சாக்லேட் துண்டு
கரிய பனிக்குல்லாவை தலையில் மாட்டிவிட
துரத்தி வரும் அன்னையிடமிருந்து
தப்பி ஓடுகிறாள், நீள்சுருள் தலைமுடிச் சிறுமி
வெறுமையான மதியப்பொழுதுகள் போல
உலர்ந்த ஓடுகளாக நின்றுகொண்டிருக்கும்
பெரியவர்கள் கனிந்து வளைகிறார்கள்.
போக்குவரத்து அதிகம் காணாத
அச்சாலையில்
எப்போதாவது ஒரு ஐஸ்க்ரீம் வண்டி வரும்.
குளிர்கால டிசம்பரில்
கிறிஸ்துமஸ் தாத்தா வண்டியும் வரும்.
குப்பை வண்டிகள் இரண்டு
வாரம் ஒருமுறை ஊர்ந்து போகும்
அவளுக்கான வாசல்கள் கொண்ட
பொன்னந்தி நிறத்து
பள்ளிக்கூட வண்டி வந்து நிற்கிறது
ஆர்ப்பரித்துச் சிரித்தபடி
வண்டியிலேறிப் போகிறாள்.
அவள் உதறிவிட்டுப் போன
சாக்லேட் துண்டையே
சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது
தேங்காய் துருவலைக் கொட்டியது போன்ற
புசுபுசுவென நாய்க்குட்டி.
oOo
பேப்பர் கொக்கு
மெல்ல மிளிர்ந்து சிமிட்டிவிட்டு
வெண்சாம்பல் சமுத்திரம் மேவ
உள்ளமிழ்ந்து போய்விடும்
செங்கனலை பார்த்துக்கொண்டு
மேஜையின் ஓரத்தில் அதிர்ந்தபடி
காத்திருக்கிறது பேப்பர் கொக்கு
தன் இறகுகளின் கசங்கலிலிருந்து
சுருக்கங்களை நீவிக் கொள்கிறது
மைக்கறையை வரைந்து
மேனியெங்கும் பூசுகிறது
கால் மாற்றி நின்று
கோணல் பார்வை பார்க்கிறது
ஒற்றை சிறகை விரித்து
உலகை புரட்டித் தள்ளுகிறது.
காற்றின் ஒரு விசிறலில்
கங்கு சீறி வீசும்
ஒரு நெருப்பில்
பற்றிக் கொண்டு
பறந்து விடலாம்
என நம்பிக்கையோடு
காத்திருக்கிறது பேப்பர் கொக்கு
மேஜையின் ஓரத்தில் அதிர்ந்தபடி
oOo
அலமாரி
பிய்ந்துபோன கோட்டு பித்தான்கள்
மூக்குடைந்த ரவிக்கை கொக்கிகள்
ஜோடியிழந்த சட்டைக்கை கப்ளிங்குகள் என
கண்ணாடிபுட்டி நிறைய இருக்கிறது
தொலைக்கவும் முடியாத
பொருத்தவும் முடியாத
பழைய நினைவுகளைப் போல
அறுந்து போனபோது
விடுபட்ட தொடர்புகளை
தேடி அலமாரியில்
காற்றிலாடும் உடுப்புகளிடையே
அவ்வப்போது உரசிப்பார்த்துவிட்டு,
குற்றவுணர்வில் கருத்துப்போய்
கண்ணாடி புட்டியிலே
தங்கிவிடுகின்றன,
இப்படித்தான் இற்றுவிழாமல்
அலமாரியை இழுத்துப்பிடித்து
வைத்துக் கொண்டிருக்கின்றன
ஒன்றுக்கும் உதவாத பழங்குப்பைகள்.
oOo