சிந்தாமணி – கன்யா சிறுகதை

கன்யா

தன்னைச் சுற்றிலுமசையும் ஒலிக்கோவைகளை அனுஷா பார்த்தாள். தான் ஒலியை எவ்வாறு பார்க்கிறோம் என்ற வியப்பை மீறி அது ஒளியென எழுவது அமானுஷ்யமாக இருந்தது. அதைத் தழுவி, நல்ல வார்த்தைகள் சொல்லி அகற்றிக் கொண்டே வண்ணங்கள் கொண்ட ஒளியாக அது பரிணமித்தது. இமைகளினூடாக பயணிக்கும் உருவமற்ற உயிரிகள். சப்தமில்லா ஒலி-ஒளிக் கோவைகள். தன் உடல் கனத்து, தான் எழும்ப முடியாமல் தவித்தாள். உளறலாகக் குழறி வார்த்தைகள் வந்தன. காலம் அறியாமல் அந்த பயங்கரத்தில் பயணிப்பதாக உணர்ந்தாள். உடல் முழுதும் வேர்வை பொங்கிக் கொண்டிருந்தது. இதில் பயப்பட ஏதுமில்லை என்று தனக்குத்தானே  சொல்லிக் கொண்டு, ‘ரவி,ரவி’ என அழைத்தாள்.

மிகச் சிரமப்பட்டு கண்களைத் திறக்கையில் ரவி அங்கே நின்றிருப்பது அவளைச் சமனப்படுத்தியது. ஆனால், அவன் சலனமற்று, ஒரு வார்த்தைகூட கேட்காமல் ஏன் என் படுக்கையில் ஏறுகிறான்? ஏன் என் கைகளைப் பற்றுகிறான்? ஏன் ஒரு மாதிரி சிரிக்கிறான்?

அனுஷா சக்தி அனைத்தையும் திரட்டி எழுந்து கொண்டாள். ரவியைப் பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது. தான் அவனை பயமுறுத்தி விட்டோம் என நினைத்தாள்.

‘ஒண்ணுமில்ல, ரவி, பயந்துட்டியா? ஏதோ கெட்ட கனவு. கொஞ்சம் வாட்டர் கொடேன்”

ரவி நகரவுமில்லை, கைகளை விடவுமில்லை.

‘சரி, நானே எடுத்துக்கிறேன். நீ போய்த் தூங்கு’

‘எனக்கு ஒண்ணுமில்லைடா. என்ன விடு, தண்ணி குடிக்கணும்டா’

‘அனுஷா, உனக்குப் புரியலையா? இல்லாட்டி நடிக்கிறயா?’

‘எனக்கு என்ன புரியணும்? நீ ஏன் என்னவோ மாரி பாக்கறே?’

‘சாயந்தரம் சொன்னது நினைவில்லையா?’

“என்னடா, சொன்ன?”

‘முதல்ல இந்த “டா”வை நிறுத்து. நான் இன்னொரு தரம் சொல்லி கேக்கணுமாக்கம் உனக்கு’

“ரவி, நானே ஏதோ சொப்னம் கண்டு பயந்துண்டு உக்காந்திருக்கேன். ரா வேளை, உனக்கு தூக்கம் வல்லைன்னா, போய் ஏதாவது படி. தண்ணீ கொடுக்காம என்ன ஒரு வாதம் பண்ணிண்டிருக்கே?”

‘அனுஷா, நீ எதுக்கும் கவலைப்படாதே. இந்த வயசுக்கு நம்மை எதுவும் கட்டுப்படுத்தாது.’

“டேய், படுபாவி, இவ்வளவு மோசமா நீ?”

‘என்ன மோசம் இதிலே? ஒரு முப்பது வருஷ சுழற்சிக்கு அப்புறம் பிறவியின் ஐடென்டிடி மாறிடும் தெரியுமா?’

“அதனாலே?”

