பூமணியின் அஞ்ஞாடி – I : பின்னணி

– என். கல்யாணராமன் –

poomani-new.jpg.crop_display_0

2012ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியின் அதிகாலைப் பொழுதொன்றில் நான் கோவில்பட்டி வந்திறங்கினேன். தென் தமிழகத்தில் உள்ள சிறிய, ஆனால் பரபரப்பான, தொழில் நகரம். அதன் மக்கள்தொகை ஏறக்குறைய ஒரு இலட்சம் இருக்கலாம். தென் இந்தியாவில் உள்ள பல மொபசல் நகரங்களைப் போலவே கோவில்பட்டியும் முதல் பார்வையில் ஒழுங்கற்ற, சீர்குலைந்த தோற்றத்தை அளித்தது. மற்ற நகரங்களைப் போலவே இங்கும் சமநிலை குலைந்த பொருளாதாரச் செழிப்பையும் அபரித நுகர்வையும் சுட்டும் அடையாளப் புள்ளிகளை அண்மைக் காலங்களில் காண முடிந்தது: பகட்டான தங்கும் விடுதிகள், கார் விற்பனைக் கூடங்கள், சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கும் வாடகைக் கார்கள், தனியார் மருத்துவமனைகள், நிரம்பி வழியும் அலமாரிகளைக் கொண்ட மருந்துக்கடைகள். துணிகள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் ஆகியவற்றைத் தயாரிப்பதை நீண்ட பாரம்பரியமாகக் கொண்டுள்ள இந்தத் தொழில் நகரம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப் பெரும் பரப்பில் விரிந்திருக்கும் கரிசல் மண்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது- இந்தப் பிரதேசத்தை கரிசல் பூமி என்று அழைக்கிறார்கள். மழைநீர்ப் பாசனம் மட்டுமே சாத்தியப்படும் இப்பூமியில் விவசாயம் நெல்லைவிட சாமைப் பயிர்களுக்கே உகந்தது. பருவநிலைக்கேற்ப வறட்சியையும், கடந்த காலத்தில் அவ்வப்போது நேர்ந்த பஞ்சத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய பிழைப்பு. மதுரை (100 கி.மீ.), திருநெல்வேலி (55 கி.மீ.), துறைமுக நகரம் தூத்துக்குடி (60 கி.மீ.) என்று பெருநகரங்கள் பலவும் அண்மையில் இருப்பது போதாதென்று கரிசல் பூமியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் எட்டயபுரம், கழுகுமலை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் போன்ற பிற மையங்களும் கோவில்பட்டிக்கு வெகு அருகில் அமைந்துள்ளன.

பேருந்து நிலையத்துக்குச் செல்ல ஒரு ஆட்டோவைப் பிடிக்கிறேன். அது ஒரு கிலோ மீட்டர் தொலைவுகூட இல்லை. பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு தங்குமிடத்தில் அறை எடுக்கிறேன். அதன் கீழுள்ள ரெஸ்டாரெண்டில் எளிய காலை உணவுக்குப்பின் காத்திருக்கும் நேரத்தில், நான் எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சரியாக பத்து மணிக்கு அவர் வருகிறார். மெலிந்த தேகம். உத்தேசமாக அறுபத்தைந்து வயதுபோல் தோற்றமளிக்கும் அவரது கண்ணாடி அணிந்த முகத்தில், மீசைக்குப் பின்னிருந்து ஒளிவுமறைவற்ற புன்னகை மலர்கிறது. இவர்தான் பூமணி (பூளித்துறை மாணிக்கவாசகம்). கோவில்பட்டியைச் சேர்ந்தவர். முன்னணித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். விரைவில் பதிப்பிக்கப்பட இருக்கும் 1200 பக்கங்களைக் கொண்ட வரலாற்றுப் புதினமான இவரது அஞ்ஞாடி, கரிசல் மண்ணைத் தன் களமாய்க் கொண்டது. அந்த பூமியில் கடந்த இரு நூற்றாண்டுகளாய் நிகழ்ந்த சாதி முரண்களையும் மோதல்களையும் விவரிக்கும் விவாதிக்கும் படைப்பு. இப்பிரதியின் பதிப்புக்கு முற்பட்ட மின்கோப்பின் பக்கங்களை வாசிப்பதிலும், பூமணி எழுதி இதற்கு முன்னே வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க படைப்புகளான பிறகு மற்றும் வெக்கை நாவல்களை வாசிப்பதிலும், கடந்த இரு மாதங்களின் பெரும்பகுதியைச் செலவிட்டிருக்கிறேன். நாற்பது ஆண்டுகளாய் தொடர்ந்து விமரிசகர்களால் பாராட்டப்படும் எழுத்தைப் படைத்து வருகிறார் இவர். தன் ஐந்து நாவல்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளால் சமகால தமிழ் இலக்கியத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வைப் பதிவு செய்பவர்களில் தலைசிறந்த படைப்பாளியாய்த் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். ஆனால் இந்தப் புதிய படைப்பின் பார்வையும், லட்சியமும், நம் அண்மைய வரலாற்றின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுவதற்கான இதன் சாத்தியமும்தான் என்னைக் கோவில்பட்டிக்கு அழைத்து வந்திருக்கின்றன. அஞ்ஞாடி போன்ற ஒரு படைப்பின் உருவாக்கத்தில் எவையெல்லாம் செயல்பட்டன? இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வரலாற்றை, ஒரு நாவலாசிரியரின் கற்பனை கொண்டு மீளுருவாக்கம் செய்து புனைவின் மொழியில் அளிப்பது எவ்வாறு சாத்தியப்பட்டது?

