாத்தின் சாயல்கூட அவனில் தென்பட்டது, எனக்கு அவனைப் பிடித்திருந்தது.

‘நீ எதைப் பற்றி சிந்திக்கிறாய்?’ நெருங்கி பழகியவன் போல் தன்னுடைய பெரிய தலையை ஆட்டியபடி என்னிடம் கேட்டான். ‘உன்னிடம் எப்போதுமே ஒரு தராசு இருக்கும் அல்லவா? துல்லியமாக கிராம் கணக்கில் எல்லாவற்றையும் எடைபோடுவாய் இல்லையா? அட, வா நண்பா, துணிவுடன் முடிவெடு’

இந்த நீண்டு மெலிந்த சோம்பேறி என் முன்னால் நின்றுகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அவனை நிமிர்ந்து பார்த்து பேசுவது எனக்கு அயர்ச்சியை தந்தது. நான் எனது தாந்தேயை மூடி வைத்தேன். ‘உட்கார். ஒரு லோட்டா சேஜ் அருந்துகிறாயா? அவனிடம் கேட்டேன்.

‘சேஜ்?’ எள்ளலாக அவன் கேட்டான். ‘ வெயிட்டர், ஒரு ரம்’

சிறு சிறு மிடறுகளாக அவன் ரம்மை அருந்தினான். நீண்ட நேரம் வாய்க்குள்ளேயே வைத்து அதன் சுவை இறங்கும்வரை அனுபவித்து ருசித்து குடித்தான். அதன் பின்னர் மெதுவாக உள்ளே விழுங்கும்போது உள்ளுறுப்புகளில் பரவும் வெம்மையை அமைதியாக ரசித்தான் ‘இவன் ஒரு ரசிகன், அதுவும் நுட்பமான ரசிகன்’ என எண்ணிக்கொண்டேன்.

‘உனக்கு என்ன மாதிரியான வேலைகள் வரும் ?’

‘எல்லாமும்தான். கைகளால், கால்களால், அல்லது தலையால், அல்லது எல்லாவற்றியிலும்தான். நாம் இதுதான் செய்வோம் என்று ‘சில தேர்வுகளை வைத்திருந்தோம் என்றால் அது நம்மை அந்த எல்லைக்குள் கட்டுபடுத்தி விடும்’

‘கடைசியாக நீ எங்கு வேலை பார்த்தாய்?

‘ஒரு சுரங்கத்தில்தான். நான் ஒரு நல்ல சுரங்கத் தொழிலாளி. உலோகங்களைப் பற்றி எனக்கு கொஞ்சம் அறிவுண்டு. , சுரங்கப்பாதைகளை கண்டடைய முடியும், சுரங்கங்களை திறந்திட என்னால் முடியும், ஆழங்களுக்குள் என்னால் சென்றுவர முடியும், அச்சம் ஏதும் கிடையாது. நான் நன்றாகத்தான் பணியாற்றி வந்தேன். நான் அங்கு ஃபோர்மேன் ஆக பணிபுரிந்தேன், பெரிதாக குறையொன்றும் இல்லை. ஆனால் சாத்தான் அதன் வேலையைக் காட்ட தொடங்கிவிட்டது! திடிரென்று எனக்கு என்னமோ தோன்றியது கடந்த சனிக்கிழமை இரவு எங்கள் பணியிடத்தை ஆய்வு செய்ய வந்த முதலாளியை பிடித்து சாத்திவிட்டேன்..’

‘ஆனால் ஏன் அப்படி செய்தாய்? அவன் உன்னை என்ன செய்தான்?’

‘என்னையா? எதுவுமே செய்ததில்லை, இன்னும் சொல்வதானால் அன்றுதான் நான் அவனை முதன்முதலாக பார்க்கிறேன். அவனிடம் சிகரெட்டைக் கூட இந்த சாத்தான் பகிர்ந்து கொண்டது.’

‘நிஜமாகவா?’

