ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்

ஜிஃப்ரி ஹாஸன்

பின்-நவீன அரசியல் கவிதை வெளி

பின்-நவீன அரசியலானது ‘வித்தியாசங்கள்“, “கேள்விக்குள்ளாக்குதல்” என்பவற்றை முதன்மைப்படுத்துகிறது. அடக்கும் அல்லது மற்றமையை விளிம்பு நோக்கித் தள்ளும் குழுவுடன் ஒன்றிப் போகாமல் முரண்படுதல் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிஞர்கள் தங்களை விளிம்பு நோக்கித் தள்ளும் தேசங்களுடன்/ குழுக்களுடன்  ஒன்றித்துப் போகாமல் அவற்றிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தலை தம் கவிதைகளில் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கினர். விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட தமது மக்களுக்கான சிறுகதையாடல்களை உருவாக்குவதற்கும் அவற்றை மீள மீள வலியுறுத்துவதற்குமான கருவியாகவும் அவர்கள் கவிதையை பயன்படுத்தத் தொடங்கினர். எனவே, அவர்கள் தமிழ் மொழிச் சமூகங்கள் எனும் பொது அடையாளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலைப்பாட்டை எடுத்தனர்.

தமக்கான அடையாள அரசியலை தமது கவிதைப்புனைவுகளில் தாமே உருவாக்கிக் கொள்ளும் செயற்பாட்டில் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர். அடையாளம் என்பது ஒரு புனைவைப் போல கட்டமைக்கப்படுகிறது என்ற பின்-நவீனக் கருத்தியலை இந்த அடையாள உருவாக்கம் அனுசரித்துச் செல்வதாக இருந்தது. ஏனெனில் அவை பேசும் அரசியல் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட சிறுபான்மை மக்கள் பற்றியது. இதனால் ஈழத்து முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளியில் பின்-நவீன அரசியல் கவிதைகளே அதிகம்.

அந்தவகையில் பார்க்கும் போது முஸ்லிம் கவிஞர்களால் எழுதப்பட்ட அனைத்து எதிர்ப்புக் கவிதைகளும் பின்-நவீன அரசியல் கவிதைகளுக்குள் உள்ளடக்க முடியும். அதேபோன்று சிங்களப் பெருந்தேசியவாத அடக்குமுறைக்குள்ளான மற்றொரு சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்ப்புக் கவிதைக் குரல்களையும் பின்-நவீனக் கவிதைக் குரலாக பார்க்கப்பட முடியும். ஆனால் இந்தக் கட்டுரை ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி பற்றி மட்டுமே பேசுகிறது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில கவிஞர்களால் சொல்லப்பட்ட கவிதைகள் பின்-நவீனக் கவிதைகள் என இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு விரிபரப்பையுடையது. சிறுகதை, நாவல் வெளியை விட இது மிகவும் பரந்துபட்டது. இன்று அதிகமான இளைஞர்கள் முஸ்லிம் கவிதைவெளியில் வினைத்திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். விடுபடல்கள் ஏதுமின்றி இந்தத் தலைப்பில் ஒரு முழுமையான ஆய்வை செய்வதற்கு நீண்ட காலமும் ஒரு பாரிய உழைப்பும் அவசியமாகிறது. ஆனால், இந்தக் கட்டுரை குறிப்பிட்ட சில ஈழத்து நவீன முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளை மட்டுமே அதுவும் மிக மிகச் சுருக்கமாக முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

பின்-நவீனக் கவிதைவெளியில் நாம் இலகுவில் பயணிப்பதற்காக முதலில் பின்-நவீனக் கதையாடல் பற்றிய ஒரு சிறு புரிதல் அவசியமாகும். பின்-நவீனத்துவம், அதிகாரமானது பெருந் தளங்களிலோ- நுண்தளங்களிலோ எந்த வடிவத்தில் தொழிற்பட்டாலும் அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் கலகத்தன்மை மிக்க ஒரு கோட்பாடகும். அதிகாரங்களால் புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட மக்கள்  மீதும் கவனஞ் செலுத்துவதுடன் விளிம்புநிலை மக்கள் மீதும் சிறு கதையாடல்கள் மீதும் கவனங்கொள்ளும் அதேநேரம் விளிம்புநிலை மக்களுக்கான சிறு கதையாடல்களை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது.  சிறுபான்மை இனங்கள், பெண்கள், சிறுவர்கள் போன்ற விளிம்பு நோக்கித் தள்ளப்பட்டவர்களின் குரல்களைக் கவிதைகளில் பதிவு செய்வதையே இங்கு பின்-நவீனக் கவிதைவெளி குறித்து நிற்கிறது.

