ஜானி சொன்ன பொய்

– ஸ்ரீதர் நாராயணன் –

johny_johny_yes_papa

‘ஜானி! ஜானி!’ – மூன்றரை வயது மழலையோடு குழந்தை பாடுகிறாள். அவன் திரும்பிப் பார்த்து புன்னகைக்கிறான். குழந்தை தொடர்ந்து பாடுகிறது.

‘யெஸ் பாப்பா’

‘ஈட்டிங் சுகர்?’

‘நோ பாப்பா!’

அடுத்து வரி தவறிப் போய் மீண்டும் ‘ஈட்டிங் சுகர்,…’ என்று சொல்லிவிட்டு அழுத்தமாய் ‘நோ பாப்பா’ என்று சொல்ல, அப்பா இடைமறிக்கிறான்.

‘ம்ஹூம்ம்… டெல்லிங் எ லை’

குழந்தை சிரிக்கிறது. ‘நோ பாப்பா’

‘ஓப்பன் யூர் மௌத்…. ஹா… ஹா… ஹா…’ உற்சாகமாய் சிரிக்கிறாள். அப்படியொரு கெக்கலிப்பு அந்த சிரிப்பில்.

அப்பா சற்று யோசனையோடு ‘ஹா…ஹா…ன்னு வாயைத் திறந்து ஜானி காட்டும்போது, வாயில என்னம்மா இருந்தது?’ என்று கேட்கிறான்.

குழந்தைக்கு புரியவில்லை. ‘கடைசியில ஜானி வாயைத் திறந்தான் இல்லியா… வாயில சர்க்கரை இருந்ததாம்மா?’

சட்டென ‘நோ…’ என்கிறாள்.

‘அப்ப ஜானி பொய் சொல்லலையா?’

‘நோ!’

‘ம்ம்ம்…’ அப்பா மீண்டும் யோசனையோடு, ‘அப்புறம் எதுக்கு அவன் அப்பா சந்தேகமா கேக்கிறார்?” அவனுக்கே அது சந்தேகமாகத்தான் இருக்கிறது.  “அவன் முன்னாடி சக்கரை டப்பா இருந்ததா?’

அவள் பதில் சொல்லாமல் அடுத்த ரைம்ஸ் தொடங்கும் உத்தேசத்தில் இருக்கிறாள். குழந்தையின் கவனத்தை ஈர்க்கும்விதமாக அப்பா மீண்டும் ‘ஜானி ஜானி’ என ராகமாக பாடத் தொடங்க.

இப்பொழுது அவள் திரும்பிப் பார்த்து சிரிக்க, அப்பா தொடர்கிறான். ‘அப்படின்னு ஜானியோட டாடி கூப்பிட்டார் இல்லையா?’

குழந்தை பிரகாசமாக ‘யெஸ் பாப்பா’

‘ஈட்டிங் சுகர்?’ ‘நோ பாப்பா?’ மீண்டும் ஒருமுறை முழு ரைம்ஸும் பாடி முடிக்கிறார்கள்.

‘ஹா ஹா ஹா’ என்று குழந்தை உரக்க சிரிக்க, அப்பங்காரன் மீண்டும் அதே கேள்வியைப் போடுகிறான்.  குழந்தையிடம் உரையாடுகிறானா இல்லை அவனுக்கு அவனே உறுதிபடுத்திக்கிறானா என்று அவனுக்கே குழப்பம் தோன்றி மறைகிறது.

‘அப்ப ஜானி வாயில சுகர் இருந்ததா?’

கேள்வியை எதிர்பார்த்த மாதிரி ‘நோ’ என்று அழுத்தம் திருத்தமாக குழந்தை மறுத்துவிடுகிறாள்.

குழந்தை சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பாட்டின் முடிவில் ஜானி வாயில் என்ன இருக்கிறது என்று சொல்லப்படவில்லை. ஆனால் பாட்டைப் பாடும் எல்லோருக்கும் முடிக்கும் தருவாயில் வரும் சிரிப்பின் பொருளாக, ஜானி கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டான் என்றுதான் தோன்றுமோ… அப்படித்தானே புத்தகங்களில் எல்லாம் எழுதித் தீர்க்கிறார்கள்.  கூடவே தவறாமல் ஒரு சர்க்கரை டப்பாவையும் வரைந்து விடுவார்கள். இல்லையென்றால் அப்பாக்காரன் எதற்கு, ‘சர்க்கரை சாப்பிடுகிறாயா’ எனக் சந்தேகமாகக் கேட்கப் போகிறான்?

அப்பன்காரன், ஒரு தீர்மானத்தோடு மீண்டும் குழந்தையை அணுகுகிறான்.

‘ஜானி எங்கே இருந்தான்? கிச்சன் டேபிளிலயா? டைனிங் டேபிள்லயா?’