‘ஆ..நீ வெறுமே அமர்ந்துகொண்டு கேள்விகளை கேட்டுக்கொண்டு இராதே..அது என்னை ஆட்கொண்டது அவ்வளவுதான். உனக்கு அரவைக்காரனின் மனைவியின் கதை தெரியும் இல்லையா? அவளுடைய புட்டம் உனக்கு சொற்களை கற்றுகொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பாயா என்ன? அரவைக்காரனின் மனைவியின் புட்டம்! அது தான் மானுட பகுத்தறிவு’

நான் மானுட பகுத்தறிவு பற்றி எத்தனையோ விளக்கங்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவைகளில் இதுதான் என்னை வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது, ஆனால் இதுதான் எனக்கு பிடித்திருந்தது. எனது இந்த புதிய தோழனை நான் கூர்ந்து கவனித்து வந்தேன். அவன் முகம் வடுவெறி இருந்தது, காலத்தால் பதப்பட்ட, கரையான் அரித்த மரத்துண்டு போலிருந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் சந்தித்த மற்றுமொறு ஆளுமை, இதேபோல் மட்கிப்போன மரத்துண்டைப் போல் இருந்தார், அவர் பனாயிட் ஸ்த்ரயிட்டி (டி.பியில் பாதிக்கப்பட்ட ருமானிய எழுத்தாளர். அவர் ஃபிரெஞ்சில் எழுதுவார். அவருடைய மிக முக்கியமான படைப்பு- La Maison Thiiringer

‘உன் மூட்டையில் என்ன இருக்கிறது? உணவா? துணிமணிகளா? அல்லது ஏதும் உபகரணங்களா?

எனது தோழன் தோளை குலுக்கிச் சிரித்தான்.

‘ உனக்கு நல்ல நடைமுறை அறிவு இருக்கிறது ஆனால் மன்னிக்க வேண்டும்’

அவனுடைய உறுதியான நீண்ட விரல்களைக்கொண்டு மூட்டையில் ஒரு தட்டு தட்டினான்.

‘இல்லை..எதுவுமே இல்லை.. இது ஒரு சந்துரி’

‘சந்துரி? உனக்கு சந்துரி வாசிக்க வருமா?’

‘ ஏதோ ஒன்று என்னை உள்ளிருந்து உந்தித்தள்ளும், அப்போது சந்துரி வாசித்துக்கொண்டே சுற்றியுள்ள விடுதிகளுக்குச் செல்வேன், மசிடோனியாவின் பழங்காலத்து புகழ்பெற்ற மெட்டுக்களை இசைப்பேன், இதோ இருக்கிறதே இந்த தொப்பி, இதை நீட்டினால் போதும், அதில் காசு நிறைந்துவிடும்’

‘உன் பெயர் என்ன?’

‘அலேக்சிஸ் ஜோர்பா. என்னைத் தோசைத் திருப்பி என்று கூட சில வேளைகளில் அழைப்பார்கள், ஏனெனில் நான் ஒல்லியான உடல்வாகு கொண்டவன், என் தலை தட்டையாக பான் கேக் போலிருக்கும். என்னைப் ‘பொழுதுபோக்கு’ என்று கூட அழைப்பார்கள் – ஒருகாலத்தில் வறுத்த பூசணி விதைகளை தேடித் தேடி பொருக்கிக் கொண்டிருந்தேன். என்னை பூஞ்சை என்றுகூட அழைப்பார்கள், நான் எங்கு சென்றாலும் அங்கு நான் ஏதோ ஒன்றைச் செய்து எல்லாவற்றையும் கெடுத்து விடுவேன் என்பார்கள், எல்லாம் வீணாகி நாய்களுக்குதான் போகும். எனக்கு வேறு சில புனைப்பெயர்களும் உண்டு ஆனால் பிறகொரு சமயம் அவைகளைப் பற்றி பேசலாம்..’

‘ சந்துரி வாசிக்க எப்படி பழகி கொண்டாய்?’