ஈழத் தமிழ் இலக்கிய சூழலில் பின்-நவீனத்துவத்தை ஒரு கோட்பாடாக விளங்கி, வரித்துக் கொண்டு அதன் மீது ஈடுபாடு கொண்டு எழுதுவதற்கு முன்னமே இலங்கையின் இனப்பெருந் தேசியவாதங்களாலும், அவர்களின் செயற்பாடுகளாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம்களின் குரலை முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள், அவற்றின் அதிகாரங்களை நோக்கி உண்மையை உரத்துப் பேசும் கலகக் கவிதைப் பிரதிகளில் ஒலிக்க விட்டனர். இந்த எதிர்ப்புக் குரல் ஒரு தனிக் கவிதை இயக்கமாகவே எழுச்சியுறுமளவிற்கு 90-களில் முனைப்புப் பெற்றது. இந்த எதிர்ப்புக் கவிதை இயக்கத்தை சோலைக்கிளி, ஓட்டமாவடி அறபாத், என். ஆத்மா, ஏ.ஜீ.எம். ஸதக்கா, அஷ்ரஃப் சிஹாப்தீன், றஷ்மி, அனார், அலறி, இளைய அப்துல்லாஹ், முல்லை முஸ்ரிபா, நவாஸ் சௌபி, றியாஸ் குரானா, எஸ். நளீம், பஹீமா ஜஹான், ஜிஃப்ரி ஹாஸன், மருதமுனை விஜிலி, ஏ.எம். குர்ஷித், கிண்ணியா ஏ.நஸ்புள்ளாஹ், கிண்ணியா சபருள்ளாஹ் மற்றும் பலர் முன்னெடுத்தனர்.

எனினும் அந்த கவிதை இயக்கம் பின்நவீனக் கோட்பாடு பற்றிய அறிமுகத்தினாலோ, புரிதலினாலோ அல்லது அதன் மீதான ஈடுபாட்டினாலோ வந்ததல்ல. அது தனது சமூகத்துக்கெதிராக புறத்திலிருந்து பிரயோகிக்கப்பட்ட அதிகாரங்களை எதிர்த்து நிற்கும் ஒருவித இனப்பற்றுடன் கூடிய செயற்பாடாகவே மேற்கிளம்பியது. இவர்கள் பெருந் தேசியவாத அரசியல் அடக்குமுறைகளை எதிர்க்கும் கலகக் கவிதைகளை புனைந்ததோடு மிகவும் பிளவுபட்ட, பன்மைத்தன்மை வாய்ந்த, அடையாள அரசியலுக்கான பாதையையும் அமைத்தனர். மேலாதிக்கச் சொல்லாடலுக்கெதிராக விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட அடையாளத்தின் சுயபிரக்ஞையை வலியுறுத்துவதையே இந்த முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள் இக்காலப்பகுதியில் முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த கட்டுரை அளவுப் பொருத்தம் கருதி இவர்களில் ஒரு சில கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி மட்டுமே அதுவும் மிகச் சுருக்கமாக கவனத்திற்கொள்கிறது.

ஒரு காலத்தில் போருக்குள் சிக்கிக் கிடந்த ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதை இன்று அதன் பரப்பை குறுகிய கால எல்லைக்குள் மிக வேகமாக விரிவுபடுத்திக்கொண்டு விட்டது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகள் இந்த வளர்ச்சித் தன்மையை வெளிப்படுத்துவதற்கு ஒரு சில கவிஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினர். இவர்களில் அனார், மஜீத், றியாஸ் குரானா, ஜமீல், றஸ்மி போன்ற கவிஞர்கள் இந்தப் புதிய மாற்றங்களின் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

இந்த மாற்றம் கவிதையின் எடுத்துரைப்பு முறையிலும் உள்ளடக்கத்திலும் நிகழ்ந்து ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைவெளியை ஒரு புதிய தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியை பின்-நவீனக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வகைப்பாட்டினை நாம் செய்து கொள்ள முடியும்.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்
  2. பின்-நவீன அழகியல் கவிதைகள்
  3. பின்-நவீனப் பெண் மற்றும் சிறுவர் வெளி

.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்

புற அதிகாரத்தினால் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினர் குறித்த சிறுபான்மைக் கதையாடலுக்கான தேவையை கோரும் வகையில் சோலைக்கிளியின் கவிதைக் குரல் ஒலித்தது. இவர் அதிகாரத்துக்கெதிரான தன் எதிர்ப்புக் குரலை குறியீடுகளாலும், படிமங்களாலும் வெளிப்படுத்தினார்.

