விமர்சனம்

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) ‘சேஸிங் த பூகிமேன்’ (Chasing the Boogeyman) – செமிகோலன்

ரிச்சர்ட் சிஸ்மாரின் (Richard Chizmar) Chasing the Boogeyman நூலில் நான்கு கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் இது ‘தொடர் கொலைகாரனை’ (serial killer) பற்றிய நூல் அல்ல. எண்பதுகளின் இறுதியில் தான் பிறந்து, வளர்ந்த சிறு நகரில் நடந்த இந்தக் கொலைகளைப் பற்றிய ஆவணப் பாணியில் ரிச்சர்ட் சொல்லப் போவதாக அவர் கூறுவதால், நேர்காணல்கள், குற்றம் நடந்த இடங்களின், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் போன்ற வடிவ யுத்திகள் நூலில் உள்ளதால்  இது ‘I’ll Be Gone in the Dark’ போல் உண்மை குற்ற (True Crime) நூலும் அல்ல. மெட்டா-பிக்க்ஷனும் அல்ல. சிறு நகரப் பின்னணியில் நிகழும் எண்ணற்ற திகில்/குற்றப் புனைவு நாவல்களின் ஒன்றோ, அந்த நிலவியல், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வியல் விவரிக்கப் படுவதால் இது ‘பொது’ நாவலோ அல்ல. ரிச்சர்டின் பால்ய/இளமைக் காலத்தை பற்றி பேசுகிறது என்பதாலேயே இது ‘வெறும்’ நினைவுக் குறிப்பும் கூட அல்ல.

1988ஆம் ஆண்டின் கோடையில், இதழியல் பட்டப் படப்பை முடித்து சொந்த ஊரான எட்ஜ்வுட்டிற்கு ரிச்சர்ட் திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன், அவருடைய வீட்டிற்கு ஓரிரு தெருக்கள் தள்ளி ஒரு பதின் பருவப் பெண் கொல்லப்படுகிறாள். நெருங்கிய தொடர்பில்லையென்றாலும்,  கடையில், தெருவில் பார்த்தால் சிரித்து, ஓரிரு வார்த்தை பேசுவது மட்டுமின்றி, சிறு நகரத்தில் இருபது வருடங்கள் அருகருகே வசித்தால் உருவாகும் பரிச்சயம் அந்தப் பெண்ணின் குடும்பத்துடன் ரிச்சர்ட் மற்றும் அவர் பெற்றோருக்கு உள்ளது. அப்பெண்ணின் சகோதரன், ரிச்சர்டுடன் படித்தவன். துயர நிகழ்வுகள் எப்போதுமே அலைகழிப்பவை என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டவருடன் கொஞ்சமேனும் பரிச்சயம் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகம்.

இதழியல் படித்தவர் என்பதால் மட்டுமே இந்தக் கொடுங்கொலை ரிச்சர்ட்டை கவனத்தை ஈர்த்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில், ரிச்சர்ட்டின் லட்சியம், அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்

That’s right, I’m talking about the bane of every real journalist’s existence—the hippy-dippy, Peter Pan world of Make Believe: fiction.

But wait, it’s even worse than that. I’m talking about genre fiction. Crime, mystery, suspense, and that black sheep of them all: horror.

சரி, திகில் புனைவுகள் வாசிப்பதில்/எழுதுவதில் அதி ஆர்வம் கொண்டவர் என்பதால் மட்டுமே இந்தக் குற்றத்தை பற்றிய செய்திகளை சேகரிக்கத் தொடங்குகிறார் என்று சொல்ல முடியுமா? பரிச்சயமான குடும்பத்தில் நேரும் துயரம், இதழியில் பயிற்சி, திகில் ஆர்வம், இத்தகைய நிகழ்வுகளால் ஈர்க்கப்படும் மனித இயல்பு இவை எல்லாமும் சேர்ந்து தான் அவருடைய – அடுத்த சில மாதங்களுக்கான – செயல்களை வடிவமைத்தன என ஆரம்பித்திலேயே புரிய வருகிறது.

இத்தகையை புனைவுகளின் இரு போது அம்சங்களை உணரலாம். ஒன்று, தொடர் கொலைகளைப் புரிபவன், தான் எண்ணியதை துல்லியமாக நிறைவேற்றுபவனாக, காவல்துறையினரை முட்டாள்கள் போல் எண்ண வைப்பவனாக, மற்றவர்கள் நெருங்க முடியாத அதி மானுடனாக, அவனைக் குறித்த சித்திரம் உருவாவது. இறுதியில் அவன் பிடிபட்டாலும், இத்தகைய கோணம் உருவாவது -ஆசிரியர் அப்படி யோசித்திருக்காவிட்டாலும் – தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அடுத்தது, அவனுக்கு பலியானவர்கள், பிறசேர்க்கையாக, அவனுடைய தீய மேதமையை வாசகன் உணர மட்டுமே உதவுபவர்களாக மட்டுமே தங்கி விடும் அபாயமும் உள்ளது.

இந்த இரு அம்சங்களையும் முற்றிலும் தவிர்த்து விடும் ரிச்சர்ட், பலியாகும் நான்கு பெண்களை தன் கதையாடலின் மையத்தில் வைக்கிறார். அந்தப் பெண்களின் இயல்புகளை, கனவுகளை விரிவாக பதிவு செய்கிறார். தன் நெருங்கிய தோழியுடன் ஒரே கல்லூரியில் கால்நடை மருத்தவப் படிப்பு படித்து, ஐந்து வருடங்கள் வேலை செய்த பின், சொந்த க்ளினிக் தொடங்கும் கனவுடன் ஒருத்தி, சிறு வருடங்களுக்கு முன் போதை பழக்கம், வீட்டை விட்டு ஓடுதல் என்றிருந்த தன் வாழ்க்கையை முயற்சி செய்து சரிபடுத்தி, கல்லூரியில் சேர்வதை எதிர்நோக்கியிருந்த மற்றொருத்தி. பலியானவர்கள் மட்டுமா? கணவனை இழந்தப் பின் தனியாக இரு பெண்களை வளர்க்கும் தாய், தன் மூத்த மகளை இழக்கும் போது அனுபவிக்கும் வலி. இவர்களனைவரின் கனவுகளை சிதைத்தவனை தன்னிச்சையாக கூட வியக்க முடியாது இல்லையா.