நவீன இந்திய இலக்கியத்துக்கு பல முக்கியமான வரலாற்று நாவல்கள் பெருமை சேர்க்கின்றன. ஆங்கிலத்தில் River of Fire (1998) என்ற தலைப்பில் வெளிவந்த ஆக் கா தார்யா என்ற குராதுலைன் ஹைதரின் உருது நாவல் அவற்றில் ஒன்று. வைதீக இந்தியா, முஸ்லிம்களின் வருகை, காலனியம், பிரிவினை. என்று இந்திய துணைக்கண்ட வரலாற்றுக் குறிப்பான்கள் அனைத்தையும் பேசும் நாவல் அது. Those Days (1997) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட சுனில் கங்கோபாத்யாயின் புகழ்பெற்ற வங்காள நாவல், ஷேய் ஷோமோய், வங்காள மறுமலர்ச்சிக் காலத்தின் மிக முக்கியமான 1840-60 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கட்டத்தையும், அக்காலத்துக்குரிய வரலாற்றுப் பேராளுமைகளின் பங்களிப்பையும் விரிவாக ஆய்வு செய்தது. சமகால வங்காளிகள் உண்மை என்று ஏற்றுக் கொண்டிருந்த மரபார்ந்த நம்பிக்கைகளையும் பல தொன்மங்களையும் இந்த நாவல் தகர்த்தெறிந்ததாகச் சொல்லப்படுகிறது.

தென்னிந்தியாவில் எழுதப்பட்ட தலைசிறந்த வரலாற்று நாவல்களில் சிக்கவீர ராஜேந்திரா என்ற அதே தலைப்பில் 1992ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் நாவலைச் சொல்ல வேண்டும் – குடகு மண்ணின் கடைசி மன்னன் 1820இல் அரியணை ஏறுவதில் துவங்கி, 1834ஆம் ஆண்டு அவன் பிரிட்டிஷாரிடம் தோற்று நாடு கடத்தப்படுவதில் முடிகிறது; Coir (1997) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட தகழி சிவசங்கரன் பிள்ளையின் தலைசிறந்த மலையாள நாவல் காயர், 1885-1971 காலகட்டத்தை களமாகக் கொண்ட வரலாற்றுப் படைப்பு. இந்த நாவல் சமூக, பண்பாட்டு, பொருளாதார முனைகளில் கேரள சமுதாயம் எதிர்கொண்ட ஆழமான மாற்றங்களை விவரிக்கிறது.

