ஜென்மக் கணக்கு

ஸ்ரீதர் நாராயணன்

‘நேத்து நம்ம துரையைப் போட்டு சாட்டிப்புட்டாங்களாம்ல. பசங்க சொல்லலயா?’

பெரிய நூல் உருண்டையை பிரித்து நுனியை நீட்டி, கரைத்து வைத்த நீலத்தில் முக்கியெடுத்தபடிக்கு இருந்த தயாளன், குமரப்பெருமாளின் அரவம் கேட்டதும், நூலை அப்படியே தரையில் கிடத்திவிட்டு கைகளை விரித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

நீண்டு கிடந்த போர்ட்டிகோ நிழலில் சுவரோரமாக சாய்த்திருந்த 5 X 8 சைஸ் பலகையில் ‘ஜெயரேகா ஹாஸ்பிடல் செல்லும் வழி’ என்று சைன் போர்டு எழுதுகிற வேலை. நீலத்தில் நனைத்த நூலை போர்டுக்கு இருமுனைகளிலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு சுண்டிவிட்டால் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் விழும். அந்தக் கட்டங்களில் பென்சிலால் மெலிதாக எழுத்துகளை வரைந்துகொண்டு வண்ணம் தீட்ட வேண்டியதுதான். அரசரடி பேருந்து நிறுத்தத்தில் ஒன்று. அடுத்து காளவாசல் முக்கு. அப்படியே இடதுபுறம் பைபாஸில் திரும்பினால் சொக்கலிங்க நகர் முனை. தாஸ் டீக்கடை ஒட்டி வலதுபக்கம் திரும்பினால் முனியப்பன் கோவில் வாசலில் ஒன்று.

இப்படி எட்டு போர்டுகள் கணக்கு வரும். இதுபோல தேனியிலிருந்து வருபவர்களின் வசதிக்காக விராட்டிபத்து பஸ் ஸ்டாப்பிலிருந்து காளவாசல் வரைக்கும் 3 போர்டுகள். கூடல்நகரிலிருந்து, பைகாராவிலிருந்து என்று இன்னும் ஒரு பத்து போர்டுகள் என்று மொத்தம் இருபத்தோரு வழிகாட்டி போர்டுகள். நல்ல மிதமான ஆர்டர்தான். பெரிய வேலைகளில் இறங்குமுன்னர் தயாளன் இப்படித்தான் போவோர் வருவோரையெல்லாம் இழுத்து வைத்து பேசிக்கொண்டிருப்பார். திடீரென முனி அடித்தது போல வேலையை மட்டும் செய்துகொண்டிருப்பார்.

தெற்கு பார்த்த வீடானதால் வாசல்புறம் எந்நேரமும் போர்டிகோவின் நிழல் இருந்துகொண்டே இருக்கும். வீட்டின் முன்பக்கம் தடுத்து பெயின்ட் தளவாடங்கள் வைக்கும் கோடவுனாக ஆக்கியிருந்தார்கள். வலப்புறம் ஆபிஸ் ரூம். பின்புறம் படுக்கையறை, சற்று ஒடுக்கமான கிச்சன் மற்றும் பாத்ரூம். ஒற்றையாளுக்கு அதற்கு மேல் என்ன வேண்டும். விளம்பர போர்டுகள், கட்டுகம்பிகள், இரும்பு ராடுகள், பில்புத்தகங்கள், கணக்கு வழக்கு புத்தகங்கள், எடுபிடி பையன்கள் என்று எல்லோரும் புழங்குவது முன்னறைகளிலும் போர்டிகோவிலும்தான். வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு இறங்கிவந்த குமரப்பெருமாள் தயாளன் சொன்னதை காதில் வாங்கியும் வாங்காமலும் திரும்பி காம்பவுண்டு சுவர் ஓரத்தில் இருந்த கொய்யா மரத்தை நோக்கி நடந்தான். புறங்கையிலிருந்த காய்ந்த நீலக்கறைகளை தட்டியபடிக்கு, பெரிய மீசையை நீவிவிட்டுக்கொண்டே

‘சூர்யா புரோட்டா ஸ்டாலில் போய் ஏழரையக் கூட்டிருக்காங்க நேத்திக்கு. அத்தனை ராத்திரிக்கு அங்க என்னடா பண்ணிட்டிருந்தீங்க’

பக்கத்தில் பிளாஸ்டிக்கேனை படுக்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த பாலுவைப் பார்த்துக் கேட்டார். கேள்வி என்னவோ குமரப்பெருமாள் காதுக்குத்தான்.

கொய்யாமரத்தடியிலிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை காலாலேயே நிழலுக்கடியில் நகர்த்திப்போட்டு, நியூஸ்பேப்பரால் தட்டிவிட்டு அமர்ந்து கொண்ட குமரப்பெருமாள்,

‘எங்கடா ரவி? கர்டருக்கு ஓட்டை போட்டாச்சாமா…. நைட்டு பாளையங்கோட்டைக்கு ரெடியாயிடுமா. ஏழு ஏழரைக்கு லாரி கெளம்பிரும்டே. கைலாசம் வெயிட் பண்ணமாட்டாப்ல’

இரவு தூத்துக்குடி எண்ணெய் செக்குக்கு லோடு போகிறது. வழியில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரி பக்கமாக இன்கம்டாக்ஸ் ஆபிசுக்கு எதிரே இரும்பு கர்டர்களையும் போர்டுகளையும் இறக்கிவிட்டால், சிட்ஃபண்ட் கம்பெனிக்கான ஹோர்டிங் வேலையை வெள்ளிக்கிழமைக்குள் முடித்துவிடலாம்.