குழந்தை வேகமாகச் சொல்கிறாள், ‘ஜானி கூலுக்கு போயிட்டான்’

‘சரி.. ஜானி ஸ்கூலுக்குப் போயிட்டான். திரும்பி வந்திட்டானா… அப்ப டாடி அவனைப் பாக்கிறார் இல்லயா?’

‘டாடி ஆபிசுக்கு போயிட்டார்’

அப்பா புன்னகைக்கிறான். குழந்தையின் விவரிப்பு அவனையும் உள்ளிழுத்துக்கொள்கிறது.

ஆமாமாம், ஜானி காலைல ஸ்கூலுக்கு போயிட்டான். அப்பா ஆபிசுக்கு போயிட்டார். அப்புறம் அண்ணா மாதிரி த்ரீ ஃபோர்ட்டிக்கு திரும்பி வந்தானா? அப்போ என்ன பண்ணான்?’

‘டாய் (Toy) வச்சு பிளே பண்ணிண்டிருக்கான்’ குழந்தை தீர்மானமாக சொல்கிறாள்.

‘டாய் பிளே பண்ணிட்டிருந்தா அப்பா ஏன் சக்கரை சாபிடறயான்னு கேக்கப் போறார்?’ குழந்தையை கார்னர் செய்துவிட்ட உற்சாகத்தோடு பேசுகிறான் அப்பா.

குழந்தையும் ஏதோ புரிந்து கொண்டவள் போல, ‘வாய்ல கை வச்சிட்டிருந்தான்’ என்கிறாள்.

‘வெறும் கையத்தான் வச்சிட்டிருந்தானா? அப்பா சந்தேகப்படறதுக்கு எதுனா இருக்கணுமே… அப்பா ஆபிஸ்ல இருந்து திரும்பி வரும்போது, ஜானி டைனிங் டேபிள்ல சக்கரை டப்பாவோடு உக்காந்திருக்கான். அதான் அவர் சந்தேகமா சக்கரை சாப்பிடறயான்னு கேக்கறார்… ‘

சற்று இடைவெளிவிட்டு, ‘அப்போ ஜானி சிரிக்கும்போது வாயில சக்கரை இருந்ததா?’ ஓரக்கண்ணால் குழந்தையை பார்க்கிறான்.

‘நோ’  மீண்டும் அதே அழுத்தம். அந்த மூணு வயசு மனசுக்குள் இவ்வளவு அழுத்தம் எப்படி வந்தது… என ஆச்சரியமாக இருக்கிறது.  ஜானிக்கும் அதே வயசுதான் இருக்க வேண்டும்.  அவள் சொல்படி ஜானி சும்மா இருக்கும்போதே அந்த அப்பன்காரன் ஜானியை குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டானோ… இருக்கலாம். அந்த இறுதி சிரிப்பு அப்பாவை ஏளனப்படுத்துவதாகக் கூட இருக்கலாம்.  ‘ஹாஹாஹா, நான் சக்கரயே சாப்பிடல… நல்லா ஏமாந்தியா’ என்ற ஏளனமான கெக்கலிப்பு.

‘உனக்கு சாக்லேட் பிடிக்குமா?’

‘யெஸ்,’ பிரகாசமாக பதில் வருகிறது.

‘ஜானிக்கும் பிடிக்கும்தானே’

‘யெஸ்’

‘டாடி மம்மி பாக்காதபோது டேபிள்லேந்து எடுத்து சாப்பிட்ருவானா?’

குழந்தைக்கு ஜானியின் அந்த குறும்பு பிடித்திருக்கிறது.

‘அப்பா வரும்போது சந்தேகப்படறா மாதிரி சக்கரை டப்பாவோடு உக்காந்திருக்கான். எடுத்தவுடன சக்கர சாப்பிடறியான்னு கேக்கறார் பார். ஜானிக்கு உன்ன மாதிரியே திருடி சாப்பிடுவானா இருக்கும்’

குழந்தையைப் பார்த்து சிரிக்கிறான். அவள் பதில் சொல்லவில்லை.

‘அப்பா திரும்பி திரும்பிக் கேட்டோன்ன… ஜானி கையும் களவுமா மாட்டிக்கிறான். வாயத்தொறந்து பாத்தா அம்புட்டும் சக்கரை’ குழந்தை புன்சிரிப்போடு அப்பாவைப் பார்க்கிறாள்.

தான் சொன்னது அவளிடம் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்ற சந்தோஷத்தோடு குழந்தையை அப்படியேத் தூக்கிச் சுற்றியபடிக்கு, “ஆடும் மாடும் பங்கரை. அம்மையார் பாட்டி சக்கரை… “ என்றுக் குதிக்கிறான் அப்பா.

இப்போது குழந்தையும் சேர்ந்து சிரிக்கிறாள்.

‘ஹா…ஹா…ஹா…!”

ஜானியின் சிரிப்பில் இருக்கும் அதே கெக்கலிப்பு அவளிடத்திலும்.

– ஸ்ரீதர் நாராயணன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.