ஆம், இதிலும், அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வைக்கும், பதற்றப்படச் செய்யும் நிகழ்வுகள், கணங்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு சிறு நகரின், அதில் வசிப்பவர்களின், ரிச்சர்ட்டின் உணர்வுகளாக உள்ளனவேயன்றி வாசகன் கொலைகாரனை கண்டுபிடிக்க தன் மனதில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆடுபுலியாட்டமாக இல்லை.  

ஒரு நிகழ்வு. ஓரிரவு ரிச்சர்ட் வீட்டு கழிவுகளை, தெருவின் குப்பைக் கூளத்தில் போட வெளியே வருகிறார். அங்கு வைத்த பின் திரும்ப எத்தினிப்பவருக்கு தன்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. எந்த வாகனமும் செல்லாத, சன்னமான தெரு விளக்குகளின் ஒளி மட்டுமே உள்ள இருள், அதனூடே உற்றுப் பார்க்கப் படுவது. ரிச்சர்டால் திரும்ப முடியவில்லை, இப்போது இருளில் ஒளிந்து கொண்டிருப்பவன் நினைத்தால் அருகில் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இப்படி எவ்வளவு நேரம் அசைவற்று இருந்தார் ரிச்சர்ட்? சில நொடிகளாக இருக்கலாம் அல்லது பல நிமிடங்களாக இருக்கக் கூடும். தெருவை கடக்கும் வாகனத்தின் முகப்பு விளக்கொளி அவரை மீட்கிறது. வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். எந்த உயர் திகில், குற்றப் புனைவிலும் காணக் கூடிய ‘இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்’ கணம் இது. ஆனால் இதனூடே நான் உணர்வது ரிச்சர்டின் பயத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த எட்ஜ்வுட்டின் மனநிலையையும் தான்.

‘இது உங்க சொந்த அனுபவமா’, ‘இது நிஜமாக நடந்ததா’ போன்ற கேள்விகளை க்ரிஸ்டியோ அல்லது வேறு எந்த குற்றப் புனைவு/திகில் எழுத்தாளரோ எதிர்கொண்டிருக்க வாய்ப்பு குறைப்பு. ஆனால் இவை ரிச்சர்டை நோக்கி கேட்கப் படும் வாய்ப்புள்ளது. இதற்கு நூலின் வடிவம் சார்ந்த கட்டமைப்பு -நேர்காணல்கள், புகைப்படங்கள் – மட்டும் காரணமல்ல. அவருடைய நினைவோடை பாணியும் இந்த சந்தேகத்தை எழுப்பக் கூடும். ஒருவர் தன் கடந்த காலத்தை பற்றி, தான் வளர்ந்த நிலவியல், வசித்த மக்கள் பற்றி எழுதினால், ‘என்ன நடந்ததோ’ அதை எப்போது அப்படியே அவர் பிரதி எடுக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியதோ, ‘நடந்ததை எழுதுதல்’ என்ற, நாம் உருவாக்கியிருக்கும்  அரக்கனை/Boogeymanஐ தேட வேண்டுமென்றோ கட்டாயமில்லை.  உண்மையில் புனைவில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை, எந்தளவிற்கு வாசகனை உள்நுழைய அனுமதித்துள்ளார் என்பதை எழுத்தாளர் மட்டுமே அறிவார். இந்த நூலிலும், ரிச்சர்டின் பால்யத்தின் சில பகுதிகளை – பகுதிகளாக அவர் முன்வைப்பதை – நான் அறிகிறோம், நூலின் காலகட்டமான 1988ன் பதிவுகளும் – அவருடைய சிறுவயது நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்- உள்ளன. இவை ‘நிஜத்தில்’ நடந்தவையா என்பது இங்கு அலசப்பட வேண்டியது அல்ல,   அந்த சில மாதங்களின் கொடுநிகழ்வுகளுக்கு, மனித முகத்தை அளிக்கின்றன என்பது தான் முக்கியம். கடந்த கால நிஜம், கடந்த கால புனைவு இரண்டிற்கும் இடையிலான இலக்கிய ஊசலாட்டமாக, அது இயங்கக் கூடிய, வெளிப்படக் கூடிய விதங்களைப் பற்றிய சிந்தனைகளாக இந்த நினைவுக் குறிப்பு யுத்தியை பார்க்கலாம்.

பலியாகும் பெண்கள், அவர்களின் குடும்பம் தவிர நாம் சந்திக்கும் முக்கியமான மனித முகங்கள்,நிருபராக வேலை பார்க்கும் ரிச்சர்டின் தோழி கார்லி, தொடர் கொலைகளை விசாரிக்க அனுப்பப்படும் காவல்துறை அதிகாரி ஹார்ப்பர், ரிச்சர்டின் பெற்றோர் ஆகியோர்.

கொலைகளை தடுக்க முடியாத இயலாமை, அது உருவாக்ககூடிய உளைச்சல், அதன் நீட்சியான மனச்சோர்வை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விசாரணை செய்து வந்த, இந்த நிகழ்வுகள் நின்று பல்லாண்டுகள் ஆன பின்பும், ஓய்வு பெரும் வரை அதை மனதிலிருந்து நீக்க முடியாத ஹார்ப்பர் ஒரு புறமென்றால், ‘கறுப்பின அதிகாரி தலைமையில் விசாரணை, மூன்று வெள்ளையினப் பெண்கள் கொலை, வேறென்ன எதிர்பார்க்க முடியும்’ என்று ஹார்ப்பரின் நிறத்தை வைத்து அவருடைய திறமையை, நேர்மையை முடிவு செய்யும் வெள்ளையின நகரவாசியொருவன் மற்றொரு புறம். எட்ஜ்வுட்டின் மற்றொரு முகத்தை காட்டும் நிகழ்வு.