கையில் பேப்பரை விரித்துக் கொண்டதும் தயாளன் பக்கத்தில் பார்வையை விட்டான். மீசையை நீவிக்கொண்டே சிகரெட் எடுத்து வாயில் வைத்துக் கொண்டவர், பற்ற வைக்காமலேயே அதைக் கையில் எடுத்துக்கொண்டு,

‘வெள்ளக்கண்ணு தியேட்டர்ல ரெண்டாம் ஆட்டம் பாக்க ஏதோ குரூப்பு வந்திருப்பானுவ போல. திரும்பிப் போகும்போது கடையில் சாப்பிட நிறுத்திருக்காய்ங்க. என்னடா… ‘

திரும்பிப் பார்க்க பாலு தலையை நிமிர்த்தாமல் கம்பிகளை சுருட்டிக்கொண்டிருந்ந்தான்.

‘ஒரு ஆஃபாயில் போடறதில் பிரச்னையாம். துரைக்கு முத ஆர்டரை கொண்டுவந்திட்டாய்ங்கன்னு ஒர்த்தன் சலம்பிட்டாப்ல. இவிய்ங்க பதிலுக்கு எகிற துரையைப் போட்டு சாட்டிப்புட்டாய்ங்க. எங்கடா துரை?’

குமரப்பெருமாளுக்கு முதலில் எரிச்சல்தான் கிளம்பியது. இவர்கள் போய் வம்பிழுத்தார்கள், சண்டை போட்டார்கள் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. எவன்கிட்டயோ அடிவாங்கி வந்திருக்கிறார்கள். இதைப் போய் இவ்வளவு விரிவாகப் பேசுகிறார் என்று தயாளன் மீதும் கோபம் எழுந்தது. பெட்ரோல் போட்டுக்கொண்டு வருகிறேன் என்று போன ராமகிருஷ்ணனை இன்னமும் காணவில்லை. கார் வந்தால் சட்டென கிளம்பிப் போய்விடலாம்.

‘என்னடா பாலு? அண்ணன் சொல்றது நிசமா?’

பொதுவாக கேட்டுவைத்தான். துரை பெயரை அதிகம் உச்சரிக்க மாட்டான் என்பது அவனிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

‘இல்லண்ணே… அவிய்ங்கதான் ஏழரை கூட்டினாங்க. துரை சைலண்ட்டா வந்திட்டாப்ல. குண்டா ஒர்த்தன்…. கழுத்தே இல்லாம கத்திரிக்கா மண்டயனாட்டம்… அவன்தான் அடிக்கிற மாதிரி வந்தாப்ல’

‘யாருடா அவிய்ங்க?’

குந்தி அமர்ந்திருந்த தயாளன், வத்திப்பெட்டியை கையில் வைத்து உருட்டியவாறே எழுந்து, குமரம்பெருமாளை நோக்கி நகர்ந்து, வாசல்படி முனையில் வந்து உட்கார்ந்துகொண்டார்.

‘சங்கர் நகர்ல மெக்கானிக் ஷாப் வச்சிருப்பாய்ங்க போல. ரவி பாத்திருக்காப்படி. நீதி மோகன் குரூப்பு ஆளுங்களா இருக்கும்னு நெனக்கிறேன்’

நியூஸ்பேப்பரை கசக்கி மடித்ததில் குமரப்பெருமாளின் எரிச்சல் வெளிப்படையாகவே தெரிந்தது.

‘எங்க கொண்டுபோய் ஏழரைய கூட்டியிருக்கானுங்க பாருங்க. லேய்.. ராமகிருஷ்ணன் அண்ணனும் இருந்தாராடா நேத்திக்கு ஒங்களோட’

ராமகிருஷ்ணன் பெரிய குடும்பி. நறுங்கலாக ஒடித்துப் போட்ட வெண்டைக்காயாட்டம் பரிதாபமாக இருப்பார். இந்த மாதிரி சிக்கலான பிரச்னைகளில் நீக்குபோக்காக நுழைந்து வெளிவரும் திறன் உள்ளவர்.

ஆனால் துரையை பார்க்கும் எவருக்கும் ஏனோ சண்டை வலிக்கத்தான் தோன்றும். நல்ல உயரமாக ஆகிருதியோடு இருப்பான். அதுவரை யாரையெல்லாம் உயரம் என்று நினைத்திருந்தோமோ அவர்களை எல்லாம் விட ஒருபிடி கூடுதல் உயரத்தோடு இருப்பான் எனத் தோன்றும். அப்படி ஒரு நிமிர்வு. இரண்டு வருடங்களுக்கு முன்னால் காம்பௌண்ட் சுவருக்கு வெளியே கேட் முன்னாடி தயங்கித் தயங்கி நின்றுகொண்டிருந்தவனின் பிம்பம் இப்போதும் நினைவிருக்கிறது. பார்த்தவுடன் சிவகாமி அண்ணியின் கண்கள்தான் குமரப்பெருமாளின் நினைவிற்கு வந்தது. சண்முகம் அண்ணனின் அதே வளர்த்தி. பதினெட்டு வருடங்களாக புகைந்து கொண்டிருந்த வன்மம் சட்டென பாசமாக திரிந்து பாலாக பொங்கியது போலிருந்தது. .