கடந்த நூற்றாண்டின் துவக்க தசாப்தங்களில் புதையல் போல் கண்டெடுக்கப்பட்டு அச்சேறிய பண்டைய இலக்கியப் பிரதிகளை ஆதாரமாய்க் கொண்டு தமிழில் வரலாற்று நாவல்கள் எழுதப்பட்டன. அதுவரை மறக்கப்பட்டிருந்த செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் தமிழகமெங்கும் 1880-1930க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்டு முதல் முறையாக அச்சேறின, இதற்கான பெருமை, ஆய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் (1855-1942) அயராத உழைப்பையே பெருமளவு சாரும். இன்றளவும் உலகளவில் அறியப்படும் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூறு, புறநானூறு முதலியவை அவரால் மீட்டெடுக்கப்பட்ட செவ்வியல் படைப்புகளே. பண்டைத் தமிழரின் வாழ்வுமுறையைப் பிரதிபலித்த இந்த இலக்கியப் பிரதிகள் மீண்டும் கண்டெடுக்கப்பட்டதும், தங்கள் பாரம்பரியம் குறித்து தமிழர்கள் பெருமை கொள்ள முடிந்தது. பரவலான வாசிப்பை நோக்கமாய் கொண்டு வடிவமைக்கப்பட்ட வார இதழ்கள் கோலோச்சத் துவங்கிய 1920களின் வெகுஜனப் புனைவுகளில், அரசர்களும் அரசியர்களும் வாழ்ந்து மறைந்த தங்கள் மகோன்னத காலத்தைக் குறித்து, உயிரூட்டமுள்ளதும் புதிதாய் புனையப்பட்டதுமான இந்தச் சித்திரம் இடம் பெற்றது. இதன் விளைவாக, பண்டைய காலத்தை வரம்பற்ற கற்பனை கொண்டு மீளுருவாக்கம் செய்வதாக “பொழுதுபோக்கு வரலாற்று நாவல்கள்” என்ற இலக்கிய வகைமை தோன்றியது. இதன் உரைநடை தற்காலத்தில் வழக்கொழிந்து போய்விட்ட செவ்வியல் தொனியொன்றை போலி செய்தது. இந்த வகை, யதார்த்த கதைசொல்லலின் சிக்கலான தேவைகளுக்குக் கட்டுப்படுத்தப்படாத பாத்திரங்களைக் கொண்டிருந்தது. 1930களிலும் 1940களிலும் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் பல புதினங்களைப் படைத்த ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தியின் ஆக்கங்களும், பின்னர் கல்கியின் நாவல்கள் போலவே வார இதழ்களில் தொடர்கதைகளாக எழுதப்பட்ட பாஷ்யம் ‘சாண்டில்யன்’ ஐயங்காரின் எழுத்தும் இந்த இலக்கிய வகைமையின் சிறந்த முன்னுதாரணங்கள். .

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இந்திய எழுத்தாளர்களும் மேல்சாதியினராகவும் சமூக தளத்தில் உயர்தளத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதென்பது தன்னிகழ்வல்ல. பிரிட்டிஷ் ராஜ் மற்றும் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட அரசு நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட உயர்கல்வி மேல்சாதியினருக்கே பெரும்பயன் அளித்தது. இவர்களின் எழுத்து, குறைபட்ட அனுபவத்தாலும் குறுகிய பார்வையாலும் களங்கப்பட்டிருப்பது பின்னரே உணரப்பட்டது. வெள்ளை ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளில் மேட்டிக்குடியினரின் மனச்சாய்வு உள்ளுறைந்திருப்பதாய் குற்றம் சாட்டப்பட்டது போன்றது இது, இலக்கியங்களாக எவ்வளவு உயர்வாய் மதிப்பிடப்பட்டிருந்தாலும் பொருட்படுத்தாமல், அவர்களது ஆக்கங்கள் குறித்து அதுகாறும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த பார்வை சில சமயம் திருத்தி எழுதப்படவும் இப்போக்கு இடம் கொடுத்தது. அமெரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர் என்று போற்றப்படுபவரும் நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் பாஃக்னரின் எழுத்தில் தென் அமெரிக்காவின் கருப்பர்கள் சித்தரிக்கப்படுவது குறித்த கோணம், 1970கள் மற்றும் 1980களில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களால் கசப்புடன் கேள்விக்குட்படுத்தப்பட்டது. அடிமை அமைப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த கருப்பின மக்களின் கொடூரமான நடத்தை குறித்து இதே காலகட்டத்தில், வில்லியம் ஸ்டைரோன் தன் The Confessions of Nat Turner (1967) என்ற நாவலில் எழுதியதும் கருப்பர் சமூகத்தைச் சார்ந்த இலக்கிய ஆய்வாளர்களால் உண்மையற்றது என்றும் அபாண்டமானது என்றும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. இங்கு, மாஸ்தி தன் கிளாசிக் நாவலில் தங்கள் கடைசி மன்னன் சிக்க வீரராஜேந்திரனை எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்தியது கொடவர்களைக் கோபப்படச் செய்தது.