கார்லி, ரிச்சர்ட் இருவரும்  கொலைகள் குறித்து தகவல்கள் திரட்டி, அதன் வழியாக ஏதேனும் கண்டறிய முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், காவல்துறை கோட்டை விட, தொழில்முறையில்லாத துப்பறியும் ஆசாமிகள் உண்மையை பிடிப்பது போல் எதுவும் நடப்பதில்லை. காவல்துறை அறியாத ஏதேனும் தடயம் இவர்களிடம் கிடைத்ததா என்று கூட உறுதியாக கூற முடியாது. ரிச்சர்ட் வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு விடுத்து, எதுவும் பேசாமல், பலமாக மூச்சை மட்டும் விட்டு வைத்து விடுபவன் தான் கொலைகாரனா அல்லது ரிச்சர்டின் ஆர்வத்தை அறிந்து அவனை பயமுறுத்த, கிண்டல் செய்ய விரும்பும் ஏதேனும் ஆசாமியா. கார்லி வீட்டின் வாசலில் சாத்தானின் குறியீடான 666ஐ எழுதி வைத்தவன் யார்? இவர்களுடைய இணை விசாரணையின் பலன்/பலனின்மை, ரிச்சர்டின் அதீத ஆர்வம் வாசகனுக்குள் எழுப்பும் கேள்விகள் – துயர நிகழ்வை தனதாக்கிக் கொள்ளும் சுயநல விழைவோ? – நூலின் கதைசொல்லலுக்கு இன்னும் நம்பகத்தன்மையை அளிக்கிறது.

இதழியல் படித்த மகனின் ‘எழுத்தாளர்’ லட்சியத்தை சிறுமைப்படுத்தாத, அவன் இந்தக் கொலைகள் மீது அதீத ஆர்வம் கட்டுவது அச்சுறித்தனாலும், அதை தடை செய்ய முயற்சிக்காத ரிச்சர்டின் பெற்றோர்

குற்றவாளி பல்லாண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுகிறான். ஆனால் அது, மகளை இழந்தவர்களின் குடும்பத்திற்கும், ரிச்சர்டிற்கும், ஏதேனும் வகையில் 1988-89ஆம் ஆண்டுகளை முடிவுக்கு கொண்டு வரும் (closure) என்று கூற முடியாது. அவர்களுக்கும், வாசகனுக்கும் தெரிய வருவது ‘தீமையின் அற்பத்தன்மையை’ (banality of evil) தான் நினைவுறுத்துகிறது. கூடவே இந்த அற்பத்தன்மை, அழியாதது, வேறு வேறு உருவத்தில்  எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற அயற்சியையும்.

பல ழானர் எழுத்தின் கூறுகளை கொண்டிருந்தாலும், Chasing the Boogeyman முற்றிலும் தனித்தன்மையுடைய ஆக்கம். நல்லெழுத்து, ழானர் எல்லைகளை கடந்து தனக்கான இருப்பை உருவாக்கி, தனக்கான இடத்தை நிறுவிக் கொள்ளும் என்பதை இந்த நூலின் மூலம் மீண்டும் உறுதி செய்கிறார் ரிச்சர்ட்.

கலாசார விளிம்புகளின் கனவுகள்: உண்ணி. ஆர். இன் “பாங்கு” கதையை முன்வைத்து ஜிஃப்ரி ஹாசன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

மலையாள எழுத்தாளரான உண்ணி. ஆர் உடைய ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. பாங்கு எனும் அவரது கதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாதுஷா என்கிற கால்நடையாளன் எனும் தொகுப்பிலுள்ள கதை.

கதைகூறலில் ஒரு திட்டவட்டமான முறையென உண்ணியிடம் பிடிவாதங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நவீனத்துவம், பின்- நவீனத்துவம் என ஒரு கலவையான கதைகூறல் முறை அவரிடம் உள்ளது. அவரது பாங்கு ஒரு பெண்ணின் வித்தியாசமான ஆசையைச் சுற்றி நகரும் கதை.

 ஒரு கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தீபா, ஜோதி, சமீனா, ரசியா என்கிற நான்கு மாணவிகளும் தங்களது கல்லூரி வாழ்க்கை நிறைவுக்கு வரும் தருணம் தங்களது நீண்ட கால அல்லது கல்லூரி வாழ்க்கையில் முளைத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது எனவும் முடிவெடுக்கின்றனர். இதில் தீபா, ஜோதி, சமீனா ஆகிய மூவரும் தங்களது ஆசைகளை சொல்லிவிட்டனர். கல்லூரி ஹெட்டோட கையை முத்தமிடுவது தீபாவின் ஆசை. ஆங்கிலம் படிக்கும் மோகனிடம் தன் காதலை வெளிப்படுத்துவது ஜோதியின் ஆசை. அஸ்ரப் என்கிற நண்பனோடு உட்கார்ந்து சினிமா பார்ப்பது சமீனாவின் ஆசை. மூவரது ஆசைகளும் சராசரியான பெண்களின் ஆசைகளாக கதைக்குள் வருகின்றன.

இந்த மூவரது ஆசைகளும் எந்த புதுமையுமற்ற சராசரி வாழ்விலிருந்தும், வாழ்வின் ஆழமற்ற மேற்பரப்பிலிருந்தும் வருவதாகும். வாழ்வின் உயர்ந்த லட்சியத்திலிருந்தோ, ஆழ்ந்த கனவுகளிலிலிருந்தோ அந்த ஆசைகள் எழுந்து வருவதில்லை. ஆனால் ரசியா என்கிற மாணவி மௌனமாக இருக்கும் போதே அவளது கடைசிக் கனவு என்ன என்பதை அறிவதற்கு வாசக மனம் பரபரக்கிறது. அவள் ஒரு விசித்திரமான ஆசையை வெளிப்படுத்தப் போகிறாள் என யூகிக்கவும் முடிகிறது. என்ன அந்த ஆசை? எது அந்தக் கனவு? அந்த ஆசையை எல்லோரையும் போல் தன் நண்பிகளிடம் அவளால் இலகுவில் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது. தடுமாற்றங்களால் அவள் நிலைகுலைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஒரு மாதிரி அழும்பு வேல காட்டாத. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதுக்கு முன்னால நாம் ஆசைப்படுவது என்னவோ அதை செய்திடனும் என்று கோபமாக சொன்னாள் தீபா.  சொல்லித்தொலை என அடுத்தடுத்து தோழிகளின் குரல்கள் தடித்து எழுந்தன.

ரசியா தலையில் இருந்து நழுவிய முக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டே எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள்.