‘அப்பொழுது எனக்கு இருபது வயது. ஒலிம்பஸ் மலை அடிவாரத்தில் உள்ள எனது கிராமத்து திருவிழா ஒன்றில் முதன்முறையாக நான் சந்துரி கேட்டேன். அந்த இசை என்னை திகைக்கச் செய்தது. மூன்று நாட்கள் என்னால் எதையும் உண்ண முடியவில்லை. ‘உனக்கு என்ன ஆனது?’ என்றார் என் தந்தை. ஒ அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்!. ‘ நான் சந்துரி வாசிக்க கற்றுகொள்ள வேண்டும்’. ‘வெட்கமாக இல்லையா உனக்கு? நீ என்ன நாடோடியா? எதையோ வாசித்துக்கொண்டு திரிவேன் என சொல்கிறாயா? ‘எனக்கு சந்துரி கற்றுகொள்ள வேண்டும்’. என் திருமணத்திற்காக நான் சேர்த்த சொற்ப பணம் அப்போது என்னிடம் இருந்தது. குழந்தைத்தனமான யோசனைதான், நான் அப்போது சரியான அரைவேக்காடு, ரத்தம் சூடாக இருந்த காலகட்டம் அது. இந்த ஏழை அசடன், திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான்! எப்படியோ, என்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து சந்துரியை வாங்கினேன். நீ காண்பது அந்த சந்துரியைதான். அதைத் தூக்கிக்கொண்டு சலோனிகா சென்றேன், அங்கு ரெட்செப் இஃபெண்டி எனும் துருக்கியனைச் சந்தித்தேன், அவன் எல்லோருக்கும் சந்துரி கற்றுக் கொடுத்தான். நான் அவன் காலில் விழுந்தேன். ‘ உனக்கு என்ன வேண்டும் குட்டி கலகக்காரனே ?’ ‘எனக்கு சந்துரி கற்றுக்கொள்ள வேண்டும்.’ ‘நல்லது, அதற்கு ஏன் என் காலில் விழுந்தாய்?’ ‘ஏனெனில் உங்களுக்கு கொடுக்க என்னிடம் எதுவுமே இல்லை’ ‘சந்துரி கற்றுக்கொள்ள வேண்டும் என பித்து கொண்டு அலைகிறாய் அல்லவா?’ ‘ஆம்’ ‘சரி, என்னுடன் நீ தங்கியிருக்கலாம், எதையும் கொடுக்க வேண்டியதில்லை!’ நான் அவருடன் அங்கு ஒரு வருடம் தங்கி பயின்றேன். கடவுள் அவருடைய நினைவுகளை புனிதப் படுத்தட்டும்! அவர் இறந்திருக்கக்கூடும். கடவுள் சொர்க்கத்தில் நாய்களை அனுமதிப்பார் எனில், அவர் ரெட்செப் இஃபெண்டிக்கு கதவுகளைத் திறந்து விடட்டும்! சந்துரி பழகிய பின்னர், நான் வேறோர் மனிதன் ஆனேன். மனம் சோர்ந்திருக்கும்போது, அல்லது உடைந்து இருக்கும்போது, நான் சந்துரி வாசிப்பேன், அது எனக்கு உற்சாகமூட்டும். நான் வாசித்துக் கொண்டிருக்கும்போது நீ என்னிடம் பேசலாம் என் காதில் எதுவுமே விழாது, அப்படியே விழுந்தாலும் என்னால் பதில் பேச இயலாது. நானே முயன்றாலும்கூட முடியாது.

‘ஆனால், ஏன் இப்படி ஜோர்பா?’

“ஒ, உனக்குத் தெரியவில்லையா..? ஒரு பேரார்வம், அதுதான் இது!”