1970களில் ’சப்ஆல்டர்ன்’ எனப்படும் அடித்தட்டு மக்களின் வரலாறுகள் குறித்து நிகழ்ந்த முன்னெடுப்புகளில் ஒன்றாய், தெற்கு ஆசிய ஆய்வாளர்கள் சிலர் Subaltern Studies Collective என்ற அமைப்பில் ஒரு குழுவாய் ஒருங்கிணைந்து, இந்திய மற்றும் தெற்காசிய வரலாற்றைப் பேசுவதற்குரிய புதிய ஒரு சொல்லாடலைக் கட்டமைத்தனர். இதன் இணைநிகழ்வாய், சுதந்திரத்துக்குப் பிறகு கிட்டிய உயர்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஊக்கம் பெற்று, தங்கள் கதைகளைத் தாங்களே சொல்ல முதல் வாய்ப்புக் கிடைத்த உந்துதலால், இதுவரை ஒடுக்கப்பட்டிருந்த சாதிகளைச் சேர்ந்தவர்களின் எழுத்தாளர்கள் சுதந்திர எழுத்தாளர்களாய் பரிணமித்தனர். நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இது ஒரு முக்கியத் தருணம் என்று சொல்லலாம். புதுமைப்பித்தன் மற்றும் மணிக்கொடி என்ற இலக்கியச் சிற்றிதழைச் சார்ந்த சில எழுத்தாளர்களைக் கொண்ட குழுவினரால் 1930களில் நவீனத்துவ எழுத்து தமிழில் துவக்கம் கண்டிருந்தது. இவ்வாறாகவே நவீனத்துவத்தின் மகத்தான கருப்பொருட்கள் பேசப்பட்ட காலகட்டம் துவங்கிற்று – மரபார்ந்த விழுமியங்களின் வீழ்ச்சி, தனிமை, தனிமனிதன் அந்நியப்படுதல், தொழில்மயமாக்கத்தின் தொடர்ச்சியான சமூக மறுமலர்ச்சி, நகரமயமாக்கம், விரைவான மாற்றம் காணும் சமூக அமைப்பின் அறச் சிக்கல்கள் – இவையனைத்தும் உரைநடையில், புனைவின் மொழியில் எதிர்கொள்ளப்பட்டன. அடுத்த நாற்பது ஆண்டுகாலம் இப்போக்கு தொடர்ந்தது. தவிர்க்க முடியாத வகையில், இத்தகைய புனைவுக்கான உந்துவிசை தாமஸ் ஹார்டி துவங்கி, எமிலி ஜோலா, எர்னஸ்ட் ஹெமிங்வெ, ஜான் டோஸ் பாசோஸ் என்று நவீன மேலை இலக்கியத்தின் திருமுறையிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டது. ‘சமூக யதார்த்தம்’ என்ற கோட்பாட்டு அடிப்படையில், உழைக்கும் வர்க்கப் புதினத்தின் ஒரு வகை, 1940களில் எழுதப்பட்டு, தொழிற்சங்கங்களுடனும் கம்யூனிச இயக்கத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட பத்திரிகைகளில் பதிப்பிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் இருபதாண்டுகளில், இவ்விரண்டும் இணைந்து நவீன காலத் தமிழர்களுக்கு உரிய வலுவான இலக்கிய கலாசாரத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றன. எனினும், சமகாலத்தில் பரவலாய் நிலவிய சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதைத் தவிர்த்து, கோட்பாட்டு அடிப்படையில்தான் இவை உருவாக்கிய இலக்கியம் அமைந்திருந்தது. மேலும், கல்வியறிவு பெற்ற மேல்சாதியினராலேயே பெரும்பாலும் உருவாக்கப்பட்டிருந்த உரைநடை-புதினத்தின் மொழிநடை, தத்தமக்கேயுரிய வட்டார வழக்குகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த பெரும்பான்மை மக்களைத் தம் இலக்கியத்தில் தாமும் பங்கேற்றுக் கொள்ள இயலாத வகையில் எட்ட நிறுத்தி வைக்கவே பயன்பட்டது.