எனக்கு ஒரு ஆசை இருக்கு ஆனா அது நடக்குமா என்றாள். அவளது தோழிகள் மிகச்சராசரியாகவும், உற்சாகமாகவும் என்னோட குமரே, உனக்கு பிரின்சிபால கட்டிப் பிடிக்கணுமா? இல்லை ரெண்டு ரவுண்டு சரக்குப் போடனுமா? அதுவுமில்ல, யார்கூடயாவது படுத்துக்கணுமா?”   அவர்களது ஆசைகளை ஒத்த கனவுகள் எல்லாம் சொல்லி அவளை அவசரமூட்டுகிறார்கள். ஆனால் ரசியாவின் ஆசையோ சின்னத்தனங்களிலிருந்தும், உடல்சார்ந்த ஆசைகளிலிருந்தும் வேறுபட்டதாக அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தூரத்தில் இருந்தது. அவள் தன் வழக்கமான சிரிப்புடன் சொன்னாள் எனக்கு ஒரு தடவை பாங்கு சொல்லனும் சட்டென்று தோழிகள் மத்தியில் நிசப்தம் நிலவியது. ஒரு பெரிய அதிர்ச்சி அந்தக் கணத்தை நிறைத்தது. யாரும் எதுவும் பேசாமல் சில கணங்கள் கரைந்தன. கடைசியில் தோழிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். “நீ என்ன கிறுக்குத்தனமாகப் பேசறே, வேற யாரும் கேட்டுடப் போறாங்க.” சமீனா கோபமாகச் சொல்கிறாள். சரக்கு அடிப்பது, யார் கூடவாவது படுத்துக்கிறது, ஒரு ஆணைக் கட்டிப் பிடிப்பது போன்ற எளிய ஆசைகள் சாதரணமாக எடுத்துக்கொள்ளப்படும் போது கலாசார மரபு மீதான மீறலைக் கோரும் ஒரு பெண்ணின் குரல் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டு விடும் அபத்தமான துயரமே கதையின் மையமான இடமாகிறது. 

ரசியா, தங்களது கல்லூரி வாழ்வின் கடைசி ஆசையைக் நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது என்ற முடிவை ஞாபகமூட்டுகிறாள். இதற்கெல்லாம் கூட இருக்க முடியாது. மதம் கடவுள் எல்லாம் தொட்டா சுடுகிற சங்கதி

என்று அவர்கள் நழுவி செல்கின்றனர். இப்போது கலாசாரத்தின் விளிம்பில் தனித்துவிடப்பட்ட ஒருத்தியாக ரசியா நிற்பதை வாசக மனம் பரப்புடன் எதிர்கொள்கிறது.

ரசியாவுக்கு இந்த ஆசை அவளது சின்ன வயதில் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை அவளது அப்பாவும் அம்மாவும் அவளை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது அங்கே கூண்டில் இருந்த ஒரு மிருகத்தை பார்த்து அதை திறந்து விடும்படி கூறி அழத் தொடங்கினாள். எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. கோபத்தில் அங்கிருந்து அவளை வெளியே கூட்டி வந்து விட்டனர். ஜும்மாவுக்கு நேரமானதால் அவளுடைய தந்தை இவர்களை அருகில் இருந்த கடைகட்டில் உட்கார வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்று விட்டார். அப்போது கேட்ட பாங்கு எப்போதுமே கலையாமல் ஒரு ஆபரணம் போல ரசியாவின் காதுகளில் ஒட்டிக்கொண்டு விட்டது. அப்போதிருந்தே அந்த ஆசை அவளுடன் கூட வந்தது.

தோழிகளிடம் சொன்ன அந்த ஆசையை அம்மாவிடமும் வீட்டுக்கு வந்து சொன்னாள். அவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவள் படைத்தவனிடம் கேட்டாள். நான் ஆசைப்படுவது தப்பா?”

 அவர்களது கல்லூரி வாழ்வின் இறுதி நாட்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. ரசியாவின் தோழிகள் அவர்களது ஆசைகளை ஒவ்வொருவராக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். ஆனால் ரசியாவின் ஆசை மட்டும் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போனது.

கடைசி நாளும் நெருங்கிவிட்டது நண்பிகள் வேறு ஆசை ஒன்றை சொல்லும்படி அடம் பிடித்தார்கள். கலாசாரத்தோடு மோதுவதையும், மீறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் ரசியா தனது ஆசையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டாள். சின்ன வயதில் இருந்தே அவளுக்கு கூட இருக்கும் ஆசை அது.

ஜோதி என்ற தோழி அவளுக்கு உதவ முன்வருகிறாள். சரி நீ எப்போ பாங்கு சொல்லனும்?”

“வெள்ளிக் கிழமை” என்கிறாள். ஜோதி சொன்னதைப் போன்றே கல்லூரியிலிருந்து 10-15 கி.மீ. தொலைவிலுள்ள மனுசங்க யாரும் இல்லாத காட்டுக்குள் ரசியாவை தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தாள்.

மது அருந்துவதற்காக காட்டுக்குள் ஒதுங்கி இருந்த இரண்டு இளைஞர்கள் ரசியாவும் அந்த மாணவனும் காட்டுக்குள் நுழைவதைப் கண்டனர். அந்த இருவரும் அவர்களை வேறு விதமாகப் புரிந்து கொண்டனர்.

சின்னப் பொண்ணு என்றான் ஒருவன். பையனும் பொடியன்தான் என்றான் மற்றவன். அவனுங்களையும் கூட்டிட்டு வா என்றதும் ஒருவன் காட்டுக்கு வெளியே ஓடினான்.

ரசியா நண்பனிடம் மேற்குத் திசையைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.

 அந்த இளைஞர்கள் காட்டுக்குள் இவர்களை நோக்கி நகர்கின்றனர். மரக்கிளைகளையும், பற்றைகளையும் ஒதுக்கிக் கொண்டு நூதனமாக அவளை நெருங்குகின்றனர். அப்போது காட்டைக் கிழித்துக்கொண்டு, “அல்லாஹ் அக்பர்“ என பெண் குரலில் பறிந்தது பாங்கு!  

பச்சையின் இருளில் நூற்றாண்டுகளின் அலைகள் தழுவித் தூய்மையாக்கிய அந்த நாதம் ஆகாயத்தின் பரப்பையும் மண்ணின் ஆழங்களில் ஊன்றிய வேரையும் தொட்டது என்கிறார் உண்ணி. ஆர். ஆனால் அந்த பாங்கின் நாதம் அவளை நெருங்கிய அந்த இளைஞர்களின் இதயங்களையும் தொட்டிருக்க வேண்டும். காட்டை விலக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் அங்கேயே அசையாது நின்றனர்.