கதவு திறந்தது. கடலோசை கஃபேயை மீண்டும் ஊடுருவியது. எங்கள் கரங்களும் கால்களும் உறைந்திருந்தன. மூலையில் ஒடுங்கி எனது மேலங்கியில் சுருண்டு கொண்டேன். அந்த நொடியின் பரவசத்தை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

‘நான் எங்கே செல்வது?’ யோசித்தேன். ‘நான் இங்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். இந்த நிமிடம் பல்லாண்டுகளுக்கு நீடிக்கட்டும்’

என்முன் இருக்கும் இந்த விந்தையான மனிதனைப் பார்த்தேன். அவன் கண்கள் என் மீது பதிந்திருந்தன. சிறிய, உருண்டைக் கண்கள் அவனுடையத, கருப்பு கண்மணி வெள்ளை விழிப்படலத்தின் மீது சிவப்பு நாளங்கள் வரியோடின. அவன் பார்வை என்னை ஊடுருவுவதை உணர முடிந்தது, பெருந்தாகத்துடன் கண்களால் அவன் என்னை தேடிக் கொண்டிருந்தான்.

“என்ன? சொல்..’ என்றேன்

ஜோர்பா எலும்புகள் துருத்திக்கொண்டிருந்த அவனது தோள்களை உலுக்கினான்.

‘அதை விட்டுவிடலாம். எனக்கு ஒரு சிகரெட் கிடைக்குமா?’

நான் அவனுக்கொன்று அளித்தேன். பையிலிருந்து தீமூட்டியை எடுத்தான், அவன் வைத்திருந்த திரியை பற்றவைத்தான். திருப்தியுடன் பாதி கண்களை மூடினான்.

‘திருமணம் ஆகிவிட்டதா?’ அவனிடம் கேட்டேன்

‘ நான் ஆண்மகன் இல்லையா? கோபமாக கூவினான்‘நான் ஆண்மகன் இல்லையா? நான் ஒரு குருடன். எனக்கு முன் தலைகுப்புற படுகுழியில் விழுந்த பலரை போல் நானும் விழுந்தேன். எனக்கு திருமணம் ஆனது. வீழ்ச்சியின் பாதையைத் தேர்வு செய்தேன். நான் ஒரு குடும்பத் தலைவன் ஆனேன். வீடு கட்டினேன். குழந்தைகள் பிறந்தன- அவஸ்தைதான். நல்லவேளை கடவுளே! சந்துரி இருந்தது.’

‘உனது பொறுப்புக்களை மறக்க நீ வாசித்தாய், இல்லையா?’

‘ பார், நீ எந்த இசைக்கருவியும் வாசிப்பதில்லை என்று புரிந்து கொள்கிறேன். நீ என்னதான் பேசுகிறாய்? வீட்டில் எல்லாவிதமான கஷ்டங்களும் புழங்குகின்றன. மனைவி, மக்கள், நாம் என்ன உண்ணப் போகிறோம்? உடைகளுக்கு எப்படி சமாளிப்பது? நாம் என்னவாகப் போகிறோம்? முடியாது! சந்துரி வாசிக்க நல்ல மனநிலையில் இருக்க வேண்டும், தூய்மையாக இருக்க வேண்டும். எனது மனைவி வசைபாடிகொண்டே இருக்கிறாள் எனில் சந்துரி வாசிக்கும் மனநிலை எப்படி வாய்க்கும்? உன் குழந்தைகள் பசியால் உன்னிடம் அழுது கொண்டிருக்கும்போது, வாசிக்க முயற்சித்துப் பார்! சந்துரி வாசிக்க நாம் ஒட்டுமொத்தமாக நம்மை அர்ப்பணித்தாக வேண்டும், உனக்கு புரிகிறதா?’

எனக்கு புரிந்தது. நான் யாராக வாழ வேண்டும் என வாழ்ந்து முயன்று தோற்றேனோ அவன்தான் ஜோர்பா. உயிர்த்துடிப்புள்ள இதயம், பேசி ஓயாத வாய், இந்த அன்னை பூமியிடமிருந்து அன்னியப்படாத துணிவுள்ள, மகத்தான ஆன்மா.

கலை, அன்பு, அழகு, தூய்மை, பெருமுனைப்பு ஆகிய சொற்களின் பொருளை இந்த எளிமையிலும் எளிமையான தொழிலாளியின் வார்த்தைகளின் வழியாக தெளிவாக புரிந்துகொண்டேன்.