“அந்தக் கிராமத்தின் குழந்தைகளை
பேய்கள் சப்பியதாக நட்சத்திரங்கள் சொல்லிச் சொல்லி விழுந்தன”

சோலைக்கிளியின் இந்த எதிர்ப்புக் குரலுடன் மேலும் பல எதிர்ப்புக் குரல்கள் முஸ்லிம் கவிஞர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கின.

தொழிலுக்காக சென்று காடுகளில் வைத்துக் கொல்லப்பட்ட தந்தைமாரின் மக்கள், சமூகத்தில் மேலும் மேலும் எவ்வாறு விளிம்புக்குச் செலுத்தப்பட்டார்கள் என்பதை ஓட்டமாவடி அறபாத்

‘மையிருட்டில் நீ புத்தகத்தில் மயிலிறகைப் பத்திரப்படுத்துகிறாய்
உன் வாப்பாவைக் கேட்டுச் சவுத்து’

என பதிவு செய்தார்.

எஸ்.நளீம் முஸ்லிம்களின் விளிம்புநிலைக் குரலை இப்படிப் பதிவு செய்தார்-

‘நண்பர்களே! நீங்கள் நாடு கேட்கிறீர்கள் அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள் ஆனால் நான் என்ன கேட்டேன்
இறக்கவும் இழக்கவும்..’

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியில் புலிகள் இயக்கத்தில் அப்போது இணைந்து செயற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கவனங் கொள்ளப்படும் ஒரு சாராராக விளங்குகின்றனர். முல்லை முஸ்ரிபாவின் ‘மயூரா என்றாகிவிட்ட நிஸ்மியாவுக்கு’ என்ற கவிதையிலும், தீரன் ஆர்.எம். நௌசாத்தின் ‘மாவீரர் மேஜர் அன்பு என்கிற முஹம்மது அன்வர் ஞாபகமாக’ என்ற கவிதையிலும் மேலும் சில கவிதைகளிலும் அவர்கள் கவனங் கொள்ளப்படுகின்றனர்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின் நவீனக் கவிதைவெளியின்  அரசியல் குரல் 90-களில் ஒலிக்கத் தொடங்கியபோதும் அவை ஈழத் தமிழ் பொதுக் கவிதைப் போக்கிலிருந்து வித்தியாசங்களைக் காண்பிக்கவில்லை. இதில் 80-களில் சோலைக்கிளியைப் போன்று 90-களில்  வித்தியாசங்களைப் பதிவு செய்தவர் றஷ்மி. ஈழத் தமிழ்க் கவிதையின் வடிவ அமைப்பில் ஒரு தளமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர் ஈழத் தமிழ்க் கவிதையின் பொதுப்போக்கிலிருந்து விலகிச் செல்லலானார். அவரது வித்தியாசம் கவிதைத் தலைப்பிடலிலிருந்து தொடங்கியது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வு‘ முதலாய கவிதைகளில் இந்த வடிவ மாற்றம் தென்பட்டது. கவிதைகளில் சொற்களை இடம் மாற்றிக் கையாளும் முறையை முதன் முதலில் றஷ்மியின் கவிதைகளில் தான் காண முடிந்தது.

நிகழ்த்திக் காட்டியது” என்பதை ‘காட்டிற்று நிகழ்த்திக்” என கருத்துச் சிதைவின்றி சொற்களை இடமாற்றிக் கையாளும் முறை நமது ஈழத் தமிழ்க் கவிதைகளில் தொடர்ச்சியான ஒன்றா அல்லது புதுமையானதா என்பது ஆய்வுக்குரியது. றஷ்மியின் கவிதைப் புனைவானது பெரும்பாலும் அரசியலைப் பேசுபவையாகவே இருந்தது. அது 2004-ல் சுனாமி ஏற்படும்வரை தனது பரப்பெல்லையை விரிவுபடுத்த தவறியிருந்தது.

ஆயினும் இந்த முஸ்லிம் கவிஞர்களின் பின்-நவீன அரசியல் கவிதைகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் பற்றிப் பேசியனவே ஒழிய ஒடுக்கும் குழுக்களிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தும் சிறுபான்மைக் கதையாடலை வலுவாகப் பதிவு செய்யத் தவறியிருந்தன. அதற்குக் காரணம் அப்போது இந்தக் கவிஞர்களுக்கு பின்-நவீனத்துவம் பற்றிய கோட்பாட்டுப் புரிதல் அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்ததுதான்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் அரசியல் குரலை பின்-நவீனக் கோட்பாட்டோடு கொண்ட ஈடுபாட்டினூடாக வெளிப்படுத்தியவர் கவிஞர் மஜீத். கவிதையின் வடிவ அமைப்பில் றஷ்மி ஏற்படுத்திய தளமாற்றத்ததை மஜீத் இன்னொரு வடிவில் அல்லது இன்னொரு தளத்தில் நிகழ்த்திக் காட்டினார் ஈழத்து பின்-நவீன அரசியல்வெளியைப் பதிவு செய்த கவிதைகளில் கவித்துவம் மிக்கதும், பின்-நவீன அழகியல் உள்ளதுமான கவிதைச் செயற்பாட்டாளன் என்ற வகையில் மஜீத் முன்னோடியாக நிற்கிறார். அவரைத் தொடர்ந்த பங்களிப்பாளராக நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன் போன்றவர்கள் வருகின்றனர். மஜீதின்  ‘புலிகள் பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ எனும் கவிதைப் பிரதி இரு பெரும்பான்மைத் தேசியங்களாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரின் அரசியல் தன்னிலையை நுட்பமாகப் பதிவு செய்தது. இங்கு மஜீதின் கவிதைக் குரல் சொல்வதைப் போன்று,

