அறம் சிறுகதைகள் – இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை

வெ. சுரேஷ்

நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே புத்தக வாசிப்பு பழக்கம் கொண்டவன். இரண்டாவது, மூன்றாவது படிக்கும்போதே முத்து காமிக்ஸ், அம்புலிமாமா  ஆகியவற்றைப் படித்த நினைவிருக்கிறது. பலே பாலுவும்  இரும்புக்கை மாயாவியும் என் மிக இளமை நினைவுகள். இது அப்படியே வளர்ந்து ஒரு 18 வயதிலிருந்து தீவிர இலக்கியம் என்ற  பிரிவிலிருந்த புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அது இன்றும் தொடர்கிறது. ஆனால் ஒருபோதும் படித்ததைக் குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றோ அதைப் பற்றி எழுத வேண்டும் என்றோ  தோன்றியதே இல்லை.

பிறகு சென்னையில் பணியாற்றும்போது அமைந்த ரூம் மேட்ஸின் சகவாச தோஷத்தால் எக்ஸ்பிரசுக்கு இரண்டொரு வாசகர் கடிதங்கள் எழுதி பிரசுரமாயிற்று, அதிலேயே பரம திருப்தி அடைந்து அதோடு எழுதுவதை விட்டாயிற்று, எழுதும் நேரத்தில் ஏதாவது படிக்கலாம் என்றே தோன்றும். எத்தனையோ நண்பர்கள்  நீண்ட உரையாடல்களுக்குப் பின், ‘என்னிடம் இப்போ பேசியதை எல்லாம் எழுதினால் என்ன?” என்றும், ‘அவசியம் எழுத வேண்டும்,’  என்றும் சொன்னதுண்டு. இருந்தாலும் சோம்பலும் எழுதும் நேரத்தில் படிக்கலாம் என்ற ஆசையும் என்னை எழுத விடவில்லை  எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவது குறித்தும் ஒரு தயக்கம்  இருந்தே வந்தது. சுஜாதா வேறு ஒரு நல்ல வாசகன் என்பவன் வாசகர் கடிதம் எழுதவோ எழுத்தாளனை நேரில் சந்திக்கவோ மாட்டான்  என்று எங்கோ எழுதிவிட்டார்.

பிறகு   2008ல் ஜெயமோகனின் வலைப்பூ அறிமுகமாகியது. பிறகு 2010ல் அவரை கோவையில்  நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருடனான உரையாடலும்  அவரது தளத்தில் வந்த கேள்விகளும்  அதற்கு அவர் அளித்த பதில்களின் முறையும் என்னை கவர்ந்தன. 2010 மே  மாதம் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். உடனே பதிலுடன் அவர் தளத்தில் வந்தது. அது ஒரு துவக்கம் என்று சொல்லலாம்.

பின் 2011 ஜூன் மாதம் இணையத்தில் எழுதும் ஒரு நண்பரின் அறிமுகம் கிடைத்தது. ஆச்சரியம் என்னவென்றால் நானும் அவரும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் ஒரே அலுவலகத்தில் சேர்ந்து, ஒரே பகுதியில், தேனாம்பேட்டையில், இருந்தபோதிலும்  ரெண்டு பேரும் கோவைக்காரர்கள் என்றபோதிலும் , 2011ல் தான் முறையாக அறிமுகம் ஆகி பழக ஆரம்பித்தோம். இருவருக்கும் இலக்கியத்தில் இருந்த  ஆர்வம் காரணமாக  நெருக்கமானோம். அனால் நண்பர் அப்போதே ஒரு வலைப்பூ வைத்திருந்தார். நிறைய எழுதக்கூடியவர். அவர்தான் என்னை விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி எழுதச்சொல்லி வந்தார்.

அந்த சமயத்தில்தான் காவல் கோட்டம்  நாவலுக்கு  சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அந்த நாவலைப் பற்றி ஏற்கெனவே அவரிடம் நான் விவாதித்திருந்தேன். அதை அப்படியே எழுதிக் கொடுங்க, என்றார் நண்பர் .நான் எழுதிக் கொடுக்க நண்பர் கணினியில் டைப்  செய்து பண்புடன் இணைய இதழில் என் முதல் கட்டுரை வெளிவந்தது.

பிறகு ஆதவன் இறந்து 25 ஆண்டுகள்  நிறைவடைந்ததை ஒட்டி  சொல்வனம் இதழில் ஆதவன் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அதன் பிறகுதான் ஏற்கெனவே ஜெயமோகனின் தளத்தில் வந்தபோது படித்திருந்த அறம்  சிறுகதைகளை புத்தக வடிவில் மொத்தமாக படித்தேன். நண்பரிடம் அதைப்பற்றி பேசிகொண்டிருந்தபோது அப்படியே ஒரு கட்டுரை எழுதும்படி சொல்லி அடிக்கடி நினைவூட்டி என்னை அக்கட்டுரையை எழுதி முடிக்க வைத்தார். ஒரு இணைய இதழில் வெளிவர வேண்டிய அக்கட்டுரை ஏனோ அந்த இதழில் வரவில்லை. அதன் பிறகு யாருக்கும் அதை நான் அதிகம் காட்டவுமில்லை, சில நெருங்கிய நண்பர்களைத் தவிர.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதியது. அப்போதிருந்த அந்த மனநிலையில் இப்போதும் பெரிய மாற்றமில்லை. அதனால் அப்படியே போட்டிருக்கிறேன். கொஞ்சம் பெரிய கட்டுரைதான். எனக்கே இவ்வளவு பெரிய கட்டுரை என்னால் எழுத முடியும் என்று வியப்பை தந்த ஒன்று.

இனி கட்டுரை….

oOo

ஜெயமோகன் தன் வலைதளத்தில் சென்ற 2011 ஜனவரியில் ‘அறம்’ என்ற சிறுகதையில் தொடங்கி வரிசையாக ஒரு ஒன்றரை மாதத்துக்குள் 12 (‘மெல்லிய நூல்’ என்ற சிறுகதையையும் சேர்த்தால் 13) சிறுகதைகளை எழுதி வெளியிட்டார். இந்தச் சிறுகதைகள் அனைத்தும் ‘அறம்’ என்ற மையச்சரட்டில் கோர்க்கப்பட்டவை என்று சொல்கிறார் ஜெயமோகன். உண்மை மனிதர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் என்றும் சொல்லப்பட்ட இந்தக் கதைகள் அவரது இணையதள வாசகர்களுக்கு அவ்வாண்டின் மிகப்பெரிய நிகழ்வாக இருந்தன. அவரது வாசகர் வட்டத்தையும் தாண்டிப் பலர் இக்கதைகளுக்காகவே ஜெயமோகனின் வலைத்தளத்துக்குச் சென்று அவரது எழுத்தை வாசிக்கத் துவங்கினர்.

