ஐரா லெவினின் (Ira Levin), ‘எ கிஸ் பிபோர் டையிங்’ நாவலின் முதல் பத்தியில் தன் திட்டங்கள் கலைகின்றனவே என்ற ஆத்திரத்தில் தாடை இறுகி வலியெடுக்கும் அளவிற்கு உடலெங்கும் வெறியாலும், மன அழுத்தத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கும் முக்கிய பாத்திரத்தை சந்திக்கிறோம். தான் கருவுற்றிருப்பதாக அவன் காதலி அப்போதுதான் சொல்லி இருக்கிறாள். தன் மேல் அவள் சாய்ந்திருப்பதைச் சகிக்க முடியாமல் தள்ள வேண்டும் என்ற உந்துதலைக் கட்டுப்படுத்தி, பதற்றம் சிறிது குறையும்வரை அமைதியாக இருந்து விட்டு பேச -அக்குள் விரையில் நனைந்திருக்க, கால்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருக்க – ஆரம்பிக்கிறான். திருமணம் செய்வதைப் குறித்து எந்த தயக்கமும் இல்லை, ஆனால் அவள் கருவுற்றிருப்பது அவள் தந்தைக்கு தெரிந்தால் பெரும் பணக்காரரான அவர் அவளை ஒதுக்கி விடுவார். காதலி, அது குறித்து தான் கவலைப்படவில்லை என்கிறார். காதலனும் தனக்காக அதைச் சொல்லவில்லை, இருவருமே இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்காத நிலையில் பிறக்கப் போகும் குழந்தையை எப்படி நல்லபடியாக வளர்க்க? படிப்பு முடிந்தபின் முறைப்படி அவள் தந்தையைச் சந்தித்து மணம் முடிக்க அனுமதி கேட்டு, பின் திருமணம் நடந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? காதலி, ஏன் அந்த நிறைவேற முடியாத கனவுகளைப் பேசுகிறாய் என்று கேட்க, இப்போதும் அவை நிறைவேற முடியும் என்கிறான். கருக்கலைப்பு செய்ய மாட்டேன் என்று உறுதியாக காதலி சொல்ல, தொடர்ந்து அவளிடம் பேசி, மாத்திரைகள் வேலை செய்யவில்லை என்றால் இப்போதே திருமணம் செய்து விடலாம் என்று சம்மதிக்க வைக்கிறான்.
நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அப்பாத்திரத்தின் ஆளுமை வெளிப்பட்டு, எந்தச் சூழலிலும் தன்னிலை இழக்காதவன், தன் பேச்சினால் யாரையும் வசியம் செய்யக் கூடியவன் என்ற புரிதல் கிடைக்கிறது. எனவே அடுத்த அத்தியாயங்களில் காதலியைக் கொலை செய்ய அவன் திட்டமிட ஆரம்பிக்கும்போது, வியப்பு ஏற்படவில்லை என்றாலும், அதில் அவன் வெற்றி அடைகிறானா, எப்படி பிடிபடுகிறான் என்பதைத் தவிர வேறென்ன புதிதாக இருக்க முடியும், என்று கேள்வி வாசகனுக்கு எழக்கூடும்.
காதலனின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்கிறோமே தவிர அவன் பெயரை லெவின் வெளிப்படுத்துவதில்லை, முகமூடி போட்ட ஒருவன் நம் முன் நடமாடுவதை போல்தான் அவனை நாம் காண்கிறோம் என்பதையும், மற்ற பாத்திரங்களுக்கு அவன் முகமூடி அணிந்துள்ளான் என்பது தெரியாமல் இருப்பது மட்டுமே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் உணராதபடி நாவலை கொண்டு செல்லும் லெவின் முதல் பகுதியின் இறுதியில்தான் அதன் -அந்த காதலன் யாராக இருப்பான் என்ற கேள்வியை, அதுவரை அவனுடையை செயல்களில் ஆழ்ந்து இருக்கும் வாசகனை கேட்கச் செய்கிறார். வாசகன் பெரிதாக கவனிக்காமல் செல்லக்கூடிய சில விஷயங்களை சொல்லி அவற்றை பின்னால் மிகச் சரியாகப் பொருத்தி அதன் முக்கியத்துவத்தை, அதை -அதன் அர்த்தம் புரியாமல் – கவனித்திருந்தால் மகிழ்ச்சியும், அதில் ஒன்றுமில்லை என்று கடந்திருந்தால் வியப்பும் அடையச் செய்வதுடன் மர்ம நாவல்களின் ஒழுங்கை குலைக்கக் கூடிய இரண்டு அபாயகரமான விஷயங்களிலும் லெவின் ஈடுபடுகிறார்.