“கோடையை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகிறாள்”

வெளியற்று அலையும் ஒரு மக்கள் திரளின் துயரச் சித்திரத்தை மஜீத் இப்படி வரைந்தார்;-

“எனது வெளியை பங்கு போட்டு
சிங்கங்களும், புலிகளும் பகிர்ந்து கொண்டன”

இங்கு தமது அடையாளங்களை, சுதந்திர இருப்பை, தீர்மானிக்கும் அதிகாரத்தை மையங்களுக்கு கொடுக்காமல் தனக்கான அடையாளத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கோரும் விளிம்புகளின் கதையாடலை மஜீத் இப்படிப் பதிவு செய்கிறார்-

“உங்கள் கற்பனையை வரைவதற்கு எங்கள் சுவர்கள்
பொருத்தமற்றது எமது நிறங்களையும் எமது சித்திரங்களையும் எமது குழந்தைகள்
வரைவர்”

அதேநேரம் தங்களை ஒடுக்கும் குழுவிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதன் மூலம் தனி அடையாளங்களை வலியுறுத்துவதன் மூலம் தமது வித்தியாசங்களை இவர்கள் வெளிக்குக் கொண்டு வந்தனர். இந்த அடையாளத்தை வலியுறுத்துவதில் தயவு தாட்சண்யமற்ற ஒரு கடும் தொனி நவாஸ் சௌபியிடமிருந்து வெளிப்பட்டது. விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினருக்கான அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதில் மஜீதைப் போன்ற தீவிரம் நவாஸ் சௌபியிடமும் இருந்தது. நவாஸ் சௌபியின் கவிதைக் குரலில் மிகத் தீவிரமானதொரு கலகத்தன்மை எப்போதும் இருந்தது.

ஆயினும் நவாஸ் சௌபியின் கவிதைக் குரலின் சீற்றம் அவரது இரண்டாவது தொகுதியான ‘எனது நிலத்தின் பயங்கரம்’ என்ற தொகுதிக்குள் சற்றுத் தணிந்திருந்தது. அதற்குள் ஓர் அழகியல் தன்மையும் சேர்ந்து கொண்டது.

ஆக ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியானது பின்-நவீனக் கூறுகளை முழுமையாக உள்வாங்கி எழுதப்பட்டவையாக அன்றி தங்கள் இனத்தின் மீதான அடக்குமுறையை எதிர்க்கும் ஒருவித எதிர்ப்பரசியலின் கவிதை வடிவமாக மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

பின்-நவீன பெண் வெளி

பெண்ணின் தனித்தன்மையையும், சிறப்புத் தன்மையையும் உடைய கதையாடலை உருவாக்குவதன் மூலம் பெண்ணின் சுய அடையாளத்தை பின்-நவீனக் கவிதைச் செயற்பாட்டாளர்கள் பேசினர். இவர்களில் அனார், பஹீமா ஜஹான், பெண்ணியா போன்றவர்கள் முக்கியமானவர்களாக விளங்குகின்றனர். ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனப் பெண்வெளியின் முன்னோடியாகவும், அதிக பங்களிப்பாளராகவும் அனார் விளங்குகிறார். ஆனால் இங்கு அளவுப் பொருத்தம் கருதி அனாரின் கவிதைகள் பற்றி மட்டுமே மிகச் சுருக்கமாக பேசப்படுகிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கவிதைகளும் காணப்படுகின்றன. பெண்களில் சிலர் விளிம்புகளை உருவாக்குகின்ற மையங்களாக மேற்கிளம்பி வரும் இன்றைய சூழலில் விளிம்புகளாக வாழும் பெண்கள்தான் இன்று சமூகத்தில் அதிகமாகவுள்ளனர்.