இக்கதைகளுக்கான எதிர்வினைகள் அவரது தளத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு, தொடர்ந்து விவாதிக்கப்பட்டன- இது அச்சுப்பிரதியில் கிடைக்காத, ,இணையத்தில் மட்டுமே உள்ள வசதி. இந்த எதிர்வினைகள் இக்கதைகள் குறித்த நம் எண்ணங்களை மற்ற வாசகர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு நம் புரிதலைச் செழுமையாக்கிக் கொள்ள உதவின. ஆனால் அதே சமயம் ஜெயமோகனின் தளத்தில் பதிப்பிக்கப்பட்ட எதிர்வினைகளும் அவற்றையொட்டிய விவாதங்களும் இக்கதைகள் குறித்த நம் தனிப்பட்ட கருத்து என்ன என்பதையே மயங்க வைப்பதாகவும் இருந்தன என்பதையும் சொல்ல வேண்டும். இதற்கு அஞ்சி, எதிர்வினைகளை வாசிப்பதையே தவிர்த்து விடலாம் என்று முடிவு செய்தாலும் அது சாத்தியப்படுவதாயில்லை. பல கடிதங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கண்ணீரை தாராளமாகச் செலவழித்து எழுதப்பட்டிருந்தாலும் சில எதிர்வினைகள் உண்மையாகவே சிறந்த வாசிப்பு அனுபவத்தை உணர்த்துவனவாக இருந்தன. அவற்றைத் தவிர்ப்பது எளிதாக இருக்கவில்லை.

இன்று, இந்தப் பரபரப்பு எல்லாம் அடங்கிய நிலையில் இக்கதைகளை ஒட்டு மொத்தமாக ஒரே புத்தகமாகப் படித்து முடித்தபின் எனக்குள் எழும் எண்ணங்களையும், தீவிர இலக்கிய வாசகர்களாக உள்ள சில நண்பர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களையும் ஒட்டியே ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பு குறித்த என் பார்வையைப் பதிவு செய்கிறேன்.

அறம் என்றால் என்ன என்று கேட்டால், “அறன் எனப்படுவது யாதெனின் பிறர்க்கின்னா செய்யாமை,” என்ற ஒரு வரி மனதில் உடனே ஓடுகிறது. ஆனால் அதுதானா அறம்?அறம் என்பது என்ன என்பதை வரையறை செய்வதே அடிப்படையில் மிகக் கடினமான ஒன்று. வடமொழியின் ‘தர்மம்’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக ‘அறம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொண்டால் சில கேள்விகள் எழுகின்றன. ‘தர்மம்’ என்ற சொல்லின் பொருளை வரையறை செய்வதிலேயே சில பிரச்சினைகள் உள்ளன என்ற நிலையில் அதைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதில் உள்ள சிரமங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு தர்மம் மிக சூட்சுமமானதொன்று என்று பீஷ்மர் பாஞ்சாலிக்கு பதிலுரைப்பது நினைவுக்கு வருகிறது. தர்மம் என்பதேகூட சாமானிய தர்மம், விசேஷ தர்மம், ஆபத் தர்மம், சுய தர்மம் போன்ற பல பகுப்புகளாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அது தவிர தனிமனித தர்மம், பொது தர்மம் என்பதெல்லாமும் உண்டு. ஜெயமோகன் தன் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில், ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்று உண்டா? என்று கேட்பதையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தக் கேள்விகளின் பின்னணியில் ‘அறம்’ சிறுகதைகள் வாசிக்கப்பட வேண்டியதாகிறது.

இக்கதைகளிடையே உள்ள ஒற்றுமை என்ன என்று பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது: இவை அனைத்துமே உண்மையாகவே வாழ்ந்த, நாம் அனைவரும் அறிந்த, அறிந்திராவிட்டாலும் முயன்றால் அறிந்து கொள்ளக்கூடிய, சமகால அல்லது சமகாலத்துக்கும் சற்றே முந்தைய வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட மனிதர்களை நினைவூட்டும் பாத்திரங்களைக் கொண்ட கதைகள்,  ஆசிரியரே நேரடியாக நம்மிடம் சொல்லும் கதைகள். அதற்கு மேல்,  அவர்கள் தங்கள் வாழ்வில் உறுதியாக நம்பிய,  கடைபிடித்த அறம் என்ற உணர்வை, பொருளைத் தம் மையச் சரடாய் கொண்ட கதைகள் என்று கூறலாம்.

இக்கதைகளின் வடிவம் நவீனத்துவச் சிறுகதைகளிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டவை. என்னைப் பொருத்தவரையில் சில கதைகளை- யானை டாக்டர், வணங்கான், நூறு நாற்காலிகள், ஓலைச் சிலுவை, ஆகியவற்றை அவற்றின் அளவைக் கொண்டு குறுநாவல்கள் என்றே சொல்லலாம். ஆணால் இவை ஏன் குறுநாவல்கள் அல்ல என்பதற்கான விளக்கத்தை ஜெயமோகனே ‘யானை டாக்டர்’ சிறுகதைக்கான எதிர்வினையில் அழகாகச் சொல்லியிருக்கிறார்: இந்தக் கதைகள் அனைத்துமே நேரடியாக, யதார்த்த பாணியில் சொல்லப்பட்டவை. அதனாலேயே தங்கு தடையின்றி சரளமாகப் வாசிக்கப்படக் கூடியவை. இவற்றில், தனி நூலாக வெளியிடப்பட்ட ‘யானை டாக்டர்’, தீவிர வாசிப்புப் பழக்கமே இல்லாத பலரையும் வசீகரித்ததை நானே நேரடியாகக் கண்டிருக்கிறேன். இதற்கு இந்தக் கதைகளின் நேரடித் தன்மையே காரணம்.

இவற்றுக்கிடையே பொது ஒற்றுமை உண்டு என்று சொல்லப்பட்டாலும், ஒரே தொகுப்பில் இப்போது இந்தக் கதைகளைப் படித்து முடித்தபோது இவற்றின் உள்ளடக்கம் சார்ந்து மூன்று வகைகளாகப் பகுத்துக் கொள்ள முடியும்  என்று தோன்றுகிறது. அறம், சோற்றுக் கணக்கு, தாயார் பாதம் ஆகிய மூன்று கதைகளையும் ஒரு வகையாகவும், வணங்கான், நூறு நாற்காலிகள், யானை டாக்டர், கோட்டி மற்றும் உலகம் யாவையும் ஆகிய ஐந்து கதைகளை இரண்டாம் வகையாகவும் மத்துறு தயிர், பெருவலி மற்றும் மயில் கழுத்து ஆகிய மூன்று கதைகளை மூன்றாம் வகையிலும் பிரித்துக் கொள்கிறேன்.