ரசியா தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் காட்டை விட்டும் வெளியேறிச் சென்று கொண்டிருந்தாள். பெண் பாங்கு காட்டையே மென்மையாக்கிவிட்டதாக வாசக மனம் நம்பிக்கை கொள்கிறது. இந்த பாங்கு பள்ளிகளிலும் ஒலிக்குமா? என்பதே கதை எழுப்ப விரும்பும் கேள்வி என நினைக்கிறேன். இந்தக் கேள்வி ஒரு கலாசார உரையாடலுக்கான மகத்தான தொடக்கம் என்றும் நினைக்கிறேன்.

 

லூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்

லூயி க்ளூக்கின் எழுத்தை தான் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதை ஐரிஷ் கவிஞர் ஈவன் போலாண்ட் 2008 ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டில் என்னிடம் சொன்னார். அவர் தனது அலுவலறை புத்தக அடுக்கிலிருந்து க்ளூக்கின் கவிதை நூல்கள் சிலவற்றை எடுத்து எனக்குத் தந்தார்.

அன்று இரவு நான் அவரது கவிதை ஒன்றின் முதல் வரிகளை வாசித்தேன்:

“நீ உயிர்த்திருக்க நான் துயில்கிறேன்.
இது இவ்வளவு எளிய விஷயம்.
கனவுகள் அவையளவில் ஒன்றுமில்லை.
அவை நீ கைக்கொண்டாளும் நோய்மை,
அதற்கு மேல் ஒன்றுமில்லை.”

“ஒரு துக்க கனவு,” என்பது கவிதையின் தலைப்பு. மிக ஆழமான அந்தரங்க உணர்வும் வித்தியாசமான வகையில் உச்சத்துக்கு உயர்ந்ததும் தொன்மத்தன்மை கொண்டதுமானதன் கலவை, அதன் கச்சிதமாய்ச் செதுக்கப்பட்ட, காயப்பட்ட தொனி என்னைத் திகைக்கச் செய்தது.

எமிலி டிக்கின்சன் பற்றிய கட்டுரை ஒன்றில் க்ளூக் எழுதினார்: “தனிமனித அதிகாரத்தைத் துறக்காமல் ஒற்றை வாசகரிடத்தில் இந்த அளவு நம்பிக்கை வைப்பதில் இவ்வளவு வெற்றி காணும் படைப்புத் திரளொன்றை நினைத்துப் பார்ப்பதும் கடினம்.” டிஎஸ் எலியட் கவிதை குறித்து க்ளூக்கின் அவதானிப்பு: “நுண்ணுணர்வு கொண்ட வாசகர்களில் பலர் எதிர்க்குரல் எழுப்புவது குறித்த என் ரசனையைப் பகிர்ந்து கொள்ளாதவர்களாய் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.” கவிஞர் ஜார்ஜ் ஓப்பன் குறித்து எழுதும்போது க்ளூக், “வெற்றிடத்தின் மேதை; கட்டுப்படுத்திக் கொள்ளுதல், பக்க அணிமை, நுட்பங்கள், இவற்றைக் கையாள்வதில் வெற்றி கொண்டவர்,” என்று விவரித்தார்.

க்ளூக்கின் எழுத்து குறித்தும் இதை எல்லாம் சொல்லி விடலாம். அவரது கவிதைகள் நெறிப்படுத்தப்பட்டவை, மிக அதிக அளவில் ஆற்றல் கூட்டப்பட்டவை, கட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்பவை; எதிர்க்குரல் எழப்புவது குறித்து அச்சமற்றவை என்றபோதும் ஒருவேளை அது குறித்த பீதி கொண்டும் இருக்கக்கூடும். “நிறைவடையாதவற்றின் ஆற்றல் பூட்டிக் கொள்வது,” குறித்து அவர் விவரித்திருக்கிறார், படைக்கப்பட்ட அந்த முழுமையான ஒன்று, அதே வேளை தன்னில் நிறைவடையாது நிற்பதன் சக்திகரமான இருப்பை இழக்காதிருப்பது: “பூரண வடிவம் பெற்றது போல் தோன்றும் கவிதைகளை நான் வெறுக்கிறேன், அவை மிக இறுக்கமாய் பூட்டப்பட்டிருக்கின்றன; தீர்மானமான முடிபினுள் மந்தையில் ஒன்றெனச் செலுத்தப்படுவதை வெறுக்கிறேன்.”

அவரது கவிதைகள் ஏதுமற்ற வெளியைத் திறந்து கொடுக்கின்றன. அவரது கவிதைகளின் ஒலிகள் துவக்கத்தில் தம் சந்தங்களிலிருந்து தயக்கத்துடன் வெளிப்படுகின்றன, பின்னர் தீரத்துடன், சில சமயம் சினந்து. உண்மை உரைக்கத் துணியும்போது எத்தகைய தொனியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதனை க்ளூக் அறிந்திருக்கிறார். மெய்ம்மையில் மிகக் குறைவே சொல்லுக்குரியது என்ற நாசகர, அதே சமயம், ஆற்றல் சேர்க்கும் பிரக்ஞை கொண்டவர் அவர், அதன்பின் குரலெழுப்பும் முயற்சியில் இருள் சக்தி எத்தனை வெளிப்படுகிறது என்பதையும் அவர் அறிவார். அவரது கவிதைகளில் தொனி நிறுத்தி வைக்கப்படுகிறது, வெளிப்பட அனுமதிக்கப்படுகிறது. அவரது ஆக்கங்கள் குரல் நிறைந்தவை, கடினமான பின்விளைவை, அல்லது, ஆன்மாவின் வடிவத்தை, கண்டறியவே அவர் புறப்பட்டது போல, பெரும்பாலும் இக்குரல் அடங்கி ஒலிக்கிறது, தாழ்குரலில் பேசுகிறது.

க்ளூக்கின் மாபெரும் திறமை குறித்தும் அவரது குரலின் தீரம் குறித்தும் உணர்த்தும் அவரது கவிதையொன்று உண்டென்றால், அது அவரது ‘தி வைல்ட் ஐரிஸ்’ தொகுப்பின் முதல் கவிதைதான். அது இப்படி துவங்குகிறது:

“என் வாதைகளின் முடிவில்
கதவொன்றிருந்தது.”