இங்கு பின்நவீன பெண்வெளி எனும்போது ஆணாதிக்க தந்தைவழி அமைப்பிலிருந்து அல்லது மேலாதிக்கம் கொண்ட ஆண் சொல்லாடலிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள், அத்துடன் அவர்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டவர்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் வாதமாக இருந்தாலும் அதன் கருத்துநிலைக்குள் முழுiமையாக அள்ளுண்டு போய் அதற்கான கவிதைப் பிரதிகளை அனாரோ, பஹீமா ஜஹானோ செய்யவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால், இந்த விடயங்களை பின்-நவீனக் கோட்பாடாகப் புரிவதற்கு முன்னரே அனார் இந்த நிலமைக்கெதிரான கலகக் கவிதைப் பிரதிகளைப் படைக்கலானார். முஸ்லிம் சமூகவெளியில் இஸ்லாமியக் கருத்துநிலைகள் வலுவாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் அனாரோ, பஹிமா ஜஹானோ தங்களது கவிதைப் பிரதிகளில், சமய சமூக வரையறைகளைத் தாண்டாது, ஏற்றுக்கொள்ளத்தக்க எல்லைகளுக்குள் நின்று கொண்டனர். இப்படி ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு அனார் அதில் உச்சத்தையும் தொட்டார். வரம்பு மீறும் பிரதிகளை அவர்கள் படைக்கவில்லை என்பதை அவர்களது கவிதைகளைப் பற்றி செவிவழியாக கேள்விப்பட்டவர்களன்றி உண்மையில் வாசித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம் பண்பாட்டின் பெண் குறித்த பொதுக்கூறுகளை மீறாமல் அனார் உருவாக்கும் பெண்வெளி ஒரே சமயத்தில் பெண் படைப்பாளியாகவும், அதன் பாத்திரமாகவும் இருப்பதன் சிக்கல்களையும் பேசுகிறது. அனார் உருவாக்கும் பெண்கள் தீவிர மேலைத்தேயப் பெண்ணிலைவாதிகளின் குரலிலன்றி தமக்குச் சொந்தமான குரலில் பேசுபவர்கள்.

கனவுகள் காண ஏங்கும் கனவு’ (சுலைஹா கவிதை) என தனக்குள்ளும் தனக்கு வெளியேயுமிருக்கும் பெண்ணை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அனார். இன்னுமொரு கவிதையில், ‘தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை’ ஆண் குரலின் முன்னால் மௌனித்துக்கிடந்த பெண்வெளியில் சீற்றத்துடன் பேசத் தொடங்குகிறார். பெண்ணின் உலகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான கிட்டத்தட்ட எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் அனார் தனது கவிதைகளில் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பெண் என்றால் யார் என்பதை அறிமுகப்படுத்தும் அனாரின் கவிதை ஒரு அறிவிப்பு போல் வெளியாகிறது. பெண்ணின் வாழ்வைச் சுற்றியுள்ள மாயக் கட்டுகளை அவிழ்த்து விடும் மர்மச் சொற்கள் சுதந்திரமாய் தெறித்து வருகின்றன.

“நீளமான நூலாய்த் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு சிறுகச்சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வௌ்ளை நூல் தெரியும் வரை”
– (‘மண்புழுவின் இரவு‘)

இந்தக் கவிதை ஒரே நேரத்தில் மண்புழு பற்றியதாகவும் மண்புழுவான பெண் பற்றியதாகவுமிருக்கிறது. இந்தக் குரல் ஒரு எதிர்பார்ப்பை, ஒரு மாற்றத்தை எதிரொலிக்கிறது. இருள் என்ற விளிம்புக்குள் தள்ளப்பட்ட பெண்களுக்கான வெளிச்சத்தைக் கோரும் கவிதை அது.

உன்னுடைய சொற்கள் அறுவடைக் காலத்தின்
நெற்கதிர்கள்

என இன்னொரு கவிதையில் குரல் தாழ்த்தப்பட்ட பெண்களின் சொற்களுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

பொதுவான பார்வையில் கவிதைகளில் விபரிக்கப்படுவது போன்ற நெருக்கடிகளை பெண்கள் உண்மையில் அனுபவிப்பதில்லை என்ற பார்வை நமக்குள் இருக்கலாம். அது ஒருவகையில் உண்மையாக இருந்தாலும், பிரச்சினை என்பதை வெறுமனே உடல் சார்ந்த வன்முறையாக மட்டும் பார்க்காமல் பெண்ணின் அக உலகம் சார்ந்ததாகவும் பார்க்கப்பட வேண்டும் என்ற பார்வையையும் அனார் ஏற்படுத்துகிறார்.