ஆனால் ஒருவிஷயத்தில் மகனும், சிற்றப்பனும் உறுதியாக இருந்தார்கள். அநாவசியமான சொற்கள் எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் அங்கீகரித்துக் கொண்டார்கள். குமரப்பெருமாளின் விளம்பர போர்டு கம்பெனியில் இருந்த அனைவருக்கும் அவர்களிடையேயான கதை புரிந்தும் புரியாமலும் தெரிந்திருந்தது. யாரும் சொல்லாமலே அவர்கள் துரையை அடுத்த முதலாளியாக நினைத்து வேலை செய்யத்தொடங்கினார்கள்.

இந்த இரண்டு வருடங்களில் துரையும் ஓரளவுக்கு தொழிலில் மூழ்கி போர்டு எழுதுவது படம் வரைவது என்று தேர்ந்து விட்டிருந்தான்.

‘என்னத்த பொத்தி வச்ச பொண்ணு போல இங்கிட்டே சுத்திட்டிருக்கீங்க தம்பி… நாலு கஸ்டமரைப் பாத்து நல்லாப் பேசி ஆடர் வாங்கலாம்ல. கார்ப்பொரேஷன் ஆபீஸ், அப்ரூவல்னு நெளிவுசுளிவு கத்துக்கிடனும்யா. கம்பெனியை பெருசுபண்ணி கலெக்க்ஷனை பாருங்க’

தயாளன்தான் அவர்கள் இருவருக்குமான இடைவெளிக்கு இயல்பான பாலமாக மாறியிருந்தார். துரை பதிலேதும் சொல்லியதில்லை. அவன் அமைதி எப்போதும் குமரப்பெருமாளுக்கு எரிச்சல் உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. இப்போது கூட அவன் கண்ணில் தென்படுவதற்குள் கார் வந்தால் ஏறிப் போய்விடலாம் என்றுதான் இருந்தான். .

‘சாப்பிடப் போயிருப்பாய்ங்கப் போல…’ தயாளன் சிகரெட்டை இழுத்து புகைவிட்டபடிக்கு ‘தம்பி இம்புட்டு சுணக்கமா இருக்கக்கூடாதுங்கறேன். குணத்தில் அவியிங்க அப்பாவக் கொண்டுட்டு இருப்பாராட்டிருக்கு’ என்றார். குமரப்பெருமாள் கழுத்தை வெட்டி அவரை திரும்பிப்பார்த்தான்.

தயாளன் அதை கவனிக்காத பாவனையில் தொடர்ந்து ‘அம்மா வளப்புல்ல. அதான் அப்படியே குமைஞ்சு குமைஞ்சு உக்காந்திருக்காப்டி. இளந்தாரிங்கண்ணா இப்படியா கெடக்கிறது. நல்லா ப்ரீயா இருக்க வேணாம். நாலு இடத்துக்கு கூட்டிட்டுப் போய் நல்லது கெட்டது நாமதான் கத்துகொடுக்கனும்கிறேன்’ கடைசி இழுப்பை இழுத்துவிட்டு சுண்டிய சிகரெட்டை, அவரே எழுந்து போய் காலால் தேய்த்து அமர்த்தினார்.

வீட்டின் உள்ளிருந்து நடைக்கதவைத் திறந்துகொண்டு, இரண்டு கைகளிலும் பெயிண்ட்டு டப்பாக்களுடன் வெளிவந்த துரையைப் பார்த்ததும் குமரப்பெருமாளுக்கு எப்போதும் எழும் அசௌகரிய உணர்வு எழுந்தது. முகத்தை திருப்பி காம்பௌண்டு சுவரைத்தாண்டி தெருவைப் பார்க்கத் தொடங்கினான்.

‘ரவி, லேத்துக்கு போயிருக்காப்ல. கர்டர் வேலை முடிஞ்சிட்டுதாம்ண்ணே. லாரி போக சொல்ல அப்படியே அங்ஙன இருந்தே ஏத்திப் போட்டுட்டு போயிடலாம். கூட ரவி ஃப்ரெண்ட்ஸ் 2 பேரு நிமித்தாளு வேலைக்கு வராங்களாம். பெரிய போர்டுல்ல’

துரை மையமாக சொல்லிக்கொண்டே தயாளனைத் தாண்டி மூலையில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் பக்கம் போய் குந்தி அமர்ந்துகொண்டான். ஸ்கூட்டரின் கால் வைக்கும்பகுதியில் பெயிண்ட் டப்பாக்களை வாகாக வைத்துக்கொண்டு நீலக்கட்டங்களிலிருந்த ஜெயரேகாவிற்கு வண்ண உயிர் கொடுக்கத் தொடங்கினான்.

இதுவரை நடந்த உரையாடலை அவன் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்று இருவருக்கும் புரிந்தது. அவனுக்கு அடுத்திருந்த போர்டருகே போய் குந்தி உட்கார்ந்த தயாளன், கீழே விரித்து வைத்திருந்த நூலைத் தொடாமல், மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார்.
சமயத்தில் தொடர்ச்சியாக நாலைந்து சிகரெட்டுகள் வரை இழுவை போகும்.