ஒன்று, தனக்கு (ஆசிரியருக்கு) மட்டும் தெரிந்திருக்கும் விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாசகனுக்கு வெளிப்படுத்தி/ உணர்த்தி, அவனை அதிரச் செய்வது அல்லது இனி இந்தக் கதையில் ஒன்றுமில்லை என்ற தட்டையான மனநிலைக்கு அவனைக் கொண்டு வந்த சில பக்கங்களில் மீண்டும் அவனை வசப்படுத்தி உள்ளிழுத்துக் கொள்வது. முதல் பகுதியில் நடக்கும் கொலைக்குப் பின் ஏற்படும் எதிர்பார்ப்பின்மையை, கொலைகாரன் யார் என்று தெரியாது என்ற உணர்தலினால் விலக்கி, இரண்டாம் பகுதியில் மீண்டும் ஒரு முடிச்சை உருவாக்கி, அதன் இறுதியில் வெளிப்படுத்தும் தகவல்- கொலை செய்பவனின் முகமூடி விலகும் தருணம்- ஒரு உதாரணம். அது மிகப் பெரிய திறப்பு என்றாலும், இத்தகைய நாவல்களின் முடிவாகவே- கொலைகாரன் யார் என்று தெரிந்துவிட்ட பின் என்ன சுவாரஸ்யம் – பெரும்பாலும் இருக்க முடியும் இல்லையா, ஆனால் அதற்குப் பின்னரும் கதையை நீட்டிப்பது என்ற தற்கொலை முடிவை எடுக்கும் துணிச்சல் லெவினுக்கு இருப்பதோடு மட்டுமில்லாமல் அதை வெற்றிகரமாக கொண்டும் செல்கிறார். (திருமணத்துடன் சுபமாக முடியும் காதல்/ தேவதை கதைகளை அதற்குப் பின்னான வாழ்கையையும் சித்தரித்து நீடிப்பதைப் போல)
இரண்டாவது, இனி தப்பிக்கவே முடியாது என்று நாம் எண்ணுமளவுக்கு ஒரு இக்கட்டை உருவாக்குவது. ஒரு பாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேறு பெயரில் அவன் குடியிருக்கும் இடத்தின் சொந்தக்காரரை -அவன் அங்கில்லாத நேரமாக பார்த்து -சந்திக்கச் செல்லும், பெரிதாக பிரச்சனை ஏற்பட முடியாத நிகழ்விலும்கூட இத்தகையை சிக்கலொன்றை உருவாக்கும் திறமை லெவினுக்கு உள்ளது. அப்படியொன்று உருவாகிய பின், அதை ஏனோதானோ என கடந்து சென்றால் வாசகனுக்கு அது அவனை வயப்படுத்த முனையும் மலிவான உத்தியாக மட்டுமே தோன்றி அதை விலக்கி விடுவான். ஆனால் லெவின் அதை தர்க்க ரீதியாக இயல்பான முறையில் அவிழ்ப்பது வாசகனை சில பக்க பதட்டங்களுக்குப் பின் ஆசுவாசமாக, அதே நேரம் தான் ஏமாற்றப்படவில்லை என்ற எண்ணத்துடன் மூச்சு விட வைக்கிறது.
நாவலின் முக்கிய பாத்திரம் தளராமல் முயற்சி செய்பவனாக இருப்பது குறித்து நாவலின் முதலிரு அத்தியாயங்களில் நமக்கு புரிதல் கிடைத்துவிட்டாலும், அப்பாத்திரத்தை நம் மனத்தில் இன்னும் துல்லியமாக கட்டமைக்கும் வகையல் அவ்வப்போது லெவின் அவனைக் குறித்து தகவல்கள் தந்துச் செல்கிறார். பெரிய சோகப் பின்னணியோ, பழிவாங்கும் காரணமோ இந்த பாத்திரத்திற்கு இல்லை. சிறிய கிராமமொன்றில் சாதாரண மத்தியத் தர குடும்பமொன்றில் பிறந்து வளர்பவன்தான் இவன். ஆனால் நீல நிறக் கண்கள், பொன்னிற தலைமுடி என்று மரபணு குலுக்கல் சீட்டில் வென்றிருக்கும் அவன் சிறு வயதிலிருந்தே மற்றவர்களை எளிதில் தன் பால் ஈர்த்து தான் பிறந்த அந்த சிறிய இடத்தின் நாயகனாக வளர்வது, அவனுடைய தன்மோகம் (narcissism) குறித்த உணர்தலை நமக்குத் தருகிறது. சிறிய குளத்தில் மிகப் பெரிய ஒற்றை மீனாக விளங்கியவன், பெரு நகரத்திற்கு வரும்போது தான் அப்படி ஒன்றும் மிகவும் தனித்துவம் கொண்டவன் அல்ல என்று ஏற்படும் புரிதல் (தன்னை விட முதிர்ந்த பணக்கார விதவை பெண்ணுடன் உறவு ஏற்பட்டதில் உண்டாகும் பெருமிதம் அப்பெண் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றும் இளைஞர்கள் வரிசையில் ஒருவன் தான் என அவனுக்குத் தெரியவருவது) அதனால் சீண்டப்படும் அவனுடைய அகங்காரம் ஆதார குணமான சுயமோகத்துடன் ஒன்றிணையும்போது, அதன் பின் அவன் மனதளவில் ஒரு முடிவுக்கு வருவதும், நிஜத்தில் அதை செயல்படுத்துவதும் அவனுடைய ஆளுமையின் மற்றொரு வெளிப்பாடாகவே, இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.