அனாரை ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்நவீனக் கவிதைவெளியின் பெண் குரலாக மட்டுமே பார்ப்பதும் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ஈழத்து தமிழ் முஸ்லிம் பெண்வெளியானது அவரது முதன்மையான பங்களிப்பும் முன்னோடி நிகழ்ச்சியுமாகும் என்றளவில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றபடி அவரது கவிதைகள் பன்முகப் பார்வை கொண்டவையாகவும் தமிழின் விரிந்த பரப்புக்குரியனவாகவும் விளங்குகின்றன.

உலகக் கவிதைகளோடு எனக்குள்ள பரிச்சயத்தின்படி அனாரின் கவிதைகள் அந்தத் தரத்தில்தான் இருக்கின்றன என்பதை உறுதியாக கூற முடியும்.

விளிம்புக்குள்ளான பெண்கள் பற்றிய ஒரு ஆண் கவிதைக் குரல் ஏ.எம். குர்ஷிதினுடையது. பின்-நவீனத்துவம் கூறும் ‘மற்றமை’ மீது கவனங்கொள்ளுதல் என்ற வகையில் சமூகத்தில் அவஸ்த்தையுறும் பெண்கள் பற்றிய அவரது கவனங்கொள்ளலைக் குறிப்பிடலாம்.

‘முப்பது வயதில் கணவனை இழப்பதும்
தீக்கங்குகளில் உழல்வதும் ஒரே வேதனைதான்’

என விதவைப் பெண்களின் அவஸ்த்தையை சொல்லத் தொடங்கும் குர்ஷித் அந்தக் கவிதைக்குள் விபரிக்கும் விதவைகளின் உலகம் நம்மை சுட்டெரிக்கிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் சிறுவர் வெளியை அதிகம் கவனத்திற்குட்படுத்தியவர் கவிஞர் ஜமீல். சமூக தளத்தில் விளிம்புக்குள்ளான சிறுவர்களின் வெளியை அதன் எல்லா பரிமாணங்களோடும் சித்திரித்தவர் ஜமீல். இதற்கு எடுத்துக்காட்டாக நிறைய கவிதைகளைச் சொல்லலாம். விளிம்பு நிலையிலிருக்கும் சிறுவர்களின் உலகம் ஜமீலின் கவிதைகளில்  கதைகளைப் போல் மையங்கொள்கிறது.

பெரியவர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களின் அகவுலகம் பற்றிய ஜமீலின் கவிதைப் புனைவானது, சிறுவர் வெளி பற்றி நாம் கண்டுகொள்ளத் தவறிய பக்கங்களுக்குள் நம்மை ஒரு குழந்தையைப் போல் அழைத்துச் செல்கின்றன.

காற்றைப் போல் தலைதெறித்து விளையாடும்
தங்களது பிரமாண்டமான கனவுகளை
மனம் விட்டுச் சொல்ல முடியாமல்
தினமும் போர்வைக்குள் மடித்து வைக்கிறது

புறக்கணிக்கப்பட்ட சிறுவர் வெளியை, அந்த விளிம்புகளின் கனவை ஜமீலின் இந்த வரிகள் மிக நுட்பான கவிதைப் புனைவாக ஆக்கியுள்ளன.

ஜமீல் தனது கவிதைப் புனைவுக்கான சொற்களை சிறுவர்களின் உலகத்துக்கு மிக நெருக்கமாக அமைத்திருப்பதும், கவிதைகளில் கடுமையான பாசாங்குத் தன்மையற்றிருப்பதும் அவரின் தனித்துவமான போக்குகளாக உள்ளன. அவரது கவிதைகளில் பின்-நவீன மொழியின் அதீத அழகியலை விடவும்,  விளிம்புகளான சிறுவர்வெளியை பற்றிய ஒரு எளிமையான கதை சொல்லும்  முறைமைக்காகவே ஜமீல் இந்த வெளியில் பேசப்படுபவராகிறார்.

பின்-நவீன அழகியல் கவிதைகள்

பின்-நவீன அழகியல் வெளியில் றியாஸ் குரானா, அனார், நபீல், நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன், ஏ.நஸ்புள்ளா, ஜெம்சித் ஸமான், றபியுஸ், ஜே.பெறோஸ்கான், சாஜித் அஹமட், ஏ.கே. முஜாரத் போன்றவர்களின் கவிதைகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் மற்றுமொரு முக்கிய குரல் றியாஸ் குரானாவினுடையது. பின்-நவீனக் கோட்பாட்டு ரீதியான புரிதலோடும் அதன் மீதான ஈடுபாட்டோடும் தனது கவிதைகளில் புதிய பரிசோதனைகளோடு களமிறங்கியவர் றியாஸ் குரானா. பிரதியை கற்பனையின் சுதந்திரமான விளையாட்டாகக் கண்ட அவர் பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு பின்-நவீன அழகியலின் கவிதைக் குரலாய் ஒலிக்கலானார். கவிதையை வெறும் கவிதைச் செயற்பாடு எனும் தளத்திலிருந்து அதனை ஒரு புனைவுச் செயற்பாடாகவும் ஈழத்துப் பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக நிகழ்த்திக்கொண்டு வருகிறார் றியாஸ் குரானா.