‘நீ ஜாதகமெல்லாம் பாக்கறே. முப்பது வயசு வரைக்கும் லக்னத்திற்கு இம்பார்டென்ட். அப்புறம் ராசிதான்னு சொல்லுவ இல்லையா நீ?’

“என்ன சொல்ல வரடா? சாரி. என்ன வேணும் உனக்கு?”

‘நீதான் வேணும்’

“செருப்பு பிஞ்சிடும், ராஸ்கல். போடா உன் ரூமுக்கு. நாயே”

‘கத்தாதடி’

அனுஷாவின் உடல் நடுங்கிக் கொண்டேயிருந்தது. நாலு நாட்களாகவே ரவி சரியாகத்தான் இல்லை. ஆனால், விபரீத கற்பனைகளை வளர்த்துக் கொண்டு அவளையே இப்படியெல்லாம் கேட்பான் என்றால் யார் நம்பப் போகிறார்கள்?

படபடப்பு  தண்ணீர் குடித்தும் அடங்கவில்லை. இலக்கில்லாமல் விளக்கை  அணைத்தாள்; மீண்டும் பொருத்தினாள். படுக்கையிலிருந்து எழுந்து பாதி செய்து வைத்திருந்த மணல் ஓவியத்தைப் பார்த்தாள். அவள் செய்ததுதான்.

முதல் ஓவியம் ஒரு பாம்பும் தவளையும். பாம்பை பச்சை நிறத்திலும், தவளையை  வெளிர் பச்சை கலந்த கிரே நிறத்திலும் அமைத்திருந்தாள்.

இரண்டாவதில் பாம்பு அடர் நீலத்திலும், தவளை அடர்ந்த பச்சையிலும். ஆனால் தவளையின் பக்கவாட்டில் சிறகுகளும், அதன் கால்களில் காணப்பெற்ற கூரிய நகங்களும்… அவள் வரைந்ததுதான். ஆனால் எது இப்படி வரையத் தூண்டியது?

பாதி வரைந்திருந்த மூன்றாவதைப் பார்த்தாள். ஆவேசத்துடன் அதில் பாம்பை சிறுகச் செய்தாள், தவளையை கருட மூக்குடன் பெரிதாகவும் சிறகுகளோடும், நகங்களோடும் இப்பொழுது அமைத்தாள்.

‘தான் எந்த விதத்திலாவது ரவியைத் தூண்டினோமோ? தனக்குக்கூட இப்படியெல்லாம் தோன்றுமா என்ன? யாரிடம் கேட்பது? யாரிடம் சொல்வது?’

இரு நாட்களாக வீட்டில் அரவமில்லை. பயங்காட்டும் அமைதிதான்.

‘ரவி ஏன்  அப்படிக் கேட்டான்? இத்தனை வருடத் தனிமை அலுத்துவிட்டதா, திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் எதனால் இப்படித் தூண்டப் பெற்றான்? தன் தயவு அவனுக்கு எப்போதுமே தேவை என்ற சுயநலத்தால் உந்தப்பட்ட சூழ்ச்சியா, படிப்பிலும், சிந்தனையிலும் தன் இத்தனை வருடங்களைச் செலவிட்டுவிட்டு இன்று அவனின் சுய தேவைகளுக்குக்கூட என்னிடம் கேட்க நேரிடுகிறதே என்ற தன்னிரக்கமா, எனக்கும் கல்யாணம் ஆகாத நிலையில் மரபுகளை மீறி வெல்வதில் கிடைக்கும் நிறைவா,  கிட்டத்தட்ட அறுபது வயதான நிலையில் உடலை, உணர்வை புரிந்து கொள்ளும் முயற்சியா, மனப் பிறழ்வா?அனுஷா புரியாமல் தவித்தாள்.முற்போக்கான தன்னையே இது இப்படிப் பிரட்டிப் போடுமா? ஒருக்கால் நான் அதிகமாக வேஷம் போடுகிறேனோ? நியாயங்கள் எப்பொழுது மீறப்படுகின்றன? இதை நியாயம் என்ற வரைமுறையில் கொண்டு வர முடியாது. நியதிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.’ எண்ணங்களின் பளுவில் அனுஷா தவித்தாள்.

