ஸ்ரீதர் நாராயணன்

அலமாரி – ஸ்ரீதர் நாராயணன் கவிதைகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

சாக்லேட் துண்டு

கரிய பனிக்குல்லாவை தலையில் மாட்டிவிட
துரத்தி வரும் அன்னையிடமிருந்து
தப்பி ஓடுகிறாள், நீள்சுருள் தலைமுடிச் சிறுமி

வெறுமையான மதியப்பொழுதுகள் போல
உலர்ந்த ஓடுகளாக நின்றுகொண்டிருக்கும்
பெரியவர்கள் கனிந்து வளைகிறார்கள்.

போக்குவரத்து அதிகம் காணாத
அச்சாலையில்
எப்போதாவது ஒரு ஐஸ்க்ரீம் வண்டி வரும்.
குளிர்கால டிசம்பரில்
கிறிஸ்துமஸ் தாத்தா வண்டியும் வரும்.
குப்பை வண்டிகள் இரண்டு
வாரம் ஒருமுறை ஊர்ந்து போகும்

அவளுக்கான வாசல்கள் கொண்ட
பொன்னந்தி நிறத்து
பள்ளிக்கூட வண்டி வந்து நிற்கிறது
ஆர்ப்பரித்துச் சிரித்தபடி
வண்டியிலேறிப் போகிறாள்.

அவள் உதறிவிட்டுப் போன
சாக்லேட் துண்டையே
சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது
தேங்காய் துருவலைக் கொட்டியது போன்ற
புசுபுசுவென நாய்க்குட்டி.

oOo

பேப்பர் கொக்கு

மெல்ல மிளிர்ந்து சிமிட்டிவிட்டு
வெண்சாம்பல் சமுத்திரம் மேவ
உள்ளமிழ்ந்து போய்விடும்
செங்கனலை பார்த்துக்கொண்டு

மேஜையின் ஓரத்தில் அதிர்ந்தபடி
காத்திருக்கிறது பேப்பர் கொக்கு

தன் இறகுகளின் கசங்கலிலிருந்து
சுருக்கங்களை நீவிக் கொள்கிறது
மைக்கறையை வரைந்து
மேனியெங்கும் பூசுகிறது
கால் மாற்றி நின்று
கோணல் பார்வை பார்க்கிறது
ஒற்றை சிறகை விரித்து
உலகை புரட்டித் தள்ளுகிறது.

காற்றின் ஒரு விசிறலில்
கங்கு சீறி வீசும்
ஒரு நெருப்பில்
பற்றிக் கொண்டு
பறந்து விடலாம்
என நம்பிக்கையோடு
காத்திருக்கிறது பேப்பர் கொக்கு
மேஜையின் ஓரத்தில் அதிர்ந்தபடி

oOo

அலமாரி

 

பிய்ந்துபோன கோட்டு பித்தான்கள்
மூக்குடைந்த ரவிக்கை கொக்கிகள்
ஜோடியிழந்த சட்டைக்கை கப்ளிங்குகள் என
கண்ணாடிபுட்டி நிறைய இருக்கிறது

தொலைக்கவும் முடியாத
பொருத்தவும் முடியாத
பழைய நினைவுகளைப் போல

அறுந்து போனபோது
விடுபட்ட தொடர்புகளை
தேடி அலமாரியில்
காற்றிலாடும் உடுப்புகளிடையே
அவ்வப்போது உரசிப்பார்த்துவிட்டு,

குற்றவுணர்வில் கருத்துப்போய்
கண்ணாடி புட்டியிலே
தங்கிவிடுகின்றன,

இப்படித்தான் இற்றுவிழாமல்
அலமாரியை இழுத்துப்பிடித்து
வைத்துக் கொண்டிருக்கின்றன
ஒன்றுக்கும் உதவாத பழங்குப்பைகள்.

oOo

 

பறவை – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

 

இறக்கைகளை பறத்திக் கொண்டு
விரிந்த நிலப்பரப்பில்
நின்றிருக்கிறது
சாம்பல் வண்ண பறவை ஒன்று
தன் நிழலைப் பார்த்தபடி.