‘தம்பி, நாமதான் சூதானமா இருந்துக்கோனும். ஆளு குரூப்புல்லாம் பாத்து நடந்துக்க வேணாமா. கடப்பாரய முழுங்கினாப்ல எப்பவும் விறைப்பா நின்னுட்டிருந்தா எப்புடிங்கிறேன்? நீதி குரூப்பு யாருன்னு தெரியும்ல. டேய், நீங்களாவது சொல்லக்கூடாது’

முதுகை வளைத்துக் கொண்டு எழுதுவதைத் தவிர வேறொன்றும் உலகில் தனக்கு விதித்திருக்கவில்லை என்பது போல எழுதிக்கொண்டிருந்தவனைப் பார்க்க குமரப்பெருமாளுக்கு எரிச்சல் கூடியது.

‘எந்தக் கம்பியை… ‘ பக்கத்திலிருந்த மடக்கு டீப்பாய் மேலிருந்த காலி ப்ளாஸ்டிக் கப்பை எடுத்து பாலுவின் மேல் எறிந்தவாறே ‘எந்தக் கம்பியை எடுத்திட்டுப் போப்போற நாய்யி… இருபதடிக்கு… ‘ அடுத்த கப்பை எடுத்து இன்னமும் கோவமாக எறிந்தவாறே ‘இருபதடிக்கு மேல நிக்கவேண்டிய போர்டு.. கிரவுண்டுக்கு எதிர அடிக்கிற காத்துக்கு இத்தந்தண்டி இருந்தா போர்டு நிக்குமா நாய்யி… நிக்குமா’

பாலு அவசரமாக அடுத்திருந்த டப்பாக்களில் கனமான கட்டுக்கம்பியை தேட ஆரம்பித்தான்.

‘சண்ட வலிச்சிட்டு வந்தாக்கூட பரவால்லண்ணே. இவனுங்க அடி வாங்கிட்டு வந்து நிக்கறதுக்கெல்லாம் நாம போயி அந்த கட்டப்பஞ்சாயத்துக்காரங்ககிட்ட நிக்கனுமாட்டு. தொழிலப் பாத்து நடத்தறதா, இந்த தொந்தரவுகளை சமாளிக்கிறதா’ குமரப்பெருமாள் சலித்துக் கொண்டான்.

விலுக்கென நிமிர்ந்த பாலு வேகமாக,

‘ஆரம்பிச்சது அவிங்கண்ணே. ஆஃபாயில் ஆடர் அவனுதாம். மாரிமுத்தண்ணே எங்க டேபிள்ள வச்சிட்டுப் போயிட்டார்னு அவரப் போய் நெருக்கினாங்க. என்னன்னு கேக்கலாம்னு துரை எழுந்தாப்ல. இருக்கற சேரு நாக்காலில்லாம் எத்தி உதச்சிட்டு வந்து வம்பிழுத்தாப்டி’

எழுதிக்கொண்டிருந்த துரையின் கைகள் ஒருகணம் தயங்கி நின்றது. ஏதாவது சொல்வான் என்று நினைத்தால் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டான்.

‘ந்தா… இப்படி கைய நீட்டி முறுக்கிகிட்டு அடிரா பாப்பம்… மேல கைய வைடா பாப்பம்னு மண்டய ஆட்டிகிட்டே கால ந்தா…இத்தந்தண்டிக்கு தூக்கிட்டு ஓடி வந்தாப்ல’

தயாளனும் குமரம்பெருமாளும் அவன் சொல்வதையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘விட்டா நெஞ்சுல விழுந்திருக்கும். குனிஞ்சதால தோள்ல பட்டு அவனுக்கு சறுக்கிவிட்ருச்சு. டெபிள் மேல விழுந்து கவுந்திட்டாப்ல. அதுக்குள்ள ஆளுங்க கூடிப்போச்சு. இவன் அடிச்சிட்டான் அவன் அடிச்சிட்டான்னு ஒரே கூப்பாடாயிருச்சு’

துரைக்கு அடிவிழுந்த விஷயம் சிவகாமி அண்ணியின் காதுக்கு எட்டியிருக்குமா என்று யோசித்தான் குமரப்பெருமாள். பாலு காலைத் தூக்கி உதைத்து நடித்துக் காட்டியதை பார்த்ததும் சிவகாமி செய்து காட்டியது போலத்தான் இருந்தது. எத்தனை முறை அதையே செய்திருக்கிறாள். ஒவ்வொருமுறையும் காலைத் தூக்கும் அளவும், அதை விசையோடு உதைப்பதும் கூடிக்கொண்டே போகும். கலியாணம், படையல், சடங்கு, சாவுவீடு, தண்ணிஊத்து என்று எங்கு போனாலும் குமரம்பெருமாளுக்கு முன்னாடி சிவகாமி வந்துவிட்டாள் என்பதை சுற்றியிருப்பவரின் குத்தும் பார்வைகள் சொல்லிவிடும்.