இந்தப் படிமம் தனக்குள் பல ஆண்டுகள் இருந்ததென அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன், அதற்குரிய இடத்தை அவர் பின்னரே கண்டு கொண்டார். அந்தப் புத்தகத்தில் உள்ள கவிதை வரிசையில், க்ளூக் சுத்திகரிக்கப்பட்ட மொழியில் இயற்கையைப் பின் தொடர்கிறார், அவரது குரல் இரக்கத்தாலும் அதிசய உணர்வாலும் நிறைந்திருக்கும் அதே சமயம் ஆற்றல் மற்றும் உழைப்பின் உணர்வும் கொண்டுள்ளது. இவ்வுலகம் வேதனை மற்றும் அதிசய உணர்வுகளுக்கு இடையே நிககும் போராட்டம் என்ற சித்திரத்தை அவரது கவிதைகளில் நாம் காண்கிறோம். இதன் பயனாகவே அவரது கவிதைகள் உருவம் பெற்றன என்ற எண்ணமும் எழுகிறது, துல்லியமான, ஆனால் அதே சமயம் உணர்த்து தன்மை கொண்ட சொற்களுக்கும், ஒலிநயம் மிக்க, ஆனால் அதே சமயம் பூச்சுக்களற்ற நேரடித்தன்மை கொண்ட சொற்றொடர்களுக்கும் க்ளூக்கின் கற்பனையினுள் நிகழ்ந்த போராட்டத்தின் விளைவுகள் என்று தோன்றுகிறது.

வாழும் கவிஞர்களில் வேறு எவரது குரலிலும் இத்தனை உயிர்ப்புத்தன்மை கொண்ட உள்நீரோட்டமும் இவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட சந்தங்களும் இருந்தபோதும் இந்த அளவு தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும், அவசர உந்துதல்கள் கொண்ட ஆக்கங்கள் இருக்குமென்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நன்றி: The Guardian 

பதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”

​​எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-…

A/c no.34804520231
(yaavarum publishers)​​
SBI bank Chinmaya nagar branch
IFSC code: SBIN0007990 or

Gpay 9841643380

ஆன்லைனில் பெற  ​​https://be4books.com/product/7462/

நூல் & அட்டை வடிவமைப்பு : Gopu Rasuvel
எழுத்தாளர்கள் கோட்டோவியம் : ஓவியர் Jeeva Nanthan

இது ஒரு யாவரும் & பதாகை கூட்டு வெளியீடு

சக்கரங்கள் மிதித்தேறும் கலசங்கள் – தேர் நாவலை முன்வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

தேர் என்றவுடன் அனைவருக்குமே ஒரு திருவிழா கொண்டாடும் குதூகலம் எப்படியோ ஒட்டிக் கொண்டு விடுகிறது. எந்தக் கோவிலோ, எந்த ஊரோ, தேரோட்டம் என்றாலே அது ஒரு மகிழ்ச்சி பொங்கும் விஷயம்தான். ஒரு கோவிலின் திருவிழா பத்து நாட்கள் என்றால், பத்தாவது நாள் தேர்த்திருவிழாதான். இந்தப் பத்தாவது நாளை நோக்கியே மொத்தத் திருவிழாவின் மகிழ்ச்சியும் கரை புரண்டோடும். தேர் அழகழகான வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு, வாழையும், கமுகும் கட்டப்பட்டு, சுற்றிலும் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க, அசைந்து வருவதே ஒரு அழகுதான். ஊத்துக்காடு வெங்குடுசுப்பையர், கண்ணனை, ‘ஆடாது அசங்காது வா கண்ணா” என்று அழைக்கும், பாடல் ஒலிப்பது போலவே ஒரு தேர் அசைந்து வருவது இருக்கும். தேரோட்டம் ஏன் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது??. கோவிலுக்குப் போக முடியாமல் இருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும், கை கால் முடியாதவர்களுக்கும், கோவிலுக்குச் சென்று இறைவனைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் நிறைய இறைவனையே நினைத்து ஏங்குபவர்களுக்கும், அவர்களுடைய ஆசையைத் தீர்த்து வைப்பதற்காகவே இறைவன் தேரில் ஏறித் தெருவில் வருகிறான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால். ஒரு தேரை உருவாக்கி அதைத் தெருவில் ஓட வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமன்று. அந்தத் தேரை வடிவமைப்பதிலிருந்து, அதனை அலங்கரித்துத் தெருவில் ஓட வைப்பது வரை அத்தனைக்கும் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள். இறைவன், எளியோரைக் காண ஓடோடி வருகிறேன் என்றாலும், மனிதர்களாகிய நாம் பிடித்துக் கொண்டு தொங்குவது மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட தேவையற்ற சம்பிரதாயங்கள் தானே? ஆனால், காலம் காலமாக கட்டமைப்பவர்கள் மேலோர் என்றும், மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுபவர்களாகவும், முன்னவர் ஆண்டைகளாகவும், பின்னவர் அடிமைகளாகவும் கருதப்படுகிறார்கள்.

இந்த மேலோர், கீழோர் என்பது பணம், பொருள் என்ற அடிப்படையிலும், சாதி, மதம் என்ற அடிப்படையிலும் அமைந்து விடுகிறது. கற்சிலை வடிப்பவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அதே சிலை கருவறைக்குள் இருக்கும்போது பூசை செய்பவன் மேலோனாகவே இருக்க வேண்டும். கோயிலையும், கருவறையையும் கட்டுபவன் கீழோனாக இருக்கலாம். ஆனால், அந்தக் கருவறைக்குள் செல்லும் உரிமை மோலோனுக்கே உண்டு. இந்தப் பாகுபாடு காலம் காலமாக இன்னும் கூட வழக்கொழியாமல் இருந்துதானே வருகிறது???