முதல் வகையில் உள்ள அறம், சோற்றுக் கணக்கு, தாயார் பாதம் ஆகியவற்றின் பொதுவான அம்சமாக நான் இதைக் காண்கிறேன்: தனிமனிதர்கள் தம் வாழ்வில் கடைபிடிக்கும், அல்லது கடைபிடிக்கத் தவறும் அறத்தை இவை பேசுகின்றன. இங்கு, ‘மற்றவர்களுக்கு நியாயமாக நடந்து கொள்வது,’ என்பதையே அறம் என்று பொருள் கொள்கிறேன். இக்கதைமாந்தர்களின் வாழ்வில் அவர்களைச் சுற்றியுள்ள சமூகமோ, அல்லது சமூகத்தின்மீது அவர்களோ நேரடியாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இங்கு நான் இந்தக் கதைகளின் சுருக்கத்தை சொல்லப் போவதில்லை. அது, கிட்டத்தட்ட தன் படைப்பாற்றலின் உச்சத்தில் நின்று முழு வீச்சில் இக்கதைகளைப் படைத்திருக்கும் ஒரு பெருங்கலைஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்காது. வாசகர்கள் இக்கதைகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

‘அறம்’ சிறுகதையில் அறம் என்ற சொல் இரு வகைகளில் பொருள் கொள்ளப்படுகிறது. ஒன்று, தர்மம். மற்றொன்று, கையறு நிலையில் நிற்கும் ஒரு படைப்பாளி ஒரு அறமீறலுக்கு எதிராக ‘அறம் பாடும்’ செயல். இந்த அறம் அழிவுக்கானது, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அறம் பாடுதல் என்ற மரபைச் சேர்ந்தது. தன் படைப்புக்கான சன்மானம்- உழைப்புக்கான கூலி என்றும் கொள்ளலாம்- மறுக்கப்படும்போது, அப்படைப்பாளி அதை மறுக்கும் பதிப்பாளர் மீது அறம் பாடுகிறான். இது ஒரு அறம். அதன்பின் அப்பதிப்பாளரின் மனைவி வலியுறுத்தும் அறம். இந்தக் கதையை அந்த எழுத்தாளரே நேரடியாகச் சொல்வது போல் அமைத்திருப்பதில் அவர் சார்ந்த தஞ்சை வட்டார வழக்கைப் பேச நல்லதொரு களம் அமைந்து ஜெயமோகனின் நடையின் பன்முகப் பரிமாணம்  அதில் வெளிப்பட வாய்ப்பு கிடைக்கிறது.

நிதானமான துவக்கம், நடுவில் விழும் அழுத்தமான முடிச்சு, முடிவில் ஒரு பெரிய மன எழுச்சியூட்டும் உச்சம் என்று மிகக் கச்சிதமான சிறுகதை அமைப்பைக் கொண்ட கதை அறம். இந்தக் கதையின் பாணியே மயில் கழுத்து, தாயார் பாதம் ஆகிய கதைகளிலும் தொடர்கிறது.

தாயார் பாதம், தஞ்சை மாவட்டத்தில் ஒரு குடும்பத்துக்குள் நிகழும் கதை. காலம்காலமாக குடும்ப அமைப்பில் தன் சுயத்தை இழக்கும் பெண்ணின் கதை. ராமன், பாலு என்ற இரு நண்பர்கள் குமரிக்கரை பாறையில் இருக்கும் ஒற்றைப் பாதத் தடத்தைக் குறித்தும் ராமனால் பாடமுடியாமல் போனதைக் குறித்தும் பேசிக் கொள்வதாக எழுதப்பட்டிருக்கும் கதை. ராமனால் பாட முடியாமல் போனதற்குக் காரணத்தைச் சொல்லும் போக்கில் அவரது குருவான பாட்டனாரின் அறம் மீறியச் செயலொன்றைக் கூறி அதனால் பாதிக்கப்படும் அவரது பாட்டியின் அடையாளமிழப்பையும் அவரது பரிதாப முடிவையும் அற்புதமாக விவரிக்கும் கதை. இந்தக் கதையில் ஜெயமோகனின் நடை தி.ஜானகிராமனின் ஒரு சிறுகதையையே படிக்கும் பிரமையைத் தருகிறது.

இந்தக் கதையில் எனக்குப் புரியாத விஷயம் இது: தாயாரின் ஒரு பாதம் தரையில் இருக்க, தூக்கிய இன்னொரு பாதமும் பூமியில் பட்டால் என்னவாகும் என்று கேட்டுவிட்டு ராமன், ஒன்றுமாகாது, ஏனென்றால் அவள் தாயார் அல்லவா என்று பதில் சொல்கிறார். ஆனால் பாட்டனாரின் அறம் மீறிய செயலால் பாதிக்கப்பட்ட பாட்டியின் துயர் ராமனின் குரலைக் கட்டித்தானே போடுகிறது? அது ஒரு இழப்பில்தானே முடிகிறது? தாயாரின் கருணைதான் என்ன, என்ற கேள்வி எழுந்தாலும் அருமையான வர்ணனைகள், நம் காலத்தின் இரு பெரும் கலைஞர்களை நினைவூட்டும் பாத்திரப்படைப்பு, குடும்பம் எனும் அமைப்பில் எப்போதும் தங்கள் சுயமிழக்கும் பெண்களின் நிரந்தரத் துயர் என்று மறக்கமுடியாத படைப்பு இந்தச் சிறுகதை.

சோற்றுக் கணக்கு சிறுகதையில் வரும் கெத்தல் சாஹிப் ஒரு கர்மவீரர்- ஸ்திதப் பிரக்ஞன் என்றும் கூறலாமோ? இக்கதைகளின் வரிசையிலேயே மிக அதிகமான அளவில் வாசகர் எதிர்வினைகளைப் பெற்ற கதை இது. அவரவர் அனுபவித்திருந்த பசிமிகுந்த கணங்களையும் அப்போதெல்லாம் அன்னமிட்ட கருணை உள்ளங்களைப் பற்றிய நினைவுகளையும் கிளர்த்திய சிறுகதை இது.  . இதன் முடிவில் உள்ள திடீர் திருப்பம் ஓ. ஹென்றி பாணியிலானதாக இருந்தாலும் கதைசொல்லி சோற்றுக் கணக்குகளைக் கைவிட்டு மேலெழுவதற்கான பின்புலம் கதையில் ஏற்கனவே நுட்பமாக  அமைக்கப்பட்டிருப்பதால் இதில் செயற்கைத்தன்மை இருப்பதில்லை. இந்தப் பின்புலம் கதைசொல்லியின் தந்தையால் மறைமுகமாகவும் மாமியால் நேரடியாகவும் அவர்களின் உரையாடல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். கெத்தல் சாகிப்பின் குணச்சித்தரிப்பு, கதைசொல்லியின் வறுமை, தாயன்பையும் குறுக்கும் யதார்த்தம் இந்தச் சிறுகதையையும் மறக்க முடியாததாகச் செய்கிறது.

என் அவதானிப்பில் இரண்டாம் வகைக் கதைகள் என்று தொகுக்கப்படக்கூடிய கதைகளை இனி காணலாம். இந்தக் கதை மாந்தர்களின் வாழ்க்கை சமூகத்தின் இயக்கத்தோடு போராடி, அவற்றை எதிர்த்து வழிமாற்றக் கூடியவையாகவும் உள்ளவை.

வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகளின் நாயகர்கள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்நாட்டின் சமூக அறமாக இருந்த சாதி அமைப்பை எதிர்த்துப் போராடி அதற்கும் மேலான மானுட அறத்தை நோக்கிச் செல்பவர்கள் – ஒரு சமத்துவ சமுதாயத்தைச் சமைக்க முனைபவர்கள். இதில் ஒருவர்- வணங்கான் நாடார்- வெற்றி பெறுகிறார். இன்னொருவர் – நூறு நாற்காலிகளின் நாயகர்- தன் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார். இந்த இரு கதைகளுமே சமூக களத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழ்பவையாக உள்ளன. இத்தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் நிஜ மனிதர்களை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும், இந்தக் கதைகள் தனி மனித வாழ்க்கையோடு தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் சமூக யதார்த்தங்களைக் கேள்வி கேட்பதால் இவற்றின் நம்பகத்தன்மை குறித்து நாம் மிகக் கறாரான அளவைகளை வைத்திருப்பது இயல்பு.

வணங்கான் யானைகளின் கால்களுக்கிடையில் புகுந்து புறப்பட்டு தன் ஊரைவிட்டுத் தப்பிப்பது முதல் தான் முடிவில் வந்தடையும் உயரம் வரை நம்மால் அசாதாரணங்களைக் கேட்கும்போது எழும் அதிசய உணர்வு போன்ற ஒரு பிரமிப்பு நிலையைத் தவிர்க்க முடிவதில்லை. பல்வகைப்பட்ட தீவிரமான இன்னல்களுக்கிடையே வணங்கான் அரசுப் பணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதும், நேசமணி அழைத்து வரும் யானையின் மீதேறி வலம் வரும் காட்சியும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கட்டங்கள். ஆனால், சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசின் அலுவலரின் யானை ஊர்வலத்தில் “மகாத்மா காந்திக்கு ஜே!”, “நேதாஜி சுபாஷ் போஸ்சுக்கு ஜே!” என்ற கோஷங்கள் எழுந்தால் அவரால் அதன்பின்னும் தன் அரசுப் பணியில் தொடர்ந்து நீடித்திருக்க முடியுமா? மணல் லாரிகளைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்கள் இரக்கமின்றிக் கொல்லப்படும் காலத்தில் வாழும் நமக்கு இலஞ்சி ஜமீந்தாருக்கு எதிரானப் போராட்டத்தில் வணங்கான் நாடார் பெறும் வெற்றி நம்ப முடியாததாக இருக்கிறது. ஆனால், மனிதன் விகல்பமில்லாதவனாக இருக்கும்போது கடவுள் தன் இரக்கமற்ற விதிகளைதச் சற்றே தளர்த்திக் கொள்கிறான் என்று ஜெயமோகன் சொல்வதையும், உண்மை புனைவைவிட விந்தையாக இருப்பதைக் காண்கிறோம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வணங்கான் கதையில் நேசமணி தோன்றி மறையும் பகுதி குறிப்பிடத்தக்க ஒன்று. கோர்ட்டின் நாற்காலிகளையும் தனித்தனி குடிநீர்ப் பானைகளையும் உடைத்துப் போடுவதும் பெறும் எழுச்சியளிக்கும் சித்தரிப்பு.

வணங்கானில் ஒரு மெல்லிய நகையொலி தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறது என்றால் நூறு நாற்காலிகளில் நாயாடி வாழ்க்கையின் சித்திரம் மிகுந்த மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஒன்று. சக மனிதர்களை இப்படியும் ஒரு சமூகம் நடத்துமா? இப்படிப்பட்ட ஒரு சமூகம் தன்னைப் புண்ணிய பூமி என்றும் அழைத்துக் கொள்ள என்ன நியாயமிருக்கிறது என்ற கேள்விகள் பெரும் ஆயாசத்தைத் தருகின்றன. பசிப்பிணியே பெரும்பிணியாக அதன் தேவைக்கப்பால் வேறெதையும் உணர வாய்ப்பில்லாத நாயாடி சமூகத்திலிருந்து எழுந்து ஒரு பெரும் அரசுப் பதவியில் அமர்ந்தும், அதன் அதிகாரத்தை எந்த வகையிலும்  பயன்படுத்த முடியாத , தன் பதவியின் கௌரவத்தைத் தனக்கான கௌரவமாக மாற்றிக் கொள்ளவே முடியாத தர்மபாலனின் போராட்டமும் அவன் அடைந்துள்ள நிலையைக் கொஞ்சமும் உணராமல் அவனைச் சுற்றியுள்ள ‘மேல்’ மனிதர்களிடமிருந்து  அவனை மீட்பதையுமே குறியாகக் கொள்ளும் அவனது தாயின் போராட்டமுமே நூறு நாற்காலிகள்.

மிகுந்த மன அழுத்தத்தையும் சோர்வையும் தரும் இக்கதையில் தர்மபாலன் எதிர்கொள்ளும் நேர்முகத் தேர்வும் தேர்வாளர் சென்குப்தா- தர்மபாலன் உரையாடலும் இந்தக் கதையில் மின்னல் வெட்டாய் வெளிச்சம் பாய்ச்சிப் பிரகாசிக்கும் கட்டங்கள். நேர்முகத் தேர்வாளர்கள் தர்மபாலனுக்கு வழங்கும் மதிப்பெண்கள் மூலம் வெளிப்படும் சமகால இந்திய சமூக யதார்த்தம் தமிழில் பரவலாக வெளிப்படாத ஒன்று. இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் ஜெயமோகன் அளவுக்கு இந்த யதார்த்தத்தை யாரும் புரிந்து கொண்டிருக்கிறார்களா, அப்படியே புரிந்திருந்தாலும் யாராவது துணிச்சலுடன் அதைப் பேசியிருக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறது.

ஆனால் இந்தக் கதையின் முடிவில் இதில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. கதையின் சம்பவங்கள் நிகழும் காலம் என்ன? சுந்தர ராமசாமியின் வீட்டில் ‘அந்த இளம் எழுத்தாளன் இருக்கும் காலம்’ என்றால் எண்பதுகளின் இறுதி அல்லது தொண்ணூறுகளின் துவக்கம் என்றாகிறது. இக்காலக்கட்டத்தில் அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்ட (பழங்குடிகள் அல்ல) வகுப்பினர் தங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டு விட்டனர். இப்பின்னணியில் கோட்டாறு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் அனுபவங்கள் காலத்துக்குப் பொருந்தாத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. தர்மபாலனும் அவரது மனைவியும் வகிக்கும் பதவிகள்தான் என்ன? மாவட்ட ஆட்சியர் என்றால் இருவரும் ஒரே ஊரில் அரசுப் பணியில் இருப்பது எப்படி? உயர் பதவிக்குரிய அதிகாரம் எதுவும் தர்மபாலனுக்கு இல்லை என்பதுதான் இக்கதையில் ஒரு முக்கியச் சரடாக இருக்கிறது. ஆனால் அவரது தாயை மீட்கச் சொல்லும்போது காவல்துறை அதிகாரிகள் காட்டும் வேகமும் கோட்டாறு மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரிடம் நடந்து கொள்ளும் விதமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலைகளை உணர்த்துகின்றனவே?