“பிறரை பாதிக்காத வகையில் நியதிகள் மீறப்படக்கூடாதா என்ன?” இப்படி ஓடியது ரவியின் சிந்தனை.

‘மனிதர்கள்தான் எத்தனை விதம்? யாரையுமே யாருமே தெளிவாகவோ, முழுதாகவோ புரிந்து கொள்வது இயலாத ஒன்றுதானோ? சந்தர்ப்பத்தைப் பொறுத்து நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் நடந்து கொள்கிறார்களோ? ஆனால், நல்லதும், கெட்டதும் எப்படித்தான் வரையறுக்கப்படுகிறது? பெரும்பாலோர் செய்வதால் ஒரு செயல் ஏற்றுக் கொள்ளப்படலாம்; அதனாலேயே அதை நல்லது என்று ஏன் நினைக்க வேண்டும்? அதே கோணத்திலேயே அதைக் கெட்டது என்று சொல்வதும் எவ்வாறு பொருந்தும்? ஒழுக்கம் மிகவும் அவசியம். கரைகளுக்குள் நடந்தால் ஆறு; கட்டுடைக்கும் ஆறுகள் இல்லையா என்ன?அதை அழிவு என்றே அறிகிறோம்; இயற்கையின் மறுபரிசீலனை என எண்ணம் சென்றாலே விளைவுகள் எப்படி இருக்கும்? விளைவையும், அழிவையும் நாணயத்தின் இரு பக்கங்களென வைத்தவர் யார்? அதை ஏன் சீண்டிப் பார்க்கக்கூடாது?’ இருதலைக்கொள்ளி எறும்பாக அனுஷா எண்ணங்களில் தவித்தாள்.

“ நான் என்ன சொல்லிவிட்டேன், இவள் இப்படி நடந்து கொள்கிறாள்? ரூமில் அடைந்து கொண்டு, குளிக்காமல், சமைக்காமல், சூன்யமான வீடாக இதை ஒரு இரு நாட்களில் செய்து விட்டாள். எனக்கே நான் வியப்பாக இருக்கையில் என் பக்க விஷயங்களை ஏன் பார்க்க மறுக்கிறாள்? இத்தனை மர்மமான பெண் என  நான் நினைக்கவில்லையே. நான் அறிந்தவள், விசாலமான மனது உள்ளவள். பரந்த பார்வையும், புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவள். அது அத்தனையும் போலி. எங்கிருந்தோ சீறிக் கொண்டுவரும் இந்த விலக்கம் என்னை அவள் முன் காமுகனாக நிறுத்திவிட்டது போலும். ஆனாலும், நான் என்ன  சரியாகத்தான் கேட்டேனா? அப்படியெல்லாம் பேச எனக்கு உரிமை உள்ளதா? முழு நினைவுடனும், என் உள் மனச் சம்மதத்துடனும்தான் நான் அவ்வாறு கேட்டேனா? மனிதனின் ஆதி இச்சை இந்த வயதில் வெளிப்பட்டு என்னை இம்சிக்கிறதா? அதற்கு அனுஷாதான் பதிலா? வயதும் அதிகம், வருமானமும் குறைவு என்ற நிலையில் வெளியே வடிகாலைத் தேட முடியாதென நான் போட்ட நாடகமா? இதன் மூலம் வெல்லும் ஆணை நிலை நிறுத்தும் பேரவாவா? என் இளமையில் நான் கட்டிக்காத்த தேஜஸ் இன்று என்னவாயிற்று? அதை அன்று கொண்டாடிய உலகம் இன்று என்னைப் பாராட்டாத ஏக்கமா? எத்தனை மனதைக் கீறிக் கொண்டாலும், அதை உரித்து உரித்துப் பார்த்தாலும் மெலிந்த, ஆனால் இடையறாத இந்த ஆசையை என்ன செய்ய?”