‘எட்டுமாசப்பிள்ளயோட வயத்த சாச்சிட்டு நான் இப்படிக்கா நிக்கறேன். அவர் மாடிப்படில ஏறிப்போயிட்டிருக்காரு. திருப்பாலை வீட்டை நீ பாத்திருக்கீல்ல…. இவுக அப்பாரு காலத்தில் எடுத்து கட்டறோம்னு கோபுர உசரத்துக்கு கட்டியிருப்பாங்க. எத்தனை படி…’

சொல்லும்போதே அவள் கைகளை தாலாட்டுவது போல ஆட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிடுவாள்

‘ஆறடுக்கு அரமணைல ஆடிப்பாடின ராசா… பாதியில போனீங்களே பங்கப்பட்டு நின்னேனே’.

‘மூத்தா பிள்ளன்னுட்டா ஒர்த்தனுக்கு இம்புட்டு கோவம் இருக்கும்’

அன்னம் சித்தியோ பெரியநாயகி அத்தையோ எடுத்துக்கொடுப்பார்கள். பேச்சிநாதன் குடும்ப உறவுகள் மதுரை சுற்றிலும் நீக்கமற நிறைந்திருந்தார்கள். எந்தப்பக்கம் போனாலும் சிவகாமியை கூப்பிட்டு வைத்து கதை கேக்க ஒரு கூட்டம் இருந்தது.

கீழ்தளத்திலிருந்து அகலமான மரப்படிகளில் சண்முகம் ஏறி வந்து கொண்டிருக்க, முனை திரும்பும் இடத்தில் இடுப்பில் கைவைத்து நின்றுகொண்டிருந்த குமரம்பெருமாள் காலை மடக்கி இழுத்து ஒரு உதை விட்டான். சண்முகம் அப்படியே ஏறிவந்த படிகள் அத்தனையிலும் உருண்டு கீழே கிடத்தியிருந்த பேச்சிநாதனின் உடலருகே போய் விழுந்தார். துஷ்டிக்கு வந்திருந்த இரண்டு சம்சாரத்து உறவுகளும் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்டிருந்தாலும் குமரம்பெருமாள் ஒருபடி அதிகமான கோபத்தோடு ‘வீட்டுக்குள்ள காலை வச்சான், கெண்டக்கால் நரம்பை கெந்தியெடுத்திருவேன்’ என்று பொருமியபடிக்கு இருந்தான். வாகான சமயம் வாய்த்ததும் சண்முகத்தை உதைத்துத் தள்ளிவிட்டான். பெரிய அடிதடி ஏதும் நடக்காமல், அக்கம்பக்க உறவுமுறைகள் இரு குடும்பத்தாருக்கும் பஞ்சாயத்து பண்ணி வைத்தார்கள். அவர்களுக்கு என்னப்போச்சு… ஆயிரம் வழியில் உறவுப்பாலம் விரிந்து பரந்திருக்க சொத்துப் பிரிவினையை சுமுகமாக முடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

ஆனால் சண்முகம்தான் மூன்றே மாதத்தில், பச்சை உடம்பும், கைக்குழந்தையுமாய் சிவகாமியை விட்டுவிட்டு மாரடைப்பில் செத்துப் போய்விட்டார். காலையில் மளிகைக் கடைக்கு போய் லிஸ்ட்டை கொடுத்துவிட்டு வந்தவர் ‘செத்த படுத்திருக்கேன்’ என்று மெத்தைக்குப் போய்ப் படுத்தவர் மீண்டும் எழவேயில்லை. நர்மதா கிளினிக்குக்கு கொண்டு போனதுமே பாலகிருஷ்ணன் டாக்டர் arrived as dead என்று அறிவித்து, சான்றிதழும் கொடுத்துவிட்டார். இரத்தத்தில் கட்டுபடுத்தாத சக்கரை அளவினால் கார்டியோமையோபதி இருந்திருக்கலாம் என்றெல்லாம் பாலகிருஷ்ணன் சொன்னாலும் சிவகாமிக்கு மனசு ஆறவேயில்லை.

‘எட்டி உதச்ச கால்ல புத்துவைக்க. ஏறிமிதிச்ச காலு எரிஞ்சு போக’ எந்த விசேஷங்களில் பார்க்க நேரிட்டாலும் குமரப்பெருமாளின் காதுகளை எட்டவேண்டுமென ஆங்காரத்துடன் சிவகாமி திட்டுவாள்.

அவளுடைய தீக்கங்கு கண்களிலிருந்து தப்பவே திருப்பாலையிலிருந்து மாற்றிக்கொண்டு பத்து கிலோமீட்டர் தள்ளி பைகாராவிற்கு வந்து விளம்பரக் கம்பெனி தொடங்கினான். அங்கேதான் தயாளன் பழக்கம். அப்புறம் பைபாஸ் ரோடு தாண்டி எஸ்.எஸ்.காலனியில் வீடு எடுத்து அதையே ஆபீசாகவும் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டாகிவிட்டது.

தொட்டுக்க வச்சுக்க என்றிருந்த சொந்தங்கள் எல்லாரையும் ஒதுக்கிவிட்டு ஒத்தக்கொரங்காக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அத்தனை வருடங்கள் கழித்து துரை அவனைத் தேடி வந்தது சந்தோஷமாக இருந்தாலும், சிவகாமியின் அதே தீக்கங்கு கண்கள் துரைக்கு அப்படியே இருந்தது. அவனை சுட்டெரித்தவண்ணம்…..