தரமனிட்டி என்ற வடகன்னட கிராமத்தில் பாண்டுரங்கர் கோவிலில் வெகு காலமாக ஓடாத தேரை ஓட வைக்க நரபலி கொடுக்க வேண்டும் சாஸ்திரம் கற்றவர்கள் ராஜா ராணியிடம் தெரிவிக்கின்றனர். அந்தத் தேர் கல் சக்கரங்களாலானது. நரபலி கொடுக்க சமூகத்தில் பின் தங்கிய வகுப்பினரிலிருந்து ஒருத்தரைக் (ஆணோ, பெண்ணோ, குழந்தையோ) கொண்டு வரும்படி ராஜா கட்டளையிடுகிறார். இந்தச் செய்தி மக்கள் மத்தியில் கசிந்து, சேரி ஜனங்கள் இரவோடிரவாக ஊரையே காலி செய்து கொண்டு போய் விடுகிறார்கள். ஆளே கிடைக்காமல் இருக்கும்போது, ஆள் பிடித்து வர வேண்டிய பொறுப்பிலுள்ள கணக்குப் பிள்ளையின் மனைவி கோவிலுக்குப் போகிறாள். அங்கு கோவிலின் ஓரத்தில் தன் கர்ப்பிணி மனைவியோடும், ஆறேழு குழந்தைகளோடும், பசியோடு உட்கார்ந்திருக்கிறான் தோல்பாவை கூத்து நடத்தும் ஒருவன். அவனுக்கு, சோளம், அரிசி எல்லாம் மூட்டை, மூட்டையாக தருவதாக ஆசை காட்டி, அவர்களுடைய ஒரு குழந்தையை, தேருக்கு பலியிடத் தர வேண்டும் என்று கேட்கிறாள். தந்தை ஒத்துக் கொள்கிறான்; தாய் ஒத்துக் கொள்ளவில்லை. எப்படியோ ஒத்துக் கொள்ள வைக்கப் படுகிறாள். தேரோட்டத்தன்று குழந்தை தேர்க் காலில் பலியடப் படுகிறான். அதற்கு ஈடாக, ராஜா, அவனுடைய குடும்பத்திற்கு, கள்ளிக்குத்தி என்ற கிராமத்தில் நிலமும், வீடும் எல்லாம் ஒதுக்கித் தருகிறான். பத்திரம் எழுத்தி தந்து விடுகிறான். இது நடந்து முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ரத்த சேவை என்ற பெயரில், அந்த வம்சத்துக் குடும்பத்தில், மூத்த பையன், தேரோட்டம் தொடங்குமுன், அந்த கல் தேர்ச்சக்கரத்தில் தலையை முட்டிக் கொண்டு, அந்த ரத்தத்தில், தேர்ச்சக்கரத்தில் திலகமிட வேண்டும் என்ற வழக்கம் கொண்டு வரப்படுகிறது. முதல் தலைமுறையில், பதினைந்து நாட்கள் விரதமிருந்து, பல கோயில்களுக்கு யாத்திரையாகச் சென்று, சரியாக தேரோட்டத்திற்கு முதல் நாள் அந்த கிராமத்தில் சென்று தங்கி, அடுத்த நாள், ரத்த சேவையை ஆற்றி, பொருளீட்டி வருவது என்ற வழக்கம் நடக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளில், இந்த வழக்கம், கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து விடுகிறது. இவர்களும் அதை கடனே என்று செய்கிறார்கள். அவர்களும், அதை புனித சேவையாகக் கருதி பொருள் தருவதில்லை. நான்காவது தலைமுறையில் வரும், தேவப்பா பற்றியதாக நாவல் விரிகிறது.

தேவப்பா, இந்த தொன்மைப் பழக்க வழக்கங்களை விடுத்து, மனிதர்களை நேசிப்பதையும், சமூகத்திற்குச் சேவை செய்வதையும் இறைப்பணியாக எடுத்துக் கொண்டான் என்பதை நாவல் மறைமுகமாகக் கூறி முடிவடைகிறது.

பிறப்பாலேயே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று அடையாளப்படுத்தும் வழக்கம் இன்றளவும் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஒரு தேரும், கிராமமும், கோவிலும் பற்றிச் சொல்வது போல இருந்தாலும், சமூகத்தில் உள்ள பாகுபாட்டையும்,, கருத்துருவாக்கத்தையும் நாவல் பேசுவதை வாசகனால் உணர முடிகிறது.

நூற்றியைம்பதாவது தேரோட்டத்தின்போது நடைபெறும் கொந்தலிகர் கதை மூலமாக ரத்தசேவை ஆரம்பித்த கதை விவரிக்கப்படுகிறது. எடுத்தவுடனே, அவர்கள் தேரின் அடுக்குகளை விவரிக்கிறார்கள்.ஒருபுறம், பரிணாம வளர்ச்சியின் அடுக்குகள் போல் அவை இருக்கின்றன. மறுபுறம், உச்சியில் ஒரு பிரிவினர் உட்கார்வதற்கு, கீழே இத்தனை பேர் அமுங்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தேர் நகர்வதற்கு நரபலி வேண்டும் எனும் போது, மேல் சாதியினர் என்று சொல்லக் கூடியவர் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள, அறியாமையினாலும், வறுமையினாலும் வாடும் கீழ்சாதியைச் சேர்ந்த கூத்து நடத்துபவனைப் பயன்படுத்திக் கொள்வது மேல் சாதியினரின் கயமைத்தனத்தைக் காட்டுகிறது.

ஒரு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் என்பவர், தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற அறிவும் அற்றவர்களாக இருந்தனர். அவர்களுடைய அறியாமையையும், அவர்களோடு அவர்களின் வறுமையையும் சேர்த்தே பயன்படுத்திக் கொண்டது மேல் சாதி. வயிற்றை நிரப்பி, வஞ்சகமாக ஏமாற்றி வந்தது. காலம் மாற மாற, அவர்களிடம் விழிப்புணர்வு தோன்றியபோது, அவர்களை வேறு விதமாக ஏமாற்றுகிறது.. தவறான அரசியல் செய்வதற்கும், அவர்கள் நேரடியாகச் செய்யாத தவற்றின் பழி ஏற்பதற்கும் அவர்களப் பயன்படுத்திக் கொள்கிறது. தேவப்பா குடும்பத்திற்கு நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் வழங்கப்பட்ட நிலத்தை அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கிறது மேல்சாதி என்று சொல்லக் கூடிய கௌடர் குடும்பம். அதோடு, இறந்து போன குமரப்பாவின் மனைவியையும் தான் பெண்டாள அடிமைபடுத்தி கொள்கிறது. தொடர்ந்து இப்படி கீழ் சாதியினரை அடிமைப்படுத்தியே வைத்திருக்கும் அவர்களின் ரத்த வேவை என்ற கட்டுக்களை மீறிக் கொண்டு ஒருவன் அந்தச் சாதியிலிருந்து வெளி வருவது கட்டுடைத்தலின் குறியீடாகும். அவன் தனக்குப் பிடித்தமான சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் இவை போன்ற செயல்கள் உயர்ந்த குலத்தில் பிறந்தோர்க்கு மட்டுமே சொந்தமானது என்பது போன்ற தோற்றத்தை உடைக்கிறான். காந்தியின் வார்தா ஆசிரமத்தில் போய் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான்..