‘குமாரில பட்டரின் மனைவி ஏன் ஆதி சங்கரரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்? இரண்டு ஒன்றாகி அதுவும் பூஜ்யம் என்றாவதுதான் சுழற்சியின் நியதியோ? ரவி இன்றுவரை இப்படியா நடந்து கொண்டான்? எவ்வளவு கண்ணியம் கொண்டவன்? தன்னிடம் என்றில்லை, வேறு யாரிடமும் அவன் உண்மையான துறவு மனப்பான்மையில்தான் நடந்து கொண்டான். எனக்காவது ‘ஜோல்னா சுந்தரின்’ நட்பு இருந்தது. அது கசந்து தனிமையே இனிமை என நான் வாழ்கிறேன். அதுவும் இல்லாத ரவி, இப்பொழுது ஒரு பெண்ணை  இப்படியெல்லாம் கேட்கிறானோ? அதுவும் அவன் அறிந்த, நெருங்கும் நிலையில் உள்ள பெண் நான் என்பதாலா? என்னால் இதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? ஏற்க வேண்டாம், ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? புரிந்த பிறகு புரிய வைக்கும் முயற்சி அயர்ச்சியைத்தான் தரும். இது விபரீத விளையாட்டு. ஆம், விரோதமானது’

“நானும் அமைதியாக இல்லை,அவளும் அமைதியாக இல்லை. பரபரப்பற்ற, மெத்தனமான, என்ன ஒரு வாழ்க்கை இது? ஏதோ ஒரு ஆர்வத்தைத் தூண்டும் செயல், ஒரு சேலன்ஞ், ஒரு விபரீதம், ஒரு நிகழ்வு இதை எதிர்பார்க்கிறோம்ன்னு தோண்றது. அதை நான் ஒத்துக்கறேன். அவ மறைக்கிறா” ரவி தன் நினைப்பை தானே அருவெறுத்தான். “அவளும் அப்படியே நினைக்கிறாள், தன்னிடம் நடிக்கிறாள் என்று எப்படியெல்லாம் இந்த மனம் தன் பக்க நியாயத்தைப் பேசுகிறது. இப்படிக்கூட கீழே நழுவுமா தன் எண்ணம்?”ரவி செய்வதறியாமல் திகைத்தான்.

கண்ணை மூடி தியானித்தாலும் அமைதியில்லை. பிடித்த, படித்த நூல்கள்  இரசிக்கவில்லை. ஓவியப் பள்ளியில் அவன் படித்ததில்லை. ஆனால், பெண் ஓவியங்கள் வரைகையில் அவனுக்கு மாடல்கள் என்று சிலர் வருவார்கள் அப்பொழுதெல்லாம் அவன் சிறிதாவது சலனப்பட்டிருப்பானா? உடலை மீறிய உணர்வு ஆர்ப்பரித்து எழுகிறது இப்பொழுது. நிறைவடையாத ஏக்கத்திற்கு  இப்படியா அவன் பலியாகப் போகிறான்?

‘ஒரு ரிதமில் செல்லும் வாழ்வு பாதுகாப்பானது, ரவி. மனிதன் மட்டுமல்ல, பல பாலூட்டிகள் இந்த நியதியில் வாழ்கின்றன,’ என்று தானே ஆரம்பித்தாள் அனுஷா.

“என்றாலும், சில சிம்பென்சிகளுக்கு’எடிபஸ்’ இருக்கிறது.”

‘ஆனால்’இன்செஸ்ட்’ சகிக்க முடியாதது, ரவி’

“ரோமானிய வரலாற்றை, கிரேக்க ஆக்கங்களை படிக்காதவளா நீ? கிளாடியஸ் மணந்த அஃப்ரீனா அவன் அண்ணனின் மகள்.”

‘ முட்டாள், அந்தக் காலகட்டத்தில நாம் வாழல்ல இப்போ.’

“சில மனித வாசனைகள் மாறாது, அனு”

‘நீ படித்த ரிக் வேதம் இன்செஸ்டை பாவம்ன்னு சொல்லலையா?’