தர்மபாலனின் மனைவி ஏன் ஒரு உயர்சாதிப் பெண்ணாக இருக்க வேண்டும்? (உண்மைக் கதை என்று சொன்னால் இந்தக் கேள்விக்கே இடமில்லை). அவர் ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கரிய நிறமுள்ள பெண்ணாக இருந்திருந்தால் தர்மபாலனின் தாயால் அவர்களுடன் இணைந்து வாழ்ந்திருக்க முடியுமா? தர்மபாலனை மணந்து கொண்டது சுபாவுக்கு அரசு அலுவலகப் பணியில் எவ்விதத்தில் முன்னேற்றம் தந்திருக்கக் கூடும்? தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை மணம் செய்து கொள்வதால் தன் வகுப்பை மாற்றிக் கொண்டு இட ஒதுக்கீட்டின் பயன்களை அனுபவிக்க அரசு விதிகள் அனுமதிப்பதில்லை. அவர்களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் இது சாத்தியமாக இருக்கிறது. மேலும், தன் பதவிக்குரிய எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாத, தாழ்மை உணர்ச்சியால் வாடும் தர்மபாலனை மணந்து கொள்வதால் சுபா அடையும் சமூக அந்தஸ்துதான் என்ன?

இது போன்ற கேள்விகள் இருந்தாலும் தர்மபாலனின் தாய், “காப்பா! காப்பா! கொன்னு போட்டுடுவாங்கடா!” என்று அலறுவதும், தர்மபலனின் சிரங்குகளை மீன்கள் கடிக்கும்போது ஏற்படும் வலியின் கதறலும் மனுநீதி நாளன்று, “ஏமானே! உடையதே! தெய்வமே!” என்று இறைஞ்சும் ஒலியும் கதையைப் படித்து முடித்து வெகு நேரத்துக்குப் பின்னும் நம் காதுகளிலும் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தத் தொகுப்பிலேயே என்னால் மீண்டும் மீண்டும் விருப்பி வாசிக்கப்பட்ட, வாசிக்கும்தோறும் பெரும் இன்பம் தந்த, வாசிப்பின் சுவை நிறைந்த இரண்டு கதைகளுள் ஒன்று யானை டாக்டர். செப்படம்பர் 2000ல் நான் டாப் ஸ்லிப் சென்றபோது அங்கு யானை டாக்டரின் வீடு மற்றும் அவரது புகைப்படங்களைக் கண்டிருந்தேன். அவர் அப்போது உயிருடன் இருந்திருந்தார் என்ற உண்மை இப்போது தெரிய வரும்போது அவரது பெருமையை அறியாமல் அன்று நான் அவரை சந்திக்கத் தவறியது இன்று எனக்கு ஒரு பெரிய இழப்பாகத் தெரிகிறது.

காட்டையும் யானையையும் எழுதும்போது ஜெயமோகனின் எழுத்து பன்மடங்கு கூடுதலாகப் பிரகாசிப்பதாக இருக்கும். இந்தக் கதையிலும் இப்படித்தான். யானை டாக்டர் ஒரு அரசு ஊழியர். சம்பளம் தவிர (அதுகூட அவரது பிரக்ஞையில் இருக்கிறதா என்று தெரியவில்லை) வேறு எந்த பயனும் இல்லாமல் தன் செய்தொழிலை விரும்பி, ஒரு ஆன்மிகப் பணி போன்று ஆறாக் காதலுடன் அதில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மாமனிதனின் கதை யானை டாக்டர். இவரைப் போன்ற மனிதர்கள் நம் அரசால், சமூகத்தால், கௌரவிக்கப்படாமலும் கண்டு கொள்ளப்படாமலும்தான் இருப்பார்கள் என்பதுதான் நாம் வாழும் காலத்தின் சமூக விழுமியங்களின் நிதர்சனம்.

யானை டாக்டர் கதையை வாசிக்கத் தொடங்கி முடிக்கும்வரை காட்டின் மணம் நாசியை நிறைத்துக் கொண்டே இருக்கிறது. ஜான் ஆர்லாட் என்ற கிரிக்கெட் வர்ணனையாளரைப் பற்றிப் பேசும்போது, “he can make you smell the ball,” என்று சொல்லப்படுவதுண்டு. அது முழுக்க முழுக்க ஜெயமோகனுக்கும் பொருந்தும். காட்டின் மணத்தையும் யானையின் மணத்தையும் அவர் தன் சொற்களில் கொண்டு வந்து விடுகிறார். செந்நாய்களின் மத்தியிலும் யானைக் கூட்டத்தின் நடுவிலும் டாக்டர் வெளிப்படுத்தும் தீரம், மொழியைக் கடந்த, மொழியின் தேவையற்ற, மனித- விலங்குப் பிணைப்பு, பைரனின் கவிதை வரிகளைக் கூறும் டாக்டரின் செந்தழல் முகம், புழுக்களைப் பற்றிய வேறுபட்ட, ஆனால் உண்மையான, அரிய பார்வை, கதையின் இறுதியில், முதுமலையிலிருந்து டாப் ஸ்லிப்வரை டாக்டரைத் தேடி வரும் யானைகளின் பிரமிப்பூட்டும் செயல் என்று பல காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் படைப்பு யானை டாக்டர் சிறுகதை. இலக்கிய வாசிப்பு கொஞ்சமும் இல்லாத பல நண்பர்கள் யானை டாக்டரைப் படித்து ரசித்ததையும் மனம் குழைந்ததையும் நானே நேரடியாக வியப்புடன் பார்த்திருக்கிறேன்.

ஓலைச் சிலுவை மற்றும் உலகம் யாவையும் ஆகிய இரு கதைகளும் அயல் நாட்டவர்கள் இருவரைப் பற்றியவை. இதில் ஓலைச் சிலுவையில் சாமெர்வெல்லின் மருத்துவ, சமூகப் பணிகள் விரிவாகச் சொல்லப்பட்டாலும் நிராதரவான ஒரு ஏழைச் சிறுவனின் பார்வைக்கு அவர் வந்தபின்னான அவரது வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே சிறுகதையாக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு தாயின் முடிவால் கிறித்துவத்துக்கு மதம் மாறும் சிறுவன் சாமெர்வெல்லால் கவரப்பட்டிருந்தாலும் அவரிடம் தன்னை முழுமையாக அவன் ஒப்புக் கொடுப்பதில்லை. அவரது பணிகளின் நோக்கம் மதமாற்றம் மட்டுமே என்று அவன் சந்தேகிக்கிறான், அவரால் கிறித்தவம் என்ற வட்டத்தைத் தாண்டி வர முடியுமா என்றும் அவன் ஐயப்படுகிறான். கதையின் இறுதியில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. காலராவால் அந்தப் பகுதி முழுவதுமே பாதிக்கப்பட்டுவிட்ட நிலையில் தன் குழந்தையை இழந்து தாள முடியாத துக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணியின் கையில் சாமெர்வெல் கிருஷ்ணர் படத்தைத் தருகிறார் – இனி அவள் கிருஷ்ணனையே தன் குழந்தையாக பாவிக்க வேண்டும் என்று என்று சாமெர்வெல் கூறுமிடத்தில் கதைசொல்லி அவரை முழுமையாகப் புரிந்து கொள்கிறான் என்று கதை முடிவுக்கு வருகிறது.