பின்-நவீன அரசியல் கவிதைகளின் குரலாய் ஒலித்துக் கொண்டிருந்த றியாஸ் குரானா அரசியலைத் தவிர்த்து வேறொரு தளத்துக்கு நகர்ந்தபோது இலக்கிய வெளியில் அவர் மீது விழுந்த கவனம் பற்றி அவரது கவிதை வரிகளில் சொல்வதானால்,

‘முன் பின் அறியாத ஒருவனைப் போல் பரபரப்பாக
கவனிக்கப்படுகிறேன்’

என்கிறார். பின்-நவீனத்துவத்தின் அதிகமான கூறுகளை தனது கவிதைகளில் பரிசோதனையாக செய்து பார்த்தவரும் றியாஸ் குரானாதான். அதற்கு காரணம் பின்-நவீனத்துவக் கோட்பாடு மீது அவருக்கிருந்த பரிச்சயமும், ஈடுபாடும்தான்.

பொதுவாக றி. குரானாவின் கவிதை மொழி அதீத புனைவுத் தன்மை கொண்டதாகவும், அதீத கற்பனையுடனும் பயணிப்பவை. அவரது கவிதைகளில் எதுவும் மையமாக அமைவதில்லை. பின்-நவீனத்துவம் கூறும் சிதைவாக்கம் என்பதை இவரது கவிதைகளில் முழு அர்த்தத்தோடு காண முடிகிறது. கவிதையை fiction ஆகச் செய்யும் பணியை வேறு சில கவிஞர்களும் முயற்சித்திருக்கிற போதிலும் அந்தச் செயற்பாட்டில் குரானாவின் கவிதைகள் தனித்துவமிக்கதாய்த் தெரிகின்றன.

அதேநேரம் றியாஸ் குரானாவின் கவிதைகளில் மனிதர்களின் உடல்களைவிடவும், உணர்வுகள்தான் அதிகமும் கொண்டாடப்படுகின்றன. குரானாவின் கவிதைகளிலுள்ள சொற்களை நாம் வேறு வேறு இடங்களுக்கு இடம் மாற்றிப் போட்டாலும் அது இன்னுமொரு கவிதையாய் மாறி விடும் அதிசயம் அவரது கவிதைக்குள் திரும்பத் திரும்ப நிகழ்ந்த படியே இருக்கிறது.

கவிதை வாசகர்களுக்கு முன்வைக்கப்படும் முறைமையில் சில குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உடைப்புகளை பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக பதிவு செய்தபடி இருக்கிறார். அவரது ‘மாற்றுப் பிரதி’ தொகுப்பிலுள்ள ‘காதலின் தோல்வியுற்ற குறுக்கெழுத்துப் புதிர்”  கவிதை சொல்லும் முறையில் மிக அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது என் அபிப்ராயம்.

உலகத் தமிழ்க் கவிதைவெளியைப் பொறுத்தவரை றி. குரானா இந்த வெளியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தொலைவுக்குச் சென்றிருப்பதாகவே எனக்குப்படுகிறது. ஆங்கிலக் கவிதை உலகிலும் அவருக்கென ஒரு கவனயீர்ப்பு நிகழ்வது மிக அண்மையத் தோற்றப்பாடாகும். அவரைப் பின்தொடர்ந்து ஒரு இளைஞர் கூட்டம் பயணிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடும் இன்று தென்படத் தொடங்கியுள்ளது.

அதே நேரம் தற்போதைய குரானாவின் கவிதைகள் முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதீத புனைவுத்தன்மை கொண்டதாகவும் மாறி வருகிறது. தொடர்பறு எழுத்து நிலையின் அதீதப் பயன்பாடும் றியாஸ் குரானாவின் கவிதைகளின் இன்றைய சில போக்குகளாக உள்ளன.

பின்-நவீனக் கவிதைவெளியில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க கவிதைக் குரல் அலறியினுடையது. அலறி பின்-நவீன அரசியல், அழகியல் மற்றும் விளிம்புகள் மீதான கவனம் எனப்பல பின்-நவீனக் கூறுகளை உள்வாங்கிப் புனையும் கவிஞன். அவரது ‘மழையைப் பொழிதல்’ தொகுப்பின் கவிதைகளுக்குள் பின்-நவீனத்துவத்தின் இத்தகைய பன்முகக்கூறுகளை காண முடிகிறது.

