Alvin Toffler அவரது ‘Future Shock’ புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் மனிதனைக் குறித்து Modular Man என்று ஒரு கருத்தை முன்வைப்பார். தொழிற்புரட்சிக்குப் பின் உருவாகி வந்த, நவீன நகர்ப்புற உலகில் வாழும் ஒரு தனி மனிதன் எப்படி பல்வேறு வேஷங்களில் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் சமூக உறவுகளில் ஒருவன் யாருடனும் தன்னுடைய முழுமையான ‘நான்’ ஐ வெளிப்படுத்திக் கொள்ளும் தேவை இல்லாத, அல்லது முடியாத, ஒரு சூழல் உருவாகி இருப்பதையும் விவரித்திருப்பார்.
நவீனத்துவத்துக்கு முன் இருந்த சமூகங்களில் இது மாதிரியான ஒரு அவசியம் தனி மனிதனுக்கு ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப உறவுகளில் பல்வேறு பாத்திரங்களை ஒரு ஆண் ஏற்றிருக்கலாம். மகன், கணவன், அப்பா, தாத்தா என்று. ஆனால் தன்னைச் சுற்றியிருந்த எளிய பொருளாதார அமைப்பு கொண்ட ஒரு கிராமிய சமூகத்தில் அவன் என்ன தொழில் செயது வாழ்கிறானோ, அதுவே அவன். தான் யாரோ அதிலிருந்து பிறிதொருவனாக அவன் மற்ற சமூக மனிதர்களிடம் அவன் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமோ போட வேண்டிய வேஷங்களோ இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கான சாத்தியங்களும் குறைவு.
நவீன காலத்தில் நகர்ப்புறத்தில் வாழக்கூடிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு ஆண் பல்வேறு வேஷங்களை ஏற்று நடிக்க வேண்டியிருப்பதன் சிக்கல்களை ஆதவன் அவரது கதைகளில் பேசிய வண்ணமே இருந்தார். அம்மாதிரியான கதைகளில் மிகச் சிறந்த ஒன்றுதான் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ என்ற சிறுகதை.
அலுவலகம் முடிந்து, ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரம்தான் இந்தக் கதை நிகழும் நேரம். தன்னுணர்வு கொண்ட ஒரு மனிதன் அதற்குள் எத்தனை முகமூடிகளை அணிகிறான் என்பதை மிக அழகாகவும் நகைச்சுவை கொப்பளிக்கவும் சொல்லியிருக்கிறார் ஆதவன்.
முதலில் அங்கே சந்திக்க நேரும் தன் கல்லூரி காலத் தோழியிடம் தன் நிகழ்கால, நடுத்தர வர்க்க, சீரியஸ் வாழ்க்கையை மறைத்துக்கொண்டு, ஆவலுடன் பழகிய கல்லூரிக் காலத்தின் விடலை வேடம், அதன்கூடவே அவளது உயர்வர்க்க, குழந்தைத்தனமான வேடமும் அந்த வேடத்தை ரசித்து, பின் அதில் சலிப்புற்று வெளியே வந்து அங்கே மழைக்கு ஒதுங்கி நிற்கும், கல்லூரிப் பெண்களை ரசிக்கும்போது அவர்களால் கண்ணும் களவுமாகப் பிடிபட்டு, அவர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிக்கும் விட்டேத்தியான கல்லூரிப் பேராசிரியர் போன்ற வேடம், பேருந்து நிலையத்தில் எதிர்ப்படும் அலுவலக நண்பன் தன்னை ஒற்றைப்படையானவனாக, வெறும் அரசு ஊழியராக மட்டுமே பார்ப்பதால் ஏற்படும் சங்கடத்தில் தன்னை நிர்வாணமாக உணரும் தருணம்- அதிலிருந்து அவனைக் காப்பாற்றுவது, அங்கு வரும், அவனது வீட்டருகே வசிக்கும் இருவர். அதில் ஒருவர் வயதானவர், அவரிடம் இவன் என்றோ ஒரு முறை தன்னை இந்தக்கால பொறுப்பற்ற, மரபுகளை மதிக்காத வாலிபனாக காட்டிக் கொள்ளாமல், புதிய இளைய தலைமுறையின் (அவர்களில் ஒருவன் என்றாலும்), போக்கினை விரும்பாதவனாகக் காட்டிக் கொண்டதால், தொடர்ந்து அந்த வேடத்திலேயே அவர் முன் நிற்க வேண்டிய அவசியம்.