‘எல்லாம் ஒரு கணக்குன்னு வச்சுகிடனும் தம்பி’ தயாளன் மூன்றாவது சிகரெட்டை எடுத்துவிட்டிருந்தார்.

‘ஒர்த்தர பாத்தவுடன பட்னு பாசம் பொங்குது. ஏன்னு கேக்கறோமா…. கட்டிப்பிடிச்சு முத்தம் கொஞ்சறோம். மனசு மயங்கிடுதில்லையா. அதே மாதிரிதான் வெறுப்பும். பட்டுன்னு ஒரு பொறி கெளம்பிரும். முத்தம் கொஞ்சறாப்ல முட்டிய தூக்கிடறது….’ மீசையை நீவிவிட்டுக் கொண்டவர்

‘ந்தா… போனமாசம் மலைக்கு மாலை போட்ருந்தேன்ல… காலேல எந்திரிச்சு டீயடிக்கலாம்னு பாய் கடையாண்ட போனேன். சேல தலப்ப முதுகபக்கமா கட்டி, மூணுமாசக் கொழந்தய முடிஞ்சுகிட்டு ஒரு பிச்சக்காரி. யாருன்னு முன்னபின்ன பாத்ததேதில்ல. ஏதொ மொபசெல் பஸ்ஸுல இறக்கிவிட்டுட்டு போயிட்டானுவ போல. ந்தா… இப்படி நெருக்கிகிட்டு வந்து பிச்சக் கேக்குது…. எப்படி…’

துரையின் தோள்மேல் தன் மார்பு படுவது போல நெருங்கிக் காட்டினார்.

‘…இப்படி நெருக்கிட்டு வந்து பிச்சக் கேக்குது. கதிரேசன், சந்திரன்னு நாலஞ்சுபேர் பாய்கடைல நின்னிட்டிருந்தாங்க. பட்டு பட்டுன்னு அத்தினி பயலும் காசக்கொடுத்திட்டு நகந்து போயிட்டான். எனக்குன்னா சள்ளுன்னு கடுப்பேறிடுச்சு. ந்தா… என்னத்த மேல வந்து ஒரசறவ. போ அங்கிட்டுன்னு தள்ளிவுட்டேன்’

மீசையைத் தாண்டி வெறுமையான தாடையை தடவிவிட்டுக்கொண்டு,

‘தாடியும், அளுக்கு துண்டுமா நம்மளயும் பிச்சக்காரன்னு நினச்சிடுச்சுப் போல ஒரு இருவது பைசாவ என் கையில வச்சிட்டு, இளப்பமா சிரிச்சிட்டு போயிடுச்சு’

பின்னால் நின்றுகொண்டிருந்த பாலு குபீரென சிரித்துவிட்டான். ‘இருவது பைசாவா’

திரும்பி அவனைப் பாத்துவிட்டு மீண்டும் துரைய நோக்கி…

‘பிச்சக்காரி போட்ட பிச்ச எப்படி இருக்கும்? மூஞ்சில காரித்துப்பின மாதிரில்ல இருக்கும்…. என்ன செய்வீங்க’

சிகரெட்டு சாம்பலைத்தட்டிவிட்டு அதன் நெருப்பு நுனியை பார்த்தபடிக்கு

‘அவளத் துரத்திட்டாப் போய் அடிக்க முடியும்… இல்ல கல்லக் கொண்டுதான் எறிய முடியுமா’

துரை வரைவதை நிறுத்தியிருந்தான். அவன் தயாளன் முகத்தைப் பார்த்த பார்வையில் ஏதோ அடையாளப்படுத்திக் கொள்ள முயல்வது போலிருந்தது.

தலையை கோதிவிட்படிக்கு தயாளனின் கதையை கேட்டுக்கொண்டிருந்த குமரப்பெருமாள் ‘வக்காளி.. அந்த கருமம் புடிச்ச காச தொலச்சு தலமுழுகினீங்களா இல்லயா’

துரையின் திசையை விட்டு திரும்பி குமரப்பெருமாளைப்பார்த்து தயாளன் ‘அதெப்படி… எங்க கொண்டு செலவழிக்க? அத்தினி பயக பாத்தப்புறமும் அந்தக் காசை கடைல கொடுக்க முடியுமா? சும்மாவும் வச்சுக்கிட முடியாது. எங்க போனாலும் பிச்சக்காரி காசாய்யான்னு சத்தாய்ப்பாங்க. ‘ என்று சொல்லி இடைவெளிவிட்டு

‘சாமீய் அய்யப்பா… சரணம் அய்யப்பா….உனக்குன்னு காணிக்கைகை கொடுத்திட்டு போயிருக்கு இந்த புள்ள. பைத்தியகாரச்சிக்கு நல்ல புத்திய கொடுன்னு சத்தமா சொல்லிட்டு காசப் பையில போட்டுகிட்டேன்”

இப்போது எல்லாருமே ஒன்றாக சிரித்து விட்டார்கள். பாலு வயிற்றைப் பிடித்துக் கொண்டு மடங்கி நிமிர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

‘இனி இன்னொருத்தர் நம்மள அப்படிப் இளப்பமா பாத்திடக்கூடாதேன்னுதான் கோவில்லேந்து திரும்பினதும் தாடிய எடுக்கும்போது இப்படி அருவா மீசயா ஒதுக்கிட்டேன். என்னான்றீங்க’

இழுத்து முடித்ததும் சிகரெட் துண்டை காம்பவுண்டு கேட்டுக்கு வெளியே சுண்டிவிட்டார்.