கோடரியையும் சந்துரியையும் இயக்கும் அவனது கரங்களை நோக்கினேன். அவை உலர்ந்து, வெடித்து, சொரசொரத்து காணப்பட்டன. அழகிய பெண்ணின் ஆடையை விலக்கும் நளினத்துடனும் அக்கறையுடனும் அந்தக் கரங்கள் சாக்குப்பையிலிருந்து வருடக்கணக்காக பட்டை தீட்டபட்ட பழைய சந்துரியை எடுத்தன. பல தந்திக் கம்பிகள் நெடுகிலும் ஓடின. தந்தத்தாலும், பித்தளையாலும், செம்பட்டுத் துணியாலும் அது அலங்கரிக்கப் பட்டிருந்தது. அந்த பருத்த விரல்கள் மெல்ல வருடின, பெண்ணை மென்மையாகத் தீண்டுவதுபோல் அதை முழுவதுமாக வருடின. நெருக்கமானவர்களுக்கு ஜலதோஷம் பிடித்துவிடக் கூடாது என்று போர்த்திவிடுவது போல் மீண்டும் அவ்விரல்கள் மூடின.

‘இது என் சந்துரி’ என முனங்கியபடி, நாற்காலியில் கவனமாக வைத்தான்.

கப்பல்காரர்கள் இப்பொழுது கண்ணாடி கோப்பைகளை உரசி ஒலி எழுப்பினார்கள், வெடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். கிழட்டு மாலுமி கப்பிதான் லேமோனியின் முதுகில் செல்லமாக அறைந்து கொண்டிருந்தார்.

‘நீ பயங்கரமாக பயந்திருந்தாய், இல்லையா கப்பிதான்? புனித.நிகோலசிற்கு எத்தனை மெழுகுவர்த்திகள் நேர்ந்து கொண்டாய் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.’

அடர்ந்த புருவங்களை உயர்த்தி நோக்கினான் கப்பிதான்

‘இல்லை, மரணத்தின் தேவதையை என் கண் முன்னால் நான் கண்டபோது புனித கன்னி மாதாவை எண்ணவில்லை, புனித

நிகோலசையும்கூட எண்ணவில்லை என்று சத்தியம் செய்து சொல்கிறேன், என் மனம் சலாமியை நோக்கித் திரும்பியது. என் மனைவியை நினைத்துக் கொண்டேன், அழுகை பீறிட்டது “ஆ..கேத்தரினா! இந்த நொடி நான் உன்னுடன் கட்டிலில் இருக்கக்கூடாதா!”

கப்பல்காரர்கள் மற்றுமொருமுறை வெடித்துச் சிரித்தனர். கப்பிதான் லெமோனியும் அதில் இணைந்து கொண்டார். ‘மனிதன் எத்தகைய மிருகம்! மரண தேவதை தலைக்கு மேலே வாளுடன் காத்து நிற்கிறாள், ஆனால் அவன் மனம் அதோ அங்கு நிலைபெற்றிருக்கிறது, அந்த ஒன்றின் மீதுதான் அவன் கவனம், வேறொன்றின் மீதும் இல்லை! ஒ சாத்தானே அந்த கிழட்டு ஆட்டை நல்லபடியாக எடுத்துக்கொள்!!” என்று கைகொட்டிச் சிரித்தான்.

‘நண்பர்களுக்காக, மற்றுமொரு சுற்று’ கத்தினான் அவன்.

பெரிய காதுகளின் வழியாக கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் ஜோர்பா. திரும்பினான், கப்பல்காரர்களை நோக்கினான், என்னை நோக்கினான்.

‘அங்கு’ என்பது எங்கிருக்கிறது? இவன் என்ன பேசிக்கொண்டிருக்கிறான்?’

சட்டென்று அவனுக்கு புரிந்தது.