அதே போல, நாவலில் இன்னொரு அழகான சித்திரமும் வரையப்பட்டிருக்கிறது. உயர்ந்தோர் எனச் சமுதாயத்தில் மதிக்கப்படும் கௌடர் பிறன் மனைவியையும், சொத்துக்களையும் வஞ்சகமாகச் சேர்த்து வைத்துக் கொள்கிறான். கோவில் நகைகளையும் கூட கொள்ளையடிக்கிறான். ஆனால், சமூகத்தில் கீழ்சாதி என்றும், தவறான பழக்கங்கள் கொண்டவன் என்றும் ஒதுக்கப்படும், தேவப்பா ஹோலிப் பண்டிகையில் நீர் ஊற்றுவதற்கு என்று நேர்ந்து விடப்பட்டிருக்கும் குலத்தைச் சேர்ந்த கைம்பெண்ணை, அவளுடைய இரண்டு குழந்தைகளோடு திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏற்றுக் கொள்கிறான். தாலி கட்டித் திருமணம் செய்து கொள்ளாமலும், உடலால் கூடவே இல்லாமலும் கூட மனதளவில் மனைவியாக ஏற்றுக் கொண்டு அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். மனம் சார்ந்த உறவே முக்கியம் என்று கடிதம் மூலம் தெரிவிக்கிறான். இந்த இடத்தில் சமுதாயத்தில் உயர்ந்தோர் யார், தாழ்ந்தோர் யார் என்ற கேள்வி வாசகன் மனதில் தோன்றுகிறது.

தரமனிட்டி கிராமத்தில் வாழும், சோமப்பா எனும் பெரியவர், தான் ஜைன மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், பாண்டுரங்கர் கோயிலின் மீதும், அந்தக் கிராம நலன் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும், அவர் சார்ந்த மதத்தினைச் சொல்லிச் சொல்லி அவமானப்படுத்தப்படுகிறார். இறுதியில், திருட்டுப் பழிக்காகவும் காவல் நிலையம் சென்று, தங்கள் மத வழக்கப்படி, சல்லேகண விரதமிருந்து உயிர் விட ஆயத்தமாகிறார்.

அன்பு, ஒற்றுமை, கருணை எல்லாவற்றையும் விட சாதி, மதம், பொருள், இவற்றை முன் நிறுத்தும் பொருள் வயமான ஒரு வட்டத்துக்குள் சுற்றி வருவதையே இந்தச் சமுதாயத்தில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இந்தக் கதையின் பின்னிணைப்பாக, ஒரு கதை சொல்லப்படுகிறது. அந்த தேவப்பாவின் குழந்தையைப் பலியிடுவதற்காக தேர்க்காலில் வைக்கும்போது, அந்த பாண்டுரங்கனே கருடனில் பறந்து வந்து, அந்தக் குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு போனானாம் என்று.

இந்த உயிர்த்தியாகம், பற்றுதலின்மையின் ஒரு வடிவமாகும். கபீர்தாசர், அதிதிகளுக்கு அமுது படைக்க வேண்டித் திருடப் போனபோது, கடைச் சொந்தக்காரன் கையில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக, தன் புதல்வனின் தலையை வெட்டி விடுகிறான். திருநீலகண்டர், ஈசன், பிள்ளைக்கறி கேட்டான் என்பதற்காக பாலகனாகிய தன் மகன் சீராளனை வெட்டி அமுது படைக்கிறான். இந்த இடங்களிலெல்லாம், இறைவன், அவர்களுடைய பற்றின்மையையும், பக்தியையும் சோதிக்கவே இப்படிச் செய்கிறான். நெஞ்சத்தில் தூய்மையாக இருந்து கொண்டு, துர்புத்திகள் இல்லாமல் இருப்பதே இறைத்தனமையை அடையும் மார்க்கம் என்பதை அகங்காரமும், ஆணவமும் கொண்டு பாகுபாட்டில் திளைக்கும் மனிதர்கள் புரிந்து கொள்வதே இல்லை என்பதையும் நாவல் பேசுகிறது என்பதை வாசகனால் உணர முடியும். சக்கரங்கள் உருண்டோடாமல், கலசம் தாங்கிய தேர் எப்படி ஓட முடியும்? தேர் என்பது வெறும் அடுக்குகளும் கலசமும் மட்டுமன்று. சக்கரங்கள் மண்ணில் அழுந்தி விடாமல் ஓட வேண்டும். ஓடினால்தானே தேரோட்டம்; நின்றால் அது வெறும் நிலைத்தேர். இது ஒரு படிமமாக இந்த நாவலில் அமைந்திருப்பது சிறப்பு.

ஏதோ ஒரு நாட்டுப்புறக் கதை போலத் தோன்றினாலும், இந்த நாவல், மிக நுட்பமாக, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் பேசுகிறது. மிகவும் சுவாரசியமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொந்தலிகர் சொல்லும் கதை வடிவில் சொல்லப்பட்டிருப்பது, நம் தமிழ் நாட்டின் வில்லுப் பாட்டு போல இருக்கிறது. அதன் பிறகும் கதை விவரணை, வாசகனைக் கட்டிப் போடுகிறது. ஏதோ கர்நாடாகவின் ஒரு கிராமத்துக்குப் போய் வந்த மாதிரி ஒரு உணர்வைப் பெற முடிந்தது.

ஒரு நாட்டுப் புறக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்த நாவலைப் புனைந்திருக்கும் கன்னட எழுத்தாளர் ராகவேந்திர பாடீல் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். மொழிபெயர்ப்பு என்று தோன்றா வண்ணம் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல், தங்கு தடையில்லாத மொழிபெயர்ப்பாகச் செய்திருக்கும் பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். 2003 ல், கன்னடத்தில் வெளிவந்துள்ள இந்த நாவல், 2011 ல் சாகித்ய அகாடமியால் மொழிபெயர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கூட அதிகமாக ஒன்றும் மாறிவிடவில்லை என்ற மனத் தாங்கலோடு புத்தகத்தைக் கீழே வைக்க வேண்டியிருக்கிறது.