கிராமப்புறங்களில் இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக குழுக்களில் இருந்தும் தோன்றி 1970களில் கவனத்துக்கு வந்த புதிய படைப்பாளிகள் நன்றாகப் படித்தவர்கள்; கூர்மையாய் கவனித்து எழுதியவர்கள்; தங்கள் இலக்கியத் திறனில் தன்னம்பிக்கை கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் (சமூக) யதார்த்தம், மிகச் சிறந்த இயல்புவாத எழுத்துக்கு வழியமைத்துக் கொடுத்தது- இவ்வெழுத்து அதுவரை மறைவாக இருந்த பாத்திரங்களையும் அதற்குமுன் பேசப்படாத அவர்களின் கதைகளையும் வாசகர்களின் பார்வைக்கு கொண்டுவந்தது, சமகால தமிழ் இலக்கியத்தின் பரப்பை முன்னெப்போதும் இல்லாத வகையில் இவர்களின் எழுத்து விரிவாக்கிச் சென்றது, இதன் விளைவாக, சமூக அமைப்பின் கடைநிலையில் உள்ள மக்களைப் பற்றிய நாவல்களும் சிறுகதைகளும் தொடர்ந்து எழுதப்பட்டன. பூமணி, இந்த புதிய போக்கின் முன்னோடிகளுள் ஒருவர். அடுத்த மூன்று தசாப்தங்களில் அவரைப் பின்பற்றி சப்ஆல்டர்ன் சாதிகளைச் சேர்ந்த இரு தலைமுறை எழுத்தாளர்கள் இலக்கியம் படைத்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அவருடைய பிறகு என்ற நாவல் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு தோல்வேலை தொழிலாளரின் வாழ்வை முழுநீள நாவலாக விவரிக்கும் இந்த படைப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனை என்று கொண்டாடப்படுகிறது.- தன் வாழ்வின் மையமாகவும் தன் குடும்பத்தின் மையமாகவும், தன் வாழ்நாள் முழுவதும் தான் அர்ப்பணிப்புணர்வுடன் சேவையாற்றும் தன் ஊர் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாகவும் அந்த தொழிலாளி படைக்கப்பட்டிருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலிருந்து ஒரு சமூகம் எதிர்கொண்ட நிகழ்வுகளைப் பல தலைமுறைகள் தொடரும் நெடுங்கதையாகக் கூறுவது அடுத்த புதுவைழிமுறையாக அமைந்தது. Generations (1972) என்று ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட நீல பத்மநாபனின் தலைமுறைகள், தமிழில் இத்தகைய முதல் நாவல். பெரும்பாலும் வாய்மொழி வரலாற்றையும் நாவலாசிரியரின் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறை செட்டிப் பெண்களின் வாழ்வை விவரிக்கிறது. தந்தைவழிச் சமூக அமைப்பில் இந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியும், அநீதியை ஈடுசெய்யக் கோரி துவங்கப்பட்ட போராட்டங்களும் இந்த நாவலின் பிரதான கதைக்கருக்களாக இருக்கின்றன. அந்தச் சாதியினரின் வட்டார வழக்கில் கதை சொல்லப்படுகிறது. சமீபத்தில் அளித்த ஒரு நேர்முகத்தில் ஆசிரியர் கூறியிருப்பது: “என் கொள்ளுப்பாட்டன்கள் பாட்டிகள் மற்றும் பலரின் நிழலான இருப்பை என் அடிமனதின் ஆழத்திலிருந்து கைப்பற்றி விவரிக்க முயற்சி செய்திருந்தேன். குடும்பப் பின்னணி, சடங்குகள், தொன்மங்கள், நம்பிக்கைகள், கிராமப்புற விளையாட்டுகள், வீதியில் விளையாடும் குழந்தைகளின் பாடல்கள், இன்னும் பல பிள்ளைப்பருவ அனுபவங்கள், உரையாடல்கள், பாத்திரங்களின் பேச்சு மொழியில் வெளிப்படும் தனித்தனி கொண்ட சிந்தனை முறைகள்… இவையனைத்தையும் அந்த நாவலில் என்னால் கைப்பற்ற முடிந்தது.”

பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட முதல் சரித்திர நாவல் என்று பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் அங்கீகரிக்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட பிரபஞ்சனின் நாவல், பிரஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரியின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தை (1730-60) தேர்ந்த வகையில் சித்தரிக்கிறது, அதிலும் குறிப்பாக, பிரெஞ்சு கவர்னல் ஜோசப் பிரான்சுவா தூப்ளேவுக்கும் கர்நாடிக் நவாப் சந்தா சாகிப்புக்கும் இடையே இருந்த உறவின் மாற்றங்களையும், தஞ்சாவூரின் மராத்தா மன்னனின் படைகளுடன் நிகழ்ந்த போர்களையும் விவரிக்கும் நாவல் இது. தூப்ளேயின் நெருங்கிய ஆலோசகராக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709-61) எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாவல், அந்த காலத்தைச் சேர்ந்த மக்களின் பார்வையில் சொல்லப்படுகிறது. மிக அதிகமான துணைக்கதைகள் கொண்ட கச்சிதமற்ற படைப்பு என்று சில விமரிசகர்கள் மதிப்பிட்டாலும்,- அபரிதமான வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்துப் புனைவதில் எப்போதும் இந்த ஆபத்து இருக்கவே செய்கிறது. இருப்பினும் பிரபஞ்சனின் சாதனை குறிப்பிடத்தக்க ஒன்றாகவே கருதப்படுகிறது.

பல தலைமுறைகளைக் கடந்து ஒரு சமூகத்தின் வாழ்வையும் அதைச் சூழ்ந்திருக்கும் உலகையும் விவரிக்கும் மற்றொரு நாவல், ஜோ டி’க்ரூஸ் எழுதிய, ஆழி சூழ் உலகு (2005). தூத்துக்குடிக்குத் தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் மீனவ குடியினரை இந்நாவலில் பதிவு செய்கிறார் டி’க்ரூஸ். சாதாரண மீனவர்களின் பார்வையில், அவர்களுக்கே உரிய மொழியில் சொல்லப்படும் இந்நாவல், கிராம வாழ்வின் அனைத்து முகங்களையும் விவரிக்கிறது, அதிலும் குறிப்பாக, தொலைகடலில் அவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் அன்றாட அனுபவங்களை விவரிக்கிறது. இன்றும் பயன்பாட்டில் உள்ளதும் முதிர்ச்சியடைந்துமான கடல்சார் சொற்களஞ்சியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் டி’க்ரூஸ். எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டதுபோல், நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் கடலின் பார்வையில் மண்ணை விவரிக்கும் முதல் நாவல் இதுதான். இதன் கதைப்போக்கில் முக்கியமான வரலாற்றுச் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது பெருமளவு கற்பனைக் கதையே; குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகளைஆய்வு செய்து எழுதுவதில் உள்ள தளைகள் இதைக் கட்டுப்படுத்தவில்லை.

சு வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் (2008) ஆய்வு அடிப்படையில் எழுதப்படும் வரலாற்றுப் புதினங்களுக்கு ஒரு மைல்கல்லாய் அமைகிறது. மதுரையை ஆளும் அரச வம்சங்களையும் 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் மதுரைக் கோட்டையின் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்து, பிரிட்டிஷ் ரெசிடென்ட்டால் அந்தக் கோட்டை தகர்க்கப்பட்ட பின்னர் கேவலப்படுத்தப்பட்டு ஆங்கிலேய நிர்வாகத்தால் தண்டிக்கப்பட்ட கள்ளர் சமூகத்தையும் பேசுகிறது இந்த நாவல் 2011ஆம் அண்டு இந்நாவலாசிரியருக்கு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுத் தந்த இந்தப் புதினம், கள்ளர்களின் வன்முறை மிகுந்த கடந்த காலத்தையும் அவர்கள எதிர்கொண்ட ஒடுக்குமுறையையும் முதல் முறையாக பொதுப் பார்வைக்கு கொணர்ந்தது என்று பாராட்டப்பட்டாலும், வரலாற்றுத் தகவல்கள் முழுத்திறனுடன் கையாளப்படாத காரணத்தால் குறைபட்ட நாவல் என்று சில விமரிசகர்களால் மதிப்பிடப்பட்டது. இரண்டாம் நிலை ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதையினூடாக, மானுடவியல் களப்பணி ஆய்வுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற தகவல்கள் மிகையளவில், ஆனால் பொருத்ததமற்ற வகையில், இடம் பெறுகின்றன. எட்டு அபுனைவுகள் எழுதிய ஒரு எழுத்தாளர், ஆயிரம் பக்கங்கள் கொண்ட வரலாற்று நாவலைத் தன் முதல் முயற்சியாக எழுத எடுத்துக் கொள்ளும்போது இத்தகைய குறைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று புரிந்துகொள்ளலாம்