அவனுக்கும் அவன் தாய்க்குமான உறவிலும் வாசகன் யூகிக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. கணவனின் எதிர்காலம் குறித்த பல கனவுகளுடன் திருமணம் செய்து கொண்டு பெரும் ஏமாற்றமடைந்த அவன் தாய், அதை வெளிக்காட்டவும் தயங்குவதில்லை. அந்த எதிர்பார்ப்புக்களை மகனிடம் திருப்புகிறார் என்று லெவின் சுட்டுகிறார். அவருடன் அவ்வப்போது பிணக்கு கொண்டாலும் தான் ஒரு நல்ல நிலைக்கு வரும் சூழல் ஏற்பட்டவுடன் தாயை அழைத்து தன் தற்போதைய நிலைமையை பார்க்கச் செய்வது, நம் பாத்திரம் எந்தளவிற்கு தாயின் எதிர்பார்புக்களால் உந்தப்பட்டான், எப்படியேனும் அவர் முன் வெற்றிகரமான மனிதனாக உருவாக ஆசைப்பட்டானா என்று யோசிக்க வைக்கிறது. இவை அவன் செய்கைகளை நியாயப்படுத்துவதாக அல்லாமல் அவனுடைய ஆளுமை உருவாக்கத்திற்கான காரணிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் வாசகனைச் சிந்திக்க வைப்பவையாக மட்டுமே நாவலில் உள்ளன.
சதுரங்கத்தில் சிப்பாய்கள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி ராஜாவை நெருக்குவதைப் போல் நாவலை இறுதி வரை கொண்டு செல்லும் லெவின், சிப்பாய்கள் ஆட்ட விதிகளை மீறி நாலைந்து கட்டங்கள் தாவிச் செல்லும் சில நிகழ்வுகளை வைப்பது அதுவரை இருந்த நாவலின் போக்கிற்கு நேர் எதிர்மாறாக, சற்றே ஏமாற்றமளிப்பதாகவும்கூட இருந்தாலும், ‘ழானர்’ எழுத்தின் எல்லைகள் இவை என்றளவில் அவற்றை கடந்து செல்லலாம். நாவலில் இறுதியில் இன்னொரு மீள முடியாததாக தோன்றும், ஆனால் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு சந்திப்பை/ கேள்வியை உருவாக்கி முடிப்பதின் மூலம் அதையும் சரி செய்து விடுகிறார். இந்த சிக்கலை லெவின் எப்போதும் போல் எளிதாக அவிழ்த்து விட்டிருப்பார், ஆனால் அவ்வாறு செய்யாமல் அதன் பொறுப்பை வாசகனிடம் விட்டு விடுவதால் நாவல் முடிந்த பின்பும் அவன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.
பின்குறிப்பு:
நாவலை படிக்கும் போது, தொண்ணூறுகளின் முதற்பகுதியில் வெளிவந்த, இன்றைய ஹிந்தி திரையுலகின் பெருநட்சத்திரங்களில் ஒருவர் அந்த இடத்திற்கு செல்லும் பாதையில் அடியெடுத்து வைக்க உதவிய ஹிந்தி திரைப்படம் சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்த நாவலை அதிகாரபூர்வமாக படமாக்கிய ஆங்கில திரைப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலான அப்படத்தை பார்த்திருந்தாலும், முற்றிலும் புதிய, அதைவிட மேம்பட்ட அனுபவத்தை தரும் இந்த நாவல் தருகிறது. அதற்கு காரணம் நாவலின் தரம் மட்டுமல்ல ஹிந்தி திரைப்படத்தின் சாதாரணத்தன்மையும்தான்.