கையில் டாம் மொரேசின் கவிதைத் தொகுப்புடன் வரும் அவன் பேட்டையில் உள்ள கல்லூரி மாணவன்தான் மற்றொருவர். அவன் முன், ஆபீஸ் விஷயங்களைத் தவிர இதர விஷயங்களிலும் நாட்டமுள்ள ஒரு அறிவுஜீவி வேடத்தை, முகமூடியை அணிய வேண்டிய நிர்ப்பந்தம். நம் நாயகனை இப்படி மாறி மாறி வேடங்களை அணிந்து நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து காப்பாற்றுவது அப்போது அங்கு வரும், அவனது இருப்பிடம் போகும் பேருந்துதான். பேருந்தின் முன் அனைவரும் தங்கள் வேஷங்கள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதர்களாகி ஓடுவதுடன் கதையை முடிக்கிறார் ஆதவன்.
இது போன்ற ஒரு சூழ்நிலையில், நகர வாழ்வில் இயல்பாகவே ஒருவர் இப்படி இருக்க முடியாதா என்றும் ஏன் அவற்றை வேஷங்கள் என்றும் நினைக்க வேண்டும் என்றும் ஒரு கேள்வி எழலாம். அவை இந்த நாயகனின் வேஷங்கள்தாம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது, இந்த நடவடிக்கைகளிலிருந்து தனித்து நிற்கும் அவனது தன்னுணர்வும் இத்தகைய நடவடிக்கைகளின்மேல் அவனுக்கு உருவாகும் சலிப்பும்தான். அவற்றின் கூடவே மிக முக்கியமாக, இந்த நிகழ்கவுளின் ஊடாக, அவன் மனம் அந்நேரம் வீட்டில் தன் மனைவி எந்தவித வேஷங்களும் அணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் இன்றி இயல்பாக சமைத்துக் கொண்டோ, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டோ, குழந்தையிடம் சண்டை பிடித்துக் கொண்டோ இருப்பாள் என்பதை பொறாமையுடன் அவன் நினைத்துக் கொள்வதை ஆதவன் சித்தரிப்பதுதான்.
தன்மை ஒருமையில் விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது. நம்மை நாமே அடையாளம் காண்பதிலும், பிறருக்கு நம்மை வெளிப்படுத்துவதில், நாம் அணியும் வேஷங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.மேலும், நம்மை பிறர் எளிதில் வகுத்துவிட முடியாதபடிக்கு நம்மை நாம் வேறு வேறு அடையாளங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதிலும் ஒரு இயல்பான ஆர்வம் இருப்பதையும் இது வெளிக்கொணர்கிறது.
“இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பின் முன்னுரையில் ஆதவன், தான் எழுதுவது குறித்து, “நானென்ன என்னிடமிருந்து தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னை கண்டுபிடிக்கவா?” என்று கேட்டுக் கொள்கிறார். எழுதுவதற்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வில் நாம் நடந்து கொள்ளும் முறைக்கும், அணிந்து கொள்ளும் முகமூடிகளுக்குமேகூட இது பொருந்தும். நாம் என்னவாக இருந்தோம் என்பதைக் கடந்தே நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. அதே சமயம், நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டு கொள்வதால் நாம் என்னவாக இருந்தோம் என்பதும் இல்லாமல் போவதில்லை. தன்னுணர்வின் திரைக்குப்பின் களைவதும் புனைவதும் வேடங்களாகவே எப்போதும் இருக்கின்றன, அவை உறவுகளில் ஒரு சுவையான நாடகத்தன்மை சேர்ப்பதையும் இந்தக் கதையைப் படிக்கும்போது உணரலாம்.
2 comments