‘அதேன் சொல்றேன். எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சுக்கிடனும். ஏதோ ஒண்ணத்தூக்கி அவன் தராசில வைக்கிறான். பதிலுக்கு நாமளும் ஒண்ணத்தூக்கி மறுதட்டுல போட்டு பேலன்ஸ் பண்ணிக்கிடனும். சும்மா ஒரே பக்கமா பாரத்த வச்சுகிட்டு குமைஞ்சிக்கிட்டிருக்கப்படாது’

நாலாவது சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவர், உடனே பற்றவைத்துக் கொண்டார்.

87ம் வருசத்து மாடல் நீலக்கலர் அம்பாசிடர் வந்து வாசலில் நின்றது. டிரைவருக்கு பக்கத்து சீட்டிலிருந்து படபடவென துடித்தபடி இறங்கிய ராமகிருஷ்ணன் ‘சாரி சார். பஞ்சராயிடுச்சு. அதான் ஸ்டெப்னி மாத்திட்டு டயரை யாசின் கடைல போட்டுட்டு வந்தேன்’ உள்ளே வந்தவர்

பாலுவைப் பார்த்ததும் தன்னுடைய அதிகாரம் நினைப்பில் வந்தவராக கடுமையான குரலில்

‘போர்டு லைட்டை அணைச்சியாடா… ஆயிரம் வாட்ஸ் பல்பு. ப்யூசாயிடுச்சுன்னா புதுசுக்கு கஸ்டமர்ட்ட கேக்க முடியாது. இந்த மாசத்துல மூணாவது பல்பு.. எங்கடா ரவியக் காணோம்’

தயாளன் லேசாக இருமியபடிக்கு ‘என்னத்த இப்ப வந்து வெடவெடங்கறீங்க…. உங்க பசங்க சங்கர்நகர் மெக்கானிக் ஷாப் குரூப்புல போய் ஏழரைய கூட்டியிருக்காங்க தெரியுமா’

குமரப்பெருமாளின் இருப்பால் இன்னும் கொஞ்சம் பதட்டம் ஏறிய ராமகிருஷ்ணன்

‘என்னா செய்ய சொல்றீங்க. ஒரு நாளப்போல இப்படித்தான் சண்டக்குன்னு நிக்கறாய்ங்க. இவிய்ங்க கெட்டது போதாதுன்னு தம்பிய வேற கூட்டிட்டுப் போய் கெடுக்கறாய்ங்க’ என்று சடைத்துக் கொண்டார்.

‘யாருன்னு தெரியுமாண்ணே… நீதிமோகன் குரூப்பா’

‘இல்ல சார். கந்தசாமி விறகு தொட்டி இருக்குல்ல அதுக்கு அந்தாண்ட மெக்கானிக் கடை. யாசின்கிட்ட கேக்கறேன் சார். நீதிமோகன் குரூப்பால்லாம் இருக்காது’

‘சங்கர்நகர் மெக்கானிக் ஷாப்னு சொன்னாப்லயே பாலு..’ தயாளன் இடைவெட்டினார்.

பாலு வேகமாக ‘ஆமாம்ண்ணே. அந்தப்பக்கம்தான்’

ராமகிருஷ்ணன் மீண்டும் படபடத்தபடிக்கு ‘டேய் சரியாச் சொல்லு. புரோட்டாக் கடைலேந்து கிளம்பினவங்க தியேட்டர் பக்கம் போனாங்கன்னுதானே சொன்ன’

‘நானெங்க சொன்னேன்? சறுக்கிகிட்டு கீழே விழுந்தவன எழுப்பி கூட்டிட்டு போறப்ப மெக்கானிக் கடைக்கு போறோம்னு சொல்லிட்டேப் போனாங்க. ந்தா துரைதான் சொன்னாப்ல சங்கர்நகர் பக்கம் போனாங்கன்னு’

எல்லாரும் துரை பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். துரை சற்று நிதானித்து முந்தினநாள் நினைப்புகளை மனதில் ஒட்டிப்பார்ப்பவன் போன்ற பாவனையில்,

‘சங்கர்நகர்தான். மொத்தம் அஞ்சு பேரு. மூணு வண்டில வந்திருந்தாய்ங்க. இப்படியே பைபாஸ்ல ஏறி லெஃப்ட்ல போனத பாத்தேன். பின்னாடியே போயிப் பாத்திடனும்னுதான் ஓடினேன். ப்ச்ச்…. இவிய்ங்கதான் இழுத்திட்டு வன்ட்டாய்ங்க’ என்று சொல்லிவிட்டு மீண்டும் போர்டு பக்கம் திரும்பி வேலையைத் தொடர ஆரம்பித்தான்.

ராமகிருஷ்ணன் படபடவென ‘ஆளத் தூக்கனும்னு ஓடினீங்களாக்கும். நல்லாத்தான் கெடுத்து வச்சிருக்காய்ங்க இவங்க’ என்று எம்பி பாலுவின் தலையைப் பிடிக்க கையை வீசினார்.