அக்காலகட்டத்தில் தென் திருவிதாங்கூரில் நிலவும் வறுமை, ஏழை மக்கள் கொள்ளை நோய்க்கு பூச்சிகள் போல் செத்து மடியும் அவலம், கிறித்தவ மிஷனரிகளின் மகத்தான மருத்துவப் பணிகள் இந்தக் கதையில் அற்புதமாக விவரிக்கப்படுகின்றன. என்றாலும் கதையின் பின் இறுதியில் நிகழும் எதிர்பாராத திருப்பம் அல்லது உச்சம், என்னைப் பொருத்தவரையில் சற்று செயற்கையாகத் தருவிக்கப்பட்டதாகவே இருக்கிறது. என்னில் அது எத்தகைய உணர்ச்சிகளையோ புதிய புரிதலையோ உணர்த்துவதாக இல்லை. ஆனால் பல வாசகர்களின் எதிர்வினைகள் என் வாசிப்பு அனுபவத்துக்கு மாறாக இருந்ததையும் பார்த்தேன்.

உலகம் யாவையும் என்ற கதையின் காரி டேவிஸ் ஓருலகம், உலகக் குடிமகன் என்ற லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடி. அவரது வாழ்வின் அனுபவங்கள், தனிமைச் சிறை்யின் தனிமையை வெல்ல தானிருக்கும் அறையையே ஓர் உலகமாக்கி அந்த மெய்நிகர் உலகில் அவர் வாழ்வதன் விவரிப்பு, கதையின் இறுதியில் மலையுச்சியில் நிகழும் அஸ்தமன வர்ணனை ஆகியவை சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. என்றாலும், ஒரு முழுமையான சிறுகதையாக உலகம் யாவையும் பரிணமித்துள்ளது என்று என்னால் சொல்ல முடியவில்லை. காரி டேவிஸ் என்ற ஒரு உன்னதமான மனிதனும் யாவையும் ஓருலகே என்ற கருத்தாக்கமும் மட்டுமே இந்தக் கதையின் பதிவுகளாக எஞ்சுகின்றன.

இந்திய அரசியலில் காந்தியைத் தவிர வெறு எந்தத் தலைவருக்குமே நகைச்சுவை உணர்வு இருந்ததில்லை என்று ராமச்சந்திர குஹா ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். காந்தியவாதிகளான வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயண் போன்றவர்கள் கூட நகைச்சுவை உணர்வு மிக்கவர்களல்ல  . ஆனால் முழு காந்தியவாதியான கோட்டி பூமேடை ராமையா நகைச்சுவை விஷயத்திலும் உண்மையான காந்தியவாதியாகவே இருக்கிறார். கோட்டியை வாசிக்கும்போது பல இடங்களில் புன்னகைக்கவும், சில இடங்களில் வாய்விட்டு உரக்கச் சிரிக்கவும் நேர்கிறது. தன் தீவிரமான சமூகச் செயல்பாடுகளையெல்லாம் கோமாளித்தனங்களாகவே காணும் சமூகத்தின்மீது எந்தக் கசப்புணர்வும் இல்லாத, தன்னைத் தானே பரிகாசம் செய்துகொள்ள அஞ்சாத ஒரு அரிய மனிதர்- சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட, ஆனால் ஊமையாக்கப்பட முடியாத மனசாட்சியாக இயங்கும் எளிய காந்தியவாதியான பூமேடை ராமையாவின் வாழ்வு நகைச்சுவை மிளிரச் சொல்லப்பட்டுள்ள கதை ‘கோட்டி’.

மிகப்பெரியச் சிந்தனையாளர்களும் இலக்கியவாதிகளும் தங்கள் அந்திமக் காலத்தில் அடையும் கசப்புணர்வை ஜெயமோகன் சில கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார். தீவிரமான செயல்பாடுகள் யாரை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்றனவோ அவர்களாலேயே அவை ஏளனம் செய்யப்படும்போது கசப்புணர்வு கொள்ளாதிருக்க, தன்னைக் கண்டே சிரித்துக் கொள்ளும் பக்குவமே உதவும் என்று தோன்றுகிறது. பூமேடை தனது அத்தனை வலியிலும் தான் சிரிப்பதைக் கைவிடுவதேயில்லை. அதுதான் அவரை ஒரு மகத்தான மனிதராக நம் நினைவில் நிறுத்துகிறது.

இந்தக் கதைகளின் வரிசையில் இருப்பினும் இவற்றுடன் சேராமல் தனித்து இருப்பவை என்று நான் கருதும் மூன்று கதைகள், மத்துறு தயிர், பெருவலி மற்றும் மயில் கழுத்து. நிஜ மனிதர்களை நினைவூட்டும் கதைகள் என்ற அளவில் வேண்டுமானால் இவை இத்தொகுப்பில் இடம் பெறலாம். ஆனால் அறம் என்று மற்றக் கதைகளில் பேசப்படும் பொதுத்தன்மை இக்கதைகளின் அடிப்படையாக அமையவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. மாறாக இவை மூன்றுமே மனித உறவுகளின் இயல்பு, அவற்றின் உணர்வு நிலைகள், மனிதச் செயல்பாடுகளின் உட்சரடாக எப்போதுமிருக்கும் அதன் புரிந்து கொள்ள இயலாத்தன்மை இவற்றைப் பேசுபவை.

தன் வாழ்நாள் முழுதும் வெளிப்படையான பகுத்தறிவுவாதியாகவே வாழ்ந்து வந்த  சுவாமிநாதனின் மனதில் எப்போதும் இருக்கும் வெறுமை, அந்த வெறுமையைக் கடந்து செல்லக்கூடிய ஒன்று என்று கைலாய யாத்திரையை அவன் நம்புவது, அதற்குத் தூண்டுதலாக இருந்த சுவாமி சாரதானந்தரின் எருமைக் கன்று புகைப்படம், கடும் நோயுற்ற நிலையிலும் கைலாய யாத்திரை மேற்கொள்ளும் அவர் அதன் இறுதியில் அடையும் தர்க்கத்திற்கு   அப்பாற்பட்ட தரிசனம், அதன் ஆனந்தம் என சொற்களைக் கொண்டு எளிதில் விளக்கிவிட முடியாத, அறிவின் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சம்பவத் தொகுப்பு பெருவலி. இதில் சுவாமிநாதனின் தேடல் என்ன, அவர் அடைந்தது என்ன,  அவரது தனிமையின் பெருவலி தீர்ந்ததா என்ற கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்கள் கிடையாது என்றே தோன்றுகிறது. இந்த தெளிவின்மையும் புதிர்தன்மையுமே இக்கதையின்பால் என்னை ஈர்ப்பதாக இருக்கின்றன. மேலும், இதில் ஒரு சிறிய பாத்திரமாக உள்ள பெஹன்ஜியை பற்றிய இவ்வரிகள் என் மனதில் பெரும் எழுச்சியூட்டுவதாக இருந்தன: “எதையுமே ரெடிமேட் ஆக விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு வாழ்க்கை, அவங்க கையாலே எதையுமே இறுக்கப் பற்றிக் கொள்ள முடியாது, அதனாலேயே அவங்களால எதையுமே சாதிக்க முடியாது. ஆனால் மேலான எதையெதையோ அடைஞ்சிடறாங்க  இல்லையா?”