அதிகாரத் தரப்புகளால் கொல்லப்படும் அப்பாவிகள் விளிம்புகளாக அலறியின் சில கவிதைகளில் வருகின்றனர். அவரது ‘ஒருவன் கொல்லப்படும் போது’ கவிதையில் விளிம்புகளின் வாழ்வு எப்படி கணக்கெடுக்கப்படாததாக மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது எனும் நிகழ்காலத் துயரை அலறி அந்தக் கவிதையில் பேசுகிறார். அவரது இந்தக் கவிதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ‘In our Translated World’ எனும் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அலறியின் கவிதைகளை வாசிக்கும் போது எளிமையான சொற்களால் வாசக இன்பத்தை பெருக்கெடுக்கச் செய்யும் கவிதைப் பிரதிகளை புனையும் நுட்பத்தை காண முடிகிறது. அதுவே அவரை பின்-நவீனக் கவிதைவெளிக்குள் இழுத்து வருகிறது.

பின்-நவீன அழகியலை மொழியின் கூடுதல் இறுக்கங்களோடும் சூட்சுமங்களோடும் வெளிப்படுத்திய கவிஞர் நவாஸ் சௌபி. அவரது பின்-நவீன அரசியல் கவிதைகளைத் தாண்டி இவை வேறொரு தளத்தில் பயணிக்கின்றன. பெருவெளியில் வெளிவந்த அவரது ‘திருமணத்தின் பின்னரான முதல் கவிதை’ அவரது கவிதை புனைவில் ஒரு அதிரடி மாற்றத்தை அறிவிப்பது போல் இருந்தது. அது நமது பண்பாட்டுப் புனிதங்களிலும் ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தக் கூடிய உக்கிரத்தைக் கொண்டிருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து புறப்பட்ட வேகத்துடன்
எனது ஆண்மை அவளது வெட்கம் நிறைந்த அந்தரங்கங்களை
சரி செய்து வியர்த்துப் போகிறது

என்ற வரிகளை வாசிக்கும்போது ஒரு வாசகனின் நெஞ்சு படபட என்று அடித்துக் கொள்வதோடு, வியர்த்தும் கொட்டுகிறது. இப்படி வெடித்துச் சிதறுவதுதான் அவரது கவிதைக் குணம். அது ஒரு மூர்க்கக் குணம்தான். இருந்தாலும் அதுதான் பின்-நவீனக் கவிதைகளின் குணம்.

பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ள கவிதைகளை எழுதும் கவிஞர் நபீலிடமும் பின்-நவீன அழகியல் கூறுகள் வெளிப்படுகின்றன. நபீலின் கவிதைகளில் தொன்மமும், மரபும் பின்-நவீன அழகியலோடு சில கவிதைகளில் பேசப்படுகின்றன. அவரது கவிதைகள் காலவோட்டத்தில் ஒரு கவிஞன் அடையும் மாறுதல்கள் எதுவுமின்றி ஒரு நேர்க்கோட்டிலேயே இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கிண்ணியா சபருள்ளாஹ்வின் கவிதைகளும் அகவுணர்வைப் பேசும் கவிதைகளாகவும், பின்நவீன அரசியல், அழகியல் உள்ளவையாகவும் விளங்குகின்றன.

கிண்ணியா ஏ. நஸ்புள்ளாஹ்வின் அண்மைக்காலக் கவிதைகள் ஒரு புனைவின் பண்புகளுடனும் பின்-நவீன அழகியலோடும் பயணிக்கின்றன. அவரது ‘விண்மீன்கள் குறித்த உரையாடல்” என்ற கவிதையில் பின்-நவீனப் புனைவும் அழகியலும் கலந்திருக்கிறது. அவரது ‘இங்கே சைத்தான் இல்லை” தொகுதியின் கவிதைகளும் அண்மைய முகநூல் கவிதைகளும், பின்-நவீன அழகியலுடனும் புனைவின் அதீதத்தன்மையுடனும் பயணிக்கின்றன.

ஆனால் இங்கு முன்வைக்கப்பட்ட கவிஞர்களுக்கப்பாலும் இன்று பலர் பின்-நவீன முஸ்லிம் கவிதைவெளியில் வினைபுரிந்தபடி இருக்கின்றனர். அவர்களையும் உள்வாங்கும்போது இக்கட்டுரை இன்னும் விரிவானதாக அமையும்.

(கடந்த நவம்பர் மாதம் 26, 27 ஆகிய தினங்களில் இலங்கையின் மருதமுனையில் இடம்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொன் விழாவில்  வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கித் திருத்தப்பட்ட வடிவம்).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.