அவன் இரண்டடி பின்னகர்ந்து ‘அதான் இழுத்திட்டு வன்ட்டோம்ல. போங்க சார்’ என்றான்.

துரையின் முதுகையேப் பார்த்துக் கொண்டிருந்த தயாளன் ‘ஏதும் மாத்து நினப்பிருந்தா அழிச்சிடுங்க தம்பி. உறவுக்கு ஆளைத் தேடு. இழவுக்கு தேளைத் தேடும்பாய்ங்க.’

மற்றவர் பேச்சினால் பாதிக்கபடாதது போல தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் குரலில் ‘நேத்தில்லன்னாலும் இன்னிக்கு, இல்ல நாளக்கின்னு போய்ப் பாக்கத்தான் வேணும்’ என்றான் துரை.

தயாளன் சட்டென எழுந்து துரையின் அருகில் போய் அமர்ந்துகொண்டு

‘இதான் வேண்டான்றேன். உங்கம்மாவும் இப்படித்தான். கோவமும் ஆங்காரமுமா குமைஞ்சிட்டே இருந்தாங்க. அடிதடிக்கெல்லாம் மனச விட்டுக் கொடுத்திடக் கூடாது தம்பி. ஆறப்போடுங்க கொஞ்சம்.’

லேசாக குமரப்பெருமாள் பக்கம் அவர் பார்வை ஓடியது. அவன் நாற்காலியில் இருந்து எழுந்து காம்பௌண்ட் கேட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான். மெள்ள விழுங்கும் புதைகுழியில் மயங்கி கிடந்தவன் சட்டென சுயநினைவு பெற்றதும் தப்பித்து போய்விட நினைப்பது போலிருந்தது.

பெயின்ட்டை எடுக்க குனிந்த துரை, குமரப்பெருமாள் நகரும் காலடிச் சத்தம் கேட்டதும் வேலையை நிறுத்திவிட்டு, திரும்பி தயாளனைப் பார்த்து

தோ… இதேம் வண்டிதான்’ நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரைக் காட்டினான். ‘இதே மாதிரி ஒரு ஸ்கூட்டர்லதான் ஏறிப் போனாய்ங்க. அதப் பாத்ததும்தான் பதறிப்போய் பின்னாடியே ஓடினேன். இந்த ஜென்மத்துக்கும் ஒரு சாபம் போதாதா. அதான்… அதான்… .’

நிமிர்ந்து பார்த்தவனின் முகம் சிவந்து கனிந்து இருந்தது. கண்கள் இரண்டிலும் மெல்லிய திரையாக கண்ணீர் பளபளத்தது.

இன்னமும் ஒரு சொல் வெளிப்பட்டிருந்தால் அந்த கண்ணீர் கரையுடைத்து கொட்டியிருக்குமா இருக்கும். அந்த சொல்லை புரிந்து கொண்டவராக தயாளன் துரையைப் பற்றி இழுத்து அணைத்துக் கொண்டார்.

ஆறு வருடங்கள் முன்னால் பிச்சுப்பிள்ளை சாவடியில் ஜல்லி ஏற்றிவந்த லாரி அடித்துப்போட்டதும் கொண்டு வந்து நிறுத்தினதுதான். யாரும் விரும்புகிறாரோ இல்லியோ என்பதையெல்லாம் தாண்டி அந்த ஸ்கூட்டர் அங்கேயே கிடக்க விதிக்கப்பட்டதுபோல துருவேறிக் கிடந்தது.

வாசக்கதவை திறந்து வெளியேறி, காரின் அருகில் நின்றுகொண்டிருந்த குமரப்பெருமாள், ராமகிருஷ்ணனிடம் மெல்லியக்குரலில் ‘அண்ணே கிளம்பலாம். ஏற்கெனவே லேட்டாயிடுச்சு. போற வழியில் சாமி அண்ணனுக்கு போன் போட்டு லேட்டாயிடுச்சுன்னு சொல்லிட்டு போயிக்குவோம்’

ராமகிருஷ்ணன் முன்கதவைத் திறந்து ஏறிக் காரில் உட்கார்ந்து கொள்ள, குமரம்பெருமாள் பின்கதவைத் திறந்து காரில் ஏறத் தொடங்கினான். உடலைத் திருப்பி சீட்டின் நுனியில் உட்கார்ந்துகொண்டு, ஜாக்கிரதையாக இருகைகளாலும் வலதுகாலை பற்றித் தூக்கி காருக்குள்ளே வைத்துவிட்டு இடதுகாலை உள்ளே இழுத்துக் கொண்டான். குமரம்பெருமாள் சிரமப்பட்டு காரில் ஏறும்போதெல்லாம் சுற்றியிருப்பவர் எல்லோரும் வழக்கம்போல தங்கள் வேலையை நிறுத்திவிட்டு அவன் ஃபைபர் காலை ஒருகணமேனும் உறுத்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். கண்ணீர் கரைகட்டிய தீக்கங்கு கண்களுடன் துரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

தயாளன் மீசையை நீவிவிட்டுக் கொண்டு ஐந்தாவது சிகரெட்டை உருவி பற்றவைத்துக் கொண்டார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.