“பாவம், புண்ணியம் இவைகளின் இடைவெளி மிகவும் சன்னமானது. இப்போ பாரு, பூஜ்யத்தோட பூஜ்யம் கூட்டிப் பாரு, பூஜ்யம்தான் வரும்.”

‘கசன் தேவயானியை மணக்க சம்மதிக்கவில்லையே, ரவி?’

“ஆனால், அவள் நேசம் பொய்யில்லையே?”

“ஃபோஸ்போலின் தசரத ஜாதகா படிச்சவ தானேநீ”

‘எனக்கு நினைவில்லை’

“அது புத்தர்கள் எழுதிய இராமாயணத்தின் ஆங்கில மொழியாக்கம்”

‘அதை எதுக்கு இழுக்கற இப்ப?’

“நான் சொல்லப் போறதில்ல. இப்ப உனக்குப் புரியும்”

‘எனக்குப் புரிய எதுவுமில்ல’

“உனக்கு இஷ்டமில்லேனா அது வேற. சும்மா மாரல் அது இதுன்னு”

‘இந்த விவாதங்கள் முடிவடையுமா என்ன?’

“உனக்கு ஒரு கதை சொல்லவா?   நம்முடைய நாட்டுப் புறங்கள்ல சொல்லுவா” என்றான் ரவி.

‘உன் கட்சிக்கு  சார்பா சொல்லப் போற; சொல்லு, கேப்போம்’

“ஆதியில கடவுள் அல்லது இயற்கை அல்லது உனக்குப் பிடிச்ச ஒண்ணுன்னு வைச்சுக்கோ; ஆணும், பெண்ணுமா ஒன்னாத்தான் வந்தா இந்த உலகுக்கு; உன் கணக்குப்படி உறவுக் குளறுபடி ஆயிடும். சிவன் என்ன பண்ணாராம் தெரியுமா, பெரிய புயலைக் கொண்டு வந்தார். அவா அவா மரம், மலை, ஆறு போல பன்னிரண்டரை பொருட்கள் பின்னாடி பயந்துண்டு ஒளிஞ்சுண்டா. புயல் அடங்கித்து. பன்னன்டு குழு அப்படி உருவாயித்தாம். அந்த அரைக் குழு மூணாம் பாலினமாக நின்னுடுத்தாம். வேடிக்கையான பிரிவினை- நம்ப வைச்ச நாடகம்” என்றான் ரவி.

‘நடிப்பாவே இருக்கட்டுமே. நடிச்சு நடிச்சு நாம அதாஆயிட்றோம். பூவைப் பார். மகரந்தம், சூலகம் பக்கம் பக்கம் தான். ஆனா, வேறொரு பூவிலிருந்துதான் மகரந்தம் வந்து சேரும், ரவி’

பல நாட்களுக்குப் பிறகு ரவி ஒரு ஓவியம் வரைந்தான். மூன்று கண்கள்  மட்டும் இருந்த அதில் அடர் புருவத்தின் கீழே அமைந்திருக்கும் கண்கள் மூடியிருக்க அவைகளின் நடுவில் இருந்ததிலிருந்து அனலும், புனலும் பெருகியது.

தொடந்து வரையும் அனுஷா இரு ஓவியங்கள் வரைந்தாள்; சப்பாத்திக் கள்ளியில் முழு ரோஜா.

மற்றொரு ஓவியத்தில் மரச் சருகுகள் நிறைந்த வீதியில் நடுநடுவே காலியான மனைகள் இருக்க பூட்டிய வீடுகள் இரண்டு- ஒன்றின் முன் ஒரு முதிய வறியவன் நிறையாத பாத்திரத்தோடு கனவுகள் சுமந்து ஒரு வீட்டின் கதவைப் பார்த்திருக்கிறான்; மற்றொரு வீட்டின் முன் அவன் நிழல் விழுந்திருக்கிறது. அந்த நிழல் அவ்வளவு தொலைவு எட்ட வழியேயில்லை.

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.