பருவமாற்றத்தின் படிநிலையைக்
காட்ட வலசை போகலாம்.
காவ் காவ் என கப்பல்காரருக்கு
நிலத்தின் வரவை
கட்டியம் கூறலாம்
உண்டிவில்லிலிருந்து விசையோடு
வீசப்படும் கல்லுக்கு
தப்பித்து செல்லலாம்.
செந்நா சுவைக்கு இலக்கென
அனலில் வறுபட்டு
அரிவகை உணவாக செரிமானம் ஆகலாம்.
ஓவியனின் கலைச்சுவைக்கு
தூண்டுகோலாகி
தூரிகையில் வண்ணப்பிரதியாகலாம்.
தன் இனத்தின் பிரதிநிதியாக
நூல்களின் சேகரிப்பில்
தகவல் தொகுப்பாகலாம்.
உயிர்த்திருத்தலின் எத்தனிப்பிற்காக
சிறுமீன் வேட்டைக்கு புறப்படலாம்.

மூக்குயர்த்தி எழும்பி
விரிந்த வானில் புள்ளியென
கரைந்து போகலாம்.

சிறுகண்ணை திருப்பி
என்னைப் பார்த்துக் கொண்டே
வளைய மூக்கால்
இறகுககளை கிளர்த்திக் கொண்டு
யோகியின் முக்திநிலையில்
இப்படியே இருக்கலாம்.

ஊருணிக்கரை, சாமானிய முகம் – ஸ்ரீதர் நாராயணன் கவிதைகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

ஊருணிக்கரை

மகிழம் பூக்கள் விழுந்திருந்த
வேனில் கால இரவொன்றில்
ஈர வீச்சத்துடனான குளிர்தென்றல் வீசும்
ஊருணிக் கரையோரமாக
வேர்புடைப்பு அணைந்த
குழிந்த மென்தரை மீது
வெண்சீலைத் தலைப்பை
விரித்துப் படர்ந்தபடி
வியர்வை காற்றாடிக் கொண்டிருக்கும்
ஒற்றை நிலவின் ஒளி
மறைத்து வைத்திருக்கிறது
ஈரமண்ணில் வரைந்தபடி
விலகிச்சென்ற காலடித் தடங்களை

சாமானிய முகம்

உன் முகம் பிரதிபலிக்கும்
என் முகம் போல
அத்தனை குழப்பமில்லை

கொஞ்சம் குரூரமும், கொஞ்சம் சுயவாதையும்
கூர் பார்க்க காத்திருக்கும்
தீட்டிய சொற்களும்
நெடும்பயணமும் ஆழ்ந்த தனிமையும் விழையும்
குவிந்த உதடுகளில்
இட்டுவிட காத்திருக்கும் சிறு முத்தமும்
கொண்ட சாமானிய முகம்.

கரைதல் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

தேன்துளிகளை உப்புக்கரைசலை
கருப்பஞ்சாற்றை திராவகத்தை
கொட்டிவிட்டுப் போகிறது
நிறையாத கோப்பையினுள்

வெட்டும் மின்னலொன்று இறங்கி
கோப்பையை உடைத்துவிட்டு
விட்டுச் செல்கிறது
பற்றிப் பெய்யும் பெருமழையை

துளிகள் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஈர விறகுகள் ஊறிப் பெருத்து
வெடித்து எரிகின்றன,
விரிசல்கள் வழியே
இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு.

உருட்டிக் கொண்டு வரப்பட்ட
உடல் மழுங்கிய கூழாங்கற்கள்
நதியின் மடியில்
புரண்டு எழுகின்றன,
மலை முகட்டுகளை
எதிரொலித்துக் கொண்டு.

பருவ மாற்றத்தை
பழகிக் கொண்ட
தடித்த மரவுச்சியிலிருந்து
பழுத்து உதிரும் இலை,
காட்டின் பரிணாமத்தை
மாற்றி அமைக்கிறது.

வடிந்தது போக ஒதுங்கிய
மழைநீரில் நொதித்த கூரை
சொட்டிக் கொண்டிருக்கிறது
துளித்துளியாக.