மலையாள எழுத்தாளரான உண்ணி. ஆர் உடைய ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. பாங்கு எனும் அவரது கதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாதுஷா என்கிற கால்நடையாளன் எனும் தொகுப்பிலுள்ள கதை.
கதைகூறலில் ஒரு திட்டவட்டமான முறையென உண்ணியிடம் பிடிவாதங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நவீனத்துவம், பின்- நவீனத்துவம் என ஒரு கலவையான கதைகூறல் முறை அவரிடம் உள்ளது. அவரது பாங்கு ஒரு பெண்ணின் வித்தியாசமான ஆசையைச் சுற்றி நகரும் கதை.
ஒரு கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தீபா, ஜோதி, சமீனா, ரசியா என்கிற நான்கு மாணவிகளும் தங்களது கல்லூரி வாழ்க்கை நிறைவுக்கு வரும் தருணம் தங்களது நீண்ட கால அல்லது கல்லூரி வாழ்க்கையில் முளைத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது எனவும் முடிவெடுக்கின்றனர். இதில் தீபா, ஜோதி, சமீனா ஆகிய மூவரும் தங்களது ஆசைகளை சொல்லிவிட்டனர். கல்லூரி ஹெட்டோட கையை முத்தமிடுவது தீபாவின் ஆசை. ஆங்கிலம் படிக்கும் மோகனிடம் தன் காதலை வெளிப்படுத்துவது ஜோதியின் ஆசை. அஸ்ரப் என்கிற நண்பனோடு உட்கார்ந்து சினிமா பார்ப்பது சமீனாவின் ஆசை. மூவரது ஆசைகளும் சராசரியான பெண்களின் ஆசைகளாக கதைக்குள் வருகின்றன.
இந்த மூவரது ஆசைகளும் எந்த புதுமையுமற்ற சராசரி வாழ்விலிருந்தும், வாழ்வின் ஆழமற்ற மேற்பரப்பிலிருந்தும் வருவதாகும். வாழ்வின் உயர்ந்த லட்சியத்திலிருந்தோ, ஆழ்ந்த கனவுகளிலிலிருந்தோ அந்த ஆசைகள் எழுந்து வருவதில்லை. ஆனால் ரசியா என்கிற மாணவி மௌனமாக இருக்கும் போதே அவளது கடைசிக் கனவு என்ன என்பதை அறிவதற்கு வாசக மனம் பரபரக்கிறது. அவள் ஒரு விசித்திரமான ஆசையை வெளிப்படுத்தப் போகிறாள் என யூகிக்கவும் முடிகிறது. என்ன அந்த ஆசை? எது அந்தக் கனவு? அந்த ஆசையை எல்லோரையும் போல் தன் நண்பிகளிடம் அவளால் இலகுவில் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது. தடுமாற்றங்களால் அவள் நிலைகுலைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“ஒரு மாதிரி அழும்பு வேல காட்டாத. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதுக்கு முன்னால நாம் ஆசைப்படுவது என்னவோ அதை செய்திடனும்” என்று கோபமாக சொன்னாள் தீபா. “சொல்லித்தொலை” என அடுத்தடுத்து தோழிகளின் குரல்கள் தடித்து எழுந்தன.
ரசியா தலையில் இருந்து நழுவிய முக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டே எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள்.
“எனக்கு ஒரு ஆசை இருக்கு ஆனா அது நடக்குமா” என்றாள். அவளது தோழிகள் மிகச்சராசரியாகவும், உற்சாகமாகவும் “என்னோட குமரே, உனக்கு பிரின்சிபால கட்டிப் பிடிக்கணுமா? இல்லை ரெண்டு ரவுண்டு சரக்குப் போடனுமா? அதுவுமில்ல, யார்கூடயாவது படுத்துக்கணுமா?” அவர்களது ஆசைகளை ஒத்த கனவுகள் எல்லாம் சொல்லி அவளை அவசரமூட்டுகிறார்கள். ஆனால் ரசியாவின் ஆசையோ சின்னத்தனங்களிலிருந்தும், உடல்சார்ந்த ஆசைகளிலிருந்தும் வேறுபட்டதாக அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தூரத்தில் இருந்தது. அவள் தன் வழக்கமான சிரிப்புடன் சொன்னாள் “எனக்கு ஒரு தடவை பாங்கு சொல்லனும்” சட்டென்று தோழிகள் மத்தியில் நிசப்தம் நிலவியது. ஒரு பெரிய அதிர்ச்சி அந்தக் கணத்தை நிறைத்தது. யாரும் எதுவும் பேசாமல் சில கணங்கள் கரைந்தன. கடைசியில் தோழிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். “நீ என்ன கிறுக்குத்தனமாகப் பேசறே, வேற யாரும் கேட்டுடப் போறாங்க.” சமீனா கோபமாகச் சொல்கிறாள். சரக்கு அடிப்பது, யார் கூடவாவது படுத்துக்கிறது, ஒரு ஆணைக் கட்டிப் பிடிப்பது போன்ற எளிய ஆசைகள் சாதரணமாக எடுத்துக்கொள்ளப்படும் போது கலாசார மரபு மீதான மீறலைக் கோரும் ஒரு பெண்ணின் குரல் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டு விடும் அபத்தமான துயரமே கதையின் மையமான இடமாகிறது.