இருவேறு மனிதர்களுக்கிடையேதான் எத்தனை வகையான உறவு நிலைகள் சாத்தியமாகின்றன! நட்பு, பக்தி, பாசம் என்று பல சொற்களால் பொருள்படும் பல உணர்வு நிலைகள். இவற்றில் நட்பும் காதலும்தான் நவீன தமிழ் இலக்கியத்தில் மிக அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. மிக மிக அரிதாகவே, இரு மனிதர்களுக்கிடையே இருக்கக்கூடிய பக்தியையும் கல்வியையும் அடிப்படையாகக் கொண்ட குரு சிஷ்ய உறவு தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அந்த வகையில் மட்டும் பார்த்தாலும் மத்துறு தயிர் மிக அரிதான ஒரு படைப்பு.

பேராசிரியர் ஜேசுதாசன் தனக்கு மிகவும் விருப்பமான மாணவன் ராஜத்திடம் காட்டும் அளவற்ற பிரியமும், அவனது பிரிவில் உருவாகும் ஆற்றாமையும் ஒரு புறம் என்றால், பேராசிரியர் ஜெசுதாசனுக்குத் தன் ஆசிரியர் குமாரப்பிள்ளை மீது உள்ள பெரும் பக்தியும் ராஜம் தன் ஆசிரியர் ஜெசுதாசனிடம் வைத்திருக்கும் ஆழமான மரியாதையும் இந்தக் கதையின் உக்கிரமான உணர்வுகளாக இருக்கின்றன. கம்பனின் கவிநயம் மற்றும் சொல்லாளுமையின் பின்னணியில் மென்மையான நகைச்சுவையுடன் துவங்கி மிகுந்த நெகிழ்ச்சியில் முடியும் இக்கதையை ஒரு அபூர்வமான படைப்பு என்று சொல்வேன். பிரிவின் துயரால் துடிக்கும் மனதை மத்துரு தயிர் என்று கம்பன் பாடியதைக் கொண்டு விளக்குவது நம் மனதில் மிக உக்கிரமான உணர்வுகளைக் கிளறுவதாக இருக்கிறது. ஒரு மாணவன் தன் குருவின் மீது கொள்ளும் பக்தியும் ஒரு ஆசிரியர் தன் சீடன் மீது கொள்ளும் வாஞ்சையும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள்தானோ என்ற கேள்வியே கதையின் முடிவில் எழுகிறது.

பேராசிரியர் ஜேசுதாசனுக்கும் அவரது சீடன் ராஜத்துக்கும் இடையே உள்ள உறவைப் பேசும் இக்கதைக்கு வெளியே இருந்தாலும் ஜேசுதாசனின் சொற்களில் வளர்ந்து விகாசம் பெற்று மனதை நிறைக்கிறது பேராசிரியர் ஜெசுதாசனின் குருவான குமாரப்பிள்ளையின் ஆளுமை. இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகளைக் கடந்து அன்பு என்ற அந்த சுயசார்பற்ற உணர்ச்சியில் இதயங்கள் குழைந்து கலங்கி நிற்கும் நிலை எப்போதும் நம் நெஞ்சையும் நெகிழ வைக்கும் ஒன்று. கல்விப் புலத்தின் பின்னணியில் குரு சிஷ்ய உறவைப் பேசும் கதைகள் தமிழ் இலக்கியத்தில் வேறு ஏதேனும் உண்டா என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். தி. ஜானகிராமனின் முள்முடி என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. அது ஒன்றைத் தவிர வெறு எதையும் நான் வாசித்ததாக நினைவில்லை- வடிவேல் வாத்தியார் வேறு வகை. மத்துறு தயிர் தனித்தன்மை கொண்ட ஒரு படைப்பு.

மத்துறு தயிரில்கூட ஒரு வகையில் அறச் செயல்பாடு இருக்கிறது என்று கொள்ளலாம். ஆனால் மயில்கழுத்து? அறம் என்ற கோட்பாட்டினுள் எந்த வகையிலும் இந்தக் கதையைப் பொருத்திப் பார்க்க இயலவில்லை. ஆனால் அதன் மிக நுட்பமான உள்ளடக்கத்தாலும் கூறுமுறையிலும் இசையனுபவம் குறித்த உணர்ச்சிகரமான விவரிப்பாலும் இக்கதையே இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதையாக இருக்கிறது. இதை மீண்டும் மீண்டும் பல முறை படித்தும் இதன் மையத்தை நான் புரிந்து கொண்டேனா என்பது எனக்கு எப்போதும் சந்தேகமாகவே இருந்து வருகிறது. அதுவே இக்கதையின்பால் என்னை ஈர்க்கும் வசீகரமாகவும் இருக்கிறது.

இசை தரும் அனுபவத்தை வார்த்தைகளில் கொண்டு வந்து விட முடியுமா? இசை அனுபவமே “ஒரு சொல்லமுடியாமையை இன்னொரு சொல்லமுடியாமையால் ஈடுகட்டுவது”தான் என்றிருக்கும் நிலையில், ஜெயமோகனின் எழுத்து இந்தக் கதையில் ஒரு உச்சத்தைத் தொடுகிறது:

“’அலர்ஸர பரிதாபம்’ . அம்மா மடியில் அமர்ந்து இளமையில் கேட்ட சுவாதி திருநாள் பாட்டு. பழமையான சுருட்டி. ஓடைநீரில் இழையும் நீர்ப்பாம்பு. கண்ணாடியில் வழுக்கும் மண்புழு. மிதந்து மேற்கில் மறையும் தனிப்பறவை. …இறகுதிர்த்து விண்ணில் நீந்தியது பறவை. சிறகுகள் ஒவ்வொன்றாக உதிர பறவை மட்டும் மேலே சென்றது. பறவையை உதிர்த்துவிட்டு பறத்தல் மட்டும் மேலே சென்றது. வானமென விரிந்த வெறுமையில் இருத்தலென எஞ்சிய ஒரே ஒரு ஒலிக்கோடு நெளிந்து நெளிந்து தன்னைத்தானே கண்டு வியந்தது. இங்கே இங்கே என்றது. என்றும் என்றது. இந்தக்கணம் மட்டுமே என அங்கே நின்றது.”