‘பிரமாதம், என் நண்பா!’ மகிழ்ச்சியில் கூவினான். ‘அந்த கப்பல்காரர்களுக்கு ரகசியங்கள் தெரியும். அல்லும் பகலும் மரணத்தின் பிடியில் இருப்பவர்கள் அல்லவா அவர்கள்’

அவனது பெரிய கரங்களை உயர்த்தி காற்றில் அசைத்தான்.

‘சரி. அது இருக்கட்டும். நாம் நம் விஷயத்திற்கு வருவோம். நான் உன்னுடன் வருவதா அல்லது பிரிவதா? முடிவை சொல்’ என்றான்.

‘ஜோர்பா’ அவனை ஆரத்தழுவிக் கொள்ளாமல் இருக்க என்னை நானே அடக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ‘ முடிவாகிவிட்டது! நீ என்னுடன் வருகிறாய். எனக்கு க்ரீட்டில் சில பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. அங்கு பணிபுரிபவர்களை நீ மேற்பார்வைசெய்யலாம். மாலைகளில் நாம் மணலில் நம்மைத் தளர்த்தி கொள்வோம். இந்த உலகத்தில் எனக்கென்று மனைவி, மக்கள், ஏன் ஒரு நாய்கூட இல்லை, நாம் ஒன்றாக சேர்ந்து உணவருந்தி குடித்து கொண்டாடுவோம். பிறகு நீ உன் சந்துரியை வாசிக்கலாம்’

‘நான் நல்ல மனநிலையில் இருந்தால், உனக்கு புரிகிறதா? நல்ல மனநிலையில் இருந்தால், நீ விரும்பும் வகையில் உனக்காக என்னால் அங்கு உழைக்க முடியும். நான் உன்னுடையவன். ஆனால் சந்துரி அப்படியில்லை, அது ஒரு காட்டு விலங்கு, அதற்கு சுதந்திரம் தேவை. நல்ல மனநிலையில் இருந்தால் நான் வாசிப்பேன், பாடுவேன், சிலவேளைகளில் கிரேக்க நாட்டுப்புற (சசப்பிகோ பெண்டோளி ஜீபெகிகோ )நடனங்கள்கூட ஆடுவேன். ஆனால் நான் தொடக்கத்திலேயே உன்னிடம் இதை சொல்லிவிட வேண்டும், எனக்கு நல்ல மனநிலை வாய்க்க வேண்டும். இதை தெளிவாக நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். என்னை வற்புறுத்தினால், அது அவ்வளவுதான். இத்தகைய விஷயங்களைப் பொருத்தவரை நான் ஒரு மனிதன் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்’

மனிதன்? என்ன சொல்கிறாய் நீ?

‘அதாவது, சுதந்திர மனிதன்!’

நான் மற்றுமொரு ரம் கோரினேன்.

‘ஒன்றல்ல இரண்டு’ கூவினான் ஜோர்பா. ‘ உனக்காக, நாம் வெறுமே குடித்துக் களிப்பதற்காக ஒன்று, சேஜ்ஜும் ரம்மும் ஒன்றாகக் குடிக்கும்போது அத்தனை நன்றாக இருக்காது. நீ ஒரு ரம்மையும் குடிக்கத்தான் வேண்டும், அப்பொழுதுதான் நமது ஒப்பந்தம் உறுதியடைந்ததாக பொருள்’

எங்கள் கோப்பைகள் உரசிக்கொண்டன. பொழுது விடிந்திருந்தது. கப்பல் கொம்பொலியை கிளப்பியது. எனது பெட்டிகளை கப்பலேற்றிய சுமைதூக்கி என்னை நோக்கி கையசைத்தான்.

‘கடவுள் நம்மோடு இருப்பாராக’ எழுந்துக்கொண்டே சொன்னேன்.

‘செல்வோம்’

‘கடவுளும் சாத்தானும்’ என்றான் ஜோர்பா அமைதியாக.

குனிந்து சந்துரியை அக்குளில் இடுக்கிக்கொண்டு கதவைத்திறந்து முதலில் வெளியேறிச் சென்றான்.

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.