ரசியா, தங்களது கல்லூரி வாழ்வின் கடைசி ஆசையைக் நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது என்ற முடிவை ஞாபகமூட்டுகிறாள். “இதற்கெல்லாம் கூட இருக்க முடியாது. மதம் கடவுள் எல்லாம் தொட்டா சுடுகிற சங்கதி”
என்று அவர்கள் நழுவி செல்கின்றனர். இப்போது கலாசாரத்தின் விளிம்பில் தனித்துவிடப்பட்ட ஒருத்தியாக ரசியா நிற்பதை வாசக மனம் பரப்புடன் எதிர்கொள்கிறது.
ரசியாவுக்கு இந்த ஆசை அவளது சின்ன வயதில் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை அவளது அப்பாவும் அம்மாவும் அவளை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது அங்கே கூண்டில் இருந்த ஒரு மிருகத்தை பார்த்து அதை திறந்து விடும்படி கூறி அழத் தொடங்கினாள். எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. கோபத்தில் அங்கிருந்து அவளை வெளியே கூட்டி வந்து விட்டனர். ஜும்மாவுக்கு நேரமானதால் அவளுடைய தந்தை இவர்களை அருகில் இருந்த கடைகட்டில் உட்கார வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்று விட்டார். அப்போது கேட்ட பாங்கு எப்போதுமே கலையாமல் ஒரு ஆபரணம் போல ரசியாவின் காதுகளில் ஒட்டிக்கொண்டு விட்டது. அப்போதிருந்தே அந்த ஆசை அவளுடன் கூட வந்தது.
தோழிகளிடம் சொன்ன அந்த ஆசையை அம்மாவிடமும் வீட்டுக்கு வந்து சொன்னாள். அவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவள் படைத்தவனிடம் கேட்டாள். “நான் ஆசைப்படுவது தப்பா?”
அவர்களது கல்லூரி வாழ்வின் இறுதி நாட்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. ரசியாவின் தோழிகள் அவர்களது ஆசைகளை ஒவ்வொருவராக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். ஆனால் ரசியாவின் ஆசை மட்டும் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போனது.
கடைசி நாளும் நெருங்கிவிட்டது நண்பிகள் வேறு ஆசை ஒன்றை சொல்லும்படி அடம் பிடித்தார்கள். கலாசாரத்தோடு மோதுவதையும், மீறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் ரசியா தனது ஆசையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டாள். சின்ன வயதில் இருந்தே அவளுக்கு கூட இருக்கும் ஆசை அது.
ஜோதி என்ற தோழி அவளுக்கு உதவ முன்வருகிறாள். “சரி நீ எப்போ பாங்கு சொல்லனும்?”
“வெள்ளிக் கிழமை” என்கிறாள். ஜோதி சொன்னதைப் போன்றே கல்லூரியிலிருந்து 10-15 கி.மீ. தொலைவிலுள்ள மனுசங்க யாரும் இல்லாத காட்டுக்குள் ரசியாவை தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தாள்.
மது அருந்துவதற்காக காட்டுக்குள் ஒதுங்கி இருந்த இரண்டு இளைஞர்கள் ரசியாவும் அந்த மாணவனும் காட்டுக்குள் நுழைவதைப் கண்டனர். அந்த இருவரும் அவர்களை வேறு விதமாகப் புரிந்து கொண்டனர்.
“சின்னப் பொண்ணு” என்றான் ஒருவன். “பையனும் பொடியன்தான்” என்றான் மற்றவன். “அவனுங்களையும் கூட்டிட்டு வா” என்றதும் ஒருவன் காட்டுக்கு வெளியே ஓடினான்.
ரசியா நண்பனிடம் மேற்குத் திசையைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.
அந்த இளைஞர்கள் காட்டுக்குள் இவர்களை நோக்கி நகர்கின்றனர். மரக்கிளைகளையும், பற்றைகளையும் ஒதுக்கிக் கொண்டு நூதனமாக அவளை நெருங்குகின்றனர். அப்போது காட்டைக் கிழித்துக்கொண்டு, “அல்லாஹ் அக்பர்“ என பெண் குரலில் பறிந்தது பாங்கு!
பச்சையின் இருளில் நூற்றாண்டுகளின் அலைகள் தழுவித் தூய்மையாக்கிய அந்த நாதம் ஆகாயத்தின் பரப்பையும் மண்ணின் ஆழங்களில் ஊன்றிய வேரையும் தொட்டது என்கிறார் உண்ணி. ஆர். ஆனால் அந்த பாங்கின் நாதம் அவளை நெருங்கிய அந்த இளைஞர்களின் இதயங்களையும் தொட்டிருக்க வேண்டும். காட்டை விலக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் அங்கேயே அசையாது நின்றனர்.
ரசியா தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் காட்டை விட்டும் வெளியேறிச் சென்று கொண்டிருந்தாள். பெண் பாங்கு காட்டையே மென்மையாக்கிவிட்டதாக வாசக மனம் நம்பிக்கை கொள்கிறது. இந்த பாங்கு பள்ளிகளிலும் ஒலிக்குமா? என்பதே கதை எழுப்ப விரும்பும் கேள்வி என நினைக்கிறேன். இந்தக் கேள்வி ஒரு கலாசார உரையாடலுக்கான மகத்தான தொடக்கம் என்றும் நினைக்கிறேன்.