ஆனால் ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும், முழுக்க முழுக்க கற்பனையாய் எழுதப்பட்டிருந்தாலும், இத்தனை வரலாற்று நாவல்களுக்கும் பொதுத்தன்மை ஒன்றுண்டு: அது, இவற்றில் விவரிக்கப்படும் வாழ்வு இறுக்கமான சாதியமைப்பின் சட்டகத்தில் நடத்தப்படுகிறது என்பதேயாகும். இப்படைப்புகளில் சமூகத் தளைகளும் வரையறுக்கப்பட்ட பண்பாட்டு வெளிகளும் அன்றாட வாழ்வைக் கட்டுப்படுத்துகின்றன. இவையனைத்தும் ஏதோ ஒரு சாதிக் குழுவின் சரித்திரங்களாகவே உருவெடுப்பதைப் பார்க்கமுடியும். 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை, அதாவது தமிழ் நாட்டில் நகர்ப்புற வாழ்வு வேரூன்றும் வரை, அனைத்தையும் சாதியே தீர்மானித்தது. பணி, இருப்பிடம், வருவாய், சமூகநிலை, உறவு, சமூக வசதிகள் (அல்லது வறுமை), ஒரு குழுவாய் பிழைத்திருத்தல் என்று அனைத்தையும் சாதியே தீர்மானித்தது. சமகால இந்தியாவின் மதச்சார்பற்ற நவீன கதையாடல்களில் சாதி பெரும்பாலும் இடம் பெறுவதில்லை, ஒரு வேளை இது வேண்டாமென்றே விலக்கி வைக்கப்பட்டிருக்கலாம். நம் கதைகள் என்று நாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் சமூக யதார்த்தத்தின் தலையாய கூறு ஒன்றை வேண்டுமென்றே தவிர்ப்பதாகவும் இருக்கலாம்.

சுதந்திரத்துக்குப்பின் கோவில்பட்டி என்னும் சிற்றூர், கரிசல் பூமியையும் அதன் மக்களையும் பேசக்கூடியதும், தன் மண்ணின் கதையை நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யக்கூடிய, துடிப்பு மிக்கதுமான ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்து அதை உயிர்ப்புடன் பராமரித்து வரும் முக்கியமான எழுத்தாளர் கூட்டத்தைப் உருவாக்கியிருக்கிறது. நம் போற்றுதலுக்குரிய கி ராஜநாராயணன் என்ற கோவில்பட்டிக்காரர் கோபல்ல கிராமம் (1968) என்ற நாவல் எழுதி, 1960களின் பிற்பகுதியில் முன்னத்தி ஏராய்ச் செயல்பட்டார். முஸ்லிம் ஆட்சியிலிருந்து தப்பிப் பிழைக்க தெற்கே வந்த தெலுங்கு பேசும் மக்கள், தாம் புலம்பெயர்ந்து குடியேறியிருக்கும் வறண்ட நிலத்தின் சிறு பகுதியை வளமும் பசுமையும் நிறைந்த கிராமமாக மாற்றியதை விவரிக்கும் கதை. இந்த நாவலில் விவரிக்கப்படும் காலகட்டம் மதுரையை நாயக்கர் வம்சம் ஆட்சி புரிந்த 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்டது. பேச்சு வழக்கில் உள்ள கதைகள், பண்பாடு, பாரம்பரிய நம்பிக்கைகள், பாலுறவு குறித்த விழுமியங்கள், மண்ணின் அமைப்பு, கரிசல் பகுதியின் செடிகொடிகள் மற்றும் உயிரினங்களைக் கொண்டு கிரா ஒரு சமூகத்தின் இடர்ப்பாடுகள் மற்றும் துயரங்களை விவரிக்கும் ஒரு புதிய கதையாடலை நிகழ்த்தினார்- இத்தனையையும் அவர் அந்தப் பகுதி மக்களின் பல்வேறு வட்டார வழக்குகளில் விவரித்திருந்தார். அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதும், சமூக அடுக்குகளை உள்வாங்கிக் கொண்டு எழுதப்படுவதுமான இலக்கியத்தைத் தமிழில் படைக்கும் இயக்கம் கிரா மற்றும் அவரது கோபல்ல கிராமம் நாவலோடு துவங்குகிறது என்று சொல்லலாம்.