மேலும் பாலசுப்ரமணியனின் இசையனுபவக் கிளர்ச்சியின் ஊடாக அவரது மனதில் இந்த எண்ணம் ஓடுகிறது, “தனிமை இத்தனை மகத்தானதா? குரூரமாக கைவிடப்படுதல் இத்தனை தித்திப்பானதா? முற்றாக தோற்கடிக்கப்படுவதில் மாபெரும் வெற்றியொன்றிருக்கிறதா என்ன?” அழகனுபவம் நம் நெஞ்சில் தன்னை நிறைத்து மறையும்போது அது விட்டுச் செல்லும் வெறுமையையும், கணப் பொழுதையும் நித்தியமாக்கும் அதன் காலமின்மையை நமக்கெனக் கைப்பற்றும் முனைப்பில் இனிய கசப்பை மட்டுமே நம்மால் நமக்குரியதாக்கிக் கொள்ள முடிகிறதென்ற தாபத்தையும் விவரிக்கும் இவ்வரிகளுக்கு ஈடான உணர்ச்சி மேலிட்ட எதையும் நான் அண்மைக் காலத்தில் வாசித்த நினைவில்லை.

இக்கதையில் வரும் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்தின் குணச்சித்திரத்தையும் ஜெயமோகன் வெளிப்படுத்தும் பாங்கு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. ஒரு கத்தியின் கூர்மை கொண்ட பாலு, 20 நிமிடத்துக்கொரு அவதாரம் எடுக்கும் ராமன்,  மேல் பார்வைக்குப் புலப்படாத, ஆனால் அளவிட முடியாத ஆழம் கொண்ட சுப்பு ஐயர், காலமின்மையின் படிமமான சந்திரா, இங்கிதத்தைத் தன் ஒவ்வொரு அசைவிலும் உணர்த்தும் சுவாமிநாதன் என்று நிறைய பேசலாம்.

ஆனால் இக்கதையின் முடிவில் விடைகளைவிட கேள்விகளே அதிக அளவில் எஞ்சி நிற்கின்றன. இதுவே இக்கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கக் காரணமாகவும் இருக்கிறது. தவிரவும், இசையனுபவத்தை எழுத்தில் கொண்டு வந்திருக்கும் நளினம்- சுவாமிநாதன் பாடத் துவங்கியதும் அதுவரையில் அந்த அறையில் இருந்த ஒன்று வெளியேறியது, அதுவரையில் இல்லாத ஒன்று உள்ளே வந்து நிறைத்தது என்பது ஏறத்தாழப் பூரண, பின்னமற்ற வாக்கியம்.

இக்கதைகளை நண்பர்களுடன் தொடர்ந்து விவாதிக்கும்போது சில நண்பர்கள் இவற்றில் மெலோட்ராமா அதிகம் என்று குறை சொல்வது தெரிகிறது, சிலர் இத்தொகுப்புக்கே ‘பாசமலர்’ என்றும் தலைப்பு வைத்து விட்டனர். இந்தக் கதைகளில் மிகையுணர்ச்சி வெளிப்படுகிறது என்று சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், எது மிகையுணர்ச்சி என்பதற்கான வரையறை என்ன, அதை யார் நிர்ணயிப்பது? உணர்ச்சிகள் எப்போதும் அகவயமானவை. ஒருவனுக்கு டிராஜடியாக இருப்பது இன்னொருவனுக்கு மெலோட்ராமாவாக இருக்கிறது. அது அவரவர் குண இயல்பு, வளர்ந்த விதம், வாழ்வுச் சூழல் மற்றும் அனுபவங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மரணமே கிராமங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் போன்ற ஒன்றை நகரங்களில் ஏற்படுத்துவதில்லை.

நவீன, பின்நவீனத்துவ சிறுகதைகளில் பெரும்பாலானவை (குறிப்பாக, சிறுபத்திரிக்கைகளில் இன்று பதிப்பிக்கப்படுபவை) மனித மனதின் இருண்மையையும் கீழ்மையையுமே தங்கள் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்,பெரும் லட்சிய வேகம் கொண்ட மனிதர்களை நாயகர்களாகக் கொண்ட இக்கதைகள், என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின என்பதை ஒப்புக் கொள்கிறேன். அண்மையில் ஒரு பத்தாண்டுகளில் வெளிவந்த எந்தச் சிறுகதைத் தொகுப்பும் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எனக்குத் தரவில்லை.

இக்கதைகள் வழியாக தன்னை மீட்டுக் கொண்டதாகவும், இன்னும் சொல்ல மகத்தான விஷயங்கள் நிறையவே உள்ளன என்றும் ஜெயமோகன் இக்கதைகளின் முடிவில் எழுதுகிறார். அவற்றுக்கான என் காத்திருப்பு தொடர்கிறது – தன் லட்சியங்களை மீட்க கடந்த காலத்தினுள் சென்ற ஜெயமோகன் இக்கதைகளுக்குப்பின் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாக புதிய புனைவுகள் எதுவும் எழுதவில்லை என்பது கவலையளிப்பதாகவே உள்ளது.

(ஜூன், 2012)

One comment

  1. வணக்கம்…

    நான் இன்னும் அறம் சிறுகதைகளை முழுமையாகப் படிக்கவில்லை, எனவே நீங்கள் குறிப்பிட்ட அதே காரணத்திற்காக உங்கள் கட்டுரையையும் முழுமையாக (இன்னும்) படிக்கவில்லை… என்றாலும், படிக்காமலும் இருக்க இயலவில்லை – அக்கதைகள் என்னுள் அத்தனை ஒத்ததிர்கின்றன… அதனால், நான் படித்த கதைகளுக்கான குறிப்புகளை மட்டும் படித்தேன்…

    நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்… ‘அறம்’ என்ற சொல்லின் வரையறைக் குறித்து விவாதிப்பத்தும், கதைகளை நுட்பமாக அணுகி மூன்றாக பகுப்பதும் அருமை… ‘கதையின் சுருக்கத்தைச் சொல்லமாட்டேன்’ என்றாலும் கொஞ்சம் சொல்லித்தான் விடுகின்றீர்கள் (அதனாலேயே நான் ‘அஞ்சி’ படிப்பதை நிறுத்திக்கொண்டேன்!)

    முழுதாகப் படிக்காமல் இப்போது அரைவேக்காட்டில் எதற்கு இந்தக் கருத்தைப் பதிகிறேன் என்றால், ‘வணங்கான்’ கதையைப் பற்றிச் சொல்கையில் கதையின் நாயகன் ‘வணங்கான்’ என்று சொல்லி இருக்கின்றீர், அல்ல, கதைசொல்லிதான் வணங்கான், கதையின் நாயகன், யானைக்காலில் தப்பி ஓடி, யானை மீது ஏறியவன் அவனின் தந்தை ‘கறுத்தான்’ (பின்னால் ஆனைக்கறுத்தான் நாடார்)… இதை மட்டும் சற்று கவனிக்க….

    நான் அறம் கதைகளை முடித்துவிட்டு (ஆர்வத்தில் ‘விஷ்ணுபுரத்தை’யும் கையில் எடுத்துவிட்டேன், அது என்னை வெளியில் விடமாட்டேன் என்கிறது!) பிறகு உங்கள் கட்டுரையையும் முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன்… அதுவரை…

    நன்றி…

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.