ஊருணிக்கரை
மகிழம் பூக்கள் விழுந்திருந்த
வேனில் கால இரவொன்றில்
ஈர வீச்சத்துடனான குளிர்தென்றல் வீசும்
ஊருணிக் கரையோரமாக
வேர்புடைப்பு அணைந்த
குழிந்த மென்தரை மீது
வெண்சீலைத் தலைப்பை
விரித்துப் படர்ந்தபடி
வியர்வை காற்றாடிக் கொண்டிருக்கும்
ஒற்றை நிலவின் ஒளி
மறைத்து வைத்திருக்கிறது
ஈரமண்ணில் வரைந்தபடி
விலகிச்சென்ற காலடித் தடங்களை
…
சாமானிய முகம்
உன் முகம் பிரதிபலிக்கும்
என் முகம் போல
அத்தனை குழப்பமில்லை
கொஞ்சம் குரூரமும், கொஞ்சம் சுயவாதையும்
கூர் பார்க்க காத்திருக்கும்
தீட்டிய சொற்களும்
நெடும்பயணமும் ஆழ்ந்த தனிமையும் விழையும்
குவிந்த உதடுகளில்
இட்டுவிட காத்திருக்கும் சிறு முத்தமும்
கொண்ட சாமானிய முகம்.
எளிமையும், பண்டிதர்கள் மட்டுமல்லாது சாமானியர்களும் புரிய வேண்டும் என்ற நோக்கத்திலேயும் இலக்கணங்களைக் கடந்து மரபுகளிலிருந்து விலகி புதுக்கவிதை புறப்பட்டது. ஆனால் இன்று நவீனத்துவம் பின் நவீனத்துவம் என்று, “,”, “.”, ஆரம்பம், முடிவு ஏதுமின்றி, எழுதியவர் உட்பட யாருக்குமே புரியாத புதிரான திசையில் அது பயணிப்பது வேதனை தரும் வினோதமே..