கோவில்பட்டி அருகில் உள்ள ஆண்டிப்பட்டி என்ற கிராமத்தில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளான பள்ளர்களின் குடும்பத்தில் 1947ஆம் ஆண்டு பிறந்தவர் பூமணி. குழந்தைப் பருவத்தில் தன் தாய் கூறிய கதைகளாலும், பிள்ளைப் பருவத்திலும் பதின்ம பருவத்திலும் தான் வாசித்த இலக்கியப் புதினங்களாலும் வசீகரிக்கப்பட்ட பூமணி, தன்னைச் சுற்றிலும் தான் கண்ட மக்களின் கதைகளைச் சொல்லத் தீர்மானித்து, எழுத்தாளராவது என்று முடிவெடுத்தார். இந்தக் கதைகளை எப்படிச் சொல்வது என்ற போராட்டத்தில் அவர் கிரா-வின் எழுத்தை முன்மாதிரியாகக் கொண்டிருக்கலாம். கிரா-வின் படைப்புலகில், “மண்ணின் மணத்தையும் இயற்கையின் உயிராற்றலையும் ஒன்று சேர்த்து, பிற பாணிகளை இரவல் வாங்காமல், எழுத்து தன் இயல்புகளைத் தானே வளர்த்துக் கொண்டது”, என்கிறார் பூமணி. யதார்த்த வாழ்வை இலக்கிய புனைவுக்கு வெகு அருகில் கொண்டு வரக்கூடிய தேர்ந்த நடையையும் மொழியையும் கிரா பயன்படுத்துகிறார் என்பதைப் பூமணி புரிந்து கொண்டார். படைப்பின்போதே அதற்கேற்ற மொழியையும் உருவாக்க வேண்டும் என்ற பாடத்தை கிரா-விடம் கற்றார் பூமணி.

The Neighbours (1979) என்று ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட பி கேசவ தேவின் அயல்கார் என்ற மலையாள நாவல் பூமணியின்பால் தாக்கம் ஏற்படுத்திய மற்றொரு படைப்பு. நிலப்பிரபுத்துவ காலகட்டம் முதல் புது யுகம் மலர்வது வரை நாயர்கள், கிறித்தவர்கள், ஈழவர்கள் என்று கேரளாவின் மூன்று முக்கிய சமூகங்கள் கண்ட ஐம்பதாண்டு கால வளர்ச்சியைப் பி கேசவ தேவ் பதிவு செய்திருந்தார். மலையாள இலக்கியத்தில் இது ஒரு தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அயல்கார் ஒரு நல்ல முன்மாதிரி என்று உணர்ந்தார் பூமணி. “ஆற்றல் மிகுந்த கதை அது, அழகியல் உணர்வோடும் கூர்மையான கற்பனையோடும் சொல்லப்பட்ட கதை. கற்பனை, கதையின் இயல்புக்கு ஒளி சேர்க்கிறது; ஓங்கி ஒலிப்பதில்லை. மாற்றங்களும் மதிப்பீடுகளும் தாமே உருப்பெறுகின்றன. கதைசொல்லல் பல விஷயங்களை உயிருடன் சித்தரிக்கிறது, கதைக்களனுக்கு வாசகனை அழித்துச் சென்று நிறுத்துகிறது. அவனைத் தன்னோடு அழைத்துச் சென்று, அழச் செய்கிறது, சிரிக்கச் செய்கிறது. எல்லாம் முடிவுக்கு வந்தபின், சிந்திக்கச் செய்கிறது” என்று இந்த நாவலைப் பற்றிய தன் பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார்.

(தொடரும்)

This is a Tamil translation of N. Kalyanaraman‘s article, Clashing By Night, published in Caravan, 1, February, 2012

மொழிபெயர்ப்பு:- பதாகை (தமிழார்வம் மிக்க நண்பரொருவர் உதவியுடன் மெய்ப்பு பார்த்து 1.1.2015 அன்று இடுகையிடப்பட்ட திருத்த வடிவம்)

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.